Saturday, July 23, 2011

ஜெயலலிதாவுக்கு திகிலைக் கொடுக்கும் சொத்துக் குவிப்பு வழக்கு.



முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக பெங்​களூ​ருவில் நடக்கும் சொத்துக் குவிப்பு வழக்கு, அவருக்கு ஓரளவு திகிலைக் கொடுக்கும் விதத்தில் மாறத் தொடங்கியுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பை இழுத்துச் செல்வதுதான் அவரது தரப்பு வக்கீல்கள் இதுவரை செய்துவரும் தற்காப்பு நடவடிக்கையாக இருந்து வந்திருக்கின்றது.

தமிழகத்தில் ஆட்சி மாறிவிட்டதால், இந்த வழக்கு தள்ளாடும். அதையடுத்து காலப்போக்கில் ஒன்றுமில்லாமல் போய்விடும் என்றே பலரும் ஊகித்திருந்தனர். ஆனால், நீதிமன்ற நடவடிக்கைகள் அப்படி நடைபெறுவதாகத் தெரியவில்லை.

நீதிமன்றம், வழக்கை வேகப்படுத்த முனைகிறது.

இந்த வழக்குக்கான முக்கிய ஆவணங்கள் மற்றும் தகவல்களை தமிழக அரசுதான் வழங்க வேண்டும். கலைஞர் ஆட்சியில் பல ஆவணங்கள், மற்றும் தகவல்கள் வழங்கப்பட்டு விட்டன. அவற்றில் லேசான சில மாற்றங்களைச் செய்ய முடியுமா என்று பார்க்கிறது தற்போதைய தமிழக அரசு.

இந்த முயற்சியில், தமிழ்நாடு ஊழல் தடுப்பு டி.எஸ்.பி. சம்பந்தம், இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதிக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதை யாரும் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால், முதல்வர் தரப்புக்கு வசதியாக இருந்திருக்கும்.

ஆனால், டி.எஸ்.பி. சம்பந்தத்தின் கடிதம் நீதிமன்றத்தில் புயலைக் கிளப்பிவிட்டது. அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா பொங்கியெழுந்து, நீதிபதியிடம் தனது புகாரைக் கடுமையாகப் பதிவு செய்திருக்கிறார். இது, கடும் சிக்லை ஏற்படுத்தப் போகின்றது என்கின்றன நீதிமன்ற வட்டாரங்கள்.

இதற்கிடையே, மீண்டும் ஒருமுறை இந்த வழக்கின் விசாரணையை முதலில் இருந்து தொடங்க, முதல்வர் தரப்பிலிருந்து மனு செய்யப்பட்டது. அதற்கும் அரசு வக்கீல் ஆச்சார்யா, எதிர்ப்புத் தெரிவித்தார். நீதிபதி, கேசவ நாராயண், ஆச்சார்யாவின் பக்கமாகவே நின்று கொண்டார். முதல்வர் தரப்பின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இது முதல்வர் தரப்புக்கு உகப்பான விஷயமல்ல.

இதற்கிடையே, அரசு வக்கீல் ஆச்சார்யா, மற்றொரு விஷயத்தில் விடாப்பிடியாக நிற்கிறார்.

அது என்னவென்றால், குற்றம் சாட்டப்பட்ட அனைவருமே தவறாமல் பெங்களூரு கோர்ட்டுக்கு நேரில் வரவேண்டும். இதற்கான கோர்ட் உத்தரவை நீதிபதி பிறப்பிக்க வேண்டும். கோர்ட்டின் சாதாரண விசாரணை நடைமுறைகள் (கூண்டிலேற்றி விசாரிப்பது) இந்த வழக்கிலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதிலேயே ஆச்சார்யா, விடாப்பிடியாக நிற்கிறார்!

நீதிபதி, இந்த விஷயத்திலும் அரசு வக்கீல் ஆச்சார்யாக்கு சாதகமான முறையில் முடிவெடுத்தால்-

தமிழகத்திலிருந்து நால்வர், பெங்களூரு கோர்ட்வரை செல்லவேண்டியிருக்கும். அவர்கள், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி!

சேலம் சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனை செயல்படுமா...?



நேற்று, சேலத்தில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனையில் ஆய்வு நடத்திய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய், மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் சென்றார்கள்.

தி.மு.க ஆட்சிக்காலத்தில், 145 கோடி ரூபாய் செலவில், மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனைக்கு பக்கத்தில் கட்டப்பட்டுள்ள சேலம் சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனை கட்டப்பட்டது.

கட்டிட வேலைகள் முழுவதும் செய்து முடிக்கப்பட்ட நிலையில், மருத்துவ கருவிகள், ஸ்கேன், எக்ஸ்ரே, இரத்த பரிசோதனை, மற்றும் பல்வேறு வகையான ஆய்வக உபகரணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கொண்டுவரப்படுகிறது.

தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் பணியாளர்கள் இல்லமால் இருக்கும் சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனையில், எலும்பு முறிவு சிகிச்சை பகுதி மட்டும் செயல்பட்டு வந்த நிலையில், கடந்த இருபது நாட்களுக்கு முன்னர் ஒருநாள் இரவு சத்தமில்லாமல் மருத்துவமனையை அதிகாரிகள் இழுத்து மூடினார்கள்.

இது பற்றி பத்திரிக்கைகளில் பரபரப்பாக செய்திகள் வந்ததை தொடர்ந்து உடனடியாக மருத்துவமனை மறுபடியும் திறக்க்கப்பட்டது.

தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட இந்த மருத்துவ மனையை செயல்படுத்த ஜெயலலிதா விரும்பவில்லை என்று பரவலாக பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று மதியம் 12, மணிக்கு மருத்துவ மனையை பார்வையிட தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பழனிசாமி இருவரும் கட்சிக்காரர்கள் புடைசூழ மருத்துவமனைக்கு வந்தார்கள்.

மதியம் 1.30 மணிவரை மருத்துவமனையை சுற்றி பார்த்துவிட்டு வந்த அமைச்சர்களுடன், எம்.பி. செம்மலை, மாவட்ட ஆட்சியர் மகரபூசனம், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் வசுந்தரா, சுகாதாரத்துறை இயக்குனர் கிரிஜாவைத்தியநாதன், சேலம் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மோகன் உட்பட்ட பல உயர் அதிகாரிகள் உடனிருந்தார்கள்.

சேலம் சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனை கட்டிடமானது முற்றிலும் ஏ.சி.வசதி அமைப்புடன் கட்டப்பட்டுள்ளது. ஏ.சி. வசதி முற்றிலும் அமைக்கப்பட்டுவிட்டாலும் அது இன்னும் முழுமையாக இயங்கவில்லை. நேற்று மருத்துவமனையை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜய் பார்வையிட்டபோது, மருத்துவ மனையின் பராமரிப்பு செலவு குறித்தும், ஏ.சி. இயங்குவதால் ஆகும் செலவு குறித்தும் கேட்டறிந்தார்.

அப்போது உடன் வந்த மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனையின் பராமரிப்பு செலவு மட்டுமே ஆண்டுக்கு ரூ.1 கோடியே 60 லட்சம் ஆகும், என்றார். உடனே அமைச்சர் விஜய், அவ்வளவு பணம் பராமரிப்பு செலவுக்கு ஒதுக்குவது கடினம். எனவே, ஏ.சி.க்கு பதிலாக மின் விசிறி அமைத்தால் என்ன? எலக்ட்ரிக் வேலை செய்தவர்கள் அதை மாற்றியமைக்க முடியுமா? என்று கேட்டார்.

அதற்கு அவர்கள் ஏற்கனவே கட்டிடம் முழுமையும் ஏ.சி. வசதி அமைப்பில்தான் கட்டப்பட்டுள்ளது. மாற்றுவது சிரமம், மாற்ற நினைத்தால் அனைத்து மின் அமைப்புகளையும் மாற்றவேண்டியதிருக்கும். இதற்கு நிறைய செலவும், நேரமும் ஆகும் என்று தெரிவித்தனர்.

பின்பு வெளியே வந்த அமைச்சர்களிடம், மருத்துவமனை தொடர்ந்து செயல்படுமா...? தேவையான உபகரணங்கள் வாங்கப்படுமா...? இப்போது இங்கு பார்வையிட வந்ததின் நோக்கம் என்ன...? என்று பத்திரிக்கையாளர்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதிலாக அதிகாரிகளிடம் கலந்து பேசிய பின்னர் முடிவெடுக்கப்படும் என்றார்.

கட்சிகாரர்கள் மற்றும் அதிகாரிகளுடன், கண்காணிப்பாளர் அறையில் ஒருமணி நேரம் கலந்து பேசிவிட்டு வெளியே வந்த அமைச்சரிடம் என்ன முடிவு செய்யப்பட்டது என்று கேட்டதற்கு இன்னும் நிறைய வேலைகள் முடிக்கப்படாமல் உள்ளது, பத்து நாளில் அந்த வேலைகளை முடிக்கச்சொல்லியுள்ளோம் என்று ஒரே வரியில் பதில் சொலிவிட்டு பறந்துவிட்டார்.

திமுக போட்டால் வரி... ஜெயலலிதா போட்டால் நிதியா? - கருணாநிதி கேள்வி.



திமுக அரசு விதித்தால் வரி, அதையே ஜெயலலிதா அறிவித்தால் நிதி என்று கூறுவதா என்று அதிமுகவின் தோழமை கட்சிகளுக்கு திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:

கேள்வி: உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான ஒதுக்கீட்டை 33 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் பெற்றிருக்கிறார்களே?

பதில்: இது அனைவராலும் வரவேற்கப்பட வேண்டிய ஒரு முடிவாகும். 1996-ம் ஆண்டு தி.மு.க. 4-வது முறையாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோதே, உடனடியாக உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலை அறிவித்து நடத்தியபோது, அனைத்துப் பொறுப்புகளிலும் மகளிருக்கு 33 சதவீத ஒதுக்கீடு செய்து பெரும் சாதனைபுரிந்ததின் காரணமாக அப்போது தமிழகத்தில் 44,143 மகளிர் உள்ளாட்சி அமைப்புகளில் பதவியேற்கும் நிலையை தி.மு.க. அரசு செய்து காட்டியது.

உள்ளாட்சிகளுக்கு தற்போது செய்யப்பட்டுள்ள இந்த அறிவிப்பைப்போல, பாராளுமன்ற, சட்டமன்றங்களுக்கும் மகளிருக்கான இடஒதுக்கீடு விரைவிலே நடைமுறைக்கு வரவேண்டும் என்பதுதான் தி.மு.க.வின் விருப்பமும், வேண்டுகோளுமாகும்.

கேள்வி: துணி மற்றும் துணிப்பொருட்கள் மீதான 5 சதவீத வரி உயர்வினை ஜெயலலிதா ரத்து செய்து அறிவிப்பதாக செய்தி வந்துள்ளதே?

பதில்: சட்டப்பேரவை கூடுகின்ற நாள் அறிவிக்கப்பட்ட பிறகு, 4,200 கோடி ரூபாய்க்கு வரி விதிப்பு என்பது பேரவை மரபுகளுக்கு மாறானது என்று நான் ஏற்கனவே தெரிவித்திருந்தேன். ஆனால் அரசு வரி விதிப்பு செய்தபிறகு, ஜவுளி உற்பத்தியாளர்கள் அரசினரைப் பார்த்து கோரிக்கை வைத்ததாக செய்தி வந்தது.

அவர்கள் வைத்த கோரிக்கையை அமைச்சரவை பரிசீலித்து (?) உடனடியாக ஏற்றுக் கொண்டிருக்கின்றது. அரசு அறிவிப்பில் ஜவுளித்தொழில் சந்தித்து வரும் பிரச்சினைகளை கருத்திலே கொண்டு இந்த முடிவினை எடுத்ததாகச் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் வரி விதிப்புக்கு முன்பு அரசு அதிகாரிகள் இந்த வரி உயர்வினை செய்தால் ஜவுளித்தொழில் பாதிக்கும் என்று இந்த அரசினருக்குத் தெரியவில்லையா? அல்லது அந்தத் துறையின் அதிகாரிகள்தான் எடுத்துக்கூறவில்லையா?

கேள்வி: சமச்சீர் கல்வி பாடங்கள் இணைய தளத்திலிருந்து திடீர் நீக்கம் செய்யப்பட்டதாகவும், பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் செய்தி வந்திருக்கிறதே?

பதில்: உச்சநீதிமன்ற உத்தரவிற்கு மாறாக இத்தகைய நடவடிக்கையை அரசு எடுத்துள்ளதை 26-ந் தேதி இந்த வழக்கு உச்சநீதிமன்றத்திலே வரும்போது எடுத்துரைக்கக்கூடும்.

கேள்வி: தமிழக அரசின் சார்பில் பெண்களுக்கு இலவச கிரைண்டர் வழங்கும் திட்டத்தை நிறைவேற்ற தேவையான கிரைண்டர்களை தமிழக அரசு, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்போவதாகக் கூறி தமிழகத்திலே உள்ள கிரைண்டர் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் செய்திருக்கிறார்களே?

பதில்: அரசு என்ன முடிவெடுத்திருக்கிறது என்பது இதுவரை திட்டவட்டமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், சீனா நாட்டு கிரைண்டர் உற்பத்தியாளர்கள், தமிழக அரசினரிடம் நேரடியாகப் பேசி என்னென்ன நிபந்தனைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி கொடுத்துள்ளார்கள் என்பதை அறிந்து, தமிழ்நாட்டு கிரைண்டர் உற்பத்தியாளர்களும் அந்த நிபந்தனைகளை நிறைவேற்ற முன்வரலாமே?

தி.மு.க. ஆட்சியில்தான் இதுபோன்ற திட்டங்களை நிறைவேற்ற சட்டமன்றத்திலே உள்ள எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளையெல்லாம் குழுவிலே நியமித்து, அவர்கள் முன்னிலையில் முடிவெடுக்கப்பட்டது. தற்போதுதான் அப்படியெல்லாம் இல்லையே?

கேள்வி: சமச்சீர் கல்வி பற்றிய வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக வாதாடிய வழக்கறிஞர் சமச்சீர் கல்வி பாடத்திட்டம் அவசர கதியில் தயாரிக்கப்பட்டது என்று சொல்லியிருக்கிறாரே?

பதில்: அதற்கு எதிராக வாதாடிய வழக்கறிஞர்கள் நான்காண்டுகளாக கல்வித்துறை நிபுணர்கள் தனித்தனியே ஆய்வு செய்து சமச்சீர் பாடத்திட்டத்தை தயாரித்திருப்பதாகவும், அதில் குறைகள் எதுவுமில்லை என்றும் விளக்கியிருக்கிறார்கள்.

கேள்வி: ஜெயலலிதா ரூ.66 கோடிக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் ஆடிட்டர் பாலாஜியை மறு விசாரணைக்கு அனுமதிக்கக்கோரும் சசிகலாவின் மேல்முறையீட்டு மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்திருக்கிறதே?

பதில்: ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் 14 ஆண்டு காலமாக நடைபெற்று வருகிறது. சாட்சிகள் விசாரணை எல்லாம் முறைப்படி முடிக்கப்பட்டு, குற்றஞ்சாட்டப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த நேரத்தில் ஆடிட்டர் பாலாஜியை மறு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டுமென்று சசிகலாவின் வழக்கறிஞர் சிறப்பு நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்து, சிறப்பு நீதிமன்ற நீதிபதி அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்து ஏற்கனவே தள்ளுபடி செய்துவிட்டார். ஆனாலும் வழக்கை மேலும் இழுத்தடிக்க கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதிலேதான் கர்நாடக மாநில உயர்நீதிமன்ற நீதிபதி கேசவ நாராயண், சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்திருக்கிறார்கள்.

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வாதாட சிறப்பு வழக்கறிஞராக பி.வி.ஆச்சார்யா நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் ஆடிட்டர் பாலாஜியை மறு விசாரணைக்கு அனுமதி கோரும் மேல்முறையீட்டு மனு விசாரணையில் தமிழக அரசு சார்பில் வாதிட வழக்கறிஞர் நானையாவை நியமித்ததை நீதிமன்றம் ஆட்சேபித்ததோடு, ஆச்சார்யாவின் கவனத்துக்குக் கொண்டு செல்லாமல் இந்த வழக்கை நடத்துவதை ஏற்கமுடியாது என்றும், அது நீதியை மூழ்கடிக்கும் முயற்சி என்றும், ஜெயலலிதா தரப்பினருக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்து, தனி நீதிமன்றத்தின் விசாரணை தொடர்ந்து நடைபெறலாம் என்று உத்தரவிட்டுள்ளார்.

கேள்வி: சமச்சீர் கல்வி முறையில் அ.தி.மு.க. அரசின் செயல்பாடுகளை வரவேற்று உங்களைக் குறை கூறிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர், தமிழக அரசிடம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யக்கூடாது என்று கேட்டுக்கொண்ட பிறகும், அ.தி.மு.க. அரசு மேல்முறையீடு செய்ததைப்பற்றி உங்கள் கருத்து?

பதில்: இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாத்திரமல்ல, தமிழ்நாட்டிலே உள்ள எதிர்க்கட்சிகளும், அ.தி.மு.க.வின் தோழமைக் கட்சிகள் அனைத்தும் வைத்த வேண்டுகோளை அ.தி.மு.க. அரசு ஏற்காமல்தான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

அதை தா.பாண்டியன் இன்றில்லாவிட்டாலும், வெகுவிரைவில் உணருவார். இந்தப் பிரச்சினையைப் போலத்தான் ஜெயலலிதா அரசு புதிதாக ரூ.4,200 கோடி வரி விதித்தது பற்றி நான் விடுத்த அறிக்கைக்கும் பதில் கூறியிருந்தார்.

ஆனால் அவருடைய கட்சியைச் சேர்ந்த எட்டயபுரம் நகரச்செயலாளரும், தூத்துக்குடி மாவட்டக்குழு உறுப்பினருமான குமரன் என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அ.தி.மு.க. அரசின் வரி விதிப்புக்கு வக்காலத்து வாங்குவது எந்த வகையில் நியாயம் என்றும், காங்கிரஸ் கூட்டினால் வரி, ஜெயலலிதா கூட்டினால் மட்டும் அதற்குப் பெயர் நிதியா என்று பாண்டியனுக்குக் கண்டனமே தெரிவித்திருக்கிறார்.

சர்க்கரை நோய் போக்கும் சிறுகுறிஞ்சான்.



சிறு குறிஞ்சான் மூலிகை சர்க்கரை வியாதிக்கு மிகச்சிறந்த மருந்து. இது வேலிகளில் கொடியாக படரும். கசப்புச் சுவை உடையது. இலை சிறிதாகவும், முனை கூர்மையாகவும் மிளகாயிலை போன்று காணப்படும். மலையைச் சார்ந்த காடுகளில் இது அதிகம் வளர்கிறது. இத்தகைய தாவரங்களுக்கு சர்க்கரை கொல்லிகள் என்று தமிழில் சொல் வழக்கு உண்டு. முழுத்தாவரமும் மருத்துவகுணம் கொண்டது. இலைகள், விதைகள், வேர் மருத்துவ குணம் கொண்டவை.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:

ஜிம்னீமாவில் சபோனின் மற்றும் பாலிபெப்டைடுகள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. இலைகளில் ஜிம்னீமிக் அமிலம் மற்றும் குர்மாரின் காணப்படுகின்றன. இவை மட்டுமின்றி ஜிம்னமைன் என்னும் அல்கலாய்டும் காணப்படுகிறது.

சர்க்கரைக் கொல்லி

சமீப காலமாக இந்தியா மற்றும் ஜப்பானில் ஜிம்னீமா தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் விளைவாக நீரிழிவு நோயினை இயற்கையாக கட்டுப்படுத்த ஜிம்னிமா இலைகள் பெரிதும் பயனுள்ளவை என்பது கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவ ஆய்வுகளில் நீரிழிவு நோயினால் அவதிப்படுபவர்களுக்கு குறைவான இன்சுலின் தேவைப்படுவது தெரியவந்துள்ளது. இலைகள் நாக்கின் இனிப்பு சுவைமொட்டுக்களை தற்காலிகமாக செயல் இழக்கச் செய்து அதற்கான ஆர்வத்தினைத் தடுத்து செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இலைகள் மிக முக்கிய மருத்துவ பயன் கொண்டவை. நீரிழிவு நோயினை தடுக்க முக்கிய மருந்தாக இந்தியாவில் நெடுங்காலமாக பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள ஜிம்னீமிக் அமிலம் சர்க்கரைக்கான ஆசையினை கட்டுப்படுத்துகிறது. நாவிலுள்ள உணர்ச்சி மொட்டுக்களை தற்காலிகமாக செயல் இழக்கச் செய்கிறது. மேலும் கணயத்தில் உள்ள செல்களை புத்துயிர்க்கச் செய்து இன்சுலின் சுரப்பினை மேம்படுத்துகிறது. எடை குறைக்க உதவுகிறது.

விதைகள் வாந்தியினைத் தூண்டக் கூடியது. சளியினை போக்க வல்லது. வேர்ப்பகுதி இருமலுக்கு சிறந்த மருந்து. வயிற்று வலியினை போக்கி வலுவினைத் தருகிறது. குளுமைப் படுத்தும் செயல் கொண்டது. சிறுநீர் போக்கினை தூண்ட வல்லது. மாதவிடாயினை தடுக்கக்கூடியது. வயிற்று வலியினை போக்க உதவுகிறது.

சிறுகுறிஞ்சான் இலையை நிழலில் காயவைத்து இடித்து தூள் செய்து சலித்து வைத்துக்கொண்டு சர்க்கரை வியாதி உள்ளவர்கள் நெய்யில் குழைத்து சாப்பிட்டால் சிறுநீரில் சர்க்கரையின் அளவு குறைந்து நாளைடைவில் நோய் முற்றிலும் குணமடைந்து விடும்.

விஷக்கடி போக்கும்

வண்டு, பூரான், செய்யான் செவ்வட்டை முதலியவற்றின் விஷங்கள் உடலில் தங்கினால் அதன் மூலம் பலவித வியாதிகள் வரும். இதற்கு சிறுகுறிஞ்சான் இலையில் மிளகு 5 வைத்து அரைத்து சுண்டக்காய் பிரமாணம் இருவேளை சாப்பிட்டால் அனைத்து விஷ ரோகமும் போய்விடும். ஆனால் விடாமல் ஒரு மண்டலம் சாப்பிட வேண்டும். கடுகு, புளி சேர்க்காமல் பத்தியம் இருக்க வேண்டும். உடல்மேல் வரும் தடிப்பு, பத்து, படை, இவைகளுக்கு இதன் இலையை அரைத்து பூசி வர அவை மறைந்துவிடும். ரத்தத்தை சுத்தம் செய்து உடலை வனப்பாக வைக்கும். (Gymnema)

நீரிழிவு உள்ளவர்கள் சக்கரைகொல்லி எனப்படும் சிறுகுறிஞ்சா இலையை உண்பதாலும் நிவாரணம் பெறலாம். இது இன்சுலின் என்னும் ஓமோன் சுரக்கப்படுவதைத் தூண்டி இரத்தத்தில் குளுக்கோசின் அளவு அதிகரிப்பதைக் கட்டுபடுத்த உதவுகிறது. சிறுகுறிஞ்சா 2,3 இலையைக் காலையில் பச்சையாகச் சப்பிச் சாப்பிடலாம். கறியாக அல்லது வறை செய்தும் உண்ணலாம்.

ஊட்டியில் பயிற்சி ரத்து : இலங்கை ராணுவம் கொழும்புவுக்கு புறப்பட்டது.



தமிழ் உணர்வாளர்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து ஊட்டியிலுள்ள வெலிங்டன் ராணுவப் பயிற்சிக் கழகத்தில் 25 இலங்கை ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சி ரத்து செய்யப்பட்டது. அவர்கள் கொழும்புவுக்கு புறப்பட்டனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியிலுள்ள வெலிங்டன் ராணுவப் பயிற்சிக் கழகத்தில் இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த 25 பேருக்கு இந்திய ராணுவ அதிகாரிகள் பயிற்சி அளிக்கப்போவதாக செய்திகள் வந்தன. இதற்கு தமிழகத்தி்ல உள்ள பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தின.

இந்நிலையில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு குன்னூரில் பயிற்சி தொடங்கியது. இலங்கையில் நடந்த இறுதி கட்டப்போரில் லட்சக் கணக்கான தமிழர்களை கொன்று குவித்த அந்நாட்டு ராணுவத்தினருக்கு இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் பயிற்சி அளிப்பதா என்று சீமானின் நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போர்க்கொடி தூக்கின.

இதையடுத்து குன்னூரில் நடந்த பயிற்சி திடீர் என்று ரத்து செய்யப்பட்டு இலங்கை ராணுவ வீரர்கள் கொழும்புவுக்கு புறப்பட்டனர்.

உட்கட்டாசனம், பத்ம உஜ்ஜயி, பத்ராசனம்.

உட்கட்டாசனம்.
உட்கட்டாசனம்

செய்முறை:

படத்தில் காட்டியபடி நாற்காலியில் உட்காருவது போல் கைகளை முன்பே நீட்டி பத்து விநாடிகள் நில்லுங்கள். பின் நிமிர்ந்து நின்று மூச்சினை நன்கு இழுத்து விடுங்கள். மீண்டும் செய்யுங்கள். மூன்று முதல் ஐந்துமுறைகள் செய்ய வேண்டும். தனியாக நிற்க இயலாத வயதானவர்கள் சுவற்றில் படத்தின்படி நின்று நன்கு பழகிய பின்னர் தனியாக நிற்கலாம்.

பலன்கள்:

இதயம், தொடைகள், இடுப்பு, முழங்கால்கள், கெண்டைக்கால்கள் முதலியவை வலுப்பெறும். இதனை ஐந்து முறைகள் செய்தால் மூன்று கிலோ மீட்டர் தூரம் நடைப்பயிற்சி பலன் பெறுவீர்கள். புத்துணர்ச்சி ஏற்பட்டு வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள். பேரழகு உண்டாகும்.


பத்ம உஜ்ஜயி.
பத்ம உஜ்ஜயி

செய்முறை:

பத்மாசனத்தில் இருந்தபடியே கைகளை மேலே தூக்கி கைவிரல்களை கோர்த்துக் கொள்ளவும். அப்படியே புரட்டி உள்ளங்கைகள் மேலே பார்க்குமாறு வைத்து வாயை மூடி மூச்சை ஒரே சத்தமாக வெளியே தள்ளவும். 10 அல்லது 15 முறை செய்யவும்.

பத்ம உஜ்ஜயியில் மூச்சை தள்ளும்போது நுரையீரலுக்கு அதிக காற்று உட்செல்கிறது. இதன் மூலம் உடல் புத்துணர்ச்சி பெறுகின்றது. பந்து அடிவயிற்றிலிருந்தது கிளம்பி மூக்கு வழியாக வருவதுபோல் நினைத்து காற்றை வெளியே வேகமாகத் தள்ளவும்.

பலன்கள்:

ஆஸ்துமா, சைனஸ் தொல்லைகள், ஒருபக்க தலைவலி, கண்பார்வை கோளாறுகள், காதுநோய் முதலியவை அகலும். உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகி, சுறுசுறுப்பும், மகிழ்ச்சியும் உண்டாகும். எந்த நேரமும் இன்பமான மனஉறுதி உண்டாகும். இதய பலவீனம் அகன்று பலமாகும். பெண்களுக்கு முடி கொட்டுவது நிற்கும். முடி வளரும்.


பத்ராசனம்.
பத்ராசனம்

செய்முறை:

பத்மாசனமிட்டு கைகளை மேலே தூக்கவும். உள்ளங்கைகளை புரட்டி மேலே பார்க்குமாறு அமைத்து மூச்சை வெளியே விட்டு முடிந்தவரை குனியும்போது விரித்த கைகளை கும்பிட்டபடியே தரையில் வைக்கவும். 20 எண்ணும் வரை இருந்து, நிமிரும்போது மூச்சை இழுத்துக் கொண்டு நிமிரவும். இதனை நன்றாக 20 தினங்கள், பழகிய பின்னர் இரண்டாவது நிலையினைச் செய்யவும்.

குறிப்பு:

3 முதல் 5 தடவைகள் செய்யலாம். வயிறு, இதய ஆபரேஷன் செய்தவர்கள் செய்யக்கூடாது.

பலன்கள்:

முதுகெலும்பு நரம்புகள், தொடை நரம்புகள் பலமாகும். முதுகெலும்பு பிடிப்பு நேராகும். மலச்சிக்கல், இருதயப்பலவீனம் நீங்கும். வயிற்றினுள் உள்ள உள்ளுறுப்புகள் நன்கு வேலை செய்யும். நீரிழிவு நோய் அகலும். இளமையுண்டாகும். நல்ல ஞாபகசக்தி உண்டாகும். சுறுசுறுப்பு ஆரோக்கியம் நிலைத்து நிற்கும்.