Wednesday, April 6, 2011

ஜெ ஆட்சி என்றால் நினைவுக்கு வருவது வேதனைகள் மட்டும் தான்-ப.சிதம்பரம்.


ஜெயலலிதா ஆட்சி என்றால் நினைவுக்கு வருவது வேதனைகள் மட்டும் தான் அதிகம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

சிங்காநல்லூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா எஸ்.ஜெயக்குமாரை ஆதரித்து நடந்த பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசுகையில், தேர்தல் அறிக்கை என்றால் முன்பெல்லாம் கட்சி அலுவலகங்களில் கட்டுக் கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். ஆனால், 2006ல் புதுமையான தேர்தல் அறிக்கையை தெளிவாகவும், துணிவாகவும் திமுக வெளியிட்டது.

இரண்டு ரூபாய்க்கு கிலோ அரிசி, இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, 2 ஏக்கர் இலவச நிலம், கூட்டுறவுக் கடன் தள்ளுபடி என ஏராளமான திட்டங்கள் சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் இருந்தது.

அப்போது அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா, இந்த அறிக்கை குறித்து கேலியும், கிண்டலும் செய்தார்.

ஆனால், ஆட்சிக்கு வந்த உடனேயே வாக்குறுதிகள் அனைத்தையும் திமுக அரசு நிறைவேற்றியது. சொன்ன திட்டங்கள் போக சொல்லாத ஏராளமான திட்டங்களையும் நிறைவேற்றி இருக்கிறது. பொருளாதார வளர்ச்சியைப் பார்த்தால், முதல் வரிசை மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருக்கிறது.

இப்போதும் பல்வேறு திட்டங்களுடன் தேர்தல் அறிக்கையை திமுக வெளியிட்டுள்ளது. கடந்த முறை கேலி செய்தவர்கள் இப்போது அந்த அறிக்கையை காப்பியடித்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கின்றனர்.

அதிமுக ஆட்சியின்போது ஒரே நாளில் ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தது, சாலைப் பணியாளர்களை பணி நீக்கம் செய்தது, திருமண உதவித் தொகையை ரத்து செய்தது, கோயில்களில் ஆடு, கோழி பலியிட தடை விதித்தது போன்ற வேதனைகள் தான் நினைவுக்கு வந்து கொண்டிருக்கின்றன.

தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதே மக்களுக்கு நன்மை தரும் என்றார்.

No comments: