Sunday, July 24, 2011

தமிழகத்து பெட்ரோல் வளங்களை தமிழக அரசிடமே ஒப்படைக்க வேண்டும்.“தமிழ்நாட்டின் நரிமணம், கோவில் களப்பால், அடியக்காமங்கலம் உள்ளிட்ட பல இடங்களில் பெட்ரோல் மற்றும் கேஸ் கிடைக்கும் போது, கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காட்டி தமிழகத்திற்கு ஏன் பெட்ரோல், டீசல், விலையேற்றம்?” என்றும்,

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க தமிழகத்தில் கிடைக்கும் பெட்ரோல் மற்றும் கேஸ் வளங்களை தமிழக அரசிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி நேற்று 23-ம் தேதி சென்னையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டின் காவிரிப் படுக்கையில் அமைந்துள்ள நரிமணம், அடியக்காமங்கலம், கமலாபுரம், புவனகிரி, கோவில் களப்பால் உள்ளிட்ட பல இடங்களில் பெட்ரோல் தாராளமாக கிடைக்கிறது. திருவாரூர் மாவட்டம் குத்தாலத்தில் கேஸ் கிடைக்கிறது. இங்கு கிடைக்கும் இவ்வளங்களை கொள்ளையிட்டுச் செல்கின்ற இந்திய அரசு, கச்சா எண்ணெய் விலை உயர்வதைக் காரணமாகக் காட்டி தமிழ்நாட்டில் ஏன் பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டும்?

அசாமில் அசாம் ஆயில் கார்ப்பரேசன் என்று தான் பெயர் வைக்க முடியும். தமிழ்நாட்டில் இருப்பதை போல் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் என்றெல்லாம் பெயர் வைக்க முடியாது. அந்தளவிற்கு அங்குள்ள அசாமியர்கள் இந்தியாவிற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதால் தான், அசாமில் பெட்ரோல் எடுப்பதற்காக இந்திய அரசு அவர்களுக்கு உரிமைத்தொகை (ராயல்டி) கொடுக்கின்றது. தமிழ்நாடு இளிச்சவாய் மாநிலமாக இருப்பதால் தான் இங்கு பெட்ரோலை திருடி நம்மிடமே, இறக்குமதி வரி போட்டு விலை உயர்த்துகிறார்கள்.

இப்போது காவிரிப் படுக்கையை இந்திய அரசு திருபாய் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்திற்கு விற்றுவிட்டது. இந்த கும்பல் 1,70,000 லட்சம் லிட்டர் பெட்ரோலை சோதனைக்காகவே எடுத்திருக்கின்றது. அப்படியென்றால் இவர்கள், உற்பத்தியை தொடங்கும் போது எத்தனை லட்சம் லிட்டர் தமிழக பெட்ரோலை திருடுவார்கள் என எண்ணிப் பார்க்க வேண்டும்.

இவ்வாறு ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து, கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கி.வெங்கட்ராமன் பேசினார்.

‘தலைமறைவு ’ வீரபாண்டியார், ஜம்மென்று மேடையில் தோன்றினார் !தி.மு.க.வின் செயற்குழு கூட்டம் நேற்று சனிக்கிழமை நடைபெற்றபோது, யார் வருகிறார்களோ இல்லையோ, வீரபாண்டி ஆறுமுகம் வருவாரா என்று பார்க்கவே பத்திரிகையாளர்கள் முண்டியடித்துக் கொண்டிருந்தார்கள்.

காரணம், வீரபாண்டியாரை தமிழக போலீஸ் ‘வலை விரித்து’ தேடிவருவதாக சேலம் காவல்துறை ஆணையாளர் வெள்ளிக்கிழமைதான் அறிவித்திருந்தார்.

சேலம் போலீஸ் விரித்த வலை விரித்தபடியே இருக்க, சேலத்திலிருந்து வெறும் 165 கி.மீ. தொலைவிலுள்ள கோவை - சிங்காநல்லூரில், ஜம்மென்று வந்திறங்கினார் வீரபாண்டியார். தி.மு.க. செயற்குழு கூட்டத்திலும் கலந்து கொண்டார். கூட்டத்துக்குள் முக்காடு போட்டுக்கொண்டு அமர்ந்திருக்கவில்லை. பளபளவென்று மேடையிலே ஜொலித்தார்!

செயற்குழு கூட்டத்தில் மைக் பிடிக்கவும் தவறவில்லை அவர். “கட்சிக்குள் புகார் வந்தால், கட்சியில் இருந்து பிரமுகர்கள் நீக்கப்படுகிறார்கள். இந்நிலை மாற வேண்டும். கட்சியில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை” என்று கூறிவிட்டு அமர்ந்து கொண்டார்.

தன்னை போலீஸ் தேடுவது பற்றியோ, தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பற்றியோ, குறைந்தபட்சம் அவை பொய் என்றோ, வாயே திறக்கவில்லை அவர்.

கருணாநிதி பேசும்போது, தனது பேச்சில் வீரபாண்டியரை போலீஸ் தேடுவது பற்றித் தொட்டுவிட்டுச் சென்றார். “இங்கு வந்துள்ள வீரபாண்டி ஆறுமுகம் போலீஸால் தேடப்படுகிறார் என்பது எனக்குத் தெரியும். வீரபாண்டி ஆறுமுகம் தேடப்படுகிறார் என்பது மட்டுமல்ல. நானே ஒரு காலத்தில் தேடப்பட்டவன்தான்” என்றார்.

“எனக்கு எதிரே அமர்ந்திருக்கின்ற நண்பர்களை எல்லாம், எப்போது வந்தீர்கள் என்று கேட்கக்கூட, எனது மனம் துணிவைப் பெறவில்லை. அந்தளவுக்கு, அவர்கள் போலீஸால் தேடப்படுபவர்களாக, விலங்கு மாட்டுவதற்கு தயாராக இருக்கிறோம் என அழைக்கப்படுபவர்களாக, உள்ளார்கள். அப்படி தேடப்படும் நிலையிலும்கூட, நமது செயற்குழு கூட்டத்துக்கு மண்டபம் நிறைந்து வழிகிற அளவுக்கு வந்திருக்கிறீர்கள்” என்று கழகக் கண்மணிகளைப் பார்த்து உருகினார்.

செயற்குழு கூட்டம் ரகசியமாக நடைபெறவில்லை. கூட்டம் நடைபெற்ற இடத்துக்கு வெளியே பாதுகாப்புக்காக கோவை போலீஸார் நின்றிருந்தனர். கூட்டம் முடிந்தபின் வெளியே வந்த வீரபாண்டியார், போலீஸை ஒரு கேலிச் சிரிப்புடன் பார்த்துவிட்டு, தனது வண்டியில் ஏறி, போலீஸின் முகத்தில் டீசல் புகை அடித்துவிட்டுச் சென்றார்!

தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது ; கோவையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் கருணாநிதி பேச்சு.தி.மு.க. செயற்குழு கூட்டம் கோவையில் அறிஞர் அண்ணா வளாகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தை தி.மு.க. தலைவர் கருணாநிதி தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

எப்படிப்பட்ட முக்கியமான நேரத்திலே நாம் இங்கே கூடியிருக்கின்றோம் என்பதை நான் நினைவுபடுத்த வேண்டிய அவசியமில்லை. ஒரு மாநிலத்தில் பெரிய பொதுத்தேர்தல் நடைபெற்று, அந்தத் தேர்தலில் தி.மு.க. மகத்தான வெற்றி பெறும் என்ற நம்பிக்கையோடு இருந்து,

நேர்மாறான விளைவுகளின் காரணமாக இன்று நாம், ஆளுங்கட்சியாக இல்லாவிட்டாலும் எதிர்க்கட்சியாகவாவது இருக்கக் கூடிய நிலைமையையும் பெறாமல், எதிர்க்கட்சிக் குழுக்களிலே ஒன்றாக இடம்பெற்றிருக்கின்ற நிலையில், நாம் இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டிருக்கின்றோம்.

இது யாரால் வந்த நிலை என்று சிந்திப்பதைவிட நமக்கு நாமே தேடிக் கொண்ட முடிவு இது என்று சொன்னால், அது கேள்விக்கு இடமில்லாத ஒரு உண்மை என்பதை நீங்களும் உணர்வீர்கள். நான் உணர்ந்த காரணத்தால்தான் இதைச் சொல்லுகின்றேன். ஒவ்வொருவரும் நம்முடைய உள்ளத்தைத் தொட்டுப் பார்த்து, நெஞ்சைத் தடவிப் பார்த்து, தெரிந்து கொண்டிருக்கின்ற அந்த உண்மையை நான் மீண்டும் மீண்டும் இங்கே கிளறி, யாரையும் புண்படுத்த விரும்பவில்லை.

ஏனென்றால், இன்றைக்குக் கழகம் புண்பட்டிருக்கின்றது. கழகம் புண்பட்டிருக்கிறது என்றால், நான் புண்பட்டிருக்கின்றேன். பொதுச்செயலாளர் பேராசிரியர் புண்பட்டிருக்கின்றார். கழகத்தினுடைய தளபதிகள் புண்பட்டிருக்கின்றார்கள். கழகத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடிய முன்னணி வீரர்கள் எல்லாம் புண்பட்டிருக்கின்றார்கள் என்பது அதற்கு பொருள்.

ஆகவே, இந்தப் புண்ணை ஆற்றிக் கொள்ள, மீண்டும் தி.மு.க.வுடைய ஆற்றல் பெருகி, தி.மு.க. அகிலம் பரவ இருவண்ணக் கொடியை ஏற்றுகின்ற அந்தக் காலம் நிச்சயமாக வரும், வரவேண்டும் என்பதற்காகத்தான் நாம் மீண்டும் இன்றைக்கு பூஜ்யத்திலே இருந்து ஆரம்பிக்கின்றோம். இருபது பேரோ, இருபத்திரண்டு பேரோ சட்டசபையிலே இருப்பதாலோ, நாடாளுமன்றத்தில் சிலபேர் கழகத்தின் சார்பில் இடம் பெற்றிருப்பதாலோ நாம் பெரிய அளவிலே மகத்தான மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று எண்ணிக் கொள்ள முடியாது.

இந்த இயக்கத்தை நடத்துவது, நடத்திக் கொண்டிருப்பது, நடத்தியதெல்லாமே, திராவிட சமுதாயத்திற்கு, திராவிட இனத்திற்கு ஏற்றமும் வெற்றியும் கிடைத்திட வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால், இன்றைக்கு ஒரு கட்சியினுடைய வெற்றி தோல்விகளால் ஒரு கொள்கை நிர்ணயிக்கப்படுகின்றது என்று யாரும் சொல்லமுடியாது. இப்போது வெற்றி பெற்றிருக்கின்ற அ.தி.மு.க. கட்சியின் வெற்றியில் கொள்கை நிர்ணயிக்கப்பட்டுள்ளதா என்று கேட்டால், ஆமாம், அந்தக் கொள்கைக்கு கிடைத்த வெற்றி என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.

யாருக்கு வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ, நமக்குக் கிடைத்திருக்கின்ற தோல்வி, நம்முடைய கொள்கைக்கு, லட்சியத்திற்கு, எதிர்காலத்திற்கு, நம்முடைய சந்ததியினருக்கு, நம்முடைய வருங்கால தலைமுறைக்கு கிடைத்திருக்கக்கூடிய தோல்வி என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அதனால்தான், இன்றைக்கு நீட்டி முழங்கி திராவிட முன்னேற்றக் கழகத்தை அழித்துவிட்டோம் என்றெல்லாம் சிலர் நம்மைப் பார்த்து கேலி செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், நான் சொல்லுகின்றேன். இதை தோல்வி என்று கருதக்கூடாது. நாம் சந்திக்காத தோல்விகள் இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்த வரையில், ராஜீவ்காந்தி கொல்லப்பட்டபோது, ஒரே ஒரு இடத்திலேதான் நாம் வெற்றிபெற முடிந்தது. சென்னை துறைமுகம் தொகுதியிலே நான் ஒருவன்தான் வெற்றிபெற்று, அதையும் ராஜினாமா செய்துவிட்டு, அன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகம், தனித்து எந்தவிதமான உதவியும் துணையுமின்றி நிற்க நேர்ந்தது.

அந்தக்காலத்திலேயேகூட, அந்த ஒரு தொகுதியிலே இருந்து தொடர்ந்து பல தொகுதிகளைப் பெற்று, ஆட்சியை அமைத்தோம் என்றால் மீண்டும் அந்தக் காலம் வராமலேயே போகாது. மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற காரணத்தால், நம்முடைய கொள்கைகள், எண்ணங்கள், கருத்துக்கள், லட்சியங்கள், குறிக்கோள்கள் இவை எல்லாம் நிறைவேறுவதற்கு நாம் வெற்றி பெற்றாக வேண்டும்.

அந்த வெற்றி ஏதோ பத்து இடம், பதினைந்து இடம் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் இருக்கிறோம் என்ற அந்த வெற்றியல்ல. அப்படிப்பட்ட வெற்றிக்காக நாம் பாடுபடவில்லை. நாம், எம்.பிக்கள் - எம்.எல்.ஏ.,க்கள் வரவேண்டுமென்று எண்ணுகிற அதேநேரத்தில், அந்த எண்ணிக்கையின் காரணமாக நம்முடைய கொள்கை வளர வேண்டும், கொள்கை வலுத்திட வேண்டும், லட்சியம் ஈடேற வேண்டும் என்பதை சேர்த்துத்தான் தேர்தலில் நாம் போட்டியிடுகின்றோம். இன்று நான், இங்கே எதிரே அமர்ந்திருக்கின்ற நண்பர்களை எல்லாம் பார்க்கின்றேன்.

அவர்களைப் பார்த்து, எப்போது வந்தீர்கள் என்று கேட்பதற்குக்கூட என்னுடைய மனம் அவ்வளவு துணிவைப் பெறவில்லை. அந்தளவிற்கு தேடப்படுபவர்களாக, வேட்டையாடப்படுபவர்களாக விலங்கு மாட்டுவதற்கு தயாராக இருக்கிறோம் வா என்று அழைக்கப்படுவர்களாக, திராவிட முன்னேற்றக் கழகத்தார் - அண்ணாவின் தம்பிகள் இங்கே அமர்ந்திருக்கின்ற காட்சியை நான் காணுகின்றேன். அதற்காக நாம், நிலைகுலைந்து போய்விடவில்லை.

இந்த நிலையிலும்கூட, நம்முடைய செயற்குழுக் கூட்டத்திற்கு, இந்த மண்டபம் நிரம்பி வழிகின்ற அளவிற்கு, இங்கே வந்திருக்கின்றீர்கள் என்றால், தி.மு.க.வை யாரும், எந்த நேரத்திலும் அழித்துவிட முடியாது. "எவரும் அழிக்க முடியாது'' திராவிட முன்னேற்றக் கழகம் என்பது எஃகுக் கோட்டை. அது ஊதி, ஊதி அலைக்கழிக்கப்படுகின்ற துரும்பல்ல.

இது தூண். இந்தத் தூணை ஆட்டவோ, அசைக்கவோ யாராலும் முடியாது என்பதை, இன்று நேற்றல்ல, நீண்ட நெடுங்காலமாக, பெரியாருடைய காலத்திலிருந்து, அறிஞர் அண்ணாவினுடைய காலத்திலிருந்து, இன்றைக்கு நம்முடைய காலம் வரை, எவ்வளவு அக்கிரமங்களை - போட்டிகளை நாம் சந்தித்து, இந்த தியாக உள்ளத்திற்கு சொந்தக்காரர்கள் திராவிட முன்னேற்றக் கழகம்தான் என்பதை நிரூபித்து, நாம் நம்முடைய கொடி நிழலில், கொள்கைகளை வளர்த்துக் கொண்டிருக்கின்றோம்.

நான் கேட்கின்றேன். நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இப்போது ஏற்பட்டிருக்கிற நெருக்கடி, தி.மு.க.வுக்கு புதிய நெருக்கடி அல்ல. இன்றைக்கு வீரபாண்டி ஆறுமுகம் தேடப்படுகிறார் என்பது மாத்திரமல்ல. நானே தேடப்பட்டவன்தான். நம்முடைய கழகத்தின் முன்னணி வீரர்களெல்லாம் தேடப் பட்டவர்கள்தான். அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற அடுத்த திங்களிலேயே என்னை என்ன பாடுபடுத்தி, சிறையிலே அடைத்தார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

எமர்ஜென்சியைவிட கொடுமையா இந்தியாவிலே வரப்போகிறது. தமிழ்நாட்டிலே வரப்போகிறது. எமர்ஜென்சியையே ஊதியவர்கள் நாம். இன்றைக்கு யாருக்கும் பயப்படமாட்டோம். அத்தகைய துணிச்சல் உள்ள சிங்கங்களாக, வீரர்களாக, வேங்கைகளாக இருக்கின்றோம். தி.மு.க.வின் தீரர்கள் - செயற்குழு உறுப்பினர்களாக இன்றைக்கு கூடியிருக்கின்றீர்கள். செயற்குழுவில் என்னென்ன திட்டங்களைத் தீட்ட வேண்டும். மேலும், கழக வளர்ச்சிக்கு என்னென்ன காரியங்களை ஆற்ற வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் நாளையதினம் பொதுக்குழுவிலே விரிவாக நாம் பேச இருக்கின்றோம்.

அதற்கான தீர்மானங்கள் என்னென்ன, இருபத்தைந்து, முப்பது தீர்மானங்களுக்கு மேல், நாளைய தினம் (இன்று) நிறைவேற்றப்பட இருக்கிறது. அந்தத் தீர்மானங்கள் எப்படி அமையவேண்டும் என்பதற்கான அடித்தளத்தை இன்றைக்கு நீங்கள் அமைத்துத் தரவேண்டிய பொறுப்பில் இருக்கிறீர்கள். அதற்குத்தான் இந்த செயற்குழு. இந்தச் செயற்குழுவிலே இன்றைக்கு போடப்படுகின்ற அடித்தளம், நாளைய பொதுக்குழுவின் தீர்மானங்களாக வெளிவரும்.

"இனி பொறுப்பதில்லை'' என்ற பாரதியினுடைய வாசகத்தை மனதிலே பதிய வைத்துக் கொண்டு, பொறுப்பதில்லை என்று சொல்வதிலிருந்து, அந்த நிலையை அடைய, வென்றிட, வாகை சூடிட, நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை எல்லாம் நிர்ணயிக்கின்ற குழுவாகத்தான் நாளைய தினம் நடைபெறவிருக்கின்ற பொதுக்குழு அமையவிருக்கின்றது. அதற்கேற்ப இந்தச் செயற்குழுவிலே உங்களுடைய கருத்துகளை எடுத்துச் சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, என்னுடைய முன்னுரையை நிறைவு செய்கின்றேன்.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

'நோ ஜீன்ஸ் - பனியன்... ' : மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தடை !மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஜீன்ஸ் பேண்ட் - பனியன் ஆடை அணியக்கூடாது என்று புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள 17 அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கவுன்சிலிங் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி கலை அரங்கில் நடைபெற்று முடிந்தது.

இடம் கிடைத்த அனைத்து மாணவர்களுக்கும் அந்தந்த கல்லூரிகளுக்கு வந்து சேரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி அந்தந்த கல்லூரிகளுக்கு மாணவ - மாணவிகள் பெற்றோர்களுடன் வந்திருந்தனர்.

அவர்களுக்கு கல்லூரி டீன்கள் மற்றும் துறை பேராசிரியர்கள் தக்க ஆலோசனைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

சென்னை மருத்துவ கல்லூரியில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு மாணவ - மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் (டீன்) டாக்டர் கனகசபை தலைமை தாங்கி கூட்டத்தை நடத்தினார். கூட்டத்தில் அவர் பேசுகையில், "இந்தியாவிலேயே மிக பழமை வாய்ந்த மருத்துவ கல்லூரி சென்னை மருத்துவ கல்லூரி. 176 வருடத்தை தாண்டிவிட்டது. இந்த கல்லூரியில் படித்த மாணவ-மாணவிகள் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் மருத்துவத்துறையில் பல்வேறு நிபுணர்களாக சிறந்து விளங்குகிறார்கள்.

நாங்கள் மாணவராக இருந்தபோது ஆசிரியர்களுக்கு மிகுந்த மரியாதை கொடுத்தோம். ஆனால் அந்த நிலை இப்போது இல்லை. பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் மதிக்க வேண்டும்.

ராகிங் பயம் வேண்டாம்

புதிதாக இங்கு சேர்ந்துள்ள மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் ராகிங் பற்றிய பயம் தேவை இல்லை. சீனியர் மாணவர்களே இன்று உங்களை வரவேற்று நாங்கள் இருக்கிறோம் ராகிங் பற்றி பயப்படாதீர்கள் என்று கூறியிருக்கிறார்கள். ராகிங் நடக்காது. இருப்பினும் புகார் பெட்டி வைத்துள்ளோம். ராகிங் நடக்காமல் தவிர்க்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

8 புதிய மாணவர்களுக்கு ஒரு சீனியர் மாணவர் ஒதுக்கப்பட்டு அவரது செல் நம்பர் கொடுக்கப்பட்டுள்ளது. எந்த பிரச்சினை இருந்தாலும் உடனே அவர்கள் அந்த சீனியர் மாணவருடன் தொடர்பு கொள்ளலாம்.

ஜீன்ஸ் பேண்ட் அணியக் கூடாது

மாணவ - மாணவிகள் முதலில் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். ஆடை அணிவதில் கட்டுப்பாடு தேவை. மாணவர்கள் ஜீன்ஸ் பேண்ட் அணியக்கூடாது. பனியன் ஆடை, டீ சர்ட் அணியக்கூடாது.

மாணவிகள் சேலை அல்லது சுடிதார் அணிந்து வரவேண்டும். மற்ற ஆடைகளை அணியக்கூடாது. கண்ணியமாக தோற்றமளிக்க வேண்டும். நீங்கள் சுத்தமாக இருக்க வேண்டும். ஆரோக்கியமாக உடலை வைத்துக்கொள்ள வேண்டும். அப்படி செய்தால்தான் நன்றாகப் படிக்க முடியும்," என்றார்.

இந்தப் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ளுங்கள்...

பெற்றோர் தரப்பில் ஒருவர் பேசுகையில், "எங்கள் குழந்தைகளை மருத்துவ ஆசிரியர்களான உங்களிடம் ஒப்படைத்துவிட்டோம். ராகிங் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது உங்கள் கடமை. இனிமேல் இவர்கள் உங்கள் பிள்ளைகள்," என்றார்.

சென்னை மருத்துவ கல்லூரி போல மாணவ-மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாட்டை அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் கொண்டுவந்தால் நல்லது என்று டாக்டர்களும், சில பெற்றோர்களும் தெரிவித்தனர். எனவே மற்ற மருத்துவ கல்லூரிகளிலும் இந்த உடைக்கட்டுப்பாடு அமலுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

குக்குடாசனம், சதுர கோணாசனம், உதித்தகாடி ஐக்கியபாத சக்ராசனம், வஜ்ரோலி முத்ரா நவாசனம்,

குக்குடாசனம்.
குக்குடாசனம்


குக்குடம் என்றால் கோழி என்று பொருள்படும். என்ன - நாம் மனிதனாக இருக்கிறோம். மனிதனைவிட மிருகங்களுக்கு ஓர் அறிவு குறைச்சல், அதன் பெயரை சூட்டி அழைப்பதன் மூலம் நாம் இன்னும் கீழே அல்லவா செல்கிறோம் என்று ஒரு என்ஜீனியர் அன்பர் கேட்டார்.

