Thursday, August 4, 2011

சமையல் கியாஸ் ரூ.642 - எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கும் சலுகை கிடையாது.காங்கிரஸ் எம்.பி.அருண்குமார் தலைமையிலான பாராளுமன்ற நிலைக்குழு தாக்கல் செய்துள்ள பரிந்துரையில், ரூ.6 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு மானிய விலையில் கியாஸ் சிலிண்டர்களை கொடுக்கக் கூடாது. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கும் கூட மானிய விலையில் சிலிண்டர் கொடுக்க கூடாது என்று கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசின் எண்ணை நிறுவனங்கள் சமையல் கியாஸ் சிலிண்டர்களை மானிய விலையில் கொடுத்து வருகின்றன. இதனால் ஒரு சிலிண்டருக்கு ரூ.247 இழப்பு ஏற்படுகிறது. இதனால் நடப்பாண்டில் எண்ணை நிறுவனங்களுக்கு ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது.

எண்ணை நிறுவனங்களுக்கு ஏற்படும் இந்த இழப்பை சரிகட்ட இனி, சமையல் கியாஸ் சிலிண்டருக்கான விலையை நிர்ணயிக்கும் உரிமையை எண்ணை நிறுவனங்களிடம் விட்டு விட திட்டமிட்டுள்ளதாக மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி கூறி வருகிறார்.

இதற்கிடையே காங்கிரஸ் எம்.பி.அருண்குமார் தலைமையிலான பாராளுமன்ற நிலைக்குழு பல்வேறு பரிந்துரைகளை தாக்கல் செய்துள்ளது. அந்த பரிந்துரையில் ரூ.6 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு மானிய விலையில் கியாஸ் சிலிண்டர்களை கொடுக்கக் கூடாது. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கும் கூட மானிய விலையில் சிலிண்டர் கொடுக்க கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

பணக்காரர்களுக்கு மானிய விலையில் சிலிண்டர் கொடுப்பதை நிறுத்தினால் நாட்டில் வறுமை கோர்ட்டுக்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு இலவசமாக கியாஸ் சிலிண்டர் கொடுக்க முடியும். இந்த திட்டத்தை விரைவில் அமல்படுத்த வேண்டும் என்று நிலைக்குழு பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசு இந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்டால் ஆண்டு வருமானம் ரூ.6 லட்சம் மேல் உள்ளவர்கள் சமையல் கியாஸ் பெற சிலிண்டருக்கு ரூ.642 கொடுக்க வேண்டியதிருக்கும்.

தற்போது ஒரு சிலிண்டர் ரூ.395க் கொடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் எண்ணை நிறுவனங்கள் ஒவ்வொரு சிலிண்டருக்கும் சந்திக்கும் ரூ.247 இழப்பை சரிகட்ட முடியும்.

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை : வைகோ கருத்து.அதிமுக அரசின் முதல் பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

அதிமுக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையில் வரவேற்கத்தக்க அறிவிப்புகள் இடம்பெற்று உள்ளன. ஆளுநர் உரையில் அறிவித்தவாறு, குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி, திருமண உதவித் திட்டங்கள், சமூக நலத்திட்டங்கள், பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குதல், இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்குதல், கால்நடைகள் வழங்குதல் ஆகியவற்றிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

வேளாண்மைத் துறை வளர்ச்சிக்கு, இயந்திரமயமாக்கலை மாநிலம் முழுதும் நடைமுறைப்படுத்துதல், நீர்ப்பாசன மேம்பாட்டுத் திட்டங்கள், அணைகள் சீரமைப்புத் திட்டம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் உற்பத்தி வளர்ச்சிக்கான திட்டங்களும், தொலைதூர கிராமங்கள் பயன் பெறுவதற்கு நடமாடும் மருத்துவமனைகள், பொதுக் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த அரசு மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துதல் போன்றவை மக்களுக்கு பயன் அளிக்கக்கூடியவை.

மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தை விவசாயம் சார்ந்ததாக மாற்றம் செய்வது, வேளாண்மைத் தொழில் சந்தித்து வரும் நெருக்கடியைத் தீர்க்க உதவும். கம்பிவடத் தொலைக்காட்சி சேவையை அரசுடைமை ஆக்குதல், மீனவர் நலத்திட்டங்கள் ஆகிய வரவேற்கத்தக்க அம்சங்கள் இருந்தாலும், இன்றியமையாத மக்கள் பிரச்சினைகளில் நிதி நிலை அறிக்கை ஏமாற்றம் தருகிறது.

வேளாண்மைத் துறையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் பயன்பாடு மனித இனத்திற்கு பெரும் கேடு விளைவிக்கும் என்பதால் அவற்றுக்குக் கடும் எதிர்ப்பு தோன்றி உள்ள நிலையில் பி.டி. கத்திரி பரவலாக்கப்படும் என்ற அறிவிப்பு மக்கள் நலன் சார்ந்ததாக இல்லை. வேளாண் விளை நிலங்கள் தரிசாகப் போடப்பட்டு, வீட்டு மனைகளாக மாற்றுவதைத் தடுக்க, திட்டவட்டமான அறிவிப்புகள் இல்லை. விவசாய விளை நிலங்களைக் கையகப்படுத்த புதிய நிலம் எடுப்புக்கொள்கையை நடைமுறைப்படுத்திவிட்டு உணவுப் பாதுகாப்பு முறையை எப்படி அடைய முடியும்?

பத்து விழுக்காடு பொருளாதார வளர்ச்சி என்ற இலக்குடன் தயாரிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில் வணிக வரி, ஆயத்தீர்வை, முத்திரைத்தாள் கட்டண உயர்வு மூலம், கூடுதலாக 3,618 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டு உள்ளனர். ஆனால், விலை ஏற்றத்தைத் தடுத்து நிறுத்தவோ, கட்டுப்படுத்தவோ மாநில அரசு உடனடி நடவடிக்கை எடுக்காமல், இணையதள வணிகத்தில் இருந்து சில உணவுப்பொருட்களுக்கு விலக்கு அளிக்கக்கோரி மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்பது மாநில அரசின் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதாக உள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை நீதிமன்ற மொழியாக்கிட மத்திய அரசிடம் வலியுறுத்தவில்லை. மின் பற்றாக்குறையைப் போக்கிட மாநில அரசின் அறிவிப்புகள் உடனடியாக பயன் அளிப்பதாக இல்லை.

சமச்சீர் கல்வி பிரச்சினையில் தமிழக மக்களின் ஒட்டுமொத்தக் கோபமும் அதிமுக அரசின் மீது திரும்பி உள்ளதை முதல்வர் உணரவில்லை. ஒருகோடியே இருபத்து மூன்று லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக ஆக்கியுள்ள இந்த அரசின் கல்விக்கொள்கை, நீதிமன்றங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கின்ற நிலையில், சமச்சீர் கல்வி குறித்து அரசின் வீண்பிடிவாதம் தொடருவதையே நிதிநிலை அறிக்கை காட்டுகிறது.

எல்லை தாண்டி வந்து தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்லும் இலங்கை அரசை வன்மையாகக் கண்டிக்கவும், இனப் படுகொலை செய்த சிங்கள இனவாத அரசுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்ற சட்டமன்றத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இந்திய அரசை வலியுறுத்தாததும் கவலை அளிக்கிறது என வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மு.க.அழகிரிக்கு பினாமி பெயரில் ரூ. 3, 500 கோடிக்கு மேல் சொத்து : தெகல்கா கூறுகிறது.மத்திய அமைச்சரும், திமுக தென் மண்டல அமைப்பாளருமான மு.க. அழகிரிக்கு பினாமி பெயர்களில் ரூ. 3 ஆயிரத்து 500 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக தெகல்கா இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

புலனாய்வு இதழான தெகல்கா மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் சொத்து விவரங்கள் குறித்து ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.

மதுரையின் காட்பாதர் என்று அழைக்கப்படும் அழகிரி தனது நெருங்கிய கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதால் வருத்தத்தில் உள்ளார். அவரது மனைவி காந்திக்கும் நில மோசடியில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகின்றது. நில அபகரிப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தெகல்கா அழகிரியின் சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது:

அழகிரி கடந்த 2009-ம் ஆண்டு மக்களைவைத் தேர்தலுக்குப் பிறகு தனது சொத்துக் கணக்கை வெளியிட்டார். அப்போது தன்னிடம் ரூ. 133.65 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால் பினாமி பெயரில் ரூ. 3 ஆயிரத்து 500 கோடிக்கும் அதிகமாக சொத்துக்கள் இருக்கிறது.

நிலம், சினிமா தயாரிப்பு மற்றும் வினியோகம், ரியல் எஸ்டேட், சுகாதாரம், சுரங்கம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் அவர் தனது குடும்பத்தார் மற்றும் நெருங்கியவர்களின் பெயர்களில் முதலீடு செய்துள்ளார்.

அழகிரியின் மனைவி காந்தி, மகன் துரை தயாநிதி, மகள்கள் கயல்விழி, அஞ்சுக செல்வி, மருமகள் அனுஷ்கா, மருமகன்கள் ஒய்.கே. வெங்கடேஷ், விவேக் ரத்தினவேல் ஆகியோர் பெயர்களில் ஏராளமான சொத்துக்களும், வியாபாரங்களும் உள்ளன.

இது தவிர அவரது நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் மொரீஷியஸ், வெர்ஜின் தீவுகள், அமெரிக்கா, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தொழில் நடத்தி வருகின்றனர் என்று உளவுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அழகிரி வெளியிட்ட சொத்து விவரத்தின்படி அவரிடம் 18 ஏக்கர், 63 சென்ட் விவசாய நிலம், 1 ஏக்கர், 82 சென்ட், 23 ஆயிரத்து 278 சதுர அடி நிலம், 20 சென்ட் பிளாட், சென்னை, மதுரையில் வீடுகள், ரூ. 4 கோடி வைப்பு நிதி மற்றும் வங்கி சேமிப்பு கணக்கில் ரூ. 1.39 கோடி, 85 கிராம் தங்கம், ரூ. 1. 40 லட்சம் மதிப்புள்ள ஹோண்டா சிட்டி, ரூ. 1.20 லட்சம் மதிப்புள்ள லேண்ட் ரோவர் எஸ்யூவி, தயா டயாக்னோஸ்டிக்ஸில் ரூ. 96 லட்சம் முதலீடு உள்ளது.

சிவரக்கோட்டையில் உள்ள தயா பொறியியல் கல்லூரியை நடத்தி வரும் முக அழகிரி அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்து விவரத்தை அவர் வெளியிடவில்லை.

விதிமுறைகளை மீறி 4 ஏக்கர் விவசாய நிலத்தில் தயா பொறியியல் கல்லூரி கட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவர் தனது சொத்துக்களின் மதி்ப்பை குறைத்தே வெளியிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

உதாரணமாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஆயிரத்து 100 சதுர அடி வீட்டின் மதிப்பு ரூ. 22 லட்சம் என்று வெளியிட்டுள்ளார். ஆனால் அதன் உண்மையான மதிப்பு ரூ. 2. 5 கோடி.

அழகிரியின் மனைவி காந்திக்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நிலங்கள் உள்ளன. அவர் தான் தயா சைபர் பார்க்கின் தலைவர். மேலும், முக அழகிரி கல்வி அறக்கட்டளை உறுப்பினராகவும் இருக்கிறார்.

அழகிரி வெளியிட்ட காந்தியின் சொத்துக்கள் விவரம்.

48. 42 ஏக்கர் விவசாய நிலம், கொடைக்கானலில் ரூ. 90 லட்சம் மதிப்புள்ள 82.3 சென்ட் பிளாட், சென்னையில் ரூ. 4.30 கோடி மதிப்புள்ள 5 ஆயிரத்து 376 சதுர அடி பிளாட், சேமியர்ஸ் ரோட்டில் ரூ. 4. 39 கோடி மதிப்புள்ள 5 ஆயிரத்து 488 சதுர அடி பிளாட், மதுரை பாப்பாக்குடியில் 3 ஆயித்து 60 சதுர அடி பிளாட், மதுரையில் 4 ஆயிரத்து 378 சதுர அடியில் தயா கல்யாண மண்டபம், கொட்டிவாக்கத்தில் ஆயிரத்து 845 சதுர அடி வியாபார நிலம், மாதவரம் மேடாஸ் கிரீன் பார்க்கில் ஆயிரத்து 320 சதுர அடி வீடு.

அழகிரி தனது மனைவி பெயரில் இருக்கும் சொத்துக்களை வெளியிட்டபோது தயா சைபர் பார்க்கில் காந்தி செய்திருக்கும் முதலீடு குறித்து தெரிவிக்க மறந்துவிட்டார்.

கடந்த 2007-ம் ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதி நடந்த நிறுவனக் கூட்டத்தில் தயா சைபர் பார்க் பங்கு மூலதனம் ரூ. 10 லட்சத்தில் ரூ. 2 கோடியாக உயர்த்தப்பட்டது. அந்த நிறுவனத்தின் சேர்மன் மற்றும் எம்டியாக இருக்கும் காந்தி தனக்கு வெறும் ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள பங்குகள் தான் இருப்பதாக தெரிவித்தார்.

அவர் தனக்கு சொந்தமான ஒரு நிலத்தை பற்றி தெரிவிக்க மறந்துவிட்டார். அந்த நிலம் தான் தற்போது அவருக்கு தலைவலியாக மாறியுள்ளது. மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை அபகரித்துள்ளதாக காந்தி மற்றும் லாட்டரி மாபியா மன்னன் சான்டியாகோ மார்டின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கிடைத்துள்ள ஆவணங்களின்படி மார்டின் கோவில் நிலத்தை காந்திக்கு ரூ. 85 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார். அந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ. 24 கோடி.

அழகிரி தனது மகன் தயாநிதி பெயரில் இருக்கும் சில சொத்துக்கள் பற்றியும் தெரிவிக்க மறந்துவிட்டார். தயாநிதி அழகிரி தான் தயா பொறியியல் கல்லூரி, தயா பல்மருத்துவக் கல்லூரியின் நிர்வாக உறுப்பினர், ஜேஏகே கம்யூனிகேஷன்ஸ், கிளவுட் நைன் மூவிஸ் எம்டி, ராயல் கேபிள் விஷன் மற்றும் மகேஷ் எலாஸ்டோமர்ஸின் தலைவர். ஆனால் இத்தனை சொத்துக்களையும் தெரிவிக்க மறந்துவிட்டார் அழகிரி. சென்னை, திருவள்ளூரில் செயல்பட்டு வரும் கேபிள் ஆபரேட்டரான ஜேஏகே கம்யூனிகேஷன்ஸில் தாயநிதிக்கு தற்போது 50 சதவீத பங்குகள் உள்ளது.

கருணாநிதி குடும்பத்தினர் தங்களிடம் உள்ள கருப்பு பணத்தை மாற்றவே சினிமாத்துறையில் நுழைந்ததாக சினிமாத் துறையில் உள்ள சிலர் தெரிவித்தனர்.

அழகிரியின் பணம் மற்றும் பதவி மோகத்தால் தான் அவரது குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மு.க. ஸ்டாலினை தோற்கடிக்கவே அழகிரி இத்தனை விரிந்த சாம்பிராஜ்ஜியத்தை நிறுவியுள்ளார். கருணாநிதிக்கு அடுத்து திமுகவின் தலைவராக அழகிரி விரும்புகிறார். அதற்கு பண பலமும், ஆள் பலமும் சேர்த்து வைத்துள்ளார் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இவ்வாறு தெகல்கா செய்தி வெளியிட்டுள்ளது.

சமச்சீர் கல்வி பாடத்திட்டம் தேசிய தரத்திற்கு இணையாக இல்லை: தமிழக அரசு.சமச்சீர் கல்வியை அமல்படுத்த தகுந்த பாடப் புத்தகங்கள், விதிமுறைகள் இல்லாத காரணத்தால், அடுத்தாண்டு அல்லது அதன்பின் அமல்படுத்த வேண்டும், என உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய தமிழக அரசு தரப்பு வழக்குரைஞர் பி.பி. ராவ் கூறினார்.

சமச்சீர் கல்விக் குறித்த வழக்கு, நீதிபதிகள் ஜே.எம். பாஞ்சால், தீபக் வர்மா, பி.எஸ். சௌஹான் முன்பாக, விசாரணைக்கு வந்தது. இதில், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் தரப்பில் வாதாடிய மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்தினால் 90 சதவீத அரசு பள்ளி மாணவர்கள் பயனடைவர். அவர்களுக்காக இந்த ஆண்டே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று கூறினார். மீதமுள்ள 10 சதவீத தனியார் பள்ளிகள் பழைய பாடத் திட்டத்தை இந்தாண்டு பின்பற்றிவிட்டு, அடுத்தாண்டு முதல் சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும், என வாதாடினார்.

இதையடுத்து, நேற்று தமிழக அரசு சார்பில் பி.பி.ராவ் வாதாடியதாவது:

சமூகநீதி காக்கப்பட வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. ஆனால் சமச்சீர் கல்வி முறையின் மூலம் அனைவருக்கும் தரமான கல்வி வழங்கப்படவில்லை என்பதலேயே அதை இந்தாண்டு நடைமுறைபடுத்தவில்லை.

சமச்சீர் கல்வியை செயல்படுத்த தகுந்த விதிமுறைகள், தரமான பாடப்புத்தகங்கள் ஆகியவை தயாரிக்கப்பட்டு, அடுத்தாண்டு அல்லது அதன் பின்னரோ அமல்படுத்த வேண்டும், என சென்னை உயர்நீதி அளித்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான விதிமுறைகள் இன்னும் இயற்றப்படாததால் இந்தாண்டு அமல்படுத்தவில்லை. மேலும், சமச்சீர் கல்வி தொடர்பாக முத்துக் குமரன் குழு அளித்த பரிந்துரைகளை முழுமையாக செயல்படுத்தவில்லை என்று அவரே கூறியுள்ளார்.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திடமிருந்து சமச்சீர் கல்விக்காக உருவாக்கப்பட்ட பாடப் புத்தகங்கள் தரமானவை என எந்த ஒப்புதலும் வழங்கவில்லை. அத்திட்டத்தை அமல்படுத்த தமிழக கல்வித் துறை ஒரே நாளில் ஒப்புதல் அளித்ததன் மூலம், சமச்சீர் கல்வி புத்தகங்கள் தேசிய தரத்திற்கு இணையானது அல்ல என்பது தெளிவாகிறது. எனவே, தரமான புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு, தகுந்த விதிமுறைகள் உருவாக்கப்பட்ட பின், சமச்சீர் கல்வி தமிழகத்தில் அமல்படுத்தப்படும்.

இவ்வாறு பி.பி ராவ் வாதிட்டார்.

பி.பி.ராவின் வாதத்திற்கு இடையே குறுக்கிட்ட நீதிபதிகள் குழு, புத்தகங்கள் இல்லாமல் கடந்த 2 மாதங்களாக மாணவர்கள் என்ன செய்கின்றனர், எனக் கேட்டார்.

அதற்கு பதலளித்த ராவ், கடந்த இரண்டு மாதங்களாக மாணவர்களுக்கு இணைப்புப் பாடம் (பிரிட்ஜ் கோர்ஸ்) நடத்தப்படுகிறது. இதனால், அனைத்து பள்ளி மாணவர்களும் தடையில்லாமல் படித்து வருகின்றனர். சமச்சீர் புத்தகங்களில் உள்ள பாடத் திட்டங்கள் அப்படியே தொடரும்; ஆனால் தரமான கல்வியை உருவாக்கிய பின் சமச்சீர் முறை அமல்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

தமிழக அரசின் வாதம் இன்றும் தொடரும் நிலையில், இன்றோடு வாதத்தை முடித்துக் கொள்ளுமாறு நீதிபதிகள் தெரித்துள்ளனர்.

சிவகங்கை தேர்தல் வழக்கு : ராஜகண்ணப்பனுக்கு எதிரான ப.சிதம்பரம் மனு தள்ளுபடி .

சிவகங்கை தேர்தல் வழக்கு: ப.சிதம்பரம் மனு தள்ளுபடி

கடந்த 2009-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரம் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ராஜகண்ணப்பன், ப.சிதம்பரத்தின் தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கை நீதிபதி கே. வெங்கட்ராஜன் விசாரித்தார். ராஜகண்ணப்பன் மனு வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ப.சிதம்பரம் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இம் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அவர் கூறும் போது, ராஜ கண்ணப்பன் தாக்கல் செய்த தேர்தல் மனுவில் குறைபாடு இருப்பதால் அது தொடர்பான ஆவணங்கள் திருப்பி அனுப்பப்பட்டு சரி செய்யப்பட்டன. எனவே ராஜகண்ணப்பனின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ப.சிதம்பரம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவணங்கள் திருப்பி அனுப்பப்பட்டு சரி செய்யப்பட்ட காரணத்திற்காக ராஜ கண்ணப்பன்- தேர்தல் மனுவை நிராகரிக்க முடியாது மேலும் 3 வாரத்திற்குள் சிவகங்கை தேர்தல் வழக்கு விசாரணை நடைபெறும் என்றார்.

ஓரங்கட்டப்பட்ட அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி : மூடுவிழாவுக்கு முயற்சிக்கிறதா சுகாதாரத் துறை?

தமிழகத்தில் தற்போது செயல்பட்டுவரும் ஒரே அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரியும் ஓரங்கட்டப்பட்டு இருக்கிறது. இதை மீட்டெடுக்க வேண்டிய சுகாதாரத் துறையின் நடவடிக்கைகளைப் பார்த்தால், அதன் மூடுவிழாவுக்கே தேதி குறித்துவிட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது. தமிழகத்தில் பத்து தனியார் ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. ஆனால், மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தான் ஒரே ஒரு அரசு கல்லூரி இருக்கிறது.

1975ல் தமிழகத்தில் துவக்கப்பட்ட முதல் ஓமியோபதி மருத்துவக் கல்லூரியும் இதுவே. இன்று, மாற்று மருத்துவத்தை நோக்கி மக்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில், மூடுவிழாவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது இந்தக் கல்லூரி.

இது குறித்து, இங்கு படிக்கும் மாணவ, மாணவியர் கூறியதாவது: ஐந்து ஆண்டுகள் மருத்துவப் படிப்பு அளிக்கும் இந்தக் கல்லூரியில், 300 பேர் படிக்கிறோம். இதன் தரம் இருக்கும் நிலையைக் கண்டு அதிர்ந்து நிற்கிறோம்.

இக் கல்லூரியில், 13 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதைத் தவிர, 12 ரீடர்கள், 14 விரிவுரையாளர்கள், மூன்று டியூட்டர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. மொத்தமுள்ள, 54 பணியிடங்களில், 36 இடங்கள் காலியாக இருக்கின்றன. அவ்வளவு ஏன்... முதல்வர் பணியிடமே காலியாகத் தான் இருக்கிறது.

இக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு விடுதி வசதி கிடையாது. இருக்கும் மாணவியர் விடுதியிலும், அடிப்படை வசதிகள் கூட இல்லாததால், அவர்கள் தனியே வீடெடுத்து தங்கிப் பயிலும் நிலை உள்ளது. இதோடு முடியவில்லை; இன்னும் ஏராளமான காமெடிகள் இருக்கின்றன.

கல்லூரிக்கு பஸ் கிடையாது; ஆனால், டிரைவர் இருக்கிறார். அல்ட்ரா சோனோகிராம், இ.சி.ஜி., போன்ற அடிப்படை கருவிகள் கூட கிடையாது. கல்லூரியில் கழிவறைகள் போதுமானதாக இல்லை; இருப்பவையும் சுகாதாரமாக இல்லை. தாழ்வான பகுதியில் கல்லூரி இருக்கிறது. மழை வந்தால், கட்டடமே மிதக்கும்; கல்லூரியைச் சுற்றி புதர்கள் மண்டிக் கிடக்கின்றன; அவற்றை அப்புறப்படுத்தவும் முயற்சி இல்லை.

முதல் முறை பார்ப்பவர்கள், ஏதோ மர்ம மாளிகை என்று தான் நினைப்பர். இந்நிலையில், ஆண்டுக்கு ஒரு முறை வரும் மத்திய ஓமியோபதி மருத்துவக் கவுன்சில், எங்கள் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டது. தகவலறிந்த தமிழக அரசின் சுகாதாரத் துறை, சுறுசுறுப்பானது. பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களை தற்காலிகமாக இங்கு கொண்டு வந்து, அவர்கள் இங்கு பணியாற்றுவது போல் நாடகமாடப்பட்டது. ஆனால், அவர்கள் நடிப்பில் முதிர்ச்சி இல்லை போலும்; முதுநிலை பட்டப்படிப்புக்கு அனுமதி வழங்க, கவுன்சில் மறுத்துவிட்டது.

பட்ட மேற்படிப்புக்கு மத்திய அரசு ஆப்பு வைத்ததென்றால், மாநில அரசு, ஒரு படி மேலே சென்றுவிட்டது. கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லாததைக் காரணம் காட்டி, இங்கு செயல்பட்டுவந்த தேர்வு மையத்தையே, 30 கி.மீ., தொலைவில் உள்ள மதுரை மருத்துவக் கல்லூரிக்கு மாற்றிவிட்டது. அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டியது அரசின் கடமை.

தன் கடமையில் அரசு தவறிவிட்டு, எங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குவது என்ன நியாயம்? ஏற்கனவே எந்த வசதியும் இல்லாமல் பஸ்சுக்காகவும், தண்ணீருக்காகவும் அகதிகள் போல அலையும் நாங்கள், இனி தேர்வெழுதவும் அலைய வேண்டுமா? எங்களின் பல்வேறு கோரிக்கைகளை, சுகாதாரத் துறை அமைச்சரிடமும், இந்திய மருத்துவ முறை மற்றும் ஓமியோபதி மருத்துவத் துறை இயக்குனரிடமும் பல முறை முறையிட்டுவிட்டோம்; இதுவரை யாரும் செவிசாய்க்கவில்லை. இவ்வாறு மாணவ, மாணவியர் குமுறினர்.

நிலைமையைப் பார்த்தால், உயிர் காக்கும் உயர் சிகிச்சை உடனடியாகத் தேவைப்படுவது இந்த மருத்துவக் கல்லூரிக்குத் தான் எனத் தோன்றுகிறது.

சிஸ்கோ கம்ப்யூட்டர் தேர்வினை 10 வயது சிறுமி எழுதி சாதனை.இன்ஜினியரிங் பட்டதாரிகள் மட்டுமே எழுதும் கடினமாக சிஸ்கோ கம்ப்யூட்டர் தேர்வினை 10 வயது சிறுமி எழுதி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். திருநெல்வேலியை சேர்ந்த கல்யாணகுமாரசாமி, சேதுராக மாலிகா தம்பதிகளின் ஒரே மகள் விசாலினி(10). பிறந்த போது வாய்பேச முடியாதது உள்ளிட்ட சில குறைபாடுகளுடன் பிறந்தார். அவரது பெற்றோரின் ஊக்கத்தால் சிறுவயதிலேயே ஞாபகசக்தியை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தார். தமது 4 வயதில் இருந்தே இவ்வாறு பல பாடல்களை மனப்பாடமாக சொல்வது உள்ளிட்ட திறன்களை கொண்டிருந்தார்.

அவரது ஐகியூ.,திறன் அதிகரிப்பு : கற்றுக்கொண்ட விஷயங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் அபார திறமை கொண்ட சிறுமியை மதுரையில் உள்ள மனோவியல் டாக்டர் நம்மாழ்வார், "பென்னட் காமத்' என்ற அறிவியல் முறைப்படிசோதித்து பார்த்ததில் அவரது ஐகியூ.,எனப்படும் அறிவுத்திறன் அளவு 225 ஆக இருப்பது தெரியவந்தது.வழக்கமாக மனிதர்களின் அறிவுத்திறன் 110க்குள்தான் இருக்கும். 110க்கு மேல் இருந்தால் அறிவுத்திறன்மிக்கவர்களாக இருப்பார்கள். ஆனால் இச்சிறுமியின் திறன் 225 ஆக உள்ளது என்றார். எனவே முதல் வகுப்பு, 4ம் வகுப்புகளில் டபுள் புரமோசன் எனப்படும் இரட்டை தேர்ச்சி பெற்றார். வரும் கல்வியாண்டில் 6ம் வகுப்பு பயில வேண்டிய சிறுமி விசாலினி 8ம் வகுப்பு பயில உள்ளார். இவர் கடந்த மார்ச் மாதம் நெல்லையில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் மையத்தில் படித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எம்.சி.பி., தேர்வினை ஆன்லைனில் எழுதி தேர்வு பெற்றார்.

தொடர்ந்து இம்மாதத்தில் அமெரிக்காவின் சிஸ்கோ நிறுவனத்தினர் நடத்தும் சிசிஎன்ஏ எனப்படும் நெட்வொர்க் தேர்வினையும் திருவனந்தபுரத்தில் ஆன்லைனில் எழுதி தேர்வு பெற்று சான்றிதழ் பெற்றுள்ளார்.

இவருக்கு சிறுவயதில் சிகிச்சையளித்த டாக்டர் ராஜேஷ், மதுரை டாக்டர் நம்மாழ்வார், நெல்லை கம்ப்யூட்டர் மைய நிர்வாக சுந்தரபாண்டியன் ஆகியோர் பாராட்டினர். பாகிஸ்தானை சேர்ந்த 12 வயது சிறுவன் ஹைதர் இத்தகைய சாதனையை கடந்த ஆண்டு செய்துள்ளான். ஆனால் பத்து வயதிலேயே சிறுமி விசாலினி சிஸ்கோ தேர்வினை எழுதியுள்ளார். அவரது முயற்சிகள் குறித்து சிறுமி விசாலினியின் தாய் கூறுகையில், எதை படித்தாலும், கேட்டாலும் எளிதில் புரிந்துகொள்ளும் ஞாபகசக்தி உள்ளது.

ஒரு முறை விடுமுறையில் பிளஸ் 2 வகுப்பில் உட்கார்ந்து பாடம் கேட்டு தேர்வினை எழுதினாள். இரட்டை தேர்ச்சி பெறுவதால் இவளை விட பெரிய மாணவர்களுடன் வகுப்பில் படிக்க வேண்டியுள்ளது. மேலும் இதற்காக இவளை சில பள்ளிகள் அனுமதிக்கவே மறுத்தன. ஒரு கல்விஆண்டில் 3 பள்ளிகளில் சேர்த்து பின்னர் வெளியேற்றப்பட்டு அலைந்தோம். எனவே இவள் வயது மீறினாலும் உயர்கல்வி பயில முறைப்படி அனுமதியளிக்க அரசை கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

டாக்டருக்கு படிப்பதுதான் தமது நோக்கம் என்கிறார் சிறுமி விசாலினி. ஏற்கனவே சிறுவயதிலேயே இத்தகைய திறமை படைத்த நெல்லையை சேர்ந்த மாணவன் சந்திரசேகர் போன்றவர்களுக்கும் வயது தொடர்பாக இத்தகைய பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. எனவே சிறுமி விசாலினிக்கும் உயர்கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்திதரவேண்டும் என்பதே அவரதுபெற்றோரின் விருப்பமாகும்.