Tuesday, May 31, 2011

போர்க்குற்றத்தை நிரூபிக்க இலங்கை இறுதிக்கட்ட போர் வீடியோ ஆதாரம் உள்ளது; ஐ.நா. மனித உரிமைகள் கமிஷன் தகவல்.


இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் இறுதிக் கட்ட போர் நடந்தது. அப்போது ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்டனர்.

இப்போரின்போது, இலங்கை அரசு போர்க்குற்றம் இழைத்ததாக ஐ.நா.சபை அறிவித்துள்ளது. இதை இலங்கை அரசு மறுத்துள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ஒளிபரப்பாகும் சேனல்-4 என்ற டெலிவிஷன் இலங்கை ராணுவம் அப்பாவி தமிழர்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொல்லும் 5 நிமிட காட்சிகளை ஒளிபரப்பியது.

அதில், தமிழ் ஆண்கள் மற்றும் பெண்களை நிர்வாணப்படுத்தி அவர்களின் கண்கள் மற்றும் கைகளை பின்புறம் கட்டி சுட்டுக் கொல்லும் காட்சிகள் பார்ப்பவர்களின் ரத்தத்தை உறைய வைத்தது. ஆனால் அக்காட்சி போலியானது. கிராபிக்ஸ் தொழில் நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்பட்டவை. இது போன்ற கொடுமைகளை ராணுவம் இழைக்கவில்லை என இலங்கை அரசு மறுத்தது.

ஆனால், அது உண்மையான வீடியோதான். “கிராபிக்ஸ்” தொழில்நுட்பம் அதில் பயன்படுத்தப்படவில்லை, என ஐ.நா.சபையின் மனித உரிமை கமிஷனின் புலனாய்வு பிரிவு நிபுணர் கிறிஸ்டோப் ஹெய்ன்ஸ் அறிவித்துள்ளார். இலங்கை போர்க்குற்றம் இழைத்துள்ளது என்பதற்கு இந்த வீடியோ காட்சிகளே நம்பத்தகுந்த ஆதாரம் என தெரிவித்துள்ளார். இவர் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு : தயாநிதி மாறன் மீது பாரதீய ஜனதா குற்றசாட்டு.


2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் 2-ந்தேதி சி.பி.ஐ. தன் முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் ஆ.ராசா, சந்தோலியா, சித்தார்த் பெகுரா, ஷாகித் பல்வா ஆகிய நால்வரும் கூட்டுச் சதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

கடந்த மாதம் 25-ந்தேதி சி.பி.ஐ. தனது இரண்டாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார், மும்பை சினி யுக் பிலிம்ஸ் நிறுவன இயக்குனர் கரீம் மொரானி, குசேகான் ரியாலிட்டி நிறுவனத்தின் ராஜீவ் அகர்வால், டி.பி.ரியாலிட்டி நிறுவனத்தின் ஆசீப் பல்வா ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றிருந்தது. இதனைதொடர்ந்து அவர்களுக்கு “சம்மன்” அனுப்பப்பட்டு விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். அவர்களது முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சி.பி.ஐ. தரப்பில் 3-வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ. அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். அனேகமாக அடுத்த வாரம் 3-வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பெயர்கள் மற்றும் இடைத்தரகர்களாக செயல்பட்டவர்களின் பெயர்கள் இடம் பெற உள்ளது. அவர்கள் அனைவரும் சி.பி.ஐ. வலையில் சிக்குவார்கள் என்று தெரிகிறது.

இந்நிலையில் இன்று பா.ஜ.க. தெரிவித்துள்ள செய்தியில் அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறனுக்கு தொடர்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் 2006-ல் குறிப்பிட்ட (தொலைக்காட்சி, தொலைபேசி )நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு உரிமம் பெற தயாநிதி மாறன் உதவியதாகவும், பின்னர் இந்த விவகாரத்தில் தயாநிதிமாறன் விளக்கமளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் தொலைத்தொடர்பு உரிமம் குறித்து தயாநிதி மாறனுக்கு சில கேள்விகளை பாஜக எழுப்பி உள்ளது.

இதையடுத்து 2006-ல் குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு உரிமம் பெற ஆதரவாக இருந்ததாக தயாநிதி மாறன் மீது தெஹல்கா பத்திரிகை குற்றம் சாட்டியது. இதற்கு மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் அப்பத்திரிக்கைக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

அதில் தெஹல்கா இதழின் கட்டுரையில் தயாநிதி மாறனுக்கு தவறான குற்றச்சாட்டுகளின் தொகுப்பு என அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே தயாநிதி மாறனிடமிருந்து இதுவரை தங்களுக்கு நோட்டீஸ் எதுவும் வரவில்லை என தெஹல்கா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோக்பால் - பிரதமர், நீதிபதிகள், எம்பிக்களை விசாரிக்க மத்திய அரசு எதிர்ப்பு.


ஊழல் செய்யும் பிரதமர், நீதிபதிகள், எம்.பிக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் அவர்களையும் லோக்பால் விசாரணை வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால், இந்த லோக்பால் சட்டம் எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதே கேள்விக்குறியாகியுள்ளது.

லோக்பால் மசோதா வரைவுக் குழுவின் 5வது கூட்டம் அதன் தலைவரும் நிதியமைச்சருமான பிரணாப் முகர்ஜி தலைமையில் நேற்று நடந்தது. இந்தக் குழுவில் பொது மக்கள் சார்பில் இடம் பெற்றுள்ள பிரதிநிதிகளான சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, கர்நாடக லோக் ஆயுக்தா தலைவர் சந்தோஷ் ஹெக்டே, சட்ட வல்லுனர்களான சாந்தி பூஷண், பிரசாந்த் பூஷண், தகவல் அறியும் சட்ட ஆர்வலர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோரும் மத்திய அரசின் சார்பில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் கபில்சிபல், வீரப்பமொய்லி, ப.சிதம்பரம், சல்மால் குர்ஷித் ஆகியோர் இக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் லோக்பால் சட்ட வரம்புக்குள் பிரதமர், நீதிபதிகள், எம்.பிக்களை கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அப்போது லோக்பால் வரம்புக்குள் பிரதமர், நீதிபதிகள், எம்.பிக்களை கொண்டு வருவதற்கு அக்குழுவில் பொது மக்கள் சார்பில் இடம் பெற்றுள்ள பிரதிநிதிகள் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் இதை மத்திய அரசு சார்பில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் எதிர்த்தனர்.

இந்த விவகாரத்தில் இரு தரப்பினர் இடையே கடைசி வரை ஒருமித்தக் கருத்து ஏற்படவில்லை. இதையடுத்து வரும் ஜூன் 6ம் தேதி மீண்டும் கூடி ஆலோசிப்பதென முடிவெடுக்கப்பட்டது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு அண்ணா ஹசாரே, பிரசாந்த் பூஷண், அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு ஏற்கெனவே வடிவமைத்த லோக்பால் மசோதாவைவிட இந்த மசோதாவை மோசமானதாக மாற்ற முயற்சிக்கிறது என்று கேஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையே லோக்பால் வரம்புக்குள் பிரதமர், நீதிபதிகள், எம்.பிக்களை கொண்டு வருவது குறித்து அனைத்து மாநில அரசுகள், அரசியல் கட்சிகளிடம் கருத்துக் கேட்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் லோக்பால் மசோதா உருவாக்குவதை மேலும் இழுத்தடிக்க மத்திய அரசு முயல்வதாகத் தெரிகிறது.

அதே நேரத்தில் ஊழல் விவகாரத்தில் சிக்கும் அதிகாரிகளின் சொத்துக்களை முடக்குவது, பறிமுதல் செய்வது ஆகிய விஷயங்களில் லோக்பால் குழுவினருக்கும் மத்திய அரசுக்கும் இடையே ஒருமனதான கருத்து நிலவுகிறது. மேலும் அவர்களது சொத்துக்களை ஏலம் விட்டு, ஊழலால் அரசுக்கு ஏற்பட்ட இழபபை ஈடுகட்டுவது என்ற லோக்பால் குழுவின் கோரிக்கையையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

ஆனால், லோக்பால் சட்டத்தை ஆகஸ்ட் 16ம் தேதிக்குள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்ற அன்னா ஹசாரேவின் கோரிக்கையை ஏற்க மத்திய அரசு தயங்கி வருகிறது. இதில் இழுத்தடிப்பு செய்தால் ஆகஸ்ட் 16ம் தேதி மீண்டும் எனது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிப்பேன் என்று ஹசாரா எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

லோக்பால் பிரதமரைக் கட்டுபடுத்தக் கூடாது-பாபா ராம்தேவ்:

பிரதமரையும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியையும் ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவின் விசாரணை எல்லைக்குள் கொண்டுவரக் கூடாது என்று பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள செஹார் நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராம்தேவ், லோக்பால் விசாரணை வளையத்துக்குள் பிரதமரையும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியையும் கொண்டு வருவது சரியாக இருக்காது.

இந்த விவகாரம் தொடர்பாக நான் சர்ச்சையை ஏற்படுத்த விரும்பவில்லை, பகிரங்கமாக விவாதம் செய்ய விரும்பவில்லை என்றார்.

ஹைகோர்ட்டில் ஜாமீன் மனு : தானே வாதாட ராசா திட்டம் !


ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ள முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக தான் பிரமதர் மன்மோகன் சிங்குக்கும், அவர் தனக்கு எழுதிய 18 கடிதங்களுடன் தானே வாதாடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவின் ஜாமீன் மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

இதையடுத்து ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுக ராசா முடிவு செய்துள்ளார். இது தொடர்பான மனுவை விரைவில் அவரது வழக்கறிஞர் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மனு மீது விவாதம் நடக்கும் போது தனது சார்பில் தானே ஆஜராகி வாதாட ராசா முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. ராசா அடிப்படையில் ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாதத்தின்போது தாக்கல் செய்யவும், குறிப்பிட்டுப் பேசவும் சில முக்கிய ஆதாரங்களை அவர் திரட்டி வருகிறார். குறிப்பாக 18 முக்கிய கடிதங்களை அவர் நீதிமன்றத்தில் வாதாடுவார் என்று கூறப்படுகிறது.


இந்த 18 கடிதங்களும் 2007ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2010 ஜூலை வரையிலான காலகட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், ஆ.ராசாவுக்கும் இடையே பரிமாறி கொள்ளப்பட்ட கடிதங்களாகும். மேலும் இந்தக் கடிதங்கள் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிடமும் ராசாவால் சமர்பிக்கப்பட்டுள்ளன.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகளை பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் அமைச்சரவை யின் ஒப்புதலின் பேரில் தான் மேற்கொண்டேன் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் இந்த 18 கடிதங்களையும் அவர் முக்கிய ஆதாரமாகக் காட்டக்கூடும் என்று தெரிகிறது.

ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் ஒதுக்கீடு செய்யும் போது நான் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்கவில்லை, அதற்கு உரிய அனுமதியைப் பெற்றிருந்தேன், எனவே நான் நிராபராதி என்று வாதாட ராசா தீர்மானித்துள்ளார்.

இவை தவிர ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோருக்கு தான் எழுதிய கடிதங்களையும் ராசா ஆதாரமாகக் காட்டக் கூடும் என்று தெரிகிறது.


ராசா இந்த வாதங்களை எடுத்து வைக்கும்போது மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்படலாம்.


கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி கைது செய்யப்பட்ட ராசா 4 மாதங்களாக டெல்லி திகார் சிறையில் உள்ளார். ஸ்பெக்ட்ரம் வழக்கு நடக்கும்போதெல்லாம் அவர் பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடு்த்தவாரம் 3வது குற்றப்பத்திரிக்கை-மேலும் சிலருக்கு சிக்கல்:

இந் நிலையில் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அடுத்த வாரம் சிபிஐ தனது 3வது குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்யவுள்ளது. அதில் யார், யாருடைய பெயர்கள் இடம் பெறுமோ என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முதலில் சென்னை, டெல்லி, பெரம்பலூரில் அதிரடி சோதனை நடத்திய சிபிஐ அதன் தொடர்ச்சியாக ராசா, அவரது உதவியாளர் சந்தோலியா, தொலை தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா, ஸ்வான் டெலிகாம் நிறுவன இயக்குனர் ஷாகித் பல்வா ஆகியோரை கைது செய்தது.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை தொகுப்புகளை கொண்டு, கடந்த ஏப்ரல் மாதம் 2ம் தேதி சிபிஐ தன் முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் ஆ.ராசா, சந்தோலியா, சித்தார்த் பெகுரா, ஷாகித் பல்வா நால்வரும் கூட்டுச் சதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந் நிலையில் கடந்த மாதம் 25ம் தேதி சிபிஐ தனது இரண்டாவது குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் திமுக எம்.பி. கனிமொழி, கலைஞர் டி.வி. நிர்வாகி சரத்குமார், மும்பை சினியுக் பிலிம்ஸ் நிறுவன இயக்குனர் கரீம் மொரானி, குசேகான் ரியாலிட்டி நிறுவனத்தின் ராஜீவ் அகர்வால், டி.பி.ரியாலிட்டி நிறுவனத்தின் ஆஷிப் பல்வா ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது. அவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் வினோத் சோயங்கா, யுனிடெக் நிறுவனத்தின் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் நிறுவனத்தின் கெளதம் ஜோஷி, ஹரி நாயர், சுரேந்திர பிபாரா ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டனர். இதுவரை மொத்தம் 14 பேர் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கோடிக்கணக்கில் பணம் எப்படி கை மாறியது என்பதை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் சி.பி.ஐயும், அந்தப் பணம் வெளிநாடுகளில் எப்படி முதலீடு செய்யப்பட்டது என்பதை கண்டறியும் முயற்சிகளில் அமலாக்கப் பிரிவினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அமலாக்கப் பிரிவினரின் விசாரணையில் மொரீசியஸ் தீவில் உள்ள சில வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் பணப் பரிமாற்றம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிபிஐ, அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த 4 அதிகாரிகள் குழு மொரீசியஸ் சென்று விசாரணை நடத்தினர்.

அவர்களுக்கு தேவையான எல்லா தகவல்களையும் கொடுத்து உதவ வேண்டும் என்று மொரீசியஸ் உச்ச நீதிமன்றம் அந்நாட்டு தலைமை நீதிபதிக்கு உத்தரவிட்டுள்ளது. இது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இது சிபிஐக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக இது கருதப்படுகிறது.

இந் நிலையில் மொரீசியசில் உள்ள 15 நிறுவனங்களின் பணப் பரிமாற்றத்தை தற்போது சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவினர் ஆராய்ந்து வருகின்றனர். இந்த நிறுவனங்கள் பலவும் ஒரே தெருவில் உள்ள ஒரே அலுவலகத்தின் முகவரியை தங்களது முகவரியாதத் தந்துள்ளன.

எனவே ஸ்பெக்ட்ரம் ஊழலில் சுருட்டப்பட்ட பணத்தை மொரீசியசில் முதலீடு செய்யவும், அங்கிருந்து இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு அதை முறையாக கொண்டு செல்லவும் இவை போலியாக உருவாக்கப்பட்ட நிறுவனங்களாக இருக்கலாம் என அமலாக்கப் பிரிவு கருதுகிறது.

இந்த பணப் பரிமாற்ற விஷயங்கள், சிபிஐயின் 3வது குற்றப்பத்திரிக்கையில் முழுமையாக இடம் பெறும் என்று தெரிகிறது. இதில் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் மற்றும் இடைத்தரகர்களாக செயல்பட்டவர்களின் பெயர்கள் இடம் பெறலாம். இதைத் தொடர்ந்து அவர்கள் கைதாகலாம்.

நிரா ராடியாவிடம் வருமான வரித்துறை விசாரணை:

இந் நிலையில் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் அமைச்சராக இருந்த ராசாவுக்கும் இடையே இடைத் தரகராக செயல்பட்ட நிரா ராடியாவிடம் வருமான வரித்துறை விசாரணையை ஆரம்பித்துள்ளது.

இதயமும், நுரையீரலும் ரத்தத்தில் துடித்து சாகும் ஈழப்பெண் -அதிர்ச்சி குறுந்தகடு.


வைகோ வெளியிடும் அதிர்ச்சி குறுந்தகடு

மதிமுக 18ம் ஆண்டு துவக்க விழா சென்னை சைதாப்பேட்டையில் 28.5.2011 அன்று நடந்தது. இந்த விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு பேசியபோது,

’’என் அன்பு சகோதர்களே ....நான் இப்போது ஒரு குறுந்தகடு தயாரித்திருக்கிறேன். இன்னும் ஒரு வாரத்தில் அதை வெளியிடப்போகிறேன்.

ஐநாவின் பொதுச்செயலளாரிடம் மூவர் குழு கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் அந்த சேனல் -4’ல் இருந்து புதிதாக சில பிரேம்கள் எடுத்து ஈழத்தின் இனக்கொலை இதயத்தில் ரத்தம் ....அந்த குறுந்தகட்டில் இல்லாத காட்சிகள்; அதில் இடம்பெறாத காட்சிகளை எடுத்து நான் குறுந்தகடு தயாரித்திருக்கிறேன்.

ஐநா மன்றத்தில் கொடுக்கப்பட்ட அறிக்கையைப்பற்றி நான் சொல்லச்சொல்ல அந்த காட்சிகள் வந்துகொண்டேயிருக்கும். 50 நிமிடங்கள் ஓடும் அந்த குறுந்தகடு. ஒரு வாரத்தில் வெளியிடப்போகிறேன்.

நான் தம்பிமார்களை, இளைஞர்களைக் கேட்கிறேன். ஒவ்வொரு கல்லூரி வாயில்களிலும் நின்று அந்த கல்லூரி முடிந்து வரும் பிள்ளைகளிடம் கொடுங்கள்.

அதில் நான் மதிமுகவைச் சொல்லவில்லை. பம்பரம் சின்னத்தைக் காட்டவில்லை. கட்சிக்கொடியை காட்டவில்லை.

நிலைமை என்னவென்று மாணவ, மாணவிகளுக்கு தெரியவேண்டும். அவர்கள் அந்த குறுந்தகட்டை வீடுகளுக்கு எடுத்துச்சென்று எல்லோரையும் பார்க்க வைக்கவேண்டும். அன்று இரவு சாப்பிடமுடியாது; அன்று இரவு தூங்கமுடியாது.

என்னாலே இரண்டாவது முறை அந்த குறுந்தகட்டை பார்க்க முடியவில்லை.

குண்டு பாய்ந்திருக்கிறது ஒரு தாய்க்கு. குண்டு பாய்ந்ததின் விளைவாக அந்த குண்டு முதுகு பக்கமாக வெளியேறியிருக்கிறது.

அப்போது இதயமும், நுரையீரலும் ரத்தில் துடிப்பது அந்த குறுந்தகட்டில் இருக்கிறது. அப்படிச்சாகிறாள். அதைப்பார்த்தால் சாப்பிடமுடியாது; தூங்க முடியாது.

பச்சைக்குழந்தைகள் எப்போது குண்டு வீசுவார்கள் என்று பயந்து பதுங்கிக் கொண்டிருக்கிறார்கள். அடப்பாவிகளா! அவர்கள் புலிகளா.

இசைப்பிரியா கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டாளே. அவளை எப்படி கற்பழித்தோம் என்பதை சிங்கள மொழியில் பேசி செல்போனில் பதிவு செய்திருக்கானுங்க.

இத்தனையும் தாங்கிய குறுந்தகட்டை வெளியிடுகிறேன்’’ என்று தெரிவித்தார்.

ஐ.டி. தலைநகர் தகுதியை பறி கொடுக்கும் பெங்களூர்.


இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகர் என்ற பெருமையை விரைவில் பெங்களூர் இழக்கவுள்ளது. நோய்டா மற்றும் குர்காவ்ன்க்கு அந்தப் பெருமை விரைவில் இடம் மாறும் என்று அசோசம் நடத்தியுள்ள சர்வே ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியதாரர்களின் சொர்க்கபுரியாக ஒரு காலத்தில் விளங்கி வந்த நகரம் பெங்களூர். தோட்ட நகரம், பூ்ங்கா நகரம் என்ற பெருமைகளைக் கொண்டிருந்த பெங்களூர், பின்னர் தகவல் தொழில்நுட்ப தலைநகராக புது அவதாரம் எடுத்தது. ஓய்வுக்காக பெங்களூரில் யாரும் தங்க முடியாது என்ற அளவுக்கு நிலைமையும் மாறிப் போனது. அந்த அளவுக்குத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் படையெடுப்பால் பெங்களூரின் இயல்பும், கடும் விலைவாசியும், விண்ணைத் தொடும் வீட்டு வாடகைகளும், ரியல் எஸ்டேட் விலையும், மூச்சு முட்டும் போக்குவரத்து நெரிசலும் என நகரமே மாறிப் போய் விட்டது.

இந் நிலையில் விரைவில் தகவல் தொழில்நுட்ப தலைநகர் என்ற அந்தஸ்தையும் இழக்கப் போகிறது பெங்களூர் என்கிறார்கள்.

இதற்குக் காரணம் நோய்டா மற்றும் ஹரியானா மாநிலத்தில் உள்ள குர்காவ்ன் ஆகிய நகரங்களை நோக்கி ஐடி நிறுவனங்கள் படையெடுக்க ஆரம்பித்திருப்பதால். பல்வேறு ஐடி நிறுவனங்கள் தொடர்ந்து இந்த நகரங்களுக்கு இடம் பெயர ஆரம்பித்துள்ளதால் விரைவில் பெங்களூரை இந்த இரு டெல்லி 'புற நகர்களும்' முறியடிக்கும் என்கிறார்கள்.

ஐடி தவிர ஐடிஇஎஸ் எனப்படும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பிரிவு, பிபிஓ, கேபிஓ என பல்வேறு நிறுவனங்களும் நோய்டாவை நோக்கி பறக்க ஆரம்பித்துள்ளன என்று இதுதொடர்பாக நடத்தப்பட்ட சர்வே தெரிவிக்கிறது.

பெங்களூர் நகரில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் குறிப்பாக போக்குவரத்து நெரிசல் பல்வேறு ஐடி நிறுவனங்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதே பெங்களூரை விட்டு பல நிறுவனங்கள் கிளம்பும் முடிவுக்கு வர முக்கியக் காரணமாம். மேலும் தலைநகருக்கு மிக அருகாமையில் நோய்டா இருப்பதும், தேவைப்படும் வசதிகள், சூழல் இருப்பதாலும் நோய்டாவுக்கும், குர்காவ்க்கும் ஐடி நிறுவனங்கள் இடம் பெயர விரும்புகின்றனவாம்.

இதுகுறித்து அசோசம் பொதுச் செயலாளர் டி.எஸ்.ராவத் கூறுகையில்,பெங்களூரில் மக்கள் தொகை பெருமளவில் அதிகரித்து விட்டது. அடிப்படை வசதிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல், இட நெரிசல் உள்ளிட்ட பல பிரச்சனைகள் இங்கு உச்சத்தை தொட்டு நிற்கின்றன. மின்பற்றாக்குறை, குடிநீர்ப் பற்றாக்குறை, சாலை வசதிகள் போதுமானதாக இல்லாதது உள்ளிட்ட பலகுறைபாடுகள் நிரம்பி வழிகின்றன.

இவற்றின் காரணமாகவே நோய்டா மற்றும் குர்காவ்னை நோக்கி பலரும் கிளம்ப முக்கியக் காரணம். அதேசமயம், நோய்டா மற்றும் குர்காவ்னில் இந்தப் பிரச்சனைகள் எதுவும் இல்லை என்றார் ராவத்.

நாடு முழுவதும் 800 ஐடி நிறுவனங்களின் தலைமை செயலதிகாரிகள், தலைமை நிர்வாக அதிகாரிகளின் கருத்துக்களைக் கேட்டு இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 30 சதவீத நிறுவனங்கள் கர்கானுக்கு இடம் பெயரவும், 25 சதவீத நிறுவனங்கள் நோய்டாவுக்குச் செல்லவும் விருப்பம் தெரிவித்துள்ளனவாம். 20 சதவீத நிறுவனங்கள் சண்டிகருக்கும், 15 சதவீத நிறுவனங்கள் புனேவுக்கும், 10 சதவீத நிறுவனங்கள் ஹைதராபாத்துக்கும் செல்ல விரும்பியுள்ளன.

பெங்களூர் சற்று சுதாரித்துக் கொள்ளாவிட்டால் மீண்டும் அது பென்ஷனர்களின் பாரடைஸாக மாறும் வாய்ப்பை மறுப்பதற்கில்லை.

இதில் நம்ம மெட்ராசுக்கு வருவதாகவும் பெரிய அளவில் யாரும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு மிக முக்கிய காரணம் மின் தடையாக இருக்கலாம். 'கரண்ட் இருந்தா தானே கம்பெனி நடக்கும்'!

சில்லறை வணிகர்களின் சோற்றில் மண் அள்ளிப் போடும் இந்திய அரசு.


இந்திய அரசு சில்லறை வணிகர்களின் சோற்றில் மண் அள்ளிப் போட்டுவிடக் கூடாது என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:

வணிகத்தில் ஒரே சின்னம் கொண்ட பொருட்களின் விற்பனையில் இங்கு எழுந்த கடும் எதிர்ப்பையும் மீறி 51 விழுக்காடு நேரடி அன்னிய முதலீட்டுக்கு 6 மாதங்களுக்கு முன்பு இந்திய அரசு அனுமதி அளித்தது. ஆனால் தற்போது விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கான ஆய்வுக்குழுவின் தலைவர் கெப்சிக் பாசு, சில்லறை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிப்பதும், விவசாயப் பொருள் கொள்முதல் சட்டத்தில் சில திருத்தங்கள் செய்வதும் விலைவாசியைக் குறைக்க உதவும் என்று கூறியுள்ளார்.

இவரது பரிந்துரையைக் காரணம் காட்டி இந்திய அரசு சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு தொடர்பான முடிவினை விரைவில் எடுக்கும் என்று தெரிகிறது. சில்லறை வணிகத்தில நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிப்பது மிகவும் சீரழிவான ஒன்றாகும்.இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

தமிழ்நாட்டில் 3 லட்சத்திற்கும் அதிகமான சில்லறை வியாபாரிகள் உள்ளனர். சில்லறை வணிகத்தில் ஈடுபடுபவர்கள் அரசின் எந்த உதவியும் இன்றி தங்கள் சேமிப்பின் மூலமோ, சொத்துக்களை விற்றோ, கடன் வாங்கியோ, தங்கள் சொந்த முதலீட்டில் வியாபாரம் செய்கின்றனர். இதற்காக கடுமையாக உழைக்கின்றனர்.

அவர்களின் வாழ்வில் அக்கறை காட்டி, முன்னேற உதவ வேண்டிய அரசுகள் அவர்களுக்கு உதவிகரமாக இல்லாவிட்டாலும் வெளிநாட்டு நிறுவனங்களை அழைத்து வந்து அவர்கள் சோற்றில் மண் அள்ளிப் போடும் கொடுமையை செய்யக் கூடாது. அது கடுமையான எதிர்மறை விளைவை ஏற்படுத்தி விடும்.

ஏற்கனவே பெரிய நிறுவனங்களின் போட்டியைச் சமாளிக்க முடியாமல் நாடு முழுவதும் உள்ள சிறு வியாபாரிகள் திணறுகின்றனர்.கொஞ்சம் கொஞ்சமாக பொருள் இழப்பை எதிர் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு என்பது அவர்களை இந்தத் தொழிலில் இருந்து முற்றிலும் விரட்டி விடும். இதன் விளைவாக உள்நாட்டு வணிகம், விவசாயம், நெசவு போன்ற தொழில்கள் பெருமளவு பாதிக்கப்படக்கூடும். இதனால் பல லட்சம் பேர் வாழ்க்கையைத் தொலைக்க வேண்டிய அபாயம் ஏற்படும்.

சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டினால் பொருட்களின் விலை குறையும் என்பது ஏமாற்றச் செயலாகும். அவர்களுக்கு இந்த நாட்டின் மீதோ, மக்கள் மீதோ அக்கறை கிடையாது. அவர்கள் சொல்லும் தரம், மலிவு என்பதெல்லாம் மாயஜாலம். நடைமுறையில் அவர்கள் இதனை செய்யப்போவது இல்லை.

முதலில் நம் சந்தையைக் கைப்பற்றும் அன்னிய முதலீட்டாளர்கள் காலப்போக்கில் நம் வணிகர்களின் சிறு கடைகள் அழிந்த பிறகு சந்தை விலையை நிர்ணயம் செய்வார்கள். அப்போது மக்கள் நலன் என்பது கருத்தில் கொள்ளப்படாமல் அதிக லாபம் ஒன்றே குறிக்கோளாக இருக்கும். இவர்களால் விலைவாசி மிகக் கடுமையாக அதிகரிக்கும். வேறு எங்கும் பொருட்கள் வாங்க முடியாத நிலை உருவாகும். ஏற்கனவே அரசு மொத்த வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்துள்ளது. ஆனால் இன்று வரை விலைவாசி சிறிதும் குறைந்தபாடில்லை. அப்படியானால் சில்லறை வர்த்தகத்தில் மட்டும் எப்படிக் குறையும்?

மேலும் சில்லறை வணிகம் என்பது வெறும் வியாபாரம் மட்டுமல்ல, அதில் நாட்டின் உணவு உற்பத்தி, உணவுப் பாதுகாப்பு, விவசாயிகளின் நலன், உள்ளுர் தொழில்களின் பாதுகாப்பு, நம் மக்களின் வாழ்வாதாரம் என அனைத்தும் பின்னிப் பிணைந்துள்ளது. கோடிக்கணக்கான தொழிலாளர்களும், சிறு வணிகர்களும், சிறு விவசாயிகளும், சிறு உற்பத்தியாளர்களும் தான் இந்த நாட்டை இதுவரை உருவாக்கினார்கள். காலம் காலமாக அவர்கள் அரும்பாடு பட்டு எட்டிய வளர்ச்சி நம் கண்ணுக்கு முன்னாலேயே இப்பொழுது அழிந்து வருகிறது. அதன் உச்சம் தான் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது ஆகும்.

ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்வது, அரசின் குளிர்பதன சேமிப்பு கிடங்கு கட்டமைப்பை மேம்படுத்துவது, உணவுப் பொருள் பதுக்கலை ஒழிப்பது, பொது விநியோகத் திட்டத்தை சரியாகச் செயல்படுத்துவதன் மூலம் தான் விலைவாசி குறையவும் மக்களுக்கு புத்தம் புதிதாக பொருட்கள் கிடைப்பதற்கும் வழிவகை செய்யலாம்.

அதை விடுத்து சில்லறை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்பது அயோக்கியத்தனம். எநவே, இந்திய அரசு இதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடம் கொடுக்காமல் அனுமதி மறுக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.

மருத்துவம் ஜுன் 2 - என்ஜினீயரிங் விண்ணப்பம் வாங்க இன்று கடைசி நாள்.


என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர விண்ணப்பங்கள் வாங்குவதற்கு இன்று (31.05.2011) கடைசி நாள் ஆகும்.

தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் சேர்த்து மொத்தம் 486 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இதில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் பி.இ., பி.டெக். இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படுகின்றன. என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர கடந்த 16 ந்தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 2 லட்சத்து 20 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டன.

இதுவரை ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் விண்ணப்பங்களை வாங்கிச் சென்றுள்ளனர். விண்ணப்பம் வாங்குவதற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் ஆகும். பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை ஜுன் 3 ந் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) சமர்ப்பிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஜுலை முதல் வாரத்தில் கவுன்சிலிங் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

மருத்துவ படிப்பைப் பொருத்தவரையில் தமிழகத்தில் 17 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 8 தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளும் உள்ளன. ஒரேயொரு அரசு பல்மருத்துவக் கல்லூரியும் 17 தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளும் இருக்கின்றன. கவுன்சிலிங் மூலம் 2,288 எம்.பி.பி.எஸ். இடங்களும், 976 பி.டி.எஸ். சீட்டுகளும் நிரப்பப்பட உள்ளன.

மேலும், சென்னை மருத்துவக் கல்லூரியிலும், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியிலும் கூடுதலாக 200 இடங்களுக்கு அனுமதி பெறப்பட்டு உள்ளது.

மருத்துவக் கல்லூரிகளில் சேர விண்ணப்பங்கள் வாங்குவதற்கு ஜுன் 2 ந் தேதி கடைசி நாள் ஆகும்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர கடந்த 16 ந் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் இதுவரை 22 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளன. விண்ணப்பங்கள் வாங்கவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும் ஜுன் 2 ந் தேதி கடைசி நாள் ஆகும். ரேங்க் பட்டியல் 21 ந் தேதியும், முதல்கட்ட கவுன்சிலிங் 30 ந் தேதியும் தொடங்கும் என்று மருத்துவக்கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

1000 படகுககளின் உரிமம் ரத்து ; மீன் துறை அதிரடி.


நாற்பத்தைந்து நாட்கள் தடைக்காலம் முடிந்ததையடுத்து விசைப்படகு மீனவர்கள் உற்சாகத்துடன் இன்று அதிகாலை முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

தடைக்காலம் முடிந்ததும் டோக்கன் பெறாமல் நூற்றுக்கணக்கான மீனவர்கள் நேற்று மாலையே கடலுக்குச் சென்றுவிட்டனர். ராமேஸ்வரம் பகுதியில் உள்ள 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 படகுகள் மட்டுமே டோக்கன் பெற்று கடலுக்குச் சென்றுள்ளன.

மண்டபம் பகுதியில் உள்ள 570 விசைப்படகுகளில் 234 படகுகள் மட்டுமே டோக்கன் வாங்கிச் சென்றன. 336 படகுகள் டோக்கன் பெறாமல் நேற்று மாலையை கடலுக்குச் சென்றன. அதேபோல, மண்டபம் பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட படகுகளில் ஒரு சில படகுகள் மட்டுமே டோக்கன் பெற்றுச் சென்றுள்ளன.

டோக்கன் பெறாமல் விசைப்படகுகள் கடலுக்குச் சென்றுள்ளது மீன்துறை அதிகாரிகளை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து மீன்துறை உதவி இயக்குநர் மார்க்கண்டேயன் ராமநாதபுரம் கலெக்டர் ஹரிஹரனை நேரில் சந்தித்து டோக்கன் பெறாமல் சென்ற மீனவர்கள் குறித்து புகார் தெரிவித்தார்.

அனுமதி பெறாமல் சென்ற மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மீன்துறை அனுமதி பெறாமல் சென்ற படகுகளுக்கு டீசல் மானியம் ரத்து செய்யப்பட்டதோடு மீன் பிடி உரிமமும் ரத்து செய்யப்பட்டது. இதனால் இந்த ஆண்டும் மீனவர்கள் மீதான நடவடிக்கை தொடரும் என அதிகாரிகள் கூறினர்.

கஞ்சா வழக்கு ஆரம்பம் - திருச்சி மாவட்ட திமுக துணை செயலாளர் கைது.


திருச்சி மாவட்ட திமுக துணைச் செயலாளரும், ஸ்ரீரங்கம் கோயிலின் முன்னாள் அறங்காவலருமான குடமுருட்டி சேகர், நேற்று (31.05.2011) இரவு காரில் சென்றுகொண்டிருந்தபோது, காவல்துறையினர் அவரது காரை மடக்கி விசாரணை செய்தனர். அவரின் காரையும் பரிசோதனை செய்ய வேண்டும் என்று காவல்துறையினர் கூறியதாகவும், அதற்கு சேகர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் போலீசார் காரை சோதனை செய்தனர். அப்போது காரில் கஞ்சா இருந்ததாகவும், போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் இரண்டு பிரிவின் கீழ் சேகர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர். மேலும் போலீசார் சேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்ட திமுக துணை செயலாளர் கைது செய்யப்பட்டிருப்பது அந்த மாவட்ட திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்லேடன் மறைவிடத்தை காட்டிக்கொடுத்த தலிபான் தலைவர்.

அமெரிக்காவிடம் பின்லேடன் மறைவிடத்தை காட்டிக்கொடுத்த தலிபான் தலைவர்

பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத்தில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த அல்கொய்தா தீவிரவாதி பின்லேடன் அமெரிக்க ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவருக்கு கூரியர் கடிதம் மூலம் தகவல் பரிமாற்றம் செய்து வந்த அபுஅகமது அல்- குவைதியுடன் டெலிபோன் பேச்சை ஒட்டுக் கேட்டு பின்லேடன் இருப்பிடத்தை அமெரிக்கா மோப்பம் பிடித்ததாக தகவல் வெளியானது.

தற்போது அது உண்மை இல்லை. பின்லேடன் இருப்பிடத்தை காட்டிக் கொடுத்தது தலிபான் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் முல்லா அப்துல் ஹானிபிராதர் என தெரிய வந்துள்ளது. இந்த தகவலை இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகை வெளியிட்டுள்ளது.

இவர் பின்லேடன் நண்பர்களில் ஒருவராக திகழ்ந்தவர். தலிபான் இயக்கத்தை தோற்றுவித்த தலைவர்களில் ஒருவராவர். ஆப்கானிஸ்தானில் ரோட்டோரங்களில் நடைபெறும் குண்டு வெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தி வருவதில் வல்லவர்.

இதுதொடர்பாக கடந்த ஆண்டு பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் அமெரிக்க படையினரால் அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் அமெரிக்க புலனாய்வு துறையினர் விசாரணை நடத்தினர். அப்போதுதான் பாகிஸ்தானில் பின்லேடன் பதுங்கி இருந்த ரகசிய இடம் பற்றி அவர் அமெரிக்க உளவுத்துறையிடம் தெரிவித்தார்.

இது குறித்து ஒரு ரகசிய உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது. அதாவது, தலிபான்கள் அதிகம் இருக்கும் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் ஆக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதை அமெரிக்கா ஏற்று அறிவித்தது. இதற்கிடையே, கடந்த அக்டோபர் மாதம் அவர் விடுவிக்கப்பட்டார். இந்த தகவலையும், அந்த பத்திரிகையில் வெளியாகி உள்ளது.

மாவட்ட கலெக்டர்கள் 21 பேர் அதிரடி மாற்றம்.


தமிழகத்தில் 21 மாவட்ட கலெக்டர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.

அதன் விவரம் வருமாறு:-

1.பி.உமாநாத் கோவை கலெக்டர் - தமிழக அரசின் நிதித்துறை இணை செயலாளர்

2.பி.சீத்தாராமன் கடலூர் கலெக்டர் - சுனாமி நீடித்த வாழ்வாதார திட்ட இயக்குனர்

3.எம்.வள்ளலார் திண்டுக்கல் கலெக்டர் - தொழில் மற்றும் வர்த்தக துறை கூடுதல் கமிஷனர்

4. சி.காமராஜ் ஈரோடு கலெக்டர் - போக்குவரத்து துறை துணை செயலாளர்

5.ராஜேந்திர ரத்னு கன்னியாகுமரி கலெக்டர் - சிறப்பு திட்ட செயலாக்கத்துறை இணை செயலாளர்

6.ஜெ.உமா மகேஸ்வரி கரூர் கலெக்டர் - உயர் கல்வித்துறை இணை செயலாளர்

7.ஆர்.பழனிச்சாமி விழுப்புரம் கலெக்டர் - நகராட்சி நிர்வாகத்துறை இணை கமிஷனர்

8.எம்.விஜயகுமார் பெரம்பலூர் கலெக்டர் - சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை துணை செயலாளர்

9.ஏ.சுகந்தி புதுக்கோட்டை கலெக்டர் - சமூக நலம் மற்றும் சத்துணவுத்துறை துணை செயலாளர்

10.டி.என்.அரிகரன் ராமநாதபுரம் கலெக்டர் - ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை துணை செயலாளர்

11.ஜெ.சந்திரகுமார் சேலம் கலெக்டர் - வருவாய் துறை இணை செயலாளர்

12.எம்.எஸ்.சண்முகம் தஞ்சாவூர் கலெக்டர் - தொழில் துறை இணை செயலாளர்

13.எம்.ஜெயராமன் திருநெல்வேலி கலெக்டர் - தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணை செயலாளர்

14.டி.பி.ராஜேஷ் திருவள்ளூர் கலெக்டர் - தமிழ் வளர்ச்சி, இந்து சமய அறநிலைய துறை, செய்தித்துறை துணை செயலாளர்

15. சி.சமயமூர்த்தி திருப்பூர் கலெக்டர் - பொதுத்துறை இணைச் செயலாளர்

16.வி.கே.சண்முகம் விருதுநகர் கலெக்டர் - வேளாண்மைத்துறை இணை செயலாளர்

17. டி.கே.பொன்னுசாமி அரியலூர் கலெக்டர் - எரிசக்தித்துறை இணை செயலாளர்

18.வி.பழனிக்குமார் வேலூர் கலெக்டர் - எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குனர் மற்றும் உறுப்பினர் செயலர்

19.எஸ்.மதுமதி நாமக்கல் கலெக்டர் - சென்னை மாநகராட்சி இணை கமிஷனர் (சுகாதாரம்)

20.வி.சம்பத் சிவகங்கை கலெக்டர் - தமிழ்நாடு தொழில் வெடிமருந்து நிறுவன நிர்வாக இயக்குனர்

21. மகேசன் காசிராஜன் திருச்சி கலெக்டர் - நில வடிநீர் முகமை செயல் இயக்குனர்.

நாளை முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.35 உயருகிறது.


பெட்ரோல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து வருகின்றன. 5 மாநில சட்டசபை தேர்தல் காரணமாக, கடந்த ஜனவரி மாதத்துக்கு பிறகு, 4 மாதங்களாக பெட்ரோல் விலைஉயர்த்தப்படவில்லை. தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், கடந்த 15-ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய்க்கு மேல் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், பெட்ரோல் விலை நாளை புதன்கிழமை முதல் மீண்டும் உயர்த்தப்படுகிறது. இத்தகவலை முன்னணி பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. லிட்டருக்கு ஒரு ரூபாய் 35 காசுகள், விலை உயர்த்தப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

திஹார் சிறையில் எப்படி இருக்கிறார் ராசா?


முன்னாள் அமைச்சர் ராசா திஹார் சிறைக்கு உள்ளே வந்து மூன்று மாதங்களாகி விட்டது. வெளியில் எத்தனையோ நடந்து முடிந்து விட்டது. உற்ற நண்பர் சாதிக் பாட்சா உயிரிழந்து விட்டார்.ஆட்சி பறி போய் விட்டது. சக எம்.பி. கனிமொழியும் கைதாகி உள்ளே வந்து விட்டார். இத்தனையையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.

சுறுசுறுப்பாக இயங்கி வந்த ராசா, இன்று ஒரு குட்டி அறையில் டிவி, செய்தித் தாள்கள், புதிதாக கிடைத்த நண்பர்கள் சகிதம் முடங்கிக் கிடக்கிறார்.

காலையில் சின்னதாக ஒரு வாக்கிங், மாலையில் சக கைதிகளுடன் பேட்மிண்டன் என்று பொழுது போய்க் கொண்டிருக்கிறது ராசாவுக்கு. ஆரம்பத்தில் மகா இறுக்கமாக காணப்பட்ட ராசா இன்று சற்று ரிலாக்ஸ்டாக தெரிகிறார். சிறை வாழ்க்கை இப்போது அவருக்குப் பழகி விட்டது.

ராசா குறித்து திஹார் சிறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பிற விஐபி கைதிகளைப் போல அல்லாமல், வெகு விரைவிலேயே சிறை வாழ்க்கைக்குப் பழகிக் கொண்டு விட்டார் ராசா. ஆரம்பத்தில் அவர் யாருடனும் சரியாக பேசவில்லை. அமைதியாக இருந்தார். பிற கைதிகளுடன் பேச மாட்டார். ஆனால் தற்போது அப்படி இல்லை. நன்றாகப் பேசுகிறார். பிற கைதிகளுடன் சகஜமாக பேசிப் பழகுகிறார். சிலர் அவருக்கு நண்பர்களாகி விட்டனர். அவரிடம் நண்பர்களாகியுள்ள பலரும் ஆயுள் தண்டனைக் கைதிகளாவர் என்றார்.

பிப்ரவரி 17ம் தேதி ராசா திஹார் சிறைக்கு வந்தார். அன்று முதல் இன்று வரை அவர் படு சமர்த்தாக இருந்து வருகிறாராம். எந்தவிதமான பிரச்சினையும் செய்வதில்லை. மிகமிக ஒழுங்கு கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்கிறாராம்.

மிக மிகப் பெரிய ஊழல் புகாரை தன் தலை மீது வைத்திருந்தாலும், ராசாவின் பழக்க வழக்கம், படு எளிமையாக உள்ளதாம். திஹார் சிறையின் முதலாவது சிறையில், 9வது வார்டில் அடைக்கப்பட்டிருக்கிறார் ராசா. அதே சிறையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சம்பந்தப்பட்டு கைதாகியுள்ள மேலும் சிலரும் அடைக்கப்பட்டுள்ளனர்.

தினசரி காலை 5 மணி முதல் 6 மணி வரை சிறைக்குள் வாக்கிங் போகிறார் ராசா. தான் அடைக்கப்பட்டுள்ள வார்டுக்குள்ளேயே இந்த வாக்கிங். அந்த வார்டில் உள்ள 14 கைதிகளுடனும் அவர் நண்பராகப் பழங்குகிறார்.

முதலில் சிறை சாப்பாட்டை சாப்பிட்டு வந்தார் ராசா. ஆனால் அது அவருக்குப் பிடிக்கவில்லை. இதையடுத்து வீட்டுச் சாப்பாட்டை சாப்பிட ஆரம்பித்தார். ஆரம்பத்தில் அவருக்கு மட்டும் சாப்பாடு வரும். பின்னர் நண்பர்கள் அதிகமாகவே அவருக்கு கொண்டு வரப்படும் சாப்பாட்டு பாத்திரத்தின் சைஸ் பெரிதாகி விட்டது. இப்போது தனக்கு கொண்டு வரப்படும் சாப்பாட்டை தனது சக கைதிகளுடன் பகிர்ந்து கொண்டு சாப்பிடுகிறார் ராசா.

இட்லி, வடை, சாம்பார், ரசம், தயிர்ச் சாதம் என தென்னிந்திய உணவு வகைகளை மட்டுமே சாப்பிடுகிறார் ராசா.

தனது அறையில் கொடுக்கப்பட்டுள்ள டிவியைப் பார்க்கும் ராசா, செய்தித் தாள்களையும், புத்தகங்களையும் படிக்க அதிக நேரம் செலவிடுகிறார். மாலையில் சக கைதிகளுடன் சேர்ந்து பேட்மிண்டன் ஆடுகிறார்.

பிற கைதிகளுடன் ஒப்பிடுகையில் ராசா மிக மிக ஒழுங்குடன் இருக்கிறார் என்கிறார்கள் சிறை அதிகாரிகள்.

அவர் எந்த சிறப்புச் சலுகைகையும் எங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. தமிழ் செய்தித் தாள்களை தாருங்கள் என்பது மட்டுமே அவர் வைத்த ஒரே கோரிக்கை. மற்ற எதையும் அவர் எதிர்பார்க்கவில்லை.

தற்போது கடந்த சில நாட்களாக சிறை சாப்பாட்டையே மீண்டும் சாப்பிட ஆரம்பித்துள்ளார் ராசா.

சிறை வளாகத்தில் உள்ள கேன்டீனில் விற்கும் ஸ்னாக்ஸ் அவருக்குப் பிடித்துப் போய் விட்டது. அடிக்கடி அதை வாங்கிச் சாப்பிடுகிறார். அப்படி வாங்கும்போது சக கைதிகளுக்கும் சேர்த்தே வாங்குகிறார்.

திஹார் சிறைக்குள் பணப் புழக்கத்திற்குத் தடை உள்ளது. கூப்பன் கொடுத்துதான் பொருட்களைப் பெற முடியும். அதாவது கைதிகளை வாரத்திற்கு 2 முறை உறவினர்கள் பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். அப்படி வரும்போது ஒரு முறைக்கு 1000 ரூபாயை சிறை அதிகாரிகளிடம் கொடுத்து அதற்குப் பதில் கூப்பன்களாகப் பெற்று அதை கைதிகளிடம் தரலாம். கைதிகள் அந்த கூப்பனைப் பயன்படுத்தி தங்களுக்குத் தேவையான ஸ்னாக்ஸ் போன்றவற்றை சிறை கேன்டீனில் பெற முடியும்.

ராசா அடைக்கப்பட்டுள்ள வார்டில் மேலும் இரு விஐபிக்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். இருவரும் மூத்த போலீஸ் அதிகாரிகள். ஒருவரது பெயர் எஸ்.எஸ். ராத்தி. இவர் டெல்லி காவல்துறையின் முன்னாள் உதவி ஆணையர் ஆவார். 1997ல் கன்னாட் பிளேஸில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பந்தமாக கைதாகி தண்டனை அனுபவித்து வருகிறார்.

இன்னொருவர் ஆர்.கே.சர்மா. இவர் பத்திரிக்கையாளர் ஷிவானி பட்நாகரைக் கொன்ற வழக்கில் கைதாகி தண்டனை அனுபவித்து வருகிறார்.

ராசா எப்போது வெளியே வருவார் என்பது யாருக்கும் தெரியவில்லை. ஆனால் கனிமொழியை முதலில் பெயிலில் எடுக்கவே திமுக தரப்பு படு தீவிரமாகவும், ஆர்வமாகவும் இருப்பதாக திமுகவினரே கூறுகிறார்கள். எனவே ராசா இப்போதைக்கு வெளியே வரும் வழி தெரியவில்லை என்பது அவர்களின் கருத்து. ராசாவுக்கும் இது தெரிந்திருக்கும். எனவேதான் அவர் முன்பை விட இப்போது மிகுந்த ரிலாக்ஸ்டான மன நிலைக்குத் தன்னை மாற்றிக் கொண்டு விட்டார்.

வெளியே வரும்போது மிகச் சிறந்த பேட்மிண்டன் வீரராக ராசா உருவெடுத்து இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

புகைப் பிடிப்பதால் இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் மரணங்கள்.


புகைப் பிடிப்பதாலும், புகையிலை பொருட்களை பயன்படுத்துவதாலும் உலகம் முழுவதும் 60 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். அதில் 10 லட்சம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக புகையிலை எதிர்ப்பு நாள் நாளை கடைபிடிக்கப்படுகிறது. புகைப் பிடிப்பதாலும், புகையிலை பொருட்களை பயன்படுத்துவதாலும் உலகம் முழுவதும் 60 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.

அதில் 10 லட்சம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். 2008ம் ஆண்டு மத்திய நலத்துறை அமைச்சராக இருந்த அன்புமணியின் முயற்சியால் நடைமுறைப்படுத்தப்பட்ட பொது இடங்களில் புகைப் பிடிப்பதை தடை செய்யும் சட்டம் தொடக்கத்தில் தீவிரமாக செயல்படுத்தப்பட்டபோதிலும், காலப்போக்கில் கைவிடப்பட்டுவிட்டது. அதை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்ற விதியும் பெயரளவிலேயே உள்ளது. இதை மிகக் கடுமையாக செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.

புகையிலை பொருட்கள் தொடர்பான அனைத்து விளம்பரங்களையும் தடை செய்வதுடன், புகையிலை பொருட்களின் மீதான வரிகளையும் அதிகரிக்க வேண்டும்.

இதற்கெல்லாம் மேலாக புகையிலைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்பு என்பது யாரோ சம்பந்தப்பட்ட விஷயம் என்று எண்ணாமல் அனைவருக்கும் தீங்கு என்பதை உணர்ந்து சமுதாயத்தில் உள்ள அனைவரும் புகையிலைக்கு எதிராக போராட முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.

Monday, May 30, 2011

கனிமொழி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு.


ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கனிமொழிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்கவில்லை. இதனால் அவர் திகார் சிறையில் இருக்கிறார்.

இவர் ஜாமீன் கேட்டு டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது.

பின்னர் மறுதேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமாரின் ஜாமீன் மனு விசாரணை தீர்ப்பும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம் - படம்.


மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும் புகழ்பெற்ற நடிகருமான எம்.ஜி.ஆருக்கு தமிழகம் முழுவதிலும் பல ஊர்களில் கோயில்கள் உள்ளன.

சென்னையில் பெரம்பூரில் அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம் உள்ளது. தற்போது திருநின்றவூரில் அருள்மிகு எம்.ஜி.ஆர் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.

திருநின்றவூர் நத்தம் மேடு கிராமத்தில் உள்ள செல்லியம்மன் சாலையில் கோவில் கட்டப்பட்டு உள்ளது. 1800 சதுர அடி மனையில் இந்த கோவில் அமைக்கப்பட்டுள்ளது. பூமி பூஜை செய்து அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயத்தை எழுப்பி உள்ளனர்.

இந்த கோவிலுக்குள் எம்.ஜி.ஆர். உருவப்படம் வைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குள் நிர்மானிக்க எம்.ஜி.ஆரின் உருவச்சிலை தயாராகி வருகிறது. 5 அடி உயரத்தில் இந்த சிலை உருவாகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் கைதேர்ந்த சிற்பிகள் இச்சிலையை செய்து வருகின்றனர்.

பக்தர்கள் கோவிலுக்குள் வந்து அபிஷேகம் செய்வதற்காக 2 அடி உயரம் கொண்ட கருங்கல் சிலையும் தயாராகிறது. இரண்டு மாதத்தில் இந்த சிலைகள் கோவிலுக்குள் நிர்மானிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.

எம்.ஜி.ஆர் கோவிலை சென்னை புதுப்பேட்டையை சேர்ந்த கலைவாணன் அவரது மனைவி சாந்தி ஆகியோர் கட்டி உள்ளனர்.

இது குறித்து கலைவாணன், ‘’சிறு வயதில் இருந்தே நான் தீவிர எம்.ஜி.ஆர். ரசிகன். அவரை தெய்வமாக நினைத்து வீட்டில் தினமும் உருவப்படத்துக்கு பூஜை செய்து வருகிறேன். பின்னர் கோவில் கட்டவும் முடிவு செய்தேன். அது தற்போது நிறைவேறியுள்ளது’’ என்றார்.

மரியம் பிச்சை மரணத்திற்கு காரணமான லாரி டிரைவர் பிடிபட்டார்.


அமைச்சர் மரியம் பிச்சை மரணத்திற்கு காரணமான லாரி பிடிபட்டது. லாரி டிரைவரும் பிடிபட்டான். லாரி உரிமையாளரையும் கைது செய்து விசாரணை செய்ய போலீஸ் முடிவு செய்துள்ளது.

சென்னையில் எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பு விழாவிற்காக அமைச்சர் மரியம்பிச்சை, திருச்சியில் இருந்து காரில் கடந்த 23ம் தேதி சென்றபோது, பாடாலூர் அருகே காரும், லாரியும் மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் அமைச்சர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்தில் மர்மம் இருப்பதால், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

கூடுதல் டி.ஜி.பி., அர்ச்சனா ராமசுந்தரம் தலைமையில் விசாரணை நடந்தது. சாலையின் சோதனைச் சாவடியில் பொருத்தப்பட்டுள்ள சுழல் காமிராவில் பதிவான, லாரிகள் குறித்த விபரங்களை சேகரித்தனர்.அதன் அடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டில் இருந்து தப்பிச்சென்ற லாரியை மேற்கு வங்கத்தில் மடக்கிப் பிடித்தனர் போலீசார். பிடிபட்ட லாரியை மேற்கு வங்கத்தில் இருந்து சென்னைக்கு கொண்டு வருகின்றனர் பிசிஐடி போலீசார்.

மரியம் கார் மீது மோதிவிட்டு தப்பிச்சென்ற லாரி டிரைவரையும் போலீசார் கைது செய்தனர்.

லாரியின் உரிமையாளர் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்பது விசாரனையில் தெரிய வந்துள்ளது. அவரையும் கைது செய்து விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு : கரிம் மொரானி ஜாமீன் மனு தள்ளுபடி,


2ஜி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சினியுக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கரிம் மொரானியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ஆதாயம் பெற்ற ஸ்வான் டெலிகாம்ஸ் நிறுவனம். அதன் ஒரு அங்கமான சினியுக் நிறுவனம் வாயிலாக கலைஞர் டி.வி.,க்கு ரூ.214 கோடி பணத்தை பரிவர்த்தனை செய்தது என்பது சி.பி.ஐ., யின் குற்றச்சாட்டு. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கரிம் மொரானி ஜாமின் கோரி டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அவரது மனுவை கடந்த 23ம் தேதியன்று டில்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் அவர் டில்லி சி.பி.ஐ., கோர்ட்டில் தாக்கல் செய்த ஜாமின் மனு மீதான விசாரணையை 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி இன்று நடைபெற்ற ஜாமின் மனு மீதான விசாரணையில் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சி.பி.ஐ., கோர்ட் உத்தரவுவிட்டது. மேலும் அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளது இதனையடுத்து கரிம் மொரானி திகார் சிறையில் அடைக்கப்படுகிறார்.

நடிகர் விக்ரமுக்கு டாக்டர் பட்டம் வழங்கியது இத்தாலி பல்கலைக்கழகம்.


110 ஆண்டுகள் பாரம்பரியமிக்க இத்தாலியின் மிலன் பல்கலைக் கழகம், நடிகர் விக்ரமும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

இத்தாலியின் மிலன் நகரில் உள்ளது மிலன் பல்கலைக்கழகம் (Universita Popolare Degli Studi Di Milano - UUPN). 110 ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்வி நிறுவனம் இது. மிலன் மக்கள் பல்கலைக்கழகம் என்றும் இதனை அழைக்கின்றனர்.

நுண்கலை மற்றும் நடிப்புப் பிரிவில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் டாக்டர் பட்டம் வழங்குகிறது இந்த பல்கலைக் கழகம்.

இந்த ஆண்டு தமிழ் நடிகர் விக்ரமுக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது மிலன் பல்கலைக்கழகம். ஐரோப்பிய பல்கலைக் கழகம் ஒன்றில் டாக்டர் பட்டம் பெறும் முதல் நடிகர் விக்ரம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிற்றுக்கிழமை மிலன் பல்கலைக் கழகத்தின் தலைவர் போராசிரியர் டாக்டர் மார்கோ கிராபிசியா, துணைத் தலைவர் மற்றும் செனட் உறுப்பினர்கள் முன்னிலையில் இந்த கவுரவ டாக்டர் பட்டம் விக்ரமுக்கு வழங்கப்பட்டது.

பட்டத்தை ஏற்றுக் கொண்ட விக்ரம், பின்னர் வந்திருந்தவர்கள் முன்னிலையில் உரையாற்றினார்.

மகனை ஒப்படைக்க கோரி முதல் கணவர் வீட்டு முன்பு நடிகை வனிதா உண்ணாவிரதம்.


நடிகை வனிதாவுக்கும் அவரது முதல் கணவர் ஆகாசுக்கும் பிறந்த மகன் விஜய் ஸ்ரீஹரியை இருவரும் தங்களிடம் ஒப்படைக்க கோரி போராடி வருகின்றனர். தற்போது விஜய் ஸ்ரீஹரி ஆகாஷ் வசம் இருக்கிறான். அவனை தன்னிடம் ஒப்படைக்கும்படி வனிதா வற்புறுத்தி வருகிறார்.

இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. “விஜய் ஸ்ரீஹரி வாரத்தில் 3 நாட்கள் வனிதாவிடம் இருக்க வேண்டும் என்றும் மற்ற நாட்கள் ஆகாஷ் பாதுகாப்பில் இருக்க வேண்டும்” என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.

ஆனால் கோர்ட்டு தீர்ப்புப்படி மகனை ஆகாஷ் தன்னிடம் ஒப்படைக்கவில்லை என்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வனிதா நேற்று முன்தினம் புகார் அளித்தார்.

இப்பிரச்சினை மீது போலீசார் விசாரணை நடத்தினர். விஜய் ஸ்ரீஹரியிடம் போலீசார் பேசினர். அப்போது அவன் வனிதாவுடன் செல்ல பிடிவாதமாக மறுத்து விட்டான்.

இதையடுத்து விஜய் ஸ்ரீஹரியை குழந்தைகள் நல மருத்துவரிடம் காட்டி ஆலோசனை பெற வேண்டும் என்று கோர்ட்டு அறிவுறுத்தியது. இந்த நிலையில் விஜய் ஸ்ரீஹரியை தன்னிடம் ஒப்படைக்க வற்புறுத்தி வனிதா இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.

காலை 12 மணிக்கு படுக்கையுடன் சாலிகிராமம் லோகையா வீதி 5-வது குறுக்கு தெருவில் உள்ள ஆகாஷ் வீட்டுக்கு வந்தார். தனது பெண் குழந்தையையும் உடன் அழைத்து வந்தார். ஆகாஷ் வீட்டு முன் படுக்கையை விரித்தார். அதில் அமர்ந்து உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்தனர். வனிதாவிடம் அவர்கள் சமரசம் பேசினர். ஆனால் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்து விட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

உண்ணாவிரதம் இருப்பது பற்றி வனிதா கூறியதாவது:-

எனது மகனை என்னுடன் அனுப்பி வைக்க வேண்டும் என்று கடந்த 7 மாதங்களாக ஐகோர்ட்டு முதல் சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று வந்து விட்டேன். ஆனாலும் எனக்கு நீதி கிடைக்கவில்லை.

என் குழந்தையை என்னுடன் அனுப்ப ஆகாஷ் மறுக்கிறார். என்னைப் பற்றி தவறான தகவல்களை ஸ்ரீஹரியிடம் சொல்லி என்னுடன் சேர விடாமல் மிரட்டுகிறார். என் குழந்தை இல்லாமல் இந்த இடத்தை விட்டு நான் நகர மாட்டேன்.

தண்ணீர், சாப்பாடு, கூட சாப்பிட மாட்டேன். இங்கிருந்து என் குழந்தையோடுதான் செல்வேன். இல்லையென்றால் சாவேன். ஆகாஷ் செய்யும் தவறை போலீசார் கண்டு கொள்ளவில்லை. கீழ்மட்டத்தில் உள்ள போலீசார் தவறு செய்கிறார்கள்.

என் குழந்தை என்னிடம் சேராமல் இருப்பதற்கு போலீசாரும் ஒரு காரணம். இந்த அரசு மீது எனக்கு நம்பிக்கையிருக்கிறது. என் குழந்தையை என்னிடம் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

பெத்த குழந்தையை மீட்க எனக்கு உரிமை இல்லையா? இந்த பிரச்சினைக்கு பின்னால் என் தந்தை இருக்கிறார். கோர்ட்டு உத்தரவுபடி என் குழந்தையை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு வனிதா கூறினார்.

வனிதா உண்ணாவிரதம் தொடங்கிய சிறிது நேரத்தில் ஆகாஷ் வீட்டில் இருந்து வெளியேறினார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

கோர்ட்டு உத்தரவுபடி விஜய் ஸ்ரீஹரி விருப்பபட்டால் வனிதாவை 3 நாட்கள் சந்திக்கலாம். அவன் தனது தாயாரை பார்க்க விருப்பம் இல்லாத பட்சத்தில் அவனை சமாதானப்படுத்தி தாயார் வனிதாவிடம் அனுப்பலாம். ஆனால் அவன் போக மறுக்கிறான். தாயார் குழந்தையிடம் அன்பாக இருந்தால் பாசத்துடன் செல்லும். அவனை வனிதாவிடம் செல்ல கட்டாயப்படுத்தினால் அவரிடம் செல்ல மறுத்து அடம் பிடிக்கிறான்.

அதனால் மனோத்துவ டாக்டரை அணுகி குழந்தையை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறேன். 3 வருடம் குழந்தை ஹரி வனிதாவிடம் இருந்தது. இப்போது 3 நாள் அவருடன் அனுப்புவதில் எனக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. என்னிடம் இருந்து அவன் செல்ல மறுக்கிறான். ஆனால் வலுக்கட்டாய மாக வனிதா இழுப்பதால் வெறுக்கிறான். இதனால் திடீர் என்று அவன் எப்படி மாறுவான்.

இவ்வாறு ஆகாஷ் கூறினார்.

ஆஸ்கர் விருதை பணம் கொடுத்து வாங்கினேனா..? ரஹ்மான் ஆவேசம்


ஆஸ்கர் விருதைப் பெற பணம் கொடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்துள்ளார் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான்.

இந்தி பட இசை அமைப்பாளர்களில் ஒருவரான இஸ்மாயில் தர்பார் சமீபத்தில் நாக்பூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மீது சரமாரியாக குற்றம்சாட்டினார்.

அவர் கூறுகையில், 2008-ம் ஆண்டு வெளியான ஸ்லம்டாக் மில்லினர் படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் 2 விருதுகளை வாங்கியதில் சந்தேகமாக உள்ளது. விளம்பரத்துக்காக அவர் பணம் கொடுத்து இந்த விருதுகளை வாங்கியுள்ளார் என்றே நினைக்கிறேன்.

உண்மையிலேயே ஏ.ஆர்.ரஹ்மான் திறமை உள்ளவர் என்றால் ரோஜா அல்லது பம்பாய் படத்துக்கு ஆஸ்கார் விருது வாங்கி இருக்க வேண்டியதுதானே? அவர் பணம் கொடுத்துதான் விருது வாங்கினார் என்று எனக்குத் தெரியும், என்றார்.

உடனே அவரிடம் நிருபர்கள் ஏ.ஆர்.ரஹ்மான் மீது நீங்கள் சுமத்தும் குற்றச்சாட்டுக்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா? எதை வைத்து இந்த குற்றச்சாட்டை சொல்கிறீர்கள்? என்று கேட்டனர்.

அதற்கு இஸ்மாயில் தர்பாரால் ஆதாரத்துடன் பதில் சொல்ல முடியவில்லை. இதையடுத்து இஸ்மாயிலுக்கு பல்வேறு துறையினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் மீது தேவை இல்லாமல் புழுதி வாரி தூற்றக்கூடாது என்று இந்திப்பட உலகினர் கூறியுள்ளனர்.

இந்தியர்களுக்கு ஆஸ்கார் விருது மூலம் பெருமை தேடி தந்தவர் ரஹ்மான். அவரை பற்றி இப்படியெல்லாம் பேசக்கூடாது என்று மற்றொரு இசை அமைப்பாளர் லலித் பண்டிட் கூறினார்.

இது தொடர்பாக ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேட்கப்பட்டது. உடனடியாக அவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார். அவர் கூறுகையில், ஆஸ்கார் விருதுகளை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது. 3 ஆயிரம் மக்களால் விருதுகள் தேர்வு நடக்கிறது. எப்படி பணம் கொடுத்து வாங்க முடியும், என்றார்.

19வது மனைவியாக, 20 வயது இந்திய பெண் தேடும் அரேபிய நாட்டு 65வயது கிழவர்.

90 குழந்தை பெற்றும் ஆசை தீரவில்லை: 19-வது மனைவியை தேடும் சவுதி அரேபியா நாட்டு கிழவர்; 20 வயது படித்த இந்திய பெண் வேண்டும் என்கிறார்
ஐக்கிய அரபு குடியரசு நாட்டைச் சேர்ந்தவர் முகம்மது அல்பலுசி. 65 வயதாகும் இந்த கோடீசுவரர் இதுவரை 17 பெண்களை திருமணம் செய்துள்ளார். 17 மனைவி மூலம் இவருக்கு 90 குழந்தைகள் பிறந்துள்ளனர். அந்த 90 பேரில் பலருக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்து விட்டது.

அந்த வகையில் முகம்மது அல்பலுசிக்கு 50 பேரன்- பேத்திகள் உள்ளனர். தற்போது அவரது மனைவிகளில் 2 பேர் கர்ப்பமாக உள்ளனர். எனவே முகம்மது அல்பலுசியின் குழந்தைகள் எண்ணிக்கை விரைவில் 92 ஆக உயர உள்ளது.

என்றாலும் முகம்மது அல்பலுசிக்கு இன்னமும் திருமணம் செய்து கொள்ளும் ஆசையும் குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசையும் விடவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் அவர் பாகிஸ்தான் பெண் ஒருவரை 18-வது மனைவியாக திருமணம் செய்ய உள்ளார்.

முகம்மது அல்பலுசிக்கு திருமணம் செய்து கொள்ளும் 4-வது பாகிஸ்தான் பெண் இவர் ஆவார். சட்ட விதிகள் குறுக்கிட்டாலும் இவர், அதற்கு ஏற்ப வளைந்து கொடுத்து பெண்களை திருமணம் செய்து கொள்கிறார்.

விபத்து ஒன்றில் ஒரு காலை இழந்த முகம்மது அல்பலுசி அடுத்த மாதம் ஜெய்ப்பூர் வந்து செயற்கைகால் கருவிகளை மாற்ற திட்டமிட்டுள்ளார். அப்போது அவர், இந்திய பெண் ஒருவரை 19-வது மனைவியாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்.

இது குறித்து முகம்மது அல்பலுசி கூறியதாவது:-

என்னை திருமணம் செய்து கொள்ள பல பெண்கள் விரும்புகிறார்கள். அவர்கள் பேசுவது ஒன்றும் நடந்து கொள்வது ஒன்றுமாக இருப்பார்கள். எனக்கு தற்போது இந்திய பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்.

எனது 17 மனைவிகளும் படிக்காதவர்கள். எனவே இந்திய பெண் 18 முதல் 22 வயதுக்குள்ளும் படித்தவராக இருக்க வேண்டும்.

இவ்வாறு முகம்மது அல்பலுசி கூறினார்.

இந்திய பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவது ஏன் என்ற கேள்விக்கு இந்திய பெண்கள் மனிதாபிமானம் மிக்கவர்கள் என்றார்.

டெல்லி ஐகோர்ட்டில் கனிமொழி ஜாமீன் மனு விசாரணை தொடங்கியது.


ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் இருவரும் கடந்த 20-ந் தேதி கைது செய்யப்பட்டனர். சி.பி.ஐ. சிறப்புக் கோர்ட்டு அவர்களது முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த தால், அவர்கள் இருவரும் உடனடியாக கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்கள். கடந்த 10 நாட்களாக கனிமொழியும், சரத்குமாரும் ஜெயிலில் இருந்து வருகிறார்கள்.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் தங்களை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று அவர்கள் இருவரும் கடந்த 23-ந் தேதி டெல்லி ஐகோர்ட்டில் மனு செய்தனர். கனிமொழி தனது மனுவில், என் மீதான குற்றச்சாட்டுக்கள் தவறானவை. கலைஞர் டி.வி. யில் நான் வெறும் பங்குதாரர் தான் எனக்கு பண பரிவர்த்தனையில் எந்த தொடர்பும் இல்லை. எனக்கு பள்ளி செல்லும் வயதில் மகன் இருக்கிறான். அவனை நான் கவனிக்க வேண்டும். எனவே மனிதாபிமான அடிப்படையில் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

கனிமொழி மனுவுக்கு பதில் அளிக்க சி.பி.ஐ.க்கு உத்தரவிட்ட நீதிபதி பரிகோகே, அடுத்த விசாரணை 30-ந் தேதி நடைபெறும் என்று அறிவித்தார். அதன்படி டெல்லி ஐகோர்ட்டில் இன்று கனிமொழி, சரத்குமார் ஆகியோர் ஜாமீன் மனு மீதான விசாரணை நடந்தது. இதற்காக கனிமொழி, சரத்குமார் இருவரும் திகார் ஜெயிலில் இருந்து அழைத்து வரப்பட்டு டெல்லி ஐகோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

கனிமொழி ஜாமீன் மனு மீதான விசாரணை, சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மதியம் 2மணிக்குத் தொடங்கியது.

கனிமொழியைப் பார்ப்பதற்காக, பாட்டியாலா வளாகத்துக்கு குஷ்பு உள்ளிட்ட சிலர் வந்திருந்தனர். கனிமொழியின் கணவர் அரவிந்தனின் தாயார், பூங்கோதை, வீரபாண்டி ஆறுமுகம், டி.கே.எஸ் இளங்கோவன் உள்பட சில கட்சிப் பிரமுகர்களும் கனிமொழியைக் காண நீதிமன்ற வளாகத்துக்கு வந்திருந்தனர்


கனிமொழியை ராஜாத்தி அம்மாள் சந்தித்துப் பேசினார். அவர் தன்னுடன் கனிமொழியின் மகன் ஆதித்யாவை அழைத்து வந்திருந்தார்.

அவர்களுடன் கனிமொழி பேசிக் கொண்டிருந்தார். டெல்லி ஐகோர்ட்டு வளாகத்தில் கடந்த புதன்கிழமை ஒரு குண்டு வெடித்தது. இதனால் ஐகோர்ட்டு வளாகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கோர்ட்டுக்கு வந்த அனைவரும் தீவிர சோதனைக்குப் பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். வழக்குக்கு தொடர்பு இல்லாத யாரும் கோர்ட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்பு அதிகாரி அனுமதித்த ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்கள் மட்டுமே கோர்ட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டன.

கலைஞர் 12வது முறையாக எம்.எல்.ஏ. பதவி ஏற்பு.


தி.மு.க., தலைவர் கலைஞர், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் இன்று (30.05.2011) காலை 11 மணிக்கு, புதிய எம்.எல்.ஏ.,க்களாக பதவி ஏற்றனர்.

சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் புதுப்பொலிவுடன் அமைக்கப்பட்டுள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் 14வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கடந்த 23ந் தேதி நடைபெற்றது.

அப்போது, முதல் அமைச்சர் ஜெயலலிதா உள்பட 229 எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் செ.கு.தமிழரசன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அன்றைய தினம் தி.மு.க. தலைவர் கலைஞர், டெல்லி சென்றிருந்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் துரைமுருகனும் சென்றிருந்தார். அதனால் அவர்கள் இருவரும் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்கவில்லை. சாலை விபத்தில் அமைச்சர் மரியம்பிச்சை மரணமடைந்ததால், அமைச்சர் சிவபதி, திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. மனோகரன் ஆகியோர் திருச்சி சென்றுவிட்டனர். அதனால் அவர்களும் அன்றைய தினம் எம்.எல்.ஏ.வாக பதவியேற்கவில்லை. அதன்பிறகு, கடந்த 27 ந் தேதி தற்காலிக சபாநாயகர் முன்னிலையில், சிவபதி, மனோகரன் ஆகியோர் எம்.எல்.ஏ.க்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இந்த நிலையில், திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு, 12வது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தி.மு.க. தலைவர் கலைஞரும், காட்பாடி தொகுதி எம்.எல்.ஏ. முன்னாள் அமைச்சர் துரைமுருகனும் கோட்டையில் உள்ள சபாநாயகர் அறையில் இன்று (திங்கட்கிழமை) பகல் 11 மணியளவில் எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு சபாநாயகர் டி.ஜெயக்குமார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

கூர்ந்து கவனியுங்கள் : கலைஞர்

பதவியேற்ற பின்னர் திமுக தலைவர் கலைஞரிடம், உங்கள் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த கலைஞர், கூர்ந்து கவனியுங்கள் என்றார்.

இலங்கையில் நானோ கார் விலை ரூ.9.25 லட்சம்.


டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான நானோ குட்டிக் கார், இலங்கையில் கால் பதித்தது.

நானோ காரின் அறிமுக விழா கொழும்பு நகரில் நடைபெற்றது. உலகிலேயே மிக மலிவான இந்தக் காரின் விலை, இலங்கை பணத்தில் ரூ.9.25லட்சம் ஆகும். இந்தியாவில் இக்காரின் விலை சுமார் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மட்டுமே. அதை விட பல மடங்கு அதிக விலைக்கு இலங்கையில் விற்கப்படுகிறது.

இதற்கு இறக்குமதி வரியும், உள்ளூர் விற்பனை வரியும் இலங்கையில் அதிகமாக இருப்பதே காரணம்.

இருப்பினும், நானோ குட்டி காருக்கு இலங்கையில் அதிக கிராக்கி காணப்படுகிறது.

ரூ.1 லட்சம் செலுத்தி, ஏராளமானோர் காருக்கு ஆர்டர்' கொடுத்தனர். அவர்களுக்கு
2 வாரங்களில் கார் சப்ளை செய்யப்படும் என்று டாடா நிறுவனம் அறிவித்துள்ளது.

வல்லாரை தரும் நினைவாற்றல் !


வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப் பெயர் பெற்றது. இதனை சரஸ்வதி கீரை என்றும் அழைக்கின்றனர். இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து 'எ', உயிர்சத்து 'சி' மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. இரத்தத்திற்கு தேவையான சத்துக்களை, சரியான அளவில் கொண்டுள்ளது.

மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்தமுறையில் பெற்றிருக்கிறது. எனவே தான், இதனை சரஸ்வதி கீரை என்றும் அழைக்கின்றனர். இதனாலேயே “வல்லாரை உண்டோரிடம் மல்லாடாதே” என்ற பழமொழி ஏற்பட்டது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

அமினோ அமிலங்கள், சென்டிலிக் சென்டோயிக், அமிலங்கள், கரோடின், ஹைட்ரோ காட்டிலின், வெல்லிரைன், பிரமினோசைடு, விட்டமின் பி1, பி2 மற்றும் விட்டமின் சி, டேனிக் அமிலம் ஆகியவையும் இதில் அடங்கியுள்ளது.

வல்லாரையின் மருத்துவ பயன்கள்

அவரை விதை வடிவமுடைய இலைகளைக் கொண்ட வல்லாரை ஏழு பிரதான நரம்பமைப்பைக் கொண்டது. இதன் முழுத்தாவரமும் மருத்துவப்பயன் உடையவை. உடலின் வலு அதிகரிக்கவும் வைரஸ் நோய்க்குப் பிறகு உடல் தேறவும் உதவுகிறது. மூட்டுவலியைப் போக்குகிறது. சிறுநீர் போக்கினை தூண்டுகிறது. தூக்கமின்றி தவிப்பவர்களுக்கு நல்ல மருந்தாகிறது. ரத்தக்குழாய்களை நெகிழ்வடையச்செய்கிறது.

நினைவாற்றல் அதிகரிக்கும்

வல்லாரை இந்தியாவில் பல்லாயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்படுவதாகத் தெரிகிறது. இத்தாவரத்தினை சக்தி அளிக்கும் டானிக் மற்றும் நினைவாற்றலையும் கவனத்தையும் ஈடுபாட்டினையும் அதிகரிக்கவும் பயன்படுத்துகின்றனர். காலை வேளையில் வல்லாரையை பச்சையாக நன்கு மென்று விழுங்கி வந்தால், மூளை மிகுந்த செயலாற்றல் பெறும். காலைவேளையில் ஒரு கைப்பிடியளவுக் கீரையைப் பச்சையாக நன்கு மென்று விழுங்கிய பின், பசும்பால் உண்டு வர மாலைக்கண் நோய் குணமாகும். தொழுநோய் மற்றும் பால்வினை நோய்ப் புண்களை ஆற்ற சூரணமாகவும், கட்டுப்போடவும் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.

இனப்பெருக்க ஆற்றலை அதிகரிக்கும்

இதிலுள்ள ஏஸியாடிக்கோசைடு என்னும் பொருள் புண்கள் ஆறுவதில் பெரும் பங்கு வகிக்கிறது. இது கொல்லஜென் என்னும் புரதம் தோன்றவும், புதிய ரத்தக் குழாய் உருவாதலையும் துரிதப்படுத்துகிறது. புண்கள் ஆறுதலின் பொழுது திசுக்களைச் சரி செய்ய ஆக்ஸிகரண எதிர்ப் பொருள்களின் அளவு அதிகரிக்கச் செய்கிறது. இது இனப்பெருக்க ஆற்றலை அதிகரிக்கக் கூடுமெனவும் கருதப்படுகிறது

மனநோய்கள் மறைய...

அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து, மூன்று வல்லாரை இலைகளைப் பச்சையாக மென்று தின்னவும். நான்கு மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருந்து, நன்கு பசியெடுத்தபின் அரை லிட்டர் பசும்பால் அருந்தவும். கூடியவரையில் உப்பு, புளி குறைத்த உணவினை உண்டு வர, மனநோய்களில் உண்டாகும் வன்மை மறைந்து, மென்மை உணர்வு மேலோங்கும். இதனால் சகல பைத்திய நோய்களும் தீரும்.

உடல் சோர்வு நீங்கும்

பசுமை இலைகள் குழந்தைகளின் வயிற்று போக்கினை தடுக்க பயன்படுத்தப்படுகிறது. அடிவயிற்றுக் கோளாறுகள், காய்ச்சல், ஆஸ்துமா மற்றும் சுவாசக்குழல் நோய்கள் ஆகியவற்றினைக் குணப்படுத்த உதவுகிறது. இதிலிருந்து வடித்தெடுக்கப்பட்ட எண்ணெய் பொருள் முடி வளர்தலை ஊக்குவிக்கிறது.

இரத்த சுத்திகரிப்பு வேலையைச் செவ்வனே செய்யும். உடல்புண்களை ஆற்றும் வல்லமைக் கொண்டது. தொண்டைக்கட்டு, காய்ச்சல், உடற்சோர்வு, பல்நோய்கள் மற்றும் படை போன்ற தோல் நோய்களை வேரறுக்கும் வல்லமை கொண்டது. இதனைக் கொண்டு பல்துலக்கினால், பற்களின் மஞ்சள் தன்மை நீங்கும். சளி குறைய உதவுகிறது.

உண்ணும் போது தவிர்க்க வேண்டியவை

இதனை உண்ணும் காலங்களில் மாமிச உணவுகள், அகத்திக் கீரை, பாகற்காய் ஆகியவற்றினை உண்ணக் கூடாது. புளி மற்றும் காரத்தினை மிகக் குறைவாகவே உண்ண வேண்டும். சிறுவர் அடிக்கடி உண்ணுதல் மிக்க நல்லது.

இக் கீரையை, சித்த மருத்துவர்கள் லேகியம், சூரணம், மாத்திரை போன்ற வடிவங்களில் பக்குவப்படுத்தி பயன்படுத்துகிறார்கள்.

ஏற்காடு கோடை விழா மலர்கண்காட்சி நிறைவு.


ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் நேற்று முன்தினம் கோடை விழா மலர்கண்காட்சி தொடங்கியது. கண்காட்சியை யொட்டி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அண்ணாபூங்காவில் பல ஆயிரம் பூந்தொட்டில் பல வகையான லட்சக்கணக்கான மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

இதை காண தமிழகம் மட்டுமின்றி பக்கத்து மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாபயணிகள் வந்திருந்தனர். அவர்கள் ஏற்காட்டில் நிலவிவரும் சீதோஷ்ண நிலையை அனுபவித்தனர். ஏற்காடு பகுதியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் இயற்கை அழகை ரசித்து குடும்பத்துடன் போட்டோ எடுத்துக் கொண்டனர்.

நேற்று சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. கபடி போட்டி, கோலப்போட்டி, இசை நாற்காலி, படகு போட்டி, நாய் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்த கண்காட்சியில் பல இனங்களை சேர்ந்த அரிய வகை நாய்கள் பங்கேற்று பார்வையாளர்களை மகிழ்வித்தது.

முன்னதாக காலையில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. தொடர்ந்து தவழும் குழந்தைகள் போட்டி, கொழு கொழு குழந்தைகள் போட்டி, கல்லூரி மாணவர்களின் பல்சுவை நிகழ்ச்சிகள் நடந்தது.

தொடர்ந்து மாலை 4 மணிக்கு கோடை விழா நிறைவு விழா ஏற்காடு திரையரங்கத்தில் நடந்தது.

திமுகவின் தோல்வி என்னை பாதிக்காது : அருள்நிதி.


திமுக தலைவர் கருணாநிதியின் பேரன்களில் ஒருவரான அருள்நிதி, "வம்சம்" படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அடுத்து, "உதயன்" என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இது குறித்து அருள்நிதி, ’’படத்தில் நிறைய சண்டைக்காட்சிகள் உள்ளது. இந்த சண்டைக்காட்சிகளில் மிகவும் கஷ்டப்பட்டு நடித்தேன்.

இப்படத்தின் சூட்டிங்கின் போது கால் உடைந்தது. இருப்பினும் தொடர்ந்து நடித்தேன். முன்னதாக "வம்சம்" படத்தில் கை உடைந்தது.

இன்னும் ஓரிரு வாரத்தில் இப்படம் ரிலீசாக இருக்கிறது’’ என்று செய்தியாளர் களிடம் தெரிவித்தபோது,

தேர்தலில் திமுக தோல்வியால் தங்களுக்கு ஏதும் பாதிப்பு ஏற்படுமா? என்ற கேள்விக்கு,

’’சட்டசபை தேர்தலில் தி.மு.க., தோல்வியடைந்தது என்னை எந்தவிதத்திலும் பாதிக்காது. நான் ஒரு நடிகன், அரசியல்வாதி அல்ல. சினிமாவையும், அரசியலையும் ஒன்றாக பார்க்காதீர்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

அதிவேக ஈனுலை : விஞ்சுவது விஞ்ஞானமா? விவேகமா?


அணுசக்தியைப் பயன்படுத்தி சென்னையை அடுத்துள்ள கல்பாக்கத்தில் 2012-ல், 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என மே தினத்தன்று "பிசினஸ்லைன்' செய்தி வெளியிட்டுள்ளது. இது மட்டுமன்றி, கன்னியாகுமரிக்கு அருகிலுள்ள கூடங்குளத்தில் 2012-க்குள் அணுசக்தியைக் கொண்டு 2,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த முயற்சி இந்தியாவில் முதன்முதலாக அதிவேக ஈனுலை என்கிற "பாஸ்ட் பிரீடர் ரியாக்டர்' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இயக்கப்படவுள்ள சாதனையாகத் திகழுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவியலின் சாதனையாக பரிமளித்தாலும், இது மறைமுகமாக சுமந்துள்ள சோதனைகளையும், வேதனைகளையும் எடுத்துக்காட்டக்கூடிய காலத்தின் கட்டாயத்தில் கட்டப்பட்டுள்ளோம்.

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் ரஷியாவின் செர்னோபிலிலும், இந்த ஆண்டு ஜப்பானின் புகுஷிமா அணு உலை அசம்பாவிதங்களால் ஏற்பட்ட, இன்றும் ஏற்பட்டு வரும் மிகக் கொடிய கதிர்வீச்சுத் தாக்க உயிர்ச்சேதங்கள் பற்றி சராசரி மனிதனும் தெரிந்துகொள்ளும் வகையில் வெளிக்கொணர வேண்டும்.

கல்பாக்கத்தில் இந்த நவீன உலை நிறுவப்படவுள்ள செய்தி வெளியான அதே தினம், பி பி சி தொலைக் காட்சி நிகழ்ச்சியில், 25 ஆண்டுகளுக்குப் பின்பும், இன்றும் செர்னோபிலில் உள்ள உயிரற்ற திடப்பொருள்கள் மற்றும் உயிருள்ள தாவரங்களிலிருந்து கடுமையான அளவில் கதிர்வீச்சு வெளியாகிக்கொண்டே உள்ளதை, கதிர்வீச்சு கணிப்புப் பொறி மூலம் தெளிவாகக் காட்டப்பட்டது. பல லட்சக்கணக்கான மக்கள் அன்றும், இன்றும் அணுக்கதிர் வீச்சின் கொடூர விளைவுகளால் பாதிக்கப்பட்டு வருவதை தெள்ளத் தெளிவாகக் காட்டப்பட்டது.

கருவுற்ற தாய்மார்களின் சேய்களின் உருவச் சேதாரங்களையும், ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியது. இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகும் வாழ்வதற்குப் பாதகமாக உள்ளதால், வெறிச்சோடிக் கிடக்கும், காலியான, கைவிடப்பட்ட கட்டடங்கள், தெருக்கள், ஆழ்மனத்தில் அச்சத்தையும், விளக்க முடியாத மெüன வேதனையையும் ஏற்படுத்தின.

அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் நமது நாட்டைக் காட்டிலும் மிக முன்னேற்றமடைந்த இந்த இரண்டு நாடுகளிலும் நடந்துள்ள இந்த விபரீத நிகழ்வுகள், ஏதோ ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள மிகப் பின்தங்கிய இரண்டு நாடுகளில் நேர்ந்துள்ள சம்பவம்போல் எடுத்துக்கொள்ளக்கூடாது.

கடலோரத்தில், சென்னை மாநகருக்கு 50 கிலோ மீட்டர் அருகில் உள்ள கல்பாக்கத்தில் நிறுவப்படவுள்ள இந்த அணுஉலை, ஜப்பானில் இந்த ஆண்டு சுனாமியால் தாக்கப்பட்டு, கட்டவிழ்ந்து, செயலிழந்து, வெடித்து, கதிர்வீச்சைக் கக்கிய அந்த அணுஉலையைவிட, எந்தெந்த வகையில் மேம்பட்டது, பாதுகாப்பானது என்பதை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டியது மத்திய அரசின் பொறுப்பாகும்.

அமெரிக்காவில் 1979-ம் ஆண்டு ஏற்பட்ட அணுஆலை விபத்துக்குப்பிறகு, புதிதாக ஏதும் பெரிய அளவில் அணுமின் நிலையங்கள் நிறுவப்படவில்லை என்பதையும், அணுமின் நிலையங்களுக்கு இன்ஷூரன்ஸ் செய்ய எந்த நிறுவனமும் முன்வருவதில்லை என்ற உண்மைக்குப் பின் பொதிந்துள்ள அர்த்தங்களையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

சுனாமி என்றால் என்னவென்பது கடலூருக்கும், கடலோரமுள்ள சென்னைக்கும் நன்றாக தெரியவைத்தது சமீபத்திய சம்பவங்கள். இனியும் வரலாமென்பதும், இந்தோனேசியா, அந்தமானின் அடுத்தடுத்த கடல்ஆழ் நிலநடுக்கங்கள் நினைவுபடுத்திக்கொண்டே உள்ளன.

அணுஉலையில் கிடைத்திடும் இந்த 500 மெகாவாட் மின்சாரத்தை, பாதுகாப்பான முறையிலும், குறைந்த செலவிலும் கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் உற்பத்தி செய்ய முடியும்.

நிலவளம், நீர்வளத் தன்மைக்கேற்ப, மலைவேம்பு, முள்ளில்லா மூங்கில் போன்ற தேர்வு செய்யப்பட்ட மரங்களை வளர்ப்பதன் மூலம், ஆண்டுக்கு சுமார் 30 டன் முதல் 50 டன் வரை ஓர் ஏக்கரில் அறுவடை செய்ய முடியும் என்பது தமிழகத்தில் கடந்த ஆண்டு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு ஹெக்டேருக்கு 100 டன் அல்லது ஏக்கருக்கு 40 டன் ஆண்டுக்குக் கிடைக்கும் என்றால்கூட, 10 மெகாவாட் மின்சாரம், ஆண்டுமுழுவதும் தயாரிக்க சுமார் 1 லட்சம் டன் தேவை என்ற அளவில் 1,000 ஹெக்டேரில் (2500 ஏக்கர்) பெற்றிடலாம்.

தமிழ்நாட்டில் 125 லட்சம் ஏக்கர் (50 லட்சம் ஹெக்டேர்) விவசாய நிலங்கள் உள்ளன. சுமார் 40 லட்சம் ஏக்கர் தமிழ்நாட்டில் சரிவரப் பயிரிடப்படாமல், பயன்படுத்தப்படாமல், குறையாக விடப்பட்டுள்ளது. இவற்றில் 2 லட்சம் ஏக்கர் அளவுள்ள, வளமிருந்தும் குறையாக விடப்பட்டுள்ள விளைநிலங்களில் மட்டுமே இவ்வீரிய மர வகைகளை வளர்த்தாலே இந்த 500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.

இதற்கான தொழில்நுட்பம் இந்தியாவிலேயே உள்ளதாலும், கருவிகளைத் தயாரிக்கும் தலைசிறந்த நிறுவனங்கள் நமது நாட்டிலேயே இருப்பதாலும், தக்க விளைநிலங்களும், ஏற்புடைய விவசாயிகளும் தமிழகத்திலே உள்ளதாலும் தங்கு தடையின்றி உடனடியாக இத்திட்டத்தை நிறைவேற்ற வாய்ப்புள்ளது.

கல்பாக்கம் அணுஉலை நிறுவ 1 மெகாவாட்டுக்கு ரூ. 11 கோடி செலவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திராகாந்தி அணு ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளபடி, மேலும் இரண்டு புதிய 500 மெகாவாட் அணுஉலைகள் கல்பாக்கத்திலும், மற்றும் இரண்டு மற்ற பகுதிகளிலும் நிறுவப்பட்டு 2020-ல் மின்சார உற்பத்தி தொடங்கப்படும்.

மர மின்சார ஆலைகளுக்கு, ஒரு மெகாவாட் உற்பத்தி செலவு ரூ. 4 கோடி மட்டுமே. அடுத்த நான்கு ஆண்டுகளில் கூடுதலாக சுமார் 14,000 மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்குத் தேவைப்படும் என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் 2,490 மெகாவாட் மின் உற்பத்தி செய்கையில், நாள் ஒன்றுக்கு சுமார் 70,000 டன் கரியமில வாயுவைக் காற்றில் வெளியேற்றுகிறது. தமிழ்நாட்டில் நிலக்கரியை மூலப்பொருளாகக் கொண்டு 5,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால், சுமார் 500 லட்சம் டன் கரியமிலவாயு ஆண்டொன்றுக்குக் காற்றில் கலக்கப்படுகிறது.

மரமூலப்பொருள் மின் ஆலைகளும், அதே அளவு மின் உற்பத்தியின்போது அதே அளவு கரியமிலவாயுவை வெளியேவிட்டாலும், சரிசமமான அளவு கரியமிலவாயு, மின் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும். மரங்கள் வளரும்போது அவைகளால் உறிஞ்சப்படுகின்றன. எனவே, அவை கார்பன் நியூட்ரல் என உலகளவில் அறிவியல் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் உண்மையாகும்.

இவ்வகை மரம் வளர்க்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 20 டன் மகசூல் குறைந்த அளவில் கிடைத்தாலும், டன் ரூ.2,500 என்ற கொள்முதல் சந்தை விலைப்படி ரூ.50,000 வருமானம் ஆண்டுக்கு ஓர் ஏக்கரில் கிடைக்க வழிவகை செய்யும். இவ்வாறு தமிழக விவசாயிகளின் ஆண்டுத் தேவையான 3,500 மெகாவாட் மின்சாரம் சுமார் 8 லட்சம் முதல் 10 லட்சம் ஏக்கர் விளைநிலங்களைப் பயன்படுத்தி நிச்சயமாகப் பெறமுடியும். அவ்வாறு செய்தால், ஒவ்வோராண்டும் ரூ. 5,000 கோடி, இதை வளர்க்கும் விவசாயப் பெருங்குடி மக்களுக்குச் சென்றடையும். இதனால், கிராமப்புற வேலைவாய்ப்பும் அதிகரிக்கும், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பும், வருமானமும் ஆண்டு முழுவதும் கிடைக்கும். மின்சார வினியோகத்துக்காகச் செலுத்தப்பட்டு கடத்தப்படும் மின்சார இழப்பு உற்பத்தியில் 19 ரூ என தமிழகத்தில் கணக்கிடப்பட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள 31 மாவட்டங்களிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 முதல் 120 மெகாவாட் மின்சாரம் இம்முறையில் உற்பத்தி செய்யலாம். ஒன்றியங்கள் ஒவ்வொன்றிலும் 10 மெகாவாட் அளவில் மர மின் ஆலை நிறுவினால் ஆண்டு முழுவதும் மின் கடத்தல் இழப்பை முற்றிலுமாகத் தவிர்க்கலாம். தட்டுப்பாடுகள், தடைகளின்றி தொடர்ந்து கிடைக்கவல்ல இம்மின் சக்தியால், உணவு உற்பத்தி பெருகும். மரத்தை மூலப்பொருளாகக் கொண்ட பல புதிய தொழிற்சாலைகளை உருவாக்க உதவிடும் கிராமப் பொருளாதாரம் வளர்ந்திடும்.

விவசாயிகளைப் பங்குதாரராக வைத்தால், தடையின்றி மூலப்பொருள் மின் உற்பத்திக்கு ஆண்டுமுழுவதும் கிடைத்துக்கொண்டே இருக்கும். மூலப்பொருள் விற்பது மட்டுமன்றி, மின் ஆலை லாபத்திலும், விவசாயிகளுக்குக் கணிசமான வருமானம் கிடைக்கும். மூலப்பொருள் தட்டுப்பாடுதான் மரமின் உற்பத்தி ஆலைகள் எதிர்கொள்ளும் பிரச்னையாக இப்போது உள்ளது. மரமின்சார உற்பத்தி செலவு யூனிட் ஒன்றுக்கு ரூ.2.50 ஆகும். இப்போது தமிழ்நாடு மின்வாரியம் வாங்குவது யூனிட் ஒன்றுக்கு ரூ.4.50. காற்றில்லாதபோதும், மழையில்லாதபோதும், மின் உற்பத்தி பாதிக்கப்படும்போது, வெளிச்சந்தையில் இரண்டு மடங்குக்குமேல் வெளி மாநிலங்களுக்கு விற்க முடியும். 1 மெகாவாட் என்றால் தினமும் 24,000 யூனிட் உற்பத்தி அளவு என்பதால், 10 மெகாவாட் மர மின் ஆலையால் தினமும் 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டும்.

மின் தயாரிப்புச் செலவு, மர மின்சார முறையில் யூனிட் ஒன்றுக்கு ரூ.2.50 ஆகவும், சூரிய சக்தியில் மின்சார உற்பத்தி முறையில் ரூ.11 ஆகவும் இப்போது உள்ளதைக் கவனத்தில்கொள்ள வேண்டும். காற்றில் தயாரிக்கும் மின்சாரமும், சூரிய மின் சக்தியும், காற்றுள்ளபோதும், சூரியக்கதிர் உள்ள போதும் மட்டுமே செயல்படும் தன்மையைக் கொண்டன. நீர்வீழ்வு மின் உற்பத்தியும் பருவமழையையே நம்பியுள்ளதாகும். இவற்றின் மூலப்பொருள் விலையற்றதாக இருந்தாலும், அதனை உற்பத்தி செய்யப் பயன்படும் உபகரணங்களின் விலை மிக அதிகம். மேலும், இவற்றில் பெறப்படும் மின்சக்தி ஒன்றாயினும், மூலப்பொருள் உற்பத்தியால் வருமானம் கிராமப்புற மக்களுக்கு அளிக்க வல்லது. மர மின்சாரம் மட்டுமே என்பதையும் நினைவில்கொண்டு, அதற்குரிய முக்கியத்துவத்தை அளிக்க வேண்டும்.

தங்குதடையின்றி, தமிழகத்தில் காலை முதல் மாலை வரை கதிரவனின் கதிர்களைத் தடைக்கல்லாகக் கொள்ளாமல், படிக்கல்லாக மாற்றிடும் செயலை நிகழ்வாக்கினால், இந்தியாவுக்கு மட்டுமன்றி, உலகத்தின் வளரும், கிராமம்சார்ந்த நாடுகளுக்கெல்லாம் வழிகாட்டியாகத் திகழ்வது திண்ணம்.

எல்லாமிருந்தும், ஏதுமில்லா இந்நிலை உடன் மாற வேண்டும்.

பொருளாதார ரீதியில் லாபகரமாகவும், சுற்றுப்புறச் சூழலை மேம்படுத்துவதா கவும், உலக வெப்பமாவதைக் குறைக்கவல்லதாகவும், மாற்றவல்ல திட்டங்களை நிறைவேற்றுவதுதான் விவேகம். விவேகமே விஞ்சட்டும்.

நன்றி - தினமணி.

ஸ்பெக்ட்ரம் விவகாரம் : பாராளுமன்ற குழு முன்பு தணிக்கை அதிகாரி ஆஜர் ; ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு பற்றி விளக்கம்.


ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்ததால் மத்திய அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கைத்துறை தகவல் வெளியிட்டது. கணக்கு தணிக்கைத் துறையின் அறிக்கையில் பெரிய சர்ச்சை எழுந்தது.

ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டின் நேரடி கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. அமலாக்கப்பிரிவு, பாராளுமன்ற பொது கணக்குக்குழு ஆகியவையும் விசாரணை நடத்தி வருகின்றன. இதற்கிடையே எதிர்க்கட்சிகளின் போராட்டம் காரணமாக ஸ்பெக்ட்ரம் இழப்பு குறித்து உண்மையை கண்டறிய பாராளுமன்ற இருசபைகளின் கூட்டுக்குழுவும் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த குழுவுக்கு காங்கிரஸ் கட்சி எம்.பி. சாக்கோ தலைவராக உள்ளார். கூட்டுக்குழு தனது விசாரணையை தீவிரமாக நடத்தி வருகிறது. இந்த விசாரணைக்கு வருமாறு மத்திய கணக்கு தணிக்கைத் துறை அதிகாரிக்கு கூட்டுக்குழு உத்தரவிட்டிருந்தது. அதை ஏற்று இன்று காலை கூட்டுக்குழு முன்பு மத்திய கணக்கு தணிக்கைத்துறை தலைவர் வினோத்ராய் ஆஜரானார்.

அவரிடம், கூட்டுக்குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் பல்வேறு கேள்வி களை எழுப்பினார்கள். குறிப்பாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டில் ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக, எந்த அடிப் படையில் கணிக்கப்பட்டது என்று கேட்டனர். அதற்கு மத்திய கணக்கு தணிக்கைத்துறை அதிகாரி வினோத்ராய் விளக்கம் அளித்தார்.

1998-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட விதத்தை எடுத்துக் கூறிய அதிகாரி வினோத்ராய், ஊழல் நடந்ததற்கான ஆதாரங்களையும் விளக்கமாக கூறினார். அவரது விளக்கத்தை கூட்டுக்குழு பதிவு செய்தது. தணிக்கை அதிகாரி கொடுத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அறிக்கை ஒன்றை கூட்டுக்குழு தயாரிக்கும்.

அந்த அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இந்த ஆண்டு தொடக்கத் தில் தணிக்கை அதிகாரி வினோத்ராய் பாராளுமன்ற பொது கணக்குக்குழு முன்பும் ஆஜராகி, ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு தொடர்பாக விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, May 29, 2011

செல்வி ஜெ.ஜெயலலிதா பற்றி சுவையான சில குறிப்புகள்.

கோமளவள்ளி என்ற பெயரை அவரே மறந்திருப்பார். பிறந்ததும் ஜெயலலிதாவிக்குச் சூட்டப்பட்ட பெயர் அது. ஆனால் சில காலத்தில் `ஜெயலலிதா’ ஆனார். ஜெயா, ஜெய், லில்லி எனப் பல பெயர்களில் பள்ளித் தோழிகளால் அழைக்கப்பட்டவர்.அவரது அம்மாவுக்கு `அம்மு’. அ.தி.மு.க –வினர் அனைவருக்கும் `அம்மா’!


சர்ச் பார்க் மாணவி என்றுதான் பலருக்கும் தெரியும். ஆனால், மாம்பலம் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்துவிட்டுத்தான் மெட்ரிக் வரை சர்ச் பார்க்கில் படித்தார்.`எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் சர்ச் பார்க்கில் படிக்க வேண்டும்’ என்பதைத் தனது ஆசையாகச் சொல்லியிருந்தார்.

போயஸ் கார்டன், சிறுதாவூர் பங்களா, ஊட்டி கொடநாடு எஸ்டேட், ஹைதரபாத் திரட்சைத் தோட்டம் ஆகிய நான்கும் ஜெயலலிதா மாறி மாறித் தங்கும் இடங்கள். ஹைதரபாத் செல்வதைச் சில ஆண்டுகளாக நிறுத்திவிட்டார். இப்போதெல்லாம் திடீர் ஓய்வுக்கு சிறுதாவூர் மாதக்கணக்கில் தங்க வேண்டுமானால்..கொடநாடு!

உடம்பை ஸ்லிம்மாகவைத்துக் கொள்வதில் ஆரம்ப காலத்தில் அதிக அக்கறையுடன் இருந்தார். தினமும் வெந்நீரில் எலுமிச்சம்பழச்சாறும் தேனும் கலந்து குடித்தார்.இப்போது தினமும் 35 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட 13 கிலோ எடை குறைத்துள்ளார்!

ஜெயலலிதா நடித்த மொத்தப்படங்கள் 115. இதில் எம்.ஜி.ஆருடன் நடித்தவை 28. இருவரும் இணைந்து நடித்த் முதல் படம் `ஆயிரத்தில் ஒருவன்’.

'சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா' என்ற `அரசிளங்குமரி’ படப் பாடல் தான் தனக்கு எப்போதும் பிடித்த நல்ல பாட்டு என்பார். அந்தப் பாடலை எழுதிய பட்டுகோட்டை கல்யாணசுந்தரத்தின் மனைவியிடம் 10 லட்சம் பணம் கொடுத்து, அவரது எழுத்துக்களை நாட்டுடைமை ஆக்கினார்.

`அரசியலில் நான் என்றுமே குதிக்க மாட்டேன்’ என்று பேட்டி கொடுத்தவர் ஜெயலலிதா. `நாடு போகிற போக்கைப் பார்த்தால், ஜெயலலிதாகூட முதலமைச்சர் ஆகிவிடுவார்போல’ என்று அவர் நடிக்க வந்த காலத்தில் பேட்டியளித்தார் முரசொலி மாறன்.

ஜெயலலிதா முதலில் குடியிருந்தது சென்னை தியாகராயர் நகர் சிவஞானம் தெருவில் பிறகு, அடையாறு பகுதியில் குடி இருந்தார். படங்கள் குவிந்து,நடிப்பில் கொடிகட்டிய காலத்தில்தான், போயஸ் கார்டன் வீடு கட்டப்பட்டது அதன் ஒவ்வொரு செங்கல்லையும் பார்த்துக் கட்டியவர், அவரது அம்மா சந்தியா.

``வீட்டுக்குள்ளே என்ன மாற்றமும் செய்யலாம், ஆனா,எங்க அம்மா வைத்த வாசலை மட்டும் மாற்றக் கூடாது” என்று சொல்லி இருக்கிறாராம் ஜெயலலிதா.

எப்போதும் அம்மா செல்லம்தான். அவருக்கு இரண்டு வயது இருக்கும்போதே அப்பர் இறந்துபோனதால், அந்த நினைவுகள் இல்லை. போயஸ் வீட்டுக்குள் நுழையும் இடத்தில் சந்தியா, எம்.ஜி.ஆர். ஆகிய இருவரின் படங்கள் மட்டுமே இருக்கும்.

எம்.ஜி.ஆர். ரசிகர் மன்ற விழாவில் ஆறு அடி உயரமுள்ள வெள்ளிச் செங்கோலை எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா வழங்கினார். ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்த புகைப்படம் அதுதான்.


பெருமாளை விரும்பி வணங்குகிறார். மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் இதில் முதன்மையானது. மயிலை கற்பகாம்பாளையும்,கும்பகோணம் ஐயாவாசி பிரத்தியங்கராதேவியையும் சமீப காலமாக வணங்கி வருகிறார்.

தினமும் காலையில் நிஷாகந்தி எனப்படும் இருவாட்சி மலரைப் பறித்து பூஜைக் கூடையில் தயாராக வைத்திருப்பார்கள் கார்டன் பணியாளர்கள். அதை எடுத்தபடியே பூஜை அறைக்குள் நுழைவார்.சமீபமாக பூஜையில் தவறாமல் இடம்பெறும் துளசி.

யாகம் வளர்ப்பது, ஹோமத்தில் உட்காருவதில் ஜெயலலிதாவுக்கு ஈடுபாடு அதிகம். யாகத்தில் ஆறு மணி நேரம் கூட உட்கார்ந்திருக்கிறார். அவசரமாக மந்திரம் சொன்னாலோ, தவறாகச் சொன்னாலோ, கண்டுபிடித்து நிறுத்தச் சொல்லும் அளவுக்கு வேத ஞானம் உண்டு.

இயற்கை உணவுக்குப் பழகி வருகிறார். பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி பசலை ஆகிய கீரை வகைகள் கொண்ட சூப் தினமும் இவருக்காகத் தயாராகின்றன கொடநாடு எஸ்டேட்டில் இந்த வகைக் கீரைகள் அதிகமாகப் பயிரிடப்படுகின்றன.

சிறுதாவூர் பங்களா இருக்குமிடம் 116 ஏக்கர். அங்கு புறா,கிளி,காடை,கெளதாரி போன்றவற்றை வளர்த்து வந்தார். இந்திரா,சந்திரா என்ற இரண்டு ஈமுக்களும் வளர்த்தார். இரண்டும் திடீரென இறந்துவிட... ஈமு வளர்ப்பதையே விட்டுவிட்டார்.

`நான் அனுசரித்துப் போகிறவள்தான். ஆனால், எனக்கென்று சில சிந்தனைகள் உண்டு. அதை யாருக்காகவும் விட்டுத்தர மாட்டேன்” என்று தனது கேரக்டருக்கு விளக்கம் சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா.

பரதநாட்டியம், ஓரியன்டல் டான்ஸ் இரண்டையும் முறைப்படி கற்று அரங்கேற்றம் செய்தவர். முதலமைச்சராக இருந்தபோது ஊட்டியில் மேடையைவிட்டு இறங்கி வந்து ஆடியதும், கடந்த ஆண்டு படுகர்களுடன் இணைந்து ஆடியதும் அடக்க முடியாத நாட்டிய ஆர்வத்தின் வெளிப்பாடுகள்!.

ஜெயலலிதாவின் 100 –வது படத்துக்கான பாராட்டு விழாவில் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் `நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர்’ என்று பாராட்டபட்டவர்!.

பழைய பாடல்களை மணிக்கணக்கில் கேட்டு லயிக்கிறார். ஜெயா டிவி-யில் வரும் பழைய பாடல்கள் அனைத்தும் அம்மாவின் விருப்பங்கள்தான்.

ரயில் பயணம் பிடிக்காது. கார் மற்றும் ஹெலிகாப்டர் பயணங்கள்தான் அதிக விருப்பம்.

போயஸ் வீட்டில் எப்போதும் ஏழு நாய்க்குட்டிகள் இருக்கும். அவரது பிறந்த நாளையொட்டி, ஆண்டுதோறும் ஒரு குட்டி புதிதாக இணைந்து கொள்ளும். இந்த எண்ணிக்கை காலப்போக்கில் அதிகமானதால், சில குட்டிகள் சிறுதாவூர், கொடநாடு எனப் பிரித்து அனுப்பிவைக்கப்படுகின்றன.

இந்தியாவில் உள்ள அத்தனை பிரபலங்களையும் தனது வாக் அண்ட் டாக் பேட்டிக்கு வரவழைத்து விட்ட என்.டி.டி.வி-யால், ஜெயலலிதாவின் மனதை மட்டும் மாற்ற முடியவில்லை. கடைசி வரை உறுதியாக இருந்து மறுத்துவிட்டார்!.

ஓஷோவின் புத்தகங்களை மொத்தமாக வாங்கி ரசித்து வந்தார். ஜெயலலிதா இப்போது ரமணர் பற்றியே அதிகம் படிக்கிறார். ரமணர் தொடர்பான முக்கியப் புத்தகங்கள் அத்தனையும் கடந்த நான் கைந்து மாதங்களாக அவர் மேஜையில் உள்ளன.

ஜெயலலிதாவின் முழு இருப்பும் போயஸ் கார்டனின் முதல் மாடியில் தான்.அங்கு சசிகலா மற்றும் முக்கியப் பணியாளர்கள் தவிர, யாருக்கும் அனுமதி இல்லை!.

நன்றி - speedsays.blogspot.com

உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடு : நகரசபை தலைவர்கள் - மேயர் நேரடியாக தேர்வு ; தமிழக அரசு பரிசீலனை.


உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடு:  நகரசபை தலைவர்கள்- மேயர் நேரடியாக தேர்வு; தமிழக அரசு பரிசீலனை

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலைப் போல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறும். உள்ளாட்சி அமைப்பில் சென்னை, வேலூர், கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி ஆகிய 10 மாநகராட்சிகள் உள்ளன. இவற்றில் 10 மேயர்கள் பதவி வகித்து வருகிறார்கள்.

அவர்களில் 8 பேர் தி.மு.க.வினர், 2 பேர் காங்கிரசை சேர்ந்தவர்கள். இதேபோல் 148 நகரசபை தலைவர்கள் உள்ளனர். இது தவிர மாவட்ட ஊராட்சிகள் 31, ஊராட்சி ஒன்றியங்கள் 385, பேரூராட்சிகள் 561 உள்ளன. மொத்தத்தில் பேரூராட்சி தலைவர்கள், உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்பட 1 லட்சத்து 32 ஆயிரத்து 95 பதவிகள் உள்ளன.

தற்போதைய உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் வருகிற அக்டோபர் மாதம் 21-ந்தேதி முடிவடைகிறது. ஜெயலலிதா தலைமையிலான புதிய அரசு உள்ளாட்சி தேர்தலை வழக்கமான காலத்தில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது. கடந்த ஆட்சியில் மாநில தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட சையத் முனீர்கோடா கடந்த 24-ந்தேதி பதவி விலகினார்.

புதிய தேர்தல் அதிகாரியாக சோ. அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது. உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன. வாக்காளர் பட்டியல் தயாரிப்பு உள்ளிட்ட முதற்கட்டப் பணிகள் தொடங்கி உள்ளன. இந்த பணிகள் முடிந்ததும் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும்.

அநேகமாக ஆகஸ்ட் மாதம் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது. அ.தி.மு.க. ஆட்சியில் மேயர்கள், நகரசபை தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு வந்தனர். ஆனால் கடந்த தி.மு.க. ஆட்சியில் இந்த முறையை ரத்து செய்து விட்டு பெரும்பான்மை உறுப்பினர்களே தலைவர்களை தேர்வு செய்யும் முறையை கொண்டு வந்தனர்.

உள்ளாட்சி மன்றத்தில் தலைவர் ஒரு கட்சியாகவும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் மாற்று கட்சியாகவும் இருந்தால் தீர்மானங்களை நிறைவேற்று வதில் சிக்கல்கள் ஏற்படுவதால் புதிய முறையை கொண்டு வந்ததாக கூறினார்கள். ஆனால் எதிர்க்கட்சியாக இருந்த அ.தி.மு.க. இந்த முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

தலைவர்களை மக்களே நேரடியாக வாக்களித்து தேர்வு செய்யவேண்டும் என்று வலியுறுத்தியது. இப்போது ஆட்சி பொறுப்புக்கு வந்துள்ள அ.தி.மு.க. மீண்டும் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வருவது பற்றி பரிசீலித்து வருகிறது. முன்பு நடைமுறையில் இருந்தது போல் மேயர்கள், நகரசபை தலைவர்கள் பதவிகளுக்கு மக்கள் வாக்களிக்கும் நேரடி தேர்தல் முறை மீண்டும் அமல்படுத்தப்படலாம் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறுநீரக கற்களை கரைக்கும் வெங்காயம்.


வெங்காயத்தின் காரத்தன்மைக்கு அதில் உள்ள அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணையே காரணம். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன.

வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.

யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப்பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அற்த கற்கள் கரைந்துவிடும். முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணையையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்து விடும்.

செலனியச் சத்து இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினை தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயத்தில் இருக்கிறது. வெங்காயத்தை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தாலே போதும். தேவையான செலினியச்சத்து கிடைத்துவிடும். வெங்காயம் தவிர பூண்டையும் இதற்காக பயன்படுத்தலாம்.

சீதோஷண நிலை மாறும் போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச்சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும். புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புபைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள, செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும். வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும்.

இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும். வெங்காயச்சாற்றையும், வெந்நீரையும் கலந்த வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச்சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவி வர வல்வலி, ஈறுவலி குறையும். அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச்சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் 3 வேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.