Friday, June 10, 2011

சிவசங்கரனை தூண்டிய தி.மு.க. பெண்மணி ! இப்படியும் சிக்கினார் தயாநிதி !!


“தயாநிதி மாறன் அழுத்தம் கொடுத்து ஏர் செல் நிறுவனத்தை விற்க்க வைத்ததாகக் கூறுகிறீர்கள். சரி. அது நடந்து 6 வருடங்கள் ஆகிவிட்டனவே! உங்களுக்கு சி.பி.ஐ.யிடம் வர ஆறு வருடங்கள் எடுத்தனவா?” ஏர் செல்லின் முன்னாள் அதிபர் சிவசங்கரன் வி.பி.ஐ.யிடம் வாக்குமூலம் கொடுக்க வந்தபோது, சி.பி.ஐ. அதிகாரி கள் கேட்ட முதல் கேள்வி இது.

இதற்கு சிவசங்கரன், “தயாநிதி மாறனால் ஏற்பட்டிருக்கக்கூடிய உயிர் ஆபத்தில் இருந்து தப்புவதற்காகவே நான், இந்தியாவை விட்டு வெளியேறி விட்டேன்” என்று பதிலளித்ததாகத் தெரிகின்றது. இந்தப் பதிலை சி.பி.ஐ. தயாநிதிக்கு எதிராக உபயோகித்துக் கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், சிவசங்கரன் ஆறு வருடங்களுக்குப்பின் தயாநிதிக்கு எதிரான வெடிகுண்டாக மாறியதற்கு, மற்றொரு நபரின் தூண்டலும் காரணம் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.

அந்த மற்றொரு நபர், தி.மு.க.வின் உயர்மட்ட பெண்மணி என்பதே இதிலுள்ள ஹைலைட்!

சிக்கலில் மாட்டப்பட்டுள்ள தயாநிதியும் தி.மு.க.தான். அவரும், தி.மு.க. உயர்மட்டக் குடும்ப உறுப்பினர்தான். அப்டியிருந்தும், தி.மு.க.வின் மற்றொரு உயர்மட்டக் குடும்ப பெண்மணி எதற்காக தயாநிதிக்கு எதிராக, சிவசங்கரனுக்கு கொம்பு சீவி விடவேண்டும்?

“எல்லாமே குடும்ப உட்பூசல்தான்” என்கிறது விபரமறிந்த தகவல்!

தி.மு.க.வில் எந்தவித செல்வாக்கும் இல்லாமல் தயாநிதி இருந்த காலத்தில், டில்லியை நோக்கி பாதை காட்டிவிட்டதே இந்த பெண்மணிதான். அதன் பிறகு, மதுரை அடிதடியுடன் குடும்பம் பிரிந்தபோது, தயாநிதிக்கு ஆதரவாக இருந்தவரும் இதே பெண்மணிதான்.

ஆனால், ராசா.. கனிமொழி.. என்று வரிசையாக ஆட்கள் உள்ளே போகத் தொடங்க, தயாநிதி மாத்திரம் மத்திய அமைச்சர் பந்தாவுடன் வலம்வந்து கொண்டிருந்தது இந்த பெண்மணியின் மனதில் ஏற்பட்ட முதல் நெருடல்.

அதற்கு அடுத்தபடியாக, இந்த பெண்மணிக்கு மற்றொரு விடயத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. டில்லி நினைத்தால், கோர்ட் கேஸையெல்லாம் ஊதித் தள்ளிவிடலாம் என்பதே அந்த நம்பிக்கை.

“அதற்கான காலம் கடந்துவிட்டது. இப்போது விவகாரம் இந்திய சட்ட எந்திரத்துக்குள் போய்விட்டது. இனி டில்லி நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது” என்று குடும்பத் தலைவர் உட்பட, யார் விளக்கிச் சொன்னாலும் பெண்மணி, தனது நம்பிக்கையை மாற்றிக் கொள்வதாயில்லை.

இடையே சிறிதுகாலம் தயாநிதியுடன் இந்த பெண்மணி முரண்பட்டு இருந்தார். அப்படியிருந்தும், கோர்ட் விவகாரத்தை டில்லியில் பேசி சுமுகமாக முடித்துத் தரும்படி ஒரு கோரிக்கையுடன் தயாநிதியை அணுகியிருக்கிறார். ஆனால், அதற்கு தயாநிதி கூறிய பதில், குடும்பத் தலைவர் கூறிய அதே பதில்தான்! “காரியம் கையை விட்டுப் போய்விட்டது”

இதையடுத்தே, மீண்டும் தயாநிதிக்கு எதிரானவரானார் பெண்மணி.

முன்பாவது, கோபத்தில் இருந்தார். இப்போது ஆவேசத்தில் குமுறத் தொடங்கினார். “நாங்கள் சிக்கலில் மாட்டினால் டில்லியால் ஒன்றும் செய்ய முடியாது என்றால், தயாநிதி மாட்டினால் என்ன செய்வார்கள்?”

இந்தப் பின்னணியில்தான் சிவசங்கரன், இந்த பெண்மணியால் போன் மூலம் தொடர்பு கொள்ளப்பட்டார் என்கிறார்கள்.

சிவசங்கரனும் தயாநிதிக்கு எதிரான ஒரு நகர்வைச் செய்யலாமா என்று யோசித்துகொண்டிருந்த நேரம் அது. அதற்குள் இந்த பெண்மணியின் தூண்டலும் சேரவே-

சிவசங்கரன், சி.பி.ஐ.யின் அலுவலகம் போய் சேர்ந்தார் என்கிறார்கள்!

No comments: