Saturday, July 23, 2011

ஜெயலலிதாவுக்கு திகிலைக் கொடுக்கும் சொத்துக் குவிப்பு வழக்கு.



முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக பெங்​களூ​ருவில் நடக்கும் சொத்துக் குவிப்பு வழக்கு, அவருக்கு ஓரளவு திகிலைக் கொடுக்கும் விதத்தில் மாறத் தொடங்கியுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பை இழுத்துச் செல்வதுதான் அவரது தரப்பு வக்கீல்கள் இதுவரை செய்துவரும் தற்காப்பு நடவடிக்கையாக இருந்து வந்திருக்கின்றது.

தமிழகத்தில் ஆட்சி மாறிவிட்டதால், இந்த வழக்கு தள்ளாடும். அதையடுத்து காலப்போக்கில் ஒன்றுமில்லாமல் போய்விடும் என்றே பலரும் ஊகித்திருந்தனர். ஆனால், நீதிமன்ற நடவடிக்கைகள் அப்படி நடைபெறுவதாகத் தெரியவில்லை.

நீதிமன்றம், வழக்கை வேகப்படுத்த முனைகிறது.

இந்த வழக்குக்கான முக்கிய ஆவணங்கள் மற்றும் தகவல்களை தமிழக அரசுதான் வழங்க வேண்டும். கலைஞர் ஆட்சியில் பல ஆவணங்கள், மற்றும் தகவல்கள் வழங்கப்பட்டு விட்டன. அவற்றில் லேசான சில மாற்றங்களைச் செய்ய முடியுமா என்று பார்க்கிறது தற்போதைய தமிழக அரசு.

இந்த முயற்சியில், தமிழ்நாடு ஊழல் தடுப்பு டி.எஸ்.பி. சம்பந்தம், இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதிக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதை யாரும் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால், முதல்வர் தரப்புக்கு வசதியாக இருந்திருக்கும்.

ஆனால், டி.எஸ்.பி. சம்பந்தத்தின் கடிதம் நீதிமன்றத்தில் புயலைக் கிளப்பிவிட்டது. அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா பொங்கியெழுந்து, நீதிபதியிடம் தனது புகாரைக் கடுமையாகப் பதிவு செய்திருக்கிறார். இது, கடும் சிக்லை ஏற்படுத்தப் போகின்றது என்கின்றன நீதிமன்ற வட்டாரங்கள்.

இதற்கிடையே, மீண்டும் ஒருமுறை இந்த வழக்கின் விசாரணையை முதலில் இருந்து தொடங்க, முதல்வர் தரப்பிலிருந்து மனு செய்யப்பட்டது. அதற்கும் அரசு வக்கீல் ஆச்சார்யா, எதிர்ப்புத் தெரிவித்தார். நீதிபதி, கேசவ நாராயண், ஆச்சார்யாவின் பக்கமாகவே நின்று கொண்டார். முதல்வர் தரப்பின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இது முதல்வர் தரப்புக்கு உகப்பான விஷயமல்ல.

இதற்கிடையே, அரசு வக்கீல் ஆச்சார்யா, மற்றொரு விஷயத்தில் விடாப்பிடியாக நிற்கிறார்.

அது என்னவென்றால், குற்றம் சாட்டப்பட்ட அனைவருமே தவறாமல் பெங்களூரு கோர்ட்டுக்கு நேரில் வரவேண்டும். இதற்கான கோர்ட் உத்தரவை நீதிபதி பிறப்பிக்க வேண்டும். கோர்ட்டின் சாதாரண விசாரணை நடைமுறைகள் (கூண்டிலேற்றி விசாரிப்பது) இந்த வழக்கிலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதிலேயே ஆச்சார்யா, விடாப்பிடியாக நிற்கிறார்!

நீதிபதி, இந்த விஷயத்திலும் அரசு வக்கீல் ஆச்சார்யாக்கு சாதகமான முறையில் முடிவெடுத்தால்-

தமிழகத்திலிருந்து நால்வர், பெங்களூரு கோர்ட்வரை செல்லவேண்டியிருக்கும். அவர்கள், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி!

No comments: