Tuesday, July 12, 2011

மத்திய அமைச்சரவை மாற்றம் : புதிய அமைச்சர்களின் விவரம்.


மத்திய அமைச்சரவையில் புதிதாக சிலரை நியமிக்கவும், சிலரின் இலாகாக்களை மாற்றி அமைக்கவும் பிரதமர் மன்மோகன் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு பரிந்துரை செய்துள்ளார். புதிய அமைச்சர்கள் இன்று மாலை 5 மணிக்கு பதவியேற்றுக் கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சர்களின் விவரம் : கேபினட் அந்தஸ்து.

கிஷோர் சந்திர தேவ் - பழங்குடியினர் நலத்துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ்யம்.
பேனி பிரசாத் வர்மா - உருக்கு.
தினேஷ் திவிவேதி - ரயில்வே.
ஜெய்ராம் ரமேஷ் - ஊரக மேம்பாடு.

இணை அமைச்சர்கள் : தனி அதிகாரம்.

ஸ்ரீகாந்தி ஜேனா - புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை.
ஜெயந்தி நடராஜன் - சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள்.
ஸ்ரீபபான் சிங் கவ்டோவர் - வடகிழக்கு மேம்பாட்டுத் துறை.
குருதாஸ் காமத் - குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் துறை.

இணை அமைச்சர்கள்.

சுதிப் பந்தோபாத்யாயா - சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை.
சரண் தாஸ் மஹந்த் - வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை.
ஜிதேந்திர சிங் - உள்துறை.
மிலிந்த் தியோரா - தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம்.
ராஜிவ் சுக்லா - நாடாளுமன்ற விவகாரங்கள்.

அமைச்சர்கள் சிலருக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்த துறை மாற்றப்பட்டு புதிய இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்

கேபினட் அந்தஸ்து.

விலாஸ்ராவ் தேஷ்முக் - அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பூகோள அறிவியல்.
வீரப்ப மொய்லி - கம்பெனி விவகாரங்கள்.
ஆனந்த் சர்மா - தொழில், வணிகத்துறை; ஜவுளித்துறை கூடுதல் பொறுப்பு.
பவன் குமார் பன்சால் - நாடாளுமன்ற விவகாரங்கள்; நீர்வளத்துறை.
சல்மான் குர்ஷீத் - சட்டம் மற்றும் நீதித்துறை ;சிறுபான்மை விவகாரங்கள்.


இணை அமைச்சர்கள்.


இ.அகமது - வெளியுறவு மற்றும் மனிதவள மேம்பாடு.
வி.நாராயணசாமி - பணியாளர் நலன் மற்றும் ஓய்வூதியம்; பிரதமர் அலுவலகம்.
ஹரீஷ் ராவத் - வேளாண், உணவு படுத்துதல் துறை; நாடாளுமன்ற விவகாரம்.
முகுல் ராய் - ஷிப்பிங்.
அஷ்வனி குமார் - திட்டமிடல்; அறிவியல், தொழில்நுட்பம், பூகோள அறிவியல்.


அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டவர்கள்.

பி.கே.பண்டிக்
எம்.எஸ்.கில்
காந்திலால் புரியா
ஏ.சாய் பிரதாப்
அருண் யாதவ்

ராஜினாமா ஏற்பு.

தயாநிதி மாறன்,
முரளி தியோரா
ஆகியோரின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

மாணவர்கள் தேவை ! மத்திய அரசின், மாதிரி பள்ளி அறிவிப்பு !



அனைவருக்கும் கட்டாய கல்வி என்ற திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள பத்து பின் தங்கிய மாவட்டங்களில் உள்ள, 18 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள மிகவும் பின் தங்கிய கிராமங்களில் படிக்கும் மாணவர்களுக்கு, தரமான ஆங்கில கல்வியை கொடுகிறோம் என மத்திய அரசினால் தொடங்கப்பட்ட மாதிரி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு இந்த மாதம் 8ம் தேதி கடைசிநாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

கல்வியாலர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த இந்த பள்ளிகளில், நேற்று வரை மிக குறைவானவர்களே பள்ளியில் சேர விண்ணப்பம் செய்திருக்கிறார்கள். இதனால், பள்ளி தொடர்ந்து செயல்படுமா…? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள நகராட்சி பகுதிகளில் செயல்படும் மாநில அரசு பள்ளிகளில், ஆங்கிலவழி கல்வியும், தமிழ் வழிக்கல்வியும் கற்பிக்கப்படுகிறது. ஆனால், பேருராட்சி, மற்றும் கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் மட்டுமே கல்வி கற்பிக்கப்படுகிறது.

மாநிலங்களில் உள்ள கிராமப்புற மாணவர்களுக்கு ஆங்கில வழியில் கல்வி கற்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்று அறிவித்த மத்திய அரசு, கிராமப்புற மாணவர்களின் இடைநிலை கல்வியை மேம்படுத்த வேண்டும் என்ற காரணத்தை காட்டி நாடு முழுவதும் மாதிரி பள்ளிகளை துவக்கியது.

ஈரோடு, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி, விழுப்புரம், நாமக்கல், சிவகங்கை போன்ற பின் தங்கிய மாவட்டங்களில் உள்ள சில கிராமங்களில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு தரமான ஆங்கில வழி கல்வியை தருகிறோம் என்று சொல்லி மத்திய அரசு தனது அனைவருக்கும் கல்வி என்ற திட்டத்தில் 18 மாதிரி பள்ளிகளை அமைத்தது.

மாநில அரசின் கல்விக்கு உதவி செய்தாலே கிராமப்புற மாணவர்களின் கல்வியை உயர்த்த முடியும், இப்படி தனியாக பள்ளிகளை ஆரம்பிப்பது மாணவர்களிடம் வேற்றுமை மனப்பான்மையை உருவாக்கும் என்று கல்வியாளர்களின் கடும் எதிர்ப்பை காட்டினார்கள்.

ஆனால், அதையெல்லாம் காதில் வாங்கத மத்திய அரசு, மாவட்ட ஆட்சியர்கள் மூலம் திட்டத்தை நேரடியாக செயல் படுத்தியது.

கடந்த ஆண்டு, ஒரு பள்ளிக்கு 3.75 கோடி ரூபாய் என்ற அளவில், பணம் ஒதுக்கி கட்டிடம் கடும் பணியை துவக்கியது, கட்டிடம் கட்டி முடிக்கும் முன்பாகவே மாணவர் சேர்க்கைக்கு மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு செய்தார்கள்.

இலவசமாக வழங்கப்படும் தரமான ஆங்கில கல்வி, விடுதி வசதி, மத்திய அரசின் சிறப்பு திட்டம், இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் எல்லா சலுகைகளும் கிடைக்கும் என்று பல கவர்சியான விளம்பரங்கள் செய்யப்பட்டன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் பரபரப்பாக பேசப்பட்ட இப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் போட்டிபோட்டனர்.

ஆறாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, கடந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை துவங்கிய போது, ஒவ்வொரு வகுப்பிலும் நாற்பது மாணவர்கள் மட்டுமே சேர்க்க அனுமதிக்கப்பட்டனர்.

அதில் சேர இருநூறு மாணவர்கள் வரை போட்டி போட்டனர், நுழைவு தேர்வு மூலம் நாற்பது மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, வகுப்புகள் துவங்க இடம் இல்லாத காரணத்தால் பக்கத்தில் உள்ள அரசு பள்ளிகளில் வகுப்பு தொடங்கப்பட்டது.

அதுமட்டுமல்ல, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லாத காரணத்தாலும், பக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் தேவையான வகுப்பறை வசதிகள் இல்லாத காரணத்தாலும், மாணவர்களின் கல்வித்தரம் முன்பு இருந்ததை காட்டிலும் பின்னுக்கு போய்விட்டது.

வெறுத்துப்போன பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை இந்த ஆண்டு தனியார் பள்ளிக்கும், அரசுப்பள்ளிக்கும் கூட்டிப்போய் சேர்த்துவிட்டனர்.

சேலம் மாவட்டம், கொங்கனாபுரத்தில் உள்ள மத்திய அரசின், மாதிரி பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர நாற்பது மாணவர்கள் தேவை என அறிவிப்பு செய்திருந்தும், பள்ளியில் சேர 12 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளர்கள்.