ஒவ்வொரு விலங்கினம், பறவையிடமும் ஒவ்வொரு தனித்திறமை உண்டு. அதன் ஆற்றலை பெறவே மறைமுகமாக இப்பெயரை சித்தர்கள் சூட்டியுள்ளனர். அது போல் இவ்வாசனம் செய்வதன் மூலம் சில சூட்சுமங்கள் ரகசியமாக விளக்கப்படுகின்றன. நீங்கள் இவ்வாசனத்தை பழகி வரும் போது உடலின் உணர்வுகளை நரம்பு துடிப்புகளால் அறிந்து கொள்வீர்கள்.

செய்முறை:

பத்மாசனமிட்டு முன்னுள்ள தொடையிடுக்கில் கீழ் மெதுவாக கை விரலை நுழைக்கவும். பின்னர் கைகளை உள்ளே விட்டு உள்ளங்கைகள் நன்றாக தரையில் ஊன்றிய படி எழவும், 20 எண்ணும் வரை இருந்து பின் அமரவும், ஓய்வெடுத்த பின் செய்யவும், 3 முதல் 5 தடவைகள் செய்யலாம்.

பலன்கள்:

கல்லீரல், மண்ணீரல், தீனிப்பை நன்கு செயல்படும். இதயம் பலம் பெறும். மனம் ஒரு நிலைப்படும். முழங்கால் மூட்டு வலி, நீங்கும். உடல் பாரம் முழுவதும் கைகள் தாங்கி நிற்பதால் கைகள், புஜங்கள், தோள் பட்டைகள் அதிகமான பலம் பெறும்.


சதுர கோணாசனம்.
சதுர கோணாசனம்

செய்முறை:

இடது காலை பின்னால் மடக்கி வைக்கவும், வலது கையால் வலது காலை மேலே தூக்கி, இடது கையால் தலையைச் சுற்றி, இரு கைகளை கோர்த்துப் பிடிக்கவும். 20 எண்ணும் வரை இருந்து கைகளை விடுவித்து காலை கீழே போடவும். ஓய்வெடுத்து அடுத்த பக்கம் செய்யவும்.இவ்வாறு நான்கு முறை செய்யவும்.

பலன்கள்:

இதயம், நுரையீரல் நல்ல பலம் பெறும். சுறுசுறுப்பு, ஞாபக சக்தி அதிகரிக்கும்.


உதித்தகாடி ஐக்கியபாத சக்ராசனம்.
உதித்தகாடி ஐக்கியபாத சக்ராசனம்
செய்முறை:

இரு கால்களையும் மூச்சை இழுத்தபடியே மேலே தூக்கவும். இரு கைகளினால் புட்டங்களை தூக்கிப் பிடிக்கவும். இடது காலின் குதிகாலை வலது முழங்காலில் வைக்கவும். முழங்காலில் முகவாய்க் கட்டையை வைக்கவும். 20 எண்ணும் வரை இருந்து பின்னர் கீழே படுக்கவும். பின்னர் வலது புறம் செய்யவும். 4 முதல் 6 தடவைகள் செய்யவும்.

பலன்கள்:

இரைப்பை, பித்தப்பை, குடல்கள் எல்லாம் அழுத்தி கசக்கப் படுவதால் சோர்வு அகன்று, சுறுசுறுப்பு அதிகமாகும். சிறுநீரகம் நன்றாக செயல்படும். மூல வியாதி அகலும். இதயத்திற்கு நல்ல பலமுண்டாகும்.


வஜ்ரோலி முத்ரா நவாசனம்.
வஜ்ரோலி முத்ரா நவாசனம்

செய்முறை:

தொடைகளை ஒட்டி இடுப்பை அணைத்தவாறு கைகளை தரையில் நன்றாக ஊன்றிக் கொள்ளவும். மூச்சை வெளியே விட்டு இரு கால்களையும் மேலே தூக்கவும். 20 எண்ணும் வரை இருந்து கால்களை கீழே போடவும். நான்கு தடவைகள் செய்யவும்

பலன்கள்:

அடி வயிறு நன்கு கசக்கப்படுகிறது. வயிற்றினுள் உள்ள உறுப்புகள் சுத்தமாவதுடன் புதிய உத்வேகம் பெறும். இதயம் பலமாகும். கால்களில் உள்ள வலிகள் அகன்று பலம் பெறும். மூல வியாதிகள் அகலும்.