Sunday, July 24, 2011

'நோ ஜீன்ஸ் - பனியன்... ' : மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தடை !



மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஜீன்ஸ் பேண்ட் - பனியன் ஆடை அணியக்கூடாது என்று புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள 17 அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கவுன்சிலிங் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி கலை அரங்கில் நடைபெற்று முடிந்தது.

இடம் கிடைத்த அனைத்து மாணவர்களுக்கும் அந்தந்த கல்லூரிகளுக்கு வந்து சேரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி அந்தந்த கல்லூரிகளுக்கு மாணவ - மாணவிகள் பெற்றோர்களுடன் வந்திருந்தனர்.

அவர்களுக்கு கல்லூரி டீன்கள் மற்றும் துறை பேராசிரியர்கள் தக்க ஆலோசனைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

சென்னை மருத்துவ கல்லூரியில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு மாணவ - மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் (டீன்) டாக்டர் கனகசபை தலைமை தாங்கி கூட்டத்தை நடத்தினார். கூட்டத்தில் அவர் பேசுகையில், "இந்தியாவிலேயே மிக பழமை வாய்ந்த மருத்துவ கல்லூரி சென்னை மருத்துவ கல்லூரி. 176 வருடத்தை தாண்டிவிட்டது. இந்த கல்லூரியில் படித்த மாணவ-மாணவிகள் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் மருத்துவத்துறையில் பல்வேறு நிபுணர்களாக சிறந்து விளங்குகிறார்கள்.

நாங்கள் மாணவராக இருந்தபோது ஆசிரியர்களுக்கு மிகுந்த மரியாதை கொடுத்தோம். ஆனால் அந்த நிலை இப்போது இல்லை. பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் மதிக்க வேண்டும்.

ராகிங் பயம் வேண்டாம்

புதிதாக இங்கு சேர்ந்துள்ள மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் ராகிங் பற்றிய பயம் தேவை இல்லை. சீனியர் மாணவர்களே இன்று உங்களை வரவேற்று நாங்கள் இருக்கிறோம் ராகிங் பற்றி பயப்படாதீர்கள் என்று கூறியிருக்கிறார்கள். ராகிங் நடக்காது. இருப்பினும் புகார் பெட்டி வைத்துள்ளோம். ராகிங் நடக்காமல் தவிர்க்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

8 புதிய மாணவர்களுக்கு ஒரு சீனியர் மாணவர் ஒதுக்கப்பட்டு அவரது செல் நம்பர் கொடுக்கப்பட்டுள்ளது. எந்த பிரச்சினை இருந்தாலும் உடனே அவர்கள் அந்த சீனியர் மாணவருடன் தொடர்பு கொள்ளலாம்.

ஜீன்ஸ் பேண்ட் அணியக் கூடாது

மாணவ - மாணவிகள் முதலில் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். ஆடை அணிவதில் கட்டுப்பாடு தேவை. மாணவர்கள் ஜீன்ஸ் பேண்ட் அணியக்கூடாது. பனியன் ஆடை, டீ சர்ட் அணியக்கூடாது.

மாணவிகள் சேலை அல்லது சுடிதார் அணிந்து வரவேண்டும். மற்ற ஆடைகளை அணியக்கூடாது. கண்ணியமாக தோற்றமளிக்க வேண்டும். நீங்கள் சுத்தமாக இருக்க வேண்டும். ஆரோக்கியமாக உடலை வைத்துக்கொள்ள வேண்டும். அப்படி செய்தால்தான் நன்றாகப் படிக்க முடியும்," என்றார்.

இந்தப் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ளுங்கள்...

பெற்றோர் தரப்பில் ஒருவர் பேசுகையில், "எங்கள் குழந்தைகளை மருத்துவ ஆசிரியர்களான உங்களிடம் ஒப்படைத்துவிட்டோம். ராகிங் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது உங்கள் கடமை. இனிமேல் இவர்கள் உங்கள் பிள்ளைகள்," என்றார்.

சென்னை மருத்துவ கல்லூரி போல மாணவ-மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாட்டை அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் கொண்டுவந்தால் நல்லது என்று டாக்டர்களும், சில பெற்றோர்களும் தெரிவித்தனர். எனவே மற்ற மருத்துவ கல்லூரிகளிலும் இந்த உடைக்கட்டுப்பாடு அமலுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

No comments: