Saturday, May 21, 2011

பக்தர்கள் வழங்கிய ரூ.34 கோடி சொத்துக்களை விற்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு.

பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய  ரூ.34 கோடி சொத்துக்களை விற்க  திருப்பதி தேவஸ்தானம் முடிவு

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள உண்டியலில் பணம்-நகைகளை போடுவது வழக்கம். சில பக்தர்கள் தங்களது நில பத்திரங்களை காணிக்கையாக வழங்குவார்கள். பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய நிலங்கள் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ளது.

இந்நிலையில் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் அந்த நிலங்களின் மதிப்பை கணக்கிட்டனர். அப்போது அவற்றின் மதிப்பு ரூ.34 கோடி என்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த சொத்துக்கள் அனைத்தையும் விற்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருப்பதி கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. தரிசனத்திற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். மொட்டை போடும் இடம், அன்னதான காம்ப்ளக்ஸ் ஆகிய இடங்களிலும் பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருந்தனர். கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ஜிசாட் - 8 செயற்கை கோள் வெற்றிகரமாக பறந்தது : பிரதமர் மன்மோகன்சிங் பாராட்டு.

ஜிசாட்-8 செயற்கை கோள் வெற்றிகரமாக பறந்தது: பிரதமர் மன்மோகன்சிங் பாராட்டு

தொலைத்தொடர்பு வசதியை மிக அதிக நவீன முறையில் மேம்படுத்துவதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, ஜிசாட்-8 என்ற செயற்கை கோளை தயாரித்தது.

3100 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள், இஸ்ரோ தயாரித்துள்ள மிகப் பெரிய செயற்கை கோள்களில் ஒன்றாகும். இன்று அதிகாலை இந்திய நேரப்படி 2.08 மணிக்கு பிரெஞ்சு கயானாவில் இருந்து ஜிசாட்-8 செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.

சிறிது நேரத்தில் அது சுற்றுப்பாதையில் பறக்க விடப்பட்டது. ஜிசாட் செயற்கை கோள் வெற்றிகரமாக தன் பணிகளை செய்யத் தொடங்கிவிட்டதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். 600 கோடி ரூபாய் செலவில் ஜிசாட் செயற்கை கோள் திட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜிசாட்-8 செயற்கை கோள் திட்ட வெற்றிக்காக இஸ்ரோ விஞ்ஞானிகளை பிரதமர் மன்மோகன்சிங் பாராட்டி உள்ளார். இதற்கிடையே இன்று காலை 10.32 மணிக்கு இந்திய பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டுக்கழகம் சார்பில் அஸ்த்ரா ஏவுகணை பரிசோதித்து பார்க்கப்பட்டது. விண்ணில் இருந்து விண்ணில் பாய்ந்த இந்த ஏவுகணை குறிப்பிட்ட இலக்கை வெற்றிகரமாக அடைந்ததாக அறிவிக்கப் பட்டுள்ளது.

கனிமொழி கைதான அந்த நிமிடங்கள்.

கைதான போது கணவர்-மகனிடம்  கண்கலங்கிய கனிமொழி

தி.மு.க. அரசியல் பாரம்பரியத்தில் வளர்ந்து தந்தையின் இலக்கிய புலமையையும் கற்று தேர்ந்து கொண்டவர் கனிமொழி. பொழுது விடிந்தது முதல் இரவில் துயில் கொள்ளும் நேரம் வரை கட்சி நிர்வாகிகளுடன் அரசியல் பேச்சுகள், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, எழுதுவது என்று எத்தனையோ பணிகளுடன் எப்போதும் சுறு சுறுப்பாக இயங்கி கொண்டிருப்பார்.

2 ஜி ஸ்பெக்ட்ரம் அலையின் தாக்கம் கடந்த சில மாதங்களாக அவரை தடுமாற வைத்தன. நேற்று கைது செய்யப்பட்டதும் அவரை நிலைகுலைய வைத்து விட்டது. மிகப்பெரிய வக்கீல், அரசியல் பின்புலம் ஆகியவற்றால் வழக்குகளை சந்திக்கலாம். ஜெயிலுக்கு போகாமல் இருக்க முன் ஜாமீன் கிடைத்துவிடும் என்ற துளியளவு நம்பிக்கையுடன் டெல்லி பிரம்மபுத்திரா இல்லத்தில் நேற்று காலையில் துயிலெழுந்தார்.

தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன், சுகவனம், ஜெயதுரை, ஆதிசங்கர், ஹெலன்டேவிட்சன், ரித்தீஷ், கே.பி.ராமலிங்கம், செல்வகணபதி, வசந்தி ஸ்டான்லி, தங்கவேலு, முன்னாள் அமைச்சர் பூங்கோதை, இவர்களை தவிர விசுவாசமிக்க கட்சி நிர்வாகிகள் பலரும் அவரது இல்லத்தில் குவிந்து இருந்தனர்.

கோர்ட்டு முடிவு எப்படி இருக்குமோ என்ற பதட்டத்தில் இருந்த கனிமொழிக்கு அனைவரும் தைரியம் கொடுத்தனர். காலை 10 மணிக்கு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டுக்கு கனிமொழி சென்றார். தி.மு.க. எம்.பி.க்களும் கோர்ட்டிற்கு வந்து இருந்தனர். ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி, சரத்குமாரின் மனைவி ஆகியோரும் கோர்ட்டுக்கு வந்திருந்தனர்.

காலை 11 மணி, 12.30 மணி என்று தீர்ப்பு சொல்லும் நேரம் அடிக்கடி தள்ளிகொண்டே போனதால் திக்...திக் மனதோடு ஒவ்வொரு நிமிடத்தையும் ஒரு மணித்துளியாக நகர்த்தி கொண்டிருந்தார்கள். பிற்பகல் 2.30 மணிக்கு நீதிபதி சைனி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து தனது உத்தரவை படித்ததும் கனிமொழி மிகவும் அதிர்ச்சி அடைந்தார்.

கண்கள் கலங்கி கண்ணீர் பெருகியது. அருகில் இருந்த முன்னாள் அமைச்சர் பூங்கோதை, ஹெலன் டேவிட்சன் ஆகியோர் ஆறுதல் படுத்தினார்கள். ஜெயிலுக்கு அழைத்து செல்லுமாறு நீதிபதி உத்தரவிட்டதும் சென்னை மாநகராட்சி 95-வது வார்டு கவுன்சிலர் துரை கோர்ட்டு அறையிலேயே ஒ வென்று கதறி அழுது விட்டார். அதைப்பார்த்ததும் மற்றவர்கள் கண்களிலும் கண்ணீர் வடிந்தது.

துயரத்தில் ஆழ்ந்து இருந்த கனிமொழி அதை அடக்கி கொண்டு துக்கம் தாளாமல் அழுத துரையை தேற்றினார். மாலை 3 மணியளவில் கனிமொழியை நீதிமன்ற வளாகத்தில் உள்ள “லாக்-அப்” அறைக்கு அழைத்து செல்வதற்காக சுற்றியிருந்த பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்டனர். பெண் போலீசார் கனிமொழியை லாக்-அப் அறைக்கு அழைத்து சென்றனர்.

கையை தட்டினால் ஏவலுக்கு எத்தனையோ போலீசார் வந்து நிற்பதையும் பாதுகாப்பு அரணாக சுற்றி நிற்பதையும் சிறுவயது முதல் பார்த்து பழக்கப்பட்ட கனிமொழியின் கைகளை பிடித்து பெண் போலீசார் அழைத்து சென்றதை பார்த்து அவரால் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை. கலங்கியப் கண்களுடன் லாக்-அப்புக்கு நடந்தார்.

அவரை தொடர்ந்து கணவர் அரவிந்தனும் வந்தார். எத்தனையோ அரசியல் களங்களுக்கு மனைவியை அனுப்பி வைத்து மகிழும் அரவிந்தனும் மனைவி ஜெயிலுக்கு செல்வதை பார்த்து நொறுங்கி போனார். லாக்-அப் அறைக்குள் செல்வதற்கு முன்பு கனிமொழி கணவரை கட்டித் தழுவினார். உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் இருவரும் கண்ணீர் விட்டனர்.

கனிமொழியின் தோளில் தட்டி அரவிந்தன் தேற்றினார். லாக்-அப் அறைக்குள் சென்றதும் அவரால் துயரத்தை அடக்க முடியவில்லை. பெருகிவந்த கண்ணீரை துடைத்தபடியே சிலநிமிடங்களை கழித்தார். அடுத்த 10 நிமிடத்தில் கணவர் அரவிந்தனை சந்திக்க வேண்டும் என்று கனிமொழி முறையிட்டார். அவரது செல்போன் நம்பரையும் போலீசாரிடம் கொடுத்தார்.

அவரது தவிப்பை புரிந்த போலீசார் உதவ முயன்றனர். ஆனால் நீதிபதியின் உத்தரவால் எல்லோரும் வெளியே சென்று விட்டனர். போலீசாரால் அரவிந்தனை தொடர்பு கொள்ள முடியவில்லை. தமிழக பத்திரிகையாளர்களும் அரவிந்தனை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அவர்களாலும் முடிய வில்லை.

இறுதியில் தி.மு.க. பிரமுகர் பாலகுரு என்பவர் மூலம் அரவிந்தனை தொடர்பு கொண்டனர். அவர் உடனடியாக விரைந்து வந்தார். கனிமொழியுடன் லாக்-அப் அறையில் சுமார் 20 நிமிடங்கள் பேசி கொண்டிருந்தார். அப்போது மகன் ஆதித்யாவை பார்க்க ஆசைப்படுவதாக கூறினார். உடனே ஆதித்யாவை அழைத்து வந்தனர்.

மகன் ஆதித்யாவின் கைகளை பிடித்து வருடியபடி அவரிடம் சுமார் 15 நிமிடங்கள் பேசினார். தனது உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு ஆதித்யாவை தைரியமாக இருக்கும்படி வாஞ்சையுடன் தடவிகொடுத்தார். மாலை 4.30 மணிக்கு போலீசார் ஒரு வேனில் ராசாவையும், சரத்குமாரையும் திகார் ஜெயிலுக்கு அழைத்து சென்றனர்.

அதன்பிறகு பெண் போலீசார் மற்றொரு வேனில் கனிமொழியை திகார் ஜெயிலுக்கு அழைத்து சென்றனர். இது நான் எதிர்பார்த்தது தான் என்று கனிமொழி ஜெயிலுக்கு செல்வதற்கு முன்பு கூறினார். ஆனால் ஜெயிலுக்குள் நுழைந்ததும் அவரது முகமே மாறிவிட்டது. இறுகிய முகத்துடன் ஜெயிலுக்குள் சென்றார்.

