Monday, March 28, 2011

தங்கபாலுவின் அதிரடி - வாயடைத்து நிற்கும் காங்கிரஸ்.

காங்கிரஸாருக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அரசியல் கட்சியினருக்கும் பெரும் வியப்பூட்டும் வகையில் மயிலாப்பூர் தொகுதியில் ஒரு அரசியல் நாடகம் இன்று அரங்கேறியது. அங்கு காங்கிரஸ் வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்த ஜெயந்தி தங்கபாலுவின் மனுவை அதிகாரிகள் நிராகரித்து விட்டனர். அதேசமயம், அவரது டம்மி வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்த தங்கபாலுவின் மனு ஏற்கப்பட்டு விட்டது. இதனால் அவர் வேட்பாளராகியுள்ளார்.

வரலாறு காணாத குழப்பத்தில் உள்ளது காங்கிரஸ். வேட்பாளர் தேர்வு தொடர்பாக பல தொகுதிகளிலும் போர் வெடித்துள்ளது. இதை அடக்க முடியாமல் ஸ்தம்பித்துப் போய் வாயடைத்து நிற்கிறது காங்கிரஸ் மேலிடம்.

தங்கபாலு செய்த பெரும் குழப்பத்தால் பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை பெரும் கேள்விக்குறியாக்கி விட்டது காங்கிரஸ். இதனால் இத்தனை தொகுதிகளை காங்கிரஸுக்கு தேவையில்லாமல் அளித்துள்ள திமுக பெரும் கவலையிலும், கடுப்பிலும் உள்ளது.

இந்த நிலையில் தங்கபாலு அட்டகாசமான ஒரு ஸ்டண்ட்டை அடித்து அனைவரையும் மூக்கில் விரல் வைக்கச் செய்துள்ளார்.

இவரது மனைவி ஜெயந்திக்கு மயிலாப்பூரில் சீட் வாங்கிக் கொடுத்திருந்தார் தங்கபாலு. ஆனால் இதற்கு மிகக் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஜெயந்தி தோற்பது நிச்சயம் என்ற நிலை காணப்படுகிறது. மயிலை சிவகாமி என்பவர் போட்டி வேட்பாளராக களம் குதித்துள்ளார். இவருக்கு ஆதரவாக இளைஞர் காங்கிரஸார் உள்பட ஒட்டுமொத்த நிர்வாகிகளும் களம் இறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் அதிரடியாக சில வேலைகளை செய்தார் தங்கபாலு. ஒவ்வொரு அரசியல் கட்சி வேட்பாளருடனும் ஒரு டம்மி வேட்பாளர் அதாவது மாற்று வேட்பாளர் மனு தாக்கல் செய்வது வழக்கம்.

ஜெயந்தி தங்கபாலுவுக்கு மாற்று வேட்பாளராக, அதாவது டம்மியாக தங்கபாலுவே மனு தாக்கல் செய்தார். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. இது காங்கிரஸாரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. தங்கபாலு ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் இவ்வாறு செய்திருப்பதாக அனைவரும் கூறினர்.

2 ஆவணங்களை இணைக்கவில்லை

தற்போது தங்கபாலுவின் திட்டம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இன்று நடந்த வேட்பு மனு பரிசீலனையின்போது ஜெயந்தியின் வேட்பு மனுவை அதிகாரிகள் நிராகரித்து விட்டனர்.

வேட்பு மனுவுடன் முக்கியமான 2 ஆவணங்களை ஜெயந்தி தங்கபாலு தனது வேட்பு மனுவுடன் இணைக்கவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதன் காரணமாகவே அவரது மனு நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அந்த இரண்டு ஆவணங்களும் வேட்பு மனுவுடன்தான் இணைக்கப்பட்டிருந்தது. ஆனால் அது மாயமாகி விட்டது என்று தங்கபாலு புகார் கூறியுள்ளார். ஆனால் வேட்பு மனுவுடன் இணைத்துள்ள எதுவும் காணாமல் போக வாய்ப்பில்லை. ஜெயந்தி இணைக்கவில்லை, எனவேதான் நிராகரிக்கப்பட்டது என்று அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் தங்கபாலு கூறுவது பொய்யாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

நான்தான் வேட்பாளர்-தங்கபாலு அதிரடி

ஜெயந்தியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட போதிலும், தங்கபாலுவின் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மயிலாப்பூர் வேட்பாளர் நான்தான் என்று தங்கபாலுவே அறிவித்துள்ளார்.

தங்கபாலுவின் இந்த அதிரடி செயலால் காங்கிரஸார் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மிகப் பெரிய டிராமாவை படு கேஷுவலாக தங்கபாலு அரங்கேற்றியுள்ளார் என்று அவரது அதிருப்தியாளர்கள் கூறுகின்றனர்.

உண்மையில் தங்கபாலுதான் இந்தத் தேர்தலில் போட்டியிட விரும்பியுள்ளார். ஆனால் நேரடியாக களத்தில் குதித்தால் காங்கிரஸாரின் ஒட்டுமொத்த கொந்தளிப்புக்குள்ளாக நேரிடும் (சேலம் லோக்சபா தொகுதியில் போட்டி படுதோல்வி அடைந்தவர் தங்கபாலு என்பது நினைவிருக்கலாம்) என்பதால் நேரடியாக களத்தில் குதிக்காமல், மனைவியை வேட்பாளராக களம் இறக்கி, சத்தம் போடாமல் பின்னாடியே இவரும் டம்மி வேட்பாளராக மனு தாக்கல் செய்து இப்போது அவரே வேட்பாளராகி விட்டார் என்கிறார்கள் அதிருப்தி காங்கிரஸார்.

தங்கபாலுவின் இந்த அலேக் ஐடியாவால் தங்கபாலு எதிர்ப்புக் கோஷ்டியினர் மேலும் டென்ஷனாகியுள்ளனர்.

ஜெயந்தி மீது போட்டி வேட்பாளர் புகார்

இதற்கிடையே, ஜெயந்தி தங்கபாலு மீது தேர்தல் அதிகாரிகளிடம் போட்டி காங்கிரஸ் வேட்பாளர் மயிலை சிவகாமி புகார் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தன் மீது கிரிமினல் வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதை தனது வேட்பு மனுவில் ஜெயந்தி தெரிவிக்காமல் மறைத்து விட்டார்.

அதேபோல தனது குடும்பத்தின் மெகா டிவியின் நிர்வாக இயக்குநராக இருப்பதையும் தெரிவிக்காமல் அவர் மறுத்து விட்டார் என்று சிவகாமி கூறியுள்ளார்.

No comments: