Friday, December 16, 2011

“ஆன் லைன்” மூலம் வேலைவாய்ப்பிற்க்கு பதிவு செய்த 1 லட்சம் பெயர்கள் மாயம்.

வெப்சைட் மூலம் வேலைக்கு பதிவு செய்த 1 லட்சம் பெயர்கள் மாயம்: லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணையில் தகவல்

கடந்த 5 ஆண்டு காலத்தில், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வேலை வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் செல்லமுத்து மற்றும் டி.என்.பி.சி. உறுப்பினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். பின்னர் வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரிகள் மற்றும் புரோக்கர்கள் உள்பட 42 பேருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் பல முக்கிய ஆவணங்கள், ரொக்கப்பணம், லாக்கரில் இருந்த நகைகள், சிபாரிசு கடிதங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டன.

வேலை வழங்குவதில் நடந்த முறைகேடு தொடர்பான ஆவணங்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பல புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தற்போது “ஆன் லைன்” மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த 1 லட்சம் பெயர்கள் மாயம் ஆன தகவல் தெரியவந்துள்ளது. 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இணையதளம் மூலம் தமிழ்நாடு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள், தொழிற்கல்வி பட்டதாரிகள் பதிவு செய்தனர். ஆனால் இந்த பெயர்கள் பதிவு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் மாயமாகி உள்ளன.

சமீபத்தில் கால்நடை மருத்துவர்கள் 853 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியானது. இதில் 4 ஆயிரம் பேருக்கு பணியிட தேர்வுக்கான அழைப்பு கடிதம் தேர்வாணையம் மூலம் அனுப்பப்பட்டது. இதில் 1600 பேர் மட்டுமே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. பலருக்கு அழைப்பு கடிதம் கிடைக்கவில்லை என்பதும் தெரியவந்தது.

“ஆன்லைன்” மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பலர் தங்கள் பெயர் பதிவாகவில்லை என்று தெரிவித்துள்ளனர். 2011 மே முதல் டிசம்பர் வரை சென்னையில் 74 ஆயிரத்து 462 பட்டதாரிகள் புதிதாக பதிவு செய்துள்ளனர். 43 ஆயிரத்து 142 பேர் பெயரை புதுப்பித்து இருக்கிறார்கள். முன்னுரிமை அடிப்படையில் 932 பேர் வேலைக்காக பதிவு செய்து உள்ளனர். இந்த பெயர்கள் ஏதுவும் வேலை வாய்ப்பு அலுவலக ஆவணங்களில் பதிவாகவில்லை.

1 லட்சத்துக்கும் அதிகமான இந்த பெயர்கள் மாயமாகி இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும் போது, “இணையதளத்தில் பெயர் பதிவு செய்வது இன்னும் முழுமை அடையவில்லை. விரைவில் இந்த குறைபாடு சரிசெய்யப்படும்” என்று கூறினார்.

முல்லைப் பெரியாறு அணை பற்றிய கேள்வி ! - நிருபரின் காலில் விழுந்தார் மலையாள நடிகர் ஜெயராம் ! (வீடியோ)



சபரிமலை கோவிலுக்கு மலையாள நடிகர் ஜெயராம் சென்றிருந்தார்.

தமிழக - கேரள எல்லையில் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக பதட்டம் நிலவி வரும் நேரத்தில், இதுகுறித்து ஜெயராமிடம் கேரள தொலைக்காட்சி நிரூபர் ஒருவர், முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து கருத்து கேட்டபோது,

''ஐயோ ஆளவிடுங்கப்பா சாமி'' என்று அந்த நிருபரின் காலில் விழுந்தார்.

நடிகர் ஜெயராம் இவ்வாறு நடந்துகொண்டது ஏன்?

கடந்த வருடம் நடிகர் ஜெயராம் நடித்த 'ஹேப்பி ஹஸ்பெண்ட்ஸ்' என்ற மலையாள படம் வெளியானது. இ‌ந்த பட‌‌த்‌தி‌ல் வீட்டு வேலைக்காரப் பெண்ணை ''சை‌ட்'' அடிப்பது போல் காட்சிகள் உள்ளன.

இந்த படம் தொடர்பான பேட்டி ஏசியா நெட் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதில், 'டாக் ஷோ'வில் பங்கேற்ற ஜெயராமிடம், இது பற்றி குறிப்பிட்டு நிஜ வாழ்க்கையில் நீங்கள் வேலைக்காரியை சைட் அடித்து இருக்கிறீர்களா? என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்டார்.

அதற்கு பதில் அளித்து ஜெயராம் கூறும்போது, என் வீட்டு வேலைக்காரி கறுத்து தடித்த தமிழச்சி, போத்து (எருமை) மாதிரி இருப்பாள்; அதைப்போய் எப்படி சைட் அடிக்க முடியும்?" என்றார். இது அந்த தொலை‌க்கா‌ட்‌சி‌யி‌ல் ஒளிபரப்பானது.

த‌மி‌ழ் பெ‌ண்களை அவதூறாக பே‌சியதற்காக ஜெயரா‌மின் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீடு மற்றும் அவரது அலுவலகத்தின் மீது 25 பேர் கொண்ட குழுவினர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தமது பேச்சுக்காக ஜெயராம் மன்னிப்புக் கேட்டார். தமது தாய் தமிழ்ப் பெண் என்றும், தமது தாய் மொழி தமிழ் என்றும், தமிழ்ப் பெண்களை இழிவுப்படுத்துவது தமது தாயை இழிவுப்படுத்துவதற்கு சமமானது என்றும், நகைச்சுவையாகவே தாம் தொலைக்காட்சியில் அவ்வாறு கூறியதாகவும் அவர் மேலும் விளக்கம் அளித்திருந்தார்.

எதையாவது பேசிட்டு மன்னிப்பு கேட்டு காலில் விழுவதைவிட, பேசாமல் காலில் விழுவதே மேலானது என்று முடிவு எடுத்துவிட்டார் நடிகர் ஜெயராம்.