Monday, September 26, 2011

கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தலைவணங்கும் இந்திய அரசு.



டில்லியில் அரசியல் புயலைக் கிளப்ப இரண்டாவது கடிதமும் வெளியாகிவிட்டது. ஏற்கனவே ஒரு கடிதம் வெளியாகி பலத்த அரசியல் சர்ச்சையைக் கிளப்பிவிட்டதை சமாளிக்கவே மத்திய அரசு திணறுகிறது. இந்த இரண்டாவது கடிதம், அரசியலில் எப்படியான பூகம்பத்தைக் கிளப்பப் போகின்றதோ!

இரண்டாவது கடிதம், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனால், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதப்பட்டுள்ளது.

தயாநிதி தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்தபோது, அவர் பிரதமருக்கு எழுதிய இந்தக் கடிதத்தில், ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயத்தில் சுதந்திரமாக செயல்பட்டு, தனது துறையே முடிவு செய்வதற்கு அனுமதிக்குமாறு கோரியுள்ளார். அத்துடன,

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கு மார்க்கெட் ரேட்டில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் அதிக பணம் கொடுக்கும் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்னும், அமைச்சரவைப் குழுவின் பரிந்துரையை ஏற்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவை குழுவின் பரிந்துரை, நேர்மையான வழிமுறை. அந்த வழிமுறையில் அரசுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பணம் கிடைக்கும்.

ஆனால், தயாநிதியின் வழிமுறை என்னவென்றால், அதிக பணம் கொடுக்கத் தயாராக உள்ள நிறுவனங்களுக்கு உரிமம் கொடுக்காமல், எந்த நிறுவனம் முதலில் வந்து உரிமம் கேட்கிறதோ, அந்த நிறுவனத்துக்கு குறைந்த விலையில் கொடுப்பது!

அதாவது, அரசுக்கு நஷ்டம் ஏற்பட வைத்து, முதலில் வரும் நிறுவனங்களுக்கு கொள்ளை லாபம் கொடுக்கும் வழிமுறை அது. கொள்ளை லாபம் பெற்ற நிறுவனங்கள், அதற்கு பிரதி உபகாரமாக, கொடுக்க வேண்டியதை, கொடுக்க வேண்டியவர்களுக்கு, கொடுப்பார்கள்.

தயாநிதி மாறனின் இந்த கடிதத்துக்கு பிரதமர் எந்த எதிர்ப்பும் காட்டாமல் ஒத்துக்கொண்டதால்தான், ஸ்பெக்ட்ரம் முறைகேடு நடைபெற்றது என்பதே தற்போது எதிர்க் கட்சிகளின் குற்றச்சாட்டு. அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக, லட்டு மாதிரிக் கிடைத்துள்ளது, தயாநிதி மாறன் பிரதமருக்கு எழுதிய இந்தக் கடிதம்.

தகவல் அறியும் சட்டத்தின்படிதான் இந்தக் கடிதமும் பெறப்பட்டுள்ளது. (ப.சிதம்பரத்துக்கு எதிரான முதல் கடிதம் பெறப்பட்டதும், அப்படித்தான்)

இங்குள்ள மற்றொரு முக்கிய விஷயம் என்ன தெரியுமா? தயாநிதியால் தொடங்கப்பட்ட இந்த நடைமுறையை அப்படியே காப்பியடித்துத்தான் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா செயற்பட்டார். அதற்காக அவர் திகார் ஜெயிலில் கம்பி எண்ணுகிறார்.

ஆனால் கார்ப்பரேட் முதலாளியான தயாநிதி மாறன் மீது கை வைக்க மத்திய அரசு அஞ்சுகிறது.

மூத்த அரசியல்வாதியான கருணாநிதியின் மகள் கனிமொழியை அசால்ட்டாக கைது செய்து சிறைவைத்த மத்திய அரசு, கார்ப்பரேட் முதலாளி மீது கை வைக்க யோசிக்கிறது.

அரசியல் நெருக்கடியைவிட, கார்ப்பரேட் முதலாளிகளின் நெருக்கடிக்கு இந்திய அரசு தலைவணங்குகிறது.

அமெரிக்காவுக்கு எதிரான கருத்து ; பாகிஸ்தான் பெண் மந்திரி ஹினா ரப்பானிகர் உடனே நாடு திரும்ப உத்தரவு .

அமெரிக்காவுக்கு எதிரான கருத்து; பெண் மந்திரிக்கு பாகிஸ்தான் கண்டனம்; உடனே நாடு திரும்ப உத்தரவு

அமெரிக்காவுக்கு எதிரான கருத்து தெரிவித்த பெண் மந்திரிக்கு கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் அவரை உடனடியாக நாடு திரும்ப உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளுடன் பாகிஸ்தான் உளவுத்துறைக்கு (ஐ.எஸ்.ஐ) தொடர்பு இருப்பதாக அமெரிக்க முப்படை தளபதி அட்மிரல் முல்லன் தெரிவித்து இருந்தார்

மேலும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டதில் ஐ.எஸ்.ஐ. உளவுத்துறை நேரடியாக சம்பந்தப்பட்டு இருப்பதாகவும் குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு பாகிஸ்தான் வெளியுறவு பெண் மந்திரி ஹினா ரப்பானிகர் பதில் அளித்தார். பாகிஸ்தான் மீது தொடர்ந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அமெரிக்கா கூறி வருகிறது. இந்த நிலை நீடித்தால் ஒரு கூட்டாளியை இழக்க நேரிடும். பாகிஸ்தான் உறவு வேண்டுமா? வேண்டாமா? என்பதை அமெரிக்காதான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

இது அமெரிக்காவை எரிச்சலடைய செய்தது. இதைத்தொடர்ந்து ஹினா ரப்பானி கிர் கருத்துக்கு அமெரிக்கா வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பு செயலாளர் ஜே.கார்னர், முப்படை தளபதி முல்லரின் செய்தி தொடர்பாளர் கேப்டன் கிர்பி ஆகியோர் தங்களின் கருத்துகளை தெரிவித்து இருந்தனர். அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் செய்தி தொடர்பாளர் ஜார்ஜ் கூறும் போது, பாகிஸ்தானுடன் உள்ள உளவு சிக்கலானது. அதே நேரத்தில் அத்தியாவசியமானதாகவும் உள்ளது. கருத்து வேறுபாடுகளும், தீவிரமான பிரச்சினைகளும் உள்ளன. ஆனால் தீவிரவாத பிரச்சினையில் இணைந்து செயல்பட வேண்டியுள்ளது என்றார்.

இது இரு நாட்டு உறவில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அமெரிக்கா நியூயார்க்கில் உள்ள ஐ.நா.சபை தலைமை அலுவலகத்தில் பொதுசபை கூட்டம் நடக்கிறது. அதில் பங்கேற்க இருந்த பாகிஸ்தான் பிரதமர் கிலானி அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்திக்க விருப்பம் தெரிவித்து இருந்தார். ஆனால் அவரை சந்திக்க ஒபாமா விரும்பவில்லை. எனவே வெள்ளநிவாரண பணிகளை மேற்பார்வையிட இருப்பதாக கூறி தனது பிரதிநிதியாக வெளியுறவு மந்திரி ஹீனா ரப்பானி கர்ரை அனுப்பி வைத்தார்.

கூட்டத்தில் பங்கேற்க சென்ற அவர் அமெரிக்காவுக்கு எதிரான கடுமையான கருத்துகளை தெரிவித்தார். இதன் மூலம் பாகிஸ்தானை அமெரிக்காவின் வெறுப்புக்கு உட்படுத்தி விட்டார். இது பிரதமர் கிலானிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஹினா ரப்பானி கர் கருத்தில் அவருக்கு உடன்பாடும் இல்லை. எனவே அமெரிக்காவுக்கு எதிரான கருத்து கூறியதற்காக அவருக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் அவர் வெளியுறவு மந்திரி ரப்பானி உடனடியாக நாடு திரும்ப உத்தரவிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து அவர் இன்று இரவு இஸ்லாமாபாத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் அமெரிக்காவுக்கு எதிராக கருத்து கூறியது குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்படுகிறது. அமெரிக்காவுடனான உறவை சரி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இந்த செய்தி பாகிஸ்தானில் இருந்து ஒளிபரப்பாகும் டி.வி. சேனலில் ஒளிபரப்பாகியது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் : ஆ.ராசா, கனிமொழி மீது சி.பி.ஐ. புதிய வழக்கு ; ஆயுள் தண்டனை கொடுக்கும் பிரிவில் பதிவு.

