Thursday, May 26, 2011

சமச்சீர் கல்வித் திட்டம் பற்றி விளக்கமளிக்க வேண்டும் : தா.பாண்டியன்.

சமச்சீர் கல்வித் திட்டம் பற்றி விளக்கமளிக்க வேண்டும்: தா.பாண்டியன்

சமச்சீர் கல்வித் திட்டம் என்ற கொள்கையை பற்றி அதிமுக அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுபற்றி சென்னையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலர் தா.பாண்டியன் தெரிவித்துள்ள செய்தியில் தமிழக அரசு சமச்சீர் ஒத்திவைப்பதாக அறிவித்து இருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே சமச்சீர் கல்வி திட்டம் என்ற கொள்கையை அதிமுக அரசு நிறுத்தி வைத்துள்ளதா? நிராகரிக்கிறதா? என்பதை திட்டவட்டமாக தெளிவுபடுத்த வேண்டும் என கேள்வி எழுப்பினார் மேலும் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டு குறைகள் இருக்கிறது என்பதால் அதனை இந்த ஆண்டு நடைமுறைப்படுத்துவதில் ஒத்திவைக்கப்படுகிறது என்றால் அதற்கான காரணங்களை விளக்கி மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் குறிப்பாக கல்வித்துறையினர் மத்தியில் எழுந்துள்ள குழப்பத்தை தீர்த்து வைக்கவேண்டும்.

தமிழக சட்டப்பேரவைக்காகவும் தலைமை செயலகத்திற்காகவும் கட்டப்பட்ட கட்டடம் திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதிலும் கட்டுமானப்பணிகள் நிறைவு பெறவில்லை. எஞ்சியுள்ள பணியையும் தொடர்ந்து நடத்தி முடித்து மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட கட்டடம் அரசு நிர்வாகப்பணிக்காகவோ மக்களுக்காகவோ உரிய முறையில் பயன்படுத்தப்பட வேண்டும்.

அரசுப்பணிகளுக்காக புதிய கட்டிடத்தை பயன்படுத்துவதில் தவறு இல்லை. பயன்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் முக்கியமே தவிர எதற்கு பயன் படுத்துவது என்பதை ஆளும் கட்சி தீர்மானிக்கலாம். மேட்டூர் அணையை ஜீன் 6-ம் தேதியே பாசனத்திற்காக திறப்பது என்ற தமிழக அரசு அறிவிப்பை தமிழக விவசாயிகள் வரவேற்றிருப்பது போலவே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் வரவேற்பதாக தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.


பொதுப்பணித்துறை மூலம் மணல் விற்பனை தொடங்கியது.


குழந்தைகள் பாதிப்பு : சென்னையில் சின்னம்மை நோய் பரவுகிறது.

குழந்தைகள் பாதிப்பு: சென்னையில் சின்னம்மை நோய் பரவுகிறது

சென்னையில் ஒவ்வொரு ஆண்டு கோடை காலத்திலும் சின்னம்மை நோய் பரவுவது உண்டு. அதே போல் இந்த ஆண்டும் சின்னம்மை நோய் பரவி வருகிறது. இதில் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

சின்னம்மை நோய் தாக்கினால் 3 நாளில் அதன் தாக்கம் குறைந்து விடும் என்பதால் நிறைய வீடுகளில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதில்லை. வேப்பிலை சாறு, மோர் கொடுத்து சின்னம்மை நோயை குணப்படுத்தி விடுகின்றனர்.

உடல் முழுவதும் ஆங்காங்கே கொப்பளம் அதிகமாகி சிரமப்படும் குழந்தைகள் மட்டும் ஆஸ்பத்திரிக்கு வருகின்றனர்.

இதுபற்றி அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர் வெங்கடேஷ் கூறுகையில், ஒருவித தொற்று வைரஸ் கிருமிகள் மூலம் சின்னம்மை நோய் பரவுகிறது. எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளுக்கு இந்த நோய் எளிதில் பரவிவிடும். சிலருக்கு காய்ச்சலும் வரும். தற்போது தினசரி 10 பேர் வரை இங்கு சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர் என்றார்.

வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சுமதி கூறுகையில் எனது 10 வயது மகளுக்கு சின்னம்மை நோய் வந்து 3 நாள் ஆகிவிட்டது. தினமும் வேப்பிலை, மோர், இளநீர் கொடுத்து வந்தேன். தற்போது ஓரளவு குணமாகி விட்டது என்றார்.

திருச்சியை கலக்கிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.


சங்ககிரியில் பயங்கரம் : 2 வாலிபர்கள் எரித்து கொலை ; நிர்வாண கோலத்தில் பிணம் வீச்சு.


சேலம் மாவட்டம் சங்ககிரியில் ஒரு கல்குவாரி உள்ளது. இதன் அருகே உள்ள காட்டுவேலி என்ற பகுதியில் முகம் எரிந்த நிலையில் 2 ஆண் பிணங்கள் கிடந்தது. அந்த பக்கமாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

இதுப்பற்றிய தகவல் கிடைத்ததும் சேலம் சரக டி.ஐ.ஜி.வெங்கட்ராமன், போலீஸ் சூப்பிரண்டு அறிவுச்செல்வம். மற்றும் சங்ககிரி டி.எஸ்.பி. ராமசாமி, மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அப்போது கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த வாலிபர்களுக்கு 28 வயதில் இருந்து 30 வயதிற்குள் இருக்கும் என தெரியவந்தது.

மேலும் ஒரு வாலிபர் பிணம் நிர்வாண கோலத்திலும், மற்றொரு வாலிபர் பிணம் ஜட்டியுடனும் கிடந்தது. இவர்கள் அடையாளம் தெரியாத இருக்கும் வகையில் முகம் டீசல் ஊற்றி எரிக்கப்பட்டு கிடந்தது. இவர்கள் 2 பேரையும் வெளியில் கொலை செய்து காரில் கொண்டு வந்து பிணத்தை இங்கே வீசிச்சென்றதற்கான தடயங்கள் உள்ளது.

இவர்கள் 2 பேரும் சொத்து தகராறு காரணமாக கொலை செய்யபட்டார்களா? அல்லது காதல் தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை செய்யப்பட்டவர்கள் யார் என்று தெரிந்தால் தான் கொலையாளிகள் யார் என்பதை கண்டுபிடிக்க முடியும் என்பதால் தனிப்படை போலீசார் அவர்களை பற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்காக அவர்கள் சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் யாராவது காணாமல் போய் இருப்பதாக புகார் வந்து இருக்கிறதா? என்றும் தகவல் கேட்டு இருக்கின்றனர். 2 வாலிபர்களின் பிணங்களும் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த இரட்டை கொலை சங்ககிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பாகிஸ்தானிடம் 50 தீவிரவாதிகள் பட்டியல்: இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு

பாகிஸ்தானிடம் 50 தீவிரவாதிகள் பட்டியல்: இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு

இந்தியாவால் தேடப்பட்டு வரும், பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் 50 தீவிரவாதிகள் பட்டியலை சமீபத்தில் பாகிஸ்தானிடம் இந்தியா அளித்தது. இந்நிலையில், அதற்கு, அமெரிக்க உதவி வெளியுறவு மந்திரி ராபர்ட் பிளேக் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இவர், மத்திய மற்றும் தெற்கு ஆசிய விவகாரங்களை கவனிப்பவர் ஆவார். அவர் கூறுகையில், பாகிஸ்தானிடம் 50 தீவிரவாதிகள் பெயர் அடங்கிய பட்டியலை இந்தியா அளித்துள்ளது.

இது, இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் ஒரு அங்கம் ஆகும். இதை நாங்கள் ஆதரிக்கிறோம். பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் தீவிரவாதத்தை இந்தியா தூண்டி விடுவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், நாங்கள் அப்படி கருதவில்லை. உள்நாட்டு பிரச்சினை களால்தான், அங்கு தீவிரவாதம் நிலவுவதாக கருதுகிறோம் என்றார்.

தமிழக நர்சுகள் 1000 பேர் 3 நாட்களாக உயிருக்கு போராட்டம்.


ஏமனில் அதிபருக்கு எதிராக உள்நாட்டு போர் வெடித்துள்ளது. அதிபரின் ஆதரவாளர்களுக்கும் பழங்குடியினருக்கும் ஏற்பட்டுள்ள இந்த மோதலால் அங்கு பணியாற்றி வரும் தமிழகம், கேரளாவை சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான நர்சுகள் பரிதவிக்கின்றனர்.

ராணுவ மருத்துவமனையில் உள்ள அவர்கள், குண்டு தாக்குதலுக்கு பயந்து 3 நாட்களாக இருட்டறையில் பதுங்கி, பசி பட்டினியால் வாடி வருகின்றனர்.

வளைகுடா நாடுகளில் ஒன்றான ஏமன் நாட்டில் தலைநகர் சானா அருகே ராணுவ வீரர்களுக்கு சிகிச்சையளிக்கும் மிலிட்டரி மருத்துவமனை உள்ளது. தமிழகத்தின் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் இங்கு நர்சாக பணியாற்றி வருகின்றனர். தமிழகம், கேரளாவை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட நர்சுகள் உள்ளனர்.

அந்நாட்டில் அதிபர் அலிஅப்துல்லா சலேவை பதவி விலகக் கோரி எதிர்க்கட்சி தலைவரான ஷேக்சாதிக் அல்அமரின் ஆதரவாளர்களான பழங்குடியினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் தலைநகர் சனாவில் கடந்த சில நாட்களாக அதிபரின் ஆதரவாளர் களுக்கும், பழங்குடியினருக்கும் இடையே பயங்கர கலவரம் வெடித்துள்ளது. கலவரத்தில் இதுவரை 50க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் ஏமனின் முக்கிய எதிர்க்கட்சியான ஹாஷித் என்ற பழங்குடியின கூட்டுக்குழுவின் தலைவர் அமர் வீடு மீது அதிபரின் ஆதரவாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில் பலர் பலியாயினர்.

இதையடுத்து தேசிய செய்தி ஒலிபரப்பு நிறுவனமான சபா, தேசிய விமான நிலைய அலுவலகமான ஏமனியா ஆகியவற்றின் கட்டிடங்களை பழங்குடியினர் நேற்று கைப்பற்றினர். உள்துறை அமைச்சக கட்டிடத்துக்கும் தீ வைக்க முயன்றனர்.

இதைத் தொடர்ந்து அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் பணியாற்றிவரும் இந்திய நர்சுகளை குறிவைத்து தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர்.

நர்சுகள் தங்கியுள்ள விடுதியில் சில தினங்களுக்கு முன்பு அதிபருக்கு எதிரான வர்கள் ‘டைம்பார்ம்’ வைத்தனர். இதை ராணுவத்தினர் கண்டுபிடித்து அகற்றியதால் நர்சுகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதனால் ஆத்திரமடைந்த பழங்குடியினர் கடந்த 3 நாட்களாக நர்சுகள் தங்கியுள்ள விடுதியை நோக்கி கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்ட வண்ணமும் உள்ளனர். ராணுவத்தினரும் நர்சுகளுக்கு பாதுகாப்பாக சண்டையிட்டு வருகின்றனர். தொடர்ந்து துப்பாக்கி சத்தம் கேட்டுக்கொண்டே இருப்பதால் நர்சுகள் தூக்கமின்றி தவித்து வருகின்றனர்.

கடந்த 3 நாட்களாக அவர்கள் தங்கியுள்ள அறைகளுக்கு மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. உணவு மற்றும் குடிநீர் இன்றியும் தவித்து வருகின்றனர். உயிருக்கு பயந்து அனைவரும் விடுதியில் உள்ள கட்டிலுக்கு அடியில் பதுங்கியுள்ளனர். இருட்டறையில் கட்டிலுக்கு அடியில் பதுங்கி 3 நாட்களாக உயிருக்கு போராடும் பரிதாபம் நேர்ந்துள்ளது.

ஒரு பக்கம் தாக்குதல், மற்றொரு பக்கம் உணவு, தண்ணீர் இன்றி நர்சுகள் தவித்து வருகின்றனர். பலரது செல்போன் சார்ஜ் இல்லாமல் சுவிட்ச் ஆப் ஆகி வருகிறது. சிலர் செல்போன் மூலம் தமிழகத்தில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து தங்களை காப்பாற்றும்படி கதறி அழுகின்றனர்.

எதிர்ப்பாளர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் நர்சுகளை மீட்கும் நடவடிக்கையில் அந்நாட்டு இந்திய தூதரகம் இறங்கி உள்ளது. போரில் காயம்படும் வீரர்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக நர்சுகளை அவர்களது சொந்த நாட்டுக்கு அனுப்ப ஏமன் அரசும் ராணுவமும் மறுத்து வருகிறது.

இதற்கிடையே, ஏமனில் சிக்கியுள்ள நர்சுகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்றிரவு நெல்லை எம்.பி. ராமசுப்புவை சந்தித்து முறையிட்டனர். அவர் கூறும்போது, “ஏமன் நாட்டில் நடக்கும் உள்நாட்டு போரால் எதிர்ப்பாளர்களின் தாக்குதலுக்கு மத்தியில் சிக்கியுள்ள நர்சுகளின் உறவினர்கள் என்னிடம் முறையிட்டனர்.

உடனடியாக டெல்லியில் உள்ள வெளிநாட்டு தூதரகத்துக்கு தகவல் தெரிவித்தேன். ஜப்பானில் சிக்கி தவித்த 40 தமிழர்களை காப்பாற்றியதுபோல், இவர்களையும் ஓரிரு நாட்களில் மீட்க மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

சன் டிவி லாபம் ரூ.772 கோடி !


சன் டிவி குழுமத்தின் லாபம் 36 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன்மூலம் ரூ. 772 கோடி லாபத்தை ஈட்டியுள்ளது இந்த நிறுவனம்.

கடந்த ஆண்டு மார்ச் 31 வரையிலான நிதியாண்டில் இந்த நிறுவனத்தின் லாபம் ரூ. 567 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு இது 36 சதவீதம் அதிகரித்து ரூ. 772 கோடியாக உயர்ந்துள்ளது.

கடந்த 2010ம் ஆண்டில் மொத்த வருமானம் ரூ. 1,437 கோடியாக இருந்தது. இது இந்த ஆண்டு ரூ. 1,970 கோடியாக உயர்ந்துள்ளது.

இதையடுத்து தனது பங்குதாரர்களுக்கு ஒரு பங்குக்கு (மதிப்பு ரூ.5) ரூ. 3.75 டிவிடன்ட் வழங்க இந்த நிறுவனத்தின் நிர்வாகக் குழு முடிவெடுத்துள்ளது.

இரண்டாம் உலக போரின் போது நாய்களுக்கு பேசும் பயிற்சி அளித்த ஹிட்லர்.

இரண்டாம் உலக போரின் போது  நாய்களுக்கு பேசும்  பயிற்சி அளித்த ஹிட்லர்

ஜெர்மனியர்கள் நாய்களை மனிதனுக்கு சமமாக புத்தியுள்ள பிராணிகளாக கருதினார்கள். சர்வாதிகாரி ஹிட்லர் சிறந்த புத்தியுடைய நாய்களின் படையை ஒன்று வைத்திருந்தார். இந்த பயங்கர நாய்கள் பேசும் நாய்களாக இருந்தன.

இந்த நாய்கள் தங்கள் ராணுவ அதிகாரிகளுக்கு தகவல் பரிமாற்றிக்கொள்ள உதவும் என்று ஹிட்லர் நம்பினார். அவர் நாய்களுக்கு என்றே ஒரு சிறப்பு பள்ளி ஒன்றையும் வைத்திருந்தார். அப்பள்ளியில் நாய்களுக்கு பேச கற்றுக் கொடுக்கப்பட்டது. ஹிட்லரின் நாய்ப்படை அதிகாரிகள் கல்வியறிவு உள்ள நாய்களை பேச பயிற்சி அளித்த தோடு, அவற்றின் பாதங்கள் மூலம் சிக்னல்களை கண்டறியவும் கற்றுக் கொடுத்தனர்.

ஒரு நாள் தனது பாதங்களை தட்டி எழுத்துக்களை பேசியது. அது மதசம்பந்தமாக வும், கவிதையையும் கற்றுக் கொண்டது என செய்திகள் கூறகின்றன. ஜெர்மனியர்கள் நாய்களை இவ்வாறு அதி புத்திசாலிகளாக பழக்கியதற்கு இரண்டாம் உலக போரில் ராணுவத்திற்கு அவை உதவியாக இருக்கும் என்பதே காரணமாகும்.

மேலும் இத்தகைய நாய்கள் சிறைச்சாலைகளில் அதிகாரிகளின் பணிச்சுமையை குறைத்து நன்கு காவல்காத்தன என சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.

ஆசிரியர்களுக்கு ஆபாச இ-மெயில் : இந்திய தூதரக அதிகாரி மகள் ரூ.7 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு .

ஆசிரியர்களுக்கு ஆபாச இ-மெயில்: இந்திய தூதரக அதிகாரி மகளை தவறாக கைது செய்த அமெரிக்கா;  ரூ.7 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இந்திய தூதரகத்தில் அதிகாரியாக பணி புரிபவரின் மகள் கிருத்திகா பிஸ்வாஸ் (வயது 18). அங்குள்ள மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார்.

இவர் அந்தப்பள்ளியில் உள்ள ஆசிரியர்களுக்கு ஆபாச இ- மெயில்கள் அனுப்பியதாக கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரது கையில் விலங்கு மாட்டி 24 மணி நேரம் காவலில் வைக்கப்பட்டார்.

பாத்ரூம் செல்லக்கூட போலீசார் அனுமதிக்கவில்லை. மேலும் கிருத்திகா கைது செய்யப்பட்டது பற்றி அவரது தந்தைக்கோ, தூதரகத்துக்கோ கூட தகவல் தெரிவிக்கப்படவில்லை. கிருத்திகா பள்ளியில் இருந்தும் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் ஆபாச இ-மெயில்களை அனுப்பியது கிருத்திகா அல்ல என்றும் ஒரு சீன மாணவர் அதை அனுப்பினார் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கிருத்திகா மீண்டும் பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி ரூ.7 கோடி நஷ்டஈடு கேட்டு நியூயார்க் நகர நிர்வாகத்தின் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். மாணவி சார்பில் வக்கீல் ராஜீவ் பித்ரா மனு தாக்கல் செய்துள்ளார்.

மாணவி மீது போலீசார் கடுமையாக நடந்து கொண்டுள்ளனர் என்று குற்றம் சாட்டி உள்ளார். இந்திய மாணவி மீது நடவடிக்கை எடுத்த போலீசார் ஆபாச இ-மெயில் அனுப்பிய சீன மாணவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அவரை கைது செய்யவும் இல்லை. சஸ்பெண்டு செய்தும் உத்தரவிடவில்லை.

இது ஏன் என்று தனக்கு தெரியவில்லை என பாதிக்கப்பட்ட இந்திய மாணவி கிருத்திகா கூறினார். வெளிநாடுகளில் இந்திய மாணவர்களுக்கு ஏற்படும் கொடுமைகளுக்கு இது ஒரு உதாரணம். ஒரு தூதரக அதிகாரியின் மகளுக்கே இந்த கதி என்றால் சாதாரண மாணவர்களின் நிலை என்னவாகும் என அமெரிக்க மாணவர் ஒருவர் வேதனையுடன் குறிப்பிட்டார்.

சமச்சீர் கல்வி நிறுத்தம் : 8-ந்தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு.

சமச்சீர் கல்வி நிறுத்தம்: 8-ந்தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும்- தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு

சென்னையைச் சேர்ந்த வக்கீல் சியாம் சுந்தர் தமிழ் நாட்டில் சமச்சீர் கல்வியை தொடர்ந்து அமுல்படுத்த கேட்டு ஐகோர்ட்டில் ஒரு பொது நல வழக்கு தொடர்ந்து உள்ளார்.

வழக்கு மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வியை கொண்டு வருவது குறித்து முன்னாள் துணை வேந்தர் முத்துக்குமரன் தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது குறித்த சாத்தியக்கூறுகள் பற்றி கல்வியாளர்கள், பள்ளி நிர்வாகத்தினர், பெற்றோர், மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் கருத்து கேட்டு ஆய்வு நடத்தி அரசுக்கு 2007-ம் ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தது.

இந்த அறிக்கையை பரிசீலித்த அரசு சமச்சீர் கல்வியை அமுல்படுத்துவதாக அறிவித்தது. 2010-ல் இதற்காக சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தை ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு ஆகியவை உறுதி செய்தது. 2010-2011-ம் கல்வியாண்டில் 1-ம் வகுப்பு, 6-ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி அமுல்படுத்தப் பட்டது.

நடப்பு கல்வியாண்டு முதல் 10-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி அறிமுகம் செய்யப்பட்டு இதற்காக ரூ.200 கோடி வரை அரசு செலவிட்டுள்ளது. ரூ.9 கோடி மதிப்பில் பாடப்புத்த கங்கள் அச்சிடப்பட்டுள் ளன. இந்த நிலையில் தமிழகத் தில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பதாக அறிவித்து உள்ளது.

பழைய கல்விமுறையே தொடர அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுத்திருப்ப தாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கென புதிய நிபுணர் குழுவை அரசு அமைக்க இருப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவு சட்ட விரோதமானது. எந்த ஒரு நிபுணர் குழுவின் ஆலோசனையையும் பொறாமலேயே அமைச்ச ரவை முடிவு செய்திருப்பது பொதுநலனுக்கு எதிரானது.

தற்போதுள்ள பழைய கல்வி முறையே தொடரும் என அறிவித்து அதற்கான பாடப் புத்தகங்களை அச்சடிப்பதற் காக பள்ளிகளை திறப்பதை அரசு தள்ளி வைத்துள்ளது. தமிழக அரசின் இந்த முடிவு அரசியல் சார்பானது. கொள்கை முடிவு என்று கூறி அரசு இதில் இருந்து தப்பிக்க முடியாது. ஏனெனில் இந்த விஷயத்தில் மாணவர்கள் நலன், பொது மக்கள் நலன் உள்ளது. மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது.

எனவே தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வியை தொடர்ந்து அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு இன்று நீதிபதிகள் ராஜேஸ்வரன், வாசுகி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் கே. பாலு ஆஜராகி வாதிட்டார். தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன் ஆஜராகி, சட்டப்படிதான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அரசின் கொள்கை முடிவு இது. யாரையும் கட்டாயப்படுத்தி இந்த கல்வியைத்தான் படிக்க வேண்டும் என்று கூற முடியாது என்றார். சமச்சீர் கல்விக்கு ஆதரவாக மூத்த வக்கீல் பி. வில்சன் ஆஜராகி, தமிழக அரசு எடுத்த முடிவு சட்டத்தை மீறிய செயல் ஆகும். சுப்ரீம் கோர்ட்டுக்கு எதிராக செயல்படும் விதமாக அரசு முடிவு எடுத்துள்ளது என்றார்.

தமிழகஅரசுக்கு ஆதரவாக வக்கீல் கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி சமச்சீர் கல்விக்கான பாடத்திட்டம் தரமானதாக இல்லை என்பதற்காகவே அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இது குறித்து ஆராய்வதற்காக நிபுணர் குழு அமைக் கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த வழக்கில் அரசின் முடிவுக்கு ஆதரவாக வாதங்களை முன் வைக்க என்னையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதற்கு அனுமதி அளித்த நீதிபதிகள் கூறியதாவது:-

சமச்சீர் கல்விக்காக முந்தைய அரசு அதிக அளவில் செலவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது மக்களின் வரிப்பணம். நிபுணர் குழு பரிந்துரையின் அடிப்படை யில்தான் சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டுள்ளது. இதை எளிதாக உதாசீனப் படுத்த முடியாது. சட்டத்தை மீறும் வகையில் அமைச்சரவை சட்டத்தில் முடிவு எடுக்க முடியுமா? நீதிமன்ற தீர்ப்பை மீறும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க முடியுமா? என்ற கேள்விகளுக்கு அரசு ஜூன் 8-ந்தேதிக்குள் விரிவான பதில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.

வழக்கு விசாரணையும் ஜூன் 8-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ஹெல்மெட் அணியாவிட்டால் லைசென்ஸ் ரத்து சென்னையில் நாளை மறுநாள் முதல் அமல்.

சென்னையில் நாளை மறுநாள் முதல் அமல்: ஹெல்மெட் அணியாவிட்டால் லைசென்ஸ் ரத்து; போக்குவரத்து போலீஸ் எச்சரிக்கை

சென்னை மாநகர சாலைகளில் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.

மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களே அதிக அளவில் உயிரிழக்கின்றனர். சென்னையில் இந்த ஆண்டு 4 மாதங்களில் (ஜனவரி முதல் ஏப்ரல் வரை) மோட்டார்சைக்கிள் விபத்தில் 108 பேர் பலியாகியுள்ளனர். இதில் 102 பேர் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் தலையில் அடிபட்டு உயிரை இழந்துள்ளனர்.

இது போன்ற உயிரிழப்புகளை தடுக்க, கடந்த ஆட்சியில் கட்டாய ஹெல்மெட் திட்டம் கொண்டு வரப்பட்டது. போக்குவரத்து போலீசார் அதிரடி வேட்டையில் ஈடுபட்டு ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களை பிடித்தனர். அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

இதனால் சென்னையில் ஹெல்மெட் விற்பனையும் சூடு பிடித்திருந்தது. மோட்டார் சைக்கிளில் சென்றவர்களில் பெரும்பாலானோர் ஹெல்மெட் அணிந்து சென்றதை காண முடிந்தது. பல இடங்களில் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் விபத்தில் சிக்கிய போதும் தலையில் அடிபடாமல் உயிர் பிழைத்தனர்.

இருப்பினும் ஹெல்மெட் வேட்டையில் போலீசாரின் வேகம் போகப்போக குறைந்தது. பெயரளவுக்கு மட்டுமே வழக்குகள் போடப்பட்டன. இருப்பினும் மோட்டார் சைக்கிளில் செல்லும் பலர் ஹெல்மெட்டை தலையில் அணியாவிட்டாலும், மோட்டார் சைக்கிளில் அவை தொங்க விட்டு செல்வதை காண முடிகிறது.

போலீசாரின் கெடுபிடி குறைந்ததால் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களின் எண்ணிக்கையும் குறைய தொடங்கியது. இதனால் ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்தில் சிக்கி, உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் போக்குவரத்து கூடுதல் கமிஷனராக பொறுப்பேற்றுள்ள சஞ்சய் அரோரா, ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை பிடிக்க உத்தரவிட்டுள்ளார். இது நாளை மறுநாள் (28-ந் தேதி) முதல் அமலுக்கு வருகிறது.

ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை பிடிக்க 300-க்கும் மேற்பட்ட தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா கூறியதாவது:-

வருகிற 28-ந்தேதி முதல் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். ஹெல்மெட் அணியாமல் செல்வதாலே 95 சதவீதம் பேர் உயிரிழக்கின்றனர். ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி வருகிறோம்.

ஹெல்மெட் அணியாமல் செல்வதால் குறைவான தொகையே (50 ரூபாய்) அபராதமாக வசூலிக்கப்படுகிறது. 50 ரூபாய்தானே கொடுத்து விட்டு சென்று விடலாம் என்று பொதுமக்கள் நினைக்கக்கூடாது. ஹெல்மெட் அணிவதால் விலைமதிப்பற்ற உயிர் காப்பாற்றப்படுகிறது என்பதை அவர்கள் உணர வேண்டும்.

தொடர்ச்சியாக ஹெல்மெட் அணியாமல் போலீசில் சிக்குபவர்களின் லைசென்சை ரத்து செய்யவும் அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

டெல்லி அருகே குடியிருப்புகள் மீது விமானம் விழுந்தது எப்படி?

டெல்லி அருகே பெண்கள்-டாக்டர்கள் உள்பட 10 பேர் பலி: குடியிருப்புகள் மீது விமானம் விழுந்தது எப்படி?; விசாரணை நடத்த உத்தரவு

பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து டெல்லிக்கு நோயாளி ஒருவரை ஏற்றிக் கொண்டு தனியார் ஆம்புலன்ஸ் விமானம் நேற்று இரவு 9 மணிக்கு புறப்பட்டது. விமானத்தில் 2 பைலட்டுகள், 2 டாக்டர்கள், 2 மருத்துவ உதவியாளர்கள் இருந்தனர்.

இரவு 10.35 மணிக்கு விமானம் டெல்லியை நெருங்கிக்கொண்டு இருந்தபோது திடீரென்று தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடன் தகவல் தொடர்பு துண்டிக்கப் பட்டது. அடுத்த நிமிடமே விமானம் டெல்லி அருகே அரியானாவில் உள்ள பரீதாபாத்தில் குடியிருப்புகள் மீது விழுந்து நொறுங்கியது.

அப்போது அந்தப்பகுதியில் பயங்கர சத்தம் கேட்டது. குடியிருப்புவாசிகள் பீதியில் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். அங்கு விமானம் விழுந்து எரிந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே தீயணைப்பு படையினரும் போலீசாரும் விரைந்து வந்தனர். அங்கு ஏராளமான மக்கள் கூடி விட்டனர். மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் தீயை அணைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

விமானத்தின் பாகங்கள் குடியிருப்புகள் மீது ஆங்காங்கே விழுந்து சிதறிக் கிடந்தது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 7 பேரும், குடியிருப்புகளில் இருந்த 3 பெண்களும் கருகி பலியானார்கள். மீட்பு படையினர் அவர்களது உடல்களை மீட்டனர்.

மோசமான வானிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக தெரிய வந்துள்ளது. விமானம் சென்றபோது அந்தப்பகுதியில் புழுதிப்புயல் வீசியது. இதில் விமானம் சிக்கியதால் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு குடியிருப்புகள் மீது விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

விமான விபத்து குறித்து விசாரணைக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. உடனடியாக விமான போக்குவரத்து இன்ஸ்பெக்டர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

விபத்துக்குள்ளான விமானம் ஒரு என்ஜின் கொண்ட சிறியரக ஆம்புலன்ஸ் விமானம் ஆகும். டெல்லி ஜவகர் நகரைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமானது.

விபத்து குறித்து விமான போக்குவரத்து அதிகாரி கூறுகையில், விமானம் டெல்லியை நெருங்கிக் கொண்டு இருந்தபோது திடீரென்று தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. ராடாரிலும் தெரியவில்லை. அதற்குள் விமானம் விழுந்து நொறுங்கி விட்டது என்றார்.

விமான விபத்து நடந்த இடத்தில் தெருக்களில் விமானத்தின் பாகங்கள் சிதறி கிடந்தன. என்ஜின் ஒரு பக்கம், இறக்கை ஒரு பக்கம் தனித்தனியாக விழுந்து எரிந்து கொண்டு இருந்தது. விமானத்தில் கொண்டு சென்ற நோயாளிக்கான ஆக்ஸிஜன் சிலிண்டர், ஐஸ் பாக்ஸ், மருத்துவ உபகரணங்களும் சிதறிக்கிடந்தன.

விபத்து நடந்த நேரம் இரவு என்பதால் மக்கள் தூங்கிக்கொண்டு இருந்தனர். அவர்கள் விமானம் விழுந்து நொறுங்கியதைப் பார்த்து ஏதோ விபரீதம் நடந்து விட்டதை உணர்ந்தனர்.

இதுபற்றி குடியிருப்பு வாசி ரோகன் கூறுகையில், நான் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. பெரிய அளவில் தீப்பிழம்பும் காணப்பட்டது. உடனே நான் வீட்டை விட்டு வெளியேறி வந்து பார்த்த போது விமானம் நொறுங்கி கிடந்தது. அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டேன்.உடனே அருகில் இருந்தவர்களை அழைத்துக் கொண்டு தீயை அணைப்பதில் ஈடுபட்டோம் என்றார்.

சம்பவத்தை நேரில் பார்த்த லதாதேவி என்ற பெண் கூறும்போது, நான் தூங்கிக்கொண்டு இருந்த போது பயங்கர சத்தம் கேட்டது. ஏதோ குண்டு வெடித்து விட்டது என்று நினைத்தேன். அப்போது பெரிய பொருள் ஒன்று வீட்டின் மீது விழுந்தது. நான் அதிர்ச்சி அடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தேன் என்றார்.

விமானம் விழுந்ததில் குடியிருப்புவாசிகள் 3 பேர் தீக்காயத்துடன் தப்பினார்கள். காயம் அடைந்த ஓம்கார் என்பவர் கூறுகையில், நான் விமானம் விழுந்த கட்டிடத்தில் சிக்கிக் கொண்டேன். கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்தன. மக்கள் வீட்டு பால்கனியில் நின்று கொண்டு தவித்தனர். அவர்களைச் சுற்றி தீ எரிந்து கொண்டு இருந்தது. நான் முதல் மாடியில் இருந்து வெளியே வர முடியாத அளவுக்கு தீ எரிந்து கொண்டு இருந்ததாக தெரிவித்தார்.

விமானம் விழுந்ததில் பலியான குடியிருப்புவாசிகள் பெயர் வேதவதி, அவரது மகள் சரிதா (19), மருமகள் ராணி (20) என தெரிய வந்தது. ஹர்விந்தர், சதீஷ், ஓம்கார் ஆகியோர் காயம் அடைந்தனர். பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு அங்கு மீட்பு பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. விமான விபத்தில் பலியான 3 பெண்கள் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் உதவி வழங்குவதாக அரியானா அரசு அறிவித்துள்ளது.

ரூ.17 ஆயிரத்தை நெருங்குகிறது : தங்கம் விலை தொடர்ந்து உயர்வு.

ரூ.17 ஆயிரத்தை நெருங்குகிறது: தங்கம் விலை தொடர்ந்து உயர்வு- 1 பவுன் ரூ.16,984

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, தங்கத்தின் மீதான முதலீடு, அமெரிக்க டாலர் மதிப்பு ஆகியவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று தங்கம் விலை பவு னுக்கு ரூ.16 அதிகரித்தது.

இதனால் சவரன் ரூ.17 ஆயிரத்தை நெருங்குகிறது. இன்று காலை 1 கிராம் ரூ.2,123க்கும், ஒரு பவுன் ரூ.16,984க்கும் விற்கப்பட்டது. நேற்று மாலை ஒரு பவுன் ரூ.16,968 ஆக இருந்தது. இந்த விலை உயர்வு நடுத்தர மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.62.35 ஆகும்.

மெட்ரிக் பள்ளிகளை ஜூன் 15-க்கு முன் திறந்தால் கடும் நடவடிக்கை ! - தமிழக அரசு.

தமிழக அரசின் உத்தரவை மீறி, வரும் ஜூன் 15-க்கு முன் தனியார் பள்ளிகளைத் திறந்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

மாநில அரசு பாடத் திட்டம், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஒரியண்டல் உள்ளிட்ட கல்வி முறைகளை ஒருங்கிணைத்து சமச்சீர் கல்வி முறையை கடந்த ஆண்டு அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதில் முதல் கட்டமாக 1-ம் வகுப்பு முதல் 6-ம் வகுப்புக்கு வரை மட்டும் சமச்சீர் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. வரும் கல்வி ஆண்டான 2011-2012-ல் எஸ்.எஸ்.எல்.சி.வரை உள்ள அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனவே கோடை விடுமுறை முடிந்து 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக இருந்தது.

புதிய அமைச்சரவை பொறுப்பேற்ற பின்னர் சமச்சீர் கல்வி தரமானதாக இல்லை என்றும் எனவே இந்த ஆண்டு பழைய பாட திட்டங்களை தொடரலாம் என்றும் அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது.

பாடப் புத்தங்களைத் தயாரிக்க கால அவகாசம் வேண்டும் என்பதால் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகளை ஜூன் 15-ந்தேதி திறக்கலாம் என்றும் அரசு அறிவித்தது.

இந்த நிலையில் ஒரு சில மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் தங்களுக்கு எந்தவித உத்தரவும் வரவில்லை என்று கூறி ஜூன் 1-ம் தேதி பள்ளிகளைத் திறப்பதற்கான ஏற்பாடுகளில் இறங்கி உள்ளன. இதையறிந்த மெட்ரிக் ஆய்வாளர், முதன்மை கல்வி அலுவலர்கள் அனைத்து மெட்ரிக்குலேஷன் மற்றும் சுயநிதி பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.

அதில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 15-ந்தேதிதான் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

அரசு அறிவிப்புக்கு முன்பு விதி மீறி திறக்கப்படும் பள்ளிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசின் சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் காலில் விழுந்து நன்றி தெரிவித்த எம்.எல்.ஏ.

பொதுமக்கள் காலில் விழுந்து  நன்றி தெரிவித்த எம்.எல்.ஏ.

சேலம் மேற்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏவாக பொறுப்பேற்று இன்று காலை சேலம் வந்தார். அவர் ஜாகிர்ரெட்டிப்பட்டி பகுதியில் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது அவர் ஓட்டு போட்ட வாக்காளர்களின் காலில் விழுந்து நன்றி தெரிவித்தார். பின்னர் ஜி.வெங்கடாஜலம் நன்றி தெரிவித்து பேசியதாவது:-

என்னை அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து இருக்கிறீர்கள். இதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகள் எது என அறிந்து அவற்றை தீர்த்து வைக்க பாடுபடுவேன். பொதுமக்கள் எப்போதும் என்னை எந்த நேரத்திலும் சந்தித்து குறைகளை கூறலாம். இந்த தொகுதி ஒரு முன்மாதிரி தொகுதியாக மாற அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேற்கண்ட எம்.எல்.ஏ. ஜி.வெங்கடாசலமும், அவரது மனைவியும் தலா 5வருடங்கள் வீதம் 10வருடங்கள் கவுன்சிலர் பதவி வகித்தவர்கள்.

அந்த காலகட்டத்தில் இவர்கள் கவுன்சிலராக பதவி வகித்த வார்டு தொடர்பான உதவிகளுக்கு பொதுமக்கள் அணுகியபோது, ஏற்பட்ட வாக்குவாதத்தில், நீங்கள் எனக்கா ஓட்டு போட்டீர்கள் இரட்டை இலைக்குதானே போட்டீர்கள் என்று கூறி மக்களுக்கு எதுவும் செய்யாமல் தப்பித்தவர்தான் இந்த ஜி.வெங்கடாசலம்

இதன் விளைவாக இவர் ஓட்டு கேட்கப்போனபோது பல இடங்களில் கருப்பு கொடி ஏற்றிவைத்து தங்கள் எதிர்ப்பை அப்பகுதி மக்கள் காட்டினர். என்பது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் : மன்மோகன்சிங்...

பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்: மாநாட்டில் பிரகடனம்

ஆப்பிரிக்க நாடுகளான எத்தியோப்பியா மற்றும் தான்சானியா ஆகிய நாடுகளில், இந்திய பிரதமர் மன்மோகன்சிங் 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.

எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபா நகரில் 2 நாட்கள் நடைபெற்ற இந்தியா-ஆப்பிரிக்கா நாடுகள் கூட்டமைப்பு மாநாட்டில் மன்மோகன்சிங் உரையாற்றினார்.

மாநாட்டுக்குப்பின் கூட்டமைப்பு சார்பில் 8 பக்க பிரகடனம் வெளியிடப்பட்டது. அதில், லிபியாவில் போர் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட்டு, மோதலில் ஈடுபட்டுவரும் அனைத்து தரப்பினரும், அமைதியான வழிமுறைகளில் பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண முன்வர வேண்டும்.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு கடும் கண்டனத்தை மாநாடு தெரிவித்துக் கொள்கிறது. கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகள் தங்கள் பகுதியில் தீவிரவாதிகள் தளம் அமைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் உள்பட பல முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

ஐரோப்பிய நாடுகளில் விமான போக்குவரத்து சீரடைந்தது : எரிமலையால் ஏற்பட்ட பாதிப்பு நீங்கியது .

ஐரோப்பிய நாடுகளில் விமான போக்குவரத்து சீரடைந்தது: எரிமலை சாம்பலால் ஏற்பட்ட பாதிப்பு நீங்கியது

இங்கிலாந்து அருகே ஐஸ்லாந்து நாட்டில் உள்ள கிரீம்ஸ்வோடின் என்ற எரிமலை கடந்த சில நாட்களுக்கு முன் வெடித்தது. இதன் காரணமாக அதன் உச்சியில் இருந்து நெருப்பும், சாம்பலும் வெளியேறியது.

எரிமலையின் சாம்பல் இங்கிலாந்தில் உள்ள ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளின் வானத்தில் பரவியது. எரிமலை சாம்பல் விமானங்களின் என்ஜினில் புகுந்தால் அவை செயல் இழக்கும் ஆபத்து உள்ளதால், நேற்று முன்தினம் இங்கிலாந்திலும், நார்வே, டென்மார்க் உள்ளிட்ட வடக்கு ஐரோப்பிய நாடுகளிலும் 500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

ஜெர்மனியில் பெர்லின், ஹம்பெர்க், பெர்மன் ஆகிய நகரங்களில் உள்ள விமான நிலையங்கள் நேற்று பல மணி நேரம் மூடப்பட்டன. ஜெர்மனியில் நேற்று சுமார் 700 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. விமான போக்குவரத்து கட்டுப்பாடு மையம் பெர்லின் நகரத்துக்கு வரும் மற்றும் அங்கு இருந்து கிளம்பும் அனைத்து விமானங்களையும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இந்த நடவடிக்கைக்கு ஜெர்மனியில் எதிர்ப்பு கிளம்பியது.

இது அளவுக்கு அதிகமான எதிர்விளைவு என்றும், அந்த அளவுக்கு நிலைமை மோசமாகவில்லை என்றும் எதிர்ப்பாளர்கள் தெரிவித்தனர். எரிமலை சாம்பல் வடக்கு நோக்கி நகர தொடங்கியதால் பிரிட்டிஷ் ஏர்வேஸ் உள்ளிட்ட சில விமான போக்குவரத்து நிறுவனங்கள் தங்கள் விமானங்களை ரத்து செய்தன. பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் லண்டனில் இருந்து ஹம்பர்க் செல்லும் ஒரு விமானத் தையும், ஹம்பர்க்கில் இருந்து லண்டன் வரும் 2 விமானங்களையும் ரத்து செய்தது.

இதற்கிடையே, கிரீம்ஸ்வோடின் எரிமலையின் சீற்றம் தணிந்தது. அதில் இருந்து சாம்பல் வெளியேறுவது நின்று போனது. இதனால் வானம் தெளிவானதை தொடர்ந்து, இங்கிலாந்து விமானம் ஒன்று சோதனை ஓட்டமாக பாதிக்கப்பட்ட பகுதியில் செலுத்தப்பட்டது. அது எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் திரும்பியது. இதைத்தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் விமான போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பி சீரடைந்தது.

ஜெர்மனியில் பெர்லின் ஹம்பர்க், பெர்மன் ஆகிய நகரங்களில் மூடப்பட்ட விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டு விமான போக்குவரத்து தொடங்கியது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து மும்பை வரும் ஏர் இந்தியா விமானம் நேற்று காலை அங்கிருந்து புறப்பட்டது.

இதேபோல், டெல்லியில் இருந்து லண்டன் செல்லும் 2 விமானங்களும் புறப்பட்டு சென்றன. கடந்த ஆண்டு இதுபோல் எரிமலை வெடித்ததால் ஒரு வாரத்துக்கு மேல் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் உலக விமானப் போக்குவரத்து தொழிலுக்கு அப்போது ரூ.18 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது.

தவறான குற்றசாட்டில் இந்திய தூதரக துணை கவுன்சிலர் மகள் அமெரிக்காவில் கைது .

அமெரிக்காவில் இந்திய தூதரக துணை கவுன்சிலர் மகள் தவறான குற்றசாட்டில் கைது

அமெரிக்காவில் இந்திய தூதரகத்தில் துணை கவுன்சிலராக இருப்பவர் தேபாசிஷ் பிஸ்வாஸ். இவரது மகள் கிருத்திகா. இவர் மேற்படிப்புக்காக நியூயார்க் சென்றார். அங்குள்ள குயின்ஸ் பள்ளியில் கணிதம் பாடப்பிரிவில் சேர்ந்தார்.

ஆனால் கிருத்திகா, அவரது பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளியைப் பற்றி தரக்குறைவான இ மெயில் அனுப்பியதாக புகார் எழுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து கிருத்திகா பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இது தொடர்பாக கிருத்திகா போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரணைக்காக 24 மணி நேரம் சிறையில் அடைக்கப்பட்டார்.பின்னர் விடுவிக்கப்பட்டார். மேலும் சிறையில் துன்புறுத்தியதாக கிருத்திகா தெரிவித்தார்.

இது தொடர்ப்பாக கடந்த 6-ந் தேதி நியூயார்க் நீதிமன்றத்தில் கிருத்திகா பிஸ்வாஸ் வக்கீல் ரவி பத்ரா மூலம் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுபற்றி வக்கீல் ரவி பத்ரா தெரிவித்துள்ள செய்தியில் இந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்துக்குப் பின்னர் கிருத்திகாவுக்கு பள்ளியில் இருந்து ஒரு இ மெயில் வந்தது. அதில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் தவறாக நடந்தது என்றும் அவர் வழக்கம் போல் பள்ளிக்கு வரலாம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் உண்மையான குற்றவாளி பற்றி எந்த ஒரு தகவலும் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில் தவறு செய்யவில்லை என்பதற்கான ஆதாரங்களை அளித்தும், முறையான விசாரணை மேற்கொள்ளாமல் அவர் மீது குற்றம் சுமத்தி பள்ளியில் இருந்து விலக்கி, சிறையில் வைத்தற்காக பள்ளியின் மீதுவழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

டெல்லி அருகே விமானம் விழுந்து நொறுங்கியது 10 பேர் பலி.

டெல்லி அருகே விமானம் விழுந்து நொறுங்கியது: 7 பேர் பலி

டெல்லி அருகே வீட்டின் மீது ஆம்புலன்ஸ் விமானம் மோதி விபத்துக்கு உள்ளானதில், அதில் பயணம் செய்த விமானப் பணியாளர், நோயாளி உட்பட 10 பேர் பலியாயினர். 2 பேர் காயமடைந்துள்ளனர்.

பீகார், பாட்னாவிலிருந்து 25.05.2011 அன்று டெல்லிக்கு சிறிய ரக ஆம்புலன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. அதில், விமானிகள் உட்பட எட்டு பேர் பயணம் செய்தனர். இந்நிலையில், இரவு 10.45 மணியளவில் பரிதாபாத் அருகே விமானம் சென்றபோது, பலத்த சூறைக் காற்று வீசியதாகக் கூறப்படுகிறது.

அப்போது, கட்டுப்பாட்டை இழந்த விமானம், அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு இரண்டு மாடி வீட்டின் மீது விழுந்து நொறுங்கியது. அப்போது அந்த வீட்டில் 10 பேர் வரை இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் 10 பேர் இறந்து விட்டதாகவும், அவர்களது உடல் மீட்கப் பட்டதாகவும் பரிதாபாத் சப் டிவிஷனல் மாஜீஸ்திரேட் கூறினார். 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்த அரியானா போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடம் சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டர்.

இந்த விமானத்தில் பாட்னாவில் சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த ராகுல் ராய் என்பவர் மருத்துவர்களுடன் டெல்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது இந்த விபத்து ஏற்பட்டது.

கோயில் திருவிழாவில் பெட்ரோல் குண்டுவீச்சு.


மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி அருகேயுள்ள கே.சென்னம்பட்டியில் கடந்த இரு நாட்களாக மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வந்தது. விழாவின் இறுதி நாளான நேற்று இரவு கோயிலின் எதிரில் உள்ள பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் நாடகம் நடந்தது.

நாடகம் முடிந்ததும் ஒரு தரப்பைச் சேர்ந்த 20 பேர் தங்களது தெருவில் உள்ள ஒரு மணல் மேட்டில் படுத்து அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 2.30 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் மணல் மேட்டில் தூங்கிக் கொண்டிருந்த வர்கள் மீது திடீரென பெட்ரோல் குண்டை வீசினர்.

சாலையில் விழுந்த குண்டு வெடித்துச் சிதறியதும் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறி அடித்து எழுந்தனர். இதையடுத்து குண்டு வீசிய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகினர்.

குண்டு வெடித்த சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்களும் சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர்.

அப்போது ரோட்டில் சிதறியிருந்த பெட்ரோல் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. ரோடு முழுவதும் கண்ணாடித் துகள்கள் சிதறிக் கிடந்தன.

பெட்ரோல் குண்டு தவறுதலாக சாலையில் விழுந்ததால் 20 பேரும் உயிர் தப்பினர்.

இதுகுறித்து கள்ளிக்குடி ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் செயலாளர் சவுரியப்பன் கள்ளிக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

கள்ளிக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மதுரை மாவட்ட எஸ்பி அஸ்ரா கார்க் அதிகாலையிலேயே சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். இச்சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இந்த கிராமத்தில் ஏற்கனவே இரு தரப்பினரிடையே அவ்வப்போது பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இங்கு பட்டாசு தயாரிக்கும் தொழிலில் ஒரு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். அந்த தொழில் ஈடுபட்டவர்களுக்கும் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கலாமா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் திருமங்கலம் அருகே வில்லூர் கிராமத்தில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதைத் தடுக்கச் சென்ற எஸ்.பி.,யை ஒரு கும்பல் தாக்க முயன்றதும் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவமும் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து இன்று அதிகாலை திருமங்கலம் அருகே மற்றொரு கிராமத்திலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.

இதனால் மோதல் சூழ்நிலை நிலவும் கிராமங்களில் போலீசார் ரோந்தை தீவிரப்படுத்தவும், கண்காணிப்பு பணியை மேற்கொள்ளவும் எஸ்.பி., ஆஸ்ரா கார்க் உத்தரவிட்டுள்ளார்.

பாகிஸ்தான் 2-வது கடற்படை தளம் அமைப்பதற்கு உதவ சீனா மறுப்பு.

பாகிஸ்தான் 2-வது கடற்படை தளம் அமைப்பதற்கு உதவ சீனா மறுப்பு


பாகிஸ்தானில் 2-வது கடற்படை தளம் அமைப்பதற்கு சீனா உதவ வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவ மந்திரிஅகமது முக்தார் கேட்டுக்கொண்டார். இந்த கோரிக்கையை ஏற்க சீனா மறுத்து விட்டது.

பாகிஸ்தான் கடற்படை தளத்துக்குள் தலீபான்கள் புகுந்து தாக்குதல் நடத்தியதன் எதிரொலியாக தான் இவ்வாறு மறுப்பு கூறப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. பாகிஸ்தானில் கராச்சி நகரில் ஒரு கடற்படை தளம் உள்ளது. இதுதவிர கவ்தார் என்ற துறைமுகத்தில் இன்னொரு கடற்படை தளம் அமைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் சீனாவை வலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சோமாலியா கொள்ளையருக்கு ரூ.10 கோடி இந்தியா வழங்கியது.

கடத்தப்பட்ட கப்பலை மீட்க  சோமாலியா கொள்ளையருக்கு  ரூ.10 கோடி பிணைத்தொகை  இந்தியா வழங்கியது

கடத்தப்பட்ட கப்பலை மீட்க சோமாலியா கொள்ளையருக்கு இந்தியா ரூ.10 கோடி பிணைத்தொகை வழங்கியது. சர கப்பல் கடத்தல்க்குஎம்.வி.சூயஸ் என்ற இந்திய சரக்கு கப்பல் கடந்த ஆண்டு ஆகஸ்டு 2-ந்தேதி ஏடன் வளைகுடா கடல் பகுதியில் சோமாலியா கொள்ளையர்களால் கடத்தப்பட்டது.

அதில் 53 இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் இருந்தனர். பேச்சு வார்த்தைக்குப் பிறகு, 6 இந்தியர்கள் உள் பட 22 ஊழியர்களை பிணைக்கைதிகளாக வைத்துக்கொண்டு மற்றவர்களை சோமாலியா கடற் கொள்ளையர்கள் விடுவித்தனர். இவர்களை விடுவிக்க வேண்டுமானால் இந்திய அரசால் கைது செய்யப்பட்ட சோமாலிய கொள்ளையர்களை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையே, கடத்தப்பட்ட கொள்ளையர்களிடம் பிணைக் கைதிகளாக இருக்கும் 6 பேரையும் மீட்க வேண்டும் என அவர்களது குடும்பத்தினரும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று சோமாலியா கொள்ளையர்களுக்கு மத்திய அரசு ரூ.10 கோடி பிணைத் தொகை வழங்கியதாக தெரிகிறது. இதை தொடர்ந்து எம்.வி.சூயஸ் கப்பலும், அதில் உள்ள பிணைக் கைதிகளும் விரைவில் விடுவிக்கப்பட உள்ளனர்.