Saturday, March 5, 2011

விடிவதற்கு(ள்) எதுவும் நடக்கலாம்.


திமு.க .கூட்டணியில், பா.ம.க.வுக்கு - 31, விடுதலை சிறுத்தைக்கு - 10, கொங்குநாடு முன்னேற்றக் கழகத்துக்கு - 7 , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு - 3 , மூவேந்தர் முன்னேற்றக் கழகத்துக்கு - 1 ஆக 52 தொகுதிகள் ஒதுக்கியது போக மீதம் 182 தொகுதிகள் தி.மு.க. கைவசம் உள்ளது.

அ.இ.அ.திமு.க .கூட்டணியில், தே.மு.தி.க. - 41 , புதியதமிழகம் - 2 , மனிதநேய மக்கள் கட்சி - 3 , இந்திய குடியரசு கட்சி - 1 , பார்வேர்டு பிளாக் - 1, அணைத்திந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகம் -1 ஆக 49 தொகுதிகள் ஒதுக்கியது போக மீதம் 185 தொகுதிகள் அ. தி.மு.க. கைவசம் உள்ளது. இன்னும் இரண்டு கம்யூனிஸ்டுகள் , ம.தி.மு.க. பாக்கியுள்ளது தோராயமாக - 45 தொகுதிகள் ஒதுக்குவதாக் கணக்கிட்டால் மீதம் 140 தொகுதிகள் அ.இ.அ.திமு.க கைவசம் உள்ளது

இந்நிலையில் இன்று 05-03-2011 நடைபெற்ற தி.மு.க உயர்மட்ட குழு கூட்டத்தில் மத்திய மந்திரி சபையில் இருந்து விலகப் போவதாக முடிவாகியுள்ளது. ஆக தி.மு.க காங்கிரஸ் கூட்டணி முறிந்த நிலையை எட்டியுள்ளது.

மத்திய அரசில் இருந்து விலக தி.மு.க. முடிவு செய்தது பற்றி, ஜி.கே.வாசனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, பொறுத்திருந்து பார்ப்போம் என்றாராம்.

மத்திய நிதியமைச்சர், பிரணாப் முகர்ஜி டெல்லியில் செய்தியாளர்களிடம் தமிழகத்தில் தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும், அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என தெரிவித்திருப்பதாக அறிய வருகிறது.

குலாம் நபி ஆசாத் கூறுகையில், திமுகவுடன் உறவு முறியவில்லை. ஏனென்றால் பேச்சுவார்த்தை தொடர்கிறது. தொகுதிகளை இனம் காண அவகாசம் தேவை. பின்னர் நடைபெறும் பேச்சுவார்த்தையில் தேவையான தொகுதிகளை கேட்டுப் பெறுவோம் என்கிறார்.

தனது முடிவை தி.மு.க. அறிவித்த பின்னர், கூட்டணியை தொடருவதற்காக பிரணாப் முகர்ஜி மற்றும் குலாம் நபி ஆசாத் சென்னை வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு செய்திகள் வெளியாகி உள்ளன.

அதே நேரத்தில் 234 தொகுதிகளிலும் தனித்து நிற்கப் போவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் தன்னிடம் சொன்னதாக சி.என்.என்.ஐ.பி.என். சேனல்ல ராஜ்தீப் சர்தேசாய் கூறுகிறார்.

அ.தி.மு.க. பக்கம் போகமுடியாத சூழலில் துரைமுருகன் சொன்னது மாதிரி 234 தொகுதிகளிளும் காங்கிரஸ் போட்டியிடுமா?

மேற்குவங்கத்தில் மம்தாபானர்ஜி 40 தொகுதிகளுக்கு மேல் காங்கிரஸ்க்கு தரமுடியாது என திட்டவட்டமாகக் கூறிவிட்டார். அங்கே காங்கிரஸ் என்ன செய்யும்?

ஆக ராகுல் ராஜ்ஜியம் தொடங்கிவிட்டது. பார்ப்போம் விடிவதற்குள் எதுவும் நடக்கலாம். ராகுல் ராசிதான் தெரியுமே!

வை.அருள்மொழி.