Tuesday, July 5, 2011

ராணுவ அதிகாரியை கைது செய்யாவிட்டால் “குடும்பத்தோடு தீக்குளிப்போம்” : சுட்டுக் கொல்லப்பட்ட சிறுவனின் தாய் கண்ணீர் .ராணுவ குடியிருப்பு வளாகத்தில் நேற்று முன்தினம் தில்ஷான் என்ற 13 வயது சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நகரையே உலுக்கியது. இந்த கொடூரமான செயலில் ஈடுபட்ட ராணுவ வீரரை கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று அனைத்து கட்சியினரும் வற்புறுத்தியுள்ளனர்.

தில்ஷான் வசித்த காந்தி நகர் குடிசைப் பகுதி மக்களும் அவனது பெற்றோரும் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் துக்கத்தில் மூழ்கி கிடக்கின்றனர். தில்ஷான் கொலை செய்யப்பட்டது குறித்து அவனது தாய் கலைவாணி கண்ணீர் மல்க கூறியதாவது:-

எனது மகன் தில்ஷான் கொல்லப்பட்டு 2 நாட்கள் ஆகிறது. இன்னும் அவனைக் கொன்ற ராணுவ அதிகாரியை கைது செய்யவில்லை. என் மகனை சுட்டவர் குடிபோதையில் இருந்துள்ளார். நாட்டை பாதுகாக்க வேண்டியவர் பகலிலேயே போதையில் திரிந்துள்ளார்.

மகனை கொன்றவரை பிடித்து சிறையில் அடைக்ககூடாது. அவரை கடுமையாக தண்டிக்க வேண்டும். தில்ஷானை சுட்ட மாதிரியே சுட வேண்டும்.

கொலையாளியை பிடிக்க காலதாமதம் செய்தால் நானும் எனது கணவர், மகன், மகள் ஆகியோர் குடும்பத்தோடு தற்கொலை செய்வோம். அதை தவிர வேறு வழி எங்களுக்கு தெரியவில்லை.

சுட்டவரை சிறுவர்கள் சஞ்சய், பிரவீன் ஆகியோர் பின்னால்தான் பார்த்துள்ளனர். முகத்தை பார்க்கவில்லை. அணிவகுப்பு நடத்தினால் அவர்களால் அடையாளம் காண்பது சிரமம் ஆகும்.

இவ்வாறு கலைவாணி கூறினார்.

சிறுவன் தில்சனை சுட்டவர் லெப்டினன்ட் கர்னல் : விசாரணையில் தகவல்

சென்னை தீவுத்திடல் அருகில் உள்ள ராணுவ குடியிருப்பு வளாகத்தில் நேற்று முன்தினம் சிறுவன் தில்ஷான் சுட்டுக்கொல்லப்பட்டான் இது குறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. க்கு மாற்றப்பட்டது. இதனைதொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று முதல் விசாரணையை தொடங்கினார்கள். சிறுவன் கொல்லப்பட்டது குறித்து அங்கிருந்த ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார்கள்.

சிறுவன் தில்ஷான் சுடப்பட்ட அன்று மதியம் ராணுவ குடியிருப்பு வளாகத்தில் இருந்து கருப்பு நிற கார் ஒன்று வெளியே சென்றது விசாரணையில் தெரிய வந்தது.
அந்த கார் நேராக அங்கிருந்து பாம்குரோவ் ஸ்போர்ட் காம்ப்ளக்சுக்குள் வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சி.பி.சி. ஐ.டி. போலீசார் விசாரித்தார்கள். அந்த காரில் சென்ற அதிகாரி லெப்டினன்ட் கர்னல் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே கர்னலிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். ஆனால், அவரிடம் விசாரணை நடத்த அனுமதிக்க மற்ற ராணுவ அதிகாரிகள் ஒத்துழைக்க மறுக்கின்றனர். கர்னலை காப்பாற்ற ராணுவ அதிகாரிகள் முயற்சிப்பதாக கூறப்படுகிறது .

இதனால் லெப்டினன்ட் கர்னலை விசாரிப்பது தொடர்பாக டெல்லியில் உள்ள ராணுவ தலைமையகத்துக்கு போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் நகைகள் மதிப்பு ரூ.2 லட்சம் கோடியை தாண்டியது .

பத்மநாபசாமி கோவில் நகைகள் மதிப்பு ரூ.2 லட்சம் கோடியை தாண்டியது

திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோவிலில் ரகசிய அறைகளில் இருந்த தங்க, வைர நகைகள் மதிப்பிடப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு அறை திறந்து பார்க்க வேண்டிய நிலையில் இதுவரை கிடைத்த தங்க, வைர ஆபரணங்கள், மதிப்பு ரூ.2 லட்சம் கோடியை தாண்டி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

6-வது அறை இரும்புத் திரையால் மூடப்பட்டுள்ளது. அந்த அறைக்குள் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் இருக்கக் கூடும் என்ற எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது. உலகில் இதுவரை இத்தகைய புதையல் எங்கும் கிடைத்தது இல்லை.

பத்மநாப சாமி கோவிலில் கடைசி அறையை திறப்பதில் எழும் முட்டுக்கட்டைகள்.

கடந்த 150 ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டிருந்த கேரள மாநிலம் திருவனந்த புரத்திலுள்ள புகழ்பெற்ற பத்மநாப சாமி கோவிலின் ரகசிய அறைகளிலிருந்து இதுவரை ரூபாய் 2 லட்சம் கோடி மதிப்புள்ள தங்கம், வைரம் மற்றும் விலை மதிப்பற்ற வைடூரிய ஆபரணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்னமும் திறக்கப்படாமல் உள்ள பி என பெயரிடப்பட்ட அறை எதிர்வரும் 8-ந்தேதி திறக்கப்படவுள்ளது.

இதற்கிடையே, இந்த அறையை திறப்பது குறித்து பலவேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

இந்த அறைகள் திறக்கப்பட்டது ஒரு மோசமான சகுனமென்றும்; சாபமென்றும் ஒருசாரார் கருத்து தெரிவிக்கின்றனர். அறைகளை திறக்கும் செயல் நாட்டிற்கே சாபமாக அமையலாம் என கூறப்படுகிறது.

இதனை திறக்க உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழுவில் இடம் பெற்ற ஒருவரது தாயார் இறந்து போனதும், மற்றொருவருக்கு காலில் அடிபட்டதும் சாபத்தின் காரணமாகவே என்று அறைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் கருதுகிறார்கள்.

இந்நிலையில், மீதமுள்ள அறையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தற்போது கோவிலை நிர்வகித்து வரும் அரச குடும்ப முக்கிய பிரமுகர் டெல்லியில் முகாமிட்டுள்ளது, இம்முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக இருக்கலாம் என்ற கருத்தும் உலாவருகிறது.

தமிழகம்: அழிவை நோக்கி அணில்கள், 4 கொம்பு மான்கள .ஓசூர் வனப் பகுதிகளில் வசி்க்கும் கிரிசில்ட் ஜயன்ட் ஸ்குரில் (grizzled giant squirrel) எனப்படும் அரிய வகை அணில், 4 கொம்புடைய மான் மற்றும் நீண்ட வாலுள்ள குரங்குகள் அழிவை நோக்கிச் சென்று கொண்டுள்ளன. அவற்றைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் விருப்பம்.

கிரிசில்ட் ஜெயின்ட் ஸ்குரில் (zoological name: Ratufa macroura) இலங்கையின் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள மலைப் பகுதிகள், இந்தியாவில் காவேரி ஆற்றங்கரையோரம் இருக்கும் காடுகள், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள மலைக் காடுகளில் காணப்படுகிறது.

இந்த அணில்கள் அதன் வாழ்விடம் அழிக்கப்படுவதாலும், அவைகள் வேட்டையாடப்படுவதாலும் அழியும் அபாயத்தில் உள்ளது என்று இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச சங்கம் தெரிவித்துள்ளது.

முன்னர் இந்த வகை அணில் ஓசூர் வனப்பகுதியில் பதிவு செய்யப்படாத வகையாக இருந்தது. சமீபத்தில் ஏசியன் நேச்சர் கன்சர்வேஷன் பவுண்டேஷன்(ஏஎன்சிஎப்) என்னும் அமைப்பு இந்த வகை அணில் குறித்து ஆய்வு நடத்தத் துவங்கியது.

கடந்த 2009ம் ஆண்டில் ஏஎன்சிஎப் அமைப்பைச் சேர்ந்த டாக்டர் பாஸ்கரன், சரவணன் மற்று செந்தில் குமார் ஆகியோர் இந்த வகை அணில்கள் மேலும் பல்வேறு இடங்களில் இருப்பதைக் கண்டறிந்தனர்.

அன்மையில் கென்னத் ஆண்டர்சன் நேச்சர் சொசைட்டி (கேஏஎன்எஸ்) அமைப்பைச் சேர்ந்த பிரசன்னா என்பவர் அதிர்ஷ்டவசமாக கிரிசில்ட் ஜெயின்ட் ஸ்குரிலை கண்டு, அதை புகைப்படம் எடுத்ததால் இந்த வகை அணிகள் இருப்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.

அழியும் அபாயத்தில் இருக்கும் இன்னொரு இனம் நான்கு கொம்புகள் உள்ள மான் (டெட்ராசெரஸ் குவாட்ரிகார்னிஸ்). இதை சௌசிங்கா என்றும் அழைப்பார்கள். இந்த மான் அதிகம் தண்ணீர் குடிக்கும் தன்மை உடையது. அதனால் பெரும்பாலும் வற்றாத தண்ணீர் ஆதாரம் உள்ள இடங்களில் தான் வசிக்கும்.

தமிழக வனத்துறையுடன் சேர்ந்து கேஏஎன்எஸ் மற்றும் ஏஎன்சிஎப் ஆகியவை ஓசூர் வனப் பகுதிகளில் நடத்திய வன விலங்குகள் கணக்கெடுப்பில் இந்த இரண்டு அரிய வகை உயிரினங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தமிழகத்தில் காவேரிக் கரையோரங்களில் வசிக்கும் நான்கு கொம்புகள் உள்ள மான் இனம் அநேகமாக அழிந்துவிட்டது என்று டாக்டர் ஏஜேடி ஜான்சிங் அன்மையில் தெரிவித்திருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஓசூர் வனப் பகுதிக்குட்பட்ட ராயக்கோட்டா மலைத்தொடரில் உள்ள உடதுர்கம் பகுதியில் இறந்த மான் உடல் கண்டெடுக்கப்பட்டது.

தற்போது அதே காவேரிக் கரையோரம் உள்ள பல இடங்களில் இந்த மான்கள் காணப்படுவது மகிழ்ச்சியளிக்கும் விஷயமாகும். இந்த மான்கள் ஓசூர் வனத்தில் 3 மான்கள் கொண்ட சிறு சிறு குழுக்களாகத் திரிகின்றன. 1970களில் ஓசூர் வனப்பகுதி அலுவலராக இருந்த மறைந்த டாக்டர் ராஜா சிங்கின் மகன் டாக்டர் ரவி ராஜா சிங் அண்மையில் இந்த மான்களைப் பார்த்துள்ளார்.

ஆடு, மாடுகள் மேய்ச்சல், விறகு சேகரித்தல், காட்டில் விளையும் பொருட்கள் சேகரித்ததலால் இயற்கை வளம் அதிகம் உள்ள இந்த பகுதிகள் அழிவை நோக்கிச் செல்கின்றன. இந்த அரிய உயிரினங்களை அழிவில் இருந்து காக்கும் வகையில் தற்போதைய வன அதிகாரியான உலகநாதன் கிரிசில்ட் ஜெயின்ட் ஸ்குரில் வசிப்பிடங்களின் நுழைவாயிலில் சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளார். அந்தப் பகுதியை எப்பொழுதும் கண்காணிக்க ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கிரிசில்ட் ஜெயின்ட் ஸ்குரில், 4 கொம்புடைய மானைத் தொடர்ந்து லாங்குர் எனப்படும் நீண்ட வால் உடைய குரங்குகளும் அழிவை நோக்கிச் சென்று கொண்டுள்ளன என்பது கவலைக்குரிய விஷயமாகும்.

இந்தியாவில் முதன் முறையாக “ரோபோ” மூலம் புற்று நோய் ஆப்ரேசன்.

உலகில் முதன்முறையாக   நோயாளிக்கு “ரோபோ” மூலம்   புற்று நோய் ஆபரேசன்;   வெற்றிகரமாக நடந்ததாக    டாக்டர்கள் பேட்டி

ரஜினி நடித்த எந்திரன் படத்தில் மனித ரோபோ ஒன்று ஆப்ரேசன் செய்வது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. அதைப் பார்த்த பலர் ரோபோவால் ஆப்ரேஷன் செய்ய முடியுமா என்று ஆச்சரியம் அடைந்தனர். தற்போது அதை உண்மையாக்கும் விதத்தில் ஐதராபாத்தில் உள்ள ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆப் கேஸ்ட்ரோ என்ட்ராலஜி மருத்துவமனையில் புற்று நோயாளி ஒருவருக்கு “ரோபோ” மூலம் ஆப்ரேசன் நடந்துள்ளது.

அவரது பெயர் வீரபத்தராவ் (45) ஆந்திர மாநிலம் வாரங்கால்லைச் சேர்ந்தவர். இவரது ஜீரண மண்டல பகுதியில் புற்று நோய் தாக்கி இருந்தது. புற்று நோய் பாதித்த பகுதியை ரோபோ மூலம் அகற்ற மருத்துவமனை சேர்மன் நாகேஸ்வர ரெட்டி முடிவு செய்தார்.

இதற்காக சிங்கப்பூரில் இருந்து டாக்டர்கள் லூயிசிஷி, கோகிக் யூ லாரன்ஸ் ஆகியோர் ஐதராபாத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தலைமையில் வீரபத்ரராவுக்கு “ரோபோ” மூலம் என்டோஸ் கோப்பிக் ஆப்ரேஷன் நடந்தது. அந்த ரோபோ 17 நிமிடங்களில் அவரது ஜீரண மண்டலத்தில் புற்று நோய் தாக்கிய பகுதியை வெற்றிகரமாக அகற்றி சாதனை படைத்தது.

இது பற்றி நாகேஸ்வர ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

உடல் பகுதியில் புற்று நோய் பாதித்த பகுதியை அகற்றும் ஆப்ரேசனை மிகவும் நுண்ணியமான முறையில் செய்ய வேண்டும். இதனால் இந்த ஆப்ரேசனை டாக்டர்கள் செய்ய சுமார் 6 மணி நேரமாவது ஆகிவிடும். ஆனால் “ரோபோ” வானது 17 நிமிடத்தில் புற்று நோய் பாதித்த பகுதியை முழுமையாக அகற்றி விட்டது.

ரோபோ மூலம் செய்யப்படும் ஆப்ரேசனுக்கு அதிகம் செலவு செய்யத் தேவை இல்லை. டாக்டர்கள் குழுவினர் சாதாரணமாக ஒரு ஆப்ரேசன் செய்ய ரூ.1 லட்சம் வரை ஆகி விடுகிறது. ஆனால் “ரோபோ” ஆப்ரேசனுக்கு ரூ.5 ஆயிரம் தான் ஆகும். ஆப்ரேசன் ரோபோக்கள் அதிக அளவில் தயாரிக்கப்பட்டால் நிறைய உயிர்களை காக்கலாம் என்றார்.

திண்டுக்கல் - சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த போலீஸ் ஏட்டு.

சப்-இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த  திண்டுக்கல் “போதை” போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட் செய்யபட்டார்

திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் சுகுமாறன் (வயது 40). குடிப்பழக்கம் உடையவர். நேற்று அளவுக்கு அதிகமாக மது பானம் அருந்திவிட்டு போதையில் ரோட்டோரத்தில் மயங்கி கிடந்தார்.

அப்போது எழுப்ப சென்ற சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் உலகநாதனின் சட்டையை பிடித்து கொண்டு முகத்தில் கும்மாங்குத்து விட்டார். அடி தாங்க முடியாத அவர், சுகுமாறனின் பிடியில் இருந்து தப்பி ஓட முயன்றார். இருப்பினும் விரட்டி, விரட்டி உலகநாதனை, சுகுமாறன் தாக்கினார்.

இந்த கண்றாவி பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது. பொதுமக்கள் கூட்டம் அதிகமாகவே, இவர்கள் சண்டையை தனிப்பிரிவு ஏட்டு ஜோசப் தடுத்து ஸ்டேஷனுக்கு அழைத்துவந்தார். மேலும் பொது இடத்தில் ஏட்டு, எஸ்.ஐ., மோதல் சம்பவம் குறித்து டி.ஐ.ஜி., சஞ்சய்மாத்தூர், சந்திரசேகரன் எஸ்.பி., ஆகியோர் விசாரணை நடத்தினர்.

போதையில் இருந்த ஏட்டுவிடம் அடிவாங்கிய எஸ்.ஐ., உலகநாதன், தனிப்பிரிவு ஏட்டு ஜோசப் மற்றும் இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் நடந்த சம்பவம் குறித்து விளக்கமளித்தனர்.

இந்நிலையில், ஏட்டு சுகுமாறன் மனைவி ராஜேஸ்வரி(36) தினமும் குடித்து விட்டு வந்து தன்னையும், தனது குழந்தைகளையும் அடித்து துன்புறுத்துவதாக திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே புகார் செய்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் ஏட்டு சுகுமாறன் கைது செய்யப்பட்டு திண்டுக்கல் ஜே.எம்.-2 கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு வீட்டில் நேற்று இரவு ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். இதைதொடர்ந்து குடிபோதையில் சப்- இன்ஸ்பெக்டரை புரட்டி எடுத்த ஏட்டு சுகுமாறனை சஸ்பெண்ட் செய்து சந்திரசேகரன் எஸ்.பி., உத்தரவிட்டார்.

தற்போதைய பாடத்திட்டம் லாயக்கற்றது : சமச்சீர் கல்வி கமிட்டிசமச்சீர் கல்வி பாடத்திட்டம் குறித்த கமிட்டி தன் அறிக்கையை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், தற்போது இருக்கும் பாடத்திட்டங்கள், நடப்பு வருடத்துக்கு பயன்படத்தக்க வகையில் இல்லை என்றும், பாடத்திட்டங்கள் முழுவதுமாக மறுசீரமைக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்றும் அந்தக் கமிட்டி தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், சென்னை உயர் நீதிமன்றம் சமச்சீர் கல்வி குறித்த வழக்கை 7ம் தேதிமுதல் தினமும் விசாரிக்கும் என்று தெரிகிறது.

முன்னதாக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சமச்சீர் கல்வியை ஆய்வு செய்ய தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு ஜூன் 17-ம் தேதி நியமித்தது.

அந்தக் குழுவினர் இதுவரை 4 முறை கூடி சமச்சீர் கல்வி முறையை ஆய்வு செய்தனர். அந்தக் கூட்டங்களில் விவாதிக்கப்பட்ட கருத்துகள் தொகுக்கப்பட்டு அறிக்கையாக நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அறிக்கையை தொடர்பாக உயர்நீதிமன்றம் 7-ம் தேதி முதல் தினந்தோறும் விசாரணை நடத்த உள்ளது. 1, 6 வகுப்புகள் தவிர மீதமுள்ள 8 வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி முறை இந்த ஆண்டில் அமல் ஆகுமா என்பது தொடர்பாக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும்.

இந்த வழக்கின் தீர்ப்பின் அடிப்படையிலேயே ஏறத்தாழ ஒரு கோடி மாணவர்களுக்கு எந்தப் பாடப்புத்தகங்கள் என்பது தீர்மானிக்கப்படும். சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் ஏற்கெனவே தயாராக உள்ள நிலையில், பழையப் பாடத்திட்டத்தின் கீழ் புத்தகங்களை அச்சிடும் பணியும் இப்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

பத்தாம் வகுப்பு புத்தகங்களுக்கு முன்னுரிமை வழங்கி புத்தகங்கள் அச்சிடப்படுவதாகவும், இதுவரை ஏறத்தாழ 20 சதவீதத்துக்கும் அதிகமான புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வழக்கு முடியும் வரை 1, 6 வகுப்புகளுக்கு எந்தவித பாடத்திட்டத்தின் கீழும் பாடங்களை நடத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனவே, மாணவர்களை மையப்படுத்திய புதிய பயிற்றுவித்தல் முறையில் அறிவியல், கணிதப் பாடங்களில் அடிப்படைகள் கற்றுத்தரப்படுகின்றன. ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிப்பாடங்களில் இலக்கண வகுப்புகளும் இப்போது நடத்தப்பட்டு வருகின்றன. இதுதவிர மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட இருந்தது. ஆனால், இந்தப் பாடப்புத்தகங்கள், கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் இல்லை என்று கூறி, இந்த ஆண்டு பழையப் பாடத்திட்டத்தையே பின்பற்ற தமிழக அரசு முடிவு செய்தது.

இதுதொடர்பாக, சமச்சீர் கல்விச் சட்டத்தில் திருத்தத்தையும் அரசு கொண்டு வந்தது.

ஆனால், இந்தத் திருத்தத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இந்தத் தடையை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சமச்சீர் கல்வி தொடர்பாக ஆராய தலைமைச் செயலாளர் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்க உத்தரவிட்டது. அந்தக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், 1,6 வகுப்புகளைத் தவிர பிற வகுப்புகளுக்கு இந்த ஆண்டு சமச்சீர் கல்வி முறையை அமலாக்குவது குறித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டது.

1,6 வகுப்புகளில் சமச்சீர் கல்வி முறையையே இந்த ஆண்டு தொடர வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அம்பானியின் பிரம்மாண்ட ஊழல் !மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரி மீண்டும் ஒரு ஊழல் பூதத்தை அடையாளம் காட்டியுள்ளார். சென்ற வருடம் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு சம்பந்தமாக வெளியான CAGன் அறிக்கையிலிருந்து எழுந்து வந்த பூதத்தையே எப்படி அடக்குவது என்று தெரியாமல் மத்தியில் ஆளும் காங்கிரசு பரிதவித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போதைய CAG அறிக்கையிலிருந்து கிளம்பியுள்ள கே.ஜி பூதத்தை சர்வகட்சிகளும் மௌனமாய் இருப்பதன் மூலம் மக்களின் கவனத்திலிருந்து மறைத்துவிடலாம் என்று நினைக்கின்றனர்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணை வயல்களைக் கண்டுபிடிக்கவும் எண்ணை துரப்பணம் செய்யவும் ரிலையன்ஸ், கெய்ன்ஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஒப்பந்தங்களில் மாபெரும் ஓட்டைகள் இருப்பதாகவும், அதன் வழியே புகுந்து புறப்பட்டுள்ள முகேஷ் அம்பானி, அரசுக்கும் மக்களுக்கும் பட்டை நாமம் சாற்றியிருப்பதாகவும் இப்போது வெளியாகியிருக்கும் CAG அறிக்கையின் முன்வரைவு கூறுகிறது.

குறிப்பாக கிருஷ்ணா கோதாவரிப் படுகையில் இயற்கை எரிவாயு வயல்களை கண்டுபிடிக்கவும், அதற்காக ஆழ்துளைக் கிணறுகள் தோண்டவும் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தில், ஆரம்பத்தில் ரிலையன்ஸ் செய்யவிருப்பதாக ஒப்புக் கொண்ட மூலதனச் செலவைக் காட்டிலும் இரண்டே வருடத்தில் மும்மடங்கு அதிகமாக செலவு செய்ததாக கள்ளக்கணக்கு எழுதியிருக்கிறது. இதைத் தொடர்ந்து ஒப்பந்தம் போடும் போது ஒப்புக் கொண்ட அளவுக்கு எரிவாயு ரிசர்வ் இல்லை என்று சொல்லி செலவு செய்ததாக அவர்கள் காட்டிய தொகையையும் அரசிடம் இருந்தே கறந்துள்ளனர். இது இந்த ஊழலின் ஒரு அம்சம்.

இதில் இன்னொரு அம்சமும் உள்ளது. அதாவது, எரிவாயு கண்டுபிடிக்க (to be explored) வேண்டிய பகுதிகள் என்று குறிக்கப்பட்ட பகுதிகளையெல்லாம் கண்டுபிடிக்கப்பட்ட (discovered) பகுதிகள் என்று போர்ஜரி வேலையும் செய்துள்ளது ரிலையன்ஸ். கிருஷ்ணா கோதாவரி சுழிமுனையில் இயற்கை எரிவாயு ரிசர்வ் இருப்பதை உறுதி செய்து கொண்ட அரசு, அந்தப் பகுதியில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் ஒப்பந்தத்தை ரிலையன்ஸிடம் கொடுக்கிறது. இதில் ஐந்து சதவீத பகுதியில் மட்டும் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்த ரிலையன்ஸ், அருகில் உள்ள மற்ற பகுதிகளில் தானே எரிவாயுவைக் கண்டுபிடித்து விட்டதாகச் சொல்லி அப்பகுதிகளையும் அமுக்கிக் கொண்டிருக்கிறது.

இவ்விவகாரத்தில், அரசுக்கும் தனியாருக்கும் இடையேயான ஒப்பந்தம் என்பது உற்பத்திப் பகிர்வின் (PSC – Production-sharing contract) அடிப்படையில் லாபப் பகிர்வு இருக்கும் என்றும், அதில் மூலதனச் செலவுக்கு ஏற்ப லாப விகிதங்கள் பகிர்ந்து கொள்ளப் படும் என்றும் குறிப்பிட்டிருப்பதால் தான் ஊழல் செய்ய வாய்ப்பு ஏற்பட்டு, நாட்டுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை தெரிவிக்கிறது. இந்த மோசடிகளுக்கெல்லாம் பெட்ரோலியத் துறை அதிகாரிகளும் அமைச்சரும் உடந்தையாக இருந்ததாகவும் அறிக்கை சொல்கிறது.

தற்போது நடப்பில் இருக்கும் உற்பத்திப் பகிர்வு அடிப்படையிலான ஒப்பந்தங்கள் ஊழலுக்கு வழிகோலுவதால், இதற்கு மாற்றாக உற்பத்தியின் அடிப்படையில் ராயல்டி விதிப்பது சரியாக இருக்கும் என்று கணக்குத் தணிக்கை அதிகாரி பரிந்துரைத்துள்ளார். மேலும், செனற் ஆண்டு வெளியான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான ஊழலைப் போல் அல்லாமல், இந்த ஊழலில் மக்களுக்கும் அரசுக்கும் ஏற்பட்டுள்ள இழப்பை கணிக்க முடியவில்லை என்றும், ஆனால் அதே நேரம் இந்த ஊழலின் அளவு முந்தைய ஊழல்களைக் காட்டிலும் பிரம்மாண்டமானதாக இருக்கும் என்றும் கணக்குத் தணிக்கை அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஆயினும் சில சுயேச்சையான கணக்கீடுகள், இந்த ஊழலின் அளவு சற்றேரக்குறைய 2ஜி அலைக்கற்றை ஊழலின் அளவை ஒத்திருக்கலாம் என்று தெரிவிக்கிறது.

கணக்குத் தணிக்கை அதிகாரியின் வரைவு அறிக்கை வெளியாகி மத்தியில் ஆளும் காங்கிரசு கும்பல் படுகேவலமாக அம்பலமாகி நிற்கும் இந்த நிலையை பிரதான எதிர்கட்சியான பாரதிய ஜனதா தனது சொந்த அரசியல் நலனுக்காகக் கூட பயன்படுத்திக் கொள்ள முனையவில்லை. காங்கிரசோடு சேர்ந்து கிழிந்திருப்பது அம்பானியின் கோவணமும் தான் என்பதால் பெயரளவுக்கு முனகிவிட்டு அடங்கிவிட்டனர். ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளியான போது சம்பிரதாயமாகவாவது சாமியாடிய போலி கம்யூனிஸ்டுகள் இப்போது ‘பத்தோடு பதினொன்னு அத்தோடு இது ஒன்னு’ என்கிற ரீதியில் இந்த ஊழலைப் பற்றி கருத்துத் தெரிவித்து முடித்துக் கொள்ளப் பார்க்கிறார்கள்.

ஏற்கனவே கிருஷ்ணா கோதாவரி எரிவாயு வர்த்தகத்தில் அம்பானி சகோதர்களுக்குள் குத்துவெட்டு நடந்த போது அதில் தலையிட்டு பஞ்சாயத்துப் பேசி தீர்த்து வைத்ததே சுப்ரீம் கோர்ட்டு தான் என்பது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். முகேஷ் தலைமையிலான ரிலையன்ஸ் கம்பெனி எரிவாயுவுக்கு அதிக விலை நிர்ணயம் செய்ததாக அனில் அம்பானி ஆந்திர அரசு மற்றும் உர அமைச்சகங்கள் குற்றம் சாட்டிய போது தலையிட்ட காபினெட் குழுவும் உச்ச நீதிமன்றமும் முகேஷுக்கு சாதகமான தீர்ப்பையே வழங்கியிருந்தன.

ஆக, ஊழல் சட்டபூர்வமானது என்பதைக் கடந்து, வளங்களைத் திருடிச் செல்வதில் முதலாளிகளுக்கு ஏதாவது பிரச்சினையேற்பட்டால் அதை பைசல் பண்ணிவிட நீதிமன்றமும் அரசுமே தயாராய் நிற்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

சமீப நாட்களாக ஊழலை எதிர்த்து சண்டமாருதம் செய்து வரும் முதலாளித்துவ ஊடகங்களோ, இதைப் பற்றி எதுவும் பேசாமல் மயான அமைதியில் உறைந்து போயிருக்கிறார்கள். ஒரு செய்தியாகக் குறிப்பிடும் போது கூட, உற்பத்திப் பகிர்வு ஒப்பந்தத்தில் முறைகேடு இருப்பதால் தான் ஊழல் நடந்து விட்டது என்றும், கணக்குத் தணிகை அதிகாரி முன்மொழிந்திருக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் ஒப்பந்தங்கள் போடப்பட்டால் பிரச்சினை தீர்ந்தது என்பது போலும் சொல்கிறார்கள்.

பொதுவாக ஒவ்வொரு முறை ஊழல் வெளியாகும் போதும் அதைப் பற்றி தனித்தனியே விவாதிப்பதும், அதில் நடந்துள்ள முறைகேடுகள் பற்றி வாய்கிழியப் பேசி விட்டு, அப்போதைக்கு கையில் மாட்டும் யாராவது ஒரு பலியாட்டின் தலையில் பாவக் கணக்கை எழுதி வைத்து விட்டு அடுத்த ஊழலுக்குக் காத்திருப்பதே முதலாளித்துவ ஊடகங்களின் வாடிக்கையாக இருக்கிறது. ஸ்பெக்ட்ரமுக்கு ஒரு ராசா, காமன்வெல்த்துக்கு ஒரு கல்மாடி என்று ஏற்கனவே மாட்டிக் கொண்ட பலியாடுகளைப் போல் இதற்கும் இனி ஒரு பலியாடு கண்டுபிடிக்கப்படுவார். பார்வையற்ற நான்குபேர் யானையைத் தடவிப் பார்த்துப் புரிந்து கொள்ள முயல்வதைப் போன்றே இவர்களின் அணுகுமுறையும் இருக்கிறது.

இந்த ஊழல்கள் அனைத்திலும் ஒரு இணைப்புக் கண்ணி இருப்பதை இவர்கள் திட்டமிட்டே மறைக்கிறார்கள். மக்களையும் அவ்வாறு பார்த்துப் புரிந்து கொள்ள விடுவதில்லை. இப்போது வெளியாகியிருக்கும் ஊழலைப் பொருத்தவரையில் உற்பத்திப் பகிர்வு ஒப்பந்தத்தின் ஓட்டை என்பது ஒரு விளைவு தான் – இந்த விளைவுக்கான காரணம் வேறு.

தனியார்மய தாராளமயக் கொள்கைகள் அமுல்படுத்தத் துவங்கிய ஆரம்ப காலத்தில் – ஏன் இன்றும் அதியமான் போன்றவர்கள் கூட – அதற்கான காரணமாக முன்வைக்கப் பட்டது பொதுத்துறையின் திறமையின்மை. இவர்கள் முதலீடு செய்யும் பலமும், தொழில் நுட்பத் திறனும், வாடிக்கையாளார் சேவையிலும் பொதுத்துறை நிறுவனங்கள் பலமடங்கு பின்தங்கியிருப்பதாகவும், இதனால் தான் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்றும், இதற்குத் தனியார்களை அனுமதிப்பதே ஒரே தீர்வு என்றும் சொன்னார்கள்.

ஆனால், இந்தியாவின் பொதுத்துறை எண்ணை நிறுவனங்களைப் பொருத்தமட்டில், அரசுக்குச் சொந்தமான ஓ.என்.ஜி.சி மற்றும் ஒ.ஐ.சி இந்தியாவில் மட்டுமல்லாமல் உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், ஆப்ரிக்க நாடுகள், தென்னமெரிக்க நாடுகள் உள்ளிட்டு உலகின் பல்வேறு பகுதிகளிலும் எண்ணை வயல்களையு இயற்கை எரிவாயுவையும் கண்டுபிடிப்பதிலும் எண்ணை துரப்பணத்திலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. ஆக, ஒரு பொதுத்துறை நிறுவனத்திற்கே இத்துறையில் போதுமான நிபுணத்துவமும் தகுதியும் திறனும் இருக்கிறது. வெளிநாடுகளில் சென்று எண்ணை வயல்களைக் கண்டுபிடிக்கவும், எண்ணை துரப்பணம் செய்யவும் போதுமான மூலதன பலம் அதற்கு இருக்கிறது. அப்படியிருக்கும் போது, தனியார் பகாசுரக் கம்பெனிகளான ரிலையன்ஸுக்கும் கெயின்ஸுக்கும் பிரிட்டிஷ் கேஸுக்கும் இந்த ஒப்பந்தத்தை அளிக்க வேண்டிய தேவை ஏன் வந்தது எங்கிருந்து வந்தது?

ஊழல் பிறக்கும் இடம் இது தான். இப்போது அம்பலமாகியிருக்கும் ரிலையன்ஸ் ஊழல் என்பது எதார்த்தத்தில் பிரதானமான ஊழலின் நடைமுறையில் ஏற்பட்டுள்ள ஒரு முறைகேடு. பிரதானமான ஊழல் அப்படியே இருக்கும் போது இந்த நடைமுறைக் கோளாறையே மொத்த ஊழலாகப் பார்க்கச் சொல்வதென்பது ஆபத்தானது மட்டுமல்ல – மக்களை ஏமாற்றுவதும் கூட. இதைத் தான் அண்ணா ஹசாரே உள்ளிட்ட திடீர் ஊழல் எதிர்ப்புப் போராளிகள் செய்கிறார்கள்.

ஆக, நாட்டுக்கும் நாட்டு மக்களும் சொந்தமான இயற்கை வளங்களைக் கூறு போட்டு உள்நாட்டுத் தரகுமுதலாளிகளுக்கும் பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகளுக்கும் படையல் போட்டு வைத்து விட்டு அதைப் பொறுக்கித் தின்ன வரும் முதலாளிகளுக்கு இடைஞ்சல் இல்லாத நடைமுறையை மேற்கொள்வது தான் ஊழலற்ற நல்ல நிர்வாகம் (good governance) என்கிறார்கள். இந்தக் கூச்சலில் வளங்கள் கொள்ளை போவதிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே அண்ணா ஹசாரே போன்ற கோமாளிகளின் கூத்துகள் பயன்படுகின்றன.

ஆக, உண்மையாகவே ஊழல் முறைகேடுகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் – அவற்றை எதிர்த்து முறியடிக்க வேண்டும் என்கிற உண்மையான அக்கறையும் தேசபக்தியும் கொண்டவர்கள், அதற்கு ஊற்றுமூலமாய் இருக்கும் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்துப் போராடி முறியடிக்க வேண்டியதைத் தவிற வேறு வழியொன்றும் இல்லை என்பதற்கு நேரடி சாட்சியாய் ரிலையன்ஸ் ஊழலே இருக்கிறது.

www.vinavu.com