Thursday, March 24, 2011

மதிமுகவுக்கு எதிராக மாற்றுக் கட்சிகளுக்குப் பணம் கொடுத்த ஸ்டெர்லைட்-வைகோ பகிரங்க புகார்.

மதிமுக பிரதிநிதிகள் சட்டசபைக்குச் செல்லக் கூடாது என்று ஸ்டெர்லைட் நிறுவனம் சதி செய்துள்ளது. இதற்காக மாற்றுக் கட்சிகளுக்குப் பணம் கொடுத்து எங்களுக்கு எதிராக நடந்து கொண்டுள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுக கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேற முக்கியக் காரணமே தூத்துக்குடியைச் சேர்ந்த ஸ்டெர்லைட் நிறுவனமும், பெங்களூரைச் சேர்ந்த ஒரு முக்கிய தொழிலதிபரும், இலங்கை சர்வாதிகாரி ராஜபக்சேவின் மறைமுக நடவடிக்கை களுமே காரணம் என்று அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது. தற்போது கிட்டத்தட்ட அது உண்மைதான் என்று வைகோ மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார்.

ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மக்கள் பாதக நடவடிக்கைகளுக்கு எதிராக மதிமுக உறுதியான சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த ஆத்திரத்தில்தான் அதிமுகவை விலை பேசி, கூட்டணியிலிருந்து வைகோவை வெளியேற்றி விட்டார்கள் என்பது குற்றச்சாட்டாகும்.

தற்போது இந்த பயங்கர சதிச் செயல்களை வைகோ அம்பலப்படுத்த ஆரம்பித்துள்ளார். இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் வைகோ கலந்து கொண்டு பேசினார்.

அதில் வைகோ பேசுகையில்,

சட்டசபையில் மதிமுக பிரதிநிதிகள் இடம் பெறுவதை ஸ்டெர்லைட் நிர்வாகம் தடுக்கிறது. மதிமுகவுக்கு எதிராக மாற்றுக்கட்சிகளுக்கு பணம் கொடுக்கிறது ஸ்டெர்லைட்.

ஸ்டெர்லைட் ஆலையை எதித்து மதிமுக வழக்கு தொடுத்திருப்பதால் ஸ்டெர்லைட் நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

தேர்தலை புறக்கணிக்கும் முடிவிலிருந்து மதிமுக ஒரு போதும் பின்வாங்காது. தேர்தலை கண்டு பயந்து ஓடவில்லை. பதுங்குவது பாய்வதற்குத்தான் என்றார் வைகோ.

விரைவில் தனக்கும், தனது கட்சிக்கும் எதிரான பயங்கர சதித் திட்டங்கள், அதன் பின்னணியில் இருந்தது யார் என்பது உள்ளிட்ட தகவல்களை வைகோ அம்பலப்படுத்தக் கூடும் என்று தெரிகிறது

63 தொகுதிகளிலும் காங்கிரஸை வீழ்த்துவதுதான் லட்சியம்! - சீமான்


காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு, அந்தக் கட்சியை தமிழ்நாட்டில் இல்லாதொழிப்பது மட்டுமே நாம் தமிழர் கட்சியின் இப்போதைய நிலைப்பாடு என சீமான் அறிவித்துள்ளார்.

தமிழ் ஈழ தீவிர ஆதரவாளரான வைகோ அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி, தேர்தலையும் புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டார். அப்படியெனில் அவரால் அதிமுக கூட்டணிக்கு அழைத்து வரப்பட்ட மற்றொரு ஈழ ஆதரவாளரான நாம் தமிழர் கட்சி சீமானின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்தது.

வைகோ - அதிமுக உறவு முறிவுக்குப் பிறகு பலர் மனதிலும் எழுந்த இந்தக் கேள்விக்கு கடந்த ஒரு வார காலமாக பதிலே இல்லை. தொடர்ந்து அறிக்கை மேல் அறிக்கையாகத் தந்து கொண்டிருந்த சீமானும், திடீரென அமைதியாகிவிட்டார்.

இந்தத் தேர்தலில் அவர் தனித்துப் போட்டியிடுவார் என்று நேற்று இரவு கூறப்பட்டது. இவை அனைத்தும் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளாகவே இருக்கும் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், நேற்று இரவு கூடிய நாம் தமிழர் கட்சியின் ஆன்றோர் பேரவை, இந்தத் தேர்தலில் காங்கிரஸை வீழ்த்துவதை மட்டும் பிரதானமாகக் கொள்வோம் என முடிவெடுத்தது. அதன்படி, தேர்தலில் போட்டியிடாமல், காங்கிரஸை எதிர்த்து நிற்கும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுமாறு பிரச்சாரம் மேற்கொள்வோம் என திடீரென முடிவு செய்து, அதனை இன்று காலை அறிவித்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை வெளியிட இன்று காலை 11 மணிக்கு பத்திரிகையாளர்களை சென்னை பிரஸ் கிளப்பில் சந்தித்தார் இயக்குநர் சீமான்.

அவர் கூறுகையில், " இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை நாம் தமிழர் கட்சி நேரடியாகப் போட்டியிடுவதில்லை என்று இப்போது முடிவு செய்துள்ளோம். காரணம், நாங்கள் தனியாக நிற்பதால் பெரும் வாக்குகள் திமுக அணியில் உள்ள காங்கிரஸுக்கு சாதகமாகப் போய்விடும் ஆபத்துள்ளது.

தனிப் பெரும் சக்தியாக காங்கிரஸை வீழ்த்த முடியாத நிலையில் நாங்கள் உள்ளோம். எனவே, காங்கிரஸை எதிர்த்துக் களம் காணும் எதிர் அணி வேட்பாளர்கள் வெற்றி பெறும் வகையில், எதிர்ப்பிரச்சாரத்தை மேற்கொள்ளவிருக்கிறோம்.

நாம் தமிழர் கட்சியின் ஆன்றோர் பேரவை நேற்று எடுத்துள்ள முடிவு இது.

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை, எங்களுக்கு இரட்டை இலை, முரசு, கதிர், சுத்தியல் அரிவாள் போன்ற சின்னம் முக்கியமல்ல. காங்கிரஸை அழித்தொழிக்க வேண்டும் என்ற எண்ணமே முக்கியம்.

ஈழத் தமிழர்களைக் கொன்றழித்த கட்சி காங்கிரஸ். தமிழக மீனவர்கள் படுகொலையை வேடிக்கைப் பார்க்கும் கட்சி காங்கிரஸ். தமிழர்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்த கட்சி காங்கிரஸ். காவிரித்தண்ணீருக்கும், முல்லைப் பெரியாறு தண்ணீருக்கும் தமிழனை கையேந்த வைத்த கட்சி காங்கிரஸ்.

எனவே அந்தக் கட்சியே தமிழகத்தில் இனி இருக்கக் கூடாது. இனி வரும் தேர்தல்களில் எந்த திராவிட கட்சியும் காங்கிரஸுடன் கூட்டு வைத்துக் கொள்ளவும் கூடாது. அப்படி ஒரு நிலை உருவாகத்தான் இந்தத் தேர்தலில் காங்கிரஸை தோற்கடிக்கும் முடிவை எடுத்துள்ளோம்.

காங்கிரஸை தோற்கடிக்க நீங்கள் மேற்கொள்ளும் பிரச்சாரம் அதிமுகவை ஜெயிக்க வைக்குமே?

அதுபற்றி எனக்கு கவலையில்லை. இப்போதைய நோக்கம், நமது இன எதிரி காங்கிரஸ் ஒழிய வேண்டும். அதன் பலன் யாருக்குப் போகிறது என்பது முக்கியமல்ல. பதவிக்கு வந்த பின் தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டை ஜெயலலிதா எடுத்தால், அப்போது அவரையும் எதிர்ப்போம். போராட்டங்களை நடத்துவோம்.

ஜெயலலிதாவின் ஈழத் தமிழர் நிலைப்பாட்டை ஒருபோதும் நாம் தமிழர் ஆதரிக்கவில்லை. ஆனால் இந்த தேர்தல் எங்களுக்கு ஒரு கெட்டவாய்ப்பு. வேறு வழியில்லை. எனக்கு முன் நான்கைந்து எதிரிகள் இருந்தாலும், யார் மோசமான எதிரியோ அவரைத்தான் முதலில் வீழ்த்த வேண்டியுள்ளது.

வைகோவையும் துணைக்கு அழைப்பீர்களா?

இந்தத் தேர்தலில் அண்ணன் வைகோ மற்றும் அவரது கட்சி மேற்கொண்டுள்ள முடிவு குறித்து நான் எதுவும் சொல்ல முடியாத நிலையில் உள்ளேன். அவர் சிறந்த அறிவாளி. தெளிந்த அரசியல் தலைவர். எனவே பல விஷயங்களையும் யோசித்துதான் இந்த முடிவை எடுத்திருப்பார்.

ஆனால் அவரை அதிமுக நடத்திய விதம், கூட்டணியிலிருந்து அவர் வெளியேறும் அளவுக்கு நடந்த நிகழ்ச்சிகள் எங்கள் கட்சியினருக்கும், உலகம் முழுவதிலும் உள்ள தமிழுணர்வாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மனதை ரணமாக்கிவிட்டது.

அருமை அண்ணன் வைகோ, எனது நிலைப்பாட்டை நிச்சயம் வாழ்த்துவார் என்று நம்புகிறேன்.

"தமிழர்களைக் கொன்றழித்த காங்கிரஸ் வேட்பாளர்களைத் தோற்கடியுங்கள்" என்பதே இந்தத் தேர்தலில் எனது ஒரே பிரச்சாரம்.

உங்கள் பிரச்சாரம் எந்த அளவுக்கு காங்கிரஸை வீழ்த்த உதவும்?

அது எந்த அளவுக்கு பாதிப்பை முன்பு ஏற்படுத்தியது என்பதை காங்கிரஸ்காரர்களிடம் கேட்டுப் பாருங்கள். காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவரையும் தோற்கடித்துவிட்டு, மீண்டும் உங்களையெல்லாம் சந்திப்பேன்.

ஈழப் பிரச்சினை பற்றி மட்டும்தான் பிரச்சாரம் செய்வீர்களா.... இங்குள்ள தமிழர்களுக்கு என்ன செய்வதாக திட்டமிட்டுள்ளீர்கள்?

இந்தத் தேர்தலில் ஈழத் தமிழினத்துக்கு இந்த காங்கிரஸ் இழைத்த அநீதி மற்றும் இங்குள்ள தமிழர்களை தொடர்ந்து வஞ்சித்து வருவது குறித்தெல்லாம் பிரச்சாரத்தில் சொல்லப் போகிறேன்.

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பிரவேசம் என்பது இனி வரும் இடைத்தேர்தல் ஏதாவதொன்றிலிருந்து தொடங்கும். 2016-ல் முழுவீச்சில் இருக்கும். அப்போது தமிழக மக்களுக்கு நாம் தமிழர் செய்யப் போகும் நல்ல விஷயங்கள், திட்டங்கள் பற்றியெல்லாம் விரிவாக எடுத்து வைப்பேன்.

திமுகவின் தேர்தல் அறிக்கைகள் குறித்து...

தமிழர்களைப் பிச்சைக்காரர்களாக்குவதை மட்டுமே பிரதானமாகக் கொண்டு இந்த தேர்தல் அறிக்கைகள் தயாரிக்கப்படுகின்றன. சாப்பாடு, வீடு, துணி, கட்டிக்க பொண்டாட்டி என எல்லாமே இலவசம்... எல்லாமே பிச்சையாகக் கிடைக்கிறது தமிழனுக்கு.

இதுவா தொலைநோக்குப் பார்வை? இலவசங்கள் என்று ஒழிகின்றனவோ அன்றுதான் நாடு உருப்படும். கல்வி, வேலைவாய்ப்பை முறையாகத் தாருங்கள். நாடு மற்ற வசதிகளை தானாகவே பெற்றுக் கொள்ளும்.

ஒரு பக்கம் நாட்டின் கடன் ஏறிக் கொண்டே போகிறது. இவர்கள் இலவசங்களை அடுக்கிக் கொண்டு போகிறார்கள். கடன் வாங்கி இலவசங்களைத் தருவது ஒரு பிழைப்பா?", என்றார் ஆவேசமாக

தேர்தல் ஆணையம் எடுத்த வீடியோ, ஜெயா டிவியில் வெளியானது எப்படி? 5கோடி நஷ்டஈடு கேட்டு தேர்தல் ஆணையம் மீது வழக்கு.

தனது வீட்டை சோதனையிட்டபோது எடுத்த வீடியோவை ஜெயா டிவிக்கு கொடுத்த தேர்தல் ஆணையத்தின் மீது திமுக அமைச்சர் கே.பி.பி.சாமி மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,

நான் விதிமுறையை மீறி மக்களுக்கு இலவசமாக வேட்டி, சேலை வழங்குவதாகக் கூறி கடந்த சில நாட்களுக்கு முன் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தேர்தல் ஆணைய அதிகாரிகள் என் வீட்டில் சோதனை நடத்தினர். அதை வீடியோ படமும் எடுத்தனர்.

இந்த சோதனை முடிந்த சில மணி நேரத்திலேயே அந்த வீடியோ படம் ஜெயா டிவியில் வெளியானது. என் நற்பெயரை கெடுக்கவே இவ்வாறு செய்துள்ளனர். தேர்தல் ஆணையம் எடுத்த வீடியோ படம் ஜெயா டிவிக்கு எப்படி சென்றது என்று ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும்.

அதிகாரபூர்வமற்ற இந்த சோதனை, அரசியல் சாசனம் தந்த அடிப்படை உரிமைகளை மீறியதாகும். எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதால் நஷ்டஈடாக எனக்கு ரூ.5 கோடி தருவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்.

எனது தந்தை என் வீட்டிற்கு எதிரே ஒரு நலச்சங்கத்தை நடத்தி வருகிறார். அந்த கட்டிடத்தின் முகப்பு பலகையில் முதல்வர், துணை முதல்வர் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. சோதனை நடத்திய பறக்கும் படையினர் அந்த படங்களை மூட உத்தரவிட்டனர்.

உரிய அனுமதி இல்லாமல் சோதனை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது. எனது பிரசாரம் மற்றும் தேர்தல் நடவடிக்கையில் தலையிடக்கூடாது என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். எனது வீட்டில் எடுக்கப்பட்ட வீடியோ படங்களை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

காங்கிரஸோடு மோதும் அ.தி.மு.க., தே.மு.தி.க.,சி.பி.எம்.,சி.பி.ஐ.,அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர்கள் பட்டியல்.

இந்த தேர்தலில் காங்கிரஸின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கின்ற நிலையில், காங்கிரஸோடு போட்டியிடும் கட்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றது. அதனடிப்படையில் தயாரிக்கப் பட்ட பட்டியல் உங்கள் பார்வைக்கு கொடுத்திருக்கிறேன். ஊகங்களை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

காங்கிரஸ் - அ.தி.மு.க மோதும் 37தொகுதிகள்

1. ஆவடி - தாமோதரன் - அப்துல் ரஹீம்
2. திரு.வி.க.நகர் - டாக்டர் நடேசன் - வ.நீலகண்டன்
3. ராயபுரம் - ஆர்.மனோ - ஜெயக்குமார்
4. தி.நகர் - டாக்டர் செல்லக்குமார் - வி.பி.கலைராஜன்
5. அண்ணா நகர்- அறிவழகன் - கோகுல இந்திரா
6. மயிலாப்பூர் - ஜெயந்தி தங்கபாலு - ராஜலட்சுமி
7. ஸ்ரீபெரும்புதூர் - டி.யசோதா - மொளச்சூர் பெருமாள்
8. மதுராந்தகம் - ஜெயக்குமார் - கணிதா சம்பத்
9. வேலூர் - ஞானசேகரன் - டாக்டர் வி.எஸ். விஜய்
10. கிருஷ்ணகிரி - ஹசீனா சயத் - கேபி முனுசாமி
11. கலசப்பாக்கம் - விஜயக்குமார் - அக்ரி கிருஷ்ணமூர்த்தி
12. செய்யார் - விஷ்ணுபிரசாத் - முக்கூர் சுப்பிரமணியன்
13. ஆத்தூர் - அர்த்தநாரி - எஸ்.மாதேஸ்வரன்
14. ஈரோடு மேற்கு - யுவராஜா - கே.வி.ராமலிங்கம்
15. மொடக்குறிச்சி - பழனிசசாமி - ஆர்.என். கிட்டுச்சாமி
16. காங்கேயம் - விடியல் சேகர் - எஸ்எஸ்என் நடராஜ்
17. உதகை - கணேஷ் - புத்தி சந்திரன்
18. அவினாசி - நடராஜன் - ஏ.ஏ கருப்பசாமி
19. தொண்டாமுத்தூர் - கந்தசாமி - எஸ்.பி.வேலுமணி
20. சிங்காநல்லூர் - மயூரா ஜெயக்குமார் - ஆர். சின்னச்சாமி
21. வேடசந்தூர் - தண்டபாணி - ச.பழனிச்சாமி
22. கரூர் - ஜோதிமணி - வி.செந்தில்பாலாஜி
23. மணப்பாறை - டாக்டர் சோமு- ஆர்.சந்திரசேகர்
24. முசிறி - எம்.ராஜசேகரன் - என்.ஆர்.சிவபதி
25. அரியலூர் - பாளை அமரமூர்த்தி - துரை மணிவேல்
26. பாபாபநாசம் - ராம்குமார் - துரைக்கண்ணு
27. திருமயம் - ராம சுப்புராம்பி.கே.வைரமுத்து
28. அறந்தாங்கி - திருநாவுக்கரசர் - மு.ராஜநாயகம்
29. கராரைக்குடி - கே.ஆர். ராமசாமி - சோழன் சித.பழனிச்சாமி
30. மதுரை வடக்கு - ராஜேந்திரன் - ஏ.கே.போஸ்
31. பரமக்குடி - கேவி.ஆர். பிரபு - எஸ்.சுந்தர்ராஜ்
32. விளாகத்திகுளம் - பெருமாள் சாமி - ஜி.வி மார்க்கண்டேயன்
33. வாசுதேவநால்லூர் - கணேசன்டாக்டர் எஸ். துரையப்பா
34. ஸ்ரீவைகுண்டம் - சுடலையாண்டி - எஸ்.பி.சண்முகநாதன்
35. குளச்சல் - ராபர்ட் புரூஸ் - பி.லாரன்ஸ்
36. கிள்ளியூர் - ஜான் ஜேக்கப் - ஆர்.ஜார்ஜ்
37. பூந்தமல்லி - காஞ்சி ஜி.வி.மதியழகன - மணிமாறன்


காங்கிரஸ் - தே.மு.தி.க மோதும் 15தொகுதிகள்

1. திருத்தணி - சதாசிவலிங்கம் - மு.அருண் சுப்ரமணியன்
2. ஆலந்தூர் - டாக்டர் காயத்ரி தேவி - பண்ருட்டி ராமச்சந்திரன்
3. சோளிங்கர் - அருள் அன்பரசு - பி.ஆர்.மனோகர்
4. ஓசூர் - கோபிநாத் - ஜான்சன்
5. செங்கம் - செல்வம் என்கிற செல்வப்பெருந்தகை - டி.சுரேஷ் குமார்
6. ரிஷிவந்தியம் - சிவராஜ் - விஜயகாந்த்
7. சேலம் வடக்கு - ஜெயப்பிரகாஷ் - மோகன் ராஜ்
8. திருச்செங்கோடு - எம்.ஆர்.சுந்தரம் - பி. சம்பத்குமார்
9. மயிலாடுதுறை - ராஜ்குமார் - பால அருட்செல்வன்
10. விருத்தாச்சலம் - நீதிராஜன் - முத்துகுமார்
11. பட்டுக்கோட்டை - ரங்கராஜன் - செந்தில் குமார்
12. பேராவூரணி - மகேந்திரன் - அருண்பாண்டியன்
13. திருப்பரங்குன்றம் - சுந்தரராஜன் - ஏ.கே.டி ராஜா.
14. விருதுநகர் - நவீன் ஆம்ஸிடராங் - க. பாண்டிராஜன்
15. ராதாபுரம் - வேல்துரை - மைக்கேல் ராயப்பன்


காங்கிரஸ் - சி.பி.எம் மோதும் 3 தொகுதிகள்

1. மதுரை தெற்கு - வரதாஜன் - அண்ணாதுரை
2. திருப்பூர் தெற்கு -கே.செந்தில்குமார் -தங்கவேலு
3. விளவங்கோடு - விஜயதரணி - லீமா ரோஸ்


காங்கிரஸ் - சி.பி.ஐ மோதும் 3 தொகுதிகள்

1. வால்பாறை - கோவை தங்கம் - எம்.ஆறுமுகம்
2. திருத்துறைப்பூண்டி - செல்லத்துரை - உலகநாதன்
2. சிவகங்கை - ராஜசேகரன் - குணசேகரன்


காங்கிரஸ் - ம.ம.க. மோதும் 2தொகுதிகள்

1. ஆம்பூர் - விஜய் இளஞ்செழியன் - அஸ்லாம் பாஷா-ம.ம.க.
2. ராமநாதபுரம் -கே.என்.அசன் அலி - ஜவாஹிருல்லா -ம.ம.க.


காங்கிரஸ் - பிறகட்சிகள் மோதும் 3தொகுதிகள்

1. நிலக்கோட்டை - ராஜாங்கம் - இரா.அ.ராமசாமியும் -புதிய தமிழகம்
2. நாங்குநேரி - வசந்தகுமார் - எர்ணாவூர் நாராயணன் அ.இ.ச.ம.க.
3. கடையநல்லூர் - பீட்டர்அல்போன்ஸ் -செந்தூர்பாண்டியன்-அதிமுககூட்டணி