Monday, May 30, 2011

அதிவேக ஈனுலை : விஞ்சுவது விஞ்ஞானமா? விவேகமா?


அணுசக்தியைப் பயன்படுத்தி சென்னையை அடுத்துள்ள கல்பாக்கத்தில் 2012-ல், 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என மே தினத்தன்று "பிசினஸ்லைன்' செய்தி வெளியிட்டுள்ளது. இது மட்டுமன்றி, கன்னியாகுமரிக்கு அருகிலுள்ள கூடங்குளத்தில் 2012-க்குள் அணுசக்தியைக் கொண்டு 2,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த முயற்சி இந்தியாவில் முதன்முதலாக அதிவேக ஈனுலை என்கிற "பாஸ்ட் பிரீடர் ரியாக்டர்' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இயக்கப்படவுள்ள சாதனையாகத் திகழுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவியலின் சாதனையாக பரிமளித்தாலும், இது மறைமுகமாக சுமந்துள்ள சோதனைகளையும், வேதனைகளையும் எடுத்துக்காட்டக்கூடிய காலத்தின் கட்டாயத்தில் கட்டப்பட்டுள்ளோம்.

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் ரஷியாவின் செர்னோபிலிலும், இந்த ஆண்டு ஜப்பானின் புகுஷிமா அணு உலை அசம்பாவிதங்களால் ஏற்பட்ட, இன்றும் ஏற்பட்டு வரும் மிகக் கொடிய கதிர்வீச்சுத் தாக்க உயிர்ச்சேதங்கள் பற்றி சராசரி மனிதனும் தெரிந்துகொள்ளும் வகையில் வெளிக்கொணர வேண்டும்.

கல்பாக்கத்தில் இந்த நவீன உலை நிறுவப்படவுள்ள செய்தி வெளியான அதே தினம், பி பி சி தொலைக் காட்சி நிகழ்ச்சியில், 25 ஆண்டுகளுக்குப் பின்பும், இன்றும் செர்னோபிலில் உள்ள உயிரற்ற திடப்பொருள்கள் மற்றும் உயிருள்ள தாவரங்களிலிருந்து கடுமையான அளவில் கதிர்வீச்சு வெளியாகிக்கொண்டே உள்ளதை, கதிர்வீச்சு கணிப்புப் பொறி மூலம் தெளிவாகக் காட்டப்பட்டது. பல லட்சக்கணக்கான மக்கள் அன்றும், இன்றும் அணுக்கதிர் வீச்சின் கொடூர விளைவுகளால் பாதிக்கப்பட்டு வருவதை தெள்ளத் தெளிவாகக் காட்டப்பட்டது.

கருவுற்ற தாய்மார்களின் சேய்களின் உருவச் சேதாரங்களையும், ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியது. இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகும் வாழ்வதற்குப் பாதகமாக உள்ளதால், வெறிச்சோடிக் கிடக்கும், காலியான, கைவிடப்பட்ட கட்டடங்கள், தெருக்கள், ஆழ்மனத்தில் அச்சத்தையும், விளக்க முடியாத மெüன வேதனையையும் ஏற்படுத்தின.

அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் நமது நாட்டைக் காட்டிலும் மிக முன்னேற்றமடைந்த இந்த இரண்டு நாடுகளிலும் நடந்துள்ள இந்த விபரீத நிகழ்வுகள், ஏதோ ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள மிகப் பின்தங்கிய இரண்டு நாடுகளில் நேர்ந்துள்ள சம்பவம்போல் எடுத்துக்கொள்ளக்கூடாது.

கடலோரத்தில், சென்னை மாநகருக்கு 50 கிலோ மீட்டர் அருகில் உள்ள கல்பாக்கத்தில் நிறுவப்படவுள்ள இந்த அணுஉலை, ஜப்பானில் இந்த ஆண்டு சுனாமியால் தாக்கப்பட்டு, கட்டவிழ்ந்து, செயலிழந்து, வெடித்து, கதிர்வீச்சைக் கக்கிய அந்த அணுஉலையைவிட, எந்தெந்த வகையில் மேம்பட்டது, பாதுகாப்பானது என்பதை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டியது மத்திய அரசின் பொறுப்பாகும்.

அமெரிக்காவில் 1979-ம் ஆண்டு ஏற்பட்ட அணுஆலை விபத்துக்குப்பிறகு, புதிதாக ஏதும் பெரிய அளவில் அணுமின் நிலையங்கள் நிறுவப்படவில்லை என்பதையும், அணுமின் நிலையங்களுக்கு இன்ஷூரன்ஸ் செய்ய எந்த நிறுவனமும் முன்வருவதில்லை என்ற உண்மைக்குப் பின் பொதிந்துள்ள அர்த்தங்களையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

சுனாமி என்றால் என்னவென்பது கடலூருக்கும், கடலோரமுள்ள சென்னைக்கும் நன்றாக தெரியவைத்தது சமீபத்திய சம்பவங்கள். இனியும் வரலாமென்பதும், இந்தோனேசியா, அந்தமானின் அடுத்தடுத்த கடல்ஆழ் நிலநடுக்கங்கள் நினைவுபடுத்திக்கொண்டே உள்ளன.

அணுஉலையில் கிடைத்திடும் இந்த 500 மெகாவாட் மின்சாரத்தை, பாதுகாப்பான முறையிலும், குறைந்த செலவிலும் கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் உற்பத்தி செய்ய முடியும்.

நிலவளம், நீர்வளத் தன்மைக்கேற்ப, மலைவேம்பு, முள்ளில்லா மூங்கில் போன்ற தேர்வு செய்யப்பட்ட மரங்களை வளர்ப்பதன் மூலம், ஆண்டுக்கு சுமார் 30 டன் முதல் 50 டன் வரை ஓர் ஏக்கரில் அறுவடை செய்ய முடியும் என்பது தமிழகத்தில் கடந்த ஆண்டு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு ஹெக்டேருக்கு 100 டன் அல்லது ஏக்கருக்கு 40 டன் ஆண்டுக்குக் கிடைக்கும் என்றால்கூட, 10 மெகாவாட் மின்சாரம், ஆண்டுமுழுவதும் தயாரிக்க சுமார் 1 லட்சம் டன் தேவை என்ற அளவில் 1,000 ஹெக்டேரில் (2500 ஏக்கர்) பெற்றிடலாம்.

தமிழ்நாட்டில் 125 லட்சம் ஏக்கர் (50 லட்சம் ஹெக்டேர்) விவசாய நிலங்கள் உள்ளன. சுமார் 40 லட்சம் ஏக்கர் தமிழ்நாட்டில் சரிவரப் பயிரிடப்படாமல், பயன்படுத்தப்படாமல், குறையாக விடப்பட்டுள்ளது. இவற்றில் 2 லட்சம் ஏக்கர் அளவுள்ள, வளமிருந்தும் குறையாக விடப்பட்டுள்ள விளைநிலங்களில் மட்டுமே இவ்வீரிய மர வகைகளை வளர்த்தாலே இந்த 500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.

இதற்கான தொழில்நுட்பம் இந்தியாவிலேயே உள்ளதாலும், கருவிகளைத் தயாரிக்கும் தலைசிறந்த நிறுவனங்கள் நமது நாட்டிலேயே இருப்பதாலும், தக்க விளைநிலங்களும், ஏற்புடைய விவசாயிகளும் தமிழகத்திலே உள்ளதாலும் தங்கு தடையின்றி உடனடியாக இத்திட்டத்தை நிறைவேற்ற வாய்ப்புள்ளது.

கல்பாக்கம் அணுஉலை நிறுவ 1 மெகாவாட்டுக்கு ரூ. 11 கோடி செலவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திராகாந்தி அணு ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளபடி, மேலும் இரண்டு புதிய 500 மெகாவாட் அணுஉலைகள் கல்பாக்கத்திலும், மற்றும் இரண்டு மற்ற பகுதிகளிலும் நிறுவப்பட்டு 2020-ல் மின்சார உற்பத்தி தொடங்கப்படும்.

மர மின்சார ஆலைகளுக்கு, ஒரு மெகாவாட் உற்பத்தி செலவு ரூ. 4 கோடி மட்டுமே. அடுத்த நான்கு ஆண்டுகளில் கூடுதலாக சுமார் 14,000 மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்குத் தேவைப்படும் என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் 2,490 மெகாவாட் மின் உற்பத்தி செய்கையில், நாள் ஒன்றுக்கு சுமார் 70,000 டன் கரியமில வாயுவைக் காற்றில் வெளியேற்றுகிறது. தமிழ்நாட்டில் நிலக்கரியை மூலப்பொருளாகக் கொண்டு 5,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால், சுமார் 500 லட்சம் டன் கரியமிலவாயு ஆண்டொன்றுக்குக் காற்றில் கலக்கப்படுகிறது.

மரமூலப்பொருள் மின் ஆலைகளும், அதே அளவு மின் உற்பத்தியின்போது அதே அளவு கரியமிலவாயுவை வெளியேவிட்டாலும், சரிசமமான அளவு கரியமிலவாயு, மின் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும். மரங்கள் வளரும்போது அவைகளால் உறிஞ்சப்படுகின்றன. எனவே, அவை கார்பன் நியூட்ரல் என உலகளவில் அறிவியல் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் உண்மையாகும்.

இவ்வகை மரம் வளர்க்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 20 டன் மகசூல் குறைந்த அளவில் கிடைத்தாலும், டன் ரூ.2,500 என்ற கொள்முதல் சந்தை விலைப்படி ரூ.50,000 வருமானம் ஆண்டுக்கு ஓர் ஏக்கரில் கிடைக்க வழிவகை செய்யும். இவ்வாறு தமிழக விவசாயிகளின் ஆண்டுத் தேவையான 3,500 மெகாவாட் மின்சாரம் சுமார் 8 லட்சம் முதல் 10 லட்சம் ஏக்கர் விளைநிலங்களைப் பயன்படுத்தி நிச்சயமாகப் பெறமுடியும். அவ்வாறு செய்தால், ஒவ்வோராண்டும் ரூ. 5,000 கோடி, இதை வளர்க்கும் விவசாயப் பெருங்குடி மக்களுக்குச் சென்றடையும். இதனால், கிராமப்புற வேலைவாய்ப்பும் அதிகரிக்கும், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பும், வருமானமும் ஆண்டு முழுவதும் கிடைக்கும். மின்சார வினியோகத்துக்காகச் செலுத்தப்பட்டு கடத்தப்படும் மின்சார இழப்பு உற்பத்தியில் 19 ரூ என தமிழகத்தில் கணக்கிடப்பட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள 31 மாவட்டங்களிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 முதல் 120 மெகாவாட் மின்சாரம் இம்முறையில் உற்பத்தி செய்யலாம். ஒன்றியங்கள் ஒவ்வொன்றிலும் 10 மெகாவாட் அளவில் மர மின் ஆலை நிறுவினால் ஆண்டு முழுவதும் மின் கடத்தல் இழப்பை முற்றிலுமாகத் தவிர்க்கலாம். தட்டுப்பாடுகள், தடைகளின்றி தொடர்ந்து கிடைக்கவல்ல இம்மின் சக்தியால், உணவு உற்பத்தி பெருகும். மரத்தை மூலப்பொருளாகக் கொண்ட பல புதிய தொழிற்சாலைகளை உருவாக்க உதவிடும் கிராமப் பொருளாதாரம் வளர்ந்திடும்.

விவசாயிகளைப் பங்குதாரராக வைத்தால், தடையின்றி மூலப்பொருள் மின் உற்பத்திக்கு ஆண்டுமுழுவதும் கிடைத்துக்கொண்டே இருக்கும். மூலப்பொருள் விற்பது மட்டுமன்றி, மின் ஆலை லாபத்திலும், விவசாயிகளுக்குக் கணிசமான வருமானம் கிடைக்கும். மூலப்பொருள் தட்டுப்பாடுதான் மரமின் உற்பத்தி ஆலைகள் எதிர்கொள்ளும் பிரச்னையாக இப்போது உள்ளது. மரமின்சார உற்பத்தி செலவு யூனிட் ஒன்றுக்கு ரூ.2.50 ஆகும். இப்போது தமிழ்நாடு மின்வாரியம் வாங்குவது யூனிட் ஒன்றுக்கு ரூ.4.50. காற்றில்லாதபோதும், மழையில்லாதபோதும், மின் உற்பத்தி பாதிக்கப்படும்போது, வெளிச்சந்தையில் இரண்டு மடங்குக்குமேல் வெளி மாநிலங்களுக்கு விற்க முடியும். 1 மெகாவாட் என்றால் தினமும் 24,000 யூனிட் உற்பத்தி அளவு என்பதால், 10 மெகாவாட் மர மின் ஆலையால் தினமும் 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டும்.

மின் தயாரிப்புச் செலவு, மர மின்சார முறையில் யூனிட் ஒன்றுக்கு ரூ.2.50 ஆகவும், சூரிய சக்தியில் மின்சார உற்பத்தி முறையில் ரூ.11 ஆகவும் இப்போது உள்ளதைக் கவனத்தில்கொள்ள வேண்டும். காற்றில் தயாரிக்கும் மின்சாரமும், சூரிய மின் சக்தியும், காற்றுள்ளபோதும், சூரியக்கதிர் உள்ள போதும் மட்டுமே செயல்படும் தன்மையைக் கொண்டன. நீர்வீழ்வு மின் உற்பத்தியும் பருவமழையையே நம்பியுள்ளதாகும். இவற்றின் மூலப்பொருள் விலையற்றதாக இருந்தாலும், அதனை உற்பத்தி செய்யப் பயன்படும் உபகரணங்களின் விலை மிக அதிகம். மேலும், இவற்றில் பெறப்படும் மின்சக்தி ஒன்றாயினும், மூலப்பொருள் உற்பத்தியால் வருமானம் கிராமப்புற மக்களுக்கு அளிக்க வல்லது. மர மின்சாரம் மட்டுமே என்பதையும் நினைவில்கொண்டு, அதற்குரிய முக்கியத்துவத்தை அளிக்க வேண்டும்.

தங்குதடையின்றி, தமிழகத்தில் காலை முதல் மாலை வரை கதிரவனின் கதிர்களைத் தடைக்கல்லாகக் கொள்ளாமல், படிக்கல்லாக மாற்றிடும் செயலை நிகழ்வாக்கினால், இந்தியாவுக்கு மட்டுமன்றி, உலகத்தின் வளரும், கிராமம்சார்ந்த நாடுகளுக்கெல்லாம் வழிகாட்டியாகத் திகழ்வது திண்ணம்.

எல்லாமிருந்தும், ஏதுமில்லா இந்நிலை உடன் மாற வேண்டும்.

பொருளாதார ரீதியில் லாபகரமாகவும், சுற்றுப்புறச் சூழலை மேம்படுத்துவதா கவும், உலக வெப்பமாவதைக் குறைக்கவல்லதாகவும், மாற்றவல்ல திட்டங்களை நிறைவேற்றுவதுதான் விவேகம். விவேகமே விஞ்சட்டும்.

நன்றி - தினமணி.

No comments: