Wednesday, August 3, 2011

2ஜி ஊழல் : ராசாவுக்கு ஒரு பைசாகூட கொடுத்ததில்லை - ரத்தன் டாடா மறுப்பு.ராசாவின் தொகுதியான பெரம்பலூரில் மருத்துவமனை அமைக்க டாடா குழுமத்தில் இருந்து ரூ.20 கோடி பெறப்பட்டதாகக் கூறப்பட்டது.

செவ்வாய்க்கிழமை அன்று சிறையில் உள்ள ஸ்வான் டெலிகாமின் ஷாகித் பால்வா, தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைக்கு ரூ.20கோடி டாடா கொடுத்ததாகக் கூறியிருந்தார்.

2ஜி ஊழல் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ராசா எழுதிய கடிதம் குறித்து பதிலளிக்கையில் டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா தான் ஒரு பைசாகூட ராசாவுக்கு கொடுத்ததில்லை என்று கூறியுள்ளார்.

நிறுவனத்தின் நிர்வாகக்குழுக் கூட்டத்தில் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். நீதிமன்றத்தில் ஒருவர் என்னவேண்டுமானாலும் கூறிவிட்டுச் சென்றுவிடலாம்; அதற்காக அவமதிப்பு வழக்கெல்லாம் போட முடியாது.

ராசாவுக்காக ஒரு பைசாகூடக் கொடுத்ததில்லை. மருத்துவமனைக்காகவே அந்தப் பணம் கேட்கப்பட்டிருந்தது. ஆனால், மருத்துவமனை கட்டப்படவில்லை; உபகரணங்கள் எதுவும் வாங்கப்படவில்லை... எனவே பணம் எதுவும் கொடுக்கப்படவில்லை என்றார் அவர்.

நீதிமன்றத்தில் பிரச்னையை திசை திருப்புவதற்காக இவ்வாறு சொல்லி இருக்கிறார்கள் என்றார் டாடா.

இங்கிலாந்தில் வாலிபருக்கு பிளாஸ்டிக் இருதயம் பொருத்தி டாக்டர்கள் சாதனை.

இங்கிலாந்தில் வாலிபருக்கு பிளாஸ்டிக் இருதயம் பொருத்தி டாக்டர்கள் சாதனை

இங்கிலாந்தை சேர்ந்தவர் மாத்யூ கிரீன் வயது 40. இவர் இருதய நோயினால் மிகவும் அவதிப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை லண்டனில் உள்ள பாப்ஓர்த் என்ற ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரை டாக்டர் ஸ்டீவன் சூய் தலைமையிலான டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அதில் அவரது இருதயம் முழுவதும் பாதிப்பு அடைந்து இருந்தது தெரிய வந்தது.

மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் அவருக்கு உடனடியாக மாற்று இருதயம் பொருத்த வேண்டிய கட்டாய சூழ்நிலையை உணர்ந்தனர். உடனடியாக அவருக்கு பொருத்தமான மாற்று இருதயம் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டது.

இதை தொடர்ந்து அவருக்கு பிளாஸ்டிக் மாற்று இருதயம் பொருத்தினர். அதற்கான ஆபரேசன் சுமார் 6 மணி நேரம் நடந்தது. ஆபரேசன் வெற்றிகரமாக நடந்ததாகவும், அவர் விரைவில் வீடு திரும்புவார் எனவும் டாக்டர் ஸ்டீவன் சூய் தெரிவித்தார்.

விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசே பொறுப்பு : ஜெயலலிதா குற்றச்சாட்டு.

விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசே பொறுப்பு: ஜெயலலிதா குற்றச்சாட்டு

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் பொறுப்பு மத்திய அரசுக்கே உள்ளது என தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் புதுப்பிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள் அறையை திறந்து வைத்த பின் நிருபர்களிடம் பேசிய அவர், நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் பொறுப்பு மத்திய அரசிடமே உள்ளதாக தெரிவித்தார்.

மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் பொது மக்களுக்கு பயனளிக்கும் வகையில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை தான் எடுத்து வருவதாகவும் கூறினார்.

நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடைபெற்று வரும நிலையில், அவரது இந்தக் குற்றச்சாட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ராஜபக்சேவை கடுமையாக தண்டிக்க வேண்டும் - நடிகை அஞ்சலி.தமிழர்களை ஆயிரக்கணக்கில் கொடூரமாகக் கொன்ற கொடியவன் ராஜபக்சேவுக்கு தண்டனை தரவேண்டும். அதற்கான இயக்கத்துக்கு என் ஆதரவு உண்டு. நானும் இதற்காக கையெழுத்திட்டுள்ளேன், என்று இளம் நடிகை அஞ்சலி கூறினார்.

ஈழத்தமிழர்களை படுகொலை செய்தமைக்காக ராஜபக்சேவுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.

இதற்காக நடிகர்-நடிகைகளிடமும் கையெழுத்து வாங்கி வருகின்றனர் விடுதலைச் சிறுத்தைகள் நிர்வாகிகள். நடிகர்கள் சத்யராஜ், பரத், பார்த்திபன், மணிவண்ணன், சீனு, நடிகை ரோஜா, இயக்குநர்கள் பாரதிராஜா, டி.ராஜேந்தர், வேலு பிரபாகரன், ஆர்.கே.செல்வமணி என ஏராளமானோர் கையெழுத்திட்டனர்.

தற்போது நடிகை அஞ்சலியும் கையெழுத்திட்டார். விடுதலை சிறுத்தைகள் இயக்க செய்தி தொடர்பாளர் வன்னி அரசு தலைமையிலான நிர்வாகிகள் நேரில் சென்று கையெழுத்து வாங்கினர். இயக்குனர் மு.களஞ்சியத்திடமும் கையெழுத்து வாங்கப்பட்டது.

இதுகுறித்து நடிகை அஞ்சலி கூறுகையில், "இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். அங்கு சண்டை நடந்த போது இந்த செய்திகளை படித்து தெரிந்து கொண்டேன். ஆனால் சமீபத்தில் டி.வி.யில் நேரடியாகவே அந்த படுகொலைகளை பார்த்து அதிர்ச்சியானேன். பெண்கள், சிறுவர்கள், வயதானவர்களை கொன்று குவித்திருந்தனர். எங்கும் ஒரே பிண மயம். அதைப் பார்த்து அழுதேன். சாப்பிடக் கூட பிடிக்கவில்லை.

ஈழத் தமிழ் இனத்தை இப்படி கொன்று குவித்த கொடியவன் ராஜபக்சேவுக்கு கடும் தண்டனை வழங்க விடுதலை சிறுத்தைகள் இயக்கத் தலைவர் திருமாவளவன் கையெழுத்து இயக்கம் நடத்துவது பாராட்டுக்குரியது. இதற்கு என் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் நானும் அதில் கையெழுத்திட்டுள்ளேன்," என்றார்.

தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் ஒரு நடிகைக்கும் இப்படிக் கூற தைரியம் இல்லை. ஆனால் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட அஞ்சலி ராஜபக்சேவை கடுமையாக கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரூ.2500க்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் : மதுரை சரவணா ஆஸ்பத்திரியில் 03-08-2011 முதல் தொடக்கம்.

குறைந்த கட்டணத்தில் நோயாளிகளுக்கு சேவை: மதுரை சரவணா ஆஸ்பத்திரியில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் சென்டர் நாளை முதல் தொடக்கம்

குறைந்த கட்டணத்தில் நோயாளிகளுக்கு சேவை செய்யும் நோக்கத்தில் சரவணா ஆஸ்பத்திரியில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் சென்டர் திறக்கப்படுகிறது.

இதுகுறித்து மதுரை நரிமேட்டில் உள்ள சரவணா ஆஸ்பத்திரி நிறுவனர் டாக்டர் பி.சரவணன் கூறியதாவது:-

மதுரை சரவணா ஆஸ்பத்திரி பலதரப்பட்ட நோயாளிகளுக்கு சேவை நோக்கத்துடன் மருத்துவம் செய்து வருகிறது. இதன் மூலம் ஏழை- எளிய மக்கள் பலன் அடைந்து வருகிறார்கள். தென்தமிழகத்தில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி குறைவாகவே உள்ளது. அதனை பூர்த்தி செய்யும் விதத்தில் மதுரை சரவணா ஆஸ்பத்திரியில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது.

மருத்துவ உலகில் தசைப் பகுதிகள், தலை, தண்டுவடம் மற்றும் முக்கிய பகுதிகளில் உள்ள நோய்களை கண்டறிய எம்.ஆர்.ஐ. ஸ்கேன் அவசியமானதாகும். அதற்காக நோயாளிகள் ஆஸ்பத்திரியில் இருந்து ஸ்கேன் சென்டருக்கு அழைத்து செல்வதில் காலவிரையம் மற்றும் பணச்செலவுகளும் அதிகரிக்கிறது. இதனை கருத்தில் கொண்டு இந்த ஸ்கேன் சென்டர் திறக்கப்படுகிறது.

இங்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க நோயாளிகளிடம் ரூ.2500 மட்டுமே வசூலிக்கப்படும். இது மிக மிக குறைந்த கட்டணம் ஆகும். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்கள் மட்டுமின்றி மற்ற நோயாளிகளும் குறைந்த கட்டணத்தில் ஸ்கேன் எடுத்து கொள்ளலாம். டெலிமெடிசன் மூலம் உடனுக்குடன் ஸ்கேன் ரிப்போர்ட் வழங்கப்படும்.

நோயாளிகள் வெகுநேரம் காத்திருக்க தேவையில்லை. இவ்வாறு டாக்டர் பி.சரவணன் கூறினார்.

எம்.ஆர்.ஐ. ஸ்கேன் சென்டர் திறப்பு விழா சரவணா ஆஸ்பத்திரியில் புதன்கிழமை 03-08-2100 காலை 9.30 மணிக்கு நடக்கிறது.

டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அவலம் : கழிவறையில் வசிக்கும் நோயாளிகள்.

டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அவலம்: கழிவறையில் வசிக்கும் நோயாளிகள்

நாட்டிலேயே மிகப்பெரிய ஆஸ்பத்திரியான எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் இடவசதி இல்லாததால் நோயாளிகளும், நோயாளிகளின் உதவியாளர்களும் கழிப்பறையில் தங்கும் அவலநிலை உள்ளது.

இந்தியாவிலேயே மிகப் பெரிய ஆஸ்பத்திரி டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (எய்ம்ஸ்) ஆகும். இங்கு தினமும் சிகிச்சைக்காக சராசரியாக 10 ஆயிரம் பேர் வருகின்றனர். தினமும் 323 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நோயாளிகளுடன் சேர்ந்து உறவினர்கள், நண்பர்கள் என ஆயிரக்கணக்கானோர் ஆஸ்பத்திரிக்கு வருகின்றனர். நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வருபவர்களையும் சேர்த்து தினமும் 50 ஆயிரம் பேர் வரை வருகின்றனர்.

டெல்லியில் இருந்து மட்டுமல்லாமல், பக்கத்து மாநிலங்களில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை எடுத்துக் கொள்ள வருகின்றனர். ஆஸ்பத்திரியில் தங்களது பெயரை பதிவு செய்து விட்டு அழைப்புக்காக பலமணி நேரங்கள் அல்லது ஓரிரு நாட்கள் காத்திருக்க வேண்டி இருக்கிறது.

அதேபோல் சாதாரண அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்ட நோயாளிகள், தங்களது நோயை குணப்படுத்திக் கொள்ள இரண்டு மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. சாதாரண அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்ட நோயாளிகள் ஆஸ்பத்திரியில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுவதில்லை. இவர்களில் பெரும் பாலானோர் பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள் என்பதால் இங்கே எங்கேயாவது தங்க வேண்டிய நிலை உள்ளது.

வசதி உள்ளவர்கள் தங்கும் விடுதிகளில் பணம் கொடுத்து தங்கிக் கொள்கிறார்கள். வசதி இல்லாத ஏழை நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் மரத்தடியிலும், சுரங்க பாதைகளிலும், நடைபாதைகளிலும் வசிக்கின்றனர். இன்னும் சிலர் கழிவறைகளையும் வசிப்பிடமாக மாற்றியுள்ளனர்.

ஆஸ்பத்திரியில் வசதிகள் இல்லாததால் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளதாக நோயாளிகள் புலம்புகின்றனர். உத்தரபிரதேசத்தை சேர்ந்த ராம்ரதி (வயது 45) என்ற பெண் இதய வாழ்வு மாற்று ஆபரேசனுக்காக காத்திருக்கிறார். இவரும், குடும்பத்தினரும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அருகே உள்ள ஆண்களுக்கான கழிவறையில் வசிக்கின்றனர்.

அதேபோல ரத்த புற்று நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள உத்தரபிரதேசத்தில் இருந்து வந்துள்ள ஹெம் குமாரி (25) மற்றும் அவரது குடும்பத்தினரும் கழிவறையில்தான் வசித்து வருகின்றனர்.

இதுபற்றி குமாரி கூறுகையில், மரத்துக்கு அடியில் வசிப்பதை விட இங்கு இருப்பது வசதியாக உள்ளது. எங்களை சுற்றி நான்கு சுவர்களாவது மறைத்து இருக்கிறது அல்லவா? என்று ஆதங்கப்பட்டார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு : தயாநிதி மாறனிடம் விரைவில் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு: தயாநிதி மாறனிடம் விரைவில் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு

மத்திய மந்திரி சபையில் 2001-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை தொலைத் தொடர்புத் துறை மந்திரிகளாக பிரமோத் மகாஜன், அருண்ஷோரி, தயாநிதிமாறன் ஆகியோர் இருந்தனர்.ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு குறித்து இவர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

பிரமோத்மகாஜன் இறந்து விட்ட நிலையில் அருண் ஷோரியிடம் கடந்த பிப்ரவரி மாதம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அவர் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக பா.ஜ.க. அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கும், காங்கிரஸ் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கும் உள்ள வித்தியாசம் பற்றி விளக்கம் அளித்தார். இதன்மூலம் அருண்ஷோரி மீது எந்த தவறும் இல்லை என்பது தெரிய வந்தது. அவர் தொடர்பாக சி.பி.ஐ. இதுவரை எந்த தகவலும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சிவசங்கரன் சி.பி.ஐ.யிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். தனது ஏர்செல் நிறுவனத்தை தயாநிதி மாறன் அச்சுறுத்தி மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்க வைத்தார் என்று அவர் கூறினார்.

இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. இதற்காக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்துக்கு தயாநிதிமாறன் அழைக்கப்படுவார். ஏர்செல் நிறுவனத்தின் பங்குகள் மேக்சிஸ் நிறுவனத்துக்கு மாற்றம் செய்யப்பட்ட பிறகு, மேக்சிஸ் நிறுவனம் சன் டி.வி. குழுமத்தில் முதலீடு செய்தது தொடர்பாக தயாநிதிமாறனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இதுதவிர தயாநிதிமாறன் பதவி காலத்தில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடைமுறையில் ஏதேனும் மாற்றங்கள் நடந்ததா? என்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி ஆய்வு செய்ய உள்ளனர். இந்த விசாரணை தகவல்கள் சி.பி.ஐ. விரைவில் தாக்கல் செய்ய உள்ள குற்றப்பத்திரிகையில் இடம் பெறும் என்று தெரிகிறது.

இந்தியப் பெருங்கடலை ' தோண்டும் ' சீனா : வாயே திறக்காத இந்திய அரசு.இந்தியப் பெருங்கடலில் சுமார் 10,000 சதுர கி.மீ. பரப்பளவில் பாலிமெடாலிக் சல்பைட் கனிமங்களை (polymetallic sulphide deposits) தோண்டியெடுக்க உள்ளது சீனா. இதனால், இந்தியா பெரும் கவலையடைந்துள்ளது.

இந்தியாவை ஒட்டி தென் மேற்கு இந்தியப் பெருங்கடலில் இந்த கனிமங்களைத் தேடவும், அதை தோண்டியெடுக்கவும் சீனாவுக்கு சர்வதேச கடல் படுகை ஆணையம் (International Seabed Authority-ISA) அனுமதியளித்துள்ளது. இத் தகவலை சீனாவின் கடல் தாதுக்கள் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

1979ம் ஆண்டு கிழக்கு பசிபிக் கடல் பகுதியில் விஞ்ஞானிகள் கடல் படுகையை ஆராய்ந்து கொண்டிருந்தபோது மெக்சிகோ அருகே கடலுக்குள் பெரும் மலைகளையும் அதன் மீது சிம்னி போன்ற அமைப்புகளையும் கண்டனர். அந்த சிம்னிகளில் இருந்து சுடுநீர் பாய்ந்து கொண்டிருந்தது. இந்தப் பகுதிகளைச் சுற்றி ஏராளமான உலோகத் தாதுக்கள் இருப்பதும் தெரியவந்தது.

அந்தத் தாதுக்களில் தாமிரம் (copper), துத்தநாகம் (zinc), ஈயம் (lead), தங்கம், வெள்ளி ஆகியவை அடங்கும். இவை கடல் நீரில் உள்ள சல்பைடுடன் கலந்து பாலிமெட்டாலிக் சல்பைட்களாக உள்ளன.

இதையடுத்து உலகம் முழுவதுமே இந்த கனிமங்கள் குறித்த ஆர்வமும், அதை தோண்டியடுக்க போட்டியும் ஆரம்பமானது.

இந்தியப் பெருங்கடலில் இந்த கனிமங்களை தோண்டியெடுக்க சீனா தீவிரமாக களமிறங்கி, அனுமதியும் பெற்றுவிட்டது. சர்வதேச கடல் படுகை ஆணையத்துடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி அடுத்த 15 ஆண்டுகளுக்கு சீனா இந்த 10,000 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட பகுதியில் கடலுக்கடியில் கனிமங்களைத் தோண்டலாம்.

மேலும் கிழக்கு பசிபிக் கடலில் 75,000 சதுர கி.மீ. பரப்பளவிலும் கனிமங்களை எடுக்க சீனாவுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.

இந்த அனுமதி கிடைத்த கையோடு, பசிபிக் கடலில் தனது ஆழ்கடல் ஆய்வுக் களத்தை இறக்கிவிட்டுவிட்டது சீனா. நேற்று 5,180 மீட்டர் ஆழத்தை எட்டிவிட்ட இந்தக் கலத்தில் 3 ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர்.

இதையடுத்து இந்தியா பெரும் கவலையடைந்துள்ளது. கனிம ஆராய்ச்சி என்ற பெயரில் இந்தியப் பெருங்கடலில் இந்தியாவை ஒட்டிய பகுதிகளி்ல் சீனாவின் கடற்படை கப்பல்கள் சுற்றி வரும். இந்தப் பகுதியின் கனிமப் படிமங்கள் குறித்த அனைத்து விவரங்களும் சீனா வசம் போகும். மேலும் இந்தப் பகுதியில் நடமாடும் இந்திய நீர்மூழ்கிக் கப்பல்களின் ரகசிய நடமாட்டத்தையும் சீனாவால் இனி கண்காணிக்க முடியும்.

இது குறித்த தனது கவலையை இந்திய கடற்படையின் உளவுப் பிரிவு (Directorate of Naval Intelligence-DNI) மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு நாம் ராணுவ உதவி செய்யாவிட்டால் சீனா போய் உதவி செய்துவிடுமே என்ற கவலை உள்ள மத்திய அரசுக்கு, நமது நாட்டுக்கு அருகிலேயே சீனா கடலைத் தோண்ட ஆரம்பித்துள்ளது குறித்து கவலையில்லை போலிருக்கிறது. இதனால், இந்த விஷயத்தில் இதுவரை மத்திய அரசு வாயே திறக்கவி்ல்லை.

ஏ.கே.கான்

நான் என்கவுண்டர் குற்றவாளி அல்ல : நடிகர் வடிவேலு.நான் தலைமறைவாகவில்லை : போலீஸ் தேடி அலையுறதுக்கு, நான் என்கவுண்டர் குற்றவாளி அல்ல : நடிகர் வடிவேலு

சென்னை அசோக் நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி பழனியப்பன், சென்னை புறநகர் போலீஸ் கமிஷனரிடம் நடிகர் வடிவேலு மீது புகார் அளித்தார்.

அப்புகார் மனுவில், தாம்பரம் இரும்புலியூர் பகுதியில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனம் ஏலத்தில் விட்ட நிலத்தை ரூ.20 லட்சத்துக்கு வாங்கியதாகவும் அதை போலி ஆவணம் தயாரித்து நடிகர் சிங்கமுத்து மூலம் நடிகர் வடிவேலுக்கு விற்று இருப்பதாகவும் கூறி இருந்தார்.

இந்த குற்றச்சாட்டுக்கு நடிகர் வடிவேலு பதில் அளித்துள்ளார்.

அவர், ’’நிலமோசடி புகாரில் போலீஸ் தேடுது, நான் தலைமறைவாயிட்டேன் என்றெல்லாம் செய்தி வருது. நான் எங்கும் ஓடல, சென்னையில் இருப்பேன். இல்லாட்டி மதுரைக்கு போவேன். போலீஸ் தேடி அலையுறதுக்கு நான் என்கவுண்டர் குற்றவாளி அல்ல.

இரும்புலியூர் இடத்தை பொறுத்தவரை பத்திரம் காணாமல் போச்சுன்னு பேப்பர்ல கொடுத்த விளம்பரத்தை காட்டி எனக்கு விற்றனர். இ.சி. போட்டு பார்த்தேன். சரியாதான் இருந்தது.

2002-ல் அந்த நிலத்தை விற்றார்கள். 2006-ல் அங்கு காம்பவுண்டு சுவர் போட்டேன். அப்ப இன்னொருத்தவர் வாங்கியதாக உரிமை கொண்டாடிட்டு வந்து நின்னார். நான் பதறி போனேன். போலி பத்திரம் வச்சி விற்றவர் மேல் கோர்ட்டில் வழக்கு போட்டு இருக்கிறேன்.

அந்த நபர் யார் என்று மக்களுக்கு தெரியும். பழனியப்பன் என்பவர் செங்கல்பட்டு கோர்ட்டில் 2009-ல் என் மேல் வழக்கு போட்டார். 2011 வரை அவர் கோர்ட்டுக்கே வரவில்லை. இரண்டு வழக்குகள் மீதும் விசாரணை நடந்துட்டு இருக்கு.

சம்பாதித்த பணத்தில்தான் இந்த சொத்துக்களை வாங்கினேன். மோசடி பத்திரம் மூலம் இதை வாங்கியதாக சொல்றாங்க.

நான் என் பொண்டாட்டி, குழந்தை, அப்பா எல்லோரும் போலி பத்திரம், தயாரிச்சிட்டா இருக்கோம். போலி பத்திரம் தயாரிக்கிறது வேற ஆள். நான் அத பார்த்து ஏமாந்த ஆள். எனக்கு படிப்பறிவு குறைவு பத்திரங்களில் உள்ள விஷயங்கள் தெரியாது. அதனால் ஏமாற்றப்பட்டேன்.

என் மீதான புகாரை சட்ட ரீதியா சந்திப்பேன். எங்கும் ஓடல, போலீஸ் எப்ப கூப்பிட்டாலும் விசாரணைக்கு போவேன்’’என்று கூறியுள்ளார்.

கனிமொழியின் மாநிலங்களவை முதல் உரை.மாண்புமிகு துணைத் தலைவர் : திருமதி கனிமொழி அவர்களே, வருக. இதுதான் அவரது கன்னிப் பேச்சு. தயவுசெய்து அவரைத் தொந்தரவு செய்யாதீர்கள்.

திருமதி கனிமொழி - தமிழ்நாடு : நன்றி, மாண்புமிகு துணைத் தலைவர் அவர்களே! பணிவுடனும் நம்பிக்கையுடனும் நான் இன்று உங்கள்முன் இங்கு நிற்கிறேன். இம் மாபெரும் அவையில் நிற்கும் காரணத்தால் பணிவுடனும் உங்கள் அனைவராலும் உங்களுக்கு முன் இருந்தவர்களாலும் போற்றிக் காக்கப்படும் நம் நாட்டின் எதிர் காலத்தைப் பற்றிய நம்பிக்கையுடனும் நிற்கிறேன்.

மதிப்புமிக்க இப்பேரவையில் நான் நிகழ்த்தவிருக்கும் இந்த முதல் பேச்சானது முக்கியத்துவம் வாய்ந்த 123 ஒப்பந்தத்தைப் பற்றிய என் கட்சியின் கருத்துகளைப் பிரதிபலிக்கும் விதமாக இருக்கும் என்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமலேயே மக்களுக்குத் தேவையான அணுசக்தித் தொழில்நுட்பம் நம் நாட்டிற்குக் கிடைக்கவும் கடந்த 33 ஆண்டுகளாக நம்மீது திணிக்கப்பட்டுள்ள நியாயமற்ற தடைகள் நீங்கி நமது நாட்டிற்கெனச் சுதந்திரமான ராணுவச் சார்புடைய ஒரு அணுசக்தித் திட்டத்தைக் கடைபிடிக்கவும் மேற்சொன்ன ஒப்பந்தம் வழிவகுக்கும் என நானும் என் கட்சியும் உறுதியாக நம்புகின்றோம்.

இந்த ஒப்பந்தமானது இந்தியாவிற்கு அநீதி இழைக்கக்கூடியது எனச் சிலர் கூறுகின்றனர். அமெரிக்க இணை அமைச்சர் நிக்கோலஸ் பர்ன்ஸ் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் இதைப் பற்றிக் கூறும்போது, "இவ்வாறான ஒப்பந்தத்தை அமெரிக்கா உலகிலுள்ள வேறு எந்த ஒரு நாட்டுடனும் செய்துகொள்ளாது; இந்தியா மட்டுந்தான் இதற்கு விதிவிலக்கு" என்று கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு அதிக 'இடம்' கொடுப்பதாக அந்நாட்டுப் பத்திரிகைகளான தி நியூயார்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் ஆகியன அமெரிக்க அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன. இது போன்றதொரு ஒப்பந்தத்தைத் தன்னுடனும் செய்துகொள்ளுமாறு பாகிஸ்தான் அமெரிக்காவை வலியுறுத்தி வருகிறது. இந்தியாவை ஒரு மறைமுக அணுசக்தியாகவே ஆக்கிவிட அமெரிக்கா முயன்றுவருவதாகச் சீனப் பத்திரிகைகளும் சில அமெரிக்க அரசியல்வாதிகளும் கூறுகின்றனர்.

இதையெல்லாம் பார்த்த பிறகு, அரசும் பிரதமரும் நாட்டுக்கு மிகவும் நன்மையைத்தான் செய்திருக்கின்றனர் என்னும் முடிவுக்கு வருவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தையும் பிற அம்சங்களையும் வைத்துப் பார்க்கும்போது, இது குறித்த உண்மையான மற்றும் அரசியல் சார்ந்த கேள்விகளும் ஐயப்பாடுகளும் மக்களுக்கு ஏற்படுவது இயல்பான ஒன்றுதான்.

நாடு முன்னேற்றம் அடைவதற்கான ஒரு வழியாகவே இதைக் கருதும் எங்கள் கட்சித் தலைவர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள், ஒப்பந்தத்தினால் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளைக்களையும் முயற்சிகள் அரசையோ அரசின் நடவடிக்கைகளையோ நிலைகுலையச் செய்துவிடமாட்டா என்று நம்புகிறார். இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து நியாயமாக விவாதித்து உண்மைநிலையைப் புரிந்துகொண்டால் அனைத்து ஐயப்பாடுகளும் விலகி ஒருமித்த கருத்து ஏற்படும் என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கை.

ஐயா! இவ்விஷயத்தில் எங்கள் கட்சியோ அல்லது கட்சித் தலைவரோ தங்கள் நிலைபாட்டிலிருந்து என்றுமே மாறியதில்லை என்பதை நான் இங்குத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நாங்கள் எப்போதும் ஒப்பந்தத்திற்கு ஆதரவளிப்பவர்கள்தாம். ஒருமித்த கருத்து வேண்டும் என்றும் அதை ஏற்படுத்துவது மிக முக்கியம் என்றும் நாங்கள் விரும்பினோம். சீன நாட்டைப் போலவே இந்தியாவும் மின்சக்தி உற்பத்திக்கு நிலக்கரியையே பெரிதும் நம்பி இருக்கிறது. 2020ஆம் ஆண்டுக்குள் தனது அணுசக்தி ஆலைகள் மூலம் 40,000 மெகாவாட் மின்சக்தியை உற்பத்தி செய்யச் சீனா தயாராகிவருகிறது.

2020ஆம் ஆண்டுக்குள் 30,000 மெகாவாட் அணுசக்தியை உற்பத்திசெய்யும் எண்ணம் நம் நாட்டுக்கும் இருக்கிறது. ஆனால், 123 ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் அது சாத்தியமாகாது. எனவே, உள்நாட்டில் கிடைக்கும் அதிவேக அணு உலைத் தொழில்நுட்பம் நடை முறைக்கு வரும்வரை, இன்னும் சில தலைமுறைகளுக்கு வெளிநாட்டில் இருந்து யுரேனியம் போன்ற அணுசக்தி எரிபொருள்களை நாம் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும். தோரியம் சார்ந்த அணுசக்தித் தொழில்நுட்பத்தை உருவாக்கவும் நாம் முதலீடு செய்தாக வேண்டும். ஆனால், அதற்கு இன்னும் நீண்ட காலம் இருக்கிறது.

அணு ஆற்றல் துறையில் இந்தியா தன்னிறைவடைய மிகவும் தேவைப்படுவது பயன்படுத்தப்பட்ட எரி பொருளிலிருந்து மீட்கப்படும் புளூட்டோ னியம். இந்தியாவில் பரவலாகக் கிடைக்கும் தோரியத்துடன் புளூட்டோ னியத்தைச் சேர்த்து மீண்டும் பயன்படுத்தினால் சாதாரண அணுசக்தி உலைகளிலிருந்து பெறப்படும் அணு ஆற்றலைவிட 30 மடங்கு அதிக அளவு ஆற்றல் கிடைக்கும் வாய்ப்புண்டு. ஆனால், அந்த நிலையை அடைவதற்கு நாம் முதல் அடி எடுத்து வைக்க வேண்டியது அவசியமல்லவா?

பாதுகாப்பு மற்றும் அரசியல் விஷயங்களைத் தவிர, சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட பல விஷயங்களும் இதில் அடங்கும். தொழில் துறை வளர்ச்சிகள் அனைத்தும் மின் ஆற்றலைச் சார்ந்தே இருக்கின்றன; உலகின் ஆற்றல் தேவையின் 85 சதவீதமானது சடலங்கள், நிலக்கரி, எண்ணெய் மற்றும் வாயு ஆகியவற்றிலிருந்துதான் பெறப்படுகிறது. சடலங்களை எரிப்பதன் மூலம் ஆண்டொன்றுக்கு 23 பில்லியன் டன் அளவு கார்பன்-டை- ஆக்ஸைடை, அதாவது நொடி ஒன்றுக்கு 730 டன் வீதம், வாயு மண்டலத்தில் நாம் கலக்கிறோம்.

ஐயா! சூரிய செல்களிலும் எளிய காற்றாலைகளின் மாசற்ற அழகிலும் நம்பிக்கை வைத்திருக்கும் சுற்றுப்புறச் சூழல் நிபுணர்கள் சிலர், நம் நாட்டின் மொத்த ஆற்றல் தேவையை இவற்றால் நிறைவேற்ற முடியாது என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர். இது போன்ற புதுப்பிக்கக்கூடிய ஆற்றல்களை நாம் கைவிட்டுவிட வேண்டும் என நான் கூறவில்லை; அவை பயனுள்ளவை என்றும் அவற்றால் முக்கியமான பணிகள் நடை பெறுகின்றன என்றும் நான் அறிவேன். ஆனால், பெருகிவரும் நம் நாட்டின் ஆற்றல் தேவைகளுக்கு இவற்றால் மிகச் சொற்பமான அளவிலேயே ஆதாயம் கிட்டும்.

உதாரணமாக, நார்மண்டியில் பிரான்ஸ் அமைத்து வருவதைப் போன்ற ஈ.பி.ஆர். ரக அணு உலை ஒன்றை அதிநவீன ரகக் காற்றாலையால் பதிலீடுசெய்ய வேண்டுமென்றால் இத்தாலியிலிருந்து ஸ்பெயின் நாட்டிலுள்ள பார்சிலோனா நகரம்வரையுள்ள சுமார் 700 கிலோமீட்டர் தூரத்திற்கு அவற்றை வரிசையாக வைக்க வேண்டும். அப்படி வைத்தால்கூட, காற்று பலமாக வீசும்போதுதான் அவை மின்சாரத்தை உற்பத்திசெய்யும்.

கரும்பிலிருந்து எத்தனால் எடுப்பதைப் போலத் தற்பொழுது இயற்கை எரிபொருள்களைப் பற்றிப் பரவலாகப் பேச்சு அடிபடுகிறது. உலகம் முழுவதிலுமுள்ள உழுவதற்கு ஏற்ற நிலங்களனைத்தையும் ஒன்று சேர்த்தாலும், தற்போதைய எண்ணெய்த் தேவைக்கு அவை மாற்றாக ஆகவே முடியாது; மேலும், அதனால் உணவுத் தட்டுப்பாடும் ஏற்படலாம். 2100ஆம் ஆண்டுக்குள் உலகிலுள்ள எண்ணெய் மற்றும் இயற்கை ஆதாரங்கள் அனைத்தும் வற்றிவிடும் நிலைமை ஏற்படும். அப்போது நம்மிடம் நிலக்கரியும் அணு ஆற்றலும் மட்டுமே எஞ்சியிருக்கும். 'குளோபல் வார்மிங்'கை (பூமி வெப்பமடைதல்) அதிகரிக்கச் செய்யும் அம்சங்களில் பெரும் பங்கு வகிக்கும் நிலக்கரியை அதிக அளவில் உபயோகப்படுத்துவது சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒரு டன் நிலக்கரி அல்லது எண்ணெய் தரக்கூடிய ஆற்றலை ஒரு கிராம் யுரேனியம் தந்துவிடும். ஒருமுறை உபயோகிக்கப்பட்ட எரிபொருளை மீண்டும் பதப்படுத்தி, 3 சதவீதம் ரேடியோ-ஆக்டிவ் தனிமங்களைப் பிரித்தெடுத்து நிரந்தரமாகப் பாதுகாப்புடன் வைத்துக்கொள்ளலாம்; மீதமுள்ள 97 சதவீத எரிபொருளை மீட்டுத் திரும்பவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அணு ஆற்றலுக்கு எதிராக வைக்கப்படும் மற்றொரு வாதம் என்னவெனில், 'செர்னோபில்' மற்றும் 'த்ரீ மைல் ஐலண்ட்' ஆகிய பேரழிவு நிகழ்ச்சிகள். இதில் 'த்ரீ மைல் ஐலண்ட்' பேரழிவு நாம் கனவிலும் நினைத்துப்பார்க்க முடியாத பயங்கரம் ஆகும். அணு உலையின் மையப்பகுதி முழுவதும் உருகி அதில் பெரும்பாலான பகுதி அவ்வுலையின் அடிப்பகுதியில் விழுந்துவிட்டது. அந்நிலையிலும், அதிலிருந்து வெளியான ஆபத்தான அணுக்கதிர்கள் பாதுகாப்பு மிக்க அந்த உலையின் சுவர்களைத் தாண்டி வெளியேறவில்லை. எனவே, யாருக்கும் தீவிரமான காயங்கூட உண்டாகவில்லை. உண்மையில், த்ரீ மைல் ஐலண்ட் பாதுகாப்பான அணு உலைக்கான வெற்றிகரமான உதாரணமாகும். செர்னோபில்லில் நடந்தது முற்றிலும் வேறாகும். அங்குப் பாதுகாப்பான கட்டமைப்பு ஏற்படுத்தப்படவில்லை; அவ்வுலையின் கட்டுமானத்தில் ஏற்பட்ட கோளாறு அதை நிலையற்றதாக ஆக்கிவிட்டது. 600 டன் எடையுள்ள கருங்கல்லினால் ஆன 'மாடரேட்டர்' ஒன்று தீப்பிடித்து வாரக்கணக்கில் எரிந்தது. சம்பவம் நடந்த சில மாதங்களுக்குள்ளேயே 32 பேர் இறந்துவிட்டனர்; 200 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டதுடன் சிலர் புற்றுநோயாலும் அவதிப்பட்டனர். ஓர் அணுசக்தி உலை, எப்படிச் செயல்படுத்தப்படக் கூடாது என்பதற்குச் செர்னோபில் ஒரு சிறந்த உதாரணமாகும். உலகமெங்கும் வருடமொன்றுக்கு 15,000 பேர்களைப் பலிவாங்கும் நிலக்கரிச் சுரங்க விபத்துகளோடு ஒப்பிட்டால் கடந்த 50 ஆண்டுகளில் சிவில் அணு சக்தித் தொழிற்சாலை விபத்துகள் மிகவும் குறைவு. சில சமயங்களில் நமது சார்புகள் நம் கொள்கைகளைச் சார்ந்து உள்ளனவே தவிர, உண்மை நிலவரத்தை அல்ல.

உலகளாவிய அணுசக்தித் தொழில் துறையின் அமைப்பை வைத்துப் பார்த்தால், நமது அணு ஆற்றல் திட்டங்களை நிறைவேற்றக் கூடிய அணுசக்தித் தொழில்நுட்பமும் ஆதாரங்களும் நமக்கு எளிதாகக் கிடைக்க இந்த ஒப்பந்தந்தான் ஒரே வழி. அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் இந்தியா கையெழுத்திடாததால், அணுசக்தி ஏற்றுமதி செய்பவர்கள் குழுவில் நாம் இடம்பெறவில்லை. அதனால், இக்குழுவைச் சார்ந்த 45 உறுப்பு நாடுகளுடன் அணுசக்தித் தொழிலில் ஈடுபடுவது என்பது நமக்கு மிகவும் கடினமானதாக இருக்கிறது. மேலும், ஏற்கனவே அமலில் உள்ள தடைகளின் காரணமாக நேனோ தொழில்நுட்பம், மருத்துவம், தகவல் தொழில் நுட்பம் போன்றவை நமக்கு மறுக்கப்படுகின்றன.

1998ஆம் ஆண்டு நாம் நடத்திய அணுகுண்டுச் சோதனையைக் கண்டனம் செய்யாத ஒரே நாடு பிரான்ஸ். சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற அணு சக்தி சம்பந்தமான இந்திய-பிரான்ஸ் கூட்டுக் கூட்டத்தில், நாம் சர்வதேச அணுசக்தி நிறுவனத்துடன் பாதுகாப்பு சம்பந்தமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு மேற்சொன்ன குழுவிடம் ஒப்புதல் பெறாதவரை அணுசக்தித் தொழில்நுட்பத்தை நமக்குத் தர முடியாது என்று பிரான்ஸ் திட்டவட்டமாகக் கூறிவிட்டது. தமிழகத்தின் கூடங்குளம் அணுசக்தி ஆலைக்குத் தேவையான நான்கு அணு உலைகளைத் தர வேண்டிய நமது நீண்ட நாள் நட்பு நாடாகிய ரஷ்யாவும் ஒப்பந்தத்தைத் தொடர வேண்டாமென்று முடிவுசெய்துவிட்டது. 1985ஆம் ஆண்டு அப்போதைய பாரதப் பிரதமரான மறைந்த திரு. ராஜீவ்காந்திக்கும் சோவியத் யூனியனின் அதிபர் மிகாயில் கொர்பசேவுக்கும் இடையே கையெழுத்தான உடன்படிக்கையின்படி கூடங்குளம் அணுமின் ஆலை அமைய ரஷ்யா உதவி அளித்துவந்தது. ஆனால், சோவியத் யூனியன் சிதறுண்ட பின்னர், ரஷ்யா அணுசக்தி ஏற்றுமதி செய்பவர்கள் குழுவில் சேர்ந்துவிட்டதால் அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திடாத நாடுகளுக்குச் சிவில் அணுசக்தித் தொழில் நுட்பத்தை அதனால் அளிக்க முடியவில்லை. இன்று அறிக்கை வெளியிட்டுள்ள வெளியுறவுத் துறை அமைச்சரும் பிரதமரும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளபடி, நம் நாடு சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் குறிப்பிட்ட ஒப்பந்தத்திற்காகக் காத்துக்கொண்டிருப்பதால், மற்ற ஏற்பாடுகளில் சற்றுக் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாகத் திட்டத்தை அமல்படுத்துவதில் சற்றுத் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. தொய்வின் விளைவாக, தமிழ்நாட்டில் மத்திய அரசு செய்யவிருக்கும் 26,000 கோடி ரூபாய்த் திட்ட முதலீட்டிலும் காலதாமதம் ஏற்படும். 2006ஆம் ஆண்டு மே மாதம் முதல் தமிழக அரசு 11,083 கோடி ரூபாய் முதலீட்டு மதிப்புள்ள பல உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டுள்ளது. இதன்மூலம் 1,25,000 பேர்களுக்கு வேலைவாய்ப்பும் கிட்டும். ஆகவே, தற்போதைய சூழ்நிலையில் நமக்கு இயல்பாகக் கிடைத்திருக்கக் கூடிய, 1,800 மெகாவாட் மின்சக்தியும் அதன் விளைவாக உருவாகியிருக்கக்கூடிய பல தொழிற்சாலைகளும் விவசாயத்திற்குத் தேவைப்படும் மின் சக்தியும் வேலைவாய்ப்புகளும் தள்ளிப்போகின்றன. இவ்விடத்தில் நான் மாண்புமிகு பிரதமர் அவர்கள் செப்டம்பர் 13ஆம் தேதியன்று நிகழ்த்திய உரையினை நினைவுபடுத்த விரும்புகிறேன்: "அமெரிக்காவுடனான இந்த ஒப்பந்தங்கள் உலகெங்குமுள்ள அனைத்துத் தலைநகரங்களிலும் வர்த்தக வாய்ப்புகளை உரு வாக்கும். உலகநாடுகள் மத்தியில் நமக்கு உரிய இடத்தை மீண்டும் பெறும் நமது பயணத்தில் இது மேலும் ஒரு அடியாகும்."

மாண்புமிகு துணைத் தலைவர் அவர்களே! இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் அணு ஆற்றல் குறித்த அம்சங்களைப் பற்றிப் பேசுவதன் மூலம், இந்த 123 ஒப்பந்தமானது நமக்குச் சாதகமான வகையில் நம் நாட்டை அமெரிக்காவுக்கு அருகில் இட்டுச் செல்லும் என்பதை நான் மிகைப்படுத்திக் கூற முன்வரவில்லை. காலனி ஆதிக்கத்தின் பாதிப்பு மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்தியம் ஆகிய பழைய அச்சுறுத்தல்களை நாம் நம் மனத்தைவிட்டு விரட்டியடிக்க வேண்டும். நமது செயல்களிலோ அல்லது கொள்கைகளிலோ சுதந்திரத்தை இழக்காமல் நம்மால் எந்த நாட்டுடனும் நெருக்கமாக இணைந்து பணியாற்ற முடியும் என்னும் தன்னிறைவையும் நம்பிக்கையையும் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். அமெரிக்காவுடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்வது என்பது அமெரிக்காவின் அனைத்துச் செயல்களுக்கும் நாம் ஆதரவு அளிப்பதாக ஆகிவிடாது.

அணுசக்தி ஏற்றுமதி செய்பவர்கள் குழுவிலுள்ள எந்த நாட்டுடனும் நாம் செய்துகொள்ளும் எந்த ஒப்பந்தமும் செறிவுப் பொருள் சார்ந்த உடன்படிக்கையுடன் (எப்.எம்.ஸி.டி) சேர்ந்தே வரும் என்னும் கருத்துகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன. 123 ஒப்பந்தமானது சிவில் மற்றும் ராணுவ அணுசக்தி நிலையங்களைத் தனித்தனியே வைத்துக்கொள்ளும் சுதந்திரத்தை நமக்கு அளிக்குமாதலால், இந்த ஒப்பந்தத்தின் காரணமாக நமது பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அணுசக்தித் திட்டத்திற்குக் குறிப்பிடும்படியான பாதிப்பு ஏதும் இராது.

இந்திய-அமெரிக்க நாடுகளின் இருதரப்பு உறவில் மாட்டிக்கொண்டு 123 ஒப்பந்தம் திணறும் இவ்வேளையில், அவ்வொப்பந்தத்தின் மூலம் எந்த நாட்டோ டு வேண்டுமானாலும் அணுசக்தித் தொழில்நுட்ப வர்த்தகத்தை நாம் செய்துகொள்ள முடியும் என்பதையும் கவனிக்க வேண்டியது மிக முக்கியமாகும். 'தகவலளித்த ஓராண்டுக்குள் அணுசக்தி எரிபொருள் வழங்குவதை நிறுத்தவோ அல்லது வழங்கப்பட்ட எந்தக் கருவியையும் திரும்ப எடுத்துக்கொள்ளவோ அமெரிக்க அதிபரால் முடியும்' என்னும் ஒப்பந்தத்தின் ஒரு அம்சத்திற்கு அழுத்தம் தந்து சிலர் பேசுகிறார்கள்.

எனவே, அமெரிக்காவிடமிருந்து மட்டுமே இந்தியாவால் அணுசக்தித் தொழில்நுட்பத்தை வாங்க முடியும் என்ற நிர்ப்பந்தம் நம் நாட்டுக்கு இல்லை என்னும் உத்தரவாதத்தை இப்பேரவையின் மதிப்புமிக்க உறுப்பினர்களுக்கு இந்த அரசு வழங்க வேண்டுமென நாங்கள் விரும்புகின்றோம். ஒருவேளை அமெரிக்க அரசு நமக்கு வழங்கும் சரக்குகளில் தடையேதும் ஏற்பட்டால் அணுசக்தி ஏற்றுமதிசெய்யும் குழுவிலுள்ள நாடுகள் ஏதேனும் நமக்கு உதவிபுரியுமா என்பது பற்றியும் நாங்கள் அரசிடமிருந்து தெரிந்துகொள்ள விரும்புகிறோம்.

மேற்குறிப்பிட்ட விவரங்களனைத்தும் மிகவும் முக்கியம் என்றபோதிலும், நமது பரந்த தொலை நோக்கிலிருந்து நமது கவனத்தை இவை சிதறடிக்காமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த 123 ஒப்பந்தமானது தானாக ஒன்றும் வந்துவிடவில்லை. இதை ஆரம்பித்து அப்போதைய அமெரிக்க அரசுடன் பேச்சு நடத்திய பாரதீய ஜனதா கட்சி முதல் இப்பொழுதும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கும் புதுதில்லி மற்றும் வாஷிங்டனில் உள்ள இன்றைய அரசுகள்வரை, இந்த ஒப்பந்தத்தை நம் நாட்டின் வளர்ச்சிக்கான - அதாவது, 300 மில்லியன் மக்களை வறுமையின் பிடியிலிருந்து விடுவித்தல், பாலின மற்றும் ஜாதிப் பாகுபாடு, கிராமப்புறத்தை அலட்சியப்படுத்துதல் மற்றும் கல்லாமையை ஒழித்தல் ஆகியவற்றுக்கான - ஒரு கருவியாகவே கருதிவந்துள்ளனர்.

ஐயா! எங்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் பேரறிஞர் அமரர் அண்ணா அவர்கள் மதிப்புமிக்க இச்சபையில் சீன ஆக்கிரமிப்பைப் பற்றி 1962ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நிகழ்த்திய சொற்பொழிவில் இடம்பெற்றிருந்த பின்வரும் வார்த்தைகளோடு என் உரையை முடித்துக்கொள்ள விரும்புகிறேன். அறிஞர் அண்ணா கூறியிருந்தார்: "நாட்டின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தற்பொழுது உருவாக்கப்பட்டுவரும் பெருமைமிகு வருகைப் பதிவேட்டில் நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (தி.மு.க.) பெயரைப் பதிவுசெய்கிறேன்!".

நன்றி!

தமிழில்: சுப்ரபாலா

அடிக்குறிப்பு: நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகச் பொறுப்பேற்ற கவிஞர் கனிமொழி அந்த அவையில் ஆற்றிய முதல் உரை.

இவ்வுரை மாநிலங்களவைக்கான இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டது.

kalachuvadu.com

இளமைக்கு உதவும் ஆசனங்கள், சுவாசத்தின் வாசம் ! , யோகா.

இளமைக்கு உதவும் ஆசனங்கள்.
இளமைக்கு உதவும் ஆசனங்கள்

எல்லோருக்கும் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கு வழி தெரியாமல் இருப்பார்கள். இளமையாக இருக்க ஆசனங்கள் உதவும். அதாவது ஆசனங்களில் சிரசாசனம் ராஜா என்றும், சர்வாங்காசனம் ராணி என்றும் அழைக்கப்படுகிறது.

இதில், சர்வாங்காசனம், விபரீத கர்ணி, மச்சாசனம், சிரசாசனம் ஆகியவற்றை முறையாக செய்து வந்தால் எந்த ஆரோக்கியக் குறைபாடும் இன்றி இளமையாக வாழலாம். ஆனால், இவற்றை முறையாக செய்வது மட்டுமின்றி, இதற்கு இணையான அதாவது நின்றபடி செய்யும் ஆசனங்களையும் செய்ய வேண்டியது அவசியமாகிறது.

மேலும் இந்த ஆசனங்கள் ஒவ்வொன்றிற்கும் நடுவே சாவாசனம், சுவாசனம், நித்திரை ஆசனம் ஆகியவற்றையும் செய்ய வேண்டும். சவாசனம் என்பதற்கு தெற்கு நோக்கி தலை வைத்தபடியும், நித்திரையாசனத்தில் மேற்கு நோக்கி தலை வைத்தபடியும் செய்ய வேண்டும்.


சுவாசத்தின் வாசம்!
சுவாசத்தின் வாசம்!

நம்முடைய சுவாசம் மிகச் சரியாக இருக்கும் பட்சத்தில் நம்முடைய உடலும், மனமும் புத்துணர்ச்சியை பெறும் என்பது அனைவரும் அறிந்ததே. இதன் அடிப்படையில் உருவானதுதான் யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி.

ஒவ்வொரு மனிதனும் சுவாசத்தை மிகச் சரியாக செய்யாதபோது, செயல்பாடுகளில் சிறந்த முறையில் கவனம் செலுத்த முடியாது. மூச்சுப் பயிற்சியை மிகச் சரியாக செய்ததால்தான் யோகிகள் தாங்கள் நினைத்த இலக்கை அடைந்தனர்.

தியானமும் இதன் அடிப்படையில் உருவானதே. ஆனால் இதில் மூச்சுப் பயிற்சியை முறையாக கையாண்டால் மட்டுமே சிறந்த பலன்களை பெற முடியும். பல ஆண்டுகளுக்கு முன்பு, மூச்சு விடுதல் ஒரு கலையாக இருந்ததாகவும், அதை கற்றதால் உடலில் மட்டுமின்றி வாழ்க்கையில் பல மாற்றங்களை சாதிக்க முடிந்ததாகவும் கூறுகிறார் பிரபல மருத்துவர்.

உடலில் ஏதேனும் பாதிப்புகள் இருந்தால், சீரான மூச்சு விடுதல் மூலம் அதை குணப்படுத்த முடியும். மூச்சு விடுதலை நாம் முறையாக செய்யும்போது மனதை அமைதியாக்கி, நமது குறிக்கோளை கண்டிப்பாக அடைய முடியும்.

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை மூச்சு விடுகிறான். அதையே பத்துமுறையாக்கும்போது கண்டிப்பாக வித்தியாசமான அனுபவத்தை பெறமுடியும். புத்துணர்ச்சி, அதிக எனர்ஜி, சூழலை எளிதாக கையாளும் திறன் ஆகிய மூன்றும் கிடைக்கும்.

இதைத் தான் தியானம் மூலம் நாம் பெறுகிறோம். தினமும் எட்டு நிமிடம் ஒதுக்கி மூச்சுப் பயிற்சி செய்தால் போதும், பலன் கிடைக்கும். முதுகை நேராக வைத்தபடி, அமர்ந்து, கண்களை மூடி நிதானமாக மூச்சு விட்டுப் பாருங்கள்... புது அனுபவத்தை உணர்வீர்கள்!


யோகா.
யோகா


செய்முறை:

பத்மாசனமிட்டு கைகளை மேலே தூக்கவும். உள்ளங்கைகளை புரட்டி மேலே பார்க்குமாறு அமைத்து மூச்சை வெளியே விட்டு முடிந்தவரை குனியும்போது விரித்த கைகளை கும்பிட்டபடியே தரையில் வைக்கவும். 20 எண்ணும் வரை இருந்து, நிமிரும்போது மூச்சை இழுத்துக் கொண்டு நிமிரவும். இதனை நன்றாக 20 தினங்கள், பழகிய பின்னர் இரண்டாவது நிலையினைச் செய்யவும்.

குறிப்பு:

3 முதல் 5 தடவைகள் செய்யலாம். வயிறு, இதய ஆபரேஷன் செய்தவர்கள் செய்யக்கூடாது.

பலன்கள்:

முதுகெலும்பு நரம்புகள், தொடை நரம்புகள் பலமாகும். முதுகெலும்பு பிடிப்பு நேராகும். மலச்சிக்கல், இருதயப்பலவீனம் நீங்கும். வயிற்றினுள் உள்ள உள்ளுறுப்புகள் நன்கு வேலை செய்யும். நீரிழிவு நோய் அகலும். இளமையுண்டாகும். நல்ல ஞாபகசக்தி உண்டாகும். சுறுசுறுப்பு ஆரோக்கியம் நிலைத்து நிற்கும்.