Saturday, April 16, 2011

சிங்கள ராணுவம் போர்க்குற்றம் புரிந்தது : ஐநா நிபுணர் குழு.


விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதலின்போது, இலங்கை ராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக ஐநா நிபுணர் குழு தனது அறிக்கையி்ல கூறியுள்ளது.

ஐநா பொதுச்செயலர் பான் கீ மூனிடம் சமர்ப்பிக்கப்பட்ட அந்த அறிக்கை இலங்கை அரசிடம் ஓரிரு நாட்களுக்கு முன்னர் அளிக்கப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ள விவரங்கள் இன்னும் பகிரங்கமாக வெளியிடப்படவில்லை.

எனினும், அந்த அறிக்கையின் சில தகவல்களை கொழும்புவைச் சேர்ந்த ஐலேண்ட் நாளிதழ் பிரசுரித்துள்ளதை மேற்கொள் காட்டி பிடிஐ செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்த வன்னிப் பகுதியில் உள்ள மருத்துவமனைகளை குறிவைத்து இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும், போருக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் சில தளபதிகளை ராணுவம் கொன்றதாகவும் ஐநா நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


ஜெகன்மோகன் ரெட்டி 500 கோடி சொத்து குவித்தது எப்படி?


ஆந்திர மாநில முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார். அவரது மறைவுக்கு பின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி தீவிர அரசியலில் குதித்தார்.

கடப்பா தொகுதி எம்.பி.யாக இருந்த அவர் காங்கிரசுக்கு எதிராக செயல்பட்டதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் ஜெகன்மோகன் ரெட்டி எம்.பி. பதவியை ராஜினாமா செய்து புதிய அரசியல் கட்சியை தொடங்கினார்.

கடப்பா தொகுதியில் நடைபெறும் இடைத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் அதில் ஜெகன் மோகன் ரெட்டி தனக்கு ரூ.500 கோடி சொத்து இருப்பதாக குறிப்பிட்டு உள்ளார். இதன் மூலம் அவர் இந்தியாவிலேயே பெரிய பணக்கார அரசியல்வாதியாக திகழ்கிறார்.

மேலும் ஜெகன்மோகன் ரெட்டி 2004-ல் முதன் முதலில் கடப்பா தொகுதியில் போட்டியிட்டபோது ரூ.1.77 கோடியும், அடுத்து 2009-ல் ரூ.7.39 கோடியும் சொத்து இருந்ததாக குறிப்பிட்டு இருந்தார்.

தற்போது ரூ.500 கோடி சொத்து இருப்பதாக ஜெகன்மோகன் ரெட்டி கூறியிருப்பதால் இடையில் இவ்வளவு சொத்து எப்படி வந்தது என்று ஆந்திர அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பி பிரச்சாரம் செய்து வருகின்றன.

இது குறித்து ஹைதராபாத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்த கேள்வியை எழுப்பிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் துள்சி ரெட்டி, இவ்வளவு குறுகிய காலத்தில் ஜெகன் எப்படி இந்த அளவு சொத்து எப்படி சேர்த்தார் என்று ஒட்டு மொத்த மாநில மக்களும் அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறினார்


இலங்கை மீன்களை அணுக்கதிர் தாக்கியதாக பீதி.


ஜப்பானில் கடந்த மாதம் 11-ந்தேதி 8.9 ரிக்டர் அளவுக்கு கடலில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இதனால் சுனாமி பேரலைகள் உருவாகி ஜப்பானின் வடகிழக்கு பகுதியை அடியோடு நாசம் செய்தது.

சுனாமி அரக்கன் தாக்கியதில் புகுஷிமா உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த 4 அணுமின் நிலையங்கள் சிதைந்து போயின. அங்கு மிகவும் பாதுகாப்புடன் அமைக்கப்பட்டிருந்த 4 அணு உலைகள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின.

இதில் இருந்து மின்னல் வேகத்தில் வெளியேறிய அணுக்கதிர் வீச்சால் ஏராளமானோர் உயிரிழந்தனர். அணுக்கதிர் வீச்சு காரணமாக அப்பகுதிகளை சுற்றி வசித்த லட்சக்கணக்கான மக்கள் வேறு பகுதிகளில் குடிய மர்த்தப்பட்டனர்.

ஜப்பானில் வெளியேறிய அணுக்கதிர் வீச்சு கொரியா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளுக்கும் பரவியது. அணுக்கதிர் வீச்சு தாக்கிய மீன் உள்ளிட்ட பொருட்களை உண்ண பல்வேறு நாடுகள் தடைவிதித்துள்ளன.

இந்த நிலையில் சில அணு கழிவுகளை ஜப்பான் கடலில் கொட்டியது. இதனால் இலங்கையின் கிழக்கு கடல் பகுதியில் உள்ள மீன்களை அணுக் கதிர் தாக்கி இருக்குமோ என்ற பீதி பரவியது. இதையடுத்து இலங்கை அரசு கிழக்கு கடல் பகுதியில் அணுக்கதிர் தாக்கி இருக்கிறதா? என்பது பற்றி ஆய்வு நடத்த உத்தரவிட்டது.

இதையடுத்து அணுசக்தி விஞ்ஞானிகள் அங்குள்ள கிழக்கு மாகாணம் முதல் தென்மாகாணம் வரையான பல்வேறு பகுதிகளில் கடல்நீர் மாதிரி எடுக்கப்பட்டன. கடற்படையினர் இலங்கை கடலோர பகுதிகளுக்கு சென்று கடல்நீர் மாதிரி எடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இலங்கை கடல் மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளும் கடல் மாதிரிகளை சேகரித்தனர். இந்த கடல்நீரை இலங்கை அணுசக்தி விஞ்ஞானிகள் பரிசோதனை செய்து அதில் அணுக்கதிர் உள்ளனவா? என்பது பற்றி பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இப்பரிசோதனைக்குப் பிறகு தான் மீன்களை அணுக்கதிர் தாக்கி இருக்கிறதா? என்பதற்கு விடை தெரியும். அணு உலைகளால் மனித உயிருக்கு பேராபத்து இருப்பதால் உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மனிதர்கள் வசிக்காத பகுதிகளில் அணு உலைகளை அமைக்க கோரி சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள், மனித உரிமை பாதுகாப்பு அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.


தலை இல்லாமல் தமிழக மீனவர் பிணம் தரை ஒதுங்கியது.


ராமநாதபுரம் மீனவர்கள் கட்ந்த 2ம் தேதி மீன் பிடிக்க சென்றபோது என்ன நடந்தது என்று தெரியாமல் இருந்தது. அவர்கள் கரை திரும்பவில்லை. மற்ற மீனவர்கள் தேடி வந்த நிலையில் கை,கால் இல்லாமல் மூன்று உடல்கள் இதுவரை கரை ஒதுங்கியுள்ளது.

மாரிமுத்து என்பவரின் உடல் மட்டும் காணவில்லை என்று பரிதவித்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் இன்று மாலை புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள புதுக்குடி ஓடாய்மடம் கடலோரத்தில் தலை இல்லாதல் அழுகிய நிலையில் ஆண் பிணம் கரை ஒதுங்கியுள்ளது. இது மாரிமுத்து உடல்தான் என்று ராமநாதபுரம் மீனவர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

மீனவ சங்க பிரமுகர் அருளானந்த இது குறித்து, ‘சில நாட்களுக்கு முன்பு இலங்கையில் தலை இல்லாமல் கால் இல்லாமல் கை இல்லாமல் பிணங்கள் இருப்பதாக தகவல்கள் வந்தன. அவைதான் இப்போதும் கரை ஒதுங்கியிருப்பதால், இலங்கையில் இருந்தது இந்த பிணங்கள்தான் என்று உறுதியாகிறது.

வயிற்று பிழைப்புக்காக கடலுக்கு மீன் பிடிக்கச்செல்கிறோம். ஆனால் சிங்கள கடற்படை தமிழக மீனவர்களை அடிக்கடி கொன்று குவிக்கிறது. இது வரை கொல்லப்பட்ட மீனவர்கள் எந்த ஒரு குற்றச்செயல்களிகும் ஈடுபட்டவர்கள் என்று இலங்கை கடற்படையால் சொல்ல முடியவில்லை.

சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர்களின் படகுகளில் இருந்து கடத்தல் பொருட்களோ, அல்லது வெடிபொருட்களோ இதுவரை சிங்கள கடற்படை எடுத்தது இல்லை. ஆனால் மனிதாபிமானம் அற்ற முறையில் இப்படி தமிழக மீனவர்களை கொல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். எத்தனை போராட்டம் நடத்தியும் தேசம் எங்களை கண்டுகொள்ளவில்லை.

இந்திய அரசு எங்கள் மீது இரக்கம் காட்டினால் மட்டுமே தமிழக மீனவர்கள் காக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.


2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் : பொதுக்கணக்குக் குழு கூட்டத்தில் மோதல்.





ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு (பிஏசி) கூட்டத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே வெள்ளிக்கிழமை கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் மூத்த அதிகாரிகளிடம் விசாரணை நடத்தும் பணி முடங்கியது.

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்தக் குழுவுக்கு போதிய அதிகாரம் இல்லை என்று எதிர்க்கட்சிகள் கூறியதையடுத்து, நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டு அந்தக் குழுவும் இணையாக விசாரணை நடத்தி வருகிறது.

வரும் 30-ம் தேதியுடன் இப்போதைய பிஏசியின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதனால் விரைவாக விசாரணையை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்பதில் முரளி மனோகர் ஜோஷி ஆர்வமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்புடைய பலரை இந்தக் குழு விசாரித்திருக்கிறது. அமைச்சரவைச் செயலர் கே.எம்.சந்திரசேகர், அட்டர்னி ஜெனரல் குலாம் வாஹன்வதி, சிபிஐ இயக்குநர் ஏ.பி. சிங், பிரதமரின் முதன்மைச் செயலர் டி.கே.ஏ. நாயர் ஆகியோரை வெள்ளிக்கிழமை விசாரிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த பிஏசி கூட்டத்தில் எதிர்க்கட்சி மற்றும்ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும்போது அதுபற்றி பிஏசி விசாரணை நடத்துவது அவசியமா என திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜோஷியிடம் கேள்வி எழுப்பினர்.

இந்தக் கூட்டத்தில் ஆளும் தரப்பில் காங்கிரஸ் கட்சியின் கே.எஸ்.ராவ், நவீன் ஜிண்டால், அருண் குமார், சைபுதீன் சோஸ், திமுகவின் திருச்சி சிவா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் மேலும் சாட்சிகளை விசாரணைக்கு அழைக்கக்கூடாது என்று கே.எஸ்.ராவ் வலியுறுத்தினார். அண்மையில் விசாரணைக்கு ஆஜரான ரிலையன்ஸ் நிறுவனத்தின் அனில் அம்பானி, நீதிமன்ற விசாரணையைக் காரணம் காட்டி அனைத்து விவரங்களையும் கூற முடியாது எனத் தெரிவித்ததையும் ராவ் சுட்டிக் காட்டினார்.

இதற்குப் பதிலளித்த ஜோஷி, "யாரையும் சாட்சியம் அளிக்குமாறு கட்டாயப் படுத்தவில்லை. இந்தத் தகவல்களை பொதுவில் வெளியிடப் போவதும் இல்லை. இதுவரை குற்றஞ்சாட்டப் பட்டவர்கள் யாரையும் அழைத்து விசாரிக்கவும் இல்லை' என்றார்.

3 மணி நேரம் தொடர்ந்த இந்தக் கூட்டத்தில் பல தருணங்களில் காரசாரமான வாக்குவாதம் நடந்தது. நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இதுபோன்ற வாக்குவாதங்கள் நடைபெற்றது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.

இதனால், அதிகாரிகளிடம் விசாரணை நடத்தும் பணி சனிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. கூட்டத்தில் நடந்த மோதலையடுத்து, திட்டமிடப்பட்டிருந்த செய்தியாளர் கூட்டத்துக்கு முரளி மனோகர் ஜோஷி வரவில்லை.

செய்தியாளர்கள் கூட்டம் இப்போது தேவையில்லை என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக மட்டும் அவர் தெரிவித்தார்.

விசாரணைக்கும் மேலும் சிலரை அழைப்பதா, வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்வதற்கு வரும் 21-ம் தேதி பிஏசி மீண்டும் கூடும் எனவும் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

வாஹன்வதி சொலிசிட்டர் ஜெனரலாக இருந்தபோது ஸ்வான் டெலிகாம் நிறுவனம் தொடர்பாக தொலைத் தொடர்புத் துறைக்கு தெரிவித்த கருத்து குறித்து பிஏசி விசாரிப்பதைத் தடுக்க வேண்டும் என்பதே ஆளுந்தரப்பு உறுப்பினர்களின் நோக்கமாக இருந்தது என தாங்கள் சந்தேகிப்பதாக எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், தாங்கள் நியாயமான ஆட்சேபங்களையே தெரிவித்ததாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

22 உறுப்பினர்களைக் கொண்ட இப்போதைய குழுவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 பேரும், பாஜகவின் 4 பேரும், அதிமுக, திமுக சார்பில் தலா இருவரும், சிவசேனை, பிஜு ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், சமாஜவாதி, பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலா ஒருவரும் இடம்பெற்றிருக்கின்றனர். ஒரு இடம் காலியாக இருக்கிறது.


இலங்கை வீரர்களை திருப்பி அழைப்பது நியாயமற்றது: முரளிதரன்.

இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் இலங்கை வீரர்களை மே 20-ம் தேதி நாடு திரும்புமாறு இலங்கை கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டிருக்கிறது.

இந்த உத்தரவு நியாயமற்றது என்று பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கூறி்யுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர், வீரர்களை திடீரென உடனடியாக திரும்பி வருமாறு அழைத்திருப்பது நியாயமற்ற செயல்.

இத்தகைய அறிவிப்பு இந்தியா-இலங்கை இடையேயான கிரிக்கெட் உறவை பாதிக்கும்.

இதனால் இலங்கை அணிக்கு பல்வேறு வழிகளில் நஷ்டம் வரலாம்.

எனவே, இப்பிரச்னையை மிகவும் கவனமுடன் அணுக வேண்டும்’’என்றும் கூறியுள்ளதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரிசர்வ் வங்கி கணிப்பை மீறி எகிறியது பணவீக்கம்!!


மார்ச் 31-ம் தேதிக்குள் பணவீக்கம் 7-8 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்டுவிடும் என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்த நிலையில், இப்போது கைமீறிப் போயுள்ளது பணவீக்கம்.

கடந்த பிப்ரவரியில் 8.31 சதவீதமாக இருந்த பணவீக்கம், ஒரு மாதத்தில் 8.99 சதவீதமாக உயர்ந்துவிட்டது. இது உணவுப் பணவீக்கம் அல்ல, மொத்த விலைக் குறியீட்டெண் அடிப்படையில் கணக்கிடப்படும் பொதுப் பணவீக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

பணவீக்கத்தைக் குறைப்பதற்காக பல்வேறு வட்டிவீதங்களைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி உயர்த்தி வந்த போதும், அதற்கு உரிய பலன் கிடைக்கவில்லை என்பதைக் காட்டுவதாகவே இப்போதைய நிலைமை உள்ளது.

உணவுப் பணவீக்கம் மட்டுமே ஓரளவு குறைந்து 8.28 சதவீதத்துக்கு வந்துள்ளது. ஆனாலும் உணவுப் பொருட்கள், பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் போன்ற அனைத்துப் பொருள்களின் விலையும் உயர்வடைந்துள்ளது.

இன்டர்நெட்டில் சகோதரியின் ஆபாச படத்தை வெளியிட்ட தங்கை.

இன்டர்நெட்டில் தனது சகோதரியின் ஆபாச படத்தையும் அவர் குறித்து தவறான தகவல்களையும் வெளியிட்ட தங்கை கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தைச் சேர்ந்தவர் ஜான்சிராணி (26). இவர் சென்னை மைலாப்பூரில் வசித்து வந்தார். இவருக்கும், இவரது அக்காவான சமந்தாவுக்கும் (35) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இடையே சொத்து தகராறு இருந்து வந்தது.

இந் நிலையில் தனது அக்காவின் படத்தை கிராபிக்ஸ் மூலம் ஆபாச படமாக்கி அதை இன்டர்நெட்டில் ஒரு ஆபாச இணையத் தளத்தில் கடந்த 2009ம் ஆண்டு வெளியிட்டார். மேலும் அவர் குறித்து அதில் மோசமான விவரங்களும் இருந்தன.

இது குறித்து அஞ்சுகிராமம் போலீசில் சமந்தா புகார் செய்தார்.

ஆனால் ஓராண்டாகியும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து சமந்தா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதன் பிறகு சைபர் கிரைம் போலீசார் வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது.

விசாரணையில் மைலாப்பூரில் வசித்து வந்த ஜான்சி ராணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரித்தபோது உண்மையை ஒப்புக் கொண்டார். சொத்து தகராறில் அக்காள் மீதுள்ள கோபத்தில் இப்படி செய்ததாகத் தெரிவித்தார்.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜான்சி ராணி சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கும் சமந்தாவுக்கும் இடையே ஏற்பட்ட சொத்து தகராறு தொடர்பாக அஞ்சுகிராமம் போலீசிலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாணவி உடலில் மார்பகங்கள் அறுப்பு.

பல்லடம் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் இருந்த பள்ளி மாணவியின் உடலி்ல் மார்பகங்கள் அறுக்கப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் அருகே பூலுவப்பட்டியை சேர்ந்த கட்டடத் தொழிலாளி ஆறுமுகம் (55). இவரது மகள் மீனாட்சி (18) குன்னத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1 படித்து வந்தார்.

பள்ளி விடுமுறையை கொண்டாட, பல்லடம் மேட்டுக்கடையில் உள்ள தன் அக்கா ப்ரியா வீட்டுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை சென்றுள்ளார்.

நேற்று முன்தினம் அருகில் உள்ள தோட்டத்தில் பூப்பறிக்கச் சென்ற மீனாட்சி ஒரு மணி நேரத்துக்கு மேலாகியும் வீடு திரும்பாததால், உறவினர்கள் அக்கம் பக்கம் தேடினர். ஆனால், மாலை 4 மணி அளவில் அங்குள்ள கிணற்றில் மீனாட்சி பிணமாக மிதப்பதை உறவினர்கள் கண்டுபிடித்தனர்.

தீயணைப்பு துறையினர் உதவியோடு மீனாட்சி பிரேதத்தை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பிரேத பரிசோதனைக்காக சவக் கிடங்கில் உடல் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், நேற்று காலை பிரேத பரிசோதனை செய்ய டாக்டர் மற்றும் ஊழியர்கள் வந்தனர். அப்போது மீனாட்சியின் இரு மார்பகங்களும் கூர்மையான ஆயுதத்தால் அறுக்கப்பட்டிருந்தன. மேலும் அவை மாயமாகியிருந்தன.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் மருத்துவமனை அதிகாரிகளுக்கு தகவல் தந்கனர்.

இது குறித்து தகவலறிந்த மீனாட்சியின் உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர், பல்லடம் அரசு மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த பல்லடம் டி.எஸ்.பி. தங்கதுரை குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியததை அடுத்து சாலை மறியலை கைவிட்டனர்.

இதனையடுத்து, மீனாட்சியின் பிரேதம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவுப் பணியில் இருந்த பல்லடம் மருத்துவமனை டாக்டர்கள், சவக் கிடங்கு ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி மாணவிக்கு நேரந்த இந்த கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

thatstamil - news.



அரசு பணிகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு செய்ய தடை இல்லை.

அரசு பணிகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு    செய்ய தடை இல்லை;    தலைமை தேர்தல் கமிஷனர் தகவல்

தேர்தல் முடிவு வெளியாக ஒரு மாதம் உள்ளது எனவே அரசு பணிகளை நிறைவேற்ற தேர்தல் ஆணையம் அனுமதிப்பது குறித்து தீர்வு காண வேண்டும் என்று முதல்- அமைச்சர் கருணாநிதி கூறி இருந்தார். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

இன்று சில வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு முடிந்த பிறகு, அமைச்சர்கள் அரசு பணி தொடர்பாக ஆய்வு கூட்டம் நடத்தலாம். அரசு பணிகள் குறித்து ஆய்வு செய்யலாம். தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள மாவட்ட கலெக்டர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் இந்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது.

புதிய திட்டங்களை நடை முறைப்படுத்த முடியாது. என்றாலும் அவசர நடவடிக்கைகளை எடுப்பதற்கான அனுமதி வழங்குவது குறித்து தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கும். இதுகுறித்து ஓரிரு நாளில் முடிவு செய்து அறிவிக்கப்படும். தேர்தல் விதி மீறல் தொடர்பாக 62 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் கணக்குகளை வேட்பாளர்கள் ஜூன் மாதம் 30-ந் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு பிரவீண்குமார் கூறினார்.


ஸ்பெக்ட்ரம் ஊழல்; மேலும் 5 அதிகாரிகள் கைது ஆகிறார்கள்.

ஸ்பெக்ட்ரம் ஊழல்;   மேலும் 5 அதிகாரிகள்    கைது ஆகிறார்கள்;   கோர்ட்டில் சி.பி.ஐ. மனு

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ. கடந்த 2-ந்தேதி முதலாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இதில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, அவரது உதவியாளர் சந்தோலியா, டி.பி. ரியாலிட்டி நிறுவனத் தலைவர் பல்வா, தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா, ஸ்வான் டெலிகாம் இயக்குனர் வினோத் கோயங்கா, யுனிடெக் வயர்லஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த கவுதம் தோஷி, சுரேந்திர பிபாரா, அரிநாயர் ஆகிய 9 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த 9 பேர் மீதும் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. அதுபோல ரிலையன்ஸ் டெலிகாம், ஸ்வான் டெலிகாம், யுனிடெக் டெலிகாம் ஆகிய 3 தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ள 9 பேரில் ஆ. ராசா, பல்வா, சித்தார்த் பெகுரா, சந்தோலியா ஆகிய 4 பேர் மட்டுமே கைது செய் யப்பட்டு டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். மற்ற 5 பேரும் இது வரை கைது ஆகவில்லை. இவர்கள் 5 பேரையும் கைது செய்ய சி.பி.ஐ. நடவடிக்கை எடுத்தது.

இதற்கிடையே தாங்கள் கைது செய்யப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு 5 அதிகாரிகளும் டெல்லி ஐகோர்ட்டில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். நேற்று இந்த வழக்கு விசாரணை நடந்தது. அப்போது 5 அதிகாரிகளுக்கும் முன் ஜாமீன் அளிக்கக்கூடாது என்று சி.பி.ஐ. மனு தாக்கல் செய்தது.

5 அதிகாரிகளும் சாட்சிகளை மிரட்டவும், தலைமறைவாகி விடவும் வாய்ப்புள்ளது. எனவே 5 பேருக்கும் முன் ஜாமீன் கொடுக்கக்கூடாது என்று சி.பி.ஐ. மனுவில் கூறப்பட்டிருந்தது. 5 அதிகாரிகளின் சார்பில் ஆஜரான வக்கீல்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

விசாரணையின்போது கைது செய்யப்படவில்லை என்பதால் இனி கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று வக்கீல்கள் கூறினார்கள். முன் ஜாமீன் பெறும் உரிமையை தடுக்கக்கூடாது என்றும் வக்கீல்கள் வாதிட்டனர். சுமார் 3 மணி நேரம் இந்த வழக்கு விசாரணை நடந்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சைனி, 5 அதிகாரிகளுக்கும் ஜாமீன் கொடுப்பது தொடர்பாக 20-ந்தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று கூறினார். வழக்கு நிலுவையில் உள்ள காரணத்தால் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் 5 அதிகாரிகளும் 20-ந்தேதி வரை கைது செய்யப்பட மாட்டார்கள்.

அதன் பிறகு அவர்களை சி.பி.ஐ. கைது செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 5 அதிகாரிகள் மீதும் மோசடி, ஆவணங்களை திருத்தி ஏமாற்றுதல், ஊழல் செய்தால், லஞ்சம் கொடுத்தல் உள்பட பல பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


கறுப்புப் பணம் பதுக்கியிருப்போர் பெயர்களை வெளியிட முடியாது - மத்திய அரசு.

வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணம் பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்களின் பெயர்களை வெளியிட முடியாது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

கறுப்புப் பணம் பதுக்கி வைத்திருப்போர் பற்றிய விவரங்கள் அனைத்தும் இரு நாடுகளுக்கு இடையேயான இரட்டை வரிவிதிப்பைத் தவிரிக்கும் ஒப்பந்தம் மூலமாகப் பெறப்பட்டிருப்பதாகவும், அதனால் பெயர்களை வெளியிடுவது இயலாத செயல் எனவும் மத்திய அரசு கூறியிருக்கிறது.

எனினும் ஜெர்மனியின் லீக்டென்ஸ்டைன் வங்கியில் பணத்தைப் பதுக்கியிருக்கும், இப்போது விசாரிக்கப்பட்டு வரும் 6 பேரின் பெயர்களை வெளியிட அரசு சம்மதித்திருக்கிறது.

வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப் பணத்தை மீட்க வேண்டும் என்று கோரி பிரபல வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையின்போது சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம் மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்தார்.

நீதிபதி சுதர்ஷன் ரெட்டி தலைமையிலான பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து வருகிறது. வெளிநாடுகளில் பணம் பதுக்கி வைத்திருப்போரின் பெயர்களை அரசு பெற்றிருக்கிறது. எனினும் அவர்கள் மீது விசாரணை தொடங்கப்படும்வரை அவர்களது பெயர்களை வெளியிட முடியாது என்று கோபால் சுப்பிரமணியம் அப்போது கூறினார்.

இந்தக் கருத்தால் திருப்தியடையாத நீதிபதிகள், கறுப்புப் பணம் பதுக்கி வைத்திருப்போரின் பெயர்களை வெளியிடுவதற்கு எந்தச் சட்டம் தடையாக இருக்கிறது என்பதை வழக்கு அடுத்தமுறை விசாரணைக்கு வரும்போது தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

ராம்ஜேத்மலானி தவிர, பஞ்சாப் மாநில முன்னாள் டி.ஜி.பி. கேபிஎஸ் கில், மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் காஷ்யப் ஆகியோரும் இந்த வழக்கில் மனுதாரர்களாவர்.

இதற்கு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கறுப்புப் பணம் பதுக்கி வைத்திருப்போரின் பெயர்களை அரசு பெற்றிருக்கிறது. எனினும் அவற்றை வெளியிடுவதில் அரசுக்கு விருப்பமில்லை என கோபால் சுப்பிரமணியம் கூறினார்.

இதனால் அதிருப்தியடைந்த நீதிபதிகள் அந்தப் பெயர்களை வெளியிடுவதில் அரசுக்கு என்ன சிரமம் இருக்கிறது என்று கேள்வி எழுப்பினர்.


அரசுப் பணிகள் நடைபெற முடியாமல் தடுக்கிறது. தேர்தல் ஆணையம் - கலைஞர் புகார்.

திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில்,

தேர்தல் நடந்த நாள் ஏப்ரல் 13. வாக்குகளை எண்ணப்படவுள்ள நாள் மே 13. வாக்குகள் எண்ணப்பட்டு வாக்கு எண்ணிக்கை முடிய ஒரு நாள் ஆகும்.

முடிவுகள் மே 14-ம் தேதிதான் தெரியும். ஆனால் இப்போதுள்ள சட்டப்பேரவைக் காலம் மே 16-ம் தேதி முடிவுற்று அடுத்த சட்டப்பேரவை மே 17-ம் தேதி தொடங்கப்பட வேண்டும். எனவே மே 17-ம் தேதிக்குள் தமிழகத்தில் ஒரு புதிய அமைச்சரவை உருவாகியாக வேண்டும்.

இடையில் இருக்கின்ற நாள்கள் மே 15, மே 16 ஆகிய இரண்டு நாள்கள் மட்டுமே. அதற்குள் இத்தனை பணிகளையும் முடிக்க முடியுமா? ஆனால் முடித்தாக வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணையம் இதையெல்லாம் எண்ணிப் பார்க்காமல் இருந்திருக்குமா என்றால் நிச்சயம் எண்ணிப் பார்த்திருக்கும். எண்ணிப் பார்த்துவிட்டுதான் இந்தத் தேர்தல் தேதிகளை அறிவித்திருக்கின்றது.

மே 17-ம் தேதி புதிய சட்டப்பேரவை கூட்டப்பட வேண்டும் என்றால் எதற்காக அவசர அவசரமாக ஏப்ரல் 13-ம் தேதியே தேர்தலை நடத்த வேண்டும்.

மேலும் சில நாள்கள் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் கால அவகாசம் கொடுத்து ஏப்ரல் மாதக் கடைசியிலோ அல்லது மே மாதத்தின் முதல் வாரத்திலோ அனைவரும் எதிர்பார்த்ததைப் போல தேர்தல் தேதியை அறிவித்திருக்கலாம் அல்லவா? இந்த கேள்விகளை நான் ஏற்கெனவே எழுப்பி உள்ளேன்.

இது ஒருபுறம் இருக்க, தமிழக மக்கள் அளித்த தீர்ப்புகள் மே 13-ம் தேதி வரை அறைகளிலே பத்திரமாகப் பூட்டி வைக்கப்பட்டு பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதுவரை அரசின் சார்பில் எந்தவிதமான முக்கிய முடிவுகளும் எடுக்கப்படமாட்டாது, எடுக்கப்பட கூடாது. திடீரென ஏதாவது ஒரு முக்கிய முடிவு, கொள்கை முடிவு எடுக்கப்பட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுவிட்டால் அப்போது என்ன செய்வது? தேர்தல் ஆணையத்துக்கே வெளிச்சம்!

அதிகாரிகளின் நிலை என்ன? திரிசங்கு சொர்க்கம் என்பார்களே அந்த நிலைதான்! இப்போதே பத்திரிகைகள் எல்லாம் தலைமைச் செயலகம் வெறிச்சோடி கிடப்பதாகவும் அதிகாரிகள் எல்லாம் குடும்பத்துடன் விடுமுறையில் செல்லவிருப்பதாகவும் செய்திகளை வெளியிட்டுள்ளன.

அது மாத்திரமல்ல, அரசு சார்பில் நாட்டில் நடைபெற்றாக வேண்டிய முக்கியமான பணிகள் எல்லாம் நிறைவேற்றப்பட வேண்டிய நேரம் இது. அந்தப் பணிகள் எல்லாம் முறையாக நடைபெற்றால் தான் ஜூன் மாதத்தில் தொடங்கவிருக்கும் தென்மேற்குப் பருவக்காற்று காலத்தின்போது வேளாண்மைப் பணிகளை ஒழுங்காகச் செய்திட முடியும். அதிகாரிகள் பராமரிப்புப் பணிகளை ஆய்வு கூட செய்யக் கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவுரை கூறியுள்ளதாம். அதனால் அடிப்படைப் பணிகளைக் கூட நிறைவேற்ற முடியாத நிலைமை உள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசும் அதன் அமைச்சர்களும் ஐந்தாண்டு காலத்துக்கு அதாவது மீண்டும் அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் வரை அவர்களது பொறுப்புகளை நிறைவேற்ற தகுதி படைத்தவர்கள்.

ஆனால் அவர்களின் பணிகளை நிறைவேற்ற முடியாமல் தடுப்பது எந்த வகையில் நியாயமோ? சட்டம் படித்தவர்களும் தேர்தல் ஆணையமும்தான் இதற்கெல்லாம் தீர்வு காண வேண்டும் என்று கூறியுள்ளார்.