ஸ்பெக்ட்ரம் ஊழல்: ஆ.ராசா, கனிமொழி மீது சி.பி.ஐ. புதிய வழக்கு; ஆயுள் தண்டனை கொடுக்கும் பிரிவில் பதிவு

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் காரணமாக ரூ. 1.76 லட்சம் இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்குத் தணிக்கை துறை அறிவித்தது. இதையடுத்து இந்த ஊழலில் ஈடுபட்டதாக முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணை டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதி மன்றத்தில் நீதிபதி சைனி முன்னிலையில் நடந்து வருகிறது. இந்த விசாரணை தகவல்களை சுப்ரீம்கோர்ட்டில் சி.பி.ஐ. அவ்வப்போது தெரிவித்து வருகிறது.

குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் ஓரளவு விசாரணை முடிந்து விட்டது. இதனால் இந்த வழக்கில் கைதானவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சி.பி.ஐ. புதிய நடவடிக்கையால் அது தள்ளிப் போனது.

இந்த நிலையில் சி.பி.ஐ. புதிய அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டது. சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் சிறப்பு அரசு வக்கீல் லலித் இன்று ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில் அவர், ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா உள்பட அனைவர் மீதும் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 409 (நம்பிக்கை மோசடி) கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பதவியில் இருந்து கொண்டு ஆ.ராசா, சந்தோலியா, சித்தார்த் ஆகியோர் நம்பிக்கை மோசடி செய்துள்ளனர். அவர்கள் மீது இந்த பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.

மற்ற குற்றவாளிகளுக்கும் இது பொருந்தும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒவ்வொருவரும் எத்தகைய பிரிவின் கீழ் தொடர்புடையவர்கள் என்று வக்கீல் லலித் விளக்கமாக கூறினார்.

மேலும் 409-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டியது இந்த விசாரணைக்கு மிகவும் அவசியம் என்று விவாதித்தார். இதையடுத்து குற்றம் சாட்டப்பட்டவர்களின் சார்பில் வாதாடிய வக்கீல் சி.பி.ஐ.யின் புதிய வழக்குக்கு எதிர்ப்பு தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றத்தை பதிவு செய்யும் நடவடிக்கையை தாமதப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக இந்த புதிய பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுவதாக கூறினார்.

சி.பி.ஐ. தொடர்ந்துள்ள புதிய பிரிவு வழக்கு காரணமாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை வரை வழங்க முடியும் என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். இதற்கு முன்பு சி.பி.ஐ. பதிவு செய்துள்ள சட்டப்பிரிவுகளின்படி அதிகப்பட்சமாக 7 ஆண்டுகள் வரையே தண்டனை கொடுக்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் இன்று சி.பி.ஐ. மேற்கொண்டுள்ள புதிய அதிரடி நடவடிக்கை காரணமாக ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அதிக பட்சமாக 10 ஆண்டுகள் வரை தண்டனை கொடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.

409-வது பிரிவின் கீழ் ஆ.ராசா, கனிமொழி, ராசாவின் உதவியாளர் சந்தோலியா, முன்னாள் தொலை தொடர்புதுறை செயலாளர் சித்தார்த் பெகுரா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வரை கொடுக்க முடியும் என்று பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஸ்பெக்ட்ரம் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் மீது ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி தொடர்ந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 12-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

இதுகுறித்து சுப்பிரமணியசாமி கூறுகையில் ப.சிதம்பரத்திடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரும் எனது வேண்டுகோளை வரும் 12-ந்தேதிக்குள் சுப்ரீம் கோர்ட்டு தீர்மானிக்கும் என்று நம்புகிறேன் என்றார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு ப.சிதம்பரத்தை ஒரு சாட்சியாக அழையுங்கள் - ஆ.ராசா.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு ப.சிதம்பரத்தை ஒரு சாட்சியாக அழையுங்கள்- ஆ.ராசா

முன்னாள் நிதியமைச்சரும், தற்போதைய உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரத்தை 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஒரு சாட்சியாக அழைக்க வேண்டும் என்று முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசாவின் வழக்கறிஞர் சுஷில்குமார் தெரிவி்த்தார்.

மேலும், 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளிலும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் பங்குண்டு என தெரிவி்த்தார்.

இந்த விவகாரத்தில் நடந்தது அனைத்தும் அவருக்கு தெரியும். இந்த வழக்கில் அனைத்து உண்மைகளும், விவரங்களும் அவருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது என சுஷில்குமார் குறிப்பிட்டார்.

அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரம் அமைச்சரவை முடிவுசெய்தது. எனவே ஒட்டுமொத்த அமைச்சரவையும் விசாரணையை சந்திக்க வேண்டும் என அவர் கூறினார். 2003 அமைச்சரவையில் இதுதொடர்பாக முடிவு எடுக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து வந்த அனைத்து அமைச்சரவையும் அதைப் பின்பற்றியது. அப்படியிருக்க ராசா மட்டும் ஏன் சிறையில் இருக்க வேண்டும் என அவர் கேள்வி எழுப்பினார். சிதம்பரத்தை ஒரு சாட்சியாக நீதிமன்றத்துக்கு அழையுங்கள். பிரதமரின் முன்னிலையில் அறிவுரை வழங்கப்பட்டதா அல்லது வழங்கப்படவில்லையா என்பதை அவரே கூறட்டும் என சுஷில்குமார் குறிப்பிட்டார்.

ப.சிதம்பரம் குறித்த கடிதம், பிரதமர் அலுவலகம்தான் வெளியிட்டுள்ளது - பிரணாப் குற்றச்சாட்டு.



2ஜி விவகாரத்தில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தைக் குறை கூறி நிதியமைச்சகத்திலிருந்து எழுதப்பட்ட கடிதம் வெளியாக பிரதமர் அலுவலகமே காரணம் என நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி குற்றம் சாட்டியுள்ளதாகத் தெரிகிறது.

2ஜி ஊழலைத் தடுக்கத் தவறி விட்டார் அப்போதைய நிதியமைச்சர் ப. சிதம்பரம் என்று மத்திய நிதியமைச்சகம் பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில் 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை விவகாரத்தில் நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுவதைத் தடுக்க நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதம் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்குப் பிறகு தான் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து ப.சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், சிதம்பரத்தின் நேர்மையில் தனக்கு துளி கூட சந்தேமில்லை என்று கூறிவிட்ட பிரதமர் மன்மோகன் சிங், அவரை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கூறிவிட்டார்.

இந்த விவகாரத்தில் பிரணாப் முகர்ஜி மீது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் ப.சிதம்பரமும் கடுப்பில் உள்ள நிலையில், நேற்று அமெரிக்காவில் இருந்தபடி ப.சிதம்பரத்துடன் தொலைபேசியில் பேசினார் பிரணாப்.

அப்போது தனது கடிதம் குறித்து அவர் விளக்கம் அளித்ததாகத் தெரிகிறது. மேலும் பிரதமரையும் பிரணாப் முகர்ஜி சந்தித்தார்.

அப்போது, இந்தக் கடிதம் வெளியே லீக் ஆனதற்கு நான் காரணமல்ல, அதை பிரதமர் அலுவலகம்தான் வெளியிட்டுள்ளது. நிதி அமைச்சகம் வெளியிடவில்லை என்று பிரணாப் கூறியதாகத் தெரிகிறது.

இந் நிலையில் இன்று நாடு திரும்பும் பிரணாப் சோனியாவையும் நேரில் சந்தித்து விளக்கம் தரவுள்ளார்.

ஆட்டம் காணும் உலகப் பொருளாதாரம்.



உலக பொருளாதாரம் ஆபத்தான நிலையில் இருப்பதாக உலக வங்கியின் தலைவர் ராபர்ட் ஜோயெலிக் தெரிவித்துள்ளார்.

உலக பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வது, அதற்கு என்னென்ன நடிவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த மாநாடு வாஷிங்டனில் நடந்தது. அதில் உலக வங்கியின் தலைவர் ராபர்ட் ஜோயெலிக், ஐஎம்எப் தலைவர் கிறிஸ்டின் லகார்டே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் பேசிய ஜோயெலிக் கூறியதாவது,

உணவுப் பொருட்களின் விலையேற்றம் இன்னும் பெரிய பிரச்சனையாகத் தான் உள்ளது. ஆனால் தற்போது புதிய பிரச்சனைகள் வரவிருக்கிறது.

வளரும் நாடுகள் விலை உயர்வை சரிசெய்வதில் கவனம் செலுத்தி வருகின்றன. வளர்ந்த நாடுகள் கடன் பிரச்சனையில் சிக்கியுள்ளது.

உலக பொருளாதாரம் ஆபத்தான நிலையில் தான் உள்ளது. அதில் இருந்து மீண்டு வருவது அவ்வளவு சுலபம் அல்ல. ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் நிதி நெருக்கடியை சமாளிக்க உடனடியாக நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதே கருத்தை ஐஎம்எப் தலைவரும் வலியுறுத்தினார்.

ஆஸ்திரேலியாவின் பிரபல செய்தித்தாள் வீக்ண்டுக்கு உலக வங்கியின் தலைவர் சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

"உலக பொருளாதாரத்தில் காணப்படும் ஸ்திரத்தன்மையற்ற போக்கால், பல ஆபத்தான கட்டங்களை எதிர்நோக்கும் அபாயம் இருக்கிறது," என்று உலக வங்கி தலைவர் ராபர்ட் ஜோயலிக் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் பொருளாதாரத்தின் ரேட்டிங்கை, கடந்த வாரம் ஸ்டான்டர்டு அன்ட் புவர் நிறுவனம் குறைத்து அறிவி்த்தது. இதன் எதிரொலியால் சர்வதேச பங்கு சந்தைகளில் நிலையற்ற தன்மை காணப்படுகிறது.

போதாக்குறைக்கு ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பொருளாதார நிலையிலும் சரிவு ஏற்படும் அபாயம் இருக்கிறது. இதனால், அடுத்த பொருளாதார சரிவை உலக நாடுகள் எதிர்நோக்கியுள்ளன.

"தற்போது நாம் புதிய பொருளாதார சரிவின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம். ஆனால், இது கடந்த 2008ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார சரிவு போன்று இருக்காது.

கடந்த சில வாரங்களாக ஆஸ்திரேலியா உள்ளிட்ட வளரும் நாடுகளின் பொருளாதாரம் ஓரளவுக்கு வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளன. ஆனால், வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம் தொடர்ந்து ஆபத்தான கட்டத்தை எதிர்நோக்கியுள்ளன.

வளர்ந்த நாடுகள் பொருளாதார கொள்கைகளை சீர்படுத்தினால், மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்ப முடியும்," என்று கூறினார்.

நினைவாற்றலை அதிகரிக்கும் ஜின்கோ மாத்திரை.



நினைவாற்றலுக்கு மூளையின் செயல்பாடுகளுக்கும் நம் ஊரில் வல்லாரைக் கீரை சமைத்து உண்கின்றனர். இதில் உள்ள வாலரின் என்னும் ரசாயனம் மூளையின் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதுடன் குறிப்பாக ஞாபக சக்தி இருக்கும் இடமாகிய மெமொரி கார்ட்டெக்ஸைத் தூண்டிவிடுகிறது.

சரஸ்வதியைப் போல மூளையைத் தூண்டிவிடுவதால் புத்தியை தீட்சண்யமாக கூர்மையாக ஆக்குவதால் வல்லாரைக்கு ப்ராமி என்ற பெயரைக் கொடுத்து உள்ளார்கள்.

இதேபோல் ஜின்கோ எனப்படும் சீனாவில் வளரும் மரத்தின் இலைகள் மூளை நரம்புகளை சுறுசுறுப்பாக செயல்படுத்துகிறது. பூமியில் உள்ள மரங்களிலேயே மிகப்பழமையான மரமான ஜின்கோ சீனாவைத் தவிர தற்பொழுது ஃபிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி, ஆகிய நாடுகளின் பெரும் தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது.

இலைகள் பசுமை அல்லது மஞ்சள் வண்ண முடையவை. இலைகள், விதைகள் மருத்துவப்பயன் கொண்டவை. இலைகளும், கனிகளும், இலையுதிர்காலத்தில் சேகரிக்கப்படுகின்றன.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

இம்மரத்தின் மருத்துவப்பயன்களுக்கு காரணமாக உள்ள வேதிப்பொருட்கள் ஃபிளேவனாய்டுகள், ஜின்கோலைடுகள், பைலோபலைடுகள்

மூளை நரம்புகளுக்கு வலுவூட்டும்

இலைகள் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தினை மேம்படுத்தி நினைவாற்ற லையும், கவனத்தினையும் அதிகரிக்கிறது. வயோதிக ஞாபக மறதிக்கு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் மிக அதிகமாக விற்பனையாகும் தாவரமருந்து ஜின்கோ, பல மில்லியன் மத்திய வயதினர் முதல் வயோதிகர்கள் வரை தினமும் ஜின்கோ மத்திரைகளை உட்கொள்கின்றனர்.

ஜின்கோ பிலோபா மூளை, கால்கள், இடுப்பின் உட்புறம் ஆகிய இடங்களில் உள்ள ரத்தக்குழாய்களை விரிவடையச் செய்யும். கோவார்க்டேஷன் எனப்படும் கண்டிஷனுக்கு இதைக் கொடுப்பார்கள். பக்கவாத நோய்களுக்குக் கூட மருந்தாகக் கொடுக்கப்படுகிறது.

சிறுநீர் நோய்களுக்கு மருந்து

இலைகள் ரத்த ஓட்டத்தினை தூண்டி வலுவேற்றி மருந்தாகிறது. ஆஸ்த்மா மற்றும் அலர்ஜிக்கு எதிரான செயல்புரிகிறது. தசைபிடிப்பு வலி போக்க வல்லது. ஆக்ஸிகரணத்திற்கு எதிரானது. ரத்த அடர்த்தி அதிகரித்து உறைவதை தடுக்க வல்லது ஆஸ்துமாவை குணப்படுத்தும்.

விதைகள் ஊது மூச்சு ( Wheezing) விடுதலை தடுத்து சளியினை போக்குகிறது. பெண்களின் வெள்ளைப்போக்கினை தடுக்கவும், சிறுநீர்ப்போக்கு நோய்களுக்கும் மருந்தாகிறது.

போதை விருந்து : எஸ். ஆர். எம். - விஐடி பல்கலைக்கழக, மாணவ - மாணவிகள் கைது.



ஏலகிரியில் உள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் மது, போதை விருந்து நடந்துள்ளது. இதில் இரண்டு பிரபல பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் உள்பட 74 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை எஸ். ஆர். எம். பல்கலைக்கழகம் மற்றும் வேலூர் விஐடி பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த 72 மாணவ, மாணவியர் ஏலகிரியில் உள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் மது, போதை விருந்து நடத்தியுள்ளனர். இதில் சென்னை, பெங்களூரில் வேலை பார்க்கும் என்ஜினியர்கள் சிலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த விருந்தில் கஞ்சா, அபின் போன்ற போதை வஸ்துகள் பயன்படுத்தப்படுவதாக் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடு்தது வேலூர் எஸ்.பி. பாபு தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஏலகிரியில் உள்ள ஹோட்டல்கள், லாட்ஜ்கள், தனியார் விருந்தினர் மாளிகைகள் ஆகியவற்றில் சோதனை நடத்தினர்.

அப்போது ஆரோவில் என்ற விருந்தினர் மாளிகையில் இந்த மது, போதை விருந்து நடப்பதை கண்டுபிடித்தனர். அதில் கலந்து கொண்ட 74 பேரை கைது செய்தனர். பின்னர் 6 பேரைத் தவிர மற்றவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.