Monday, September 26, 2011

அமெரிக்காவுக்கு எதிரான கருத்து ; பாகிஸ்தான் பெண் மந்திரி ஹினா ரப்பானிகர் உடனே நாடு திரும்ப உத்தரவு .

அமெரிக்காவுக்கு எதிரான கருத்து; பெண் மந்திரிக்கு பாகிஸ்தான் கண்டனம்; உடனே நாடு திரும்ப உத்தரவு

அமெரிக்காவுக்கு எதிரான கருத்து தெரிவித்த பெண் மந்திரிக்கு கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் அவரை உடனடியாக நாடு திரும்ப உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளுடன் பாகிஸ்தான் உளவுத்துறைக்கு (ஐ.எஸ்.ஐ) தொடர்பு இருப்பதாக அமெரிக்க முப்படை தளபதி அட்மிரல் முல்லன் தெரிவித்து இருந்தார்

மேலும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டதில் ஐ.எஸ்.ஐ. உளவுத்துறை நேரடியாக சம்பந்தப்பட்டு இருப்பதாகவும் குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு பாகிஸ்தான் வெளியுறவு பெண் மந்திரி ஹினா ரப்பானிகர் பதில் அளித்தார். பாகிஸ்தான் மீது தொடர்ந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அமெரிக்கா கூறி வருகிறது. இந்த நிலை நீடித்தால் ஒரு கூட்டாளியை இழக்க நேரிடும். பாகிஸ்தான் உறவு வேண்டுமா? வேண்டாமா? என்பதை அமெரிக்காதான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

இது அமெரிக்காவை எரிச்சலடைய செய்தது. இதைத்தொடர்ந்து ஹினா ரப்பானி கிர் கருத்துக்கு அமெரிக்கா வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பு செயலாளர் ஜே.கார்னர், முப்படை தளபதி முல்லரின் செய்தி தொடர்பாளர் கேப்டன் கிர்பி ஆகியோர் தங்களின் கருத்துகளை தெரிவித்து இருந்தனர். அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் செய்தி தொடர்பாளர் ஜார்ஜ் கூறும் போது, பாகிஸ்தானுடன் உள்ள உளவு சிக்கலானது. அதே நேரத்தில் அத்தியாவசியமானதாகவும் உள்ளது. கருத்து வேறுபாடுகளும், தீவிரமான பிரச்சினைகளும் உள்ளன. ஆனால் தீவிரவாத பிரச்சினையில் இணைந்து செயல்பட வேண்டியுள்ளது என்றார்.

இது இரு நாட்டு உறவில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அமெரிக்கா நியூயார்க்கில் உள்ள ஐ.நா.சபை தலைமை அலுவலகத்தில் பொதுசபை கூட்டம் நடக்கிறது. அதில் பங்கேற்க இருந்த பாகிஸ்தான் பிரதமர் கிலானி அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்திக்க விருப்பம் தெரிவித்து இருந்தார். ஆனால் அவரை சந்திக்க ஒபாமா விரும்பவில்லை. எனவே வெள்ளநிவாரண பணிகளை மேற்பார்வையிட இருப்பதாக கூறி தனது பிரதிநிதியாக வெளியுறவு மந்திரி ஹீனா ரப்பானி கர்ரை அனுப்பி வைத்தார்.

கூட்டத்தில் பங்கேற்க சென்ற அவர் அமெரிக்காவுக்கு எதிரான கடுமையான கருத்துகளை தெரிவித்தார். இதன் மூலம் பாகிஸ்தானை அமெரிக்காவின் வெறுப்புக்கு உட்படுத்தி விட்டார். இது பிரதமர் கிலானிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஹினா ரப்பானி கர் கருத்தில் அவருக்கு உடன்பாடும் இல்லை. எனவே அமெரிக்காவுக்கு எதிரான கருத்து கூறியதற்காக அவருக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் அவர் வெளியுறவு மந்திரி ரப்பானி உடனடியாக நாடு திரும்ப உத்தரவிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து அவர் இன்று இரவு இஸ்லாமாபாத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் அமெரிக்காவுக்கு எதிராக கருத்து கூறியது குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்படுகிறது. அமெரிக்காவுடனான உறவை சரி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இந்த செய்தி பாகிஸ்தானில் இருந்து ஒளிபரப்பாகும் டி.வி. சேனலில் ஒளிபரப்பாகியது.

No comments: