Friday, April 22, 2011

ஈரோட்டில் இன்று அனுமதியின்றி இயங்கிய 32 சாயப்பட்டறைகள் இடிப்பு.

ஈரோட்டில் இன்று  அனுமதியின்றி இயங்கிய 32 சாயப்பட்டறைகள் இடிப்பு; பல லட்சம் மதிப்பிலான எந்திரங்கள் பறிமுதல்

ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சாயக்கழிவு பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆறு, காளிங்கராயன் வாய்க்கால் ஆகியவற்றில் சுத்தீகரிக்காத சாயக்கழிவுகளை திறந்து விடுவதால் நீர், நிலம் மாசுபடுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி வந்தனர். சென்னை ஐகோர்ட்டிலும் விவசாயிகள் வழக்கு தொடர்ந்தனர்.

இதையடுத்து திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் முறையான சுத்தீகரிப்பு மையங்கள் அமைக்காத ஏராளமான பிளீச்சிங், டையிங், பிரிண்டிங் பட்டறைகளை மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சீல் வைத்து மூடினர். மேலும் சாயப் பட்டறைகளை கண்காணிக்க ஈரோடு மாவட்ட கலெக்டர் காமராஜ் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது.

இதில் மாசுகட்டுப்பாடு வாரியம் மற்றும் மின்சார வாரிய அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். இந்த கமிட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள சாயப்பட்டறைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். இதில் ஈரோடு பி.பி.அக்ரஹாரம், வீரப்பன் சத்திரம், சூரம்பட்டி, அசோகபுரம் ஆகிய பகுதிகளில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் எந்த அனுமதியும் இல்லாமல் ரகசியமாக 32 சாயப்பட்டறைகள் இயங்கி வந்தது தெரியவந்தது.

இதைதொடர்ந்து அனுமதியில்லாமல் இயங்கிய அந்த சாயப்பட்டறைகளை இடித்து தள்ள கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து இன்று ஈரோடு உதவி கலெக்டர் சுகுமார், மாசுகட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் மலையாண்டி, மின்வாரிய அதிகாரிகள் 3 ஜே.சி.பி. எந்திரங்கள், 2 கிரேன் ஆகியவற்றுடன் பி.பி.அக்ரஹாரம் பேரேஜ் செல்லும் வழியில் உள்ள சாயப்பட்டறைக்கு சென்ற னர். பின்னர் அப்பகுதியில் இயங்கிய 5 சாயப்பட்டறைகளை அதிரடியாக பொக்லைன் உதவியுடன் இடித்து தரைமட்டம் ஆக்கினர்.

அதன்பின்னர் வீரப்பன்சத்திரம் நாராயணவலசு பகுதியில் அனுமதிஇல்லாமல் இயங்கிய சாயப்பட்டறைகளை இடித்து தள்ளப்பட்டது. இதேபோன்று 32 ஆலைகளும் இன்று இடித்து தள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இடிக்கப்பட்ட சாயப்பட்டறைகளில் வைக்கப்பட்டு இருந்த பல லட்சம் மதிப்பிலான எந்திரங்களை கிரேன் உதவியுடன் பறிமுதல் செய்தனர்.

இந்த ஆலை அதிபர்கள் மற்றும் நில உரிமையாளர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என உதவி கலெக்டர் சுகுமார் தெரிவித்தார். பொதுவாக சாயப் பட்டறைகள் கழிவுநீர் பிரச்சினையில் அதிகாரிகள் அதிக பட்சம் சீல் வைப்பது தான் வழக்கம். அதுவும் சில நாட்களில் உடைத்து வழக்கம்போல் வேலையை ஆரம்பித்து விடுவார்கள். சீல் வைத்து உடைத்து மீண்டும் சீல் வைக்கப்பட்ட சம்பவங்கள் ஈரோட்டில் நடந்துள்ளன. இன்று இடிக்கப்பட்ட ஒரு சாயப்பட்டறையில் முறையான சுத்தீகரிப்பு நிலையம் அமைக்காத காரணத்தால் மாசுகட்டுப்பாட்டு வாரிய உத்தரவின் பேரில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

ஆனால் அந்த ஆலை அதிபர் திருட்டுதனமாக மின்சாரம் எடுத்து ஆலையை இயக்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு ரூ.6 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். சமீபத்தில் திருப்பூரில் ஏராளமான சாயப்பட்டறைகள் கோர்ட்டு உத்தரவின்பேரில் மூடப்பட்டன. அந்த ஆலைகள் ஈரோடு பகுதியில் திடீரென முளைத்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

தேர்தல் நேரம் என்பதால் அரசியில் தலையீடு எதுவும் செல்லாது என்ற காரணத்தால் அதிகாரிகள் துணிந்து இந்த நடவடிக்கையில் இறங்கி இருப்பது தெரியவந்தது. சாயப்பட்டறைகள் இடித்து தள்ளப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சங்ககிரியில் ராணுவ வீரரை சுட்ட போலீஸ்காரர் சஸ்பெண்டு.

ராணுவ வீரரை சுட்ட போலீஸ்காரர் சஸ்பெண்டு

சங்ககிரியில் துப்பாக்கி குண்டு பாய்ந்த ராணுவ வீரர் சுகுமார் சாதுகாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தை அறிந்த சேலம் போலீஸ் கமிஷனரும், ஐ.ஜியுமான சுனில்குமார்சிங், சேலம் சரக டி.ஐ.ஜி. வெங்கட்ராமன், துணை கமிஷனர் பாஸ்கரன், உதவி கமிஷனர் மோகன்குமார், சங்ககிரி துணை கண்காணிப்பாளர் ராமசாமி மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து விசாரித்தனர்.

ராணுவ வீரர் சுகுமார் சாதுகாவிடம் சரக டி.ஐ.ஜி.வெங்கட்ராமன் சிறிது நேரம் விசாரணை நடத்தினார். இதன் பின்னர் அவர் துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு காரணமான தமிழக சிறப்பு காவல்படை போலீஸ்காரர் சண்டியான்(வயது 25) என்பவரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

இதற்கான உத்தரவை போலீசார் உடனே கொண்டு சென்று சண்டியானிடம் வழங்கினர். இவரிடம் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவம் எப்படி நடந்தது என விசாரித்து வருகிறார்கள்.

திருப்பதியில் விரைவில் புதிய திட்டம் அமல் : பக்தர்கள் காத்திருக்க தேவையில்லை.


திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய, போக்குவரத்து, தங்கும் வசதி உள்பட அனைத்து சேவைகளும் ஒரே டிக்கெட்டில் கிடைக்கும் வகையில் புதிய ‘ஸ்ரீசேவா திட்டம்’ விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று சிறப்பு அதிகார குழு தலைவர் தெரிவித்தார்.

திருப்பதி திருமலை தேவஸ்தான சிறப்பு அதிகார குழு கூட்டம் திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நடந்தது. இதுகுறித்து அதன் தலைவர் சத்தியநாராயணா கூறியதாவது:

கோவர்தன் சத்திரத்தில் 180 பக்தர்கள் தங்கும் அறைகள் உள்ளன. இது ரூ.2 கோடியே 63 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ரூ.34 கோடி மதிப்பீட்டில் திருமலையில் உள்ள 5 ஆயிரம் பக்தர்கள் தங்கும் அறைகள் படிப்படியாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

ஏழுமலையான் கோயில் நகைகள் குறித்த எண்ணிக்கை விவரங்கள் ஓய்வு பெற்ற நீதிபதிகளின் பரிந்துரைப்படி தனி அக்கவுன்ட் ரிஜிஸ்டர் அமைத்து எந்த விவரங்கள் எப்போது வேண்டுமானாலும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வகையில் தனியாக துறை அமைக்க உள்ளோம்.

திருமலையில் உள்ள கடைகள் லைசென்ஸ் வருடத்திற்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டு வந்தது. இனி 5 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும். ஏழுமலையான் சுவாமிக்கு நடைபெறும் சகஸ்ர தீப அலங்கார சேவை, திருப்பாவை சேவை இரண்டிலும் கலந்துகொள்ள தினமும் தலா 25 டிக்கெட் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த கமிட்டி கூட்டத்தில் ‘ஸ்ரீசேவா திட்டம்’ அறிமுகம் செய்வதாக கூறினோம். இந்த திட்டத்தில் பக்தர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பஸ் டிக்கெட், தங்கும் விடுதிகள், பிரசாதங்கள் என அனைத்தும் ஒரே டிக்கெட்டில் முன்பதிவு செய்துகொள்ளும் வகையில் இருக்கும் என தெரிவித்திருந்தோம்.

இந்த திட்டத்திற்கான சாப்ட்வேர் தற்போது தயாராக உள்ளது. திருமலை, திருப்பதி மற்றும் ஐதராபாத் ஆகிய 3 இடங்களில் இதற்கான சர்வர்கள் அமைக்கப் பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான டெண்டர் விடப்பட்டு, விரைவில் திட்டம் அமலுக்கு வரும். இது 24 மணி நேர சேவையாகும். இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது.

திருப்பதி தேவஸ்தானத்தின் வெங்கடேஸ்வரா பக்தி சேனல் ஒளிபரப்பு தற்போது தெலுங்கில் மட்டும் உள்ளது. இச்சேவை அடுத்த 3 அல்லது 4 மாதங்களுக்குள் முழுவதும் தமிழிலேயே ஆரம்பிக்கப்பட உள்ளது என்றார்.

கள்ள ஓட்டு... ராஜபக்சேவின் பெயரை நீக்கியது அமெரிக்காவின் 'டைம்' !!


உலகின் மிகுந்த சக்திவாய்ந்த 100 விவிஐபிகளில் ஒருவராக அமெரிக்காவின் டைம்ஸ் பத்திரிகையால் பட்டியலிடப்பட்டிருந்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே பெயர், இப்போது பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

ஐநா அறிக்கையில் ராஜபக்சேவின் போர்க்குற்றங்கள் பட்டியலிடப்பட்டிருந்த காரணத்தாலும், அமெரிக்காவின் டைம்ஸ் பட்டியலில் இடம் பெறுவதற்காக ராஜபக்சே சார்பில் பெருமளவில் ஆன்லைனில் கள்ள ஓட்டுகள் குத்தப்பட்டதாலும் அவரை நீக்கியுள்ளது டைம்.

உலகின் பிரபலமான, செல்வாக்கு மிக்க 100 நபர்களை ஆண்டுதோறும் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்வது, அமெரிக்க டைம் பத்திரிகையின் வழக்கம். இந்தப் பட்டியலில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவின் பெயரும் இடம் பெற்றிருந்தது. இவருக்கு நான்காவது இடம் தரப்பட்டிருந்தது. அவருக்கு மொத்தம் 2,38,908 வாக்குகள் பதிவாகியிருந்தன. இவற்றில் 44,428 வாக்குகள் மகிந்தாவுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இந்தப் பட்டியலிலேயே எதிர்வாக்குகள் அதிகமாகப் பெற்றிருந்தவர் ராஜபக்சே ஒருவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதை சரி செய்வதற்காக தனது அலுவலகத்திலேயே ஒரு குழுவை அமைத்த ராஜபக்சே, அவர்கள் மூலம் ஆன்லைனில் ஏராளமான கள்ள ஓட்டுகளை போட வைத்துள்ளார். இதன்மூலம் கடந்த சில நாட்களுக்கு முன் ஆன்லைன் வாக்கெடுப்பில் 6வது இடத்துக்கு வந்த ராஜபக்சே, நேற்று காலை 4வது இடத்துக்கு முன்னேறினார்.

இதனால் சந்தேகமடைந்த டைம் இதழ் தனது தொழில்நுட்பக் குழு மூலம் ராஜபக்சே தரப்பின் மோசடியை தெரிந்து கொண்டு அவரை பட்டியலை விட்டு தூக்கியுள்ளது.

இந்நிலையில், டைம் இதழின் ஆன்லைன் வாக்குப் பதிவு நேற்று முடிந்தது. இறுதிப் பட்டியல் இன்று இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.

அதில் ராஜபக்சே பெயர் இல்லை!!.

இதற்கிடையே, போர்க்குற்றவாளி என உலக நாடுகளால் குற்றம் சாட்டப்பட்டு, சர்வதேச போர்க்குற்ற நீதிமன்ற விசாரணைக்கு காத்திருக்கும் ராஜபக்சே பெயரை செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் சேர்த்ததற்கே அமெரிக்காவின் டைம் நாளிதழுக்கு உலகமெங்கிலுமிருந்து கண்டனங்கள் குவிந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐநா நிபுணர் குழு அறிக்கையில் ராஜபக்சே அரசு மற்றும் படையினரின் போர்க்குற்றங்கள் வரிசையாக பட்டியலிடப்பட்டிருந்தன. உலகில் அத்தனை மோசமான ரசாயண குண்டுகளையும் பயன்படுத்தி லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்றார்கள் என ராஜபக்சே அரசு மீது அழுத்தம் திருத்தமாக ஆதாரங்களுடன் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இறுதி நாட்களில் மட்டும் 40000 தமிழர்கள் வன்னியில் கொல்லப்பட்டதை அந்த அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

இத்துடன், ஐநாவிடம் அறிவித்த பிறகு இலங்கை ராணுவத்திடம் சரணடைய வந்த தமிழர் தலைவர்களை எரித்துக் கொன்றதற்கான சாட்சியங்களும், புலிகளின் பெண் போராளிகளை கொடூரமாக ராணுவம் சிதைத்ததற்கான ஆதாரங்களையும் சேனல் 4 மற்றும் அல்ஜஸீரா தொலைக்காட்சிகள் அடுத்தடுத்து வெளியிட்ட வண்ணம் உள்ளன. குறிப்பாக இந்த வாரம் முழுவதும் சேனல் 4, பார்ப்பவரின் இதயங்களை அதிர்ச்சியில் உறைய வைக்கும் இலங்கை ராணுவத்தின் கொடிய செயல்களுக்கு ஆதாரங்களை வெளியிட்டு வருகிறது.

ஐநா நிபுணர் குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாகும்போது, இலங்கை அதிபர் என்ற பட்டியலிலிருந்தே ராஜபக்சே பெயர் நீக்கப்படுமோ!?.

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு: மலிங்கா அதிரடி இலங்கை அதிர்ச்சி !!


இலங்கையின் அதிரடி வேகப் பந்து வீச்சாளர் லசித் மலிங்கா டெஸ்ட் போட்டிகளி லிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க. சமீபத்தில் முடிந்த உலகக் கோப்பைப் போட்டியிலும், தற்போது நடந்துவரும் ஐபிஎல் போட்டியிலும் பந்துவீச்சில் எதிரணி வீரர்களை கதிகலங்க வைத்து வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இப்போது விளையாடி வருகிறார் மலிங்கா.

உலகக் கோப்பை போட்டி முடிந்த கையோடு, அவர் இந்தியாவில் தங்கி மூட்டுப் பிரச்சினைக்காக சிகிச்சைப் பெறப் போவதாக அறிவித்தார். எனவே நடைபெற விருக்கும் இங்கிலாந்துக்கெதிரான போட்டியில் இலங்கை அணியில் அவர் இடம்பெறவில்லை.

ஆனால் ஐபிஎல் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து ஆடி வருகிறார். இதனால் இலங்கை கிரிக்கெட் நலனை விட பணத்துக்குதான் அதிக முக்கியத்துவம் தருகிறார் மலிங்கா என்று இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

இந்த நிலையில் இன்று அதிரடியாக டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக மலிங்கா அறிவித்துள்ளார்.

சர்வதேச போட்டிகளில் ஆட விரும்புவதாகவும், ஆனால் டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதிலிருந்து மட்டும் ஓய்வு பெறுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

தனது முழங்கால் பிரச்சினையும் இதற்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மலிங்காவின் இந்த முடிவு இலங்கை கிரிக்கெட் வாரியத்தையும் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சர்வதேச அளவில் இலங்கை அரசை போர்க் குற்றச்சாட்டுகள் நெருக்கி வரும் வேளையில், அந்நாட்டு கிரிக்கெட் அணியும் நெருக்கடிக்குள்ளாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ராஜபக்சேயை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த, மத்திய அரசுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்.

இலங்கை தமிழர்கள் படுகொலை;   ராஜபக்சேயை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்;   மத்திய அரசுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கையில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை என்பதைத் தான் அண்மையில் நான்கு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட கோரச் சம்பவம் நினைவூட்டுகிறது. இன்னும் சொல்லப் போனால், இந்தியர்கள், குறிப்பாக தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் கொடூர மனப்பான்மைக்கு உண்மையிலேயே ஆதாரம் தேவை என்றால், இலங்கை அதிகாரிகளின் சித்ரவதையால் அழுகிய நிலையில் சிதைந்து கிடந்த மீனவர்களின் சடலங்களே சாட்சி.

இந்தியாவைச் சேர்ந்த தமிழர்கள் மீதே இதுபோன்ற கொடூரத் தாக்குதலை இலங்கை அரசு நடத்தியிருக்கும் நிலையில், யாருமே நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அனைத்து விதமான மனித உரிமை மீறல் குற்றங்களுக்கும் ஆளாகி, இலங்கை அரசின் அடக்குமுறைக்கு அடிபணிந்து இலங்கைத் தீவில் வாழ்ந்து கொண்டிருக்கும் அப்பாவி தமிழர்களின் நிலைமை என்ன என்பதை கற்பனை செய்து பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

ஓர் தமிழ் இளைஞரை துப்பாக்கியால் சுடுவதற்கு முன்பு, அவரை நிர்வாணமாக்கி, கண்களை மூடி, கை, கால்களைக் கட்டி, காலால் எட்டி உதைத்து இலங்கை ராணுவத்தினர் பேரானந்தம் அடைந்த காட்சியை 25.8.2009 அன்று 40 வினாடிகளுக்கு பிரிட்டிஷ் டி.வி. ஒளிபரப்பி உலகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இந்த இளைஞரின் பிணம், இதேபோன்று ஒன்பது சடலங்கள் இருந்த இடத்திற்கு உருட்டி விடப்பட்டது. இந்த கொடுஞ்செயலுக்கு எதிராக சர்வதேச அளவில் கூக்குரல் எழுப்பப்பட்டதோடு மட்டுமல்லாமல், இலங்கை அதிபர் மஹிந்தா ராஜபக்சே சர்வதேச நீதி மன்றம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, போர்க் குற்றத்திற்காக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

ஆனால், இந்திய அரசோ, தமிழக அரசோ இது குறித்து எதிர்ப்பையோ அல்லது வருத்தத்தையோ கூட தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாறாக, இலங்கை அதிபருடன் விருந்துண்டு மகிழ்வதற்காக, 2009ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், கனிமொழி உள்பட தி.மு.க., காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை இலங்கைக்கு அனுப்பி வைத்தார் கருணாநிதி.

பரிசுப் பொருட்களுடன் திரும்பிய நாடாளுமன்றக் குழுவினர் இலங்கையில் எல்லாமே நன்றாக இருக்கிறது என்றும், அங்குள்ள தமிழர்கள் குறைபட்டுக் கொள்ளும் அளவுக்கு புகார் ஒன்றுமில்லை என்றும் தெரிவித்தனர். என்னதான் நற்சான்றிதழ் கொடுத்தாலும், அங்குள்ள தமிழர்களின் நெஞ்சை உருக்கும் நிலையைக் கண்டு மனித உரிமை ஆர்வலர்கள், முற்போக்கு நாடுகளைச் சேர்ந்த அரசுகள், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவை பொங்கி எழுந்தன.

தற்போது, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் அனுப்பிய குழுவின் அறிக்கை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் இருந்து ஒரு சில பகுதிகளை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஐ.நா. குழுவால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நம்பத் தகுந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படின், சர்வ தேச மனிதாபிமானச் சட்டம் மற்றும் சர்வதேச மனித உரிமைச் சட்டம் ஆகியவற்றிற்கு எதிரான ஆபத்து விளைவிக்கக் கூடிய அத்து மீறல்களை இலங்கை அரசாங்கம் நிகழ்த்தியுள்ளது வெட்ட வெளிச்சமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதில் சில குற்றங்கள் போர்க் குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகும். 2008ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கும், 2009ஆம் ஆண்டு மே மாதம் 19-ஆம் தேதிக்கும் இடையே, வன்னி பகுதிக்கு முன்னேறிய இலங்கை ராணுவம், மிகப் பெரிய அளவில் பரவலாக குண்டு மழை பொழிந்து அப்பாவி தமிழர்கள் மாண்டு போவதற்கு காரணமாக இருந்தது.

இதன் மூலம் வன்னி பகுதி மக்களுக்கு பலவிதமான தொந்தரவுகளை இலங்கை ராணுவம் கொடுத்தது. கிட்டத்தட்ட 3 லட்சத்து 30 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் குண்டு மழை பொழிவிலிருந்து தப்பிக்க முடியாத அளவுக்கு மிகக் குறுகிய பகுதிக்குள் சிக்கிக் கொண்டனர்.

ஊடகங்கள் மற்றும் போர் விமர்சகர்களை பயமுறுத்தும் வகையிலும், அவர்களுக்கு வாய்ப்பூட்டு போடும் வகையிலும், வெள்ளை வாகனங்களில் மக்களை கடத்துவது, மறைத்து வைப்பது உள்பட பல்வேறு அச்சுறுத்தும் நடவடிக்கைகளை இலங்கை அரசு கையாண்டது.

குண்டு மழைக்கு விலக்களிக்கப்பட்ட பொதுமக்கள் வாழும் தொடர்ச்சியான மூன்று இடங்களில் இலங்கை அரசு மிகப்பெரிய அளவில் குண்டு மழை பொழிந்திருக்கிறது. மருத்துவ மனைகள் குறிவைத்து தொடர்ந்து தாக்கப்பட்டு இருக்கின்றன. வன்னிப் பகுதியில் உள்ள மருத்துவ மனைகள் அனைத்தும் பீரங்கிகளால் தாக்கப்பட்டு இருக்கின்றன.

மருத்துவமனைகள் இருக்கும் பகுதிகள் என்று இலங்கை அரசாங்கத்திற்கு நன்கு தெரிந்திருந்தும் சில மருத்துவமனைகள் மீண்டும், மீண்டும் தாக்கப்பட்டிருக்கின்றன. போர் பகுதியில் உள்ள மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் செய்யக் கூடிய உதவிகளான மருத்துவ உதவி, உணவு ஆகியவற்றை இலங்கை அரசாங்கம் தடுத்து அவர்களை மேலும் துன்பத் திற்கு ஆளாக்கி இருக்கிறது.

இதன் மூலம் போர் பகுதியில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கையை இலங்கை அரசு வேண்டுமென்றே குறைத்து மதிப்பீடு செய்தது. 2009 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே வரை, மனித வர்க்கத்தின் படுகொலை நடந்த இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் அனாமதேயமாக செத்து மடிந்தனர்.

ஐக்கிய நாடுகள் சபை குழுவின் அறிக்கை மிகத் தெளிவாக உள்ளது. இலங்கை அரசாங்கத்தின் போர்க் குற்றங்களை பட்டியலிட்ட தோடு மட்டுமல்லாமல், இலங்கை போர் முடிவிற்கு வந்து விட்டது என்று கூறி 27.4.2009 அன்று தனது மூன்று மணி நேர உண்ணாவிரத நாடகத்தை கருணாநிதி முடித்துக் கொண்டதற்குப் பிறகும், 2009 ஆம் ஆண்டு மே மாதம் இறுதி வரை இனப்படுகொலைகள் நடந்துள்ளன என்று தெளிவாக இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

தமிழர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட, மனித குல வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட மிக மோசமான இனப்படு கொலைக்கு ஆதரவாகவும், உடந்தையாகவும், தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டும் இருந்த கருணாநிதி பகிரங்கமாக பொது மன்னிப்பு கோர வேண்டும் என்று தான் தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்க்ள.

ராஜபக்சே மற்றும் அவருடைய சகாக்களின் போர்க் குற்றங்களை விசாரிக்கும் வகையில், அவர்களை சர்வ தேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த உடனடி நடவடிக்கைகளை தனது பங்கிற்கு இந்திய அரசு எடுக்க வேண்டும். இல்லையெனில், அண்மையில் தமிழக வாக்காளர்கள் முன்பு இலங்கை குறித்து சோனியாகாந்தி தெரிவித்த கருத்துக்கள் வாய்மையற்றவை என்றாகி விடும்.

இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலையை நடத்தியது இந்திய அரசு தான் என்று அடிக்கடி கூறப்பட்டு வந்த குற்றச்சாட்டு உண்மை என்று நம்புவதாக வழி வகுக்கும்.

இவ்வாறு அறிக்கையில் ஜெயலலிதா கூறி உள்ளார்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த கார்கள் பற்றி ஒரு பார்வை.

இன்று சர்வதேச புவி தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. மனித இனத்தால் ஏற்பட்டுள்ள ஆபத்துக்களிலிருந்து, பூமியை காப்பாற்றும் நடவடிக்கை களை தீவிரப்படுத்தும் நோக்கில் கடைபிடிக்கப்படும் இந்த தினத்தில், சுற்றுச்சூழல் மாசுபடுவதை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நாட்டு அரசாங்கங்களும், வாகன தயாரிப்பு நிறுவனங்களும் முயற்சிகள் மேற்கொண்டுள்ளன.

புவி வெப்பமயமாதல், தற்போது உலகின் தலையாய பிரச்சினையாக மாறியுள்ளது. கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு, மீத்தேன் உள்ளிட்டவை பூமியின் சுற்றுச்சூழலுக்கு பெரிதும் தீங்கு விளைவிக்கும் காரணிகளாக மாறியுள்ளன.

குறிப்பாக, பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்களிலிருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்சைடு புகையால்தான் சுற்றுச்சூழல் அதிக அளவில் மாசுபடுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை மணி அடிக்கின்றனர்.

அதிலும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதில் கார்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, மாற்று எரிபொருள் தொழில்நுட்பத்தில் இயங்கும் கார்களை தயாரிப்பதற்கு பல்வேறு நாட்டு அரசாங்கள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

இயற்கை எரிவாயு மற்றும் பேட்டரி கார்கள் தயாரிப்புக்கு மானியங்கள் மற்றும் வரிச்சலுகைகளை பல்வேறு நாட்டு அரசாங்கள் வழங்கி வருகின்றன.

இந்தியாவிலும் இதற்கான பணிகளை மத்திய அரசு துரிதப்படுத்தியுள்ளது. இயற்கை எரிவாயு மற்றும் பேட்டரி கார்கள் தயாரிப்பை தீவிரப்படுத்தும் விதமாக சமீபத்தில் இரண்டு பிரத்யேக உயர்மட்ட குழுக்களை அமைத்தது. இதுதவிர, மத்திய பட்ஜெட்டில் பேட்டரி கார்களுக்கு மானியம், வரிச்சலுகைகளையும் அரசு அறிவித்தது.

மாற்று எரிபொருள் தொழில்நுட்பத்தில் இயங்கும் கார்களை தயாரிப்பதற்கான அவசியத்தை பல முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் உணர்ந்து கொண்டுள்ளன. இதனால், சிஎன்ஜி மற்றும் பேட்டரி கார்கள் தயாரிப்பு பணிகளில் அந்த நிறுவனங்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

மேலும், சிஎன்ஜி மற்றும் பேட்டரி கார்களை அந்த நிறுவனங்கள் வரிசையாக அறிமுகப்படுத்தி வருகின்றன. தவிர, புதிய மாடல்களை அறிமுகப்படுத்துதிலும் அந்த நிறுவனங்கள் மும்முரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில், தனி மனிதனாக சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று துடிப்பவர்கள், கார் வாங்கும்போது சுற்றுச்சூழலுக்கு உகந்த கார் மாடல்களை தேர்வு செய்யலாம்.

மார்க்கெட்டில் உள்ள சில கிரின் கார்கள் பற்றிய தொகுப்பு.

ஹூண்டாய் ஐ10 சிஎன்ஜி:

ஹூண்டாயின் வெற்றிகரமான ஐ10 காரின் சிஎன்ஜி மாடல் மாசுக்கட்டுப்பாடு விதிகளுக்கு பொருந்தும் விதத்தில் வருகிறது. சிஎன்ஜி சிலிண்டர் கிட் பொருத்தப்பட்ட ஐ10 கார் பெட்ரோல் மாடலை விட விலையில் ரூ.55,000 கூடுதலாக உள்ளது. சிஎன்ஜி மாடலில் எரிபொருள் சிக்கனம் கிடைப்பதோடு, போக்குவரத்து செலவீனமும் குறைவு. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி எரிவாயு ஆகிய இரண்டிலும் இயங்கும் எஞ்சின் கொண்டுள்ளது ஐ10 சிஎன்ஜி.

மாருதி சுஸுகி ஆல்ட்டோ கிரின்:

உலகின் அதிகம் விற்பனையாகும் கார் என்ற பெருமையை பெற்றுள்ள மாருதி ஆல்ட்டோ சிஎன்ஜி மாடலிலும் கிடைக்கிறது. ஆல்ட்டோ சிஎன்ஜி மாடலில் ஐ-ஜிபிஐ தொழில்நுட்பம் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் டெல்லியில் ரூ.2.78 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. பட்ஜெட்வாசிகளுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

டொயோட்டோ இன்னோவா சிஎன்ஜி

டொயோட்டோவின் தரமான படைப்புகளில் ஒன்றாக வலம் வரும் இன்னோவா கார் சிஎன்ஜி மாடலிலும் கிடைக்கிறது. 2.0 லிட்டர் பெட்ரோல் மாடலில் சிஎன்ஜி கிட் பொருத்தி தருகிறது டொயோட்டோ. இதற்கு கூடுதலாக ஒரு லட்சம் செலவாகும். மும்பை , டெல்லியில் மட்டும் இன்னோவா சிஎன்ஜி மாடல் கிடைக்கிறது.

செவர்லே பீட்:

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பீட் காரின் சிஎன்ஜி மாடல் சமீபத்தில்தான் அறிமுகம் செய்யப்பட்டது. 1.2 லிட்டர் ஸ்மார்ட்டெக் எஞ்சின் பொருத்தப்பட்ட இந்த காரில் 28 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிஎன்ஜி சிலிண்டரும், 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்கும் பொருத்தப்பட்டுள்ளது.

சிலிண்டரை முழுவதுமாக நிரப்பினால், 349 கி.மீ., தூரத்திற்கு செல்லலாம் என ஜெனரல் மோட்டார்ஸ் மார் தட்டுகிறது. மேலும், சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் ஆகிய இரண்டையும் சேர்த்து 1,000 கி.மீ., வரை செல்ல முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு. டெல்லியில் ரூ.4.11 லட்சம் விலையில் பீ்ட் சிஎன்ஜி மாடல் விற்பனை செய்யப்படுகிறது.

டாடா இன்டிகா இவி2 எல்பிஜி

கார் சந்தையில் நீண்ட காலமாக வியாபித்து வரும், இன்டிகா ஹேட்ச்பேக் காரின் மேம்படுத்தப்பட்ட மாடலான இவி2 மாடலை சமீபத்தில்தான் டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்தது. இந்த கார் எல்பிஜி மாடலிலும் விற்பனை செய்யபடுகிறது. 61.8 பிஎச்பி திறனை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் எஞ்சினுடன் வருகிறது இன்டிகா இவி2. பாரத் ஸ்டேஜ்-4 மாசுக் கட்டுப்பாட்டு விதிகளுடன் வந்துள்ள இந்த கார் டெல்லியில் ரூ.3.3 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதிக இடவசதி, மைலேஜ் இதன் தனிச்சிறப்புகள்.

மஹிந்திரா ரேவா ஐ:

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஒரே எலக்ட்ரிக் கார் என்ற பெருமையை பெற்ற ரேவாவின் மேம்படுத்த்ப்பட்ட மாடலே ரேவா ஐ. ஒரு முறை சார்ஜ் செய்தால் 80 கி.மீ., செல்லலாம் என மஹிந்திரா ரேவா நிறுவனம் தெரிவிக்கிறது. இந்த கார் டெல்லியில் ரூ.2.85 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நிபந்தனை விதிக்க இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை : உயர் நீதிமன்றத்தில் அரசு பதில்.


மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டுமென நிபந்தனை விதிக்க இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு (எம்.சி.ஐ.) அதிகார வரம்பு இல்லை என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

மருத்துவ மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் நுழைவுத் தேர்வு மூலம் நடத்தப்படும் என்று எம்.சி.ஐ. கடந்த 21.12.10-ல் அறிவிப்பு வெளியிட்டது.

இதை எதிர்த்து டி.டி. மருத்துவக் கல்லூரி மற்றும் டி.டி. மருத்துவமனை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்தது.

அந்த மனு தொடர்பாக தமிழக அரசின் சுகாதாரத் துறைச் செயலர் வி.கே. சுப்புராஜ் தனது பதில் மனுவை உயர் நீதிமன்றத்தில் அளித்துள்ளார்.

அதன் விவரம்:

இந்திய மருத்துவ கவுன்சிலின் அறிவிப்பாணையை எதிர்த்து தமிழக அரசு இந்த நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் அந்த அறிவிப் பாணைக்கு இடைக்கால தடை விதித்து இந்த நீதிமன்றம் கடந்த 6.1.11-ம் தேதி உத்தரவிட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என நிபந்தனைகளை விதிக்க மருத்துவ கவுன்சிலுக்கு அதிகார வரம்பு இல்லை. தமிழ்நாட்டில் தொழில் கல்வி நிறுவனங்களில் நுழைவுத் தேர்வை ரத்து செய்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தை உயர் நீதிமன்றமும் உறுதிப் படுத்தியுள்ளது. அதனால், மருத்துவக் கவுன்சிலின் அறிவிப்பாணையைவிட அரசின் நுழைவுத் தேர்வு ரத்து சட்டமே செல்லும் என்று கூறியுள்ளார்.


ஐ.ஐ.டி. நில விவகாரம: முதல்வர் கருணாநிதி விளக்கம்.



சென்னை தரமணியில் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பதற்கு டிட்கோ மூலம் வெளிப்படையான டெண்டர் கோரப்பட்ட பிறகே, டாடா நிறுவனத்துக்கு நிலம் வழங்கப்பட்டது என்று முதல்வர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்துக்குச் சொந்தமான நிலம், அந்த நிறுவனத்தின் ஒப்புதல் இல்லாமலேயே டாடா குழுமத்துக்குச் சொந்தமான நிறுவனத்துக்கு நீண்ட கால குத்தகைக்கு விட்டிருப்பதாக "தினமணி', "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகைகளில் வியாழக்கிழமை செய்தி வெளியானது. துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இதுதொடர்பாக அளித்த பதிலை மேற்கோள்காட்டி முதல்வர் கருணாநிதி வியாழக்கிழமை இரவு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் : தரமணியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்காக டிட்கோவிற்கு அரசு முன்மொழிவினை அனுப்பியது. அதனடிப்படையில், தரமணியில் கானகம் மற்றும் திருவான்மியூர் கிராமங்களில் இருக்கக் கூடிய 25.27 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு தகவல் தொழில்நுட்பத்திற்கான சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கவும், டிட்கோ மற்றும் தனியார் கூட்டு முயற்சியாக இதைச் செயல்படுத்தவும் அரசு ஒப்புதல் அளித்தது.

இந்த அரசு தன்னிச்சையாக டாடா நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கவில்லை. டிட்கோ நிறுவனம் வெளிப்படையான டெண்டர் கோரி அதனடிப்படையிலேதான் டாடா நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்தது.

ஒப்பந்தப் புள்ளிகளை சமர்ப்பித்திருந்த 15 நிறுவனங்களில் 7 நிறுவனங்கள் தகுதிவாய்ந்தவைகளாகக் கண்டறியப்பட்டன. நிலத்தின் விலை, வழிகாட்டி மதிப்பீடு, சந்தை மதிப்பீடு ஆகியவற்றில் எது அதிகமோ அதை குறைந்தபட்ச விலையாக நிர்ணயித்து, அதனடிப்படையிலே விலைப்புள்ளி கோருவது என்று முடிவு செய்யப்பட்டது.

வழிகாட்டி மதிப்பீடான சதுர அடி ரூ.12 ஆயிரம் என்பதை குறைந்தபட்ச விலையாக நிர்ணயிக்கப்பட்டது. தகுதிவாய்ந்த 7 நிறுவனங்களில் டாடா ரியாலிட்டி அண்ட் இன்ப்ராஸ்டிரக்சர் நிறுவனம் மட்டுமே சதுர அடிக்கு ரூ.12 ஆயிரத்து 50 விலைப்புள்ளியைச் சமர்ப்பித்திருந்தது. எனவே டாடா ரியாலிட்டி நிறுவனம் இந்தத் திட்டத்தின் கூட்டு முயற்சி நிறுவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

இந்த நிறுவனத்திடம் இருந்து ரூ.1,412 கோடி குத்தகைத் தொகையாக அரசால் பெறப்பட்டு, அந்த நிறுவனத்துக்கு மேற்கண்ட நிலம் குத்தகை அடிப்படையிலே வழங்கப்பட்டுள்ளது. 40 லட்சம் சதுர அடி பரப்புள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டடத்துக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டம் 2012 மே மாதம் முழுமையாக முடிவடையும். 20 ஆயிரம் பேருக்கு மேல் வேலைவாய்ப்பு பெறக்கூடிய நிலை உருவாகும் என்று அந்த அறிக்கையில் முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், ஐ.ஐ.டி.க்குச் சொந்தமான நிலத்தை, அதன் அனுமதியில்லாமல் அரசு எப்படி கையகப்படுத்தியது என்பதைப் பற்றியோ, அரசுக்கு சொந்தமில்லாத நிலத்தை டாடாவுக்கு வழங்கியது பற்றியோ முதல்வர் கருணாநிதி காரணம் எதுவும் குறிப்பிடவில்லை.

12-வது ஐந்தாண்டுத் திட்டம்: தனியார் - அரசு கூட்டு முயற்சிகளுக்கு முக்கியத்துவம - மன்மோகன் சிங்.



நாட்டில், 12-வது ஐந்தாண்டுத் திட்டம் வகுக்கும்போது தனியார்-அரசுத்துறை கூட்டு முயற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டமிடல் அவசியம் என பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டார்.

12-ம் ஐந்தாண்டுத்திட்டத்தை வகுக்கும் திட்டக்குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்ற கூட்டம் புதுதில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் பேசுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவரது பேச்சு விவரம் : 12-வது ஐந்தாண்டுத்திட்ட காலத்தில் நமது நாடு சந்திக்க வேண்டிய சவால்கள் குறித்து விவாதிக்க இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது. 11-வது ஐந்தாண்டு திட்ட காலத்தின் கடைசி ஆண்டில் நாம் கடந்த ஆண்டுதான் நுழைந்தோம். 12-வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் நாம் மேற்கொள்ளவுள்ள அணுகுமுறை பற்றி விவாதித்து முடிவு செய்ய இது நல்ல தருணம்.

எந்தெந்தப் பிரச்னைகளுக்கு நாம் தீர்வு காண வேண்டும் என்பது பற்றி ஒரு பட்டியலை முதலில் தயாரித்துக்கொண்டு அதிலிருந்து திட்டமிடல் பணிகளை திட்டக்குழு தொடங்க வேண்டும்.

இந்தக் கூட்டத்தில் திட்டக்குழு ஓர் அறிக்கையை சுற்றுக்கு விட்டுள்ளது. அதன்படி பார்த்தால், 11-வது ஐந்தாண்டுத் திட்டமானது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் சுமார் 8.2 சதவிகிதம் என்ற நிலையை எட்டியுள்ளநிலையில் முடிவடைகிறது. இது 9 சதவிகிதமாக இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்திருந்தோம். அதைவிட குறைவான அளவே எட்டப்பட்டுள்ளது. இருப்பினும், 11-வது ஐந்தாண்டுத் திட்ட காலமானது நாட்டில் கடும்வறட்சியும், உலக பொருளாதாரம் நசிவைச் சந்தித்த காலகட்டத்தினை கடந்து வந்தது என்பதால் இந்த அளவு வளர்ச்சியை எட்டியதை பாராட்டத்தான் வேண்டும்.

பல துறைகளில் முன்னேற்றம் என்பது எட்ட முடியாத சூழ்நிலை நிலவியபோதிலும் சில துறைகளில் நமது நாடு சாதனைகள் படைத்ததை மறக்கக்கூடாது. அதாவது, கல்விநிலையங்களில் புதிதாக படிக்கச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இடையிலேயே படிப்பைக் கைவிடுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆண், பெண் பிறப்பு விகிதத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வு குறைந்துள்ளது. சிசு மரண விகிதம் முன்பைவிட குறைந்துள்ளது. இதுபோன்றவற்றில் நாம் நிர்ணயித்த இலக்கைவிட சாதித்தது குறைவுதான் என்றபோதிலும் பெரிய குறையாக கருதும்நிலை இல்லை. எனவே, எதிர்காலத்தில் இவ்வகையில் குறிப்பிடத்தக்க சாதனை படைக்க வேண்டும் என்ற முனைப்பு நமக்கு இருக்க வேண்டும். அதை செய்துகாட்டுவோம் என நாம் உறுதியேற்க வேண்டியது அவசியம்.

நமது நாட்டின் சமூக, பொருளாதார பிரச்னைகளைத் தீர்க்க நாம் பழைய புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டே திட்டமிட வேண்டியதாக இருந்தது. உதாரணமாக, இது வரை 2004-05-ம் ஆண்டுக்கான புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டே பல பிரச்னைகள் தொடர்பாக விவாதங்கள் நடத்தி வந்துள்ளோம். அதாவது 11-வது ஐந்தாண்டுத் திட்ட காலம் தொடங்கும் முன்பு எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களை வைத்தே ஆலோசனைகளை நடத்தியிருக் கிறோம். ஆனால், 2009-10-ம் ஆண்டுக்கான புள்ளிவிவரங்கள் இப்போது வந்துவிட்டன. அதை உடனடியாக அனைத்துத் துறைகளுக்கும் தெரிவித்து விடுங்கள். இதன் மூலம் 11-வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் வறுமை ஒழிப்புத்திட்டத்தில் எவ்வளவு சாதனை படைக்கப்பட்டது என்பதை அனைவரும் அறிந்து கொள்ள முடியும்.

சமீபத்திய புள்ளிவிவரங்களைவைத்து வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கான மதிப்பீடுகளை திட்டக்குழு தயாரிக்க வேண்டும். அதை நாட்டு மக்கள் விவாதிக்க கூடிய வகையில் விரைவில் வெளியிட வேண்டும்.

நாம் இதுவரை சாதித்தவற்றினை நிலைநிறுத்துவதாகவும், அனைத்து தரப்பு நன்மைகளையும் கருத்தில்கொள்வதாகவும், விரைவான முறையில் பலன்தரத்தக்கதாகவும், நிரந்தர வளர்ச்சியை உறுதிசெய்வதாகவும் 12-வது ஐந்தாண்டுத் திட்ட காலத்திற்கான திட்டங்கள் இருக்க வேண்டும். இதற்காக புதிய இலக்குகள் நிர்ணயிக்கப்பட வேண்டும். தற்போது அரசு அமலாக்கிவரும் திட்டங்களில் எந்தெந்தத் துறைகளில் உரிய இலக்குகள் எட்டத்தவறியிருக்கிறோம் என்று பார்த்து அவற்றில் உரிய முன்னேற்றம் காண ஆவன செய்யவேண்டும். இதற்காக சம்பந்தப்பட்ட திட்டங்களை மறுசீரமைப்பு செய்யலாம் அல்லது திட்ட அமலாக்கத்தை தீவிரப்படுத்தலாம். எந்தெந்த புதிய சவால்களை நாம் இனி சமாளிக்க வேண்டும். அதற்கு என்னென்ன முன்முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என ஆய்வு செய்து திட்டமிடுவது அவசியம்.

திட்டங்களை அமலாக்குவதற்கு தேவையான நிதியாதாரங்களை திரட்டுவதுதான் தற்போது பெரிய பிரச்னையாக இருக்கிறது. எனவே, கிடைக்கும் நிதியாதாரத்தை திறமையான முறையில் பயன்படுத்த நன்கு திட்டமிடவேண்டியது அவசியம். எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் தனியார்-அரசு கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளும்வகையில் திட்டம் வகுக்க வேண்டும்.

மின்சார உற்பத்தி, நகரமயமாக்கல், தண்ணீர் பிரச்னை ஆகியன எதிர்காலத்தில் விஸ்வரூபம் எடுக்கும் பிரச்னைகளாக இருக்கக்கூடும். எனவே, இந்தப் பிரச்னைகளை சமாளிக்க உரிய கொள்கைத் திட்டங்களை வகுக்க திட்டக்குழு சிறப்புக்கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிதியமைச்சரின் யோசனைகளை பரிசீலிக்க வேண்டும்

12-வது ஐந்தாண்டுத்திட்ட இலக்கு 9 முதல் 9.5 சத வளர்ச்சி விகிதத்தை எட்டுவதாக இருக்க வேண்டும். இந்த கூட்டத்தில் பேசியவர்களின் கருத்துக்கள் அனைத்தையும் திட்டமிடலின்போது திட்டக்குழு பரிசீலிக்க வேண்டும். குறிப்பாக நிதியமைச்சர் கூறிய யோசனைகளை கருத்தில் கொள்ள வேண்டும். அடிப்படை கட்டுமானத்துறைகளின் செயல்பாட்டை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல யோசனைகளை அவர் தெரிவித்திருக்கிறார்.

சில முக்கிய பிரச்னைகள் குறித்து மாநில அரசுகளுடன் திட்டக்குழு ஆலோசனை நடத்தி முதலில் புதிதாக அணுகுமுறை ஆவணத்தை தயாரிக்க வேண்டும். அதை மத்திய அமைச்சகங்களுக்கு சுற்றுக்கு விட வேண்டும். அதன் பின் அணுகுமுறை பரிந்துரை அறிக்கை தயாரித்து அதை மத்திய அமைச்சரவையின் பரிசீலனைக்குத் தர வேண்டும். அதன் பின்னர் அந்த அறிக்கை தேசிய மேம்பாட்டு கவுன்சிலின் பரிசீலனைக்கு அனுப்பப்படும். இந்த கவுன்சிலின் கூட்டம் வரும் ஜூலை மாதம் நடைபெறக்கூடும் என பிரதமர் இறுதியாக ஆற்றிய தொகுப்புரையில் குறிப்பிட்டார்.

மன்மோகன் சிங்கின் ஆட்சிக் காலம் மிகவும் மோசமானது : அத்வானி.


இப்போது நடைபெற்று வரும் மன்மோகன் சிங்கின் ஆட்சி, இதுவரை இல்லாத அளவுக்கு மிகமோசமான ஆட்சி என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தெரிவித்தார்.

மேற்குவங்கத்தில் வியாழக்கிழமை தேர்தல் கூட்டத்தில் அவர் பேசியது: 2008-ம் ஆண்டில் ஆட்சிக்கு ஆதரவாக எம்.பி.களை விலைக்கு வாங்கி லஞ்ச, ஊழலை பெரிய அளவில் தொடங்கியது மன்மோகன் அரசு. தொடர்ந்து 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் விளையாட்டில் ஊழல், ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல் என கிடைத்த இடத்தில் எல்லாம் ஊழல் செய்து, எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு கோடிகளை சுருட்டியது மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு. அரசியல்வாதியாக இல்லாத மன்மோகன் சிங் ஆட்சிக்கு வந்தபோது நான் அவர் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தேன். ஆனால் அவர் மிகமிக மோசமாக ஆட்சி நடத்துகிறார்.

1952-ம் ஆண்டில் இருந்து நான் நமது நாட்டில் நடைபெற்று வரும் ஆட்சியை கவனித்து வருகிறேன். இதுவரை நடைபெற்ற ஆட்சிகளிலேயே மிகவும் மோசமானது மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சிதான் என்றார் அத்வானி.

ஐ.நாவை மிரட்டும் இலங்கை !


இலங்கை அரசு போர்க்குற்றம் புரிந்துள்ளது தொடர்பான அறிக்கை திட்டமிட்டப்படி எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே வெளியிடப்படும் என்று ஐ.நா.சபை கூறியுள்ளது. அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை ஏற்று அடுத்த கட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று ஐ.நா.சபை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா.சபையின் மனித உரிமைகள் கண்காணிப்பு இயக்குநர்,

அறிக்கையில் இலங்கை அரசு தரப்பின் கருத்தை சேர்ப்பது குறித்து அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால் அறிக்கை வெளியே வராமல் தடுப்பதில் இலங்கை அரசு தீவிரம் காட்டுகிறது. சீனா மற்றும் ரஷ்யா மூலம் இலங்கை அரசு இந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இலங்கை அரசு எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் அறிக்கை வெளியிடுவதில் இருந்து ஐ.நா. பின்வாங்கப் போவதில்லை என்றார்.

