Tuesday, July 26, 2011

கலாநிதி ரகசியமாக இந்தியா வருவதற்கு…கலாநிதி மாறன், தனது் வக்கீல் மூலமாக அனுப்பிவைத்த கடிதத்தின்படி அவர், இன்று (26ம் தேதி, செவ்வாய்க்கிழமை) இந்தியா திரும்பவேண்டும். இன்று அல்லது நாளை அவரை நேரில் ஆஜராகும்படி புதிய சம்மன் ஒன்றைக் கொடுக்கும் ஏற்பாடுகளில் காவல்துறை இறங்கியிருக்கின்றது.

கேள்வி என்னவென்றால், கலாநிதி இன்று இந்தியா வந்திறங்குகிறாரா? அல்லது, ஏற்கனவே வந்துவிட்டாரா?

கலாநிதி நேற்று இரவுவரை அவரது சென்னை வீட்டுக்கு வந்ததாக தகவல் இல்லை. அவர் புத்திசாலியாக இருந்தால், வெளிநாடு ஒன்றிலிருந்து நேரடியாக சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியிருக்கவும் மாட்டார்.

அதற்கு இரு காரணங்கள் உண்டு. முதலாவது, காலாநிதி சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கினால், முன்புபோல வி.ஐ.பி. கேட் வழியாக வெளியேறுவதெல்லாம் எந்தளவுக்கு சாத்தியம் என்று சொல்ல முடியாது. சாதாரண பயணிகள் வாயிலூடாக வெளியே வந்தால், பத்திரிகையாளர்கள் மொய்த்துக் கொள்வார்கள்.

சொந்தமாக மீடியா நிறுவனம் வைத்திருக்கும் கலாநிதிக்கு, எங்கெல்லாம் நிருபர்களும், போட்டோகிராபர்களும் நிற்பார்கள் என்பது நன்றாகவே தெரியும். அதுவும் அவர் 26ம் தேதி நாடு திரும்புவார் என்று காவல்துறைக்கு கடிதம் கொடுத்துள்ளார். இதனால், 25ம், 26ம் தேதிகளில் எந்தெந்த மீடியாவின் ஆட்கள் சென்னை விமான நிலையத்தைச் சுற்றிச் சுற்றி வருவார்கள் என்பது யாருக்குத் தெரிகிறதோ இல்லையோ, கலாநிதிக்கு நன்றாகவே தெரியும்.

அடுத்த காரணம், வெளிநாடு ஒன்றிலிருந்து நேரில் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கினால், அவர் வருவதற்கு முன்னரே PNM என்ற லிஸ்ட் ஏர்போர்ட் பாதுகாப்பு பிரிவினரின் கைகளுக்கு போய்விடும். அது அப்படியே தமிழக உளவுத்துறையின் கைகளுக்கு போவதற்கு அதிக நேரம் எடுக்காது.

PNM என்பது, ஏர்லைன்ஸ் பரிபாஷையில் Passenger Name Manifest என்பதன் சுருக்கம். விமானம் புறப்படும் இடத்திலிருந்து கிளம்பி 30 நிமிடங்களுக்கு உள்ளே இந்த லிஸ்ட் ஆட்டோமேட்டிக்காக விமானம் போய்ச்சேரும் விமான நிலையத்திலுள்ள ஏர்லைன் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுவிடும்.

இந்த லிஸ்ட்டில் விமானத்தில் வந்திறங்கப்போதும் பயணிகள் அனைவரது பெயர்களும் அகர வரிசையில் இருக்கும்!

உதாரணமாக, சென்னை வரும் லுஃப்தான்சா விமானத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பிராங்பேர்ட்டிலிருந்து அந்த விமானம் மதியம் 11.05க்கு புறப்படுகிறது. சரியான நேரத்தில் புறப்பட்டால், 11.35க்கு முன் PNM சென்னையிலுள்ள லுஃப்தான்சா அலுவலக பிரின்டருக்கு வந்துவிடும்.

அப்போது சென்னையில் நேரம், மாலை 2.35. விமானம் சென்னையில் தரையிறங்குவது இரவு 11.45க்குத்தான்! அதாவது, விமானம் வந்திறங்குவதற்கு கிட்டத்தட்ட 9 மணிநேரத்துக்கு முன்னரே PNM வந்துவிடும்.

அவ்வளவு அவகாசம் போதாதா? காவல்துறை செய்ய நினைத்தால், மேஜிஸ்ட்ரேட் உத்தரவுகூட வாங்கி, விமான நிலையத்தில் கோழி அமுக்குவதுபோல ஆளை அமுக்கி விடலாம்.

கலாநிதி விவகாரத்தில் காவல்துறை அப்படிச் செய்யுமோ செய்யாதோ என்பது வேறு விஷயம். ஆனால் செய்யலாம். அதனால்தான் எழுதினோம், கலாநிதி புத்திசாலியாக இருந்தால், வெளிநாடு ஒன்றிலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு நேரில் வந்திறங்க மாட்டார் என்று!

ஓசைப்படாமல் இந்தியா வந்திறங்க சுலபமான வழி, வெளிநாட்டு விமானங்கள் வரும் சிறிய விமான நிலையம் ஒன்றுக்கு வருவதுதான். இந்தியாவில் பல விமான நிலையங்கள் அப்படி இருக்கின்றன.

உதாரணமாக, கேரள மாநிலத்திலுள்ள கொச்சின்.

ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து புறப்பட்டு, மத்திய கிழக்கு நாடு ஒன்றில் ட்ரான்சிட் போட்டுக் கொண்டு நேரே கொச்சின் வரலாம். அதுவும் குறிப்பிட்ட சில நேரங்களில் வந்திறங்கும் விமானங்கள், அட்டகாசமான டைமிங்!

யார் வருகிறார்கள் யார் போகிறார்கள் என்றே கண்டுபிடிப்பது கஷ்டம்!

குறிப்பிட்ட நேரம் என்று குறிப்பிடுவது, அதிகாலை நேரத்தை! இதோ பாருங்கள்… ஒரு அதிகாலையில் கொச்சினுக்கு வரும் வெளிநாட்டு விமானங்களின் டைமிங்கை.

துபாயிலிருந்து புறப்படும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் EK530, அதிகாலை 3.05க்கு வந்திறங்கும். அடுத்து அபுதாபியிலிருந்து புறப்படும் எதியாட் ஏர்லைன்ஸின் EY280, 3.30க்கு வந்து சேரும். அடுத்த 10 நிமிடங்களில் 3.40க்கு, தோஹாவிலிருந்து புறப்படும் கத்தார் ஏர்வேஸ் QR264 தரையிறங்கும்.

அளவில் சிறிய கொச்சின் விமான நிலையத்தில், அதிகாலையில் இப்படி 3 வெளிநாட்டு விமானங்கள் வந்திறங்கினால், இமிகிரேஷன் மற்றும் அரைவல் கன்ட்ரோல் பகுதிகள், பொள்ளாச்சி சந்தைக்குள் புகுந்துவிட்டது போல இருக்கும்.

இப்படியான நேரத்தில், கர்னல் கடாபி வந்திறங்கினாலே கண்டுபிடிக்க முடியாது. கலாநிதி மாறனை யார் கண்டுபிடிப்பது?

viruvirupu.com.

நிலஅபகரிப்பு வழக்கில் போலீசில் சரணடைந்த வீரபாண்டி ஆறுமுகத்திடம் இன்று 2-வது நாளாக விசாரணை.சேலம் அங்கம்மாள் காலனி நிலம் அபகரிப்பு, பிரிமியர் மில் அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகளில் முதல் குற்றவாளியாக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சேர்க்கப்பட்டார். அவரை சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஆஜர்ஆக ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் அவரிடம் தொடர்ந்து 3 நாட்கள் விசாரணை நடத்தி அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அவருக்கு ஜாமீன் கொடுக்கலாம் என்று அதில் கூறியிருந்தது.

ஐகோர்ட்டி உத்தரவுப்படி வீரபாண்டி ஆறுமுகம் நேற்று மத்திய குற்றப்பிரிவு போலீசில் சரண் அடைந்தார். அவருடன் டாக்டர் ஒருவர், உதவியாளர் சேகர், வக்கீல் மூர்த்தி ஆகியோர் வந்திருந்தனர். பின்னர் தனி அறையில் உதவி கமிஷனர் பிச்சை, இன்ஸ்பெக்டர்கள் சங்கமேஸ்வரன், சீனிவாசன், ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது துணை தாசில்தார்கள் பாலகிருஷ்ணன், பெரியசாமி ஆகியோரும் உடனிருந்தனர்.

மேலும் விசாரணையை வீடியோ கிராபர்கள் 2 பேர் பதிவு செய்தனர். வீரபாண்டி ஆறுமுகத்திடம் கேட்க போலீசார் தயாரித்து வைத்திருந்த கேள்விகளை ஒன்றன் பின் ஒன்றாக கேட்டனர். ஆம். இல்லை என்ற முறையில் கேள்விகள் அமைந்திருந்தது. முதல் கேள்விக்கே வீரபாண்டி ஆறுமுகம் தெரியாது என்று பதில் அளித்தார். தொடர்ந்து 10 நிமிடத்துக்கு ஒரு முறை இடைவெளி விடப்பட்டது.

பகல் 11 மணியளவில் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு வெள்ளரி பிஞ்சு, மற்றும் காபி வழங்கப்பட்டது. தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு ஒரு முறை அவரது உடலை சேலம் அரசு ஆஸ்பத்திரி, விநாயகா மிஷன் ஆஸ்பத்திரி டாக்டர்கள் பரிசோதித்தனர்.

தொடர்ந்து வீரபாண்டி ஆறுமுகத்தின் மகள் மகேஸ்வரி வீட்டில் இருந்து மதிய உணவு கொண்டு வந்தார். ஆனால் உணவை வழங்க போலீசார் மறுத்து விட்டனர். பின்னர் ஓட்டலில் இருந்து அரிசி சாதம், வெண்டைக்காய் சாம்பார், மோர் குழம்பு, ரசம், புளிக்குழம்பு, தயிர், மோர், வெண்டைக்காய் பச்சடி, உருளைக்கிழங்கு பொரியல், அப்பளம், ஊறுகாய் ஆகியவை வரவழைக்கப்பட்டு கொடுக்கப்பட்டது.

தொடர்ந்து வீரபாண்டி ஆறுமுகத்திடம் இரவு 8 மணி வரை போலீசார் விசாரணை நடத்தி பல்வேறு கேள்விகளை கேட்டனர். இதற்கு பெரும்பாபலான கேள்விக்கு தெரியாது என்றே தெரிவித்தார். விசாரணை முடிந்ததும் வீரபாண்டி ஆறுமுகம் இரவில் வீட்டுக்கு செல்வதற்கு அனுமதிக்க கோரி அவரது வக்கீல் மூர்த்தி, உதவி கமிஷனர் பிச்சையிடம் எழுத்துபூர்வமாக அனுமதி கேட்டார். அதற்கு போலீஸ் தரப்பில் ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தால் மட்டுமே வீட்டுக்கு அனுப்புவது குறித்து முடிவு செய்யப்படும் என கூறினர்.

பின்னர் நேற்று இரவு வீரபாண்டி ஆறுமுகத்துக்கு சப்பாத்தி, ஜூஸ் வழங்கப்பட்டது. தொடர்ந்து போலீஸ் நிலையத்திலேயே இரவில் தங்கவைக்கப்பட்டார். அவர் தூங்க போலீசார் சார்பில் ஒரு கட்டிலும் வழங்கப்பட்டது. பெட்ஷீட் உள்ளிட்டவை ஏற்கனவே அவரது வக்கீல் மூலம் வரவழைக்கப்பட்டு விட்டது. இரவில் போலீஸ் நிலையத்திலேயே வீரபாண்டி ஆறுமுகம் தூங்கினார். நேற்று மட்டும் வீரபாண்டி ஆறுமுகத்திடம் 103 கேள்விகள் கேட்டதாக தெரிகிறது.

போலீஸ் நிலையத்தில் தூங்கி எழுந்ததும் இன்று காலை வீரபாண்டி ஆறுமுகத்துக்கு டீ வழங்கப்பட்டது. தொடர்ந்து குளித்து முடித்து 2-வது நாள் விசாரணைக்கு தயாரானார். அவரிடம் உதவி கமிஷனர் பிச்சை 2-வது நாளாக விசாரணையை நடத்தினார். இன்றும் அவரிடம் மேலும் பல கேள்விகள் கேட்கப்படுகிறது.

வீரபாண்டி ஆறுமுகத்திடம் விசாரணை நடந்து வருவதால் போலீஸ் நிலையத்தை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. தொண்டர்களும் அதிகாலை முதலே வரத் தொடங்கினர்.

நடப்பாண்டில் சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த இயலாது - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்.ஏற்கனவே அச்சடிக்கப்பட்டுள்ள சமச்சீர் கல்வி புத்தகங்கள் தரமானதாக இல்லை. சமச்சீர் கல்வித் தரத்தை தேசிய, சர்வதேச அளவில் தரம் வாய்ந்ததாக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு கால அவசாகம் வேண்டும். எனவே, இந்த ஆண்டு சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமல்ல என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

திமுக ஆட்சியில் அமலாக்கப்பட்ட சமச்சீர் கல்வியை அதிமுக அரசு நிறுத்தி வைத்தது. மேலும் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது. அதில், இடம் பெற்றவர்களில் பெரும்பாலானோர் தனியார் பள்ளி முதலாளிகள்.

இந் நிலையில் சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையே சமச்சீர் கல்வி பாட திட்டத்தை நிறுத்தி வைப்பதற்கான சட்ட திருத்தம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்தும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இதை விசாரித்த உயர் நீதிமன்றம், சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.

இதை விசாரித்த உச்ச நீதிமன்றமும், தமிழக அரசு கடந்த ஆண்டு 1 மற்றும் 6வது வகுப்புகளுக்கு தொடங்கப்பட்ட சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தை இந்த ஆண்டும் தொடர வேண்டும். மற்ற வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி தொடர்வது குறித்து கல்வியாளர் குழு அமைத்து அறிக்கையை உயர் நீதின்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பின்படி நிபுணர்களின் அறிக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அதிமுக அரசு நிறைவேற்றிய சமச்சீர் கல்வித் திருத்தச் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

மேலும், 1 முதல் 10ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டத்தை அமலாக்க வேண்டும். ஜூலை 22ம் தேதிக்குள் சமச்சீர் கல்வி புத்தகங்களை அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்தும் தமிழக அரசு கடந்த 19ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது.

ஆனால், அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. அடுத்த மாதம் 2ம் தேதிக்குள் சமச்சீர் கல்வியை அமலாக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந் நிலையில் சமச்சீர் கல்வி கோரி பெற்றோர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கேபியட் மனு மீதும், சமச்சீர் கல்வியை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த அப்பீல் மனு மீதும் இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை நடந்தது.

நீதிபதிகள் பன்கல், தீபக் வர்மா, செளகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

பெற்றோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாத், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசு சமச்சீர் கல்வி புத்தகங்களை வழங்கவில்லை. 2 மாதங்களாக மாணவர்கள் பாடப் புத்தங்கள் இல்லாமல் பள்ளிக்குச் சென்று வருகின்றனர். அவர்களது கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இவை அனைத்தும் கருத்தில் கொள்ளப்படும் என்றனர்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.வி.ராவ், ஏற்கனவே அச்சடிக்கப்பட்டுள்ள சமச்சீர் கல்வி புத்தகங்கள் தரமானதாக இல்லை. சமச்சீர் கல்வித் தரத்தை தேசிய, சர்வதேச அளவில் தரம் வாய்ந்ததாக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு கால அவசாகம் வேண்டும். எனவே, இந்த ஆண்டு சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமல்ல என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அது எப்போது அமல்படுத்தப்படும்?, அதற்கு ஏதாவது காலக்கெடு வைத்துள்ளீர்களா? என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த ராவ், 2012ம் கல்வி ஆண்டில் சமச்சீர் கல்வியை அமல்படுத்த முயற்சி செய்யப்படும் என்றார்.

5 ஆண்டு அவகாசம் தேவை - இல.கணேசன்:

இதற்கிடையே இரு தினங்களுக்கு முன் நிருபர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவரான இல.கணேசன், சமச்சீர் கல்வியில் தரமான பாடத் திட்டத்தை வகுப்பதற்கும் அதை நடைமுறைப்படுத்துவதற்கும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் கால அவகாசம் தேவை என்று கூறியுள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு இன்று நடந்த வாதத்தின் போது, நீதிபதி மீது கோபப்பட்ட ராசாவின் வழக்கறிஞர்.


ராசாவின் நேற்றைய வாதம்.

ராசா நேற்றைய விசாரணையின்போது தனது வாதத்தில் அதிரடியான பல கருத்துக்களை தெரிவித்தார்.


“ஸ்பெக்ட்ரம் 2ஜி லைசென்ஸ் வழங்கும் விஷயத்தில் நீங்கள் என்னைச் சிறையில் அடைக்க வேண்டுமென்றால், எனக்குமுன் தொலைத்தொடர்பு அமைச்சர்களாக இருந்த அனைவரையும் என்னுடன் சிறையில் அடைக்க வேண்டும். காரணம், அவர்கள் எதைச் செய்தார்களோ, அதையேதான் நானும் செய்தேன்” என்று அவரது வாதம் தொடங்கியபோதே, களைகட்டிவிட்டது.

ஸ்வான், மற்றும் யுனிடெக் நிறுவனங்களின் ஈகுவிட்டி விற்பனை விஷயத்திலும் தன்னைக் குற்றம் சாட்ட முடியாது என்றார் அவர். “இந்த இரு நிறுவனங்கள் பற்றிய விவகாரத்தை நான் கையாளுமுன், பிரதமரிடம் விளக்கமாகத் தெரிவித்திருந்தேன. அப்போதைய நிதியமைச்சரும் (ப.சிதம்பரம்) பிரதமருடன் அந்த அறையில் இருந்தார்” என்று அவர்கள் இருவரையும் உள்ளே இழுத்தார் ராசா.

“பிரதமரும் நிதியமைச்சரும், ‘இதில் எந்தத் தவறும் கிடையாது. சட்டத்துக்கு விரோதமாக காரியமல்ல’ என்று என்னிடம் தெரிவித்திருந்தனர். அதன் பின்னரே அந்த நடைமுறைக்கு நான் அனுமதி கொடுத்தேன்.” என்று பிரதமரையும் சபையில் இழுத்தபோது, முழு கோர்ட்டும் பரபரப்பாக ராசாவைப் பார்த்துக் கொண்டிருந்தது.

“மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக அருண் ஷோரி, 26 லைசென்ஸ்களை வழங்கினார். தயாநிதி மாறன், 25 லைசென்ஸ்களை வழங்கினார். நான் (ஆ.ராசா) 122 லைசென்ஸ்களை வழங்கினேன். இங்கு எண்ணிக்கை எவ்வளவு என்பது முக்கியமல்ல. லைசென்ஸ்களை அவர்களும் வழங்கினார்கள். நானும் வழங்கினேன்.

இதில் என்னை மாத்திரம் ஏன் கேள்வி கேட்கிறீர்கள்? அவர்களை ஏன் யாருமே கேள்வி கேட்கவி்ல்லை?” என்று முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் களையும் தனது வாதத்தில் இழுத்து விட்டார்.

“நான் இவ்வளவு எண்ணிக்கையில் லைசென்ஸ்களை வழங்கியதால்தான், போன் கட்டணங்கள் குறைந்தன. ஒரு சாதாரண ரிக்ஸாகாரர்கூட செல்போன் வைத்திருக்கும் நிலை ஏற்பட்டது. அந்த வகையில், இந்த நாடே என்னைப் பாராட்ட வேண்டும்” என்று ராசா பேசி முடித்தபோது, கோர்ட்டில் இருந்த அனைவருமே திகைத்துப்போன நிலையில் காணப்பட்டனர்.

இன்று நடந்த ராசாவின் வழக்கறிஞர்
வாதம்

2ஜி லைசென்ஸ்கள் வழங்கியதில் ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக மத்திய தணிக்கைத் துறை அதிகாரி கூறியது அர்த்தமே அல்லாதது. இதை சிபிஐ கூட ஏற்கவில்லை.

ஸ்பெக்ட்ரம் விற்பனையால் நாட்டுக்கு எந்த நஷ்டமும் ஏற்படவில்லை என்று நாடாளுமன்றத்திலேயே பிரதமரும் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபலும் கூறியுள்ளனர். நான் செய்தது எல்லாமே அமைச்சரவை எடுத்த முடிவுகளை அமல்படுத்தியது மட்டும் தான்.

2ஜி லைசென்ஸ் ஒதுக்கீட்டில் சதி நடந்தது என்கிறார்கள். என்ன சதி நடந்தது?. யூனிடெக் நிறுவனத்துக்கும் லைசென்ஸ் தரப்பட்டுள்ளது. அதன் போட்டி நிறுவனத்துக்கும் அடுத்த நாளே லைசென்ஸ் தரப்பட்டுவிட்டது. இதில் என்ன சதி நடந்தது என்கிறீர்கள்?.

வேண்டுமானால், இந்த விவகாரத்தில் தவறு நடந்துவிட்டது என்று சொல்லலாம். லைசென்களை ஒதுக்கியதில் சிறிய தவறுகள் மட்டுமே நடந்தன. மனிதனாகப் பிறந்த எல்லோருமே தவறு செய்வது இயற்கை தான். மற்றபடி சதி நடந்தது என்பதெல்லாம் கற்பனையான வாதம்.

ஸ்வான் டெலிகாம் நிறுவனமும் யூனிடெக் வயர்லெஸ் நிறுவனமும் தங்களது பங்குகளை எடில்சாட் மற்றும் டெலிநார் ஆகிய நிறுவனங்களுக்கு விற்றது அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்குத் தெரியும். அவரும் அதற்கு ஒப்புதல் அளித்தார். இது குறித்து பிரதமருக்கும் அவர் தெரிவித்தார்.

ஸ்பெக்ட்ராம் குறித்த கோப்புகள் ஏற்கனவே பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் ஏதாவது முரண்பாடுகள் இருந்திருந்தால் அல்லது பிரதமருக்கு ஏதாவது சந்தேகம் இருந்திருந்தால் அமைச்சரவைக் குழுவை அமைத்திருக்கலாமே..? ஏன் அதை அவர் செய்யத் தவறினார்..? என ராசா கேள்வி எழுப்பினார்.

நான் இப்படிச் சொல்வதால் பிரதமரையும் சிதம்பரத்தையும் நான் குறி வைப்பதாக எழுதுகிறார்கள், சொல்கிறார்கள். அது தவறு. நான் யாரையும் குற்றம் சாட்டவில்லை. அந்த எண்ணமும் எனக்கு இல்லை.

நான் சொல்லாததை எழுதுகிறார்கள். உண்மையை எழுதுவதாக இருந்தால், மீடியாக்களை நீதிமன்றத்துக்குள் அனுமதியுங்கள். இல்லாவிட்டால், அவர்களை (நிருபர்களை) வெளியே போகச் சொல்லுங்கள்.

இதனால் என்னை இந்த வழக்கிலிருந்து உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். என்னை சிறையில் வைத்திருப்பதே சட்ட விரோதமானதாகும். இந்த நியாமற்ற நிலையை உருவாக்கியதே நீதிமன்றம் தான்.

என் மீதான இந்த வழக்கை எனது வழக்கறிஞர்கள் தவிடு பொடியாக்குவார்கள். வழக்கு விசாரணையில் இருக்கும்போது என் மீது சிபிஐ குற்றச்சாட்டை பதிவு செய்வதும் சரியல்ல.

எனக்கு ஜாமீன் கிடைக்காமல் இருப்பதற்குக் காரணம், பிற நீதிமன்றங்களின் நெருக்குதல் தான்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால் ரூ. 20,000 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். இதை ஒப்புக் கொண்டால், இதில் பாதிக்கும் மேல், அதாவது ரூ. 14,000 கோடி வரை டாடாவின் தொலைத் தொடர்பு நிறுவனத்தால் தான் ஏற்பட்டது என்றார்.

நேற்று இந்த வழக்கு விசாரணை நடந்தபோது ராசாவின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் சுஷில்குமார், பிரதமர், ப.சிதம்பரம் ஆகியோருக்குத் தெரிந்தே டிபி ரியாலிட்டி பங்குகள் விற்கப்பட்டதாகவும், ஸ்பெக்ட்ரம் ஏலத்தைப் பொறுத்தவரை முந்தைய பாஜக கூட்டணி ஆட்சியில் பின்பற்றப்பட்ட கொள்கைகளையே பின்பற்றியதாகவும் கூறியிருந்தார்.

ராசா தவறு செய்திருப்பதாகச் சொன்னால் 1993ம் ஆண்டிலிருந்து தொலைத் தொடர்புத்துறை அமைச்சர்களாக இருந்த அனைவரையுமே கைது செய்து சிறையில் தள்ள வேண்டும் என்றார்.

இந் நிலையில் இன்று பிரதமர் விஷயத்தில் தனது நிலையை ராசா மாற்றிக் கொண்டுள்ளார். அதே நேரத்தில் ப.சிதம்பரம் விஷயத்தில் தனது நிலையை மேலும் தீவிரமாக்கியுள்ள ராசா, அவரை இந்த வழக்கில் சாட்சியாக விசாரிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

நீதிபதி மீது கோபப்பட்ட ராசாவின் வழக்கறிஞர்:

முன்னதாக இன்று இந்த வழக்கு விசாரணை நடந்தபோது ராசாவின் சார்பாக சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடி வரும் வழக்கறிஞர் சுஷில்குமார் நீதிபதி ஓ.பி.சைனி மீது கோபத்தைக் காட்டினார்.

நீதிபதியிடம் அவர் கூறுகையில், நீங்கள் இந்த வழக்குக்காக மட்டுமே ஊதியம் பெறுகிறீர்கள். நான் வேறு வழக்குகளுக்காகவும் செல்ல வேண்டி உள்ளது. தினமும் உங்கள் முன் வந்து உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டுமா? இது மிகவும் நியாயமற்ற விசாரணையாக உள்ளது. ஆவணங்களை ஆய்வு செய்ய மட்டும் 6 மாதம் எடுத்துக்கொண்டுள்ளீர்கள் என்றார்.

இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராசா வாதம் - காங்கிரஸ் கடுப்பு.டி.பி. ரியாலிட்டி நிறுவனத்தின் பங்குகளை எடில்சாட் நிறுவனம் வாங்குவதற்கு அப்போதைய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் ஒப்புதல் அளித்தார்.

பிரதமர் மன்மோகன் சிங்கின் முன்னிலையில் தான் இதற்கான ஒப்புதல் தரப்பட்டது. இதை பிரதமர் மறுக்க முடியாது. வேண்டுமானால் அதை அவர் மறுத்துப் பார்க்கட்டும் என்றார், முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரதமரும் உள்துறை அமைச்சரும் இந்த வழக்கில் நேரடியாக இழுக்கப்பட்டு உள்ளனர். என்பதால் காங்கிரஸ் வட்டாரம் கடுப்படைந்துள்ளது.

ப.சிதம்பரம் மறுப்பு:

இந்த நிலையில், ராசா கூறியது குறித்து அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், யுனிடெக் மற்றும் ஸ்வான் டெலிகாம் பங்குகளை விற்க நான் அனுமதி தரவில்லை, என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது:

2007ம் ஆண்டு நான் நிதியமைச்சராக இருந்தபோது, என் பரிசீலனைக்கு வந்தது டிபி ரியலிட்டி பங்குகள் விற்பனையல்ல. யுனிடெக் மற்றும் ஸ்வான் ஆகிய இரு புதிய டெலிகாம் நிறுவனங்கள் இருக்கிற பங்குகளை விற்கின்றவா அல்லது புதிய பங்குகளை வெளியிடுகின்றனவா என்பதை மட்டுமே நான் பரிசீலித்தேன்.

மேலும் ஆரம்பத்திலிருந்தே, 2ஜி லைசென்சுக்கான ஆரம்பக் கட்டணம் 2001ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட அளவே இருக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தது தொலைத் தொடர்புத் துறை. ஆனால் நிதியமைச்சகம்தான் ஏலம் விட்டு அதிக நிதியை ஈட்டலாம் என யோசனை கூறி வந்தது.

ஸ்வான் மற்றும் யூனிடெக் நிறுவனங்கள் முதலில் 2ஜி லைசென்ஸ் பெற்றுக் கொண்டன. அதன் பிறகே புதிய/ வெளிநாட்டுப் பங்குதாரரை சேர்த்துக் கொண்டன. இதற்கு அனுமதி தந்தது தொலைத் தொடர்புத் துறையாகத்தான் இருக்க வேண்டும்.

இப்படி பங்குதாரரை சேர்த்துக் கொண்டது எப்படி என்பதை மட்டுமே நிதியமைச்சகம் பரிசீலித்தது. இதைத் தெரிந்து கொள்ள பிரதமரும் விரும்பினார்.

ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெற்ற பிறகே அந்த நிறுவனங்களில் புதிய கூட்டாளிகள் இணைந்தனர். புதிய பங்குகள் வெளியீடு மூலம் அவர்களைச் சேர்த்துக் கொண்டன ஸ்வான், யூனிடெக் என்பதையும் நான் பிரதமருக்கு விளக்கினேன் என்று கூறியுள்ளார்.


ராசா கூறியதை ஆதாரமாகக் கருத முடியாது-கபில் சிபல்:

இதற்கிடையே பிரதமர், ப.சிதம்பரம் மீது குற்றம் சாட்டி சிறப்பு நீதிமன்றத்தில் ஆ.ராசா கூறியதை ஆதாரமாகக் கருத முடியாது என்று தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறினார்.

நேற்று நிருபர்களிடம் பேசிய அவர், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையின்போது சில தகவல்களை ராசா தெரிவித்துள்ளார். அவர் கூறியதை வைத்துக் கொண்டு பிரதமர் மன்மோகன் சிங்கும், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் பதவி விலக வேண்டும் என பாஜக தலைவர் நிதின் கட்காரி வலியுறுத்தி உள்ளார்.

நீதிமன்றத்தில் நடைபெறும் விவாதத்தின் அடிப்படையில் பிரதமரும், உள்துறை அமைச்சரும் பதவி விலக வேண்டும் என ஒரு தேசியக் கட்சியின் தலைவர் கோரிக்கை விடுத்திருப்பது துரதிருஷ்டவசமானது. நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் கருத்துக்களை ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது.

இதுபற்றி கட்காரி, அவரது கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும் சிறந்த வழக்கறிஞருமான அருண் ஜேட்லியிடமோ, அல்லது வேறு வழக்கறிஞரிடமோ ஆலோசனை நடத்தலாம். அதன் பிறகு இதில் அவர் கருத்தைத் தெரிவிக்க வேண்டும்.

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமர், உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தும் நிதின் கட்காரி, கர்நாடக முதல்வர் எதியூரப்பா மீது என்ன நடவடிக்கை எடுத்தார்?.

மக்களவைக் கூட்டத் தொடர் துவங்க உள்ள நிலையில் பாஜகவுக்கு ஏதாவது பிரச்சனை வேண்டும். முக்கியமான பிரசச்னைகள் ஏதுமில்லாததால் 2ஜி விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டுள்ளது என்றார் கபில் சிபல்.

சூரியனைப் பார்த்து எச்சில் உமிழ்வது போன்றது-மணீஷ் திவாரி:

இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி, அப்பழுக்கற்ற நேர்மைக்கும், கண்ணியத்துக்கும் உதாரணமாகத் திகழ்பவர் பிரதமர் மன்மோகன் சிங். அவரது கண்ணியத்தைக் குறைக்க முயல்வது சூரியனைப் பார்த்து எச்சில் உமிழ்வது போன்றதாகும்.

நீதிமன்றத்தில் ராசா கூறியவை அனைத்தும் குற்றம் சாட்டப்பட்டவர் என்ற முறையில் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கான அவரது வாதமாகும். பிரதமர் மீது குற்றம் சுமத்தியுள்ளவர் ஒரு அமைச்சரல்ல. குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் கூறியுள்ள கருத்துகளுக்குத் தேவையில்லாமல் பாஜக அதீத முக்கியத்துவம் கொடுப்பது சரியல்ல.

அதே நேரத்தில் காங்கிரஸ் மீதான தனது கோபத்தை ராசா மூலமாக திமுக காட்டுகிறது என்று கூறப்படுவதை ஏற்க முடியாது என்றார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ப.சிதம்பரம் சாட்சியாக சேர்க்கப்பட வேண்டும். - நீதிமன்றத்தில் ராசா வாதம்.


டிபி ரியாலிட்டி நிறுவனத்தின் பங்குகள் விற்பனைக்கு அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் தான் ஒப்புதல் அளித்தார். பிரதமரின் முன்னிலையில்தான் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதை பிரதமர் மறுக்க முடியாது. வேண்டுமானால் அதை அவர் மறுத்துப் பார்க்கட்டும் என்று நேற்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கூறிய முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா கூறினார்.

நான் பிரதமரையோ ப.சிதம்பரத்தையோ குற்றம் சாட்டவில்லை, பிரதமரை விசாரிக்க வேண்டும் என்றும் கூறவில்லை. நான் கூறாத விஷயங்களை நான் கூறியதாக மீடியாக்கள் தான் தவறான செய்திகள் வெளியிட்டுவிட்டன என்று ராசா இன்று பல்டி வாதம் செய்தார்.

அதே நேரத்தில் டிபி ரியாலிட்டி நிறுவன பங்குகள் விற்பனைக்கு ஒப்புதல் அளித்தவர் என்ற முறையில் அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இந்த வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட வேண்டும். அவர் நீதிமன்றத்துக்கு வந்து சாட்சியளிக்க வேண்டும் என்றும் ராசா கூறியுள்ளார்.

பிரதமர் விஷயத்தில் தனது நிலையை ராசா மாற்றிக் கொண்டுள்ளார்.

' போர்க்குற்றவாளி ' ராஜபக்சேவுக்கு எதிராக கையெழுத்திட மறுத்த விஜய்.இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் லட்சக்கணக்கான தமிழர்களை இனப்படுகொலை செய்த போர்க்குற்றவாளி என குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜபக்சேவுக்கு எதிராக கையெழுத்திட நடிகர் விஜய் மறுத்துவிட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் குற்றம் சாட்டியுள்ளது.

'இனப்படுகொலை குற்றவாளி' ராஜபக்சே மற்றும் அவருக்கு துணை நின்ற கும்பலை அனைத்துலக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகளின் கையழுத்து இயக்கம் தமிழகம் முழுவதும் தொடங்கியுள்ளது.

இந்த இயக்கத்துக்கான தொடக்க நிகழ்ச்சியை கடந்த வாரம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் தொடங்கி வைத்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திங்கள்கிழமை திரையுலகைச் சேர்ந்த சத்யராஜ், மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி, ரோஜா, அறிவுமதி உள்ளிட்ட பலரிடம் கையெழுத்து வாங்கியுள்ளனர்.

மறுத்தாரா விஜய்?

இதேபோல் நடிகர் விஜய் ஈழத் தமிழர்களைப் பற்றி பேசி வருவதால், அவரிடம் கையெழுத்து வாங்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு தலைமையில் மாநில நிர்வாகிகள் முடிவு செய்தனர்.

சென்னை திருவல்லிக்கேணியில் நண்பன் படப்பிடிப்பில் விஜய் இருப்பதாக தகவல் கிடைத்ததால் அங்கு சென்று விஜய்யிடம் கையெழுத்து கேட்டனர்.

ஏன்? எதற்கு? என்று பல கேள்விகளைக் கேட்ட விஜய், கடைசியில் கையெழுத்துப் போட மறுத்துவிட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வன்னியரசு கூறுகையில், "நாங்கள் கையெழுத்து கேட்டபோது பல விளக்கங்கள் கேட்டார் விஜய். நாங்களும் சொன்னோம். ஆனால் அவரோ கடைசியில், 'இல்லை, நான் கையெழுத்துப் போட மாட்டேன். எனக்கு விருப்பம் இல்லை,' என்றார். மேலும் எங்களை அனுப்புவதில் குறியாக இருந்தார்.

இதையடுத்து விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்ரேசேகரனை தொடர்பு கொண்டோம்.

உடனே கோபமாக, 'நாங்களும் ஒரு அமைப்பு வைத்திருக்கிறோம். தேவை என்றால் நாங்களே இதுபோன்ற கையெழுத்து இயக்கம் நடத்துவோம். உங்களுக்கு கையெழுத்து போட வேண்டிய அவசியம் இல்லை. படப்பிடிப்புக்கு தொந்தரவு கொடுக்காமல் அந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள்,' என்றார்.

"ராஜபக்சேவை இனப்படுகொலையாளி என உலகமே சொல்ல ஆரம்பித்துள்ளது. அதற்கு வலு சேர்க்கத்தான் கொலை குற்றவாளி என்பதற்காகத்தான் இந்த கையெழுத்து வாங்கிக்கொண்டிருக்கிறோம். வேறு எந்த காரணத்துக்காகவும் இல்லை என்று நாங்கள் எடுத்துக் கூறினோம். இருப்பினும் அவர்கள் கையெழுத்து போட மறுத்துவிட்டனர். இதிலிருந்தே தெரிகிறது, ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுப்பதாகக் கூறி மக்களை எந்த அளவு விஜய்யும் அவர் தந்தையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது!", என்றார் வன்னியரசு.

தமிழ் வழியில் படித்த 12 ஆயிரம் மாணவர்கள் என்ஜினீயரிங் சேர்ந்தனர்.

தமிழ் வழியில் படித்த 12 ஆயிரம் மாணவர்கள் என்ஜினீயரிங் சேர்ந்தனர்: இ.சி.இ., மெக்கானிக்கல் பிரிவை அதிகம் தேர்வு செய்தனர்

தமிழகத்தில் உள்ள 500 என்ஜினீயரிங் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. நேற்று வரை 37,506 மாணவ-மாணவிகள் சேர்ந்துள்ளனர். இதில் 12, 128 பேர் பள்ளி படிப்பை தமிழ் வழியில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது மொத்த சேர்க்கையில் மூன்றில் ஒரு பங்காகும்.

அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் பிளஸ்-2 வரை படித்து தேர்ச்சி பெற்ற இவர்களில் 3451 பேர் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் என்ஜினீயரிங் பிரிவு விரும்பி தேர்வு செய்துள்ளனர். 2716 மாணவர்கள் மெக்கானிக்கல் பாடப்பிரிவிலும் 1594 பேர் கம்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவிலும் 1307 பேர் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பாடப்பிரிவிலும் சேர்ந்துள்ளனர்.

தமிழ் வழியில் படித்த மாணவர்கள் இதே போல் ஏரோ நாட்டிக்கல் என்ஜினீயரிங், பயோ-டெக்னாலஜி, ஆட்டோ மொபைல், தகவல் தொழில்நுட்ப பாட பிரிவுகளிலும் சேர்ந்து உள்ளனர்.

பள்ளியில் ஆங்கில வழியில் படித்த 30 மாணவர்கள் சிவில் மற்றும் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிப்பில் தமிழ் வழியில் சேர்ந்துள்ளது ஆச்சரியமாக உள்ளது.

இதுகுறித்து என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறுகையில்,

தமிழ் வழியில் படித்து விட்டு வரும் மாணவர்களுக்கு சிறப்பு திறன் வகுப்பு நடத்தப்படும். முதல் வருடத்தில் அவர்களுக்கு பாதி தமிழும், பாதி ஆங்கிலமும் கலந்தவாறு பாடங்கள் கற்று கொடுக்கப்படும். இந்த முறை ஏற்கனவே அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ளது. இதற்காக ஆங்கில பேச்சு திறன் வகுப்பும் நடத்தப்படுகிறது. மாணவர்கள் ஒரு வருடத்தில் ஆங்கில பேச்சாற்றல், எழுத்தாற்றலில் சிறந்து விளங்குவார்கள் என்றார்.

திருச்சி : 50 குழந்தை சிசுக்கள் குப்பையில் கொட்டி கிடக்கும் காட்சி. - படங்கள்திருச்சி மதுரை நான்கு வழிச்சாலை அருகே உள்ள பஞ்சப்பூர் என்ற இடத்தில் 50க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் டப்பாவில் இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து மாதங்கள் கொண்ட சிசுக்கள் கிடந்துள்ளன.

இவற்றை அந்த பகுதியில் உள்ள மக்கள் பார்த்துள்ளனர். அதிக வாடை வந்ததால், பொதுமக்கள் என்னவென்று ஆராயும் போது இந்த அதிர்ச்சியான விஷயம் தெரியவந்துள்ளது.இதையடுத்து எடமலைப்பட்டி புதூர் காவல்நிலையத்தில் பொதுமக்கள் புகார் அளித்தனர். போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து, 50க்கும் மேற்பட்ட சிசுக்கள் கொண்ட டப்பாக்களை குழி தோண்டி புதைத்துள்ளர்.

பின்னர் இந்த தகவல் திருச்சி மாவட்ட எஸ்.பி., லலிதா மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயஸ்ரீ முரளிதரன் ஆகியோர் கவனத்துக்கு சென்றது.

இதையடுத்து சிசுக்கள் உள்ள டப்பாக்கள் எப்படி வந்தது என்று விசாரணைக்கு உத்தரவிட்டனர். எடமலைப்பட்டி புதூர் காவல்நிலைய எஸ்.ஐ. மும்தாஜ் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.

திருச்சி தில்லைநகரில் உள்ள சுந்தரேசன் என்ற டாக்டரிடம் லேப் அசிஸ்டெண்ட்டாக பணிபுரியும் விஜயராகவன் என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

திருச்சி சென்னை பைபாஸ் ரோட்டில் உள்ள மருத்துவ கல்லூரி லேப்பில் உள்ள சிசுக்கள் உள்ள டப்பாவை, மருத்துவ கல்லூரி நிர்வாகம் அழிக்க சொன்னது. போலீஸ் அனுமதியுடன் இதனை செய்திருக்க வேண்டும். ஆனால் போலீஸ் அனுமதியில்லாமல் செய்துவிட்டதாக விஜய ராகவன் வாக்குமூலம் கொடுத்துள்ளார்

மன அமைதி... நிம்மதி ! , விருஷ்டிராசனம், சம கோணாசனம்.

மன அமைதி... நிம்மதி !

மன அமைதி... நிம்மதி!

இன்றைய அவசர உலகில் பெருகிவரும் பரபரப்பு, பதட்டம் அதனால் ஏற்படும் மனக்கவலைகள், ஏமாற்றங்கள், எதிர்பார்ப்புகள் போன்றவை எல்லாம் அதிகமான மனபாரத்தை ஏற்படுத்தி ரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்கின்றன.

அப்படி ஏற்படும் மன இறுக்கத்தை தளர்த்தி மன அமைதி பெறும் வழிகளை இங்கே பார்ப்போம். முதலாவதாக உடல் மற்றும் உள்ளத்தை தளர்த்தி ஆழமாக சுவாசிக்க வேண்டும். மூச்சை உள்வாங்கி, பின்னர் மெதுவாக வெளியிடுவதும் முக்கியமானது.

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மனதையும், உடலையும் தளர்த்தி ஓய்வு எடுப்பது அவசியம். அதேபோல் நாம் எப்போதும் செய்யும் வேலையை விட்டுவிட்டு, மாறுபட்ட நமக்குப் பிடித்தமான ஏதாவது ஒரு வேலையை செய்வதும், அல்லது அதைப்பற்றி தெரிந்து கொள்வதும் மனதை நிம்மதியாக்கும்.

தோட்ட வேலை செய்தல், புத்தகம் அல்லது பத்திரிகை வாசித்தல், விளையாடுதல் ஆகியவற்றை பொழுது போக்காக செய்தால் உடல் புத்துணர்வாகி, மனம் அமைதி பெறும். தினமும் குறிப்பிட்ட நேரம் யோகாசனம் செய்தால் ரத்த அழுத்தம் குறைந்து, மன அழுத்தமும் குறைகிறது.

ஆனால் யோகாசனம் செய்பவர்களுக்கு எவ்வித கெட்டப் பழக்கமும் இருக்கக் கூடாது. மதுவகைகள், புகை பிடித்தல், புகையிலை பழக்கம் ஆகியவற்றை தொடவே கூடாது. அதேபோல் உணவு முறையில் கட்டப்பாடு இருந்தால் மட்டுமே ரத்த அழுத்தம் சீராகும்.

யோகாசனம் செய்வதற்கு முன்பு, மனதில் அச்சம், பீதி, படபடப்பு, மன இறுக்கம் போன்றவை மனதுக்குள் வைத்திருக்கக் கூடாது. யோகாசனத்தை காலையில் செய்வது அவசியம். அப்படி தொடர்ந்து யோகாசனம் செய்து வந்தால் கண்டிப்பாக மனம் நிம்மதி அடையும்.


விருஷ்டிராசனம்.
விருஷ்டிராசனம்

செய்முறை:

சமகோணாசனத்தில் இருந்து மூச்சை வெளியே விட்டபடி கீழே குனிந்து கைகளை பின்னால் நேராக கால்களை கீழாக நீட்டவும். ஓய்வெடுத்து திருப்பச் செய்யவும்.

பலன்கள்:

கால் தசைகள் அதீத பலம் பெறுகின்றன. முதுகு எலும்புகள் நெகிழ்வு பெற்று முதுகு வலி போன்ற வியாதிகள் அகல்கின்றது. மார்பு நன்றாக விரிவடைவதால் இதயம் பலம் பெறுகின்றது. சீறுநீரக உறுப்புகள் பலம் பெறும். ஹெர்னியா நீங்கும்.


சம கோணாசனம்.
சம கோணாசனம்

செய்முறை:

பல நாட்கள் முதல் நிலை ஆசனத்தை பயின்ற பின் இரண்டாவது நிலையினை ஆரம்பிக்கவும். முதலில் பரிபூர்ண நிலையினை எய்த முடியாது. கால்களையும் இந்த அளவிற்கு விரிக்க இயலாது. முதலில் முடிந்த அளவு செய்து மூச்சை வெளியே விட்டு உங்களால் முடிந்தளவு கீழே குனியுங்கள்.

ஒரு மாத காலம் காலை, மாலை என இருவேளையும் தொடர்ந்து பயிற்சி செய்தீர்களேயானால் ஆசனம் சித்தியாகும். மூச்சை வெளியே விட்டபடி கால்களை அகற்றி இரு கைகளால் கால் கட்டைவிரலை பிடித்தபடி மேல் நெஞ்சினை தரையில் படும்படி வைத்து தலையை படத்தில் கண்டபடி வைக்கவும்.

20 எண்ணும் வரை இருந்து நிமிரும் போது மூச்சை இழுத்தபடியே நிமிரவும். 3முதல் 5 முறை செய்யவும்.

பலன்கள்:

கால் தசைகள் பலம் பெறுகின்றன. முதுகெலும்புகள் நெகிழ்வு பெற்று முதுகு வலி போன்ற வியாதிகளிலிருந்து விடுதலை பெறுவீர்கள். மார்பு நான்கு விரிவடைந்து ஆழ்ந்த சுவாசம் கிடைப்பதால் இதயம் மகத்தான பலன் பெறுகின்றது.