Saturday, April 30, 2011

எண்டோ சல்ஃபானுக்கு தடை : இந்தியா சம்மதம்


சுற்றுச் சூழல், உடல் நலத்துக்கு ஆபத்தானதாகக் கருதப்படும் பூச்சிக் கொல்லி மருந்தான எண்டோ சல்ஃபானைத் தடை செய்வதற்கு சர்வதேச மாநாட்டில் இந்தியா சம்மதம் தெரிவித்துள்ளது.

எனினும் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளுக்கு இந்தத் தடையில் பல்வேறு விலக்குகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. எண்டோ சல்ஃபானை முற்றிலுமாக தடை செய்வதற்கு 11 ஆண்டு அவகாசம் அளிக்கப்பட்டிருப்பது இதில் முக்கியமானதாகும்.

சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் கரிமவேதிப் பொருள்கள் தொடர்பான ஸ்டாக்ஹோம் தீர்மானம் குறித்த சர்வதேச மாநாடு கடந்த 5 நாள்களாக ஜெனீவாவில் நடந்தது. இதில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில், எண்டோ சல்ஃபானை முழுமையாகத் தடை செய்வதற்கு நீண்டகால அவகாசம் வழங்குவது, பாதுகாப்பான, குறைந்த விலையிலான மாற்றுப் பொருளை கண்டறிவது போன்ற கோரிக்கைகள் வளரும் நாடுகள் சார்பில் வைக்கப்பட்டன. இந்தக் கோரிக்கைகள் மாநாட்டில் ஏற்கப்பட்டிருப்பதாக இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எண்டோ சல்ஃபானை தடை செய்யும்போது, உரிய நிதிஉதவி வழங்கப்பட வேண்டும் என்றும் இந்தியா கோரியிருப்பதாகத் தெரிகிறது. இதற்கு இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. எண்டோ சல்ஃபானுக்கு விதிமுறைகளுடன் கூடிய தடை விதிக்கப்பட வேண்டும் என்று சீனா சார்பில் கோர்ப்பட்டது.

எனினும், எண்டோ சல்ஃபானுக்குத் தடை விதிப்பதற்கு அனைத்து நாடுகளும் சம்மதித்தன. இதையடுத்து, மாநாட்டு தீர்மான வரைவில் தடை செய்யப்பட்ட வேதிப்பொருள்கள் பட்டியலில் எண்டோ சல்ஃபானும் சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்த வரைவுத் தீர்மானம் ஏற்கப்பட்டால் உலகம் முழுவதும் என்டோ சல்ஃபானுக்கு முறைப்படி தடை விதிக்கப்படும்.

No comments: