Friday, October 7, 2011

எம்.பி.பி.எஸ். மாணவர்கள் வழக்கு : தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திர்க்கு நோட்டீஸ்.



சென்னை : எம்.பி.பி.எஸ். தேர்வில் புது விதிமுறையை புகுத்தப்பட்டதை எதிர்த்து, 150 மாணவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதில், எம்ஜிஆர் பல்கலைக்கழகம் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. நாமக்கல்லை சேர்ந்த எம்.பி.பி.எஸ். மாணவி சுருதி உள்பட 150க்கும் அதிகமானவர்கள், உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

நாங்கள் அனைவரும் சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் உள்பட பல்வேறு நகரங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். முடித்துள்ளோம். கடந்த ஆகஸ்ட் மாதம் ஆண்டு இறுதி தேர்வு எழுதினோம். தேர்வு முடிவுகள் இன்டர்நெட் வாயிலாக கடந்த 1ம் தேதி வெளியிடப்பட்டது. ஒரு பாடத்தின் முதல் தாளில் நாங்கள் தோல்வி அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி விசாரித்தபோது, எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் இந்த ஆண்டு முதல் புதிய விதிமுறை வகுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அந்த விதிமுறையின்படி ஒவ்வொரு பேப்பரிலும் 50 சதவீத மதிப்பெண் எடுத்தால்தான் வெற்றி அறிவிக்கப்படும். பழைய விதிமுறையின்படி, ஒரு பாடத்துக்கான இரண்டு பேப்பரிலும் சேர்த்து 50 சதவீத மதிப்பெண் எடுத்திருந்தால் போதும். ஒவ்வொரு பேப்பரிலும் குறைந்தது 50 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லை. தற்போது கொண்டு வரப்பட்டுள்ள விதிமுறை இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைக்கு எதிரானது. வேறு எந்த பல்கலைக்கழகத்திலும் இதுபோன்ற விதிமுறை இல்லை. இதுகுறித்து மாணவர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை. எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள புதிய விதிமுறையை ரத்து செய்ய வேண்டும். அதற்கு தடை விதிக்க வேண்டும். இரண்டாம் ஆண்டு வகுப்புக்கு செல்ல எங்களை அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர். இந்த மனுவை நீதிபதி அரிபரந்தாமன் விசாரித்தார். மனுதாரர்கள் சார்பாக வக்கீல் ஜி.டி.சுப்பிரமணியன் ஆஜராகி, வரும் 10ம் தேதி முதல் 2ம் ஆண்டு வகுப்புகள் தொடங்கவிருக்கின்றன. எனவே மாணவர்கள் 2ம் ஆண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்றார். இந்த வழக்கில் எம்ஜிஆர் பல்கலைக்கழக பதிவாளர் உள்பட 3 பேர் வரும் 14ம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

நன்றி
தினகரன், 7-10-2011

எம்.பி.பி.எஸ். தேர்வு முடிவை எதிர்த்து முதலாம் ஆண்டு மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு .



சென்னை,அக்.6: புதியமுறையில் மதிப்பெண் நிர்ணயக்கப்பட்டதால் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டுத் தேர்வில் வெற்றி பெறாத மாணவர்களில் பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த நிலையில், பல மாணவர்கள் தேர்ச்சி பெறாதது குறித்து தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்திடம் தமிழக அரசு விளக்கம்கேட்டுள்ளது.

புதிய முறையில் மதிப்பெண் நிர்ணயம்: எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டுப் படிப்பில் உள்ள பாடங்களான அனாடமி (இரண்டு பிரிவுகள்), "ஃபிஸியாலஜி' (இரண்டு பிரிவுகள்), "பயோகெமிஸ்ட்ரி' (இரண்டு பிரிவுகள்) ஆகியவற்றில் எழுத்துத் தேர்வு-செய்முறைத் தேர்வு-வாய்மொழித் தேர்வு ஆகியவை தலா 100 மதிப்பெண்களுக்கு உண்டு. இதில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் தேர்ச்சி பெற ஒட்டுமொத்தமாக 100 மதிப்பெண் எடுத்தால் போதும் என்ற நடைமுறை இருந்து வந்தது.

உதாரணமாக "அனாடமி பாடப்பிரிவு 1-ல்' ஒரு மாணவர் 100-க்கு 60 மதிப்பெண்ணும், "அனாடமி பாடப்பிரிவு 2-ல்' ஒரு மாணவர் 100-க்கு 40 மதிப்பெண்ணும் எடுத்தால்கூட தேர்ச்சி பெறும் நிலை இருந்து வந்தது.

ஆனால், கடந்த கல்வியாண்டில் (2010-11) எம்.பி.பி.எஸ். சேர்ந்த மாணவர்களுக்கு இந்த மதிப்பெண் முறையில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் மாற்றத்தைக் கொண்டு வந்தது. அதாவது, ஒவ்வொரு பாடப் பிரிவிலும் குறைந்தபட்சம் 50 மதிப்பெண் எடுத்தால் மட்டுமே ஒரு மாணவர் தேர்ச்சி பெற முடியும் என பல்கலைக்கழகம் மாற்றம் செய்தது.

இதனால் இந்த ஆண்டு ஆகஸ்டில் தேர்வு எழுதிய எம்.பி.பி.எஸ். மாணவர்களில் 900 பேர் தேர்ச்சி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பிரபல கல்லூரிகளில்கூட...: படிப்பில் சிறந்து விளங்குவோர் படிக்கக்கூடிய சென்னை மருத்துவக் கல்லூரியில் அனாடமி பாடப் பிரிவு 1 மற்றும் பிரிவு 2-ல் தேர்வு எழுதிய 163 மாணவர்களில், 136 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்; சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் இதே பாடப் பிரிவில் தேர்வு எழுதிய 151 மாணவர்களில் 118 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

"பிரேக் சிஸ்டம்': மற்ற படிப்புகளைப் போல் இல்லாமல், எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாவிட்டாலும்கூட, 2-ம் ஆண்டு படிப்பைத் தொடர முடியாத அளவுக்கு "பிரேக் சிஸ்டம்' நடைமுறை உள்ளது. தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் படித்து தேர்ச்சி பெற்ற பிறகே, அடுத்த ஆண்டு படிப்பைத் தொடரும் நிலை எம்.பி.பி.எஸ். படிப்பில் உள்ளது. இதனால்தான் எம்.பி.பி.எஸ். படிப்பை 7 அல்லது 8 ஆண்டுகள் கழித்து முடிப்போரும் உண்டு.

துணைவேந்தர் விளக்கம்: ""தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு 22 ஆண்டுகள் கழித்தும்கூட, எம்.பி.பி.எஸ். பாடத் திட்டம் மற்றும் தேர்வு முறையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்தவே இத்தகைய குறைந்தபட்ச தேர்வு மதிப்பெண் மாற்றம் கொண்டுவரப்பட்டது.

"பிரேக் சிஸ்டம்' என்பது இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிமுறையாகும். "பிரேக் சிஸ்டம்' நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளேன்' என்றார் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன்.

நன்றி
தினமணி, 7-10-2011