Tuesday, April 19, 2011

சிரியாவில் கலவரத்தை தூண்ட அமெரிக்கா நிதி உதவி செய்தது “விக்கி லீக்” அம்பலம்.

சிரியாவில் கலவரத்தை தூண்ட அமெரிக்கா நிதி உதவி செய்தது     “விக்கி லீக்” அம்பலம்

அரபு நாடான சிரியாவில் அதிபர் பாஷார் அல்- ஆஷாத்துக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் 18-ந்தேதி தொடங்கிய போராட்டம் தற்போது வலுவடைந்துள்ளது. போராட்டத்தை ஒடுக்க ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது.

அதில் 8 பேர் பலியானார்கள். அவர்களின் இறுதி ஊர்வலம் நேற்று நடந்தது. அதில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். பெய்ரூட் நகரின் மையத்தில் உள்ள சதுக்கத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். பாஷார் அல்-ஆஷாத் பதவி விலகும் வரை அங்கிருந்து கலைய மாட்டோம் என கூறி சதுக்கத்தில் அமர்ந்து கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

இதனால் அங்கு போராட்டம் வலுவடைந்துள்ளது. இந்த நிலையில் அங்கு போராட்டம் நடக்க அமெரிக்காவே காரணம் என விக்கி லீக் இணைய தளம் தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்க தூதரங்களின் ஆவணங்களை வெளியிட்டு வரும் விக்கிலீக் இணையதளம் சமீபத்தில் சிரியா குறித்த தகவல்களை கசிய விட்டது.

அதில், சிரியாவில் கலவரத்தை தூண்ட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் பண உதவி செய்தார். அத்துடன் அதி பருக்கு எதிரான பிரசா ரத்தை ஒளிபரப்ப லண் டனை தலைமையகமாக கொண்டு இயங்கும் ஒரு தனியார் டெலிவிஷனுக்கும், அவரது அரசு பண உதவி அளித்தது.

அதற்காக இருதரப் பினருக்கும் மொத்தம் ரூ.30 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அந்த தனியார் டி.வி. சிரியாவில் தனது ஒளிபரப்பை தொடங்கியது. அதன் எதிரொலியாகதான் தற்போது அங்கு கலவரம் உச்சக்கட்டத்தை எட்டி யுள்ளது. மேலும், இதற்கான ஒப்பந்தம் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்சுக்கும், சிரியா எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையே கடந்த 2005-ம் ஆண்டு டமாஸ்கஸ்சில் ஏற்பட்டது.

அவரது ஆட்சியில் வழங்கப்பட்டு வந்த நிதி உதவி ஒபாமாவின் ஆட்சியிலும் தொடர்கிறது. ஒருபுறம் கலவரத்தை தூண்டிக் கொண்டே மறுபுறம் சிரியாவுடன் ஆன உறவை பலப்படுத்துவது போன்று அமெரிக்கா நடிக்கிறது. கடந்த 6 வருடத்தில் கடந்த ஜனவரி மாதம்தான் முதன் முதலாக சிரியாவுக்கான தூதரை அமெரிக்கா நியமித்தது.

இந்த தகவல் அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகையில் பிரசுரிக்கப் பட்டுள்ளது.


அசன்அலிக்கு பாஸ்போர்ட் : கவர்னர் இக்பால்சிங்கை விசாரிக்க பிரதமர் அனுமதி.


அசன்அலிக்கு பாஸ்போர்ட்:கவர்னர் இக்பால்சிங்கை விசாரிக்க பிரதமர் அனுமதி

வெளிநாடுகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பதுடன், ரூ.75 ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு செய்ததாக புனே குதிரை பண்ணை அதிபர் அசன் அலி கைது செய்யப்பட்டுள்ளார்.

1997ல் இவர் பாஸ்போர்ட் பெற பரிந்துரை செய்ததாக புதுச்சேரி கவர்னர் இக்பால்சிங் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இக்பால்சிங் புதுச்சேரி கவர்னர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று அ.தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

இதையடுத்து இக்பால்சிங் டெல்லியில் மத்திய மந்திரிகள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரத்தை சந்தித்து விளக்கம் அளித்தார். இதை ஏற்றுக் கொண்ட காங்கிரஸ் மேலிடம், கவர்னர் இக்பால்சிங் பதவியை ராஜினாமா செய்வது குறித்து அவரே முடிவு செய்வார். இதில் அவரை கட்சி எந்த விதத்திலும் வற்புறுத்தாது என்று கூறி உள்ளது.

இந்த நிலையில் அசன் அலி கூட்டாளிகளும் போலீஸ் விசாரணை எதுவும் இல்லாமல் ஒரே வாரத்தில் பாஸ்போர்ட் பெற இக்பால்சிங் பரிந்துரை செய்து இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இது இக்பால்சிங்குக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்பதில் அமலாக்கப்பிரிவு தீவிரமாக உள்ளது.

இதற்காக மத்திய அரசி டம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அனுமதி கோரி இருந்தனர். இதை ஏற்று இன்று காலை அமலாக்கப்பிரிவுக்கு பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் வழங்கியது. அந்த ஒப்புதல் தகவல் ஜனாதிபதி பிரதீபா பட்டீலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இதற்கிடையே கவர்னர் இக்பால்சிங் இன்று அல்லது நாளை புதுச்சேரி திரும்பி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் புதுவை வந்ததும் அமலாக்கப்பிரிவு சிறப்பு அதிகாரிகளும் வர உள்ளனர். புதுவை கவர்னர் மாளிகையான ராஜ்நிவாசில் வைத்து கவர்னர் இக்பால்சிங்கிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள்.
அசன்அலியுடன் சட்டவிரோத உறவு ஏற்பட்டது எப்படி என்பது பற்றி இக்பால்சிங்கிடம் அதிகாரிகள் கேள்விகள் கேட்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்த விசாரணை அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட உள்ளது.


ஈழத் தமிழர் படுகொலையால் வேதனை : நேற்று இரவு சங்கரன்கோயில் அருகே பொறியாளர் தீக்குளிப்பு !!


ஈழத் தமிழர் படுகொலைகள் குறித்த ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த நெஞ்சை உலுக்கும் கொடூரங்கள் மற்றும் ஈழத்தில் இன்னும் தமிழர்களுக்கு எதிராகத் தொடரும் கொடுமைகளால் மனம் வெதும்பி இளம் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி (25) தீக்குளித்து மரணமடைந்தார்.

நெஞ்சைப் பதற வைக்கும் இந்த கொடிய சோகம் நேற்று இரவு நடந்துள்ளது.

நெல்லை மாவட்டம் சங்கரன் கோயில் அருகே உள்ளது சீகம்பட்டி கிராமம். இங்குள்ள ராமசுப்பு என்பவரின் மகன் கிருஷ்ணமூர்த்தி (25). பிஇ பட்டப்படிப்பு முடித்து ராஜஸ்தானில் எஞ்ஜினீயராகப் பணியாற்றி வந்தார்.

விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார் இந்த இளைஞர். சிறு வயதிலிருந்தே, ஈழத் தமிழர் விவகாரங்களில் பெரும் அக்கறை காட்டி வந்தாராம். இந்த நிலையில் ராஜஸ்தானில் இவருக்கு எஞ்ஜினீயர் பணி கிடைத்ததும் அங்கு போய்விட்டார்.

விடுமுறையில் ஊருக்குத் திரும்பிய கிருஷ்ணமூர்த்தி, தொடர்ந்து ஈழப் பிரச்சினை குறித்தும், அங்கு இப்போது தொடரும் கொடுமைகள் குறித்தும் நண்பர்களுடன் பேசி வந்துள்ளார். ஆனால் பெற்றோரிடம் எதுவும் சொல்வில்லையாம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம், இலங்கையில் நடந்த தமிழர் படுகொலைகள் குறித்த ஐநா அறிக்கை வெளியானது. அதில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள், ராஜபக்சே அரசு நடத்திய கொலைவெறி தாக்குதல்களைப் படித்து கலங்கிப்போய்விட்டாராம்.

தீக்குளிப்பு

நேற்று அதிகாலை 5 மணி அளவில், தான் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த ஒவ்வொரு லிட்டராக 3 லிட்டர் பெட்ரோலை, தன் மீது ஊற்றி கொளுத்திக் கொண்டு ஓடினார். அப்போது அவரது தாய், தந்தை மற்றும் சிலர் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர்.

ஆனாலும் தன்னுடைய வேதனையை வெளிக்காட்டிக் கொள்ளாத கிருஷ்ணமூர்த்தி, இலங்கையில் தமிழர்களை கொலை செய்துவிட்டார்கள். பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் ராஜபக்சே அரசு கொன்றுவிட்டான். இனி நான் இருந்து என்ன பயன். அதனால் நான் தீக்குளிக்கிறேன். அந்த ராஜபக்சேவை தூக்கில் போடுங்கள்... என்று கதறியபடி கிருஷ்ணமூர்த்தி மயங்கி விழுந்தார்.

உடனே கிருஷ்ணமூர்த்தியை, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

கிருஷ்ணமூர்த்தி தான் கைப்பட எழுதிய கடிதம், அவரது குடும்பத்தாரிடம் கிடைத்தது.

அந்தக் கடிதம்:

அன்று ராவணன் செய்த கொடுமையான செயல்களை இன்று சிங்களவர்கள் செய்து விட்டார்கள். அவர்களுக்கும் இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் என்ன ஆகும் என்று நினைத்துப் பார்த்திருக்க வேண்டும். இலங்கையில் சிங்களவர்களின் இனவெறி தாக்குதலால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அதற்குரிய பலனை பெற்றுத் தர வேண்டும். இலங்கை தமிழர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து அவர்களுக்கு தனி நாடு என்ற சிறப்பை பெற்றுத் தர வேண்டும்.

அதுவரை தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்கக் கூடாது. அப்படி பொறுப்பேற்றால், தயவு செய்து விஷ்ணுவின் பிறப்பு என்று சொல்லிக்கொள்ளும் கோயில்கள் அனைத்தையும் மூடிவிடுங்கள். இந்திய ஆட்சியாளர்கள்தான் இன்றைய சூர்ப்பனகை.

இலங்கை தமிழர்களுக்காக போராடிய போராட்டத்தில் முத்துக்குமாரே சிறந்தவர். இலங்கை தமிழர்களுக்காக போராட மீண்டும் என் ஆஞ்சநேயரை அழைக்கிறேன்.

அப்பா, அம்மா, சீனி, தினகரன் என்னை மன்னித்துவிடுங்கள். எனக்கு பிறவியில் கொடுக்கப்பட்ட தொழில் இதுதான். இதை நான் செய்யாவிட்டாலும், மிகப்பெரிய குற்றவாளி நான்தான்," இவ்வாறு கிருஷ்ணமூர்த்தி தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.

வைகோ நேரில் அஞ்சலி

இந்த தகவல் சென்னையில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தெரிவிக்கப்படவே, பத்திரிக்கையாளர்களை அழைத்துக்கொண்டு இரவோடு இரவாக கலிங்கப்பட்டி கிராமத்துக்கு வந்த அவர், சீகம்பட்டி கிராமத்துக்கு 19.04.2011 அன்று காலை 9 மணிக்கு வந்தார்.

கிருஷ்ணமூர்த்தியின் உருவப்படத்தை பார்த்தத வைகோ கண்கலங்கினார். உருவப்படத்துக்கு மாலை அணிவித்துவிட்டு, மவுன அஞ்சலி செலுத்தினார்.

அப்போது பேசிய வைகோ, "தென்மாவட்டத்தின் கடைக்கோடி கிராமத்தில் உள்ள இந்த கிருஷ்ணமூர்த்தியின் தியாகம் வெளியே தெரியாமல் இருந்துவிடக் கூடாது. தமிழர்களுக்கு தனி நாடு வேண்டும் என்கிற கிருஷ்ணமூர்த்தியின் உயிர் தியாகத்தின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும்.

ஐநா சபையால் போர்க் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டும். அதற்காவது இந்தியா உதவ வேண்டும். இல்லையென்றால் இந்தியாவும் குற்றவாளிதான் என்று நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுவேன்," என்றார்.

மேலும் பேசிய வைகோ, "இளைஞர்களே போராடுங்கள், ஆனால் தயவுசெய்து உங்களின் உயிர்களை தியாகம் செய்ய வேண்டாம். கிருஷ்ணமுர்த்தியின் குடும்பத்திற்கு அண்ணன் பழ.நெடுமாறன் மற்றும் அமைப்புகளோடு கலந்து ஆலோசித்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பேன்," என்றார்.


புற்றுநோய் பற்றி புத்தகம் : இந்தியருக்கு புலிட்சர் விருது.


அமெரிக்காவில் வசிக்கும் இந்திய டாக்டர் சித்தார்த்த முகர்ஜி புற்றுநோய் பற்றி எழுதிய புத்தகத்துக்கு இந்த ஆண்டுக்கான புலிட்சர் விருது கிடைத்து உள்ளது.

தி எம்ப்ரர் ஆப் ஆல் மலெடிஸ்- ஏ பயோகிராபி ஆப் கேன்சர் என்பது அந்த புத்தகத்தின் பெயர் (நோய்களின் சக்கரவர்த்தியான புற்றுநோயின் சரித்திரம் என்று இதை தமிழில் சொல்லலாம்) இந்த புத்தகத்துக்கு நாவல் அல்லாத பிரிவில் இந்த விருது கொடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் இந்த விருதுடன் 10 ஆயிரம் டாலர் பரிசுப் பணம் தரப்படுகின்றது.

இந்தியாவில் பிறந்த முகர்ஜி, கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மருந்தியல் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.

இவர் ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழகம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஹார்வர்டு மருத்துவப் பள்ளியில் பட்டப்படிப்பு படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மாணவியின் மார்பகங்களை அறுத்து எடுத்த ஆஸ்பத்திரி ஊழியர்கள்.

கோடை விடுமுறைக்காக மீனாட்சி, பல்லடம் மூலப்பாதையில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு சென்றிருந்தார். அங்குள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்த மீனாட்சி பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரியின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது.

அப்போது மீனாட்சியின் 2 மார்பகங்களையும் யாரோ மர்ம மனிதர்கள் கூர்மையான ஆயுதத்தால் அறுத்து எடுத்துச் சென்று விட்டனர். இந்த கொடூர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது.

குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யுமாறு திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் உத்தர விட்டார். பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கதுரை மேற்பார்வையில் 3 தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது.

இன்ஸ்பெக்டர்கள் தவமணி (பல்லடம்), சுந்தரமூர்த்தி (காமநாயக்கன் பாளையம்), ரமேஷ் (மங்கலம்) ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினார்கள்.

பல்லடம் அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள், டாக்டர்கள், நர்சுகள், பகுதி நேர துப்புரவு பணியாளர்கள் என 60 பேரிடம் விசாரணை நடந்தது. விசாரணையில் மாணவியின் மார்பகங்களை அறுத்து எடுத்து கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் ஆஸ்பத்திரி ஊழியர்கள் 2 பேர் என்று தெரிய வந்துள்ளது. அவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

திருப்பூர் அருகேயுள்ள பூலுவப்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் மகள் மீனாட்சி (வயது 18). குன்னத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.