Sunday, August 14, 2011

லோக்பால் மசோதாவால் ஊழலை ஒழிக்க முடியும் என உறுதியளிப்பாரா ஹஸாரே ? - மத்தியஅரசு கேள்வி.



லோக்பால் மசோதாவைக் கொண்டு வந்தால் இந்தியாவை விட்டு ஊழலை விரட்டி விட முடியும் என்று உறுதியளிக்க அன்னா ஹஸாரேவால் உறுதியளிக்கத் தயாரா என்று மத்திய அமைச்சர்கள் கேட்டுள்ளனர்.

இதுகுறித்து பிரணாப் முகர்ஜி கூறுகையில்,

அரசியமைப்புச் சட்டத்தைப் பொறுத்தவரை, ஊழல் ஒழிப்பு தொடர்பாக அரசுகள்தான் சட்டம் கொண்டு வர முடியுமே தவிர மற்றவர்கள் அதில் குறுக்கிட அதிகாரம் இல்லை. யாருமே இப்படித்தான் சட்டம் இருக்க வேண்டும் என அரசுகளை நிர்ப்பந்தப்படுத்த முடியாது. தங்களது சுய விருப்புகளுக்கேற்ப ஒரு சட்டத்தை அரசுகள் கொண்டு வர முடியாது. நாடாளுமன்றம்தான் இதை முடிவு செய்ய முடியும்.

அன்னா ஹஸாரே இன்று செய்து கொண்டிருப்பது அரசியல் சாசனத்தை மீறும் செயலாகும். நாடாளுமன்றத்தையே அவர் கேள்வி கேட்கிறார். இது ஏற்றுக் கொள்ளவே முடியாததாகும்.

செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்போது மத்திய அரசு கொண்டு வந்த லோக்பால் மசோதாவும் சரி, அன்னா ஹஸாரே சொன்ன மசோதாவும் சரி இந்தியாவில் ஊழலை ஒழிக்க எந்த வகையிலும் உதவாது.

லோக்பால் மசோதா சட்டமானதுமே இந்தியாவில் ஊழல் ஒழிந்து விடும் என அன்னா ஹஸாரேவும் அவரது குழுவினரும் உத்தரவாதம் அளிக்க முடியுமா. அன்னா ஹஸாரே குழுவினர் நாட்டை திசை திருப்பி வருகின்றனர் என்றார்.

மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் கூறுகையில், ஒவ்வொருவரும் போராட உரிமை இருக்கிறது. அதில் மாற்றமில்லை. ஆனால் இஷ்டப்பட்ட இடத்தில் போராட உரிமை இல்லை.

அன்னா சுய விளம்பரம் தேடுகிறார். டிவி செய்திகள், மீடியாக்களில் தனது முகம் தெரிய வேண்டும் என விரும்புகிறார். பிரதமருக்கு எதிராக தேவையில்லாமல் கொந்தளிக்கிறார்.

மத்திய அரசு ஜனநாயக விரோதமாகநடந்து கொள்வதாக கூறுகிறார். அன்னா ஹஸாரே குழுவினரை விட ஜனநாயக விரோதவாதிகள் யாருமே கிடையாது. அன்னாவின் போராட்டங்களுக்கு நிதியுதவி செய்வது யார் என்பதை அவர்களால் விளக்க முடியுமா என்று கேட்டார் சிபல்.

தமிழர்களை அவமதித்த, அமெரிக்கப் பெண் தூதரின் இனவெறிப் பேச்சு : தலைவர்கள் கடும் கண்டனம் .

தமிழர்களை அழுக்கர் என்று கூறிய அமெரிக்க பெண் தூதரை வெளியேற்ற வேண்டும்: தலைவர்கள் கடும் கண்டனம்

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் துணை தூதராக இருப்பவர் மவ்ரீன் காவ். பெண் அதிகாரியான இவர், சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.

அப்போது அவர் கூறும்போதும், 20 ஆண்டுகளுக்கு முன்பு படிப்பதற்காக இந்தியா வந்த நான், டெல்லியில் இருந்து ஒரிசாவுக்கு ரெயிலில் சென்றேன். 24 மணி நேரத்தில் போய் சேர வேண்டிய இடத்தை 72 மணி நேரமாகியும் அந்த ரெயில் போய் சேரவில்லை. இந்த பயணத்தின் போது எனது தோல் தமிழர்களை போல கறுப்பாகவும், அழுக்காகவும் மாறிவிட்டது என்றார்.

அவரது பேச்சை வட இந்திய மாணவர்கள் பலர் கைதட்டி ரசித்துள்ளனர். ஆனால் மேடையில் இருந்த முக்கிய பிரமுகர்களும், தமிழ் மாணவர்களும் இதனை கண்டு கொள்ளாமல் வாயை பொத்திக் கொண்டு இருந்துள்ளனர்.

அமெரிக்க பெண் அதிகாரியின் இந்த பேச்சுக்கு முதல் - அமைச்சர் ஜெயலலிதா மற்றும் தமிழக தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

முதல் - அமைச்சர் ஜெயலலிதா, சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

அமெரிக்க உதவி துணை தூதர் மவுரீன் சாவ், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடை பெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசியது, பத்திரிகைகளில் வெளியாகி உள்ளது. அதில், நான் டெல்லியில் இருந்து ஒரிசாவுக்கு ரெயிலில் சென்றேன். இந்த பயண நேரம் 24 மணி நேரம்தான். ஆனால் 72 மணி நேரம் ஆகியும், அந்த ரெயில் ஒரிசா போய்ச் சேரவில்லை.

அதனால், எனது சருமம், தமிழர்களைப் போல அழுக்காகவும், கறுப்பாகவும் ஆகிவிட்டது என்று மவுரீன் சாவ் பேசியுள்ளார். இனவெறி கொண்ட இந்த பேச்சு, மிகவும் கண்டத்துக்கு உரியது. இந்த கருத்து, ஒட்டு மொத்த தமிழர்களையும் அவமதிக்கக் கூடியது என்று தங்களுக்கே தெரியும். எனவே, இந்த கருத்துக்களை வாபஸ் பெற்றுக் கொண்டு, தமிழர்களைப் பற்றி இத்த கையை கருத்து தெரிவித்ததற்காக மன்னிப்பு கேட்குமாறு மவுரீன் சாவை தாங்கள் வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:-

தமிழ்நாட்டில் பணியாற்றிக்கொண்டு தமிழர்களால் நடத்தப்படும் பல்கலைக்கழகத்தில் தமிழர்களை பற்றியே இனவெறியுடன் மவுரின் சோவ் பேசியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. அமெரிக்க உதவி துணை தூதரின் இந்தப் பேச்சு தமிழர்களை பற்றிய குரூரமான கற்பனை ஆகும்.

தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் அமெரிக்கர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சவால்விடும் வகையில் தமிழர்கள் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், அவர்களை தீண்டத்தகாதவர்களை போல சித்தரித்து அமெரிக்க உதவித்துணை தூதர் பேசியிருப்பதை தன்மானம் உள்ள தமிழர்கள் எவராலும் சகித்துக் கொள்ள முடியாது.

அமெரிக்காவுக்குச் செல்லும் இந்திய அமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்களை பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் ஆடைகளை களைந்து அவமதிக்கும் அமெரிக்கர்களின் இனவெறி தற்போது தமிழகம் வரை நீண்டிருப்பது உணர்வுள்ள தமிழர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது. ஈழத்தமிழர் சிக்கல் முதல் அனைத்து விவகாரங்களிலும் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் நடுவண் அரசு செயல்பட்டு வருவதாலும், தாராளமயமாக்கல் கொள்கை காரணமாக தமிழர்களிடையே இன உணர்வும், பண்பாட்டு உணர்வும் குறைந்து வருவதாலும்தான் எங்கிருந்தோ வந்தவர்களுக்கு இப்படியெல்லாம் பேசுவதற்கான துணிச்சல் ஏற்பட்டிருக்கிறது.

ஒரு காலத்தில் ஒடுக்கப்பட்ட கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஒபாமா அமெரிக்காவின் அதிபராக பதவி வகித்து வரும் நிலையில், அவரின் பிரதிநிதியாக தமிழகத்தில் இருக்கும் ஒருவர் தமிழர்களை கறுப்பர்கள் என்றும், அழுக்கானவர்கள் என்றும் விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த இனவெறி பேச்சுக்காக மவுரின் சோவ் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கவேண்டும். இவரைப்போன்ற பிறவிகள் இனியும் தமிழகத்தில் தங்கியிருக்க அனுமதிக்கக்கூடாது. தமிழர்களை அவமதித்த அவரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேரில் அழைத்து கண்டிப்பதுடன், உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்.

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை:-

அமெரிக்க துணைத் தூதரின் இந்தப் பேச்சு இனவொதுக்கல் தன்மை கொண்ட முறை தவறிய பேச்சு என்பதில் ஐயமில்லை. இதற்காக அமெரிக்க தூதரகம் வருத்தம் தெரிவித்திருக்கிறது என்ற போதிலும் இவ்வளவு இங்கிதமற்ற ஒருவர், முக்கியமான பொறுப்பில் இருப்பது இந்திய அமெரிக்க ராஜீய உறவுகளை நிச்சயம் பாதிக்கும். இனவெறியை வெளிப்படுத்தும் விதமாகத் தமிழர்களை இழிவு படுத்தியிருக்கும் மவுரீச் சாவ் அம்மையார் பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும்.

அவரை அமெரிக்க அரசு உடனடி யாகத் திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும். அமெரிக்க அதிபருக்கு அடுத்த நிலையில் இருக்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தமிழகத்துக்கு வந்து தமிழக முதல்வரோடு பேச்சு நடத்தினார். ஈழத் தமிழர்கள் குறித்து அப்போது அவர் சாதகமாக கருத்து தெரிவித்தார். ராஜபக்சே அரசின் மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்காவும் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருப்பது தமிழர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அமெரிக்க துணைத் தூதரின் இந்த "இன வெறிப் பேச்சு" அதிர்ச்சியளிக்கிறது. இந்திய அரசு அமெரிக்க தூதரை அழைத்துத் தனது கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.Justify Full