Thursday, December 22, 2011

முல்லை பெரியாறு அணை பிரச்சினை - திருச்சியில் இன்று கேரள வியாபாரிகள் கடையடைப்பு : தமிழகத்திற்கு ஆதரவாக இருப்போம்.

முல்லை பெரியாறு அணை பிரச்சினை-திருச்சியில் இன்று கேரள  வியாபாரிகள் கடையடைப்பு: தமிழகத்திற்கு ஆதரவாக இருப்போம்

முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் தமிழகத்துக்கு ஆதரவாக திருச்சியில் இன்று கேரள வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

தமிழகத்தின் தென் பகுதியில் அமைந்து உள்ள 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக விளங்கி வரும் முல்லை பெரியாறு அணையை கற்பனை காரணங்களை கூறி இடிக்க முயற்சி செய்யும் கேரள அரசின் செயல்பாட்டை திருச்சி கேரள வாழ் மக்கள் சார்பில் வன்மையாக கண்டித்தனர்.

தமிழகத்தில் 45இலட்சம் மலையாளிகள் சகோதரர்களாக வாழ்ந்துவருகிறோம். எனவே வரும் 28ந்தேதி கேரள அரசிர்க்கு முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் தமிழகத்தின் நிலைப்பாடே எங்களுடையதும் ஆகும். என்பதனை விளக்கி கூறுவோம்.

முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் தமிழக அரசின் நிலைப்பாட்டையும் அதன் மேல் நடவடிக்கைகளையும் முழு மனதுடன் வரவேற்பது மட்டுமல்லாமல் ஆதரவு அளித்து அறிக்கை வெளியிட்டனர்.

தமிழகத்தில் வாழும் கேரள மக்களுக்கும், கேரள நிறுவனங்களுக்கும் தமிழக அரசு பாதுகாப்புஅளித்து வருவதை போல் கேரள அரசும் அங்கு வாழும் தமிழக மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்,

தமிழகத்தில் இருந்து சபரி மலை செல்லும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருச்சி மலையாளிகள் அசோசியேசன் சங்கம் சார்பில் உம்மண்சாண்டிக்கு தந்தி அனுப்பப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று திருச்சியில் தொழில் செய்துவரும் கேரளவாசிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.

அதன்படி இன்று திருச்சியில் மலையாளிகள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர். திருச்சி சின்னக்கடை வீதி, என்.எஸ்.பி. ரோடு, சிங்கார தோப்பு, பாலக்கரை, தில்லைநகர், சத்திரம் பஸ் நிலையம், காந்தி மார்க்கெட் ஆகிய பகுதிகளில் உள்ள மலையாளிகளுக்கு சொந்தமான நகைக்கடைகள், பேக்கரி, டீக்கடைகள், மளிகை கடைகள், ஹார்டுவேர்ஸ் ஆகியவை அடைக்கப்பட்டு இருந்தன.

முல்லை பெரியாறு பிரச்சினை : பிரதமர் மன்மோகன்சிங் - கேரள முதல்வர் உம்மன்சாண்டி கொடும்பாவி எரிப்பு.

முல்லை பெரியாறு பிரச்சினை: பிரதமர்-கேரள முதல்வர் உருவபொம்மை எரிப்பு: வேலூரில் 38 பேர் கைது

முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஏற்காத கேரள அரசை கண்டித்து தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் சார்பில் மத்திய அரசு அலுவலகம் முன்பு இன்று முற்றுகை போராட்டம் நடந்த போவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி வேலூர் தலைமை தபால் நிலையம் முன்பு இன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன் தலைமை தாங்கினர்.

அப்போது பிரதமர் மன்மோகன்சிங், கேரள முதல்வர் உம்மன்சாண்டி ஆகியோரின் உருவ பொம்மையை எரித்தனர். மத்திய அரசு, கேரள அரசை கண்டித்து கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் வேலூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். உருவபொம்மையை எரித்த 10 பெண்கள் உள்பட 38 பேரை கைது செய்தனர்.

முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை : 5மாவட்டங்களில் முழு கடையடைப்பு : வியாபாரிகள் உண்ணாவிரதம்.

முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை: 5 மாவட்டங்களில் முழு கடையடைப்பு: வியாபாரிகள் உண்ணாவிரதம்

மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் முல்லை பெரியாறு அணையில் தமிழர்களின் உரிமையை காக்க போராட்டங்கள் தமிழகம் முழுவதும் தீவிரமாக நடந்து வருகிறது.

வக்கீல்கள், வர்த்தகர்கள், ஆட்டோ, வேன், கார் டிரைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும், சமூக அமைப்பினரும் கேரள அரசை கண்டித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இன்று 5 மாவட்டங்களில் முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது. தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், தமிழ்நாடு உணவுபொருள் வியாபாரிகள் சங்கம், மடீட்சியா தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, வணிகர் சங்க பேரவை, மதுரை ஜூவல்லர்ஸ், புல்லியன் மெர்ச்சன்ட் அசோசியேசன், மதுரை ஜவுளி வியாபாரிகள் சங்கம், முல்லை பெரியாறு அறவழி போராட்டக்குழு, வெற்றிலை, பாக்கு, பீடி, சிகரெட் வர்த்தக சங்கம் உள்பட சங்கங்கள் இந்த போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன.

முழு கடையடைப்பு காரணமாக மதுரையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. ஓட்டல்கள், ஜவுளி கடைகள், நகைக்கடைகள், வர்த்தக நிறுவனங்கள். பெட்டிக்கடைகள், டீ, காபி கடைகள், பலசரக்கு கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.

இதனால் மதுரையில் பெரியார் பஸ் நிலையம், ரெயில் நிலையம், கீழமாசிவீதி, விளக்குத்தூண், சிம்மக்கல், கோரிப்பாளையம், ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகிறது.

பஸ்கள் இயக்கப்பட்டதால் பஸ் நிலையங்களில் மட்டும் பயணிகள் கூட்டம் காணப்பட்டது. பல்வேறு ஆட்டோ, வேன் சங்கங்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் பெரும்பாலான ஆட்டோ மற்றும் வேன்களும் ஓடவில்லை.

கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் மதுரை கே.கே.நகரில் உள்ள மடீட்சியா அலுவலகம், மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் ஆகியவற்றின் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான தொழில் அதிபர்கள், வணிகர்கள் கலந்து கொண்டனர். இந்த முழு கடையடைப்பு மாலை 5 மணி வரை நடக்கிறது. இதனால் மதுரை மாவட்டத்தில் இன்று ரூ.200 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் இன்று மூடப்பட்டன. தேனி, கம்பம், கூடலூர், காமயகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, சுருளிபட்டி போன்ற பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. காய்கறி கடைகளும் மூடப்பட்டன. டீக்கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

தேனி மவட்டத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. கம்பம், கூடலூர், பகுதியில் இன்று அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று ஓட்டல், பேக்கரி, டீக்கடை சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. மாவட்டத்தில் சுமார் 500 கடைகள் மூடப்பட்டு இருந்தன. வர்த்தக சங்கம் சார்பில் சங்க தலைவர் ஜெகதீசன், செயலாளர் கோவிந்தராஜன் ஆகியோர் தலைமை யில் வியாபாரிகள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றனர். மேலும் மாவட்டத்தில் உள்ள வாடகை கார், வேன், ஆட்டோ டிரைவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் சுமார் 5 ஆயிரம் ஆட்டோக்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று ஓடவில்லை.

சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூர், காரைக்குடி, தேவகோட்டை உள்பட அனைத்து பகுதிகளிலும் உள்ள ஓட்டல்கள் உள்பட அனைத்தும் கடைகளும் மூடப்பட்டு இருந்தன. சுமார் 2 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மாவட்டம் முழுவதும் வேன், கார்கள், ஆட்டோக்கள் இன்று ஓடவில்லை.

திண்டுக்கல் பஸ் நிலையம், காந்தி மார்க்கெட், பூ மார்க்கெட் உள்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. கேரள அரசை கண்டித்து இன்று காலை திண்டுக்க்ல காட்டாஸ்பத்திரி அருகே வர்த்தக சங்கம் சார்பில் உண்ணாவிரதம் நடந்தது.

இந்த போராட்டத்தில் 50 இணைப்பு சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. கேரள அரசை கண்டித்து ஈரோடு மாவட்டத்திலும் இன்று பல்வேறு இடங்களில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. அந்தியூர், பவானி, கவுந்தப்பாடி, சிவகிரி, அம்மன் கோவில் ஆகிய இடங்களில் முழு கடையடைப்பு நடந்தது. இந்த ஊர்களில் உள்ள ஆட்டோக்கள் மற்றும் வாடகை வேன்கள் என சுமார் 5000-க்கும் மேற்பட்ட வாகனங்களும் ஓடவில்லை.

வயதான தமிழ் அறிஞர்களுக்கு உதவித் தொகை ரூ.2 ஆயிரமாக உயர்வு : ஜெயலலிதா உத்தரவு.

வயதான தமிழ் அறிஞர்களுக்கு உதவித் தொகை ரூ.2 ஆயிரமாக உயர்வு: ஜெயலலிதா உத்தரவு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மொழி என்பது மனிதனை அடையாளப்படுத்தும் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றாகும். மொழி தானும் வளர்ந்து, தன்னை பயன்படுத்தும் மனிதனையும் வளர்க்கும் தனியாற்றல் பெற்றது.

எண்ணத்தின் வடிவமாகவும், நாகரிகத்தின் சின்னமாகவும் திகழும் மொழி, மனிதகுலத்தின் கருத்துப் பரிமாற்றத்துக்கு பயன்படுவதோடு மட்டுமல்லாமல் மனித சமுதாய இணைப்புக்கும் துணை செய்கின்றது.

நிலைத்த பழமையும் வளரும் புதுமையும் இரண்டறக் கலந்து வாழும் மொழி தமிழ்மொழி. அது நமது ஆட்சி மொழி.

தமிழ் மொழியின் வளர்ச்சியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு தனி ஈடுபாடு கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

தமிழ் மொழியின் வளமை மற்றும் செழுமைக்கு முக்கிய காரணம், மொழியால் ஈடுபாடு கொண்டு, மொழிக்காக தன் வாழ்நாட்கள் முழுவதையும் அர்ப்பணித்த தமிழ் அறிஞர் பெருமக்களின் தன்னலமற்ற தொண்டே ஆகும்.

அத்தகைய தமிழ் அறிஞர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது.

இதன் அடிப்படையில், தமிழ் வளர்ச்சிக்காகவும், தமிழ் இலக்கிய மேம்பாட்டிற் காகவும், அயராது பாடுபட்ட தமிழ் அறிஞர்களைப் போற்றும் வகையில், அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு, மாதம்தோறும் உதவித் தொகை வழங்கும் திட்டம், 1978-ம் ஆண்டு அன்றைய முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரால் தொடங்கி வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் தற்போது மாதந் தோறும் 1,000 ரூபாய் உதவித் தொகையாக அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

தமிழ் மொழி உயர்ந்து வாழ வேண்டும் மற்றும் மொழிக்காக தொண்டாற்றிய அறிஞர்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்ற நோக்கம் கொண்ட முதல்-அமைச்சர் ஜெயலலிதா அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் மற்றும் அவர்தம் மரபுரிமையர்களுக்கு தற்போது மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் 1,000 ரூபாய் நிதி உதவியை 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட் டுள்ளார்கள்.

இதற்காக அரசுக்கு ஆண்டொன்றுக்கு 35 லட்சம் ரூபாய் கூடுதல் செலவாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கு எந்த முகத்தோடு வருகிறார் பிரதமர் ? கருப்பு கொடி காட்டுவேன் : விஜயகாந்த்.



இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைப் பெரியாறு நீர்த்தேக்கத்தில் அணையின் மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடி வரை உயர்த்தலாம் என்று உச்சநீதிமன்றம் 2006ம் ஆண்டே ஆணையிட்டது. இதை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. ஆனால் இன்று வரை நிறைவேற்றவில்லை.

உச்சநீதிமன்றத்தின் ஆய்வில் இருக்கிறபோதே கேரள அரசு வேண்டுமென்றே முல்லைப் பெரியாறு பிரச்சனையை கிளப்பியது.

பழைய அணைக்கு பதிலாக புதிய அணை கட்டப்போவதாகவும், பழைய அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும் என்றும் கேரள சட்டமன்றத்திலேயே தீர்மானம் போட்டனர். கேரளாவில் உள்ள தமிழர்கள் தாக்கப்பட்டனர். தமிழ்நாட்டிலிருந்து அங்கு சென்ற ஐயப்ப பக்தர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டனர். இவ்வாறு தொடர்ந்து தமிழர்களின் உயிருக்கும் பாதுகாப்பு இல்லை.

தமிழ்நாட்டிற்கு இந்திய அரசு தொடர்ந்து ஓர வஞ்சனை செய்து வருகிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகள், மீனவர்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள் என்று அனைத்து தரப்பு மக்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர். தேமுதிகவைச் சேர்ந்த தலைமைக் கழகப் பேச்சாளர் இடி முழக்கம் சேகர் முல்லைப் பெரியாறு பிரச்சனையில் தனது இன்னுயிரையே மாய்த்துக்கொண்டார்.

இவ்வாறு தமிழ்நாட்டு மக்களை வாட்டி வதைக்கும் போக்கினை மேற்கொண்டு விட்டு இந்திய அரசின் சின்னமாக இப்பொழுது பிரதமர் தமிழ்நாட்டிற்கு எந்த முகத்தோடு வருகிறார் என்பதே எங்கள் கேள்வி. மக்களின் கோரிக்கைகளையும், உணர்வுகளையும் மதிக்காமல் பிரதமர் தமிழ் நாட்டிற்கு ஏன் வரவேண்டும்? தமிழர்கள் என்றாலே இந்திய அரசைப் பொறுத்தவரையில் பிள்ளைப் பூச்சிகளாகவே கருதுகிறார்கள்.

ஆகவே, இந்திய பிரதமர் 25 மற்றும் 26ம் தேதிகளில் சென்னைக்கு வருகிற பொழுது தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த உணர்வை காட்டும் வகையில் தேமுதிக சார்பில் ஜனநாயக ரீதியில் அமைதியான முறையில் சென்னையில் 26ஆம் நாளன்று எனது தலைமையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

கேரளத்தின் சொல்படி ஆடும் மத்திய அரசு - வைகோ .



முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளமும் மத்திய அரசும் சேர்ந்து நடத்தும் சதித்திட்டம் அம்பலமாகி விட்டதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்தமிழ்நாட்டின் வாழ்வையே நாசமாக்க முனைந்துவிட்ட, கேரள அரசியல் கட்சிகளின் சதித் திட்டங்களுக்கு, கடந்த ஏழு ஆண்டுகளாக உடந்தையாகவே செயல்பட்டு வந்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, இப்போது பகிரங்கமாகவே கேரளத்துடன் சேர்ந்து கொண்டு, தமிழகத்தை வஞ்சித்து, அநீதி இழைக்கிறது.

அதனால்தான், பிரதமர் தலைமையில் இயங்கும் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஒரு குழுவை அமைத்து, பூகம்பத்தால் முல்லைப் பெரியாறு பகுதிக்கு ஏற்படும் சேதத்தை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது.

பென்னி குயிக் கட்டிய நமது முல்லைப் பெரியாறு அணை, எந்த பூகம்பத்துக்கும் அசையாது, வலுவாக உள்ளது என்று, நிபுணர் குழுக்கள் உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே அறிக்கைகள் தந்தபின்பும், அதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் 2006ல் தீர்ப்புத் தந்தபின்பும், பின்னர் 2009ல், இப்பிரச்சனைக்கு ஆய்வு செய்ய நீதியரசர் ஆனந்த் தலைமையில் அமைத்த குழு, ஆய்வுகள் மேற்கொண்டு அறிக்கை தர இருக்கின்ற இந்த நேரத்தில், தந்திரத்தோடு கேரளத்தினர் வகுத்த சதித் திட்டத்தை, இந்தக் குழுவை அமைத்து மத்திய அரசு செயல்படுத்தி உள்ளது.

இதுகுறித்து இன்று பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு நான் எழுதி உள்ள கடிதம் பின்வருமாறு:

தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தில், முல்லைப் பெரியாறு குறித்து நீங்கள் குழு அமைத்தது, தமிழ்நாட்டுக்கு இந்திய அரசு செய்துள்ள, பொறுக்க முடியாத மேலும் ஓர் அநீதி ஆகும். இது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.

முல்லைப் பெரியாறு பிரச்சனையில், மத்திய அரசு, 2004ம் ஆண்டு முதல், தமிழ்நாட்டுக்குத் துரோகங்களையே இழைத்து வருகின்றது.

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் உளவுத்துறையின் தொழில் பாதுகாப்புப் பிரிவு, கடந்த 2006 நவம்பர் 9,10 ஆகிய தேதிகளில், மத்திய அரசுக்குத் தந்த அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணையைப் பாதுகாக்க வேண்டுமென்றால், அணைப் பகுதியில் இருந்து கேரள காவல்துறையை அகற்றி விட்டு, மத்திய ரிசர்வ் போலீஸ் படை அல்லது மத்திய தொழில் பாதுகாப்புப் படையை அங்கே குவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

அதை உங்கள் அரசு, குப்பையில் தூக்கிப் போட்டது. கேரள அரசியல் கட்சிகளின் தூண்டுதலில், அணையை உடைக்க வன்முறையாளர்கள் முயன்று வருகின்றனர்.

அணையைக் காக்க, மத்தியப் படையை அனுப்பச் சொல்லி தமிழ்நாடு வைத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுத்துவிட்டது. 2006 பிப்ரவரி 27ல் உச்சநீதிமன்றம் முல்லைப் பெரியாறு வழக்கில், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டித் தந்த தீர்ப்பை முற்றிலும் உதாசீனம் செய்துவிட்டு, அணையை உடைக்கவும் எங்களுக்கு அதிகாரம் உண்டு என்று கேரளம் ஒரு சட்டத்தை நிறைவேற்றி இந்தியாவின் இறையாண்மைக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் சவால் விட்டது.

தற்போது அணையின் வலிமை உள்ளிட்ட நிலைமையை உச்ச நீதிமன்றம் நீதிபதி ஆனந்த் குழு ஆய்வு செய்து அறிக்கை தர இருக்கின்ற நிலையில் தேசியப் பேரிடம் ஆணையக் குழுவை உங்கள் அரசு நியமித்த செயல், உங்கள் அரசு கேரளாவின் சொல்படிதான் ஆடுகிறது என்பதை வெட்டவெளிச்சமாக்கி விட்டது.

இந்த அணைப் பிரச்சனையில், கேரளாவின் ஏஜெண்டாக அறிக்கை தந்து வந்த ரூர்க்கி ஐஐடி நிறுவனத்தின் பால் என்பவரை இந்தக் குழுவில் சேர்த்து இருப்பதில் இருந்தே, கேரளமும் மத்திய அரசும் சேர்ந்து நடத்தும் சதித்திட்டம் அம்பலமாகி விட்டது.

தேசியப் பேரிடர் ஆணையக் குழுவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று, தமிழக முதல்வர் நியாயமான வேண்டுகோள் விடுத்து உள்ளார். பேரிடர் மேலாண்மை நடவடிக்கை என்ற பெயரால், மத்திய காங்கிரஸ் அரசு, இந்திய ஒற்றுமை உடையும் பேரிடருக்கே வழிவகுக்கிறது.

எனவே, மத்திய அரசு எடுத்து உள்ள இந்த நடவடிக்கையை உடனடியாக ரத்துச் செய்யுமாறு வேண்டுகிறேன் என்று அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார் வைகோ.

ஃபுகுஷிமாவை அணு உலையை மூட ரூ. 78,400 கோடியும், 40 ஆண்டுகளும் தேவை !



ஜப்பான் நாட்டின் ஃபுகுஷிமா நகரில், ஆழிப் பேரலையால் சீரழிக்கப்பட்ட அணு மின் நிலையத்தில், உலையில் சிக்கியுள்ள எரிபொருளை வெளியே பக்குவமாக எடுக்க 40 ஆண்டுகளும் சுமார் ரூ.78,400 கோடியும் தேவைப்படும் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

அப்படி வெளியே எடுக்கும் கதிரியக்கக் குணம் கொண்ட எரிபொருளை சுற்றுப்புறத்துக்கு ஆபத்து இல்லாமல் எப்படி அப்புறப்படுத்துவது என்பதற்கான வழிகளை இனிமேல்தான் கண்டுபிடிக்க வேண்டும் என்பது அடுத்த பிரச்னை.

உலையிலிருந்து, எரி கலத்தின் அடிப்புறத்துக்குச் சென்றுவிட்ட எரிபொருளை வெளியே கொண்டு வருவதற்கான முன் ஏற்பாடுகளைச் செய்யவே 10 ஆண்டுகள் பிடிக்குமாம். அதைச் செய்வதற்கும் ரோபோட்டுகள் எனப்படும் இயந்திர மனிதர்களை இனிமேல்தான் தயாரிக்க வேண்டுமாம்.

ஃபுகுஷிமா அணு உலையால் கதிரியக்க ஆபத்து 40 ஆண்டுகளுக்குப் பிறகும் மறைந்துவிடாது என்றும் தெரியவருகிறது.

ரூ.78,400 கோடி எரிபொருளை வெளியே எடுக்க மட்டும்தான். பிற செலவுகளும் காத்திருக்கின்றன.

இத் தகவல்களை இந்த அணு உலைக்காகவே ஜப்பானிய அரசு நியமித்துள்ள அமைச்சர் கோஷி ஹோசனோ, டோக்கியோ நகரில் புதன்கிழமை இதைத் தெரிவித்தார்.

அணு மின்சாரம் தயாரிப்பதற்கு மிகவும் மலிவானது, அணு உலைக்கு எந்தவித ஆபத்தும் நேராது, அப்படியே கதிரியக்கம் ஏற்பட்டாலும் சிகிச்சை செய்துவிடலாம், தடுத்து விடலாம் என்று கூறப்படும் வேளையில் ஃபுகுஷிமா அணு உலை தொடர்பாக வெளிவரும் இந்தத் தகவல்கள் அச்சம் தருபவையாக இருக்கின்றன.