சஸ்சாங்காசனம்.

செய்முறை:
முதலாவதாக, வஜ்ராசனத்தில் அமரவும். இரண்டு கைகளையும் அந்தந்த பக்கத்தில் உள்ள குதிகாலில் வையுங்கள். உங்களின் நெற்றி, முழங்காலை ஒட்டியிருக்கட்டும். இடுப்பு பகுதியை முடிந்தவரை தூக்கவும். இது உங்களின் நெற்றியிலிருந்து மெதுவாக உச்சந்தலையை சென்றடைவதாக இருக்கவேண்டும். இப்படியாக 15 விநாடிகள் இருந்து, ஆசனத்தை கலைத்து பழைய நிலைக்கு வரவும்.
பயன்கள்:
தைராய்டு, தைமஸ் சுரப்பிகள் நன்கு இயங்கும். சளி தொல்லை நீங்கும். மூளை வளர்ச்சி குறைவான குழந்தைகள் சஸ்சாங்காசனம் செய்துவந்தால், கூடிய விரைவில் பூரணகுணம் கிட்டும்.
மாரிச்சாசனம்.

செய்முறை:
இரு கால்களையும் முன்னோக்கி நீட்டி உட்காரவும். வலது காலை முழங்கால் வரை மடக்கி, பின்பக்கம் விடுங்கள். அடுத்தபடியாக இடதுகாலை மடக்கி, வலது அடித்தொடையில் ஒன்றிணைக்கவும். இடதுகையை முதுகுக்கு பின்னால் சுற்றிக்கொண்டு வந்து இடதுகால் கட்டை விரலை பிடியுங்கள். இடதுகால் மூட்டின் மேல், வலது கை இருக்கட்டும். இடுப்பு-தோள்பட்டையை இடப்பக்கமாக திருப்பவும். இதேமாதிரி பக்கம் மாற்றி செய்யவும்.
பயன்கள்:
மூட்டுபிடிப்பு, இடுப்பு பிடிப்பு பிரச்சினைகள் வராது. வயதான காலத்தில் முதுகு தண்டு இயக்கம் சரியாக அமையும். மாரிச்சாசனத்தை செய்வதால் பாதி பத்மாசனம், பாதி வஜ்ராசனம், அர்த்த மச்சேந்திராசனம் ஆகிய மூன்று ஆசனங்களையும் செய்த பலன்கள் கிட்டும்.
அதாவது, ஒரே கல்லில் மூன்று மாங்காய்!
உத்தித பத்மாசனம்.

செய்முறை:
முதலாவதாக பத்மாசனநிலையில் அமரவும். இரு கைகளையும் பக்கவாட்டில் ஊன்றி, பத்மாசனத்தோடு உடலை மேலே தூக்குங்கள். முதுகு தண்டு உள்நோக்கி சுருக்கி இருக்கட்டும். இரண்டு முழங்கால்களையும் முழங்கை உயரத்துக்கு தூக்குவது, மிகச்சிறந்த பலன் தரும்.
பயன்கள்:
சிறுகுடல், பெருங்குடல் நன்கு இயங்கும். செரிமான கோளாறு நீங்கும். ஹிரண்யா, மூலநோய், வாயு தொல்லை ஏற்படாது. உடல்எடை குறையும். நீரிழிவு, கல்லீரல், மண்ணீரல் நோய்கள் நீங்கும். மூச்சுநோய் வராது. கை-தோள்பட்டைகள் வலுவாகும்.