Wednesday, April 6, 2011

அ.தி.மு.க.அணி கூட்டம் விஜயகாந்த் புறக்கணிப்பு.


ஜெயலலிதாவின் கோவை பொதுக் கூட்டம்-புறக்கணித்தார் விஜய்காந்த்!

கோவையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் இன்று நடந்த பொதுக் கூட்டத்தை தேமுதிக தலைவர் விஜயகாந்த் புறக்கணித்துவிட்டார்.

அதிமுகவுடன் கூட்டணி அமைத்தபோது தொகுதிப் பங்கீடு, இடங்கள் தேர்வு ஆகியவை தொடர்பாக ஜெயலலிதாவும் விஜய்காந்தும் நேரில் சந்தித்துப் பேசவே இல்லை. இரு கட்சிகளின் தேர்தல் குழுவினர் தான் பேசி 41 தொகுதிகள் என்று முடிவு செய்தனர்.

இதையடுத்து ஜெயலலிதாவை போயஸ் கார்டனில் வந்து 20 நிமிடங்கள் மட்டுமே சந்தித்துவிட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு உடனே வெளியேறிவிட்டார் விஜய்காந்த் .

இந் நிலையில் இடையே ஏற்பட்ட கலாட்டாவில் இடதுசாரிகளை சேர்த்துக் கொண்டு மூன்றாவது அணி அமைக்கப் போவதாக ஜெயலலிதாவை விஜய்காந்த் மிரட்டினார்.

இதைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளுடன் எந்த ஆலோசனையும் நடத்தாமல் தனது பிரச்சாரத் திட்டத்தை அறிவித்துவிட்டு பயணத்தையும் ஆரம்பித்துவிட்டார் ஜெயலலிதா. மேடையில் தனக்கு சமமாக விஜய்காந்துக்கு இடம் தர ஜெயலலிதா விரும்பவில்லை என்று கூறப்பட்டது.

அதே போல மரியாதை தரத் தெரியாத ஜெயலலிதாவுடன் சேர்ந்து பிரச்சாரம் செய்ய விஜய்காந்தும் விரும்பவில்லை.இந் நிலையில் பிரச்சாரத்தின்போது அதிமுக கொடிகளைப் பிடிக்கக் கூடாது என்று அதிமுக தொண்டர்களை திட்டி, அந்தக் கட்சியினரின் விமர்சனத்துக்கும் ஆளானார் விஜய்காந்த்.

இதேபோல திருச்சி பகுதியில் பிரச்சாரம் செய்த விஜயகாந்த், ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் ஜெயலலிதா பெயரைச் சொல்லி வாக்கு கேட்கவில்லை. இதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்த ஜெயலலிதா ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடும் விஜயகாந்த் பெயரைச் சொல்லியோ அவரது கட்சி பெயரைச் சொல்லியோ வாக்கு கேட்கவில்லை.

மேலும் ஜெயா டிவியில் விஜய்காந்தின் பிரச்சாரத்தையோ கேப்டன் டிவியில் ஜெயலலிதாவின் பிரச்சாரத்தையோ காட்டுவதும் இல்லை.

இதற்கிடையே ஜெயலலிதாவும், விஜய்காந்தும், இடதுசாரித் தலைவர்களும் ஒரே மேடையில் ஏறி பிரச்சாரம் செய்ய முடியுமா என திமுக கூட்டணிக் கட்சியினர் கேள்வி எழுப்பி வருவதோடு, ஜெயலலிதாவுக்கும் விஜய்காந்துக்கும் பிரச்சனைகள் நிலவுவதை 'ஹை-லைட்' செய்து வருகிறது.

இந் நிலையில் ஜெயலலிதாவை சமீபத்தில் ஓடிப் போய் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், விஜய்காந்தும் நீங்களும் நாங்களும் சேர்ந்த ஒரு கூட்டம் நடத்துவதே மக்களிடம் நல்ல பெயர் வாங்க உதவும் என்று கூற, எனக்கு டூர் இருக்கே, நேரம் இல்லையே என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டார் என்கிறார்கள்.

ஒற்றுமையில்லாத இந்தத் தலைவர்களின் செயல்பாடுகள் மக்களிடத்திலும் எதிர்மறை விளைவை ஏற்படுத்தும் என்ற அச்சம், 'ஆர்எஸ்எஸ் சார்பு அதிபுத்திசாலி' பத்திரிக்கையாளருக்கும் ஏற்பட்டது. அவரது கடுமையான முயற்சியாலும் இடதுசாரி தேசியத் தலைவர்கள் சிலரது தலையீட்டினாலும், வற்புறுத்தலாலும் விஜய்காந்துடன் ஜெயலலிதா ஒரே மேடையில் தோன்ற ஒப்புக் கொண்டார்.

இதன்படி கோவை வ.உ.சி. பூங்கா மைதானத்தில்யில் இன்று மாலை நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஜெயலலிதாவும் விஜயகாந்த் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்பர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் விஜய்காந்த் வரவில்லை. தேமுதிக சார்பில் அக் கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டுமே பங்கேற்றார்.

மாலை 6 மணிக்கு இந்தக் கூட்டம் தொடங்கிய நிலையில் ஊட்டியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஜெயலலிதாவும் வர தாமதமாகிவிட்டது. இதனால் அவர் வரும் முன்பே கூட்டம் தொடங்கிவிட்டது. கூட்டம் தொடங்கிய பின்னரே ஜெயலலிதா வந்து சேர்ந்தார்.

இந்தக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன், தேசிய செயலாளர் ராஜா எம்.பி, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத், மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன், புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுடன் ஜெயலலிதா ஒரே மேடை ஏறி, அதில் வைகோ பெயரை ஜெயலலிதா கூறியதும் மக்கள் கூட்டம் ஆராவாரம் செய்ய, ஜெயலலிதாவுக்கு கடும் கோபம் ஏற்பட்டது நினைவுகூறத்தக்கது. கூட்டத்தில் அதிகமான மதிமுக கொடிகள் இருந்ததற்காக அதிமுக நி்ர்வாகிகளைக் கூப்பிட்டு ஜெயலலிதா கடிந்து கொண்டதாக செய்திகள் வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் இன்றைய கூட்டத்தில் அதிமுக கொடிகளை விட குறைவான அளவிலேயே மற்ற கூட்டணிக் கட்சிகளின் கொடிகள் இருக்குமாறு அதிமுக நிர்வாகிகள் பார்த்துக் கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்றாலும் தனக்கும் தேமுதிகவுக்கும் உரிய மரியாதையை ஜெயலலிதா தர மாட்டார் என்பதாலேயே விஜய்காந்த் இதில் பங்கேற்கவில்லை என்று தெரிகிறது.

அன்று சோனியாவுக்கு ஜெ 'நோஸ்-கட் - இன்று விஜய்காந்த்.

2001ம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருந்தது காங்கிரஸ். அப்போது விழுப்புரத்தில் ஜெயலலிதாவும் சோனியாவும் கூட்டாக பேச பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், சோனியா விழுப்புரம் வந்து இரண்டு மணி நேரம் காத்திருக்க, ஜெயலலிதா வரவேயில்லை. சோனியாவை கேவலப்படுத்தினார். இந் நிலையில் இன்று நீண்ட கோரிக்கைகளுக்குப் பின் விஜய்காந்துடன் கூட்டத்தில் பேச ஜெயலலிதா ஒப்புக் கொண்ட நிலையில், விஜய்காந்த் திடீரென வராமல் போய்விட்டது குறிப்பிடத்தக்கது.

விஜயகாந்த்தை புறக்கணித்த அதிமுக.

திருத்துரைப்பூண்டியில் விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டபோது அதில் அதிமுகவினர் பங்கேற்கவில்லை. இதுகுறித்து அதிமுக தரப்பில் கூறுகையில், விஜயகாந்த் இன்று கோவையில் அதிமுக கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும்
கூட்டத்தில் பங்கேற்பார் என்று நினைத்திருந்தோம். ஆனால் அவர் அங்கு பங்கேற்காமல், திருத்துரைப்பூண்டியில் பிரச்சாரம் செய்துள்ளார்.

அவர் திருத்துரைப்பூண்டிக்கு வருவது எங்களுக்குத் தெரியாது. எங்களை கலந்து ஆலோசிக்காமல் அவர் பிரச்சாரம் செய்துள்ளார். இதனால் தான் அவரது கூட்டத்தை புறக்கணித்தோம் என்றன

நடிகை சுஜாதா காலமானார்.


பிரபல நடிகை சுஜாதா சென்னையில் காலமானார்.

அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலம் திரையுலகத்திற்கு வந்த நடிகை சுஜாதா, ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார். அன்னக்கிளி, அவர்கள், அந்தமான் காதலி, விதி ஆகிய படங்கள் சுஜாதா நடித்த பிரபலமான படங்கள். 1952ல் இலங்கையில் பிறந்த சுஜாதாவின் தாய் மொழி மலையாளம்.

கடந்த சில தினங்களாக உடல் நலம் குன்றி இருந்த அவர் சென்னையில் இன்று காலமானார்.

ஏராளமான தமிழ் திரைப்படங்களில் நடித்த சுஜாதா மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். முன்னணி நடிகர்களான சிவாஜி, கமல், ரஜினி உள்ளிட்டவர்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு : வைகோ பங்கேற்றார்.


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், இன்றும், (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) நடைபெறுகின்ற நீரி நிறுவனத்தின் ஆய்வில் வைகோ பங்கேற்றுள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூடக்கோரி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், அந்த ஆலையை மூடுமாறு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு நீதிபதிகள் ரவீந்திரன், மாத்தூர் ஆகியோர் முன்னிலையில் 25.2.2011 அன்று விசாரணைக்கு வந்தது. வைகோ நேரில் ஆஜராகி வாதாடினார்.

வைகோ, தன்னுடைய வாதத்தில், ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகள் சுற்றுப்புற சூழலுக்கு மிகுந்த கேடு விளைவிப்பதாகவும், விதிமுறைக்கு மாறாக நிறுவப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை முழுமையாக மூடவேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புற சூழ்நிலையை மாசுபடுத்துகின்ற கழிவுகள் குறித்து "நீரி'' நிறுவனம் ஆய்வு நடத்தி முழுமையான அறிக்கையை 8 வாரத்துக்குள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

அதன் அடிப்படையில், 6 மற்றும் 7ந் தேதிகளில் நீரி' நிறுவன அதிகாரிகள் ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்கின்றனர்.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி, நீரி நிறுவனத்தின் ஆய்வு வழக்கு தொடர்ந்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவுக்கு முன்தகவல் தந்து நடத்தவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதால், வைகோ, 6ந் தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு ஸ்டெர்லைட் ஆலை வளாகத்துக்கு வரும்படி நீரி நிறுவனத்தின் சார்பில் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது.


வைகோ, நீரி நிறுவன அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் ஸ்டெர்லைட் ஆலையை இன்று ஆய்வு செய்கின்றனர். வைகோ வந்துள்ளார்.

சிங்கமுத்து ஓட்டம் - பிரச்சார கலாட்டா!


சிங்கமுத்து ஓட்டம்; வடிவேலு பொம்மை எரிப்பு! - பிரச்சார கலாட்டா!

தமிழக முதல்வர் கருணாநிதியைப் பற்றி தரக்குறைவாகப் பேச முயன்ற சிங்கமுத்துவை திமுகவினர் உதைக்க முயன்றதால், பிரச்சாரத்தை நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்தார் சிங்கமுத்து.

அதேபோல, தேமுதிக தலைவர் விஜயகாந்தை விமர்சித்ததற்காக நடிகர் வடிவேலுவின் உருவ பொம்மையை தேமுதிகவினர் சிலர் திருச்செங்கோட்டில் எரித்தனர்.

சிங்கமுத்து...

ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நடிகர் சிங்கமுத்து ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட உத்தமர்சிலி, பனையபுரம் இடங்களில் நேற்று இரவு 9 மணிக்கு பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார்.

பிரச்சாரத்தின் போது அவர் நடிகர் வடிவேலுவையும், குஷ்புவையும் மோசமாக விமர்சித்து பேசிக்கொண்டிருந்தார். பின்னர் அவர் முதல்வர் கருணாநிதியைப் பற்றி பேச முற்பட்டார்.

அப்போது திமுகவைச்சேர்ந்த கலைச்செல்வன், "டேய் கலைஞரை பற்றி பேசுனா கொன்னுடுவேன். என்று சொல்லிவிட்டு கொடிக் கம்பத்தை பிடுங்கிக் கொண்டு சிங்கமுத்துவை அடிக்க வந்தார். அவருடன் மேலும் சில திமுகவினரும் வந்தனர்.

உடனே அதிமுகவினர் புடை சூழ அங்கிருந்து ஓட்டம் பிடித்தார் சிங்கமுத்து. அதன் பின்னர் அதிமுகவினர் கலைச்செல்வனை தாக்கினர். கலைச்செல்வனும் பதிலுக்கு தாக்கினார்.

இந்த மோதலில் இரு தரப்பிலும் சிலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. கலைச்செல்வன் திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிமுகவினர் ஸ்ரீரங்கம் தொகுதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வடிவேலு பொம்மை...

இதே நேரம், தேமுதிக தலைவர் விஜயகாந்தை தரக்குறைவாக பேசியதாக குற்றம் சுமத்தி நடிகர் வடிவேலுக்கு எதிராக திருச்செங்கோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருச்செங்கோடு - மௌசி பகுதியில் தேமுதிக தொண்டர்கள் ஆவேசத்துடன் வடிவேலுவின் உருவ பொம்மையை எரித்தனர். போலீசார் வருவதற்குள் தேமுதிகவினர் ஓடிவிட்டனர்.


டிவி குட்டி போடுமா? ஆடு குட்டிபோடுமா? சிந்தியுங்கள்-சிங்கமுத்து

டிவி குட்டி போடுமா அல்லது ஆடு குட்டி போடுமா என்று தேர்தல் பிரசாரத்தின்போது கேள்வி எழுப்பியுள்ளார் நடிகர் சிங்கமுத்து.

கிருஷ்ணராயபுரம் பேருந்து நிலையம், அரவக்குறிச்சி தொகுதியில் விஸ்வநாதபுரி, தண்ணீர்பந்தல், பவுத்திரம், வேலாயுதம்பாளையம் ரவுண்டானா ஆகிய இடங்களில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் சிங்கமுத்து பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது,

தமிழகத்தில் உள்ள மின்வெட்டு, விலைவாசி உயர்வு பிரச்சனைகளே திமுக ஆட்சியை அகற்றப் போதுமானவை. திமுக தேர்தல் அறிக்கையில் மிக்சி அல்லது கிரைண்டர் தருவதாக அறிவித்துள்ளனர். மின்சாரம் இல்லாமல் இவற்றை வைத்து என்ன செய்வது?

விவசாயிகளுக்கு தருவதாகச் சொன்ன 2 ஏக்கர் நிலம் தந்தபாடில்லை. இருக்கின்ற நிலத்தில் விவசாயம் செய்வதற்கு தண்ணீரும் கொடுக்கவில்லை.

ஏனென்றால் நிலத்தில் நல்ல விளைச்சல் இருந்தால், யாரும் விற்க முன்வரமாட்டார்கள். அதுவே தண்ணீர் இல்லாமல் நிலங்கள் எல்லாம் வறண்டுவிட்டால், வந்த விலைக்கு வாங்கலாம். அதை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்று நல்ல லாபம் பார்க்கலாம் என்று செயல்படுகின்றனர்.

இலவச டிவி கொடுத்தோம், டிவி கொடுத்தோம் என்கிறார்களே, அதனால் என்ன பயன்? ஜெயலலிதா ஆடு தருவதாக அறிவித்துள்ளார். 'டிவி ' குட்டி போடுமா? ஆடு குட்டிபோடுமா? என்பதை உணரந்து வாக்களிக்க வேண்டும்.

அன்மையில் திமுக எம்.பி.க்கள் கூட்டணிக்காக பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்கள். இலங்கையில் தமிழ் பெண்கள் கொடுமைப்படுத்தப்பட்டதைத் தடுப்பதற்காக ராஜினாமா செய்வதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தால் மக்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்றார்.


'பேட்டி நடுவில் ஏன் நரகலை இழுக்கிறீங்க?' : சிங்கமுத்து பற்றி வடிவேலு..!

திமுகவுக்கு ஆதரவாகவும், தேமுதிக மற்றும் அதன் தலைவர் விஜயகாந்த்துக்கு எதிராகவும் தீவிர பிரச்சாரம் செய்து வரும் நகைச்சுவை நடிகர் வடிவேலு,

'தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்துள்ளேன் இது எனக்கு கிடைத்த பெருமை' என தெரிவித்தார். மதுரையில் இது தொடர்பில் பத்திரிகையாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர்,

இந்த சிரிப்பலை கலைஞர் அவர்களை மீண்டும் முதல்வராக்கும் ஆதரவு அலையாக வீசுகிறது. மனிதருக்கு அடிப்படை தேவையான உண்ண உணவு, குடியிருக்க வீடு, உடுத்த உடை, இந்த மூன்றையும் கலைஞர் ஒரு சேர தருகிறார். கலைஞர் சொன்னா அது வரும். மத்தவங்க வரும்னு சொன்னா.... என்று நான் சொல்லி முடிப்பதற்கும், 'வராதுனு' மக்களே அதை திருப்பி சொல்றாங்க. அந்தளவுக்கு அவங்களுக்கு கலைஞர் மேல அசைக்க முடியாத நம்பிக்கை வந்திருக்கு.

நான் ஆட்சிக்கு வந்தா பலசரக்கு வீடு தேடி வரும்னு சொல்லிட்டிருக்கிற விஜயகாந்த், இன்றைக்கு பிரச்சாரத்திறே பல சரக்குகளை அடிச்சிட்டு வர்றாரு. அவர் ஜெயலலிதாவுடன் இணைந்து ஒரே மேடையில் பேசினால் அவர்களுக்குள் பிரச்சினை தான் வரும் என்றார்.

உங்கள் பிரச்சாரத்தில் கல் வீசியிருக்கிறார்களே என ஒரு நிருபர் கேட்டதற்கு அஞ்சாநெஞ்சன் மு.க.அழகிரி கோட்டையில், தி.மு.க அணிக்கு ஏற்பட்டுள்ள ஆதரவு அலையை திசை திருப்பும் முயற்சியில் இப்படியெல்லாம் நடக்கு. எத்தனை கல்லடி வீசினாலும், என் சொல்லடியை தடுக்க முடியாது என்றார்.

நடிகர் சிங்கமுத்து பற்றி ஒருவர் கேட்க வர, சட்டென நிறுத்திய வடிவேலு 'பேட்டி நல்லா தானே போய்க்கிட்டு இருந்தது. திடீர்னு 'நரகலை' ஏன் இழுக்கிறீங்க... என்றார்.


பொய் பேசும் விஜயகாந்த்!

வேட்பாளரை அடித்துவிட்டு, அதைப் பற்றிக் கேட்டபோது அடித்ததை ஒப்புக் கொண்டு, என்னிடம் அடி வாங்கினால் மகாராஜா ஆவார்கள் என்று கூறிய தேமுதிக தலைவர் விஜய்காந்த், இப்போது 'பல்டி' அடித்துள்ளார்.

எனது உதவியாளரை தலையைப் பிடித்து உள்ளே தள்ளியதைத் தான் வேட்பாளரை அடித்தார் என்று பிரச்சாரம் செய்கிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

என்னைப் பற்றி பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். அதை யாரும் நம்ப வேண்டாம். என்னை பற்றி என்ன பிரச்சாரம் செய்தாலும் நான் கவலைப்பட மாட்டேன். எனக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசினால் செய்தால் எனக்கு சந்தோஷம் தான் என்றார்.

ஜெ ஆட்சி என்றால் நினைவுக்கு வருவது வேதனைகள் மட்டும் தான்-ப.சிதம்பரம்.


ஜெயலலிதா ஆட்சி என்றால் நினைவுக்கு வருவது வேதனைகள் மட்டும் தான் அதிகம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

சிங்காநல்லூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா எஸ்.ஜெயக்குமாரை ஆதரித்து நடந்த பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசுகையில், தேர்தல் அறிக்கை என்றால் முன்பெல்லாம் கட்சி அலுவலகங்களில் கட்டுக் கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். ஆனால், 2006ல் புதுமையான தேர்தல் அறிக்கையை தெளிவாகவும், துணிவாகவும் திமுக வெளியிட்டது.

இரண்டு ரூபாய்க்கு கிலோ அரிசி, இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, 2 ஏக்கர் இலவச நிலம், கூட்டுறவுக் கடன் தள்ளுபடி என ஏராளமான திட்டங்கள் சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் இருந்தது.

அப்போது அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா, இந்த அறிக்கை குறித்து கேலியும், கிண்டலும் செய்தார்.

ஆனால், ஆட்சிக்கு வந்த உடனேயே வாக்குறுதிகள் அனைத்தையும் திமுக அரசு நிறைவேற்றியது. சொன்ன திட்டங்கள் போக சொல்லாத ஏராளமான திட்டங்களையும் நிறைவேற்றி இருக்கிறது. பொருளாதார வளர்ச்சியைப் பார்த்தால், முதல் வரிசை மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருக்கிறது.

இப்போதும் பல்வேறு திட்டங்களுடன் தேர்தல் அறிக்கையை திமுக வெளியிட்டுள்ளது. கடந்த முறை கேலி செய்தவர்கள் இப்போது அந்த அறிக்கையை காப்பியடித்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கின்றனர்.

அதிமுக ஆட்சியின்போது ஒரே நாளில் ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தது, சாலைப் பணியாளர்களை பணி நீக்கம் செய்தது, திருமண உதவித் தொகையை ரத்து செய்தது, கோயில்களில் ஆடு, கோழி பலியிட தடை விதித்தது போன்ற வேதனைகள் தான் நினைவுக்கு வந்து கொண்டிருக்கின்றன.

தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதே மக்களுக்கு நன்மை தரும் என்றார்.

நக்கீரன் 2ம் கட்ட கருத்துக் கணிப்பு.

நக்கீரன் இதழ் நடத்தியுள்ள 2ம் கட்ட கருத்துக் கணிப்பின்படி 117 தொகுதிகளில், திமுக கூட்டணி 69 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 48 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டின் சட்டமன்ற, மக்களவைத் தேர்தல் முடிவுகளை மிகச் சரியாக வெளியிட்டு வரும் இதழ் நக்கீரன்.

நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் மார்ச் 10, 11, 12, 13 ஆகிய நாட்களில் நக்கீரன் முதல் கட்ட கருத்துக் கணிப்பு நடத்தியது.

அப்போது அதிமுக கூட்டணியில் மதிமுக இருந்தது. திமுக-அதிமுகவின் இலவசங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கைகள் வெளியாகவில்லை. ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 5 பேர் வீதம் 234 தொகுதிகளில் 1,170 பேர் களமிறங்கி இந்த மெகா சர்வேயை நடத்தினர்.

ஒரு தொகுதிக்கு 400 வாக்காளர்கள் என்ற அடிப்படையில் ஆண், பெண்களிடம் சரிபாதியாக, படித்தவர்கள், பாமரர், கிராமத்தினர், நகர்ப்புறத்தினர், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவோர், சொந்தத் தொழில் செய்வோர், மாணவர்கள், வீட்டுவேலை செய்வோர், இல்லத்தரசிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர், வியபாரம் செய்வோர், சொந்த விவசாயம் செய்வோர், விவசாயக் கூலிகள், கூலி வேலை செய்வோர், உயர் நிலை பணியாளர்கள், வேலையில்லாதோர் என அனைத்துத் தரப்பினரிடமும் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

தொகுதிக்கு 400 பேரை ஆண்கள், பெண்கள் சரிபாதி அளவிலும், வயதளவில் 18-25, 25-40, 40-55, 55க்கு மேற்பட்டோர் என்று பிரித்தும் தேர்வு செய்து கருத்துக் கணிப்பை நக்கீரன் நடத்தியது.

அதிலும் முற்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மத வழி சிறுபான்மையினர் என அந்ததந்தப் பகுதியில் அவரவர் எண்ணிக்கைக்கு ஏற்ற விகிதாச்சாரப்படி வாக்காளர்களை அடையாளம் கண்டு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

மொத்தம் 16 கேள்விகள் அடங்கிய படிவத்தில், வாக்காளர்களின் கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 234 தொகுதிகளில் நக்கீரன் சர்வே டீம் 93,600 பேரிடம் கருத்துக் கணிப்பை நடத்தியது.

அந்தக் கருத்துக் கணிப்பின் படி திமுக கூட்டணி 146 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 80 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளதும், 8 தொகுதிகளில் நிலைமையை கணிக்க முடியாத அளவுக்கு இரு கட்சிகளும் சம பலத்தில் உள்ளதும் தெரியவந்தது.

அதே நேரத்தில் பெரும்பாலான தொகுதிகளில் இரு கட்சிகளும் ஒன்று அல்லது இரண்டு சதவீத வாக்கு வித்தியாசத்தில் தான் ஒருவரைவிட ஒருவர் முன்னணியில் இருந்ததும் தெரியவந்தது.

இந் நிலையில் அதிமுக கூட்டணியை விட்டு மதிமுக வெளியேறியது. மேலும் திமுக, அதிமுக ஆகியவை போட்டி போட்டுக் கொண்டு தங்களது இலவசங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டன. இதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர்களையும் அறிவித்து பிரச்சாரத்தையும் தொடங்கின.

நக்கீரன் 2வது கட்ட கருத்துக் கணிப்பு:

இந் நிலையில் நக்கீரன் 234 தொகுதிகளிலும் தனது 2வது கட்ட கருத்துக் கணிப்பை நடத்தியது.

234ல் பாதி தொகுதிகளான, 117 தொகுதிகளின் முடிவை இப்போது நக்கீரன் வெளியிட்டுள்ளது.

முடிவுகள் விவரம்:

இதன் படி திமுக கூட்டணி 69 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 48 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

திமுக கூட்டணியில் திமுக 45 இடங்களிலும், காங்கிரஸ் 11 இடங்களிலும், பாமக 8 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2 இடங்களிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 1 இடத்திலும், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் 1 இடத்திலும் வெற்றிப் பாதையில் சென்று கொண்டுள்ளன.

அதிமுக கூட்டணியில் அதிமுக 38 இடங்களி்லும், தேமுதிக 4 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 இடங்களி்லும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1 இடத்திலும், மனித நேய மக்கள் கட்சி 1 இடத்திலும், கொங்கு இளைஞர் பேரவை 1 இடத்திலும் முன்னணியில் உள்ளன.

மேலும் 117 தொகுதிகளின் முடிவுகள் அடுத்த இதழில் வெளியிடப்படும் என்று நக்கீரன் அறிவித்துள்ளது.

இந்தத் தேர்தலில் எந்த கூட்டணிக்கும் ஆதரவான அலையும் இல்லை, எதிரான சுனாமியும் இல்லை என்றும் இந்தக் கருத்துக் கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளதாக நக்கீரன் கூறியுள்ளது.

இலை கருகட்டும், சூரியன் உதிக்கட்டும்: நாஞ்சில் சம்பத் பேச்சு.


நட்ட நடுநிசி விலகட்டும், இலை கருகட்டும், சூரியன் உதிக்கட்டும் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

தென்காசியில் மதிமுக சார்பில் நேற்றிரவு இன்றைய சூழலில் தமிழ் சமுதாயம் ஆளுமை பெற்றிருக்கிறதா, அல்லது அடங்கியிருக்கிறதா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார்.

நடுவராக பங்கேற்ற நாஞ்சில் சம்பத் பேசியதாவது,

பிரதமர் மன்மோகன்சிங்கால் கொள்கை தலைவர் என பாராட்டப்பட்டவர் வைகோ. ஒரு ஆலை உரிமையாளரிடம் ரூ.1000 கோடி பெற்றுக் கொண்டு எங்களை ஜெயலலிதா புறக்கணித்தார்.

எம்.ஜி.ஆரின் மடியில் வளர்ந்தவரும், தென்மாவட்டங்களில் அதி்முகவை தூக்கி நிறுத்தியவருமான கருப்பசாமி பாண்டியன், கம்பம் செல்வேந்திரன், சாத்தூர் ராமசந்திரன், அழகு திருநாவுக்கரசு, முத்துசாமி, கரூர் சின்னசாமி, தாமரை கனி என உண்மையாக உழைத்தவர்களை தூக்கி எறிந்தார் ஜெயலலிதா.

இப்போது தினகரன், திவாகரன், சுதாகரன், பாஸ்கரனுக்கே அங்கு இடமில்லை. பின்னர் எங்களுக்கு எப்படி இடம் தருவார். ஜெயலலிதாவும், ராஜபக்சேவும் ஒரே கோட்டில் உள்ளவர்கள்.

வாக்காளர்கள் கரும்பு இருக்க இரும்பை தொடக் கூடாது. கனி இருக்க காயை விரும்பக் கூடாது. நட்ட நடுநிசி விலகட்டும், இலை கருகட்டும், சூரியன் உதிக்கட்டும். இவ்வாறு நாஞ்சில் சம்பத் பேசினார்.


விஜயகாந்த் மீது நாஞ்சில் சம்பத் கடும் தாக்கு
.

நாட்டை வழி நடத்த தகுதி இல்லாதவர் விஜயகாந்த். கட்சித் தலைவராக இருக்க விஜயகாந்த்துக்கு தகுதி இல்லை என, மதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

கோவை அருகே செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

ஒரு புல் அடித்தால்தான் பாதியாவது பேச வரும் என்ற நிலையில் இருக்கும் விஜயகாந்த், ஒரு இயக்கத்தை வழி நடத்தவோ, நாட்டை வழி நடத்தவோ தகுதி அற்றவர். கட்சித் தலைவராக இருக்க விஜயகாந்த்துக்கு தகுதி இல்லை. அவரது நடவடிக்கைகள் மூலம் நாட்டு மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். இதனை தேர்தல் முடிவுகள் நிரூபிக்கும்.

வைகோ கருப்பு துண்டு போட்டதால் அவரை கூட்டணியில் வைத்துக்கொள்ளக் கூடாது என்று ஜெயலலிதாவிடம் சொல்லிருக்கிறார்கள் என்று செய்தி வருகிறது. கருப்பு ஜெயலலிதாவுக்கு ஒத்துக்கொள்ளாது என்றால் விஜயகாந்த் என்ன சிவப்பா.

அதிமுக அணியில் இருந்து எங்களை திட்டமிட்டு வெளியேற்றியவர்களுக்கு மதிமுகவினர் பதிலடி கொடுப்பார்கள். யாரை வீழ்த்த வேண்டும் என்பதில் எங்கள் தோழர்கள் தெளிவாக இருப்பார்கள். எங்களை இழந்ததால் யாருக்காவது இழப்பு ஏற்பட்டே தீரும் என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்தும். யாரை வீழ்த்த வேண்டும் என்று மதிமுகவினருக்கு தெரியும். மனசாட்சிப்படி மதிமுகவினர் வாக்களிப்பார்கள் என்றார்.

திருச்சி ஆம்னி பஸ் கூரையில் அனாதையாக கிடந்த ரூ.5 கோடி சிக்கியது.


திருச்சியில் ஆம்னி பஸ் கூரையில் அனாதையாக கிடந்த ரூ.5Ð கோடி சிக்கியது: வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு வரப்பட்டதா?

திருச்சியில் ஆம்னி பஸ்சில் கட்டுக்கட்டாக மறைத்து வைக்கப்பட்டு இருந்த ரூ.5 கோடி பணத்தை தேர்தல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து பறிமுதல் செய்தனர்.

மேலும் அந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டு இருந்ததா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மேற்கு சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியும், உதவி கலெக்டருமாக இருப்பவர் டாக்டர் சங்கீதா.

இவரது செல்போன் எண்ணுக்கு நேற்று அதிகாலை 2 மணி அளவில் ஒரு அழைப்பு வந்தது. அதில் மறுமுனையில் பேசியவர், திருச்சி பொன்னகர் பகுதியில் திண்டுக்கல் சாலையில் ஓரமாக நிற்கின்ற எம்.ஜெ.டி. (முத்து ஜெயம் டிரான்ஸ்போர்ட்) எனும் ஒரு தனியார் ஆம்னி பஸ்சில் கட்டுக்கட்டாக பணம் மறைத்து வைத்திருப்பதாக கூறினார்.

இதையடுத்து உஷாரான தேர்தல் அதிகாரி சங்கீதா உடனடியாக தனது டிரைவர் துரைராஜ் மற்றும் வீட்டு காவலாளி ராமர் ஆகியோரை துணைக்கு அழைத்துக்கொண்டு தனது வாகனத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அப்போது அந்த இடத்தில் சந்தேகத்திற்குரிய ஒரு ஆம்னி பஸ் நிற்பதை கண்டார். ஆனால் பஸ் மட்டும் நின்றது மனிதர்கள் நடமாட்டம் எதுவும் இல்லை.

இதனால் அதிகாரி சங்கீதா பாதுகாப்பிற்காக அருகில் கருமண்டபம் சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாகேஸ்வரன் மற்றும் துணை ராணுவ படையை சேர்ந்த துப்பாக்கி ஏந்திய ஒரு போலீசாரை வேனில் உடன் அழைத்து வந்தார். மீண்டும் சம்பவ இடத்திற்கு வந்தபோது அந்த தனியார் ஆம்னி பஸ்சின் அருகே ஒரு கறுப்பு நிற இன்னோவா கார் ஒன்று நின்று கொண்டிருந்தது.

இதனால் சந்தேகமடைந்த தேர்தல் அதிகாரி விரைந்து சென்று அந்த காரை மறித்தார். அந்தகாரில் 4 பேர் இருந்தனர். அவர்களிடம் இந்த நேரத்தில் எதற்காக இந்த இடத்தில் நிற்கிறீர்கள் என தேர்தல் அதிகாரி சங்கீதா விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் அந்த பஸ்சின் டிரைவரை விடுவதற்காக காரில் அழைத்து வந்திருப்பதாக தெரிவித்தனர். இதனால் சந்தேகமடைந்த தேர்தல் அதிகாரி சங்கீதா பஸ்சில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக எங்களுக்கு தகவல் வந்ததுள்ளது.

பஸ்சை சோதனையிட வேண்டும் என்று கூறி தன்னுடன் அழைத்து வந்த போலீசார் மற்றும் டிரைவரை பஸ்சின் உள் பகுதியில் சென்று சோதனை நடத்தும்படி கூறினார். அவரது உத்தரவின் பேரில் போலீசார் பஸ்சின் உள்பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். இதில் பணம் எதுவும் இருப்பது தெரியவில்லை. பஸ்சின் மேற்கூரையில் தார்பாய் போட்டு மூடப்பட்டு கட்டப்பட்டிருந்தது.

இதனை கண்ட தேர்தல் அதிகாரியின் டிரைவர் துரைராஜ் பஸ்சின் மேல்பகுதியில் ஏறுவதற்காக பஸ் டிரைவரிடம் ஏணியை கேட்டார். அதற்கு பஸ் டிரைவர் அப்படியே தான் ஏற வேண்டும். ஏணியெல்லாம் ஒன்றும் கிடையாது என்று கூறினார். இதனால் சந்தேகமடைந்த சங்கீதா மற்றும் போலீசார் பஸ்சில் பொருட்கள் வைக்கும் பகுதியை திறந்து பார்த்தனர்.

அதில் ஒரு ஏணி வைக்கப்பட்டிருந்தது. அந்த ஏணியை எடுத்து பஸ்சின் மேல்பகுதியில் டிரைவர் துரைராஜ் ஏறினார். தார்ப்பாயை விலக்கி பார்த்தபோது அதில் 5 டிராவல் பேக்குள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டார். அதில் ஒரு பேக்கை திறந்து பார்த்த போது அதில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் உடனே தேர்தல் அதிகாரி சங்கீதாவிடம் பணம் இருப்பதை எடுத்துக்கூறினார்.

இந்த சமயத்தில் இன்னோவா காரில் வந்த 4 பேரும் காரை விட்டு விட்டு தலைதெறிக்க தப்பி ஓடினர். இதையடுத்து பஸ்சின் மேற்கூரையில் இருந்த 5 டிராவல் பேக்கையும் கீழே எடுத்து பார்த்தனர். அப்போது 5 பேக்கிலும் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. இது குறித்து தேர்தல் அதிகாரி சங்கீதா தேர்தல் செலவின பார்வையாளர்கள் தேவதாசன், ராஜகோபால், வருமான வரித்துறை துணை இயக்குனர் ஆல்பர்ட் மனோ கரன் மற்றும் கண்டோன்மெண்ட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்ததும் அதிகாலையில் தேர்தல் பார்வையாளர்கள், வருமான வரித்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பேக்கில் இருந்த புத்தம் புதிய 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் கட்டுக்கட்டான பணத்தை பார்த்ததும் அதிகாரிகள் அனைவரும் திகைப்படைந்தனர். இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்து எவ்வளவு இருக்கிறது என்பதை உறுதி செய்ய 5 பேக்குகளையும் பழைய கலெக்டர் அலுவலகத்தில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர்.

அங்கு பேக்கில் இருந்த 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டு கட்டுகள் பணத்தை தனித்தனியாக எடுத்து எண்ணினர். இதில் மொத்தம் 5 கோடியே 11 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் இருந்தது தெரியவந்தது. அதன் பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தேர்தல் அதிகாரிகள் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்த தனியார் ஆம்னி பஸ்சையும், தப்பியோடியவர்கள் வந்த காரையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து நிறுத்தினர்.

பஸ் மற்றும் காரின் நம்பர் பிளேட்டில் உள்ள எண்ணை வைத்து அதன் உரிமையாளர் யார்? என அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதில் காரின் உரிமையாளர் திருச்சி பொன்னகர் பகுதி 2-வது கிராசை சேர்ந்த உதயகுமரனின் மனைவி உமாமகேஸ்வரி என தெரியவந்தது. பஸ் பெரம்பலூர் மதனகோபாலபுரம் பகுதியை சேர்ந்த லட்சுமண ரெட்டியாரின் மகன் ஜெயராமனுக்குரியது என்றும், பஸ்சை நிர்வகித்த வருவது உதயகுமரன் தான் எனவும் தெரிந்தது.

இதையடுத்து உடனே தேர்தல் அதிகாரி சங்கீதா, தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் கமோண்டோ படை வீரர்கள், போலீசார் உதயகுமரனின் வீட்டிற்கு விரைந்து சென்றனர். அங்கு உதயகுமரன், அவரது மனைவி உமாமகேஸ்வரி, மகன் அருண் பாலாஜி ஆகியோரிடம் பஸ்சில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்தும், உங்களுடைய காரில் அங்கு வந்தது யார்? எதற்காக அந்த நேரத்தில் அங்கு வந்தார்கள்? எனவும் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாது என தெரிவித்ததாக தெரிகிறது.

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவர்களிடம் விசாரணை நடத்தி வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.81 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. அதனைதொடர்ந்து மேல் விசாரணைக்காக உதயகுமரன் மற்றும் அவரது மகன் அருண் பாலாஜி, டிராவல்ஸ் பஸ்சின் மேலாளரான பாலு ஆகியோரை வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் அழைத்துச்சென்று தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் பஸ்சில் பணம் வைக்கப்பட்டது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறியதாக கூறப்படுகிறது. மேலும் பஸ் 2 நாட்களாக அந்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறியதாக தெரிகிறது. இதனால் அந்த பணத்தை பஸ்சில் வைத்தவர்கள் யார்? என தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தேர்தல் அதிகாரிகள் பஸ்சில் சோதனை செய்த போது தப்பியோடிய பஸ் டிரைவர் மற்றும் காரில் இருந்தவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து தேர்தல் அதிகாரி சங்கீதா நிருபர்களிடம் கூறியதாவது:- தனியார் ஆம்னி பஸ்சில் பணம் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலின் பேரில் விரைந்து சென்று சோதனை நடத்தினோம். இதில் ரூ.5 கோடியே 11 லட்சத்து 27 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பணத்தை அதில் வைத்தது யார்? யாருக்குரியது, முறையான ஆவணங்கள் உள்ளதா? என தேர்தல் அதிகாரிகளும், வருமான வரித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றோம்.

பறிமுதல் செய்யப்பட்ட பஸ் பெரம்பலூர் மதனகோபாலபுரம் பகுதியை சேர்ந்த லட்சுமணன் ரெட்டியார் என்பவரது மகன் ஜெயராமன் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஆனாலும் பஸ் நிர்வாகம் அனைத்தையும் உதயகுமரன் தான் செய்து வருகிறார். அதனால் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதன் பின்னர் உண்மை தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் தமிழகத்திலே இதுவரை தேர்தல் அதிகாரிகள் நடத்திய சோதனையில் திருச்சியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.5 கோடியே 11 லட்சத்து 27 ஆயிரம் தான் மிகப்பெரிய தொகையாகும். இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக தனியார் ஆம்னி பஸ்சின் மேற்கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததா? அதனை யார் வைத்தது? பணம் யாருக்குரியது? எங்கிருந்து வந்தது?, அதில் மறைத்து வைக்க வேண்டிய அவசியம் என்ன? என தேர்தல் அதிகாரிகள், வருமான வரித்துறை அதிகாரிகள் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேர்தல் அதிகாரிகளால் ரூ.5 கோடி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் திருச்சி மட்டும் அல்லாமல் தமிழகத்திலே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் போக்குவரத்து துறை அமைச்சரும், திருச்சி மேற்கு சட்டசபை தொகுதி வேட்பாளருமான கே.என்.நேரு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தனியார் தொலைகாட்சி உள்ளிட்ட சில ஊடகங்களிலும், செய்திகளிலும் இன்று அதிகாலை தேர்தல் கமிஷனால் சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பணங்கள் என்னுடைய உறவினர்கள் சம்பந்தப்பட்டது என்று தவறாக திட்டமிட்டு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அப்படி கைப்பற்றப்பட்ட தொகைக்கும், எனது உறவினர்களுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

கள்ள ஓட்டு போடப்பட்டாலும் வாக்களிக்க புதிய வசதி; தேர்தல் அதிகாரி பேட்டி.

கள்ள ஓட்டு போடப்பட்டாலும்    வாக்களிக்க புதிய வசதி;    தேர்தல் அதிகாரி பேட்டி

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் நிருபர்களுக்கு இன்று பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-


தேர்தல் ஏற்பாடுகள் குறித்து நாங்கள் தமிழ்நாடு முழுவதும் சென்று ஆய்வு செய்துள்ளோம். வீடு தோறும் வாக்காளர்களுக்கு கொடுக்கப்படும் பூத் சிலிப் வழங்கும் பணி வேகமாக நடந்த வருகிறது. இன்னும் 3 நாட்களுக்குள் இந்த பணி முடிந்து விடும். 66 ஆயிரத்து 231 தபால் ஓட்டுக்கள் போடப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிகளில் நாம் செல்வதற்கு முன்பே வேறு யாரும் சென்று கள்ள ஓட்டு போட்டு விட்டால் வாக்காளர்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

தேர்தல் அதிகாரியிடம் அடையாள அட்டையை காட்டி வாக்காளர்கள் தங்கள் வாக்கு உரிமையை பதிவு செய்யலாம். இதற்காக வாக்குச் சாவடிகளில் ஓட்டுச் சீட்டும் வைக்கப்பட்டு இருக்கும். கள்ள ஓட்டு போடப்படுவது கண்டு பிடிக்கப் பட்டால் ஓராண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும். 10 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் வெப்-காமிரா மூலம் வாக்குச் சாவடிக்குள் வரும் அனைவரும் கண்காணிக்கப்படுவார்கள். சுமார் 5 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் வீடியோ மூலம் ஓட்டுப்பதிவு பதிவு செய்யப்படும்.

தேர்தல் பாதுகாப்புக்கு ஏற்கனவே வெளி மாநிலங்களில் இருந்து போலீசார் வந்துள்ளனர். கூடுதலாக மேலும் சில கம்பெனி துணை ராணுவ படையினர் வர உள்ளனர். நேற்று முன்தினம் வரை நடந்த வாகன சோதனைகளில் ரூ.22 கோடியே 68 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ. 10 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் டீ கடையில் ரூ. 40 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ. 7 லட்சம் கைப்பற்றப்பட்டது. மதுரையில் ரூ. 19 லட்சத்து 6 ஆயிரம் பணத்தை மக்களே கைப்பற்றி போலீசாரிடம் கொடுத்தனர். திருச்சி பொன்னகரில் நேற்று ஆம்னி பஸ்சில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 5 கோடியே 11 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது பற்றி எம்.ஜே. டிராவல்ஸ் பஸ் உரிமையாளரிடம் விசாரணை நடக்கிறது.

கேள்வி:- தமிழ்நாட்டில் மினி எமர்ஜென்சி நடப்பதாக தேர்தல் கமிஷன் மீது குற்றம் சாட்டப்படுகிறதே?

பதில்:- நாங்கள் சட்டப்படி, விதிமுறைப்படி செயல் படுகிறோம்.

கேள்வி:- மதுரை தாசில்தார் தாக்கப்பட்ட சம்பவத்தில் கலெக்டர் வற்புறுத்தலின்பேரில் புகார் கொடுத்ததாக தாசில்தார் கூறி உள்ளாரே?

பதில்:- அவரது புகார் வந்துள்ளது. கலெக்டரிடம் விளக்கம் கேட்டுள்ளோம். எது உண்மையோ அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் பணியில் சரியாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளுக்கு எங்களது ஆதரவு இருக்கும்.

கேள்வி:- மதுரைக்கு கூடுதல் தேர்தல் பார்வையாளர்கள் அனுப்பப்படுவார்களா?

பதில்:- தேவைப்பட்டால் அனுப்புவோம்.

கேள்வி:- விஜயகாந்த் வேட்பாளரை அடித்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுமா?

பதில்:- புகார் வந்தால் தான் நடவடிக்கை எடுக்கப்படும். அடிபட்டவர் கொடுத்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், தேர்தல் விதி மீறல் தொடர்பாக எங்களுக்கு கால் சென்டர் மூலம் 1400 புகார்கள் வந்துள்ளது. விதிகளை மீறியதாக 55 ஆயிரத்து 341 வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

ஜெயலலிதாவுக்கு தகுதியில்லை: ராமதாஸ்


ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதற்கு கூட தகுதியில்லை என, ராமதாஸ் பேசினார்.

சென்னை தீவுத்திடலில் திமுக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் கலைஞர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பங்கேற்று பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்,

ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஒரு முற்போக்கு கூட்டணி. ஆனால் எதிரணியில் இருக்கிற கூட்டணி ஒரு பிற்போக்கு கூட்டணி. 2001-2006ல் ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்தபோது, கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுப்பதாக உறுதிமொழி தந்தார். கேஸ் சிலிண்டர் கொடுப்பதாக வாக்குறுதி தந்தார். ஆனால் அவற்றில் எதையும் அவர் செய்யவில்லை.

2006-2011 கலைஞரின் ஆட்சியிலே அவர் செய்த சாதனைகளை பட்டியலிட நேரமில்லை. பொதுவாக மத்தியில் இருக்கும் அரசோடு மாநில அரசுக்கு ஒரு நல்லிணக்கம் தேவை. நரசிம்ம ராவ் அவர்கள் பிரதமராக இருந்தபோது, தலைமுறை இடைவெளி இருக்கிறது என்று, அந்த கூட்டணியிலே இருந்து கொண்டு ஜெயலலிதா சொன்னார். சொன்னதோடு மட்டுமல்லாமல் நரசிம்மராவை நையாண்டியும் செய்தார். பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு ஞாபக மறதி நோய் இருக்கிறது என்று சொன்னார். வாஜ்பாய் அவர்களை செயலற்ற பிரதமர் என்று கூறினார் ஜெயலலிதா. சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்தது. அதற்காக மன்னிப்பும் கேட்டார் ஜெயலலிதா.

பாரத பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை பலகீலமான கால்களை படைத்தவர் என்று ஜெயலலிதா சொன்னார். வாஜ்பாய் அவர்களோடு மோதல் போக்கை கடைபிடிக்காமல் இருந்திருந்தால் காவிரி பிரச்சனை தீர்ந்திருக்கும். திமுகவும் மத்திய அரசும் இணக்கமாக இருப்பதாலே, நமக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது. சேது சமுத்திர திட்டம் தொடங்கப்பட்டது இதேபோல் ஏராளமானவற்றை நாம் சொல்ல முடியும். திமுக ஆட்சி தொடர்ந்து இருக்கும் மீது தமிழகம் வளர்ச்சி அடையும். அதிமுக வந்தால் வீழ்ச்சி அடையும்.

தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக நடந்து வருகிறது என்று நாங்கள் தொடர்ந்து சொல்லி வருகிறோம். சகாயம் மதுரை மாவட்ட ஆட்சியர். அவர் செய்கின்ற அத்துமீறல்கள் ஏராளம். டெல்லியில் இருக்கிற தேர்தல் கமிஷனுக்கும், இங்கே இருக்கிற சிலருக்கும் தொலைதொடர்பில் நேரடி தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதற்கு கூட தகுதியில்லை. நாங்கள் ஐந்து ஆண்டு காலம் பாமகவின் 18 எம்எல்ஏக்கள் சட்டமன்றத்திலே எதிர்க்கட்சியாக இருந்தோம். நாங்கள் பேசியது, கருத்துக்களை தெரிவித்ததில் 100ல் ஒரு பங்கு கூட அதிமுக செய்யவில்லை. அதேமாதிரி நடிகர் கட்சி. சட்டசபையில் குடித்துவிட்டு வருவதாக ஜெயலலிதா சொன்னார். அதற்கு அவர்கள் பரிமாற்றிக்கொண்ட வார்த்தைகளை இங்கே சொல்லுவது நாகரீகமாகாது. அதனாலே சொல்லுகின்றோம். தப்பி தவறி என்று நான் சொல்லமாட்டேன். அவர் வரப்போவதில்லை. ஆனால் சில ஊடகங்கள், வேண்டுமென்றே சில பரப்புரைகளை செய்து வருகிறார்கள்.

தமிழக மக்கள் ஜனநாயக முற்போக்கு கூட்டணியை ஆதரிக்க வேண்டும். ஆதரிக்க தவறினால் தமிழகம் இருண்ட தமிழகமாக மாறிவிடும் என்பது தமிழக மக்களுக்கே தெரியும். தமிழக வாக்காளர்கள் மிகவும் புத்திசாலிகள். ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். கலைஞர் அவர்கள் 6வது முறையாக முதல் அமைச்சராக வரவேண்டும் என்றார்.

யார் முதல் அமைச்சராக வேண்டும்? திருமாவளவன்.


சென்னை தீவுத்திடலில் திமுக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் கலைஞர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

இதில் கலந்து கொண்டு பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசுகையில்,

கலைஞர் தலைமையில் உருவாகி இருக்கிற ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய அகில இநதிய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சோனியா காந்தி வந்திருக்கிறார். இந்த கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். கலைஞர் அவர்கள் 6வது முறையாக முதல் அமைச்சராக பதவியேற்க வேண்டும் என்பதற்காக இங்கே பிரச்சாரம் செய்ய வந்திருக்கிறார்.

திராவிட முன்னேற்ற கழக தலைவர் கலைஞர் தலைமையில், 6வது முறையாக கலைஞர் அரசு அமைய வேண்டும். அதுதான் இங்கே கூடியிருக்கிற அனைவரின் நோக்கமும், விருப்பமும். தமிழகத்தில் யார் யார் சட்டமன்ற உறுப்பினர்களாக வேண்டும் என்பதைவிட, யார் தமிழகத்தின் முதல் அமைச்சராக வேண்டும் என்பதுதான் தமிழக வாக்காள பொதுமக்கள் முன்பு வைக்கப்படும் கேள்வி. நாம் விடை காண வேண்டிய கேள்வி.

ஒருபுறம் ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர் கலைஞர். இன்னொரு புறம் தடுமாறும் தலைவர்கள். தள்ளாடும் தலைவர்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கிய கூட்டணி. கலைஞர் அவர்கள்தான் தமிழகத்தை ஆளக்கூடிய அனைத்து தகுதிகளையும், பண்புகளையும் பெற்றவர் என்பதை இந்த கூட்டணி சொல்லுகிறது. தமிழகம் சொல்லுகிறது. உலகம் ஒத்துக்கொள்கிறது.

கலைஞரை எதிர்ப்பவர்கள், விமர்சிப்பவர்கள் எத்தனை தகுதிகளை படைத்திருக்கிறார்கள் என்பதை தமிழக வாக்காள பெருமக்கள் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். 75 ஆண்டுகால பொதுவாழ்வு அனுபவம் உள்ள கலைஞர் அவர்கள், பக்குவம் உள்ளவர், முதிர்ச்சி உள்ளவர். நாகரீகம் உள்ளவர். தொலைநோக்கு பார்வை உள்ளவர். சமூக நீதி சிந்தனை உள்ளவர். ஆழ்ந்த சமூக அக்கறை உள்ளவர். சமத்துவ கொள்கை உள்ளவர். இத்தகைய ஆளுமை பண்பு உள்ள கலைஞர் தமிழக முதல் அமைச்சராக வேண்டுமா? அல்லது எந்த திட்டமும் இல்லாமல், கொள்கையும் இல்லாமல், எதையும் சாதிக்காமல், தனி நபர் விமர்சனம் செய்து, கலைஞரை திட்டி திட்டியே வாக்கு கேட்கிற ஒருவர் முதல் அமைச்சராக வேண்டுமா?

10 ஆண்டு காலம் அவரும் முதல் அமைச்சராக இருந்தவர்தான். அந்த 10 ஆண்டு காலம் அவர் செய்த சாதனை என்ன. முதல் ஐந்து ஆண்டு காலத்தில் வளர்ப்பு மகனுக்கு திருமணம் செய்தார். உலகமே வேடிக்கை பார்க்கக் கூடிய வகையில், 100 கோடிக்கு மேல் கொட்டி குவித்து வளர்ப்பு மகனுக்கு திருமணம் செய்ததுதான் முதல் ஐந்து ஆண்டு கால சாதனை. அடுத்த ஐந்து ஆண்டு காலத்தில் தனக்கு வேண்டாத அரசியல் தலைவர்களையெல்லாம், பிடிக்காத தலைவர்களை எல்லாம் கைது செய்து, சிறைப்படுத்தினார். ரசித்தார்.

தமிழகத்தின் முதுபெரும் தலைவர் கலைஞரை அதிகாலை 3 மணிக்கு கைது செய்து ரசித்துப் பார்த்தார். பாமக நிறுவனர் ராமதாசை கைது செய்தார். இலங்கை தமிழர்களுக்கு குரல் கொடுத்ததற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களை கைது செய்தார். நெடுமாறனை கைது செய்தார். எஸ்மா, டெஸ்மா போன்ற சட்டங்களை பயன்படுத்தி அரசு ஊழியர்களை கைது செய்தார். அடுத்த ஐந்து ஆண்டுகாலம் தனக்கு பிடிக்காத தலைவர்களை கைது செய்தததுதான் அவர் செய்த சாதனை.

ஆனால் கலைஞர் அவர்களின் திட்டங்களையும், சாதனைகளையும் சொல்ல நேரமில்லை. வாக்காளர்கள் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். எங்கள் அணியினர் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கிறோம். சொன்னதை செய்து காட்டியிருக்கிறார். சொல்லாததையும் செய்து காட்டியிருகிறார் கலைஞர். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

ராமதாஸின் பிரச்சாரப் பேச்சு.


ஆட்சி மாற்றம் சாத்தியமில்லை: ராமதாஸ் நம்பிக்கை.

எல்லா தரப்பு மக்களும் கருணாநிதிக்கே வாக்களிப்போம் என்று கூறி வருவதால், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கே சாத்தியமில்லை என்றார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஜெ.அன்பழகனை ஆதரித்து அவர் இன்று பிரச்சாரம் மேற்கொண்டபோது பேசியது:

"திமுக கூட்டணி வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. சில ஊடகங்கள்தான் ஆட்சி மாற்றம் வரும் என்று திரித்து கொண்டிருக்கின்றன. ஆட்சி மாற்றம் எப்படி வரும்? தமிழ்நாட்டு மக்கள் ஏமாளிகள் அல்ல; அரசியல் விழிப்பு உணர்வு பெற்றவர்கள்.

நான் எல்லா மாவட்டங்களிலும் பிரசாரம் செய்து வருகிறேன். எல்லா இடங்களிலும் மக்கள் மகிழ்ச்சியோடும் தெளிவோடும் இருக்கிறார்கள். தொழிலாளர்கள், விவசாயிகள், நெசவாளர்கள், பெண்கள், மாணவர்கள் எல்லா தரப்பு மக்களையும் கேட்டால் முதல்வர் கருணாநிதிக்கு வாக்களிப்போம் என்கிறார்கள். அப்படியிருக்கும் போது, ஆட்சி மாற்றம் எப்படி வரும்?

கருணாநிதி எத்தனையோ சாதனைகள் செய்துள்ளார். ஜெயலலிதா இரண்டு முறை முதல்வராக இருந்தார். ஒரு துரும்பை கிள்ளி போட்டதுண்டா? அவரது ஆட்சியில் வேதனை தான் அதிகம்.
தேர்தல் ஆணையம் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்பதை தினம் தினம் புள்ளி விபரத்தோடு கூறி வருகிறோம்.

அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள நடிகர் தினமும் தள்ளாடி கொண்டு எதை எதையோ உளறுகிறார். பாவம் நடிகர் கட்சியின் தொண்டர்கள்.

படித்தவர்கள் 500 பேரிடம் கருத்து கேட்கிறார்கள். பொதுவாக படித்தவர்கள் அது சரியில்லை, இது சரியில்லை என்றுதான் சொல்வார்கள். இது கருத்து கணிப்பு அல்ல. கருத்து திணிப்பு. வெல்லப் போவது தி.மு.க. கூட்டணிதான். கருணாநிதி 6-வது முறையாக முதல்வராவது உறுதி," என்றார் ராமதாஸ்.

ஜெ. ஆட்சியில் வேதனை தான் அதிகம்: ராமதாஸ்.

ஜெயலலிதா 2 முறை முதல் அமைச்சராக இருந்தார். ஒரு துரும்பை கிள்ளி போட்டதுண்டா? அவரது ஆட்சியில் வேதனை தான் அதிகம் என, ராமதாஸ் பேசினார்.

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் ஜெ.அன்பழகனை ஆதரித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிரசாரம் செய்தார். திருவல்லிக்கேணியில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:

இந்த தொகுதியில் கடந்த தேர்தலில் கலைஞருக்கு ஆதரவாக ஓட்டு கேட்டு வந்தேன். இந்த முறை ஜெ.அன்பழகனை வேட்பாளராக நிறுத்தி உள்ளார். தி.மு.க.வின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. சில ஊடகங்கள்தான் ஆட்சி மாற்றம் வரும் என்று திரித்து கொண்டிருக்கின்றன. ஆட்சி மாற்றம் எப்படி வரும்? தமிழ்நாட்டு மக்கள் ஏமாளிகள் அல்ல. அதி புத்திசாலிகள். அரசியல் விழிப்புணர்வு பெற்றவர்கள்.

கடந்த 5 ஆண்டுகள் கலைஞர் முதல் அமைச்சராக இருக்கிறார். இதுவரை 5 முறை முதல் அமைச்சராக இருந்துள்ளார். நான் எல்லா மாவட்டங்களிலும் பிரசாரம் செய்து வருகிறேன். எல்லா இடங்களிலும் மக்கள் மகிழ்ச்சியோடும், தெளிவோடும் இருக்கிறார்கள். தொழிலாளர்கள், விவசாயிகள், நெசவாளர்கள், பெண்கள், மாணவர்கள் எல்லா தரப்பு மக்களையும் கேட்டால் கலைஞருக்குத்தான் வாக்களிப்போம் என்கிறார்கள்.

அப்படியிருக்கும் போது ஆட்சி மாற்றம் எப்படி வரும்? கலைஞர் எத்தனையோ சாதனைகள் செய்துள்ளார். ஜெயலலிதா 2 முறை முதல் அமைச்சராக இருந்தார். ஒரு துரும்பை கிள்ளி போட்டதுண்டா? அவரது ஆட்சியில் வேதனை தான் அதிகம். தேர்தல் ஆணையம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்பதை தினம் தினம் புள்ளி விபரத்தோடு கூறி வருகிறோம். தி.மு.க. கூட்டணி மிகப் பெரிய கூட்டணி. இந்த கூட்டணியில் நான், கலைஞர், சோனியா, திருமாவளவன் எல்லோரும் இன்று மாலையில் ஒரே மேடையில் பேசப் போகிறோம்.

அந்த கூட்டணியை நினைத்து பாருங்கள். அ.தி. மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ள நடிகர் தினமும் தள்ளாடி கொண்டு எதை எதையோ உளறுகிறார். இப்படி ஒரு கட்சி. பாவம் நடிகர் கட்சியின் தொண்டர்கள். படித்தவர்கள் 500 பேரிடம் கருத்து கேட்கிறார்கள். பொதுவாக படித்தவர்கள் அது சரியில்லை, இது சரியில்லை என்றுதான் சொல்வார்கள். இது கருத்து கணிப்பு அல்ல. கருத்து திணிப்பு. இந்த பருப்பெல்லாம் வேகாது. வெல்லப் போவது தி.மு.க. கூட்டணிதான். கலைஞர் 6 வது முறையாக முதல் அமைச்சர் ஆவது உறுதி என்றார்.

காங்கிரசுக்காக தியாகம் செய்தோம்: ராமதாஸ்.

ராணிப்பேட்டை தி.மு.க. வேட்பாளர் காந்தி, ஆற்காடு பா.ம.க. வேட்பாளர் இளவழகன், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் கலையரசு ஆகியோரை ஆதரித்து பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் பிரச்சாரம் செய்தார்.

இதனையடுத்து விருபாட்சிபுரத்தில் நடந்த கூட்டத்தில் ராமதாஸ் கலந்துகொண்டு பேசுகையில்,

மாற்று அணி என்பது நாளுக்கு நாள் கரைந்து கொண்டு காணாமல் போய் கொண்டிருக்கிறது. அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் உள்ள ஒரு நடிகரின் தள்ளாடிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் பேசுகையில் அ.தி.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளர் ஜெயிலில் இருக்கிறார் என பேசியுள்ளார்.

அதற்கு அ.தி.மு.க.வினரே எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இது ஒருகட்சி, இதுக்கு ஒரு கூட்டணி. கலைஞர் வீட்டிற்கு சென்று முதன் முதலாக நான் தான் கூட்டணி அமைத்தேன். ஒரு மணி நேரத்தில் 31 தொகுதி என முடிவாகி இருவரும் கையெழுத்திட்டோம்.

காங்கிரஸ் கட்சிக்காக ஒரு தொகுதியை தியாகம் செய்தோம். தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. மூன்றாவது பெரிய கட்சியாக பலம் பொருந்திய கூட்டணியாக திகழ்கிறது என்றார்.

நடிகரின் பேச்சால் தமிழகமே சிரிக்கிறது: ராமதாஸ்.

தடுமாறும் நடிகரின் பேச்சைக் கேட்டு தமிழகமே சிரிப்பாய் சிரிக்கிறது என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

சென்னையில் ஆர்.கே.நகர் தொகுதி தி.மு.க.,வேட்பாளர் சேகர்பாபு, பெரம்பூர் தி.மு.க., கூட்டணி வேட்பாளர் என்.ஆர்.தனபாலன் ஆகியோரை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டங்களில் பேசிய பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்,

தி.மு.க., கூட்டணி முடிவானதும் தலைவர்களை வாழ்த்திப் பேசிய கலைஞர், இது சமூக நீதிக்கான கூட்டணி என்றார். எதிரணி தடுமாறும் நடிகர் கட்சியோடு கூட்டணி வைத்துள்ளது. நடிகரின் தடுமாறும் பேச்சைக் கேட்டு தமிழகமே சிரிப்பாய் சிரிக்கிறது. இளைஞர்கள் பலர் சேர்ந்ததும், கட்சி ஆரம்பித்த நடிகர், கோட்டை நாற்காலியில் அமர துடிக்கிறார். சினிமா எடுத்து அதில் முதல்வராக நடித்து, திருப்திப்பட வேண்டியது தான்.

தேர்தல் நேரத்தில் மட்டும் திட்டங்களை அறிவிப்பவர் ஜெயலலிதா. 10 ஆண்டுகள் பதவியில் இருந்தும் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. இனிமேலும் ஒன்றும் செய்யப்போவதில்லை. கருணாநிதி ஆட்சியில் 98 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். இலவசங்கள் கொடுக்க முடியாது என்றவர்கள், போட்டி போட்டு இலவசத்தை அறிவிக்கின்றனர். இது மக்களிடம் எடுபடாது. கருணாநிதி படிக்க உதவி செய்கிறார். ஜெயலலிதாவோ ஆடு, மாடு கொடுப்பேன் என்கிறார். எல்லாரும் இனி ஆடு, மாடு மேய்க்க வேண்டியது தான்.

தமிழகத்தில் வி.சி.,க்கள் போட்டியிடும் ஒன்பது தொகுதிகளில் தீவிர பிரசாரம் செய்துள்ளேன். இன்னும் ஒரு தொகுதியில் பிரசாரம் செய்ய வேண்டியுள்ளது
. பா.ம.க., போட்டியிடும், 30 தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர் என்றார்.

என் உயிருக்கு தேர்தல் ஆணையம்தான் பொறுப்பு...!- வடிவேலு புகார்!


என் உயிருக்கு தேர்தல் ஆணையம்தான் பொறுப்பு...!
என் மீது தாக்குதல் நடத்தி கொல்லப் பார்க்கிறார்கள் விஜயகாந்த் ஆதரவாளர்கள். என் உயிருக்கு தேர்தல் ஆணையம்தான் பொறுப்பு, என்று கூறியுள்ளார் நடிகர் வடிவேலு.

தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் வடிவேலு தமிழ்நாடு முழுவதும் தீவிரம் பிரசாரம் செய்து வருகிறார். கடந்த 2 நாட்களாக மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

பிரசாரத்தின் போது விஜயகாந்தை கடுமையாகத் தாக்கிப் பேசி வருகிறார். இந்த நிலையில் முதுகுளத்தூரில் அவர் வேனில் பேசி கொண்டு இருந்தபோது அவர் வேன் மீது கல்வீசப்பட்டது. இதேபோல சிவகங்கையில் பேசிக் கொண்டிருந்த போதும் கல்வீசப்பட்டது.

நேற்று மாலை மதுரை மாவட்டம் அலங்காநல்லூருக்கு பிரசாரம் செய்ய சென்றார். அப்போது ஊருக்குள் நுழையும் இடத்தில் தேமுதிகவினர் வடிவேல் சென்ற வேன் மீது சரமாரியாக கல்வீசி தாக்கி விட்டு ஓடிவிட்டனராம்.

இதனால் வேன் கண்ணாடிகள் உடைந்தன. ஆனால் யாருக்கும் காயம் இல்லை. இந்த சம்பவம் குறித்து நடிகர் வடிவேல் நிருபர்களிடம் கூறுகையில், "நான் பிரசாரம் செய்ய வருவதை முந்கூட்டியே அறிந்து யாரோ சிலர் இருட்டிலிருந்து கல்வீசி தாக்கினர். நான் பிரசாரம் செய்யும் இடங்களில் போதிய போலீஸ் பாதுகாப்பு கூட இல்லை.

பேருக்காக 4 போலீசார் மட்டும் வந்து செல்கிறார்கள். போதிய பாதுகாப்பு இல்லை. இதற்குக் காரணம் தேர்தல் ஆணையம்தான். எனவே என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் தேர்தல் ஆணையம் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். இந்த செயலுக்கு பின்னால் உள்ளவர்கள் யாரென்று மக்களுக்கும் தெரியும்," என்றார்.

பிரசாரம் முடித்து கொண்டு மதுரைக்கு வந்த வடிவேலுவிடம் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கல்வீச்சு சம்பவம் குறித்து விசாரித்தார்.

மு.க.அழகிரியுடன் நடிகர் வடிவேலு பிரச்சாரம்.

மதுரை மத்திய தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து மத்திய அமைச்சர் மு.க.அழகிரியுடன் நடிகர் வடிவேலு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய வடிவேலு,

இனிமேல் பிறகுக்கும் குழந்தைகள் எல்லாம் அழாமல், புலிகேசி மாதிரி சிரிக்கும். தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு கர்ப்பிணி பெண்கள் தன் வயிற்றில் இருக்கும் குழந்தையிடம் சொல்றாங்க. என் செல்லமே நீ என்னைக்கு என் வயிற்றில் உதயமானியோ, அன்றைக்கே உதயசூரியனுக்கு சொந்தக்காரர் மாதம் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார் என்று சொல்றாங்க.

108 ஆம்புலன்ஸ் திட்டம் அருமையான திட்டம். பல் இல்லாமல் இருந்திடலாம். ஆனால் இப்போது செல் இல்லாமல் யாரும் இருப்பதில்லை. யாராவது எங்கேயாவது அடிபட்டு கிடந்தாலோ அல்லது உடல் நிலை சரியில்லாமல் சீரியசாக இருந்தாலோ ஒரு போன் போட்டா உடனே 108 வண்டி வந்து நிற்கிறது. முடிந்த அளவுக்கு அங்கேயே வைத்தியம். முடியவில்லை என்றால் உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டுபேய் சிகிச்சை செய்கிறார்கள். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை செய்ய விருப்பமா. கலைஞர் காப்பீட்டுத் திட்டம். மீண்டும் கலைஞர் முதல் அமைச்சராக ஆவார். சொன்னதையும் செய்வார். சொல்லாததையும் செய்வார் என்றார்.

ஜெயலலிதாவுக்கு வடிவேலு கேள்வி?

ஆண்டிப்பட்டியை அரசர்பட்டியாக்குவேன் என்று சூளுரைத்த ஜெயலலிதா அந்த தொகுதியின் எம்எல்ஏவாக 5 ஆண்டுகள் இருந்து என்ன செய்தார் என, நடிகர் வடிவேலு கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து வடிவேலு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,

திமுகவுக்கு ஆதரவாக நான் பிரச்சாரம் செய்யக் கூடாது என்று சிலர் மிரட்டினார்கள். இந்த மிரட்டலுக்கு நான் பயப்படமாட்டேன். தொடர்ந்து பிரச்சாரம் செய்வேன். ஆண்டிப்பட்டியை அரசர்பட்டியாக்குவேன் என்று சூளுரைத்த ஜெயலலிதா அந்த தொகுதியின் எம்எல்ஏவாக 5 ஆண்டுகள் இருந்து என்ன செய்தார் என்றார்.