Friday, May 13, 2011

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி படுதோல்வி.


திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் அனைத்து தொகுதிகளிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தோல்வி அடைந்தது.

1.சீர்காழி (தனி), 2. அரக்கோணம் (தனி), 3.கள்ளக்குறிச்சி (தனி), 4.உளுந்தூர்பேட்டை, 5. திட்டக்குடி (தனி), 6. ஊத்தங்கரை (தனி), 7. அரூர் (தனி), 8. சோழிங்கநல்லூர், 9. காட்டுமன்னார்கோயில் (தனி), 10. செய்யூர் (தனி).

ஜெயலலிதாவிற்கு சில கோரிக்கைகள் : நெடுமாறன்.


தமிழகத் தேர்தலில் வரலாறு காணாத வகையில் மக்கள் அமைதிப் புரட்சி செய்துள்ளனர் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’தமிழக மக்கள் வரலாறு காணாத வகையில் அமைதியான புரட்சியை நடத்தி முடித்திருப்பதை நான் மனமாறப் பாராட்டுகிறேன். சபாநாயகர், துணை சபாநாயகர் உட்பட, பெரும்பாலான திமுக அமைச்சர்களும் முக்கிய காங்கிரஸ் தலைவர்களும் பெரும் தோல்வியைச் சந்தித்திருக்கிறார்கள்.

ஈழத் தமிழர் பிரச்னையில் திமுக - காங்கிரஸ் கட்சிகள் செய்த அப்பட்டமான துரோகத்திற்கும், தமிழக மீனவர்களை காக்கத் தவறியதற்கும், இந்தியாவின் மிகப் பெரிய ஸ்பெக்ட்ரம் ஊழலைச் செய்ததற்கும் எல்லாவற்றிற்கும் மேலாக குடும்ப ஆட்சியை நிலைநிறுத்தச் செய்யப்பட்ட முயற்சிக்கும் சரியான பாடத்தினை மக்கள் கற்பித்திருக்கிறார்கள்.

பண பலம், அதிகார பலம், இலவசங்களை வாரி இறைத்தல் ஆகிய எதற்கும் மக்கள் ஏமாறவில்லை. திமுக கூட்டணி செய்த முறைகேடுகளை முறியடித்துள்ளனர்.

திருமங்கலம் சூத்திரத்தை செயற்படுத்த விடாமல் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட நேர்மையான நடவடிக்கைகள் ஜனநாயகத்தைக் காப்பாற்றி உள்ளன.

மத, சாதி, பிராந்திய வேறுபாடுகளுக்கு அப்பால் ஒட்டுமொத்தத் தமிழகமும் திமுக கூட்டணிக்கு எதிராகத் தீர்ப்பளித்துள்ளது.

மக்கள் அளித்த இந்த தீர்ப்பினை வரவேற்றுப் பாராட்டும் அதே வேளையில் புதிய அரசை அமைக்கவிருக்கும் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கும் எனது பாராட்டுதலையும் வாழ்த்தினையும் தெரிவித்துக் கொள்வதோடு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை முதல் கடமையாக மேற்கொள்ள வேண்டுமென வேண்டிக் கொள்கிறேன்.

ஐ நா. விசாரணைக் குழுவினால் போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கும் இராசபக்சேயை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கும்,

இலங்கையில் எஞ்சியிருக்கும் ஈழத்தமிழர்களின் உயிர்களையும் உடைமை களையும் பாதுகாப்பதற்கு ஐ. நா. படையை அங்கு அனுப்பி வைப்பதற்கும், தமிழக மீனவர்களைப் பாதுகாப்பதற்கும் தேவையான அவசர நடவடிக்கைகளைத் தலையாய கடமையாக மேற்கொள்ள வேண்டுமென வேண்டிக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

ஆழிப்பேரலையாய் மக்கள் சக்தி எழுந்து ஆளுங்கட்சியை வாரிச் சுருட்டி எறிந்துவிட்டது : வைகோ.


தமிழக வாக்காளர்கள் ஊழல் பணநாயகத்தை வீழ்த்தி, ஜனநாயகத்துக்குப் பொன்மகுடம் சூட்டி விட்டனர் என்று தேர்தல் முடிவுகள் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’கடந்த ஐந்து ஆண்டுகளில், தலைவிரித்து ஆடிய ஆளுங்கட்சியின் ஊழல், அராஜகம், திரைப்படத் துறை, தொழில் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் கபளீகரம் செய்ய முயன்ற ஒரு குடும்ப ஆதிக்கம்,

பன்னாட்டுப் பகாசுரக் கம்பெனிகளுக்குத் தடையற்ற மின்சாரம் தந்துவிட்டு, நிர்வாகச் சீர்கேட்டால் தமிழகத்தை இருளில் தள்ளிய கடுமையான மின்வெட்டு, தாங்க முடியாத விலைவாசி ஏற்றம், தமிழக வாழ்வாதாரங்களைக் காக்கும் கடமையில் தவறிய குற்றம், அனைத்துக்கும் மேலாக ஈழத் தமிழ் இனப் படுகொலைக்கு, காங்கிரஸ் அரசுக்குத் துணைநின்ற துரோகம், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பை இழந்த அபாயம்,

இவை அனைத்தையும் எதிர்த்து ஆழிப்பேரலையாய் மக்கள் சக்தி எழுந்து, ஆளுங்கட்சியின் ஊழல் பணநாயகத்தையும், அதிகார வன்முறையையும் வாரிச் சுருட்டி எறிந்துவிட்டது.

நடைபெற்று முடிந்த தேர்தல் களத்தில் மதிமுக பங்கு ஏற்காவிடினும், கடந்த ஐந்து ஆண்டுகளாக, தி.மு.க. அரசின் மக்கள் விரோதப் போக்கை எதிர்த்து, மக்கள் மன்றத்தில் இடையறாத பிரச்சாரத்திலும் அறப்போரிலும் அர்ப்பணிப்போடு ஈடுபட்டது.

எதிர்காலத்தில், இனி அதிகார துஷ்பிரயோகத்தையும், ஊழல் பணத்தையும் கொண்டு எவரும் தேர்தலில் வெல்ல முடியாது எனும் எச்சரிக்கை தரும் சரியான பாடத்தை, வாக்காளர்கள் கற்பித்து உள்ளனர். தேர்தல் ஆணையம் தன் கடமையில் வென்று உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

தேமுதிக வெற்றி பெற்ற தொகுதிகள்.


தேமுதிக அதிமுக கூட்டணியில் இணைந்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டது. இதில் தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில் 29 தொகுதிகளில் தேமுதிக வெற்றி பெற்றது.


ரிஷிவந்தியம், எழும்பூர், விருகம்பாக்கம், ஆலந்தூர், சோளிங்கர், திருத்தணி, செங்கம், கெங்கவல்லி, தருமபுரி, திட்டக்குடி, பண்ருட்டி, கும்மிடிப்பூண்டி, செங்கல்பட்டு, ஆரணி, மேட்டூர், பேராவூரணி, விருத்தாசலம்.

காட்டுமன்னார்கோவில், மயிலாடுதுறை, சேலம் வடக்கு, சேந்தமங்கலம், திருச்செங்கோடு, திருக்கோவிலூர், திருவெறும்பூர், திருப்பரங்குன்றம், விருதுநகர், ராதாபுரம், சூலூர், ஈரோடு கிழக்கு, மதுரை மத்தியிலும் தேமுதிக வெற்றி பெற்றுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.


கூட்டணி கட்சிகளின் தயவின்றி, தனித்தே அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது அதிமுக. இதனால் அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனித்தே ஆட்சியமைக்கவுள்ளார்.

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அதிமுக கூட்டணி 200 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதில் அதிமுக மட்டும் தனித்து 152 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.

விஜயகாந்தின் தேமுதிக யாரும் எதிர்பாராத வகையில் 26 இடங்களில் வென்றுள்ளது. இதன்மூலம் 2வது இடத்தைப் பிடித்து சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் பதவியை அந்தக் கட்சி கைப்பற்றவுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் கட்சி 8 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6 இடங்களிலும், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி 2 தொகுதிகளிலும், புதிய தமிழகம் 2 தொகுதிகளிலும், மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதிகளிலும், கொங்கு இளைஞர் பேரவை 1 தொகுதியிலும், பார்வர்ட் பிளாக் 1 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன. மொத்தத்தில் இந்தக் கூட்டணி 201 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

ஆட்சியமைக்க 118 இடங்களே தேவை என்ற நிலையில், அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் தனித்தே ஆட்சியைப் பிடிக்கிறது. கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக 61 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

3வது இடத்துக்கு தள்ளப்பட்ட திமுக:

திமுக கூட்டணி 33 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இதில் திமுக 24 தொகுதிகளிலும், காங்கிரஸ் 5 தொகுதிகளிலும், பாமக 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

இந்தக் கூட்டணியில் இடம் பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

வெறும் 24 இடங்களை மட்டுமே பிடிப்பதன் மூலம் தேமுதிகவுக்கு அடுத்த இடத்தையே திமுக எட்டியுள்ளது. இதனால் சட்டமன்றத்தில் எதிர்க் கட்சி என்ற அந்தஸ்தைக் கூட இழந்துள்ளது.

மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்: ராமதாஸ்.


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’கடந்த 5 ஆண்டுகளில் மக்களின் உரிமைகள், சமூக நீதி, கல்வி, மது ஒழிப்பு ஆகியவற்றுக்காக பாமக தொடர்ந்து பாடுபட்டு வந்துள்ளது. அந்த நம்பிக்கையில் திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து போட்டியிட்டோம்.

எனினும், மாற்றம் வேண்டும் என்று கருதியதால் அதிமுக கூட்டணியை மக்கள் வெற்றி பெறச் செய்துள்ளார்கள்.

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற அடிப்படையில் தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்கிறோம். அதேநேரத்தில், தமிழக மக்களின் நலனுக்காகவும் உரிமைக் காகவும் பாமக தொடர்ந்து பாடுபடும்.

பாமக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்தவர்களுக்கும், வெற்றிக்காக பாடுபட்ட பாமக மற்றும் கூட்டணி கட்சியினருக்கும் நன்றி’’ என்று தெரிவித்துள்ளார்.

கொளத்தூர்: மு.க.ஸ்டாலின் வெற்றி.


கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மு.க.ஸ்டாலின் 68,784 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி 65,965 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

2,819 வாக்குகள் வித்தியாசத்தில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றார்.

தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு படுதோல்வி.

தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு படுதோல்வி:    தங்கபாலுவும் வெற்றி வாய்ப்பை இழந்தார்

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு பலத்த தோல்வியை மக்கள் அளித்துள்ளனர். தமிழர்கள் அளித்துள்ள தீர்ப்பு காங்கிரஸ் மூத்த தலைவர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தி.மு.க. கூட்டணியில் முக்கிய அங்கம் வகித்த காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்த போது மிக, மிக கறாராக நடந்து கொண்டது.

திமுகவை கடுமையாக மிரட்டி, உருட்டி, ஸ்பெக்ட்ரம் ஊழலை வைத்து பாலிட்டிக்ஸ் செய்து அதிக அளவிலான தொகுதிகளை பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தி 63 தொகுதிகளை தி.மு.க.விடம் இருந்து பெற்றது. ஆனால் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட கோஷ்டி பிரச்சினையால் பிரசாரத்தில் ஒருங்கிணைப்பு இல்லாத நிலை ஏற்பட்டது.

மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலு மயிலாப்பூரில் திடீர் வேட்பாளர் ஆனது காங்கிரசாரிடம் மட்டுமின்றி மக்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பது இன்று தேர்தல் முடிவு மூலம் தெரிய வந்தது. 63 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெறும் 5 இடங்களில் மட்டும் வெற்றி பெற்ற நிலையில் உள்ளது.

குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு, ஓசூர், பட்டுக்கோட்டை ஆகிய 5 தொகுதிகள் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு “கை” கொடுத்துள்ளது.

மதியம் 1 மணி நிலவரப்படி விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜயதாரணி 23,789 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலு மயிலாப்பூர் தொகுதியில் திடீர் வேட்பாளராகி போட்டியிட்டார். ஆனால் மயிலாப்பூர் மக்களை அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் தோல்வியை தழுவி உள்ளார். அவரைப் போலவே பீட்டர்அல்போன்ஸ், ஞானசேகரன், யசோதா உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களும் தோல்வியை சந்தித்துள்ளனர். காங்கிரசை தமிழக வாக்காளர்கள் ஒதுக்கி விட்டதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

தேர்தல் முடிவு குறித்து கருணாநிதி கருத்து.

தேர்தல் முடிவு குறித்து கருணாநிதி கருத்து

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. இதில் அ.தி.மு.க. பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. தி.மு.க. கூட்டணி குறைந்த இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்டுள்ள தோல்வி காரணமாக முதல்-அமைச்சர் கருணாநிதியும், அமைச்சர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். தேர்தல் முடிவு குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் கேட்டபோது, தமிழ்நாட்டு மக்கள் எனக்கு நல்ல ஓய்வு கொடுத்து இருக்கிறார்கள் என்றார்.