Tuesday, July 26, 2011

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராசா வாதம் - காங்கிரஸ் கடுப்பு.



டி.பி. ரியாலிட்டி நிறுவனத்தின் பங்குகளை எடில்சாட் நிறுவனம் வாங்குவதற்கு அப்போதைய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் ஒப்புதல் அளித்தார்.

பிரதமர் மன்மோகன் சிங்கின் முன்னிலையில் தான் இதற்கான ஒப்புதல் தரப்பட்டது. இதை பிரதமர் மறுக்க முடியாது. வேண்டுமானால் அதை அவர் மறுத்துப் பார்க்கட்டும் என்றார், முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரதமரும் உள்துறை அமைச்சரும் இந்த வழக்கில் நேரடியாக இழுக்கப்பட்டு உள்ளனர். என்பதால் காங்கிரஸ் வட்டாரம் கடுப்படைந்துள்ளது.

ப.சிதம்பரம் மறுப்பு:

இந்த நிலையில், ராசா கூறியது குறித்து அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், யுனிடெக் மற்றும் ஸ்வான் டெலிகாம் பங்குகளை விற்க நான் அனுமதி தரவில்லை, என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது:

2007ம் ஆண்டு நான் நிதியமைச்சராக இருந்தபோது, என் பரிசீலனைக்கு வந்தது டிபி ரியலிட்டி பங்குகள் விற்பனையல்ல. யுனிடெக் மற்றும் ஸ்வான் ஆகிய இரு புதிய டெலிகாம் நிறுவனங்கள் இருக்கிற பங்குகளை விற்கின்றவா அல்லது புதிய பங்குகளை வெளியிடுகின்றனவா என்பதை மட்டுமே நான் பரிசீலித்தேன்.

மேலும் ஆரம்பத்திலிருந்தே, 2ஜி லைசென்சுக்கான ஆரம்பக் கட்டணம் 2001ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட அளவே இருக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தது தொலைத் தொடர்புத் துறை. ஆனால் நிதியமைச்சகம்தான் ஏலம் விட்டு அதிக நிதியை ஈட்டலாம் என யோசனை கூறி வந்தது.

ஸ்வான் மற்றும் யூனிடெக் நிறுவனங்கள் முதலில் 2ஜி லைசென்ஸ் பெற்றுக் கொண்டன. அதன் பிறகே புதிய/ வெளிநாட்டுப் பங்குதாரரை சேர்த்துக் கொண்டன. இதற்கு அனுமதி தந்தது தொலைத் தொடர்புத் துறையாகத்தான் இருக்க வேண்டும்.

இப்படி பங்குதாரரை சேர்த்துக் கொண்டது எப்படி என்பதை மட்டுமே நிதியமைச்சகம் பரிசீலித்தது. இதைத் தெரிந்து கொள்ள பிரதமரும் விரும்பினார்.

ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெற்ற பிறகே அந்த நிறுவனங்களில் புதிய கூட்டாளிகள் இணைந்தனர். புதிய பங்குகள் வெளியீடு மூலம் அவர்களைச் சேர்த்துக் கொண்டன ஸ்வான், யூனிடெக் என்பதையும் நான் பிரதமருக்கு விளக்கினேன் என்று கூறியுள்ளார்.


ராசா கூறியதை ஆதாரமாகக் கருத முடியாது-கபில் சிபல்:

இதற்கிடையே பிரதமர், ப.சிதம்பரம் மீது குற்றம் சாட்டி சிறப்பு நீதிமன்றத்தில் ஆ.ராசா கூறியதை ஆதாரமாகக் கருத முடியாது என்று தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறினார்.

நேற்று நிருபர்களிடம் பேசிய அவர், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையின்போது சில தகவல்களை ராசா தெரிவித்துள்ளார். அவர் கூறியதை வைத்துக் கொண்டு பிரதமர் மன்மோகன் சிங்கும், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் பதவி விலக வேண்டும் என பாஜக தலைவர் நிதின் கட்காரி வலியுறுத்தி உள்ளார்.

நீதிமன்றத்தில் நடைபெறும் விவாதத்தின் அடிப்படையில் பிரதமரும், உள்துறை அமைச்சரும் பதவி விலக வேண்டும் என ஒரு தேசியக் கட்சியின் தலைவர் கோரிக்கை விடுத்திருப்பது துரதிருஷ்டவசமானது. நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் கருத்துக்களை ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது.

இதுபற்றி கட்காரி, அவரது கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும் சிறந்த வழக்கறிஞருமான அருண் ஜேட்லியிடமோ, அல்லது வேறு வழக்கறிஞரிடமோ ஆலோசனை நடத்தலாம். அதன் பிறகு இதில் அவர் கருத்தைத் தெரிவிக்க வேண்டும்.

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமர், உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தும் நிதின் கட்காரி, கர்நாடக முதல்வர் எதியூரப்பா மீது என்ன நடவடிக்கை எடுத்தார்?.

மக்களவைக் கூட்டத் தொடர் துவங்க உள்ள நிலையில் பாஜகவுக்கு ஏதாவது பிரச்சனை வேண்டும். முக்கியமான பிரசச்னைகள் ஏதுமில்லாததால் 2ஜி விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டுள்ளது என்றார் கபில் சிபல்.

சூரியனைப் பார்த்து எச்சில் உமிழ்வது போன்றது-மணீஷ் திவாரி:

இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி, அப்பழுக்கற்ற நேர்மைக்கும், கண்ணியத்துக்கும் உதாரணமாகத் திகழ்பவர் பிரதமர் மன்மோகன் சிங். அவரது கண்ணியத்தைக் குறைக்க முயல்வது சூரியனைப் பார்த்து எச்சில் உமிழ்வது போன்றதாகும்.

நீதிமன்றத்தில் ராசா கூறியவை அனைத்தும் குற்றம் சாட்டப்பட்டவர் என்ற முறையில் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கான அவரது வாதமாகும். பிரதமர் மீது குற்றம் சுமத்தியுள்ளவர் ஒரு அமைச்சரல்ல. குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் கூறியுள்ள கருத்துகளுக்குத் தேவையில்லாமல் பாஜக அதீத முக்கியத்துவம் கொடுப்பது சரியல்ல.

அதே நேரத்தில் காங்கிரஸ் மீதான தனது கோபத்தை ராசா மூலமாக திமுக காட்டுகிறது என்று கூறப்படுவதை ஏற்க முடியாது என்றார்.

No comments: