Friday, May 13, 2011

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.


கூட்டணி கட்சிகளின் தயவின்றி, தனித்தே அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது அதிமுக. இதனால் அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனித்தே ஆட்சியமைக்கவுள்ளார்.

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அதிமுக கூட்டணி 200 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதில் அதிமுக மட்டும் தனித்து 152 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.

விஜயகாந்தின் தேமுதிக யாரும் எதிர்பாராத வகையில் 26 இடங்களில் வென்றுள்ளது. இதன்மூலம் 2வது இடத்தைப் பிடித்து சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் பதவியை அந்தக் கட்சி கைப்பற்றவுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் கட்சி 8 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6 இடங்களிலும், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி 2 தொகுதிகளிலும், புதிய தமிழகம் 2 தொகுதிகளிலும், மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதிகளிலும், கொங்கு இளைஞர் பேரவை 1 தொகுதியிலும், பார்வர்ட் பிளாக் 1 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன. மொத்தத்தில் இந்தக் கூட்டணி 201 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

ஆட்சியமைக்க 118 இடங்களே தேவை என்ற நிலையில், அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் தனித்தே ஆட்சியைப் பிடிக்கிறது. கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக 61 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

3வது இடத்துக்கு தள்ளப்பட்ட திமுக:

திமுக கூட்டணி 33 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இதில் திமுக 24 தொகுதிகளிலும், காங்கிரஸ் 5 தொகுதிகளிலும், பாமக 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

இந்தக் கூட்டணியில் இடம் பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

வெறும் 24 இடங்களை மட்டுமே பிடிப்பதன் மூலம் தேமுதிகவுக்கு அடுத்த இடத்தையே திமுக எட்டியுள்ளது. இதனால் சட்டமன்றத்தில் எதிர்க் கட்சி என்ற அந்தஸ்தைக் கூட இழந்துள்ளது.

No comments: