Sunday, August 21, 2011

பத்மநாபசாமி கோவில் பொக்கிஷங்களை ஏற்கனவே மன்னர் கடத்திக் கொண்டு போய் விட்டார் -அச்சுதானந்தன்



பத்மநாபசாமி கோவில் பொக்கிஷங்களை, அதன் 6வது ரகசிய அறையிலிருந்தவற்றில் பலமுறை திருவிதாங்கூர் மன்னர் உத்தராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா கடத்தி சென்றுள்ளார் என்று கேரள முதல்வர் முதல்வர் அச்சுதானந்தன் பரபரப்புக் குற்றம் சாட்டியுள்ளார்.

மொத்தம் உள்ள 6 அறைகளில் 5 அறைகளைத் திறந்து பார்த்து விட்டனர். அவற்றில் பதுங்கிக் கிடந்த பல லட்சம் கோடி பொக்கிஷங்கள் உலகையே அதிர வைத்துள்ளன. இந்த நிலையில் 6வது அறையைத் திறக்க மட்டும் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. இதுகுறித்து தேவ பிரஸ்னம் பார்க்க மன்னர் மார்த்தாண்ட வர்மா உத்தரவிட்டார். அப்போது இந்த அறையைத் திறந்தால், திறப்பவரின் வம்சமே அழிந்து போய் விடும் என ஜோதிடர்கள் எச்சரித்தனர்.

இந்த நிலையில் 6வது அறையில் இருந்த பொக்கிஷங்களில் பலவற்றை பலமுறை மன்னர் திருடிச்சென்று விட்டதாக அச்சுதானந்தன் பரபரப்புக் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

இந்தியாவில் இப்போது மன்னர் ஆட்சி இல்லை. எனவே, உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மாவுக்கு மன்னருக்கு உரிய அந்தஸ்து கிடையாது என்றே உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதனால்தான், மார்த்தாண்ட வர்மா காலத்தில் இருந்து மன்னர் குடும்பத்தின் கைவசம் உள்ள பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறைகளை திறந்து பரிசோதிக்க உத்தரவு பிறப்பித்தது.

ஆனால், உச்ச நீதிமன்றத்தின் நடவடிக்கையை தடுப்பதற்காகத்தான் மன்னர் குடும்பத்தின் சார்பில் கோயிலில் தேவ பிரஸ்னம் நடத்தப்பட்டது. அதில் பொக்கிஷங்களை பரிசோதிக்கக் கூடாது என்றும், பி அறையை திறந்தால் திறப்பவர்கள் வம்சமே அழியும் என்றும் கூறி, உச்ச நீதிமன்றத்தை மிரட்டியுள்ளனர்.

இதற்கு முன்பு மன்னர் மார்த்தாண்ட வர்மா காலத்தில் ‘பி’ அறை திறக்கப்பட்டுள்ளது. அப்போது புகைப்படமும் எடுக்கப்பட்டுள்ளது. அறையை திறந்த யாரும் இறக்கவோ, குடும்பம் அழியவோ இல்லை. இப்போது மட்டும் அந்த அறையை திறந்தால் வம்சமே அழியும் என்று கூறுவதை ஏற்க முடியாது.

உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா பத்மநாபசுவாமி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு திரும்பும்போது ஒரு வாளியில் கோயில் பாயாசம் எடுத்து செல்வார். அதில் பாயாசம் இருப்பதாகத்தான் அனைவரும் கருதுகின்றனர். உண்மையில் அந்த வாளியில் கோயில் பொக்கிஷங்களை எடுத்து சென்றுள்ளார்.

இவ்வாறு ஒருமுறை அவர் தங்கத்தை எடுத்துச்சென்றபோது அதை பூசாரி ஒருவர் பார்த்து விட்டார். இதனால் பயந்து போன மார்த்தாண்ட வர்மா, அந்த பூசாரியை கொதி நீர் ஊற்றிக் கொல்ல முயற்சித்தார். இது அனைவருக்கும் தெரியும்.

எனவே 6வது அறையைத் திறந்து பார்க்க வேண்டும். இதில் பயமுறுத்தலுக்கு அஞ்சக் கூடாது என்றார் அச்சுதானந்தன்.