அனைவருக்கும் கட்டாய கல்வி என்ற திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள பத்து பின் தங்கிய மாவட்டங்களில் உள்ள, 18 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள மிகவும் பின் தங்கிய கிராமங்களில் படிக்கும் மாணவர்களுக்கு, தரமான ஆங்கில கல்வியை கொடுகிறோம் என மத்திய அரசினால் தொடங்கப்பட்ட மாதிரி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு இந்த மாதம் 8ம் தேதி கடைசிநாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
கல்வியாலர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த இந்த பள்ளிகளில், நேற்று வரை மிக குறைவானவர்களே பள்ளியில் சேர விண்ணப்பம் செய்திருக்கிறார்கள். இதனால், பள்ளி தொடர்ந்து செயல்படுமா…? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள நகராட்சி பகுதிகளில் செயல்படும் மாநில அரசு பள்ளிகளில், ஆங்கிலவழி கல்வியும், தமிழ் வழிக்கல்வியும் கற்பிக்கப்படுகிறது. ஆனால், பேருராட்சி, மற்றும் கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் மட்டுமே கல்வி கற்பிக்கப்படுகிறது.
மாநிலங்களில் உள்ள கிராமப்புற மாணவர்களுக்கு ஆங்கில வழியில் கல்வி கற்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்று அறிவித்த மத்திய அரசு, கிராமப்புற மாணவர்களின் இடைநிலை கல்வியை மேம்படுத்த வேண்டும் என்ற காரணத்தை காட்டி நாடு முழுவதும் மாதிரி பள்ளிகளை துவக்கியது.
ஈரோடு, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி, விழுப்புரம், நாமக்கல், சிவகங்கை போன்ற பின் தங்கிய மாவட்டங்களில் உள்ள சில கிராமங்களில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு தரமான ஆங்கில வழி கல்வியை தருகிறோம் என்று சொல்லி மத்திய அரசு தனது அனைவருக்கும் கல்வி என்ற திட்டத்தில் 18 மாதிரி பள்ளிகளை அமைத்தது.
மாநில அரசின் கல்விக்கு உதவி செய்தாலே கிராமப்புற மாணவர்களின் கல்வியை உயர்த்த முடியும், இப்படி தனியாக பள்ளிகளை ஆரம்பிப்பது மாணவர்களிடம் வேற்றுமை மனப்பான்மையை உருவாக்கும் என்று கல்வியாளர்களின் கடும் எதிர்ப்பை காட்டினார்கள்.
ஆனால், அதையெல்லாம் காதில் வாங்கத மத்திய அரசு, மாவட்ட ஆட்சியர்கள் மூலம் திட்டத்தை நேரடியாக செயல் படுத்தியது.
கடந்த ஆண்டு, ஒரு பள்ளிக்கு 3.75 கோடி ரூபாய் என்ற அளவில், பணம் ஒதுக்கி கட்டிடம் கடும் பணியை துவக்கியது, கட்டிடம் கட்டி முடிக்கும் முன்பாகவே மாணவர் சேர்க்கைக்கு மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு செய்தார்கள்.
இலவசமாக வழங்கப்படும் தரமான ஆங்கில கல்வி, விடுதி வசதி, மத்திய அரசின் சிறப்பு திட்டம், இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் எல்லா சலுகைகளும் கிடைக்கும் என்று பல கவர்சியான விளம்பரங்கள் செய்யப்பட்டன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் பரபரப்பாக பேசப்பட்ட இப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் போட்டிபோட்டனர்.
ஆறாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, கடந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை துவங்கிய போது, ஒவ்வொரு வகுப்பிலும் நாற்பது மாணவர்கள் மட்டுமே சேர்க்க அனுமதிக்கப்பட்டனர்.
அதில் சேர இருநூறு மாணவர்கள் வரை போட்டி போட்டனர், நுழைவு தேர்வு மூலம் நாற்பது மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, வகுப்புகள் துவங்க இடம் இல்லாத காரணத்தால் பக்கத்தில் உள்ள அரசு பள்ளிகளில் வகுப்பு தொடங்கப்பட்டது.
அதுமட்டுமல்ல, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லாத காரணத்தாலும், பக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் தேவையான வகுப்பறை வசதிகள் இல்லாத காரணத்தாலும், மாணவர்களின் கல்வித்தரம் முன்பு இருந்ததை காட்டிலும் பின்னுக்கு போய்விட்டது.
வெறுத்துப்போன பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை இந்த ஆண்டு தனியார் பள்ளிக்கும், அரசுப்பள்ளிக்கும் கூட்டிப்போய் சேர்த்துவிட்டனர்.
சேலம் மாவட்டம், கொங்கனாபுரத்தில் உள்ள மத்திய அரசின், மாதிரி பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர நாற்பது மாணவர்கள் தேவை என அறிவிப்பு செய்திருந்தும், பள்ளியில் சேர 12 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளர்கள்.
கடந்த ஆண்டு ஆசிரியர்கள் இல்லாமல் தள்ளாடிய மத்திய அரசின் மாதிரி கல்வித்திட்டம், இந்த ஆண்டு மாணவர்கள் இல்லாமல் தள்ளாடுகிறது.
சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் தான் நம் நாடே தள்ளாட்டத்தில் உள்ளது.
No comments:
Post a Comment