ரங்கசாமி பற்றி குறை கூற ஜெயலலிதாவிற்கு அருகதை இல்லை - நாஞ்சில்சம்பத் கடும் தாக்கு .


புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி துரோகம் செய்து விட்டார் என, முதல்வர் ஜெயலலிதா கூற, அவருக்கு எந்த வித அருகதையும் இல்லை, உரிமையும் இல்லை என்று ம.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கருத்து தெரிவித்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் ம.தி.மு.க., கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில்சம்பத் செய்தி யாளர்களிடம் பேசுகையில்,

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதல்வர் ஜெயலலிதாவை தேநீர் விருந்துக்கு அழைத்துள்ளது நயவஞ்சக நாடகமாக உள்ளது.காங்கிரஸ் ஆட்சியில் தான் இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். எனவே, சோனியா காந்தியின் சூழ்ச்சியில் விழாமல் இருக்க தேநீர் விருந்தை ஜெயலலிதா புறக்கணிக்க வேண்டும்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, தனக்கு துரோகம் செய்து விட்டதாக முத்லவர் ஜெயலலிதா கூறியுள்ளார். ஆனால், இதைச் சொல்ல ஜெயலலிதாவிற்கு எந்த அருகதையும் கிடையாது. காரணம், அதிமுக கூட்டணியில் ஏழு ஆண்டு காலம் உடன் இருந்த ம.தி.மு.க.விற்கு துரோகம் செய்து , வெளியேற்றியது அதிமுக.

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கட்சி 15 இடங்களில் வெற்றி பெற்று, சுயேச்சை ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளார். ரங்கசாமியின் அமைச்சர வையில் அ.தி.மு.க.வை சேர்க்க வேண்டுமென கோருவதற்கு ஜெயலலிதாவிற்கு எவ்வித உரிமையும் இல்லை. இதில் ஜெயலலிதாவிற்கு ரங்கசாமி எந்த துரோகமும் இழைக்கவில்லை என்றார்.

கனிமொழியின் பரிதாபத்திற்குறிய திகார் சிறைச் சூழல்..

திகார் ஜெயிலில் கனிமொழிக்கு சிறப்பு பாதுகாப்பு:    வீட்டு உணவு கொடுக்க அனுமதி

ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன் ஜாமீன் மறுக்கப்பட்டதும் கனிமொழி அதிர்ச்சியின் உச்சிக்கே சென்று விட்டார். என்றாலும் உடனடியாக அவர் தன் முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் காட்டவில்லை. அடுத்த சில நிமிடத்தில் ஜாமீன் மறுக்கப்பட்டவர்களை உடனே கைது செய்து சிறையில் அடைக்கும்படி நீதிபதி சைனி உத்தரவிட்டார். அப்போதுதான் கனிமொழி கண்கள் கலங்கிவிட்டன. அவருக்கு அருகில் இருந்த ராசாவின் மனைவி பரமேசுவரியும் சரத்குமாரின் மனைவியும் ஆறுதல் கூறினார்கள்.

பிற்பகல் 2.45 மணியில் இருந்து 4 மணிவரை கனிமொழி சி.பி.ஐ. கோர்ட்டிலேயே இருந்தார். அவரிடம் தீர்ப்பு நகல்கள் கொடுக்கப்பட்டு கையெழுத்து பெறப்பட்டன. பிறகு அவரை திகார் சிறைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். பெண் போலீஸ்காரர் ஒருவர் அவர் கையைப்பிடித்து அழைத்துச் சென்று வேனில் ஏற்றிய போது கனிமொழி கண்கள் மீண்டும் கலங்கின. மிகவும் சிரமப்பட்டு அவர் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டார்.

சி.பி.ஐ. கோர்ட்டு அமைந்துள்ள பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் இருந்து கனி மொழியை ஏற்றிச் சென்ற போலீஸ் வேனில் பாதுகாப்பு பணியை தமிழ்நாடு சிறப்பு காவல் படையைச் சேர்ந்த போலீசார்தான் ஏற்று இருந்தனர். அவர்கள் கனிமொழி யுடன் தமிழில் பேசினார்கள். இதனால் கனிமொழி சற்று உற்சாகம் அடைந்தார். தமிழக சிறப்பு காவல் படை போலீசாருடன் அவர் சுமார் 15 நிமிடம் தமிழில் பேசிக் கொண்டே வந்தார்.

காவலர்களிடம் அவர், தமிழ்நாட்டில் எந்த ஊர்? டெல்லியில் வேலை எப்படி உள்ளது? என்று விசாரித்தப்படி இருந்தார். 4.30 மணிக்கு அவர் வேன் திகார் ஜெயிலை அடைந்தது. திகார் ஜெயில் வாசலில் கனிமொழி வருகை பதிவு செய்யப்பட்டது. சிறைச் சாலை விதிகள்படி சில குறிப்பிட்ட ஆபணரங்கள் அணிய தடை உள்ளது. அதை எற்று கனிமொழி தனது மூக்குத்தியை கழற்றி கொடுத்து விட்டார். என்றாலும் தனது மூக்குக் கண்ணாடி, மருந்து மற்றும் சில புத்தகங்களை அவர் தன்னுடன் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

அவர் தன்னுடன் தனது சிறு கைப்பையை வைத்துக் கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டது. திகார் ஜெயிலில் 6-ம் என் சிறை பெண் கைதிகளுக்கு உரியதாகும். அந்த சிறை கூடத்தில் சிறு, சிறு அறைகளாக சிறை உள்ளது. அதில் 8-ம் நம்பர் அறை கனிமொழிக்கு ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அறை சுமார் 150 சதுர அடி அதாவது 15-க்கு 10 அடி பரப்பளவு கொண்டது.

அதன் உள்ளே படுத்து தூங்க சிறு மேடை, கழிவறை ஆகிய இரண்டே இரண்டு அடிப்படை வசதி மட்டுமே உள்ளது. கழிவறைக்கும் படுக்கும் மேடைக்கும் இடையே தடுப்பு சுவர் எதுவும் கிடையாது. அதை துணியிலான திரைச் சீலையால் மறைத்துக் கொள்ள வேண்டும்.

மிகக்குறுகலான அந்த அறைக்குள் ஒரு ஓரத்தில் தொலைக்காட்சி வைத்துக் கொள்ள நீதிபதி அனுமதித்துள்ளார். அந்த அறையில் ஏ.சி.கிடையாது. ஒரே ஒரு மின் விசிறி வசதி மட்டுமே உள்ளது. மூன்று பக்கம் சுவர் உள்ள அந்த அறையின் முன்பக்கம் இரும்பு கம்பியால் ஜன்னல்கள் போல அடைக்கப்பட்டுள்ளது. காற்றோட்ட வசதிக்காக எக்ஸ்சாஸ்ட் பேன் வசதி உள்ளது. அந்த அறையில் உள்ள கழிவறை மேலை நாட்டு மாதிரி கிடையாது. இந்தியன் ஸ்டைல் கொண்டதாகும்.

கனிமொழி அந்த அறைக்குள்ளேயே குளித்துக் கொள்ளலாம். ஆனால் ஷவர் வசதி கிடையாது. குழாய் தண்ணீரை வாளியில் பிடித்துத்தான் குளிக்க வேண்டும். 15-க்கு 10 அறைக்குள் தான் அவர் தனது அத்தனை பணிகளையும் செய்து கொள்ள வேண்டும்.

அவருக்கு தினமும் படிக்க பத்திரிகைகள் மற்றும் புத்தகங்கள் வழங்க நீதிபதி அனுமதி கொடுத்துள்ளார். திகார் ஜெயிலை பொறுத்தவரை கைதிகள் அனைவருக்கும் ஒரே மாதிரிதான் உணவு கொடுக்கப்படும். காலை, உணவாக டீ, பிஸ்கட், ரொட்டி கொடுப்பார்கள். மதியம் சப்பாத்தி, ரொட்டி, காய்கறி உணவு வகைகள் கொடுக்கப்படும் மாலை டீ, பிஸ்கட் தருவார்கள். இரவு சப்பாத்தி, அரிசி உணவு கொடுக்கப்படும். ஆனால் இரவு உணவை கைதிகள் மாலை 6 மணிக்குள் வாங்கி இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும்.

உணவு விஷயத்தில் சில சலுகைகளை நீதிபதி வழங்கியுள்ளார். கனிமொழி தென் இந்திய உணவுகளை வாங்கி சாப்பிடலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது. கனிமொழி கேட்டுக் கொண்டால் அவருக்கு வீட்டில் இருந்து சாப்பாடு, மருந்து போன்றவைகளைக் கொடுக்கலாம் என்றும் நீதிபதி கூறியுள்ளார். மற்றபடி மற்ற பெண் கைதிகள் போலவே கனி மொழியும் நடத்தப்படுவார் என்று திகார் ஜெயில் முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி சுனில்குப்தா கூறினார். அவர் மேலும் கூறியதாவது:-

கனிமொழி திகார் சிறைக்கு அழைத்து வரப்பட்டதும், அவரிடம் சிறை விதிமுறைகள், கட்டுப்பாடுகள் பற்றி விளக்கி கூறினோம். அதை அவர் கேட்டுக் கொண்டார். சிறைக்குள் நாங்கள் கனிமொழிக்கு எந்த சிறப்பு சலுகையும் காட்ட மாட்டோம். மற்ற கைதிகளை போலவே அவரும் நடத்தப்படுவார், ஆனால் சிறைக்குள் அவருக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பதில் நாங்கள் கவனமாக உள்ளோம்.

சிறைக்கு வரும் வி.ஐ.பி.க்கள் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் புகழ் பெறலாம் என்று சில பெண் கைதிகள் நினைப்பது உண்டு.

இதை கருத்தில் கொண்டு கனிமொழிக்கு எப்போதும் ஒரு காவலர் பாதுகாப்புக்காக இருப்பார். கனிமொழி அறை முன்பு 24மணி நேரமும் அந்த பாதுகாப்பு வழங்கப்படும்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

கனிமொழி இருக்கும் அறைப்பகுதியில் கொசுத் தொல்லை உண்டு. இதை சிறை அதிகாரிகள் கவலையுடன் தெரிவித்தனர். அவருக்கு கொசு விரட்டி தரப்படுமா என்று கேட்டதற்கு சிறை அதிகாரிகள் பதில் சொல்லவில்லை.

கனிமொழி அடைக்கப்பட்டுள்ள 8-ம் நம்பர் அறைக்கு பக்கத்தில் உள்ள 15க்கு 10 அறைகளில் சில பெண் கைதிகள் உள்ளனர். கனிமொழியின் அடுத்த அறையில், பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த கைதான வெளியுறவு அதிகாரி மாதுரிகுப்தா உள்ளார். மற்றொரு அறையில் டெல்லி கவுன்சிலர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சாரதா என்ற கைதி உள்ளார். இவர்கள் தவிர தமிழ்நாட்டைச் சேர்ந்த சில பெண்களும் கைதிகளாக உள்ளனர்.

அவர்களிடம் பேசிக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் சிறைக் கூடம், 1, 3 மற்றும் 4-ல் அடைக்கப்பட்டுள்ள ஸ்பெக்ட்ரம் குற்றவாளிகளுடன் கனிமொழி பேசக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு கலர் சுடிதார் அணிந்திருந்த கனிமொழி சிறைக்குள்ளும் அதே உடையுடன் இருக்க அனுமதிக்கப்பட்டார். இரவு அவருக்கு சப்பாத்தி, கொடுக்கப்பட்டது. அதை சாப்பிட்ட அவர் சிறிது நேரம் புத்தகம் படித்தார். இரவு 11 மணிக்கு கனி மொழி தூங்கச் சென்றார். டெல்லியில் நேற்று 44 டிகிரி செல்சியஸ் வெயில் அடித்ததால் இரவில் புழக்கம் காணப்பட்டது.

தனது சிறு அறையில் உள்ள மேடை கட்டிலில் கனிமொழி படுத்து தூங்கினார். அவர் நன்றாக தூங்கியதாக சிறை அதிகாரி ஒருவர் கூறினார். இன்று (சனி) அதிகாலை 5.30 மணிக்கெல்லாம் அவர் எழுந்து விட்டார். தனது காலை பணிகளை முடித்து விட்டு கோர்ட்டுக்கு புறப்பட தயாரானார். இன்று காலையும் அவர் சிறையில் கொடுத்த உணவைச் சாப்பிட்டார். முகத்தில் சற்று சோர்வு தெரிந்தது.

டெல்லி ஐகோர்ட்டில் அவர் ஜாமீன் கோரி மனு செய்துள்ளார். அதில் உத்தரவு வரும் வரை கனிமொழி 15க்கு 10 அறைக்குள் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

ரயில்வே : ஒரே மாதத்தில் 5,490 கோடி வருமானம்.


ரெயில்வே துறைக்கு, சரக்கு போக்குரத்தின் மூலம், கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.5,490.93 கோடி வருமானம் கிடைத்து இருக்கிறது.

இதில் நிலக்கரி ஏற்றிச்சென்றதால் கிடைத்த வருமானம் மட்டும் ரூ.2,278.14 கோடி ஆகும். இந்த வருமானம் 370.37 லட்சம் டன் நிலக்கரியை ஏற்றிச்சென்றதன் மூலம் கிடைத்து இருக்கிறது.

90.02 லட்சம் டன் இரும்பு தாது ஏற்றிச்சென்றதன் மூலம் ரூ.730.42 கோடி வருமானமும், 90.03 லட்சம் டன் சிமெண்ட் ஏற்றிச்சென்றதால் ரூ.560.50 கோடியும் வருமானம் கிடைத்து இருக்கிறது.

40.09 லட்சம் டன் உணவு தானியம் ஏற்றிச்சென்றதன் மூலம் 436.22 கோடி வருமானமும், 30.34 லட்சம் டன் பெட்ரோலியம் பொருட்களை ஏற்றிச்சென்றதன் மூலம் 286.44 கோடி வருமானமுன் கிடைத்து இருக்கிறது.

உங்கள் மனம் என்ன பாடுபடுமோ - அந்த மனநிலையில் கலைஞர் - பேட்டி.


ஸ்பெக்ட்ரம் வழக்கில் சம்மந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி பெற்றது தொடர்பாக அந்த டி.வி.யின் பங்குதாரரும், தி.மு.க. தலைவர் கலைஞரின் மகளுமான கனிமொழி எம்.பி. மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அவரது ஜாமீன் மனு மீதான தீர்ப்பு நேற்று டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் அறிவிக்கப்பட்டது. அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார்.

கனிமொழி ஜாமீன் மனு மீது தீர்ப்பு கூறப்படுவதையொட்டி, அவரது தந்தையும் தி.மு.க. தலைவருமான கலைஞர் நேற்று காலை 11 மணிக்கு கோபாலபுரம் இல்லத்தில் இருந்து, சி.ஐ.டி. காலனி இல்லத்திற்கு சென்றார்.

அங்கு பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களும் அங்கு வந்தனர். அவர்களுடன் கலைஞர் ஆலோசனை நடத்தினார். டெல்லியில் நடைபெறும் விவரங்களையும் கேட்டறிந்தார்.

விசாரணை மதியம் 2.30 மணிக்கு தள்ளிவைக்கப்பட்டதும் அன்பழகன், ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் புறப்பட்டு சென்றனர். பின்னர் மீண்டும் அவர்கள் மதியம் வீட்டுக்கு வந்தனர். அப்போது கனிமொழியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு கைது செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதும் கலைஞர் உள்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த தகவலைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, பரிதி இளம்வழுதி, தா.மோ.அன்பரசன், மற்றும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், பேராயர் எஸ்றா சற்குணம், கலைஞரின் டாக்டர் கோபால், நடிகர் சந்திரசேகர் உள்பட பலர் அங்கு வந்தனர்.

அவர்களுடன் மத்திய மந்திரி சபையில் நீடிப்பதா? காங்கிரசுடன் உறவை தொடர்வதா? வேண்டாமா? என்பது குறித்தும் கருணாநிதி ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

இந்த நிலையில் கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். டாக்டர் கோபாலுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவர் காரில் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கனிமொழி கைதை தொடர்ந்து கலைஞரின் கருத்து, தி.மு.க.வின் நிலை குறித்து அறிய ஏராளமான பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் அங்கு கூடினார்கள்.

மாலை 5.45 மணி அளவில் கருணாநிதி தனது கருத்தை தெரிவிக்க இருப்பதாகவும், ஒரு சில பத்திரிகையாளர்கள் மட்டும் உள்ளே வரும்படியும் அழைப்பு வந்தது.

ஆனால் அனைத்து தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளின் வீடியோகிராபர்கள், போட்டோகிராபர்கள், நிருபர்கள் என அனைவரும் உள்ளே நுழைந்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சில நிமிட நேர கூச்சலுக்கு பின்னர் கலைஞர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியின் ஜாமீன் மனு டெல்லி நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதே? அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

அது நீதிமன்ற விவகாரம். நான் ஒன்றும் அதில் கருத்து சொல்ல விரும்பவில்லை.

காங்கிரசுடன் உங்கள் உறவு தற்போது எப்படியிருக்கிறது?

எல்லோருடனும் நல்ல உறவு இருக்கிறது.

இந்த தீர்ப்பின் காரணமாக காங்கிரசுடன் உங்களுக்குள்ள உறவு பாதிக்குமா? என்ன முடிவு எடுக்கப்போகிறீர்கள், இதற்காக கட்சிக் கூட்டம் நடைபெறுமா?

தி.மு.க. என்பது ஒரு ஜனநாயக இயக்கம். நான் மாத்திரம் எந்த முடிவும் எடுக்க முடியாது. எங்கள் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூடித்தான் எந்த முடிவையும் எடுக்க வேண்டும். நானாக ஒரு முடிவு எடுக்க முடியாது.

செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை எப்போது கூட்டப்போகிறீர்கள்?

தேவைப்படும்போது கூட்டுவோம்.

இந்த தீர்ப்பு குறித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போகிறீர்களா?

சட்டவல்லுநர்களை கலந்தாலோசித்து முடிவெடுப்பேன். என்ன முடிவு என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.

உடனடியாக டெல்லி போகிறீர்களா?

இப்போது நான் போகவில்லை.

தேர்தலிலே உங்களுக்கு கிடைத்த முடிவு பற்றி என்ன கருதுகிறீர்கள்?

அதைப்பற்றி நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். மக்கள் நல்ல ஓய்வு கொடுத்திருக்கிறார்கள். இப்போது நீங்களும் ஓய்வு கொடுத்தால் நல்லது.

உங்கள் மகள் கனிமொழியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறதே, அதன் காரணமாக உங்கள் மனநிலை எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறது?

உங்களுக்கு ஒரு மகள் இருந்து, அவர் செய்யாத குற்றத்திற்காக, இதுபோன்ற ஒரு தண்டனை கிடைத்தால், உங்கள் மனம் அப்போது என்ன பாடுபடுமோ அந்த மனநிலையில் என் மனம் இருக்கிறது.

தமிழகத்தில் 47 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் முழுப் பட்டியல்.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 47 ஐஏஎஸ் அகாரிகள் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதிகாரிகளும், அவர்களின் புதிய பதவிகளும்:


1. ஷீலா பாலகிருஷ்ணன் - சமூக நலம் மற்றும் சத்துணவுத் துறை கூடுதல் தலைமை செயலாளர்

2. டி.எஸ்.ஸ்ரீதர் - குறு, சிறிய, நடுத்தர தொழில்கள் துறை முதன்மைச் செயலாளர்

3. என்.சுந்தரதேவன் - தொழில்கள் துறை முதன்மைச் செயலாளர்

4. எம்.குற்றாலிங்கம் - பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை முதன்மை செயலாளர்

5. ரமேஷ்ராம் மிஸ்ரா - தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளர்

6. ஆர்.கண்ணன் - உயர்கல்வித் துறை முதன்மை செயலாளர்

7. என்.எஸ்.பழனியப்பன் -ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை முதன்மைச் செயலாளர்

8. சாந்தினி கபூர் - இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர்

9. வி.கே.ஜெயக்கொடி -சுற்றுலா மற்றும் கலாச்சார துறை முதன்மைச் செயலாளர்

10. ஆர்.ராஜகோபால் - வருவாய்த் துறை முதன்மைச் செயலாளர்

11. ராஜீவ்ரஞ்சன் - சர்க்கரைத் துறை கமிஷனர். தமிழ்நாடு சர்க்கரை கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராகவும் பணியாற்றுவார்

12. கே.அருள்மொழி - வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர்

13. நஜிமுதீன் - போக்குவரத்துத் துறை செயலாளர்

14. கே.பணீந்திர ரெட்டி - வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாட்டுத் துறை செயலாளர்

15. சி.முத்துக்குமாரசுவாமி - கைத்தறி, கைத்தொழில், ஜவுளி மற்றும் காதி துறை செயலாளர்

16. விபுநாயர் - ஆவின் நிர்வாக இயக்குனர்

17. எஸ்.கருத்தையா பாண்டியன் - நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர்

18. ஏ.எஸ்.ஜீவரத்தினம் - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை செயலாளர்

19. ஜி.சந்தானம் - பிற்படுத்தப்பட்டோர், மிகவும்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை யினர் நலத்துறை செயலாளர்

20. டாக்டர் சந்தோஷ்பாபு - தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர்

21. சிவ்தாஸ் மீனா - சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை செயலாளர்

22. சுனில் பாலிவால் - வணிக வரிகள் மற்றும் பதிவுத்துறை செயலாளர்

23. ககன்தீப்சிங் பேடி - கால்நடை, பால்வளம், மீன்வளத் துறை செயலாளர்

24. எம்.சாய்குமார் - பொதுப்பணித் துறை செயலாளர்

25. டி.கே.ராமச்சந்திரன் - நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை செயலாளர்

26. சி.பி.சிங் - தொல்லியல் துறை கமிஷனர்

27. கே.ஞானதேசிகன் - வருவாய் நிர்வாக ஆணையர்

28. கே.தீனபந்து - மறுவாழ்வுத் துறை கமிஷனர்

29. அசோக் டோங்ரே - சமூக பாதுகாப்புத் துறை இயக்குனர்

30. வெ.இறையன்பு - பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் (பயிற்சி) துறை செயலாளர்

31. எஸ்.எஸ்.ஜவஹர் - அருங்காட்சியகங்கள் கமிஷனர்

32. எஸ்.கே.பிரபாகர் - வருவாய் நிர்வாகத் துறையின் சுனாமி (நிவாரணம் மற்றும் மறுவாழ்வு) பிரிவு சிறப்பு அதிகாரி

33. கே.ரகுபதி - ஊரக வளர்ச்சி (பயிற்சி) துறை இயக்குனர்

34. பி.ஆர்.சம்பத் - மாற்றுத்திறனாளிகள் துறை மாநில கமிஷனர்

35. சூசன் மேத்யூ - டிட்கோ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்

36. பி.டபிள்ï.சி.டேவிதார் -தமிழ்நாடு உப்பு கழக மேலாண்மை இயக்குனர்

37. அதுல் ஆனந்த் - எல்காட் நிர்வாக இயக்குனர். மின் ஆளுமை இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாகவும் பணியாற்றுவார்

38. சுவரன்சிங் -தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர். மின் உற்பத்தி மற்றும் விநியோக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராகவும், தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தின் தலைவராகவும் பணியாற்றுவார்.

39. சி.வி.சங்கர் - தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குனர்

40. வி.கே.சுப்புராஜ் - அறிவியல் நகரத்தின் துணைத் தலைவர்

41. கே.கணேசன் - தமிழ்நாடு நகர்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் (டுபிட்கோ) நிர்வாக இயக்குனர்

42. கே.அலாவுதீன் - தமிழ்நாடு சிறுதொழில்கள் கழகத்தின் (டான்சி) நிர்வாக இயக்குனர்

43. எம்.முத்தையா கலைவாணன் - இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை கமிஷனர்

44. டி.என்.ராமநாதன் - தமிழ் வளர்ச்சி, இந்து சமய அறநிலையத்துறை, செய்தித் துறை செயலாளர்

45. ஹிதேஷ்குமார் எஸ்.மக்வானா - `மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கமிஷனர்

46. டி.விவேகானந்தன் - டாஸ்மாக் நிர்வாக இயக்குனர்

47. ஆர்.சுடலைக்கண்ணன் - தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரிய மேலாண்மை இயக்குனர்.

திமுக அமைதி காப்பது ஏன் ?


ராசா கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தபோது பெரிய அளவில் எதிர்ப்பு காட்டாமல், கனிமொழி கைதுக்காக மட்டும் பெரும் அமளி துமளியில் இறங்கினால் கட்சியின் பெயர் மேலும் கெட்டு விடும் என்பதாலும், காங்கிரஸ் மேலும் அதிருப்தியாகி, கனிமொழியை அதிக நாட்கள் சிறையில் வைக்க நேரிட்டு விடும் என்பதாலும்தான் திமுக அமைதி காப்பதாக கூறப்படுகிறது.

திமுக எம்.பி. கனிமொழியை 2 ஜி ஸ்பெக்ரம் வழக்கில் சிஐ கைது செய்த சம்பவம் குறித்து திமுக மவுனம் சாதித்து வருகின்றது. திமுக தலைவர் கருணாநிதியிடம் இந்த விவகாரம் குறித்துக் கேட்டபோது பட்டும் படாமலும்தான் பதிலளித்தார்.

2ஜி வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த 2வது குற்றப்பத்திரிகையில் கூட்டு சதியாளர் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த தி.மு.க. எம்.பி -யும், திமுக தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி ‌நேற்று டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனால் தமிழகம் முழுக்க திமுகவினர் சாலை மறியல், போரட்டம், ஆர்பாட்டம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ராசா கைது செய்யப்பட்டபோது கூட பெரம்பலூரில் திமுகவினர் சிலர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

ஆனால், தமிழகத்தில் தற்போது, அதிமுக ஆட்சி நடைபெறுவதால் , போராட்டத்தில் ஈடுபட்டால், போலீசார் கைது செய்து சிறையில் வைத்து விடுவார்கல் என்ற காரணத்தால் திமுகவினர் அமைதி காப்பதாக கூறப்படுகிறது.