ஐ.நா. சபை அறிக்கையை வெளியிடக் கூடாது என்று இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் பெரீஸ் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் நிபுணர்குழு அறிக்கை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப் பட்டால் அது ஜக்கிய நாடுகள் அமைப்பின் செயற்பாடுகளை மிக மோசமாக பாதிக்கும் என இலங்கை அரசு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை அரசின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பெரிஸ், ஐக்கிய நாடுகள் நிபுணர்குழு அறிக்கை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டால் அது ஜக்கிய நாடுகள் அமைப்பின் செயற்பாடு களை மிக மோசமாக பாதிக்கும். அறிக்கை வெளியிடப்படுவது அடிப்படையில் தவறானது. அதில் குறிப்பிடப்பட்ட விஷயங்கள் அடிப்படையிலான விஷயங்களை ஆரய நடவடிக்கை எடுப்பதும் தவறானது.

அந்த அறிக்கை ஐக்கிய நாடுகள் செயலருக்கு அறிவுரை வழங்கவே வழங்கப் பட்டது. அதை மக்கள் பாவனைக்கு வெளியிடவேண்டியதன் அவசிம் என்ன என்றார்.

பான் கி மூனுக்கு அறிவுரை வழங்க தயாரிக்கப்பட்ட இவ் அறிககையை விசாரணை அறிக்கையாக ஐ.நா மாற்றியுள்ளதாக குற்றம் சுமத்திய பீரிஸ், இது அறிவுரை அறிக்கையே என பான் கி மூன் பலமுறை தெரிவித்துள்ளதாகவும் பெரிஸ் குறிப்பிட்டார்.

இவ் அறிக்கைக்கு பதில் அளிப்பது பற்றி கேள்விக்கு, அது மிகவும் கடுமையானது என்றும், ஏழு மாதங்காளக் தயாரிக்கப்பட்ட அறிக்கைக்கு சில நாட்களில் பதில் அளிப்பது சாத்தியமில்லை எனவும், இதற்காக முன்னாள் வெளிவிவகார அமைச்சின் செயலர்கள் பணிக்கமர்த்தப்பட்டுள்ளதாவும் பெரிஸ் தெரிவித்துள்ளார்.

ஒபாமாவுக்கு மும்பை மருத்துவர் கண்டனம்.


மலிவான மருத்துவச் சிகிச்சைக்காக இந்தியாவுக்குச் செல்லாதீர்கள் என்று அமெரிக்க அதிபர் பராக் ஓபாமா பேசியிருப்பதற்கு பிரபல இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் ரமாகாந்த் பாண்டே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மும்பையில் உள்ள ஆசிய இதயவியல் கழகத்தின் தலைமை நிர்வாகியான பாண்டே, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்தவர்.

ஒபாமா பேசியிருப்பதற்கு தனது கருத்தை தெரிவித்துள்ள பாண்டே, ரூபாயைவிட டாலரின் மதிப்பு அதிகமாக இருப்பதால் இந்தியாவில் சிகிச்சைக்கு ஆகும் செலவு குறைவாக இருக்கிறதே தவிர, மருத்துவச் சிகிச்சையின் தரத்தில் எந்தவிதக் குறைவும் இல்லை. இந்திய டாக்டர்கள் சர்வதேச தரத்துக்கு இணையாக சிகிச்சை தருவதிலும், நோயைக் கண்டறிவதிலும் வல்லவர்கள்.

இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு நோயாளிகளில் 5% பேர்தான் அமெரிக்கர்கள். மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தும், வளைகுடா நாடுகள் உள்பட, ஆப்பிரிக்க நாடுகளிலிருந்தும்தான் அதிகம் பேர் வருகின்றனர். ஒபாமா எச்சரித்தாலும் சிகிச்சைக்காக அமெரிக்கர்கள் இந்தியாவுக்கு வருவது குறையாது என்றார்.

மன்மோகன்சிங் ஆவேசம் : மழைக்கால கூட்டத்தொடரில் லோக்பால் மசோதா - ஊழலை ஒழித்தே தீர வேண்டும்.

மழைக்கால கூட்டத்தொடரில் லோக்பால் மசோதா    ஊழலை ஒழித்தே தீர வேண்டும்:    மன்மோகன் சிங் ஆவேசம்

இந்திய “சிவில் சர்வீஸ் தினவிழா” இன்று டெல்லியில் நடந்தது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உயர் அதிகாரிகள் விழாவில் கலந்து கொண்டனர். பிரதமர் மன்மோகன்சிங் விழாவை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை தயாரிக்கும் பணியில் மந்திரிகளும், அதில் இடம் பெற்றுள்ள குழு உறுப்பினர்களும் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இதை தயாரித்து கொடுத்ததும் மசோதா பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும். பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரிலேயே அறிமுகப்படுத்தப்பட்டுவிடும் என நம்பிக்கையோடு இருக்கிறோம். ஊழல் விவகாரம் இப்போது நாட்டில் முக்கிய பிரச்சினையாக இருக்கிறது.

நமது சட்டமும், நடைமுறைகளும் ஊழலை கட்டுப்படுத்தும் அளவுக்கு போதுமான பலம் கொண்டதாக இல்லை என்று மக்கள் கருதுகின்றனர். இதை வைத்து எதையும் செய்ய முடியாது என்ற உணர்வு மக்களிடம் அதிகரித்து வருகிறது. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஊழல் விஷயத்தில் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அவர்களிடையே சகிப்பு தன்மை எதிர் மறையாக மாறும் நிலை உருவாகி உள்ளது.

ஊழலை ஒழிக்க கடும் நடவடிக்கையும், உறுதியான நடவடிக்கையும் இப்போது தேவை என்று அவர்கள் கருதுகின்றனர். ஊழலை ஒழிப்பது என்பது கடும் சவாலாக இருக்கலாம். ஆனால் கடும் நடவடிக்கை எடுத்து ஊழலை ஒழித்தே தீரவேண்டும். இதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு நீங்களும் (ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள்), முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் நேர்மையுடனும், அச்சமில்லாமலும் நடந்து அரசியல் தலைமைகளுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் உரிய ஆலோசனைகளை தர வேண்டும். நீங்கள் அனைவரும் உங்கள் சக்தியை புதுப்பித்து கொண்டு ஊழலுக்கு எதிராக போராட முன் வருவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

உங்களுக்கு கீழ் பணியாற்றும் ஊழியர்களையும், இதற்கு ஊக்கப்படுத்த வேண்டும். அரசு பணிகளில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் வெளிப்படை தன்மைகள் இருக்க வேண்டும். ஊழலுக்கு எதிரான சட்டம், நடைமுறைகளை இன்னும் வலுவாக்க அனைத்து முயற்சிகளையும் அரசு மேற் கொண்டு உள்ளது. ஊழல் விவகாரங்களை வெளிகொண்டு வருபவர்களை பாதுகாக்க ஏற்கனவே பாராளுமன்றத்தில் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற உயர் பணிகளில் இருப்பவர்கள் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். நீங்கள் நேர்மையான பணியை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர். அவர்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் தான் அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக இருக்கிறீர்கள். உங்கள் பணி நன்றாக அமைந்தால் எல்லாமே நல்லதாக நடக்கும்.

இவ்வாறு மன்மோகன்சிங் பேசினார்.