கடந்த ஆண்டு ஆசிரியர்கள் இல்லாமல் தள்ளாடிய மத்திய அரசின் மாதிரி கல்வித்திட்டம், இந்த ஆண்டு மாணவர்கள் இல்லாமல் தள்ளாடுகிறது.

சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் தான் நம் நாடே தள்ளாட்டத்தில் உள்ளது.

மன்மோகன்சிங் உத்தரவுக்கு கட்டுப்படாத மந்திரி.


அசாம் மாநிலத்தில் கடந்த 10.07.2011 அன்று தீவிரவாதிகள் வைத்த வெடியில் சிக்கி கவுகாத்தி பூரி எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டதில் 100க்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்தனர்.

ரெயில் மந்திரி பொறுப்பு வகிக்கும் பிரதமர் மன்மோகன்சிங், நேற்று ரெயில்வே இணை மந்திரி முகுல் ராயை அழைத்து விபத்து நடந்த இடத்துக்கு சென்று பார்வையிட்டு, விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

ஆனால், முகுல்ராய் பிரதமர் மன்மோகன்சிங்கின் உத்தரவுக்கு கீழ்ப்படிய மறுத்து விட்டார். விபத்து நடந்த இடத்தில் தடம் புரண்ட பெட்டிகள் தூக்கப்பட்டு போக்குவரத்து சீரடைந்து விட்டது. காயமடைந்தவர்களும் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டனர். எனக்கு அந்த இடத்தில் வேலை இல்லை'' என்று அவர் பிரதமர் அலுவலகத்துக்கு தகவல் அனுப்பினார். இந்த தகவலை அவர் பிரதமரிடம் தெரிவித்தாரா? என்று தெரியவில்லை.

முகுல்ராய்க்கு பிரதமர் உத்தரவிட்டபோது அவர் விபத்து நடந்த மாநிலமான அசாமுக்கு அருகில் உள்ள மே.வங்காள மாநிலத்தில்தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமரும், ரெயில் மந்திரியுமான மன்மோகன்சிங் உத்தரவை சக மந்திரி ஏற்காதது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

நம்ம ஊர் 'லுங்கி'களுக்கு ஐரோப்பாவில் செம கிராக்கி !



ஐரோப்பிய நாடுகளில் கோடை காலம் தொடங்கி விட்டது. இதையடுத்து அங்கு நம்ம ஊர் லுங்கிகள் பிரபலமாகி வருகின்றன. வெயிலுக்கு படு வசதியாக லுங்கிகள் இருப்பதாக ஐரோப்பியர்கள் குஷியாக கூறுகின்றனர்.

தமிழர்களிடன் தவிர்க்க முடியாத ஒரு உடை லுங்கி எனப்படும் கைலிதான். என்னதான் படு டீக்காக பேன்ட், சட்டை போட்டு ரவுண்ட் அடித்தாலும், வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக லுங்கிக்குள் புகாத தமிழர்களே இருக்க முடியாது. பெர்முடாஸ்களின் ஆதிக்கத்திற்கு மத்தியிலும் இன்னும் லுங்கிகள் மங்காப் புகழுடன் தமிழர்களைத் தழுவியபடிதான் உள்ளன.

இந்த நிலையில் தமிழகத்து லுங்கிகள் இப்போது ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாக ஆரம்பித்துள்ளது. அங்கு கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், கட்டம் போட்ட கைலிகள் படு சூடாக விற்பனையாகி வருகிறதாம்.

ஒரே ஒரு தையல், 2 மீட்டர் கட்டம் போட்ட தமிழகத்து லுங்கிகள், ஐரோப்பிய மக்களுக்கு பெரும் ஆச்சரியமாகவும், அது கொடுக்கும் சவுகரியங்கள் படு வியப்பையும் அளிப்பதாக உள்ளதாம். இதனால் லுங்கிகளை வாங்கும் ஐரோப்பியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாம்.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியிலிருந்து ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் உள்ள ஒரு இந்திய நிறுவனம் லுங்கிகளை வாங்கி விற்பனை செய்து வருகிறது. ஆன்லைன் மூலம் இதற்கான ஆர்டர்களை அனுப்பி லுங்கிகளை வாங்கிக் குவிக்கிறதாம் அந்த நிறுவனம்.

இதுகுறித்து ஐஓயு என்ற அந்த நிறுவனத்தின் நிறுவனரும், கிரியேட்டிவ் இயக்குநருமான கவிதா பார்மர் கூறுகையில், இந்தியாவில் பல காலமாக பிரபமலானவை இந்த லுங்கிகள். ஆனால் ஐரோப்பியர்களுக்கு இது புதிய உடையாக தெரிகிறது. இந்த லுங்கிகளை தற்போது நாங்கள் ஐரோப்பாவில் விற்பனை செய்து வருகிறோம்.

ஆன்லைன் மூலம் ஆர்டர் தருகிறோம். இங்குள்ள தேவைகளுக்கேற்ப சில மாறுதல்களை செய்தும் தைத்து வாங்குகிறோம் என்றார்.

நம்ம ஊரில் கட்டுவது போலவும் இந்த லுங்கிகளை ஐரோப்பியர்கள் அணிகிறார்கள். அதேசமயம், இதை விதம் விதமான டிசைன்களில் சட்டை போலவும் அணிகிறார்களாம்.அதற்கேற்ற வகையில் விதம் விதமான டிசைன்களில் நம்ம ஊர் லுங்கிகளை மாற்றியமைத்து விற்று வருகிறது கவிதா பார்மரின் நிறுவனம்.

ஒரு நாளைக்கு இந்த நிறுவனத்திடம் 15 கைலிகளுக்கு ஆர்டர்கள் வருகின்றதாம்.

ஸ்பெயின் நிறுவனத்திற்கு லுங்கிகளை அனுப்பும் ஆர்டரை தமிழக அரசின் கோ ஆப்டெக்ஸ் நிறுவனம்தான் பெற்றுள்ளது. குறிஞ்சிப்பாடியில் மட்டும் மொத்தம் 9 கூட்டுறவு கைத்தறி நிறுவனங்கள் கோ ஆப்டெக்ஸ் வசம் உள்ளன. இவர்களிடம் மொத்தம் 223 நெசவாளர்கள் பணியாற்றுகின்றனர்.

இதுகுறித்து கோஆப்டெக்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் உமாசங்கர் கூறுகையில், சர்வதேச ஆர்டரைப் பெறுவதை எங்களுக்குப் புதிதல்ல. பல ஆண்டுகளாகவே ஐரோப்பிய நாடுகளுக்கு நாங்கள் துணிகள் மற்றும் தைக்கப்பட்ட ஜவுளித் தயாரிப்புகளை அனுப்பி வருகிறோம். இந்த முறை எங்களது லுங்கிகளுக்கு நிறைய கிராக்கி ஏற்பட்டுள்ளது என்றார்.

இதேபோல காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவுக் கழகம், இத்தாலிக்கு பல்வேறு டிசைன்களிலான லுங்கிகளை ஏற்றுமதி செய்து வருகிறதாம்.

லாத்வியாவுக்கும் இவர்கள் பெருமளவில் லுங்கிகளை அனுப்பி வருகின்றனராம். இதையும் ஸ்பெயின் நிறுவனமே வாங்கி லாத்வியா உள்ளிட்ட நாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் குறிஞ்சிப்பாடிக்கும், பின்னர் சென்னைக்கும் வருகை கந்தார் கவிதா பார்மர். அப்போது 16,023 லுங்கிகளை வாங்க ஆர்டர் கொடுத்துச் சென்றார். தற்போது மொத்தம் 30,000 லுங்கிகளுக்கு கவிதாவின் நிறுவனம் ஆர்டர் கொடுத்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் இந்தியாவின், குறிப்பாக தமிழகத்து லுங்கிகளுக்குத்தான் நல்ல கிராக்கி உள்ளதாம். அதிலும் நீல நிறத்திலான கட்டம் போட்ட லுங்கிகளுக்குத்தான் நல்ல மவுசு உள்ளதாம். மெட்ராஸ் லுங்கியா என்று கேட்டு வாங்குகிறார்களாம் ஐரோப்பியர்கள்.