Monday, July 4, 2011

உடல் உறுப்பு தானத்துக்காக தற்கொலை செய்து கொண்ட சிறுமி.

மேற்கு வங்க மாநிலம் நடியா மாவட்டத்தில் உள்ள ஜோர்பரா எனும் பகுதியை சேர்ந்தவர் மிருதுல்சர்கார். இவரது மகன் மோனோ ஜித் (14). மகள் மம்பி சர்கார் (11). கூலித் தொழிலாளியான மிருதுல் தன் குடும்பத்தை கஷ்டப்பட்டு காப்பாற்றி வருகிறார்.

வறுமையில் இருந்தாலும் மோனோஜித், மம்பி இருவரையும் படிக்க வைத்து வருகிறார். கடந்த சில மாதங்களாக மிருதுல் சர்க்காரின் கண்ணில் கோளாறு ஏற்பட்டது. பார்வை குறைபாடுகளால் அவதிப்பட்டார். அவருக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறி இருந்தனர்.

இந்த நிலையில் மோனோ ஜித்தின் சிறு நீரகம் ஒன்று பழுதடைந்தது. மற்றொரு சிறுநீரகம் வேகமாக செயல் இழந்து வருகிறது. அவனுக்கு மாற்று சிறுநீரகம் பொருத்தினால் தான் அவன் உயிர் வாழ முடியும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

தந்தைக்கு கண் வேண்டும். அண்ணனுக்கு சிறுநீரகம் தேவை என்பதை அறிந்த மம்பி சர்க்கார் மிகவும் வேதனை அடைந்தார். உடல் தானம் பற்றி அறிந்திருந்த அவர் தன் கண், சிறு நீரகங்களை தந்தைக்கும் சகோதரனுக்கும் தானம் செய்யலாம் என்று நினைத்தார்.

கடந்த 27-ந்தேதி மம்பி சர்க்கார் தன் சகோதரி மோனிகாவிடம் தனது உடல் தான முடிவு பற்றி கூறினாள். அதை கேட்ட மோனிகா சிரித்தபடி உனக்கு என்ன பைத்தியமா என்று சொல்லியபடி பள்ளிக் கூடத்துக்கு புறப்பட்டுச் சென்று விட்டார்.

தந்தை மிருதுல் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த மம்பி, தன் கண்கள், சிறு நீரகங்களை அகற்றி தந்தை, சகோதரனுக்கு பொருத்தவும் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாள்.

இதை அறியாத மிருதுல் மற்றும் உறவினர்கள் மம்பி உடலை தகனம் செய்து விட்டனர். இரண்டு நாட்கள் கழித்தே மம்பி எழுதி வைத்திருந்த கடிதம் கிடைத்தது. அதை படித்து குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர்.

இந்தியாவில் முதன் முறையாக “ரோபோ” மூலம் புற்று நோய் ஆப்ரேசன்.

உலகில் முதன்முறையாக   நோயாளிக்கு “ரோபோ” மூலம்   புற்று நோய் ஆபரேசன்;   வெற்றிகரமாக நடந்ததாக    டாக்டர்கள் பேட்டி

ரஜினி நடித்த எந்திரன் படத்தில் மனித ரோபோ ஒன்று ஆப்ரேசன் செய்வது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. அதைப் பார்த்த பலர் ரோபோவால் ஆப்ரேஷன் செய்ய முடியுமா என்று ஆச்சரியம் அடைந்தனர். தற்போது அதை உண்மையாக்கும் விதத்தில் ஐதராபாத்தில் உள்ள ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆப் கேஸ்ட்ரோ என்ட்ராலஜி மருத்துவமனையில் புற்று நோயாளி ஒருவருக்கு “ரோபோ” மூலம் ஆப்ரேசன் நடந்துள்ளது.

அவரது பெயர் வீரபத்தராவ் (45) ஆந்திர மாநிலம் வாரங்கால்லைச் சேர்ந்தவர். இவரது ஜீரண மண்டல பகுதியில் புற்று நோய் தாக்கி இருந்தது. புற்று நோய் பாதித்த பகுதியை ரோபோ மூலம் அகற்ற மருத்துவமனை சேர்மன் நாகேஸ்வர ரெட்டி முடிவு செய்தார்.

இதற்காக சிங்கப்பூரில் இருந்து டாக்டர்கள் லூயிசிஷி, கோகிக் யூ லாரன்ஸ் ஆகியோர் ஐதராபாத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தலைமையில் வீரபத்ரராவுக்கு “ரோபோ” மூலம் என்டோஸ் கோப்பிக் ஆப்ரேஷன் நடந்தது. அந்த ரோபோ 17 நிமிடங்களில் அவரது ஜீரண மண்டலத்தில் புற்று நோய் தாக்கிய பகுதியை வெற்றிகரமாக அகற்றி சாதனை படைத்தது.

இது பற்றி நாகேஸ்வர ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

உடல் பகுதியில் புற்று நோய் பாதித்த பகுதியை அகற்றும் ஆப்ரேசனை மிகவும் நுண்ணியமான முறையில் செய்ய வேண்டும். இதனால் இந்த ஆப்ரேசனை டாக்டர்கள் செய்ய சுமார் 6 மணி நேரமாவது ஆகிவிடும். ஆனால் “ரோபோ” வானது 17 நிமிடத்தில் புற்று நோய் பாதித்த பகுதியை முழுமையாக அகற்றி விட்டது.

ரோபோ மூலம் செய்யப்படும் ஆப்ரேசனுக்கு அதிகம் செலவு செய்யத் தேவை இல்லை. டாக்டர்கள் குழுவினர் சாதாரணமாக ஒரு ஆப்ரேசன் செய்ய ரூ.1 லட்சம் வரை ஆகி விடுகிறது. ஆனால் “ரோபோ” ஆப்ரேசனுக்கு ரூ.5 ஆயிரம் தான் ஆகும். ஆப்ரேசன் ரோபோக்கள் அதிக அளவில் தயாரிக்கப்பட்டால் நிறைய உயிர்களை காக்கலாம் என்றார்.

காரில் வந்த அதிகாரி துப்பாக்கியால் சுட்டார் : நேரில் பார்த்த சிறுவர்கள் பரபரப்பு தகவல்.

காரில் வந்த அதிகாரி துப்பாக்கியால் சுட்டார்: நேரில் பார்த்த சிறுவர்கள் பரபரப்பு தகவல்

சென்னை தீவுத்திடல் கொடி மர சாலையில் உள்ள ராணுவ குடியிருப்பு பகுதியில் மரம் ஏறி பழம் பறித்த 13 வயது சிறுவன் தில்ஷான் சுட்டுக் கொல்லப்பட்டான்.

கொலை செய்யப்பட்ட தில்ஷானுடன் சஞ்சை (11), பெவின் (10) ஆகிய சிறுவர்களும் சென்றனர். நடந்த சம்பவம் குறித்து அவர்கள் கூறியதாவது:-

நேற்று மதியம் தில்ஷானும் நாங்களும் வாதாம்பழம் பறிப்பதற்காக ராணுவ குடியிருப்புக்குள் சுவர் ஏறி குதித்து சென்றோம். தில்ஷான் மரத்தில் ஏறி வாதாம் பழங்களை பறித்து போட்டான். நாங்கள் 2 பேரும் அதை பொறுக்கிக் கொண்டு இருந்தோம்.

அப்போது அங்கு நின்ற ராணுவ வீரர் எங்களை சத்தம் போட்டார். உடனே கீழே நின்ற நாங்கள் சுவர் ஏறி வெளியே குதித்தோம். தில்ஷான் மரத்தில் இருந்து இறங்கி சுவரில் ஏறினான். அப்போது காரில் வந்த ராணுவ அதிகாரி ஒருவர் தில்ஷானை நோக்கி சுட்டார். “டுமீல்” என்று சத்தம் கேட்டது.

தில்ஷான் அலறியபடி விழுந்தான். அவன் காதின் அருகே புகை வந்தது. ரத்தமும் வழிந்தது. அதை பார்த்ததும் மிகவும் பயந்து நடுங்கினோம். உடனே ஓடிச் சென்று தில்ஷான் அம்மாவிடம் நடந்ததை சொன்னோம். உடனே அவர் அழுதபடி தில்சனை பார்க்க வந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் நடந்ததை கேள்விப்பட்டு அங்கு வந்தார்கள்.

நாங்கள் எத்தனையோ முறை விளையாட்டாக அங்கு சென்றிருக்கிறோம். இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

இவ்வாறு சிறுவர்கள் கூறினார்கள்.

அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் கூறியதாவது:-

நாங்கள் 20 வருடமாக இங்கு குடியிருக்கிறோம். சிறுவர்கள் மாம்பழம், வாதாம்பழம் பறிப்பதற்காக ராணுவ பகுதிக்குள் விளையாட்டாக செல்வது வழக்கமானதுதான். தடை செய்யப்பட்ட பகுதியாக இருந்தாலும் சிறுவர்கள் என்பதால் அங்கு நிற்கும் ராணுவத்தினர் எச்சரிக்கை செய்து அனுப்புவதுதான் வாடிக்கை. இதுவரை இப்படி ஒரு சம்பவம் நடந்ததே இல்லை.

சிறுவனை இரக்கம் இல்லாமல் ராணுவ அதிகாரி ஒருவர் இப்படி நடந்து கொண்டதை ஏற்க முடியாது. இந்த பகுதியில் சிறுவர்களுக்கு விளையாட தனி இடம் இல்லை. சிறுவர்கள் விளையாட்டாக இதை செய்து இருக்கிறார்கள். காரில் வந்த ராணுவ அதிகாரி ஒருவர்தான் சுட்டு இருக்கிறார். அவரை உடனே கைது செய்ய வேண்டும். கைது ஆகும் அதிகாரி யார்? என்பதை பொதுமக்களிடம் காட்ட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

குண்டு பாய்ந்த முறை குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சிறுவன் தில்ஷான் காது அருகே குண்டு பாய்ந்து வெளியே வந்திருக்கிறது. குண்டு பாய்ந்துள்ள முறையை பார்த்தால் கீழே இருந்து தான் யாரோ சுட்டு இருக்கிறார்கள் என்பது உறுதியாக தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இலங்கை கடற்படை பிடித்து சென்ற 14 மீனவர்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு.

இலங்கை கடற்படை பிடித்து சென்ற 14 மீனவர்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு

ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 20-ந்தேதி மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றனர். அவர்கள் விடுவிக்கப்பட்டு கடந்த 30-ந் தேதி ராமேசுவரம் வந்து சேர்ந்தனர்.

இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் கூட முடியாத நிலையில் தனுஷ்கோடி கம்பிபாடு கடற்கரையில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 4-வது மணல் தீடை அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி மீனவர்கள் 14 பேரை படகுடன் சிறை பிடித்து சென்றனர்.

இந்த நிலையில், 14 மீனவர்களையும் அவர்களின் படகையும் சர்வதேச கடல் எல்லையில் வைத்து இந்திய கடற்படையினரிடம் ஒப்படைத்துவிட்டனர். அவர்களை இந்திய கடற்படையினர் கரைக்கு அழைத்து வருகின்றனர்.

தெலுங்கானா தனி மாநிலத்திற்கு ஆதரவு தெரிவித்து 10 எம்.பிக்கள், 79 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா.



தனி தெலுங்கானா மாநிலம் கோரி இன்று காங்கிரஸ் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், எம்.எல்.சிக்கள், அமைச்சர்கள் சொன்னபடி தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். அதேபோல தெலுங்கு தேசம், அதிருப்தி தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களும் ராஜினாமா செய்ததால் ஆந்திராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கக் கோரி நீண்டகாலமாக போராட்டம் நடந்து வருகிறது. சமீப காலமாக இது உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் தனி மாநிலம் அமைப்பது தொர்பாக பரிசீலிப்பதாக கூறியது மத்திய அரசு. ஆனால் வழக்கம் போல பல்வேறு ஜெகஜால குழப்பத்தை ஏற்படுத்தி அதை அப்படியே கிடப்பில் போட்டு விட்டது.

இதனால் வெகுண்ட தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி மீண்டும் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. மேலும் தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், எம்எல்சிக்கள் பதவி விலக வேண்டும் என்று தெலுங்கானா ராஷ்டிரிய கட்சி காங்கிரஸை நெருக்கி வருகிறது. தெலுங்கானா மக்களும் காங்கிரஸ் கட்சிக்கு நிர்ப்பந்தம் கொடுக்க ஆரம்பித்தனர்.

இதையடுத்து ஆந்திர மாநிலஅமைச்சர் ஜனாரெட்டி தலைமையில் தெலுங்கானா வைச் சேர்ந்த காங்கிரஸ் சட்டமன்ற, நாடாளு்மன்ற, மேலவை உறுப்பினர்கள் கூடி அவசர ஆலோசனை நடத்தினர். அதில் ராஜினாமா செய்வது குறித்து முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த 50 எம்.எல்.ஏக்கள், 9 எம்.பிக்கள், 16 எம்எல்சிக்கள் இன்று ராஜினாமா செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

முந்திக் கொண்ட தெலுங்கு தேசம்

இந்த நிலையில் காங்கிரஸாருக்கு முன்பாக நேற்று அதிருப்தி தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த நான்கு எம்.எல்.ஏக்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை சபாநாயகருக்கு அனுப்பி வைத்து அனைவரையும் அதிர வைத்தனர்.

இவர்கள் நகம் ஜனார்த்தன் ரெட்டி குழுவைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர் தவிர ஜோகு ராமண்ணா, ஹரீஸ்வர் ரெட்டி, வேணுகோபாலச்சாரி ஆகியோரும் ராஜினாமா செய்துள்ளனர்.

இதன் மூலம் தெலுங்கானா பகுதி மக்களிடையே இவர்கள் திடீர் ஹீரோக்களாகி உள்ளனர்.

சொன்னபடி விலகினர் காங்கிரஸார்

இந்த நிலையில் இன்று காலை அமைச்சர் ஜனா ரெட்டி வீட்டில் கூடிய காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், எம்.எல்.சிக்கள் இறுதிக் கட்ட ஆலோசனையில் ஈடுபட்டனர். அதன் பின்னர் தங்களது ராஜினாமா கடிதங்களை சபாநாயகருக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தனர்.

10 எம்.பிக்கள் ராஜினாமா

தெலுங்கானாவில் மொத்தம் 12 லோக்சபா உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 9 பேர் இன்று ராஜினாமா செய்தனர்.

ராஜ்யசபா உறுப்பினர்கள் 5 பேர் உள்ளனர். இவர்களில் கேசவராவ் மட்டும் ராஜினாமா செய்துள்ளார்.

79 எம்.எல்.ஏக்கள் விலகினர்

தெலுங்கானா பகுதியில் 2 பிரஜா ராஜ்ஜியம் கட்சி உறுப்பினர்களையும் சேர்த்து காங்கிரஸுக்கு 53 பேர் உள்ளனர். இவர்களில் 42 பேர் இன்று ராஜினாமா செய்தனர். இவர்களில் 11 பேர் கிரண் குமார் ரெட்டி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் ஆவர். அதேசமயம், அமைச்சர்கள் தனம் நாகேந்தர், முகேஷ் கெளட் மற்றும் எம்.எல்.ஏக்கள் சசிதர் ரெட்டி, துணை முதல்வர் தாமோதர் ராஜா நரசிம்மா ஆகியோர் ராஜினாமா செய்ய மறுத்துள்ளனர்.

தெலுங்கானா பகுதியில் மட்டும் 15 அமைச்சர்கள் உள்ளனர். இவர்களில் 11 பேர் ராஜினாமா செய்து விட்டதால் கிரண் குமார் ரெட்டி அமைச்சரவை கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.

தெலுங்கு தேசம் கட்சிக்கு 37 பேர் உள்ளனர். இவர்களில் நகம் ஜனார்த்தன் ரெட்டி உள்ளிட்ட நான்கு அதிருப்தியாளர்களும் அடக்கம். அத்தனை பேரும் கூண்டோடு ராஜினாமா செய்து விட்டனர்.

மொத்தம் 10 எம்.பிக்கள், 79 எம்.எல்.ஏக்கள் இன்று ராஜினாமா செய்துள்ளனர். தெலுங்கானா பகுதியில் மொத்தம் 119 எம்.எல்.ஏக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.எல்.ஏக்கள் அனைவரும் தங்களது ராஜினாமா கடிதங்களை சபாநாயகரிடமும், துணை சபாநாயகர் பத்தி விக்ரமர்காவிடமும் அளித்துள்ளனர்.

முதல்வர் கிரண் குமார் ரெட்டி அரசுக்கு சட்டசபையில் 154 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்கள் போக சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சி எம்.எல்.ஏக்கள் 18 பேரின் ஆதரவும் உள்ளது. எம்ஐஎம் கட்சிக்கு 7, சில சுயேச்சைகள் ஆகியோரும் அரசுக்கு ஆதரவாக உள்ளனர்.

ஆனால் தற்போது கணிசமான எம்.எல்.ஏக்கள் விலகியிருப்பதால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

13 வயது சிறுனை ராணுவம் சுட்டுக் கொன்றதை ஏற்கவே முடியாது - ஜெயலலிதா கண்டனம்.



சென்னையில் பழம் பறிப்பதற்காக ராணுவக் குடியிருப்புக்குள் நுழைந்த 13 வயது சிறுவனை ராணுவ வீரர் ஒருவர் கொடூரமாக சுட்டுக் கொன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிக் குண்டு சிறுவனின் தலையை துளைத்து பிளந்து விட்டது.

சென்னை தீவுத்திடல் பகுதி இந்திரா நகரைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி கலைவாணி. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். 2-வது மகன் தில்ஷன். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் மதிய வேளையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து தீவுத்திடல் அருகே உள்ள ராணுவக் குடியிருப்புக்குள் விழுந்து கிடக்கும் பாதாம் பழங்களை எடுக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்த ராணுவக் குடியிருப்புக்குள் கீழே விழுந்து கிடக்கும் பழங்களை அப்பகுதி சிறுவர்கள் அடிக்கடி வந்து எடுப்பது வழக்கம். அந்த சமயத்தில் அவர்களைப் பிடித்து எச்சரித்து ராணுவ பாதுகாப்பு சென்ட்ரி அனுப்பி விடுவார்.

ஆனால் நேற்று சென்ட்ரி சற்று கொடூரமாக நடந்து கொண்டார். சிறுவன் தில்ஷனை நோக்கி சுட்டு விட்டார். தலையில் குண்டு பாய்ந்து தில்ஷன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் விழுந்தான்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற சிறுவர்கள் அங்கிருந்து ஓடி தில்ஷனின் பெற்றோரிடம் நடந்ததைக் கூறினர். அதிர்ச்சி அடைந்த பெற்றோரும், அப்பகுதி மக்களும் ராணுவக் குடியிருப்பில் திரண்டு விட்டனர். ஆனால் தில்ஷனைக் காணவில்லை. இதுகுறித்துக் கேட்டபோது சிறுவனை மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக ராணுவத்தினர் கூறியுள்ளனர்.

இதை நம்ப மறுத்த பொதுமக்கள் அங்கேயே சாலை மறியலில் குதித்தனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பெரும் பதட்டம் ஏற்பட்டது.

சிலர் அரசு பொது மருத்துவ்மனைக்குச் சென்று பார்த்தபோது உள்ளே நுழைய விடாமல் தடுக்கப்பட்டனர். இதனால் அவர்கள் பொது மருத்துவமனைக்கு எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் அவர்களைக் கலைந்து போகுமாறு போலீஸார் வலியுறுத்தியபோது ஏற்கனவே கடும் ஆத்திரத்தில் இருந்தவர்கள் போலீஸாரை நோக்கி தாக்குதலில் குதித்தனர். கல்வீசி அவர்கள் தாக்கியதில் ஒரு போலீஸ்காரரின் தலையில் காயம் ஏற்பட்டது.

இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன் இறந்து விட்டதாக தகவல் வெளியாகவே பதட்டம் மேலும் அதிகரித்தது.

தகவல் அறிந்ததும் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், உதயக்குமார் ஆகியோர் சிறுவனின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினர்.

சம்பவம் குறித்து வடக்கு மண்டல இணை ஆணையாளர் செந்தாமரைக் கண்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், சிறுவனை துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தாயாரின் வேதனை.

சிறுவன் தில்ஷனின் தாயார் கலைவாணி தனது மகனைப் பறி கொடுத்த வேதனையில் கதறிக் குமுறினார். அவர் கூறுகையில்,

எனது கணவர் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டு தற்போது வேலைக்கு போகாமல் உள்ளார். இதனால் எனது 3 குழந்தைகளையும் படிப்பை நிறுத்திவிட்டு கவர் செய்யும் கம்பெனிக்கு வேலைக்கு அனுப்பினேன். அவர்கள் சம்பாதிக்கும் பணத்தில்தான் குடும்பம் நடக்கிறது.

என் பிள்ளை தில்ஷன் மற்ற பிள்ளைகளோடு சேர்ந்து வாதாம் காய் பறித்துள்ளான். அவனை அடித்து துரத்தியிருக்கலாம். ஆனால் பாவிகள் கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் காக்கையை சுடுவதுபோல் சுட்டு இருக்கிறார்கள்.

நான் வந்து பார்த்தபோது குண்டுபாய்ந்த நிலையில் எனது மகன் காக்கை செத்து தொங்குவதுபோல மதில்சுவரில் தொங்கினான். எனது மகனை சுட்ட பாவியை கைது செய்து கடும் தண்டனை வழங்கவேண்டும். எனது மகன் தில்ஷன் 6-வது வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். குடும்ப கஷ்டத்தால்தான் அவனை படிக்கவைக்க முடியவில்லை என்று கதறி அழுதது நெஞ்சை உறைய வைப்பதாக இருந்தது.

இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில்,

பழம் பறிக்க ராணுவக் குடியிருப்புக்குள் நுழைந்த 13 வயது சிறுவனை சுட்டுக் கொன்ற ராணுவத்தின் செயல் யாராலும் ஏற்க முடியாதது. சுட்டுக் கொன்ற ராணுவ வீரரை ராணுவம், போலீஸில் ஒப்படைக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

சென்னை தீவுத்திடல் அருகில் உள்ள இந்திரா காந்தி நகரைச் சேர்ந்த கூலி தொழிலாளி குமார் என்பவரின் 13 வயது மகன் தில்ஷன் நேற்று மதியம் 1.30 மணியளவில் கொடிமரச்சாலை ராணுவ வளாகத்தில் அமைந்துள்ள மரத்தில் ஏற முயன்றபோது அங்குள்ள ராணுவ காவலாளியால் சுடப்பட்டார்.

மரத்தில் ஏற முயன்ற 13 வயது சிறுவன் தீவிரவாதியோ, பயங்கரவாதியோ அல்ல என்பதை பாதுகாவலர் எளிதில் தெரிந்து கொண்டிருக்க முடியும். இருப்பினும், அந்த சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தி இருப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனது ஆணையின் பேரில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராணுவ ஜெனரல் கமாண்டிங் அதிகாரிக்கு கடிதம் எழுதி இந்த கொடூரச் செயலை செய்த ராணுவ வீரரை உடனடியாக தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி உள்ளார். அந்த ராணுவ வீரர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதை நான் உறுதி செய்வேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

சிறுவன் தில்ஷனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது குடும்பத்திற்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் உதவித்தொகை வழங்க ஆணையிட்டுள்ளேன் என்று தெரிவித்திருந்தார்.

பெற்றோரிடம் நிதியுதவி வழங்கப்பட்டது

இதையடுத்து தில்ஷனின் பெற்றோரிடம் ரூ. 5 லட்சம் நிதியுதவிக்கான காசோலையை முதல்வர் உத்தரவின்பேரில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கி ஆறுதல் கூறினார்.

ராணுவம் மறுப்பு

இதற்கிடையே, ராணுவ வீரர்கள் யாரும் சிறுவனை சுட்டுக் கொல்லவில்லை என்று நிர்வாகப் பிரிவு பிரிகேடியர் சசி நாயர் கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தவறு செய்தவர்கள் யாரும் தப்பிக்க விட மாட்டோம். போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனர், ராணுவ போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் நடந்த இடத்தில் உள்ள வீடுகளிலும், அப்பகுதியிலும் தீவிர சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளோம். இதற்காக அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவில்தான் தவறு செய்தது யார் என்பது தெரிய வரும்.

ஆனால் சம்பவம் நடந்த இடத்தில் துப்பாக்கியுடன் கூடிய பாதுகாப்பு வீரர்கள் யாரும் அந்த சமயத்தில் இல்லை. எனவே ராணுவ வீரர்கள் சுட்டிருக்க வாய்ப்பில்லை.

தடவியல் அதிகாரிகள் மற்றும் மோப்ப நாய்கள் சகிதம் தீவிர விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது என்றார்.

சிறுவன் குண்டு பாய்ந்துதான் இறந்தான் - பிரேதப் பரிசோதனை அறிக்கை

சம்பவம் நடந்தபோது அந்தப் பகுதியில் துப்பாக்கியுடன் எந்தப் பாதுகாவலரும் இல்லை. சாதாரண குச்சியுடன் தான் வாட்ச்மேன் மட்டுமே இருந்தார் என்று ராணுவ பிரிகேடியர் சசி நாயர் என்பவர் கூறியிருந்தார்.

மேலும், சிறுவர்களை விரட்ட லேசான தடியடி நடத்தியபோது சுற்றுச் சுவர் கம்பியில் மோதி சிறுவன் காயமடைந்து பின்னர் உயிரிழந்ததாகவும், துப்பாக்கிச் சூடு நடக்கவில்லை என்றும் ராணுவத் தரப்பு மறுத்திருந்தது.

ஆனால் தற்போது சிறுவன் தில்ஷன் குண்டு பாய்ந்துதான் இறந்தான் என்று பிரேதப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் யார் சிறுவனை சுட்டது என்பது பெரும் குழப்பமாகியுள்ளது. இதையடுத்து சம்பவத்தின்போது தில்ஷனுடன் இருந்த 2 சிறுவர்களை வைத்து அடையாள அணிவகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ராணுவம் ஒத்துழைக்க வேண்டும் என்று காவல்துறை தரவிப்பில் ராணுவத்திற்குத் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்-14 ராமேஸ்வரம் மீனவர்களை பிடித்துச் சென்றது.



இலங்கை கடற்படையின் அட்டூழியத்திற்கு அளவே இல்லாமல் போய் விட்டது. சமீபத்தில்தான் 23 ராமேஸ்வரம் மீனவர்களை கடத்திச் சென்று தமிழகத்தின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து விடுவித்த இலங்கை கடற்படை காடையர்கள், இன்று ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14 மீனவர்களை கடத்திக் கொண்டு போய் விட்டனர்.

இலங்கை கடற்படையினரின் இந்த அட்டகாசத்தால் ராமேஸ்வரம் மீனவர்கள் கடும் கொதிப்படைந்துள்ளனர்.

இன்று காலை தனுஷ்கோடி அருகே நாலாம் திட்டு என்ற இடத்தில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை காடையர்கள், தமிழக மீனவர்களை சுற்றி வளைத்தனர். பின்னர் படகில் இருந்த 14 மீனவர்களையும் அவர்களது படகோடு சேர்த்து கடத்திச் சென்று விட்டனர்.

கடற்படையிடமிருந்து தப்பி வந்த மீனவர்கள் இத்தகவலை சக மீனவர்களிடம் தெரிவித்தனர். மீன்வளத்துறை அதிகாரிகளிடமும் இதுகுறித்து புகார் கொடுக்கப்பட்டது.

இலங்கை கடற்படையினரின் இந்த அடாவடி நடவடிக்கையால் ராமேஸ்வரம் மீனவர்கள் கடும் கொதிப்படைந்துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததால் தெருவிலேயே பிரசவித்த பெண்கள்.

உத்தரபிரதேசம் கன்னௌஜில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக வந்த மம்தா என்னும் பெண்ணை பணம் இல்லாததால் பிரசவம் பார்க்க அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால் அந்தப் பெண் தெருவோரம் பிள்ளையைப் பெற்றெடுத்தார். ஆனாலும் குழந்தை நலமாக உள்ளது.

இது குறித்து மம்தாவின் கணவர் சுஷில் கூறியது,

மருத்துவமனையில் உள்ள செவிலியர்கள் என்னிடம் ரூ. 1500 லஞ்சம் கேட்டனர். ஆனால் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றேன். உடனே அவர்கள் என் மனைவியை கவனிக்காததோடு, என் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

வேறு மருத்துவமனைக்கு செல்வதற்காக, நான் ஒரு காரை வாடகைக்கு எடுத்து வர போயிருந்தேன்.. ஆனால் அதற்குள் தெருவோரமாகவே என் மனைவி குழந்தையைப் பெற்றெடுத்துவி்டடார். உடனே நாங்கள் குழந்தை பிறந்துவிட்டது, இப்பொழுதாவது மருத்துவமனையில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று மருத்துவரிடம் சொல்லச் சென்றோம். ஆனால் அந்த மருத்துவர் 1 மணி நேரமாக வெளியே வரவேயில்லை.

ஆனாலும், எங்களிடம் பணம் ரூ.1,500 கொடுத்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர். நாங்கள் பணம் கட்டும் வரை எனது மனைவிக்கு ஒரு படுக்கை கூட கொடுக்கவில்லை என்றார்.

செவிலியர்களின் அலட்சியத்தால் வாசலிலேயே குழந்தை பெற்ற பெண்.

இதே போன்ற அவலம் கடந்த நவம்பர் 20ந் தேதி தேனி மாவட்டம் ராயப்பன் பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் நடந்துள்ளது. .

ஆனைமலையன் பட்டியை சேர்ந்த தங்கபாண்டி என்பவரது மனைவி ரெங்கம்மாள் ராயப்பன்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக தாயாருடன் வந்தார்.

அப்போது மருத்துவமனையில் டாக்டர் இல்லாததால் அங்கு பணியில் இருந்த நர்ஸ், டாக்டர் வந்தவுடன் மருத்துவமனையில் அனுமதிப்பதாக கூறியுள்ளார்.

டாக்டர் வராததால் நீண்ட நேரமாக வாசலிலேயே காத்திருந்தார் ரெங்கம்மாள். மதியம் 2 மணியாகியும் டாக்டர் வரவில்லை. இந்த நிலையில் ரெங்கம்மாள் இடுப்பு வலியால் துடித்து மருத்துவமனை வாசலிலேயே கதறி அழுதார். தனது மகள் அழுகுரலை கேட்ட தாய் ஓடி வந்தார்.

மகளின் நிலை கண்டு தான் அணிந்து இருந்த சேலையை உருவி மறைத்துவைத்து மகளுக்கு தாயே பிரசவம் பார்த்தார். அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார் ரெங்கம்மாள்.

தகவல் அறிந்து ரெங்கம்மாளின் உறவினர்கள் குவிந்து விட்டனர். டாக்டர் வராதது ஏன்,

ஏன் ரெங்கம்மாளை மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை என்று கூறி போராட்டத்தில் குதித்தனர்.

இதைத் தொடர்ந்து கோம்பை வட்டார மருத்துவ அலுவலர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்தார். இதனை அடுத்து குழந்தை பெற்ற தாய்க்கும் குழந்தைக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த சோக சம்பவம் குறித்து நாகரத்தினம் கூறுகையில், ஒவ்வொரு பெண்ணுக்கும் பிரசவம் என்பது மறுபிறப்பாகும். காலை 8.30 மணிக்கு வந்த எங்களை மருத்துவமனைக்குள் அனுமதிக்காமல் டாக்டர்கள் வரட்டும் என்று காலம் கடத்திவிட்டு எனது மகளுக்கு மருத்துவமனை வாசலில் பெற்ற தாயே பிரசவம் பார்க்கும் நிலை ஏற்பட்டு விட்டது என்று கூறி அழுதார்.

சன்பிக்சர்ஸ் சக்சேனா புழல் மத்திய சிறையில் அடைப்பு.



சேலத்தை சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் டி.எஸ். செல்வராஜ் இவர் கந்தன் பிலிம்ஸ் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.

சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து இவர் புகார் மனு கொடுத்தார்.

அதில், ‘’சினிமா வினியோகஸ்தரான என்னை சன் பிக்சர்ஸ் பட நிறுவனத்தின் தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் சேலம் பகுதி வினியோக உரிமையை வாங்கும்படி சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனா என்னை வற்புறுத்தினார்.

அதன் பேரில் ரூ.1 1/2 கோடி கடன் வாங்கி கொடுத்து அந்த படத்தின் வினியோக உரிமையை வாங்கினேன். ஆனால் அந்த படத்தை சக்சேனாவே சேலம் பகுதியில் வெளியிட்டு விட்டார். நான் கொடுத்த ரூ.1 1/2 கோடி பணத்தையும் திருப்பி தரவில்லை.

அந்த படத்திற்கு வசூலான 83 லட்சத்து 53 ஆயிரத்து 374 ரூபாயை தரும்படி கேட்டேன். ஆனால் சக்சேனா பணத்தை தராமல் இழுத்தடித்தார்.

இதுபற்றி கடந்த ஜனவரி மாதம் கேட்ட போது என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினார். அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து பணத்தை வசூலித்து தரும் படி கேட்டுக் கொள்கிறேன்’’ என்று கூறி இருந்தார்.

இந்த புகார் மீது சென்னை கே.கே.நகர் போலீசார் கடந்த 1-ந்தேதி வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். நேற்றிரவு அவர் ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த போது விமானநிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.

இந்திய சட்டப்பிரிவு 406 (நம்பிக்கை மோசடி), 420 (மோசடி), 385 (ஏமாற்றுதல்), 506 (2) (கொலை மிரட்டல்) ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். நீதிபதி அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து சக்சேனாவை புழல் சிறையில் போலீசார் அடைத்தனர்.