Monday, March 28, 2011

அழகிரி குற்றச் சாட்டு - மதுரை கலெக்டர் சகாயம் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார்

மதுரை கலெக்டராக தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள சகாயம், ஆட்சி மாற்றம் தேவை என்று பேசி வருகிறார். அவர் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று மத்திய ரசாயணத்துறை அமைச்சர் மு.க.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி மீனாட்சிபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள திமுக கூட்டணி தலைமை தேர்தல் அலுவலகத்தில் கூட்டணியினருடன் நேற்று அழகிரி ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அதிமுகவுக்கு ஆதரவாகவே இருக்கிறது. தேர்தல் ஆணையத்தால் மதுரை கலெக்டராக சகாயம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆட்சி மாற்றம் தேவை என்று பேசி வருகிறார். அதிமுகவுக்கு ஆதரவாக இவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு வெற்றி பிரகாசமாக உள்ளது. 234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். 2006 ம் ஆண்டு வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதே போல் இந்த முறையும் தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையை நிறைவேற்றுவார்கள் என்று மக்கள் நம்புகிறார்கள்.

தென்மாவட்டத்தில் 52 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் பெ.கீதாஜீவன் 30 முதல் 35 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றார் அழகிரி.

சினேகாவை கண்கலங்க வைத்த கல்லூரி மாணவர்கள்!

சென்னை பூந்தமல்லி அருகே உள்ளது பனிமலர் பொறியியல் கல்லூரி. இந்தக் கல்லூரியின் கலை விழாவுக்கு சிறப்பு விருந்தினராக சினேகா பங்கேற்றார். அவரைக் கண்டதும் மாணவர்கள் உற்சாகமடைந்தனர். புன்னகை இளவரசி சினேகா என உற்சாகக் குரல் எழுப்பினர்.

அக்கல்லூரி மாணவர்கள் சிலர் சினேகாவுக்காக ஒரு சிறப்பு ட்ரைலர் ஒன்றைத் தயார் செய்திருந்தனர். சினேகாவுக்கு இன்ப அதிர்ச்சி தரும் விதத்தில் இந்த ட்ரைலரை விழாவின் போது திரையிட்டுக் காட்டினர் மாணவர்கள். இதைக் கண்டு மிகவும் பரவசமடைந்தார் சினேகா.

எனக்காகவா இதை உருவாக்கினீர்கள் எனக் கேட்டு, மேடையிலேயே கண்கலங்கினார் சினேகா.

"நான் எத்தனையோ கல்லூரிக்குச் சென்றிருக்கிறேன். ஆனால் இங்கு இந்த மாணவர்கள் என்மேல் வைத்திருக்கும் உயர்வான அன்பு என்னை நெகிழ வைத்துவிட்டது. ஒரு நடிகையாக யாருக்கும் கிடைக்காத பெருமையை எனக்குத் தந்த இந்த மாணவர்களை ஒருபோதும் மறக்கமாட்டேன். வாழ்க்கையில் இவர்கள் அனைவரும் உன்னதமான இடத்துக்கு வரவேண்டும். அதுதான் என் பிரார்த்தனை", என்று கூறினார்.

தங்கபாலுவின் அதிரடி - வாயடைத்து நிற்கும் காங்கிரஸ்.

காங்கிரஸாருக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அரசியல் கட்சியினருக்கும் பெரும் வியப்பூட்டும் வகையில் மயிலாப்பூர் தொகுதியில் ஒரு அரசியல் நாடகம் இன்று அரங்கேறியது. அங்கு காங்கிரஸ் வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்த ஜெயந்தி தங்கபாலுவின் மனுவை அதிகாரிகள் நிராகரித்து விட்டனர். அதேசமயம், அவரது டம்மி வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்த தங்கபாலுவின் மனு ஏற்கப்பட்டு விட்டது. இதனால் அவர் வேட்பாளராகியுள்ளார்.

வரலாறு காணாத குழப்பத்தில் உள்ளது காங்கிரஸ். வேட்பாளர் தேர்வு தொடர்பாக பல தொகுதிகளிலும் போர் வெடித்துள்ளது. இதை அடக்க முடியாமல் ஸ்தம்பித்துப் போய் வாயடைத்து நிற்கிறது காங்கிரஸ் மேலிடம்.

தங்கபாலு செய்த பெரும் குழப்பத்தால் பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை பெரும் கேள்விக்குறியாக்கி விட்டது காங்கிரஸ். இதனால் இத்தனை தொகுதிகளை காங்கிரஸுக்கு தேவையில்லாமல் அளித்துள்ள திமுக பெரும் கவலையிலும், கடுப்பிலும் உள்ளது.

இந்த நிலையில் தங்கபாலு அட்டகாசமான ஒரு ஸ்டண்ட்டை அடித்து அனைவரையும் மூக்கில் விரல் வைக்கச் செய்துள்ளார்.

இவரது மனைவி ஜெயந்திக்கு மயிலாப்பூரில் சீட் வாங்கிக் கொடுத்திருந்தார் தங்கபாலு. ஆனால் இதற்கு மிகக் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஜெயந்தி தோற்பது நிச்சயம் என்ற நிலை காணப்படுகிறது. மயிலை சிவகாமி என்பவர் போட்டி வேட்பாளராக களம் குதித்துள்ளார். இவருக்கு ஆதரவாக இளைஞர் காங்கிரஸார் உள்பட ஒட்டுமொத்த நிர்வாகிகளும் களம் இறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் அதிரடியாக சில வேலைகளை செய்தார் தங்கபாலு. ஒவ்வொரு அரசியல் கட்சி வேட்பாளருடனும் ஒரு டம்மி வேட்பாளர் அதாவது மாற்று வேட்பாளர் மனு தாக்கல் செய்வது வழக்கம்.

ஜெயந்தி தங்கபாலுவுக்கு மாற்று வேட்பாளராக, அதாவது டம்மியாக தங்கபாலுவே மனு தாக்கல் செய்தார். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. இது காங்கிரஸாரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. தங்கபாலு ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் இவ்வாறு செய்திருப்பதாக அனைவரும் கூறினர்.

2 ஆவணங்களை இணைக்கவில்லை

தற்போது தங்கபாலுவின் திட்டம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இன்று நடந்த வேட்பு மனு பரிசீலனையின்போது ஜெயந்தியின் வேட்பு மனுவை அதிகாரிகள் நிராகரித்து விட்டனர்.

வேட்பு மனுவுடன் முக்கியமான 2 ஆவணங்களை ஜெயந்தி தங்கபாலு தனது வேட்பு மனுவுடன் இணைக்கவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதன் காரணமாகவே அவரது மனு நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அந்த இரண்டு ஆவணங்களும் வேட்பு மனுவுடன்தான் இணைக்கப்பட்டிருந்தது. ஆனால் அது மாயமாகி விட்டது என்று தங்கபாலு புகார் கூறியுள்ளார். ஆனால் வேட்பு மனுவுடன் இணைத்துள்ள எதுவும் காணாமல் போக வாய்ப்பில்லை. ஜெயந்தி இணைக்கவில்லை, எனவேதான் நிராகரிக்கப்பட்டது என்று அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் தங்கபாலு கூறுவது பொய்யாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

நான்தான் வேட்பாளர்-தங்கபாலு அதிரடி

ஜெயந்தியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட போதிலும், தங்கபாலுவின் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மயிலாப்பூர் வேட்பாளர் நான்தான் என்று தங்கபாலுவே அறிவித்துள்ளார்.

தங்கபாலுவின் இந்த அதிரடி செயலால் காங்கிரஸார் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மிகப் பெரிய டிராமாவை படு கேஷுவலாக தங்கபாலு அரங்கேற்றியுள்ளார் என்று அவரது அதிருப்தியாளர்கள் கூறுகின்றனர்.

உண்மையில் தங்கபாலுதான் இந்தத் தேர்தலில் போட்டியிட விரும்பியுள்ளார். ஆனால் நேரடியாக களத்தில் குதித்தால் காங்கிரஸாரின் ஒட்டுமொத்த கொந்தளிப்புக்குள்ளாக நேரிடும் (சேலம் லோக்சபா தொகுதியில் போட்டி படுதோல்வி அடைந்தவர் தங்கபாலு என்பது நினைவிருக்கலாம்) என்பதால் நேரடியாக களத்தில் குதிக்காமல், மனைவியை வேட்பாளராக களம் இறக்கி, சத்தம் போடாமல் பின்னாடியே இவரும் டம்மி வேட்பாளராக மனு தாக்கல் செய்து இப்போது அவரே வேட்பாளராகி விட்டார் என்கிறார்கள் அதிருப்தி காங்கிரஸார்.

தங்கபாலுவின் இந்த அலேக் ஐடியாவால் தங்கபாலு எதிர்ப்புக் கோஷ்டியினர் மேலும் டென்ஷனாகியுள்ளனர்.

ஜெயந்தி மீது போட்டி வேட்பாளர் புகார்

இதற்கிடையே, ஜெயந்தி தங்கபாலு மீது தேர்தல் அதிகாரிகளிடம் போட்டி காங்கிரஸ் வேட்பாளர் மயிலை சிவகாமி புகார் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தன் மீது கிரிமினல் வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதை தனது வேட்பு மனுவில் ஜெயந்தி தெரிவிக்காமல் மறைத்து விட்டார்.

அதேபோல தனது குடும்பத்தின் மெகா டிவியின் நிர்வாக இயக்குநராக இருப்பதையும் தெரிவிக்காமல் அவர் மறுத்து விட்டார் என்று சிவகாமி கூறியுள்ளார்.

திண்டுக்கல் லியோனி, விஜயகாந்துக்கு எதிராக பிரச்சாரம்.

காமெடியில் முன்னணி நடிகராக இருக்கும் வடிவேலு தேமுதிக தலைவர் விஜயகாந்தை கடுமையாக விமர்சித்தும், திமுக ஆதரவாகவும் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் மேலும் ஒரு காமெடி நடிகர், பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி விஜயகாந்துக்கு எதிராக பிரச்சாரம் செய்யவருகிறார்.

பட்டிமன்றங்களில் தனது நகைச்சுவை பேச்சால் மக்களை கவர்ந்த திண்டுக்கல் ஐ.லியோனி, சில திரைப்படங்களில் நகைச்சுவை வேடம் ஏற்று நடித்துள்ளார்.

இவர் திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்தார்.

இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘திமுகவுக்கு ஆதரவாக நான் 15 நாள் பிரச்சாரம் செய்யவிருக்கிறேன்.

ஒரு நடிகர் நான் தான் அடுத்த முதல்வர் என்று கூறிவருகிறார். அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்வதுதான் என் குறிக்கோள். கலைஞர்தான் அடுத்த முதல்வர் என்று மக்களுக்கு புரியவைப்பேன் என்று தெரிவித்தார்.

32 வெளி மாநில அதிகாரிகள் - 45 ஆயிரம் புகார்கள் - அரண்டு போகும் கட்சிகள்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 வார காலமே உள்ளது. இதனால் தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

தேர்தலை சுதந்திரமாகவும், பாரபட்சமின்றி நியாயமாகவும் நடத்த வேண்டும் என்பதில் தலைமை தேர்தல் கமிஷன் உறுதியாக உள்ளது. இதற்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் எடுத்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக தமிழக போலீஸ் டி.ஜி.பி. லத்திகாசரண் உள்பட பெரும்பாலான உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டனர்.

புதிய டி.ஜி.பி.யாக போலாநாத் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கிடையே வடமாநிலங்களில் இருந்து வந்த 5 உயர் போலீஸ் அதிகாரிகள் தமிழக தேர்தல் பார்வையாளர்களாக பொறுப்பு ஏற்றனர்.

சென்னை மண்டலத்துக்கு ஜிதேந்தர், சேலம் மண்டலத்துக்கு ஜார்ஜ்அகமது, மதுரை மண்டலத்துக்கு டி.கே.பாண்டே, திருச்சி மண்டலத்துக்கு பி.ஆர்.கே.நாயுடு பார்வையாளராக பொறுப்பேற்று அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

வேட்பாளர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறாமல் இருக்கவும், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்கவும், தீவிர சோதனைகளை துணை நிலை ராணுவத்தினர், மாநில போலீசார், மாநில வருவாய் துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 3 வாரங்களாக தமிழ்நாடு முழுவதும் நடந்து வரும் வாகன சோதனை மூலம் பல கோடி ரூபாய் சிக்கியது. ஜவுளிகள், ஆடு, மாடு, கோழிகள் கூட பறிமுதல் செய்யப்பட்டன.

தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கை கடும் விமர்சனத்தை சந்தித்த போதும், பெரிய அளவில் பணம் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வது தடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே வாக்காளர்களைக் கவர பணம், பரிசுப் பொருட்கள் கொடுக்கப்பட்டால் பொதுமக்கள் 18004256669 மற்றும் 1965 எண்களில் புகார் செய்யலாம். 044-2840064 என்ற எண்ணுக்கு பேக்சில் தகவல் அனுப்பலாம். இ.மெயிலில் புகார் அனுப்ப விரும்புபவர்கள், itcontrolroomchennai@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம் என்று அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதற்கு தமிழ்நாடு முழுவதும் மக்களிடம் அமோக ஆதரவு கிடைத்தது. இதுவரை 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் வந்தன.

இதை பார்த்த தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஆச்சரியமடைந்தனர். அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரசாரம் செய்வதற்கு இன்னும் 14 நாட்களே உள்ளதால், பெரும்பாலான தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை வேட்பாளர்கள் ரகசியமாக தொடங்கி உள்ளனர்.

இது தேர்தல் கமிஷனுக்கு ஆதாரங்களுடன் தெரிய வந்துள்ளது. பணம் கொடுப்பதை தடுக்க கூடுதல் அதிரடி வேட்டை நடத்த வேண்டும் என்று தமிழ்நாட்டுக்கு ஏற்கனவே வந்துள்ள வடமாநில 5 உயர் போலீஸ் அதிகாரிகள் பரிந்துரை செய்தனர்.

இதை ஏற்றுக் கொண்ட தலைமை தேர்தல் கமிஷன் உடனடியாக சில நடவடிக்கை களை மேற்கொண்டுள்ளது. முதல் கட்டமாக வடமாநிலங்களில் இருந்து கூடுதலாக 32 ஐ.பி.எஸ். அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக தமிழ்நாட்டுக்கு வர உள்ளனர்.

இந்த 32 அதிகாரிகளும் ஐ.ஜி. மற்றும் அதற்கு மேலான அந்தஸ்தில் உள்ள போலீஸ் உயர் அதிகாரிகளாவார்கள். தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் முறை கேடுகளை தடுக்க வட மாநிலங்களில் இருந்து சுமார் 40 உயர் போலீஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவது இதுவே முதல் தடவையாகும். கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ள 32 அதிகாரிகளும் தமிழ் நாட்டுக்கு வரத்தொடங்கி விட்டனர். அவர்களது தலைமையில் தனி அதிரடிப்படை செயல்படும்.

அந்த படையுடன் இந்த போலீஸ் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் நடவடிக்கையை இவர்கள் மேற்கொள்வார்கள்.

இந்த அதிரடி படைக்கு மாவட்ட கலெக்டரும், வருவாய்துறை அதிகாரிகளும், உள்ளூர் போலீசாரும் உதவியாக இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 32 வடமாநில போலீஸ் அதிகாரிகள் அதிரடி வேட்டை நடத்தும் போது அந்த நடவடிக்கை கட்சி சார்பு இல்லாமல் பாரபட்ச மற்ற முறையில் நேர்மையாக இருக்கும் என்று தேர்தல் கமிஷன் எதிர்பார்க்கிறது.

இது குறித்து தேர்தல் கமிஷன் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட போது உள்ளூர் போலீசார் கண்டும் காணாததும் போல இருந்து விட்டனர். அவர்களால் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க இயலவில்லை. எனவே தான் வடமாநில உயர் போலீஸ் அதிகாரிகளை கண்காணிப்பு களத்தில் இறக்கி விட்டுள்ளோம் என்றார்.

தேர்தல் கமிஷனின் புதிய கட்டுப்பாடுகளால் ஏற்கனவே அரசியல் கட்சியினர் அரண்டு போய் உள்ளனர். தற்போது வடக்கில் இருந்து மேலும் 32 உயர் போலீஸ் அதிகாரிகளை வரவழைத்து இருப்பது, பெரும்பாலான வேட்பாளர்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

அதிமுக கூட்டணிக்கு -144 சீட் கிடைக்கும் - கருத்துக் கணிப்பு.

லென்ஸ்ஆன்நியூஸ் என்ற இணையதளம் நடத்திய கருத்துக் கணிப்பில் தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழகம், புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய சட்டசபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள மாநிலங்களில் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது.

12 தொகுதிகளைத் தேர்வு செய்து அதில் 3000 பேரிடம் கருத்துக் கேட்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது இந்த இணையதளம்.

இந்த கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளதாவது...

160இடங்களில் போட்டியிடும் அதிமுகவுக்கு 100 இடங்கள் வரை வெற்றி கிடைக்கலாம். அதிமுக கூட்டணிக்கு 144 இடங்கள் வரை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

திமுக கூட்டணிக்கு 88 இடங்கள் வரை கிடைக்கலாம். மற்றவர்களுக்கு 2 இடங்கள் வரை கிடைக்கலாம்.

தனிப்பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை. எனவே அதிமுகவால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாது. கூட்டணிக் கட்சிகளின் பலத்தில்தான் அது ஆட்சி அமைக்க முடியும். எனவே அதிமுக கூட்டணி வென்று ஆட்சியைப் பிடித்தாலும் அது, ஜெயலலிதா வார்த்தைகளின்படி மைனாரிட்டி அரசாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக கூட்டணிக்கு 47 சதவீத வாக்குகள் கிடைக்கும். அதேசமயம், திமுக கூட்டணிக்கு 46 சதவீத வாக்குகள் கிடைக்கும். மிக மிக குறுகிய இடைவெளியில் வாக்கு சதவீதம் இருந்தாலும் அதிமுகவுக்கு அதிக இடங்கள் கிடைக்க முக்கியக் காரணம், விஜயகாந்த்தின் தேமுதிக இக்கூட்டணியில் இணைந்திருப்பதால்தான்.

அதேசமயம், திமுக கூட்டணியில் பல தொகுதிகளில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாச அளவில்தான் தோல்வி இருக்கும். இதற்கு கூட்டணிக் கட்சியினரிடையே காணப்படும் ஒத்துழையாமை உள்ளிட்டவை காரணமாக இருக்கலாம்.

ஸ்பெக்ட்ரம் ஊழலால் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினர் பலன் அடைந்துள்ளனர் என்று 48 சதவீதம் பேரும், இல்லை என்று 21 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

திமுக அரசின் இலவச கலர் டிவியைப் பெற்றுள்ளீர்களா என்ற கேள்விக்கு 92 சதவீதம் பேர் ஆம் என்று கூறியுள்ளனர். அதாவது கிட்டத்தட்ட ஒட்டுமொத்த தமிழகமும் திமுக வழங்கிய இலவச டிவியைப் பெற்று பயன் அடைந்துள்ளது.

எந்தக் கட்சியால் சிறந்த ஆட்சியைத் தர முடியும் என்ற கேள்விக்கு திமுக என்று 46 சதவீதம் பேர் பதிலளித்துள்ளனர். அதிமுகவுக்குக் கிடைத்துள்ள ஆதரவு 42 சதவீதம் பேர் மட்டுமே.

தமிழக வாக்காளர்கள் மத்தியில் பிரபலமான தலைவராக கருணாநிதி விளங்குகிறார். முதல்வர் பதவிக்கு அவர்தான் பொருத்தமானவர் என்று 43 சதவீதம் பேரும், ஜெயலலிதா என்று 42 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.

இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று 61 சதவீத வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.

காங். கருத்துக் கணிப்பில் 77 இடங்கள்

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்பட்ட ரகசிய கருத்துக் கணிப்பில் திமுக-காங் கூட்டணிக்கு 77 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என தெரிய வந்துள்ளதாம்.

அதிமுக கூட்டணிக்கு 152 இடங்கள் கிடைக்கும் என்றும் இதில் தெரிய வந்துள்ளதாம். இடதுசாரிகளுக்கு 4 இடங்களும், பாஜகவுக்கு ஒரு சீட்டும் கிடைக்கும் என இந்தக் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளதாம்.

புதுச்சேரியில் 11 இடங்கள்

புதுச்சேரியில் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு 11 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் காங்கிரஸ் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. அதிமுக கூட்டணிக்கு 19 இடங்கள் கிடைக்குமாம்.

மயிலாப்பூர் தொகுதி வேட்பாளரானார் தங்கபாலு! ஜெயந்தி மனு நிராகரிப்பு

மயிலாப்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜெயந்தி தங்கபாலுவின் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.

அந்தத் தொகுதியில் மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலுவின் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

மயிலாப்பூரின் காங்கிரஸ் வேட்பாளர் தாம் தான் என கே.வி.தங்கபாலு அறிவித்துள்ளார்.

முன்னதாக, மயிலாப்பூர் தொகுதியில் தங்கபாலுவின் மனைவி ஜெயந்தி போட்டியிடுவதற்கு, காங்கிரஸ்சில் பல்வேறு அணியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

ஜெயந்தி தங்கபாலு தாக்கல் செய்திருந்த வேட்பு மனுவில் இரண்டு ஆவணங்கள் இணைக்கப்படாததால், அவரது மனு நிராகரிக்கப்பட்டதாகவும், அவருக்கு பதிலாக மாற்று வேட்பாளர் தங்கபாலுவின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கிறது.

அதேநேரத்தில், ஜெயந்தியின் வேட்புமனுவில் இணைக்கப்பட்டிருந்த அந்த இரண்டு ஆவணங்கள் மாயமாகிவிட்டது என தங்கபாலு புகார் கூறியுள்ளார்.

50 லட்சம் கையூட்டு தா.பா. மீது குற்றச்சாட்டு: இ.கம்யூ கட்சியில் பிளவு.

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து 7 ஆயிரம் பேர் அக்கட்சியில் இருந்து விலகி, திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தளி தொகுதியில் ராமச்சந்திரன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகளை கலந்து ஆலோசிக்காமல், மாநில செயலாளர் தா.பாண்டியன் மற்றும் மகேந்திரனும் லட்சக் கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு வேட்பாளரை அறிவித்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் நாகராஜ் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடந்த சட்டமன்ற தேர்தலில் தளி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் நாகராஜ். இவர் மேலும் கூறுகையில்,

மாநில துணை செயலாளராக இருந்த மகேந்திரன் 50 லட்ச ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு கட்சி நிர்வாகிகளை ஆலோசிக்காமல் தளி தொகுதி வேட்பாளரை அறிவித்துவிட்டார்கள். கட்சியில் 30 வருடமாக தியாகம் செய்தவர்கள் எல்லாம் ஒன்றுகூடி நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக முடிவு செய்துள்ளோம். சட்டசபை தேர்தல் முடிந்தவுடன் வேறு கட்சியில் இணைவது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தளி தொகுதியில் போட்டியிடும் ராமச்சந்திரன், கடந்த சட்டமன்ற தேர்தலில் அதே தொகுதியில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றவர்

வைகோ - ஜெயலலிதாவே செய்துவிட்டு மற்றவரினமீது பழிபோடுவதாக நான் குற்றம்சாட்டுகிறேன்.

இந்தத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான உடன், எங்களை அல்லவா முதலில் அழைத்துப் பேசியிருக்க வேண்டும். சரி.., புதிய கட்சிகள் வருகின்றன.., நாம் தான் ஏற்கனவே இருக்கிறோமே என, அமைதி காத்தோம். தொகுதிப் பங்கீடு குறித்து நடந்த முதல் பேச்சுவார்த்தையில், "கடந்த முறை கொடுத்த 35கொடுத்து விடுங்கள்' என்றோம். "நிறைய கட்சிகள் வருகின்றன; கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்' என்றனர். அடுத்த முறை, 30 தொகுதி கேட்டோம். இன்னும் குறைக்கக் கூறினர்.

பிப்ரவரி 28ம் தேதி, "25 இடங்களாவது வேண்டும்' என்றோம். மார்ச் 8ம் தேதி போயஸ் தோட்டத்திற்கு அழைத்தனர். பேச்சுவார்த்தையில், "நீங்கள் ஆறு இடங்களில் தானே வெற்றி பெற்றிருக்கிறீர்கள். அவற்றையே எடுத்துக் கொள்ளுங்கள்' என்றனர். இதை என் தோழர்கள் வந்து சொன்னபோது, இதயத்தில் ஈட்டி பாய்ச்சியது போல இருந்தது. ஆனாலும், அமைதியாக இருந்தேன். மறுபக்கம், கம்யூனிஸ்டுகளுக்கு 10, மார்க்சிஸ்டுக்கு 12, இன்னொரு கட்சிக்கு 41 என, ஒதுக்கீடுகள் முடிந்தன. மார்ச் 12ம் தேதி, கூட்டணிகளுக்கு 74 தொகுதி ஒதுக்கியது போக, 160 தொகுதிகளுக்கான அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப் பட்டுவிட்டது. அதிருப்தியடைந்த மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் தலைவர்கள் அன்றே, தே.மு.தி.க., அலுவலகத் துக்குச் சென்றனர். அவர்கள் பேச்சு நடத்த வேண்டுமென்றால், அ.தி.மு.க., அலுவலகத்துக்கு அல்லவா சென்றிருக்க வேண்டும்?

மார்ச் 13ம் தேதி, அ.தி.மு.க., அலுவலகத்திலிருந்து எங்களைத் தொடர்பு கொண்டனர். எட்டு "சீட்' ஒதுக்குவதாகக் கூறினர். நான் பதில் ஏதும் ஏதும் சொல்லவில்லை. மறு நாள் காலை, 11 மணிக்கு பன்னீர் செல்வமும், செங் கோட்டையனும் என் வீட்டுக்கு வந்தனர். அரை மணி நேரம் அமைதியாக இருந்துவிட்டு, "எப்படி சொல்வதென்றே தெரியவில்லை. என்ன நடக்கிறதென்றும் புரியவில்லை. நேற்று ஒரு எண்ணிக்கையில் "சீட்' தருவதாகக் கூறினார்களாம். அது கொடுக்க முடியாத நிலையாம். ஒன்றை குறைத்துக்கொண்டு ஏழு சீட் தான் தர முடியும் எனக் கூறுகின்றனர்' என்றனர். "கூட்டணியை விட்டு வெளியே போ' என்பதைத் தவிர, இதற்கு வேறென்ன அர்த்தம் இருக்க முடியும்? நான், "தேர்தலில் வெற்றி பெற்று, நல்ல பதவிகளுக்கு வாருங்கள்' என வாழ்த்துச் சொல்லி அனுப்பிவிட்டேன். அதேசமயம், எங்களுக்கு 18 தொகுதி தருவதாகவும், 19 தொகுதி தருவதாகவும், வைகோ மறுக்கிறார் என்றும், அ.தி.மு.க., தரப்பிலிருந்து மீடியாக்களுக்கு பொய் தகவல்கள் தரப்பட்டன.

மார்ச் 15ம் தேதி இரவு, அ.தி.மு.க.,விலிருந்து பூங்குன்றன் தொடர்புகொண்டு, "அம்மா இரண்டு பேரை உங்களுடன் பேச்சு நடத்த அனுப்பி வைக்கிறார்' என்று சொன்னார். வீட்டுக்கு வந்தவர்கள், ஒன்பது தொகுதிகள் தருவதாகக் கூறினர். "போயஸ் கார்டனுக்கு வாருங்கள்' என்றனர். "நான் வரவில்லை. வந்தால் வாக்குவாதம் செய்ய வேண்டியதிருக்கும். மனச் சங்கடம் வந்துவிடும். நான் கேட்ட, 23 தொகுதிகளில் இரண்டு இடங்களை குறைத்துக்கொண்டு, 21 தொகுதிகள் கொடுப்பதாக இருந்தால் சொல்லுங்கள், வருகிறேன்' என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டேன்.

மொத்தமுள்ள 234 தொகுதிகளில், கூட்டணி கட்சிகளில், இரண்டு கம்யூனிஸ்ட் மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு, 74 இடங்கள் போக, ம.தி.மு.க.,வுடன் கூட்டணி பேச்சு முடியாத நிலையில், அ.தி.மு.க., 160 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்தால், ம.தி.மு.க.,வை பிடரியைப் பிடித்து, நெட்டித் தள்ளியது தவிர வேறென்ன?

"இந்தப் பட்டியல், ஜெயலலிதாவுக்கு தெரியாமல் வேறு நபர்கள் மூலம் மாற்றப்பட்டுவிட்டது. இதனால் தான் கூட்டணிக் கட்சிகள் கேட்ட சீட்டுகள் வழங்கப்படுவதில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது' எனச் செய்திகள் வெளியாயின. பட்டியல் மாற்றப்பட்டது, கட்சியின் பொதுச் செயலருக்கே தெரியாது என்றால், அவர் செயல் இழந்துவிட்டாரா? அவரை யாரும் ஆட்டிப் படைக்கின்றனரா? தொகுதி கொடுப்பதிலேயே இவருக்கு பங்கில்லை என்றால், இப்படிப் பட்டவரிடம் நாட்டை கொடுத்தால் என்ன ஆகும்? இப்படிப்பட்டவர்கள் திருந்த மாட்டார்கள்.

ஜெயலலிதாவே செய்துவிட்டு மற்றவரினமீது பழிபோடுவதாக நான் குற்றம் சாட்டுகிறேன். இவ்வாறு, அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து நாங்கள் தூக்கி யெறியப்பட்டோம். மார்ச் 19ம் தேதி, ம.தி.மு.க.,வின் உயர்மட்டக் கூட்டம் தாயகத்தில் நடந்தது. அனைவரும் ஒரு மனதாக முடிவெடுத்து, இந்தத் தேர்தலில் மட்டும் பங்கேற்பதில்லை என்று முடிவு செய்து அறிவித்தோம். காலம் சில படிப்பினையைத் தந்ததால் ஜெயலலிதா மனதில் மாற்றம் ஏற்பட்டிருக்கும் என நினைத்தேன். அவரின் எதேச்சிகாரத்திலும், ஆணவத்திலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை; இனியும் ஏற்படாது. என் முடிவுக்கு வருத்தம் தெரிவித்து ஜெயலலிதா கடிதம் எழுதியது, அரசியல் ஆதாயம் கருதித் தான். அவர் எப்படிப்பட்டவர் என்று கணினியில் பணி செய்பவர்கள் முதல், கழனியில் வேலை செய்பவர்கள் வரை அனைவருக்கும் தெரியும்.

மீண்டும் அ.தி.மு.க.,வுடன் சேர்வதற்கு, ம.தி.மு.க., ஒருபோதும் நினைக்காது. மக்கள் மத்தியில் ஜாதி, மத பேதம், ஊழல் ஒழிக்கப்பட வேண்டும்; தி.மு.க.- அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக, ம.தி.மு.க., திகழ வேண்டும். தமிழகத்தை ஆளவேண்டும் என்ற குறிக்கோளுடன், 10 ஆண்டுகளுக்கு முன் ம.தி.மு.க., தீர்மானம் போட்டது. இதே முடிவுடன் கட்சி மீண்டும் நடைபோட தற்போதைய சூழ்நிலை உருவாகியுள்ளது; இது, காலம் தந்த அருட்கொடை. அ.தி.மு.க., விலிருந்து விலகியது, நாங்கள் விரும்பி எடுத்த முடிவல்ல; காலத்தால் ஏற்பட்ட முடிவு.

இந்த முடிவில் ஒரு சதவீதம் கூட, மறு பரிசீலனை செய்ய இடம் கிடையாது. அ.தி.மு.க., கூட்டணியில் ம,தி.மு.க.,வுக்கு, 35 இடங்கள் கொடுத்தால் கூட மறுபரிசீலனை என்ற பேச்சுக்கே இடமில்லை.

இமயம் டி.வி. நேர்காணலில் வைகோ.