Thursday, April 14, 2011

கலைஞர் பேச்சு : ரஜினி அதிருப்தி.


தேர்தலில் வாக்களிப்பது ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை. யாருக்கு வேண்டுமானாலும் அவர்கள் வாக்களிக்கலாம். ஆனால் அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்ற ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பது கட்டாயம்.

நடிகர் ரஜினிகாந்த் நேற்று அவர் வாக்களித்த போது, எந்த கட்சிக்கு வாக்களித்தார் என்ற ரகசியம் அம்பலமாகிவிட்டது. பொதுவாக அவர் வாக்களிக்க வரும்போது, ரசிகர்களை மிஞ்சும் அளவுக்கு மீடியாக்காரர்கள் மொய்த்துக் கொள்வார்கள். நேற்றும் அப்படித்தான் நடந்தது.

அவர் வாக்களிக்கும் இடத்துக்குச் சென்றபோதும் காமிராக்கள் துரத்தின. அவர்களை அப்புறப்படுத்த ரஜினியும் முயற்சிக்கவில்லை.

அவருடன் வந்திருந்தவர்களும் முயற்சிக்கவில்லை. இதனால் அவர் எந்த கட்சிக்கு வாக்களித்தார் என்பதை அப்படியே தெள்ளத் தெளிவாகப் படம்பிடித்துள்ளனர்.

இந்த விசயம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது போதாதென்று மக்கள் கடுமையான விலைவாசியால் அவதிப்படுகிறார்கள். நல்ல ஆட்சியை எதிர்ப்பார்க்கிறார்கள். அவர்களுக்கு நல்ல மாற்றம் கிடைக்கும் என்று அதிரடியாக பேட்டியும் அளித்து பரபரப்பூட்டினார்.

இந்த நிலையில், நேற்று மாலையே திமுக தலைவர் கருணாநிதியுடன் பொன்னர் சங்கர் பார்க்க வேண்டிய சூழல்.

காலையில் ஏற்பட்ட பரபரப்பினால் ரஜினி வருவாரா மாட்டாரா என்று எல்லோரும் காத்திருந்தார்கள். ஒருவழியாக வந்தார். ஆனால் முதல்வருடன் அவரால் சகஜமாக இருக்க முடியவில்லை என்கிறார்கள்.

படம் பார்த்துக்கொண்டிருக்கும் போது கவிஞர் வைரமுத்துவிடம், 'நீங்களெல்லாம் இந்த மனிதருக்கு (ரஜினிக்கு) எந்த அளவு பரிந்து பேசியிருக்கிறீர்கள். ஆனால் இவர் செய்திருக்கிற வேலையைப் பார்த்தீர்களா... இவரது நம்பகத்தன்மை தெரிகிறதா..என்று கேட்டாராம் முதல்வர்.

வாக்களிப்பது அவர் இஷ்டம். ஆனால் அதைப் படம்பிடிக்கவும் அனுமதித்து இருக்கிறார்கள். அடுத்து அவர் அளித்த பேட்டி.. விலைவாசி நாடெங்கும் உள்ள பிரச்சினை. ஆனால் நமது அரசு அதைத் தீர்க்க எடுத்த முயற்சிகள் தெரியாதா.. விவசாயிகளுக்கு இந்த அரசை விட அதிகம் செய்தது யார்.... இதெல்லாம் சரிதானா?",என்று தனது கோபத்தை சிரித்துக்கொண்டே வைரமுத்துவின் மூலமாக வெளிப்படுத்தினாராம் திமுக தலைவர் கருணாநிதி.

இதனால் படம் முடிந்ததும் சகஜமாக எல்லோரிடமும் பேசாமல் காரில் ஏறிப் பறந்தாராம் ரஜினி.


பிரபல வில்லன் நடிகர் மரணம்.


தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகர் ராமி ரெட்டி ஹைதராபாதில் இன்று காலமானார். அவருக்கு வயது 52.

கடந்த சில வாரங்களாக சிறுநீரகக் கோளாறுக்காக சிகிச்சை பெற்று வந்த ராமி ரெட்டி செகந்திராபாதில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை 11 மணியளவில் மரணமடைந்தார். அவருக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர்.

அங்குசம் படத்தில் ராமி ரெட்டியின் கதாபாத்திரம் மிகவும் பிரபலமடைந்தது. தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம் மற்றும் போஜ்புரி மொழிகளில் 250-க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.

ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமி ரெட்டி, திரையுலகில் நுழைவதற்கு முன்பு பத்திரிகையாளராக தனது பணியைத் தொடங்கினார்.

ராமி ரெட்டியின் திடீர் மறைவு திரைத்துறைக்கு பெரிய இழப்பு. அவர் ஒரு சிறந்த நடிகர் என நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம் தெரிவித்தார்.


ஆ ராசாவை பல்வா, அம்பானிக்கு சாதகமாக செயல்பட வைத்தவர் சரத்பவார் ! - நீரா ராடியா.


2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகியுள்ள ஷாகித் பல்வாவின் டிபி ரியலிட்டி நிறுவனத்தில் மத்திய அமைச்சர் சரத்பவாருக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும், ஆ ராசாவை பல்வா மற்றும் அனில் அம்பானிக்கு சாதகமாக செயல்பட வைத்தவர் பவார்தான் என்றும் நீரா ராடியா மீண்டும் புயலைக் கிளப்பியுள்ளார்.

ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் கார்ப்பரேட் தரகர் நீராராடியாவுக்கு தொடர்பு இருப்பது வெளியாகி, பெரும் சர்ச்சை எழுந்தது. இதில் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ ராசா கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த முறைகேட்டில் தொடர்புடைய அத்தனை பேரிடமும் சிபிஐ மிகத் தீவிரமாக விசாரித்து வருகிறது. உச்சநீதிமன்ற நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கு நடந்து வருகிறது.

நீரா ராடியாவிடம் சி.பி.ஐ. பலகட்டமாக விசாரணை நடத்தியுள்ளது. அதில் பல்வேறு தகவல்களை சி.பி.ஐ.யிடம் நீரா ராடியா கூறியுள்ளார். ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக மும்பை தொழில் அதிபர் ஷாகித் பல்வா கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார். இவர் நடத்திய ஸ்வான் டெலிபோன் நிறுவனம் மூலம் இவருக்கு ஸ்பெக்ட்ரம் ஊழலில் பங்கிருப்பது தெரியவந்தது.

ஷாகித் பல்வாவுக்கு டி.பி. ரியாலிட்டி என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் உள்பட பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. மத்திய அமைச்சர் சரத் பவாருக்கும், ஷாகித் பல்வாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாக ஏற்கனவே புகார்கள் வந்தன. ஆனால் இதை சரத்பவார் மறுத்து வந்தார்.

ஆனால் சரத்பவாருக்கும், ஷாகித் பல்வாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது உண்மைதான் என நீராராடியா சி.பி.ஐ.விடம் தெரிவித்துள்ளார்.

ஷாகித் பல்வா நடத்திய டி.பி.ரியாலிட்டி ரியல் எஸ்டேட் நிறுவனத்தை சரத்பவாரும், அவரது குடும்ப உறுப்பினர்களும்தான் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தனர் என்றும் நீராராடியா கூறியுள்ளார். மேலும், ஆ.ராசாவை ஷாகித் பல்வா, அனில் அம்பானி ஆகியோருக்கு சாதகமாக செயல்பட வைத்தவர் சரத் பவார்தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

பாடகி சித்ராவின் மகள் துபாயில் நீச்சல் குளத்தில் மூழ்கி சாவு.


பிரபல பின்னணி பாடகி சின்னகுயில் சித்ரா. மலையாளத்தை சேர்ந்தவரான இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஒரியா, பெங்காலி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவருக்கும் ‌விஜயசங்கர் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு நந்தனா என்ற பெண் குழந்தை பிறந்தது.

தற்போது அந்த குழந்தைக்கு 8 வயதாகிறது. சாய்பாபா அருளால் பிறந்த குழந்தை என்பதால் இக் குழந்தையின் பெயர் சத்ய சாய்பாபா நந்தனா என்பதாகும்.

இந்நிலையில் துபாயில் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இன்று ரஹ்மானின் இசைநிகழச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது குழந்தையுடன் துபாய் சென்றார் சித்ரா. சித்ராவுடன் பிரபல பின்னணி பாடகர்கள் ஹரிஹரன், சாதனா சர்க்கம், நரேஷ் ஐயர், பென்னி தயால், விஜய் பிரகாஷ், ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ரஹினா உள்ளிட்ட பலர் சென்றனர். இவர்கள் அனைவரும் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களை பாட இருக்கின்றனர்.

துபாயின் எமிரேட்ஸ் ஹில்ஸில் உள்ள பிரபல இந்திய தொழிலதிபர் திலீப் ரவுலான் என்பவர் வீட்டில் சித்ரா தனது குழந்தையுடன் தங்கியிருந்தார். சித்ராவின் மகள் நந்தனா வீட்டினுள் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரா விதமாக அங்கிருந்த நீச்சல் குளத்தில் தவறி விழுந்தார்.

இதனையடுத்து உடனடியாக குழந்தை நந்தனாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் நந்தனா இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 15வருடமாக தவமிருந்து பெற்ற மகள் இப்போது கண்முன் இறந்து கிடப்பதை பார்த்து சித்ரா கதறி அழுதார்

சித்ராவின் மகள் மனநலம் குன்றியவர். (யாரிடமும் எளிதில் பழக முடியாத மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தை)


'பரம்பரை யுத்தத்தை' முடித்து வைத்த ஜெ.வுக்கு நன்றி - கி.வீரமணி.


நாளை அமையப் போகும் ஆட்சி மீண்டும் கருணாநிதிஆட்சியே. ஆறாவது முறை தமிழ் இன இராவணனின் ஆட்சிதான் அது! அதைச் சொன்னதற்காகவும், பரம்பரை யுத்தத்தை முடித்து வைத்ததற்காகவும் அம்மையாருக்கு நன்றி! நன்றி!! நன்றி!!! என்று தி.க. தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டின் எல்லா திசைகளுக்கும் சென்று தமிழ் மக்களிடையே உள்ள உணர்வுகளை நேரில் படித்தறியும் வாய்ப்பு கடந்த 19 நாள்கள் சூறாவளி தேர்தல் பிரச்சாரப் பயணத்தின்மூலம் நமக்குக் கிடைத்தது.

பெரும்பாலான மக்கள் குறிப்பாக ஏழை, எளிய, கிராம, நகர மக்கள், சிறுபான்மை யினர் உள்பட கூடிய கூட்டத்தில் கண்ட அலை மீண்டும் கருணாநிதி ஆட்சியே என்ற சாதனைச் சரித்திரத்தின் தொடர்ச்சியை ஆதரித்தே பரவலாக இருக்கிறது என்பது அனைவருக்குமே புரிந்தது.

சென்ற சட்டமன்றத் தேர்தலில் கலைஞரின் தி.மு.க. கதாநாயகனான தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளால் இதையெல்லாம் கொடுக்க முடியுமா அதெல்லாம் நடவாது என்று பிரச்சாரம் செய்து தோல்வியுற்ற அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா இத்தேர்தலில், அந்தச் சாதனைகளைக் கண்டு மிரண்டு போய், நாமும் அவ்வழியில் சென்றாவது

நடைபெற முடியாத வைகளைக்கூட இலவசங்களாகத் தருவோம் என்றார்; கலைஞரின் இப்போதைய கதாநாயகியான தேர்தல் அறிக்கையை காப்பி அடித்தாவது வெற்றி பெற்றால் போதும் என நினைத்து, ஆடு களையும், மாடுகளையும், குடிநீரையும், அரிசியையும் இலவசமாகத் தருவோம் என்று கூறியாவது தாங்கள் மீண்டும் குறுக்கு வழியில் பொய்யுரை பரப்பியதன் மூலம் வில்லன் ஆட்சிக்கு வர முயற்சித்ததே அவரது முதல் (தார்மீக) தோல்வியாகும்!.

இரண்டாவது, வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை அத்தனைப் பேருக்கும் கொடுக்க முடியுமா இவரால் என்று முன்பு கேட்ட அதே அம்மையார், இப்போது கருணாநிதி ஒரு கோடியே 62 லட்சம் இலவச தொலைக்காட்சிகளைக் கொடுத்ததாகக் கூறுகிறார்; அவற்றை இவர் மக்கள் வரிப் பணத்திலிருந்துதானே கொடுத்தார்? என்று கேட்டதே அவரது தோல்வி பயத்தின் வெளிப் பாடேயாகும்!.

10 ஆண்டுகள் இரு முறை முதல்வராக இருந்த அவர் இப்படி பேசியது அசல் கேலிக்குரிய ஒன்றல்லவா?.

எவர் ஆட்சிக்கு வந்தாலும், மக்களது வரிப் பணத்திலிருந்துதானே எந்த மக்கள் நலத் திட்டங் களையும் செய்ய முடியும்? எவரும் அவரது சொந்தப் பணத்திலிருந்து செய்வதில்லை; செய்யவும் முடியாது என்பது அரசியல் அரிச்சுவடி அல்லவா?

முதல்வர் கருணாநிதி தனது கதை, வசனம்மூலம் வரும் ஊதியத்தைக்கூட மக்களுக்கும், பொதுநலத் திற்கும்தானே தருகிறார்?.

முதல்வராக இருந்தபோது ஜெயலலிதா அம்மை யாரிடமே தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் மூலமாக தனது திரைப்பட வருமானத்தை சுனாமி உதவியாக அளித்தாரே, மறந்துவிட்டதா?.

அன்று முதல் அவர் தொடர்ந்து தனது வருவாயை அறக்கட்டளை மூலம் அறப்பணிகளுக்குத் தானே செலவழிக்கிறார்!.

தனது கோபாலபுரம் வீட்டினைக்கூட மருத்துவ மனைக்காக கொடையாகக் கொடுத்தவர் எப்படி ஒரு அரசுக்குரிய திட்டங்களை சொந்த பணம் மூலம் நடத்த முடியும்?.

அதே நேரத்தில், ஜெயலலிதா தனது கொடநாடு எஸ்டேட்டில் அங்கிருக்கும் ஏழை எளிய தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நடந்துபோக ஓர் அவசரத்திற்குக்கூட பயன்படுத்த வழியைக்கூட விட மறுத்து உச்சநீதிமன்ற ஆணைக்குப் பிறகு அல்லவா அப்பிரச்சினைக்கு வழி பிறந்தது! (இன்னமும் கேட் திறக்கப்படாத நிலைதான்). மக்கள் வாக்காளர்கள் புரிந்துள்ளார்கள்.

எனவே, வேதனைகள் தொடரக் கூடாது; சாதனைகள் தொடரவேண்டும் என்றே நினைக்கிறார்கள்!.

முன்பு அம்மையார் ஆட்சி பற்றி பேய் ஆட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்ற பாரதியார் பாட்டைப் பாடிய இடதுசாரி நண்பர்கள், அவற்றை ஒரு 10, 12 இடங்களுக்காக அதை வசதியாக மறந்துவிட்டு, இன்று அ.தி.மு.கவின் பக்கம் போய் அதற்கு ஆலவட்டம் சுற்றும் அவலம் உள்ளது!.

சகோதரர் மானமிகு வைகோவையும், அவரது கட்சியையும் அவமானப்படுத்திய ஆணவம் + அகம்பாவம் மீண்டும் அரியணை ஏறக்கூடாது என்பதில் சகோதரர்களின் கோபம் நியாயமான ஒன்றல்லவா?.

பொடா புண் ஆரும் முன்பே அம்மையாரை ஆதரித்து நின்றவரை இப்படி அசிங்கப்படுத்தியது மன்னிக்க முடியாத குற்றம் அல்லவா? இவரை மிஞ்சியதாகக் காட்டிக் கொள்ள ஈழத் தமிழர் விசுவாசிகள் சிலர், எரிந்த வீட்டில் பிடுங்கியது லாபம் என்று ஈழத் தமிழர் ஆதரவுப் போர்வையில் இரட்டை இலைக்கு ஆதரவு தேடி திடீர் அவதாரம் எடுத்துள்ளது வெட்கக்கேடு அல்லவா?.

இதனை நன்கு புரிந்துள்ளார்கள் தமிழர்கள்!.

நாளை அமையப் போகும் ஆட்சி மீண்டும் கருணாநிதி ஆட்சியே. ஆறாவது முறை தமிழ் இன இராவணனின் ஆட்சிதான் அது! அதைச் சொன்னதற்காகவும், பரம்பரை யுத்தத்தை முடித்து வைத்ததற்காகவும் அம்மையாருக்கு நன்றி! நன்றி!! நன்றி!! என்று கூறியுள்ளார் வீரமணி.


ரஜினி பேச்சு? - வறுத்தெடுத்த முதல்வர் !


தேர்தலில் வாக்களிப்பது ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை. யாருக்கு வேண்டுமானாலும் அவர்கள் வாக்களிக்கலாம். ஆனால் அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்ற ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பது கட்டாயம்.

ஆனால் தமிழ் சினிமாவில் உச்ச அந்தஸ்தை 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவித்துவரும், ஏதோ ஒரு கட்டத்தில் முதல்வர் பதவியில் அமர்ந்து விடமாட்டாரா என ரசிகர்களால் நம்பப்படும் (இன்னமும்) ரஜினிகாந்த், இந்த விஷயத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக சறுக்கியிருக்கிறார்.

நேற்று அவர் வாக்களித்த போது, எந்த கட்சிக்கு வாக்களித்தார் என்ற ரகசியம் அம்பலமாகிவிட்டது. பொதுவாக அவர் வாக்களிக்க வரும்போது, ரசிகர்களை மிஞ்சும் அளவுக்கு மீடியாக்காரர்கள் மொய்த்துக் கொள்வார்கள். நேற்றும் அப்படித்தான் நடந்தது.

அவர் வாக்களிக்கும் இடத்துக்குச் சென்றபோதும் காமிராக்கள் துரத்தின. அவர்களை அப்புறப்படுத்த ரஜினியும் முயற்சிக்கவில்லை. அவருடன் வந்திருந்தவர்களும் முயற்சிக்கவில்லை. இதனால் அவர் எந்த கட்சிக்கு வாக்களித்தார் என்பதை அப்படியே தெள்ளத் தெளிவாகப் படம்பிடித்துள்ளனர் புகைப்படக்காரர்களும் தொலைக்காட்சி கேமராமேன்களும். அவர் திமுகவுக்கு வாக்களிக்கவில்லை!

ஓட்டுப் போட்ட கையோடு, வாக்குச் சாவடியில் எதுவும் பேசாமல் நேராக வீட்டுக்குப் போனவரை, ஆங்கிலச் சேனல்கள் வாயைப் பிடுங்க, அவரும் ஊழல், விலைவாசி, விவசாயிகள் நலன், அடுத்த முதல்வர் என்றெல்லாம் அடித்துவிட்டார்.

விஷயம் அத்துடன் முடிந்துவிடவில்லை. அதன்பிறகுதான் ஆரம்பித்தது. ரஜினி வாக்களிப்பதை படம் பிடித்தவர்களில் சிலரது ஒளிநாடாக்கள் கோபாலபுரத்துக்கும், முக்கிய தொலைக்காட்சி சேனல்களுக்கும் போய்ச் சேர, ஆட்சி மேலிடம் ஏக அப்செட்.

இந்த நிலையில், நேற்று மாலையே முதல்வர் கருணாநிதியுடன் பொன்னர் சங்கர் பார்க்க வேண்டிய சூழல் ரஜினிக்கு. ரஜினி ஓட்டுப் போட்ட விவகாரம் முதல்வருக்கு வெட்ட வெளிச்சமாகிவிட்டதால், ரஜினி வருவாரா மாட்டாரா என்று எல்லோரும் காத்திருந்தார்கள். ஒருவழியாக வந்தார். ஆனால் முதல்வருடன் அவரால் சகஜமாக இருக்க முடியவில்லை என்கிறார்கள் முதல்வருக்கு நெருக்கமான அதிகாரிகள்.

முதல்வருடன் இருந்த ஒரு முக்கிய அதிகாரி நம்மிடம் இப்படிச் சொன்னார்:

"படம் ஆரம்பிக்குமுன், அங்கு நின்றிருந்த வைரமுத்துவிடம், 'நீங்களெல்லாம் இந்த மனிதருக்கு (ரஜினிக்கு) எந்த அளவு பரிந்து பேசியிருக்கிறீர்கள். ஆனால் இவர் செய்திருக்கிற வேலையைப் பார்த்தீர்களா... இவரது நம்பகத்தன்மை தெரிகிறதா..

வாக்களிப்பது அவர் இஷ்டம். ஆனால் அதைப் படம்பிடிக்கவும் அனுமதித்து இருக்கிறார்கள். அடுத்து அவர் அளித்த பேட்டி.. விலைவாசி நாடெங்கும் உள்ள பிரச்சினை. ஆனால் நமது அரசு அதைத் தீர்க்க எடுத்த முயற்சிகள் தெரியாதா.. விவசாயிகளுக்கு இந்த அரசை விட அதிகம் செய்தது யார்.... இதெல்லாம் சரிதானா?", என்று முதல்வர் கேட்க, இருக்கையில் உட்கார முடியாமல் நெளிந்த ரஜினி, படம் முடிந்த கையோடு, காரில் ஏறிப் பறந்தாராம்!

ஆட்சியாளர்களிடம் மிகுந்த நெருக்கமாக இருந்த ரஜினியின் இந்த திடீர் மாற்றத்துக்கு காரணம், அந்த 'பத்திரிக்கை ஆசிரியரான அரசியல் தரகர்' கம் விமர்சகர்தான் என்றும் உடன் படம் பார்த்தவர்களிடம் கமெண்ட் அடித்தாராம் முதல்வர்!

ஏற்கெனவே 2004ம் ஆண்டு தேர்தலில் பாமக மீதான கோபத்தில், அதிமுக- பாஜக கூட்டணிக்கு வாக்களித்தேன் என வெளிப்படையாகக் கூறி ரஜினி சர்ச்சையை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.

'முன்னாள் ராணுவத்தினரை திமுகவினருக்கு எதிராக திசை திருப்ப முயன்ற ஜெ'-கருணாநிதி.


தேர்தல் பணியில் ஈடுபட்ட முன்னாள் ராணுவத்தினருக்கான பணி ஊதியம் குறைக்கப்படவில்லை.

பாதுகாப்புப் பணியில் இருந்த முன்னாள் ராணுவத்தினரை தேர்தல் பணியில் ஈடுபட்ட திமுகவினருக்கு எதிராக திசை திருப்ப ஜெயலலிதா இவ்வாறு புகார் கூறியதாகத் தெரிகிறது. என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

தேர்தல் பாதுகாப்புப் பணியில் துணை ராணுவப் படையினர், முன்னாள் ராணுவத்தினர் உள்பட 24,000 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் முன்னாள் ராணுவத்தினருக்கு ஒரு நாள் படியாக ரூ.300ம், உணவுப் படியாக ரூ.60ம் வழங்கப்பட்டது. ஆனால், இந்தத் தொகை குறைக்கப்பட்டு விட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா புகார் கூறியிருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆங்கில நாளேடு ஒன்றில் முன்னாள் ராணுவத்தினருக்கான தேர்தல் பணி ஊதியம் சென்ற தேர்தலில் இருந்ததை விட தற்போது குறைக்கப்பட்டுவிட்டதாக ஒரு செய்தி வெளிவந்தது. இதைத்தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, முன்னாள் ராணுவத்தினரையும், பொதுமக்களையும் திசைதிருப்பி தேர்தல் நாளன்று குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு அதை பெரிதுபடுத்தி வருவதை அறிந்து அதுகுறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தேன்.

முன்னாள் ராணுவத்தினருக்கு கடந்த தேர்தலின்போது ஒருநாள் ஊதியமாக ரூ.300ம், உணவுப்படியாக ரூ.60ம் வழங்கப்பட்டது. தேர்தல் ஆணையமே இதை உணவுப்படியையும் சேர்த்து ஊதியமாக ரூ.275 ஆக குறைத்து அறிவித்தது. உடனே அரசு அதிகாரிகள் தேர்தல் ஆணையத்திடம் இவ்வாறு முன்னாள் ராணுவத்தினரின் ஊதியத்தை குறைத்தால் அதனால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று எடுத்துக்கூறியதன் பேரில் அவர்கள் ஏற்கனவே பெற்றுவந்த ஊதியமான ரூ.300யைத் தொடரவும் உணவுப்படியாக ரூ.60ம் வழங்கப்படுகிறது.

எனவே, முன்னாள் ராணுவத்தினர் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. வேண்டுமென்றே உண்மையை மறைத்து தேர்தல் நாளன்று மக்களை திசை திருப்பும் வகையில் அந்த ஆங்கில நாளிதழும், ஒரு தனியார் தொலைக்காட்சியும் ஈடுபட்டுள்ளது கடும் கண்டனத்துக்குரியது. சட்டப்படியான நடவடிக்கைக்கு உரியது என்று கூறியுள்ளார்.

தேர்தல் பணியில் ஈடுபடும் ராணுவத்தினர், முன்னாள் ராணுவத்தினருக்கு தேர்தல் ஆணையம் மூலமாக மத்திய அரசின் நிதி கொடுக்கப்படுகிறது. பணியில் ஈடுபடுவோருக்கு முதலில் மாநில அரசு பணத்தைக் கொடுத்து விடும். இந்தப் பணம் பின்னர் மத்திய அரசு மூலமாக மாநில அரசுகளுக்கு வழங்கப்படும்.

எனவே, ஜெயலலிதா சொல்வது போல அந்தத் தொகையை குறைப்பதற்கு மாநில அரசு தனிப்பட்ட முறையில் முடிவெடுத்து செயல்படுத்திட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அதைச் செய்ய அதிகாரம் உள்ளது தேர்தல் ஆணையம் மட்டும்.

பாதுகாப்புப் பணியில் இருந்த முன்னாள் ராணுவத்தினரை தேர்தல் பணியில் ஈடுபட்ட திமுகவினருக்கு எதிராக திசை திருப்ப ஜெயலலிதா இவ்வாறு புகார் கூறியதாகத் தெரிகிறது.


வந்தார் வடிவேலு - வடிவேல் வெடிவேல்.


வந்தார் வடிவேலு - ரவிக்குமார். விடுதலைச் சிறுத்தைகள் செயலாளர்.

நேற்று டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையிலிருந்து என்னிடம் கருத்து கேட்டார்கள். இந்தத் தேர்தலில் ரஜினி வாய்ஸ் கொடுத்தால் அதற்கு எந்த அளவு தாக்கம் இருக்கும் என்று கேட்டார்கள். ரஜினி இப்போது அரசியல் தளத்தில் காணாமல் போய்விட்டார். அவர் இரண்டாவது முறை வாய்ஸ் கொடுத்தபோதே அதற்கு மதிப்பில்லை.

இந்தத் தேர்தலைப் பொருத்தவரை வடிவேலுதான் ஸ்டார் . அவர் சரளமாக அரசியல் பேசுவது பலரையும் வியக்க வைத்திருக்கிறது.எனக்காகப் பிரச்சாரம் செய்ய பத்தாம் தேதி வடிவேலு வந்திருந்தார். குமராட்சி, லால்பேட்டை , காட்டுமன்னார்கோயில் ஆகிய இடங்களில் பேசினார். காட்டுமன்னார்கோயிலில் சுமார் பத்தாயிரம் பேர் திரண்டிருந்தனர். அங்கு அரை மணி நேரம் பேசினார்.

தி.மு.க அரசின் நலத் திட்டங்களை அவர் எடுத்துச் சொல்லும்போது அது எளிதாக மனதில் பதிகிறது.

விஜயகாந்த்தை சுக்கு நூறாக நொறுக்கியது வடிவேலுதான். காட்டுமன்னார்கோயிலிலும் அவருடைய பேச்சில் கொஞ்சம் விஜயகாந்த் குறித்த விமர்சனம் இருந்தது.

ரஜினியே வந்தால்கூட இந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா என்பது சந்தேகம்தான்.

இனிமேல் திரைப்பட நடிகர்கள் தமிழக அரசியலில் பெரிய அளவுக்கு பாதிப்பை எற்படுத்த முடியாது.

வடிவேலுவும்கூட தனியே ஒரு கட்சி ஆரம்பித்து பேச ஆரம்பித்தால் அவருக்கு இந்த அளவுக்கு ஆதரவு இருக்காது.வடிவேல் வெடிவேல் - ஜாக்கிசேகர்.


வடிவேல் தனது அரசியில் கன்னி பேச்சை முதன் முதலில் திருவாரூரில் இருந்து ஆரம்பித்த போது, இந்த தேர்தலில் மிகப்பெரிய எழுச்சிக்கு வடிவேலு காரணமாக இருப்பார் என்று நண்பரோடு பேசிக்கொண்டு இருக்கையில் சொன்னேன்.

நண்பர் அதுக்கு டிவியை போட்டு ஆதித்யா சேனல் வைத்து பாருங்க.. நாள் புல்லா இந்த மூஞ்சியைதான் பார்த்துக்குனு இருக்காங்க.. ஒரே போர் என்று அங்கலாய்த்தார்... விஜயகாந்த் ஜெவிடமே 40 சீட்டு வாங்கிய ஒரு கட்சியின் தலைவர் அவரின் பேச்சைதான் மக்கள் உன்னிப்பாய் பார்ப்பார்கள்... வடிவேல் ஒரு காமேடி பீஸ் என்று சொன்னார்...

விஜயகாந்தை விட மக்கள் செல்வாக்கு வடிவேலுக்கு இருக்கின்றது.. மிக முக்கியமாக வடிவேலுவுக்கு கிராமபுறங்களில் நல்ல செல்வாக்கு இருக்கின்றது... அவர் சொன்னால் கேட்டு ஓட்டு போட ஒரு இரண்டு சதவிகிதமாக இருக்க வாய்ப்பு இருக்கின்றது என்று சொன்னேன்... நண்பர் கடைசிவரை ஒத்துக்கொள்ளவே இல்லை....

கலைஞரை விட வடிவலுவின் பேச்சுக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பால் கலைஞர் பேசுவதை குறைத்து வடிவேல் பேசுவதை இரண்டு டிவிக்களிலும் அதிகம் ஒளிபரப்பினார்கள்....

வடிவேல் விஜயகாந்தை திட்டிவிட்டு, கலைஞர் அரசின் திட்டங்களை மிக அழகாக மக்களிடம் விளக்கி கூறினார். அதுக்கு மக்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ். அந்த ரெஸ்பான்ஸ், அந்த எழுச்சி மாவட்ட செயலர்கள் மூலம் கலைஞர் காதுக்கு வர திமுகவுக்கு ஒரு பெரிய பிரச்சார பிரங்கியாக வடிவேல் மாறிப்போனார்....

வடிவேல் இப்படி பேச்சில் பின்னி பெடல் எடுக்க, அதே பேச்சில் விஜயகாந்த் மிகவும் சொதப்பினார்... அதிமுக கொள்கைபரப்பு செயலாளர் ஜெயிலில் இருக்கின்றார் என்று தப்பாக மாற்றி பேச, அப்படி தப்பாக மாற்றி பேச இங்கு சத்தம் போட்ட மக்கள்தான் காரணம்., என்று மக்களை சத்தம்போட.... அதையும் தனது பிரச்சாரத்தில் வடிவேல் விட்டு வைக்கவில்லை... ஒரு ஹீரோ மற்றும் கட்சித் தலைவரை ஒரு காமெடியன் வறுத்து எடுத்ததை தமிழகம் வேடிக்கை பார்த்தது...........

28வருஷத்துக்கு பிறகு போராடி கப்பு வாங்கினானே அவன்தான் கேப்டன் நீ இல்லை... என்பது போன்ற சரவெடிகளை தனக்கே உரிய பாணியில் நையான்டி செய்து கொண்டு அப்படியே கலைஞர் அரசின் நலதிட்டங்களை மக்களிடத்தில் சொல்லிக்கொண்டு போனது பெரிய பிரச்சார ஹைலைட்...

இரண்டு பேரும் ஒரே மேடையில் ஏறி பேச முடியுமா? கூட்டணி தானே? அந்தம்மா எதிர்க்க நான்தான் சின்ன எம்ஜியார் என்று மேடையில் சொல்ல முடியமா? என்று வடிவேல் சவால் விட, அதுக்கு எதிர்தரப்பில் இருந்து கடைசிவரை நோ ரெஸ்பானஸ்....

மக்கள் மிக உன்னிப்பாக அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருக்காங்க...நான் கேட்ட கேள்விக்கு எதிர் சைடில் இருந்து பதில் இல்லை... இந்த தேர்தலோடு பேக்கப் ஆயிட வேண்டியதுதான் என்று போகின்ற போக்கில் தனது பிரச்சாரத்தின் வாயிலாக பேசிக்கொண்டு சென்றார்...

களப்பணியாற்றுபவனுக்கே மக்கள் நாடி துடிப்பு தெரியும்... முதலில் ஸ்பெக்ட்ரம் பூதம் பார்த்து சுனக்கம் காட்டிய திமுக பெருந்தலைவர்கள் கூட பிரச்சாரம் நேற்று முடியும் போது நாங்களும் ஜெயிப்போம் என்று நம்பிக்கையுடன் சொன்னார்கள் அதுக்கு காரணம் வடிவேலுவின் பிரிச்சாரம் 5 பர்சென்டாவது இருக்கும் என்று நான் நம்புகின்றேன்....

முதலில் விஜயகாந்த் பக்கம் இருந்த படித்த மக்கள், ஒருவரை கை நீட்டி அடித்ததும், அவருக்கு இருந்த செல்வாக்கு சடசடவென குறைய ஆரம்பித்தது... அதை தனது பிரச்சாரத்தில் ஒரு அப்பாவியை போட்டு இப்படி அடிக்கலாமா? யார் பெத்த புள்ளையோ? என்று வடிவேல் சொல்லும் போது கூட்டம் உன்னிப்பாக கவனிக்கின்றது....

வடிவேலுவுக்கு எதிர்ப்பாய் ஒரு ஆள் இறக்கினார்கள். அவர் சிங்கமுத்து பெரிய அளவில் சோபித்தது போல எனக்கு தெரியிவில்லை.

சுட்டி சுட்டி உன் வாலைக்கொஞ்சம் சுருட்டிகொள்ளடி என்று வெட வெடவென ஒல்லியான தேகத்துடன் விஜயகாந்தின் சின்னக்கவுண்டர் படத்தில் ஆடிய வடிவேல், 2011 சட்டசபை தேர்தலில் திமுகவின் கொள்கை பரப்பு செயலர் ரேஞ்சிக்கு மாறியது காலத்தின் கட்டாயம்... அதை மிக லாவகமாக தன் பக்கம் திருப்பிக்கொண்டது திமுக...

எதிர்காலத்தில் அரசியலில் வடிவேலுவுக்கு ஒரு சீட் காத்துக்கொண்டு இருக்கின்றது என்பதில் ஐயம் இல்லை.. வாய் உள்ள பிள்ளை பிழைக்கும் எனும் பழமொழிக்கு மிகச்சரியான ஆள் வடிவேல்தான் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை....

சீமான் தேர்தல் பரப்புரை - சில கேள்விகள்.


ஆம்பூருக்கு வந்து சீமான் தேர்தல் பரப்புரை ஆற்றினார். மிகவும் சிறந்த உரை. நடுநிலைமையோடு அவர் ஆற்றிய உரை மக்களை மாற்று அரசியலுக்கு கொண்டு வருகின்றது. அத்தகைய அறச்சீற்றம் அவருடைய உரையில் இருந்தது.

அரசு மருத்துவமனை,அரசுபள்ளி சார்ந்த கருத்துகள் மிகவும் சரியானதாக இருந்தன. ஆனால் அவர் தவறவிடுகின்ற நுண்ணரசியல் புள்ளிகள் அவர்மீதான நம்பிக்கையின்மையினைக் கூட்டுகின்றது. மாற்று அரசியலை நிறுவ அதுவே சீமானுக்கு பெருந்தடையாக இருக்கும்.

அவரின் உரையில் எழும் சில கேள்விகள்

1. ஒரு ரூபாய் அரிசியை பகடி செய்யும் அவர் இலவச அரிசி தருவதாகச் சொன்ன இலைக்கட்சியை ஏதும் சொல்லவில்லை.

2. டாஸ்மார்க் தத்துவத்தைத் தொடங்கிவைத்த அவர் கூட்டணியின் தலைவியை மதுவிலக்குக்கு ஆதரவாக தலையைக் கூட அவரால் அசைக்க வைக்க முடியாது.

3. ராஜராஜனின் பெருமையைப் பேசும் சீமான் ராஜராஜன் ஓர் ஆரியப்பைத்தியம் பிடித்தவன் என்பதையும் அவனுடைய ஆட்சியில்தான் பார்ப்பனீயம் தமிழ்நாட்டில் ஆழ வேர்பிடித்தது என்பதனையும் அறிந்தாரா எனத் தெரியவில்லை. 400க்கும் மேற்பட்ட தமிழ்ப்பெண்களை கோயில்களில் கட்டாயப்படுத்தி தேவதாசி ஆக்கியவன் என்பதனையும் அறிந்தாரா எனத் தெரியவில்லை.

4. வட இந்தியத் தலைவர்களின் பெயர்களை தமிழர்கள் வைத்துக்கொள்கிறார்கள் என்னும் கருத்தைக் கூறுகையில் அந்தத் தலைவர்களின் பெயர்களை வரிசையாகச் சொல்லும்போது அம்பேத்கர் பெயரையும் சொன்னார் சீமான். எத்தனை சாதி இந்துத் தமிழர்கள் அம்பேத்கர் பெரைச் சூட்டிக்கொண்டார்கள். சீர்த்திருத்த இந்துத் தமிழர்கள் கூட தங்களை குழந்தைகளுக்கு எத்தனை பேர் அம்பேத்கர் பெயரை வைத்தார்கள்?

5. சுபாஷ் சந்திரபோசை தமிழகத்தில் பரப்பிய எங்கள் அய்யா பொன் முத்துராமலிங்கத்துக்கு வடநாட்டில் ஒரு சிலை உண்டா? எனக் கேட்டார் சீமான். இதில் ஒரு குறிப்பு தெறிக்கின்றது.

அது இருக்கட்டும் அப்படித்தான் அது ( யாரையும் மாற்ற முடியாது). ஒரு தாழ்த்தப்பட்ட தமிழன் பேச்சுவார்த்தையின்போது தனக்கு நிகராக நாற்காலியில் அமர்ந்தான் என்பதற்காக இம்மானுவேல் சேகரனை படுகொலை செய்தாரே உங்கள் அய்யா பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர் சாதி வெறியரா? தேசபக்தரா?

பார்வர்டு பிளாக் கட்சியை ஒரு குறிப்பிட்ட சாதி கட்சியாக மாற்றியது யார் தோழரே?

6. புலிகளுக்கு தீவிரமான எதிர்ப்பாளர்களான மு.மு.க வேட்பாளருக்கு ஓட்டு கேட்கிறீர்களே நியாயமா? அவர்கள் உங்கள் மேடைக்கே வரவில்லை என்னும் கொள்கைக் குறிப்பை உணர்ந்தீர்களா?

பகுஜன் சமாஜ் கட்சிக்கு நீங்கள் ஓட்டு கேட்டிருக்கலாம். புலிகளைக் கொன்றதில் காங்கிரஸ் கட்சிக்கு எப்படி பங்கிருக்கின்றதோ அதைப் போலத்தான் அதை ஆதரித்தவர்களுக்கும் இருக்கும். மு.மு.க புலிகள் ஆதரவுக் கொள்கையுடையதா?

இன்னும் கேள்விகள் எழுந்தவண்ணம் உள்ளது. ஆனாலும் 63 காங்கிரஸ் வேட்பாளர்களை தோற்கடிக்க வேண்டும் என்னும் சீமானின் உன்னத லட்சியத்தில் நாமும் மனம் கோர்க்கின்றோம் ( கை கோர்க்கின்றோம் என்று சொல்ல முடியாது)

இப்படிக்கு: Yazhan Aathi


தமிழகம் - மாவட்ட வாரியாக ஓட்டுப்பதிவு விவரம்.


தமிழகம் முழுவதும் நடந்த சட்டசபை தேர்தல்களில் கடந்த தேர்தல்களை விட வரலாறு காணாத அளவுக்கு அதிக அளவு ஓட்டுகள் பதிவாகி உள்ளது. மாவட்ட வாரியாக பதிவான ஓட்டு விவரம் வெளியாகி உள்ளது.

தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக நடந்த ஓட்டுப்பதிவு விவரம் :

1. சென்னை 66.18 சதவீதம்

2. காஞ்சீபுரம் 60.6 சதவீதம்

3. விழுப்புரம் 80.4சதவீதம்

4. திருவள்ளூர் 76 சதவீதம்

5. சேலம் 81 சதவீதம்

6. நாமக்கல் 77.3 சதவீதம்

7. கிருஷ்ணகிரி 73 சதவீதம்

8. தர்மபுரி 80.92 சதவீதம்

9. வேலூர் 70.3 சதவீதம்

10. கடலூர் 80.4 சதவீதம்

11. திருச்சி 78.86 சதவீதம்

12. கோவை 75.3 சதவீதம்

13. நீலகிரி 69 சதவீதம்

14. நெல்லை 77 சதவீதம்

15. திருவண்ணாமலை 81 சதவீதம்

16. தஞ்சாவூர் 79.6 சதவீதம்

17. விருதுநகர் 80.96 சதவீதம்

18. மதுரை 76.8 சதவீதம்

19. சிவகங்கை 75.59 சதவீதம்

20. ராமநாதபுரம் 71.95 சதவீதம்

21. ஈரோடு 80 சதவீதம்

22. நாகப்பட்டினம் 81 சதவீதம்

23. தூத்துக்குடி 75.25 சதவீதம்

24. திருப்பூர் 77.6 சதவீதம்

25. திண்டுக்கல் 81 சதவீதம்

26. கரூர் 86.02 சதவீதம்

27. பெரம்பலூர் 80 சதவீதம்

28. அரியலூர் 75.8 சதவீதம்

29. புதுக்கோட்டை 78.49 சதவீதம்

30. தேனி 79 சதவீதம்

31. கன்னியாகுமரி 64 சதவீதம்

32. திருவாரூர் 75 சதவீதம்.

தமிழக முதல் அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கலைஞர் போட்டியிடும் திருவாரூர் தொகுதியில் 75 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா போட்டியிடும் ஸ்ரீரங்கம் தொகுதியில் பதிவான ஓட்டுகள், 73 சதவீதமாகும்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் போட்டியிடும் ரிஷிவந்தியம் தொகுதியிலும் 73 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தன.தமிழக சட்டசபை தேர்தலில் 80 சதவீதம் வரை ஓட்டுப் பதிவு: தலைமை தேர்தல் கமிஷனர் பிரவீண்குமார் பேட்டி.

தமிழக சட்டசபை தேர்தலில்  80 சதவீதம் வரை ஓட்டுப் பதிவு: தலைமை தேர்தல் கமிஷனர் பிரவீண்குமார் பேட்டி

தமிழக சட்டசபை தேர்தலில் 80 சதவீதம் வரை ஓட்டுகள் பதிவாகி இருப்பதாக, தலைமை தேர்தல் கமிஷனர் பிரவீண்குமார் கூறினார். வாக்குப்பதிவு நிலவம் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் சென்னை கோட்டையில் நிருபர்களுக்கு இரவு 8 மணிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சட்டசபை தேர்தல் அமைதியாகவும், நியாயமாகவும் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் சுயேச்சைகள் உள்பட அனைத்து அரசியல் கட்சியினரும் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை.

மாலை 5 மணிக்குப் பிறகும் சில வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. அதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கியூவில் நின்று வாக்களித்து வருகிறார்கள். சில தாலுகாவில் தொலைதூர கிராமங்களில் இருந்து வாக்குப்பதிவு விவரம் வந்துசேரவில்லை. எங்களுக்கு வந்துசேர்ந்துள்ள விவரங்கள் அடிப்படையில் பார்த்தால் தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு 75 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை இருக்கும்.

இன்னமும் 50 சதவீத வாக்குச்சாவடிகளில் இருந்து முழு விவரம் வரவில்லை. எனவே, இறுதி நிலவரம் இரவு 11 மணிக்கு மேல் தெரிய வரும். அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 86 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. குறைந்தபட்சமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 74 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. இதர மாவட்டங்களில் வாக்குப்பதிவு சதவீதம் இந்த சதவீதத்திற்கு இடைப்பட்டதாக உள்ளது.

கடந்த சட்டசபை தேர்தலில் 70.22 சதவீதமும், பாராளுமன்ற தேர்தலில் 73 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் அதைவிட வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த தேர்தலில் சென்னையில் ஏராளமான இளைஞர்கள், நடுத்தர மற்றும் வசதி படைத்தவர்களும் அதிக எண்ணிக்கையில் வந்து வாக்களித்துள்ளனர். இதற்கு தேசிய வாக்காளர் தினம் கொண்டாடியது மட்டுமல்லாமல் தேர்தல் ஆணையம் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் காரணம்.

இதனால், வாக்காளர்களிடம் ஓட்டுப்போடும் ஆர்வம் அதிகரித்துள்ளது. வாக்குப்பதிவில் பெரிய அளவில் பிரச்சினைகள் ஒன்றும் இல்லை. 65 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதடைந்தன. அவற்றில் 11 எந்திரங்கள் உடனடி சரிசெய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டன. எஞ்சிய 54 எந்திரங்கள் மாற்றப்பட்டன. மொத்தம் 4 இடங்களில் தேர்தல் புறக்கணிப்பு நடந்தது. அதில் 2 இடங்களில் சரிசெய்யப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் வல்லையாவட்டம், பருத்திக்குடி ஆகிய 2 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் இடமாறிவிட்டது. அந்த வாக்காளர்களுக்கு பஸ் வசதி செய்து தருவதாக மாவட்ட கலெக்டர் உறுதி அளித்த பிறகு அவர்கள் அங்குபோய் வாக்களிக்க மறுத்து தேர்தலை புறக்கணித்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதியில் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு நடந்தது.

பின்னர் அதிகாரிகள் பேசியதை தொடர்ந்து, புறக்கணிப்பு வாபஸ் பெறப்பட்டது. இந்த தேர்தலையட்டி நடத்தப்பட்ட வாகன சோதனைகளில் ரொக்கப்பணம் மற்றும் பரிசுபொருட்களின் மதிப்பு ரூ.45 கோடி ஆகும். இதில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு ரூ.5 கோடி திருப்பி கொடுக்கப்பட்டுவிட்டது. மீதம் உள்ள பணத்தில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாவிட்டால் அந்த தொகை தேசிய கருவூலத்திற்கு அனுப்பப்படும். வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்தது தொடர்பாக 1,565 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

53 பேர் கைதுசெய்யப்பட்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் தேர்தல் ஆணையம் கடுமையாக நடந்துகொண்டது என்று புகார் சொல்கிறார்கள். இந்தியா முழுமைக்கும் ஒரே தேர்தல் விதிமுறைதான். தமிழகத்திற்கென்று தனியாக விதிமுறைகள் வகுக்கப்படவில்லை.

இவ்வாறு பிரவீண்குமார் கூறினார்.

தமிழக சட்டசபை தேர்தலில் 78 சதவீதம் வரை ஓட்டுகள் பதிவாகி இருப்பதாக, இறுதியாக கிடைத்த தகவல் மூலம் அறியமுடிகிறது.