மத்திய மந்திரி சபையில் 2001-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை தொலைத் தொடர்புத் துறை மந்திரிகளாக பிரமோத் மகாஜன், அருண்ஷோரி, தயாநிதிமாறன் ஆகியோர் இருந்தனர்.ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு குறித்து இவர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
பிரமோத்மகாஜன் இறந்து விட்ட நிலையில் அருண் ஷோரியிடம் கடந்த பிப்ரவரி மாதம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அவர் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக பா.ஜ.க. அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கும், காங்கிரஸ் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கும் உள்ள வித்தியாசம் பற்றி விளக்கம் அளித்தார். இதன்மூலம் அருண்ஷோரி மீது எந்த தவறும் இல்லை என்பது தெரிய வந்தது. அவர் தொடர்பாக சி.பி.ஐ. இதுவரை எந்த தகவலும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சிவசங்கரன் சி.பி.ஐ.யிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். தனது ஏர்செல் நிறுவனத்தை தயாநிதி மாறன் அச்சுறுத்தி மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்க வைத்தார் என்று அவர் கூறினார்.
இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. இதற்காக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்துக்கு தயாநிதிமாறன் அழைக்கப்படுவார். ஏர்செல் நிறுவனத்தின் பங்குகள் மேக்சிஸ் நிறுவனத்துக்கு மாற்றம் செய்யப்பட்ட பிறகு, மேக்சிஸ் நிறுவனம் சன் டி.வி. குழுமத்தில் முதலீடு செய்தது தொடர்பாக தயாநிதிமாறனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இதுதவிர தயாநிதிமாறன் பதவி காலத்தில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடைமுறையில் ஏதேனும் மாற்றங்கள் நடந்ததா? என்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி ஆய்வு செய்ய உள்ளனர். இந்த விசாரணை தகவல்கள் சி.பி.ஐ. விரைவில் தாக்கல் செய்ய உள்ள குற்றப்பத்திரிகையில் இடம் பெறும் என்று தெரிகிறது.
No comments:
Post a Comment