மேலும் ராசா கைதின்போது திமுக தரப்பில் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இப்போது கனிமொழிக்காக பெரும் பிரச்சினையைக் கிளப்பினால் அது கட்சிக்கு மேலும் கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பதால் திமுக தரப்பு அமைதி காப்பதாகவும் தெரிகிறது.

அதேசமயம், காங்கிரஸ் கட்சியுடனான உறவை முறிப்பதாக இப்போது அறிவித்து விட்டால் அது கனிமொழிக்கு மேலும் பாதகமாகி விடும் என்பதாலும் திமுக தரப்பு அமைதி காப்பதாக கூறப்படுகிறது.

அதேசமயம், இப்போது திமுகவிடம் ஆட்சிப் பொறுப்பு இருந்திருந்தால் பெரும் பிரச்சினையாக்கி, காங்கிரஸுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்திருப்போம் என்றும் திமுகவினர் தரப்பில் பேசப்படுகிறது.

ஆனால் தற்போது ஆட்சி மாறி, காட்சியும் மாறி விட்டது. காங்கிரஸும் இப்போது திமுக மீது பாசமாக இருப்பதாக தெரியவில்லை. இந்த நிலையில் எதுவும் செய்ய முடியாத நிலையில் தாங்கள் இருப்பதாக திமுகவினர் சோகத்துடன் கூறுகின்றனர்.

அதேசமயம், காங்கிரஸ் கட்சியை ஆரம்பத்திலிருந்தே தட்டி வைத்திருந்தால் இந்த நிலையே வந்திருக்காது என்றும் தீவிர திமுக அனுதாபிகள் கவலையுடன் கூறுகின்றனர். காங்கிரஸ் கட்சியினரால்தான் தங்களுக்கு இந்த இக்கட்டான நிலை ஏற்பட்டது. திமுகவை வசமாக மாட்ட வைத்து அதில் அவர்கள் குளிர் காய்கிறார்கள் என்பது இவர்களின் கருத்தாகும்.

கோர்ட்டில் கண்கலங்கிய கனிமொழி.கனிமொழிக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதி.

கனிமொழி எம்.பி.யின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த டெல்லி சி.பி.ஐ. தனி கோர்ட்டு நீதிபதி ஓ.பி.சைனி, அதற்கான காரணங்களை 144 பக்க உத்தரவில் விளக்கி கூறி இருந்தார்.

முடிவில், இந்த வழக்கு விசாரணையின்போது கோர்ட்டில் கனிமொழி கண்ணியமாக நடந்து கொண்டதற்கு தனது சிறப்பு பாராட்டை தெரிவித்துக்கொண்டார்.

பெண் என்பதற்காக ஜாமீன் மனுவில் சலுகை காட்ட முடியாது என்று கூறியபின், இந்த பாராட்டை நீதிபதி தெரிவித்தார்.

கனிமொழியின் கண்ணியமிக்க நடத்தைக்காக அவருக்கு சில சலுகைகளை வழங்க விரும்புவதாகவும் அப்போது நீதிபதி சைனி குறிப்பிட்டார்.


கோர்ட்டில் கண்கலங்கிய கனிமொழி.


டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் கனிமொழிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதும், கண்கலங்கிய கனிமொழி, தனது உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு அமைதியுடன் இருந்தார். அருகில் இருந்த அவருடைய கணவர் அரவிந்தன், கனிமொழிக்கு ஆறுதல் கூறினார்.

உடன் இருந்த கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாள் அதிர்ச்சி அடைந்தார். பெண் காவலர்கள் கனிமொழியை வெளியே அழைத்துச் சென்றபோது துயரம் தாங்காமல் அவருடைய கண்கள் பனித்தன.


திகார் சிறையில் கனிமொழிக்கு டெலிவிஷன் வசதி.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஜாமீன் மறுக்கப்பட்ட கனிமொழி எம்.பி., நேற்று மாலை டெல்லியில் உள்ள திகார் ஜெயிலில் (6-ம் எண் ஜெயில்) அடைக்கப்பட்டார்.

கனிமொழி அடைக்கப்பட்டு இருக்கும் 15-க்கு 10 அடி உள்ள அறையில் டெலிவிஷன், பத்திரிகைகள், மின்விசிறி, கட்டில் போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கனிமொழி அடைக்கப்பட்டு இருக்கும் 6-ம் எண் ஜெயிலில், பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து உளவு பார்த்ததாக கைதான மாதுரி குப்தா, டெல்லி கவுன்சிலர் ஒருவரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சாரதா ஜெயின் போன்ற பெண்கள் அடைக்கப்பட்டு உள்ளனர்.

கனிமொழியுடன் கைதான கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சரத்குமார் 4-ம் எண் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

ஊழல் வழக்கில் கைதான காமன்வெல்த் விளையாட்டு போட்டி அமைப்பு குழு தலைவர் சுரேஷ்கல்மாடி, `நால்கோ' நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி அபய்குமார் ஸ்ரீவத்சா ஆகியோர் அந்த ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.