Friday, July 8, 2011

ராசா, தயாநிதிக்கு பதில் யாருக்கும் பதவியில்லை திமுக முடிவு !



தயாநிதி மாறன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதால், அவருக்குப் பதில் திமுகவிலிருந்து யார் அமைச்சராக்கப்படவுள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், காலியாகவுள்ள ராசா மற்றும் தயாநிதி மாறன் ஆகியோரின் இடங்களுக்கு திமுக சார்பில் யாரையும் பரிந்துரைப்பதில்லை என்ற முடிவுக்கு திமுக தலைவர் கருணாநிதி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

5 ஆக சுருங்கிய திமுகவின் பிரதிநிதித்துவம்

மத்திய அமைச்சரவையில் திமுகவுக்கு மொத்தம் 3 கேபினட் அமைச்சர்கள் மற்றும் 4 இணை அமைச்சர்கள் இருந்தனர். இவர்களில் தற்போது தயாநிதி மாறன், ராசா ஆகிய இரு கேபினட் அமைச்சர்களும் ராஜினாமா செய்து விட்டனர். மு.க.அழகிரி மட்டுமே கேபினட் அமைச்சராக இருக்கிறார். 7 பேராக இருந்த திமுக அமைச்சர்களின் எண்ணிக்கை தற்போது 5 ஆக குறைந்து விட்டது.

இந்த நிலையில் ராசாவுக்குப் பதில் வேறு யாரையும் திமுக சார்பில் மத்திய அமைச்சரவையில் இதுவரை சேர்க்கவில்லை. அதே நேரத்தில் தயாநிதி மாறனுக்குப் பதில் வேறு ஒரு திமுக எம்.பிக்கு பதவி தர காங்கிரஸ் தயாராக உள்ளது. அதற்கான பெயரைப் பரிந்துரைக்குமாறு திமுகவுக்கு அது கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.

பாலு மீது பிரதமர் அதிருப்தி

திமுக சார்பில் டி.ஆர்.பாலுவை கேபினட் அமைச்சராக விருப்பம் தெரிவிக்கப் பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பாலுவுக்கு அமைச்சர் பதவிதர பிரதமர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சரவையில் கேபினட் அமைச்சராக இருந்தவர் பாலு. ஆனால் 2வது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சரவையில் அவரை சேர்க்க பிரதமர் மறுத்து விட்டார். அதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் ஆதரவு தெரிவித்ததால் பாலுவுக்கு பதவி கிடைக்கவில்லை. மு.க.அழகிரி அமைசசரவையில் சேர்க்கப்பட்டதால்தான் பாலுவுக்கு இடம் இல்லாமல் போனதாகவும் கூறப்பட்டது.

தற்போது மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதால் பாலுவை அந்த இடத்திற்குக் கொண்டு வர திமுக நினைத்ததாக கூறப்பட்டது. ஆனால் இப்போதும் பாலு மீது பிரதமர் அதிருப்தியில் உள்ளதால் மீண்டும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஒரு காலத்தில் டெல்லியில் திமுகவின் முகங்களாக திகழ்ந்தவர்கள், நேற்று பதவியை ராஜினாமா செய்த தயாநிதி மாறனின் தந்தை முரசொலி மாறனும், டி.ஆர்.பாலுவும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

யாரையும் சேர்ப்பதில்லை

பாலுவைச் சேர்க்க காங்கிரஸ் மற்றும் பிரதமரிடம் தயக்கம் காணப்படுவதால் பேசாமல் யாரையும் சேர்க்க வேண்டாம் என்ற முடிவுக்கு திமுக தலைமை வந்து விட்டதாக கூறப்படுகிறது.

எனவே ராசா மற்றும் தயாநிதி மாறனுக்குப் பதில் வேறு யாரையும் திமுக பரிந்துரைக்காது என்று கூறப்படுகிறது.

மத்திய அமைச்சரவையில் திமுக அமைச்சர்கள் விவரம்:

ரசாயாணத்துறை அமைச்சர் மு.க.அழகிரி,
நிதித்துறை இணைஅமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்,
தகவல் ஒலிபரப்புத்துறை இணைஅமைச்சர் ஜெகத்ரட்சகன்,
சமூக நீதித்துறை இணைஅமைச்சர் நெப்போலியன்,
சுகாதாரத் துறை இணை அமைச்சர் காந்திசெல்வன்.

அனில் அம்பானி, தயாநிதி மாறனையும் 2 ஜி ஊழல் வழக்கில் சேர்க்கக் கோரி வழக்கு.



2-ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானி, தயாநிதி மாறன் ஆகியோரையும் சேர்க்க சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொது நல வழக்குகளுக்கான மையம் என்ற அமைப்பு அந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

அதில், "அனில் அம்பானி குழுமத்தைச் சேர்ந்ததாகக் கூறப்படும் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் மூன்று ஊழியர்கள் அலைக்கற்றை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். அனில் அம்பானியின் ஒப்புதலின்றி தங்கள் நிறுவனம் சார்பாக அவரது ஊழியர்கள் இவ்வளவு பெரிய ஊழலில் ஈடுபட வாய்ப்பில்லை. எனவே, அவரையும் இவ்வழக்கில் சேர்க்க சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும்.

"அனில் அம்பானிக்குக் தெரியாமல் அவரது ஊழியர்கள் இந்த ஊழலில் ஈடுபட்டிருந்தால் அவர்களை அம்பானி பணி நீக்கம் செய்திருக்க வேண்டும். ஆனால், அவர்களைத் திஹார் சிறையில் சந்தித்து இவ்வழக்கை சந்திக்க அனைத்து உதவிகளையும் செய்வதாக அம்பானி உறுதியளித்துள்ளதாகத் தெரிகிறது.

இதன் மூலம், அலைக்கற்றை ஊழலில் தனக்குள்ள பங்கை தனது ஊழியர்கள் வெளியே சொல்லிவிடக்கூடாது என்பதை அவர் உறுதி செய்து கொள்கிறார்," என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல ஏர்செல் ஊழல் விவகாரத்தில் சிக்கி பதவியை இழந்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனையும் இந்த விசாரணையில் சேர்க்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

கள்ளக்காதலரின் மனைவி கொலை கைதாவாரா? நடிகை நிலா



நடிகை பிரியங்கா சோப்ராவின் ஒன்றுவிட்ட சகோதரியும், தமிழ்-தெலுங்கு நடிகையுமான மீரா சோப்ரா என்கிற நிலாவைக் கைது செய்ய ஹரியானா போலீஸார் டெல்லி விரைந்துள்ளனர்.

நடிகை நிலாவுடன் இருந்த கள்ளத்தொடர்பால் தனது தங்கை ருச்சியை அவரது கணவர் கொலை செய்து விட்டார் என்று ஹரியானா மாநிலம் குர்காவ்னைச் சேர்ந்த ருச்சியின் சகோதரி ஷெபாலி போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து நிலாவைக் கைது செய்ய போலீஸார் விரைந்துள்ளனர்.

குர்காவ்னைச் சேர்ந்தவர் ருச்சி (28). அவரது கணவர் சுமித் புட்டன். இருவரும் ஏஞ்சல் புரோகரேஜ் எனும் நிறுவனத்தை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 6ம் தேதி ருச்சி தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

இது குறித்து தகவல் அறிந்த குர்காவ்ன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ருச்சியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில் ருச்சியின் கணவர் சுமித் தான் அவரைக் கொன்று, தூக்கில் தொங்கவிட்டது தெரிய வந்தது. இதையடுத்து நேற்று சுமித் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து ருச்சியின் சகோதரி ஷெபாலி கூறுகையில், சுமித் ருச்சியைக் கொன்று, தூக்கில் தொங்கவிட்டுள்ளார். சுமித்துக்கும், நடிகை பிரியங்கா சோப்ராவின் ஒன்றுவிட்ட சகோதரியும், நடிகையுமான மீரா சோப்ராவுக்கும் (நிலா) கள்ளத்தொடர்பு உள்ளது.

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் ருச்சிக்கும், சுமித்துக்கும் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த நாளில் இருந்தே சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் சுமித்தும், அவரது குடும்பத்தாரும் ருச்சியைக் கொடுமைப்படுத்தி வந்தனர். இவ்வாறு சித்ரவதை செய்து கொண்டே இருந்தால் ருச்சி விவாகரத்து வாங்கிக் கொண்டு சென்றுவிடுவார் என்பது அவர்கள் எண்ணம்.

அவர் இறப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன் எங்கள் தாயாருடன் போனில் பேசியுள்ளார். தன்னை குர்காவ்னில் இருந்து அழைத்துச் செல்லுமாறு கெஞ்சியுள்ளார் என்றார்.

இந்த சம்பவம் குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,

வரதட்சணைக் கொலை மற்றும் கிரிமினல் சதி செய்ததற்காக சுமித்தை இபிகோ பிரிவு 304 பி மற்றும் 120 பி ஆகியவற்றின் கீழ் கைது செய்துள்ளோம். இந்த வழக்கின் அடுத்த முக்கிய குற்றவாளியான மீரா சோப்ராவை கைது செய்ய போலீ்ஸ் படை டெல்லி விரைந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

ருச்சி இறப்பதற்கு முன்பு அவருடன் வாக்குவாதம் செய்ததாக ஒப்புக் கொண்டாலும், அவரைத் தான் கொல்லவில்லை என்கிறார் சுமித். மேலும் அவர் கூறுகையில், வீட்டிலும் சரி, அலுவலகத்திலும் சரி எனக்கும், எனது மனைவிக்கும் இடையே சுமூகமான உறவு தான் இருந்து வந்தது. கடந்த வாரம் எங்கள் புரோக்கரேஜ் ஹவுஸ் பெருத்த நஷ்டம் அடைந்தது. அந்த நஷ்டத்தால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றார்.

சமீபத்தில்தான் தனக்கு ஒருவர் ஆபாச இமெயில்களை அனுப்பி வருவதாக டெல்லி சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுத்திருந்தார் நிலா என்பது நினைவிருக்கலாம். தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களி்ல நடித்து வந்த நிலா, பின்னர் வாய்ப்பு குறைந்ததால் டெல்லி போய் செட்டிலாகி விட்டார். தமிழில் இவர் எஸ்.ஜே.சூர்யா மூலம் அன்பே ஆருயிரே படத்தின் மூலம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சலுகை : மத்திய மந்திரி கபில்சிபல் மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு.



2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விஷயத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சலுகை காட்டியதாக மத்திய மந்திரி கபில்சிபல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் பூதாகரமாக கிளம்பக் காரணமாக இருந்தது பொது நல வழக்கு மையமாகும். இந்த மையம்தான், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதை கண்டுபிடித்து ஆதாரங்களை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது.

ஆ.ராசாவை சிக்க வைத்த இந்த மையம் தற்போதைய தொலைத் தொடர்பு துறை மந்திரி கபில்சிபலுக்கு எதிராகவும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளது.

பொது நல வழக்கு மையம் சார்பில், மூத்த வக்கீல் காம்னி ஜெய்வாஸ் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது :-

13 வட்டாரங்களுக்கான 2 ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களை அனில் அம்பானியின் நிலையன்ஸ் நிறுவனம் பெற்றது. இந்த உரிமங்கள் பெற்றதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. இதைக் கண்டுபிடித்த தொலைத் தொடர்புதுறை அதிகாரிகள், ஒவ்வொரு உரிமத்தின் மீறலுக்கு ரூ.50 கோடி அபராதம் விதிக்க முடிவு செய்தனர்.

மொத்தம் 13 வட்டங்களுக்கும் சேர்த்து ரூ.650 கோடி அபராதம் விதிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்து, மத்திய மந்திரி கபில்சிபலுக்கு தொலைத் தொடர்பு துறை அதிகாரிகள், கடந்த பிப்ரவரி மாதம் 9-ந்தேதி கடிதம் எழுதினர்.

இது தொடர்பாக ஆவணங்களையும் கபில்சிபலுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் தொலைத் தொடர்பு துறை அதிகாரிகளின் பரிந்துரையை கபில்சிபல் நிராகரித்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் மீது விதிக்கப்பட்ட அபராத தொகையை வெறும் ரூ.5 கோடியாக குறைத்துவிட்டார்.

இதன் மூலம், கபில்சிபல் தனது அலுவலகத்தையும், அதிகாரத்தையும் தவறாக பயன்படுத்தி உள்ளார். எனவே, கபில்சிபலுக்கு எதிராக விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும்.

மேலும், சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த வாகன் வதி, மத்திய சட்ட அமைச்சகத்தின் ஆலோசனையை புறக்கணித்து விட்டு, அப்போதைய மந்திரி ஆ,.ராசாவுக்கு ஆலோசனை வழங்கினார். இதன் மூலம், அவர் விதிமுறைகளை மீறியுள்ளார். எனவே இவர் மீதும் சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு 11-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.