Friday, April 22, 2011

திருப்பதியில் விரைவில் புதிய திட்டம் அமல் : பக்தர்கள் காத்திருக்க தேவையில்லை.


திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய, போக்குவரத்து, தங்கும் வசதி உள்பட அனைத்து சேவைகளும் ஒரே டிக்கெட்டில் கிடைக்கும் வகையில் புதிய ‘ஸ்ரீசேவா திட்டம்’ விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று சிறப்பு அதிகார குழு தலைவர் தெரிவித்தார்.

திருப்பதி திருமலை தேவஸ்தான சிறப்பு அதிகார குழு கூட்டம் திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நடந்தது. இதுகுறித்து அதன் தலைவர் சத்தியநாராயணா கூறியதாவது:

கோவர்தன் சத்திரத்தில் 180 பக்தர்கள் தங்கும் அறைகள் உள்ளன. இது ரூ.2 கோடியே 63 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ரூ.34 கோடி மதிப்பீட்டில் திருமலையில் உள்ள 5 ஆயிரம் பக்தர்கள் தங்கும் அறைகள் படிப்படியாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

ஏழுமலையான் கோயில் நகைகள் குறித்த எண்ணிக்கை விவரங்கள் ஓய்வு பெற்ற நீதிபதிகளின் பரிந்துரைப்படி தனி அக்கவுன்ட் ரிஜிஸ்டர் அமைத்து எந்த விவரங்கள் எப்போது வேண்டுமானாலும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வகையில் தனியாக துறை அமைக்க உள்ளோம்.

திருமலையில் உள்ள கடைகள் லைசென்ஸ் வருடத்திற்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டு வந்தது. இனி 5 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும். ஏழுமலையான் சுவாமிக்கு நடைபெறும் சகஸ்ர தீப அலங்கார சேவை, திருப்பாவை சேவை இரண்டிலும் கலந்துகொள்ள தினமும் தலா 25 டிக்கெட் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த கமிட்டி கூட்டத்தில் ‘ஸ்ரீசேவா திட்டம்’ அறிமுகம் செய்வதாக கூறினோம். இந்த திட்டத்தில் பக்தர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பஸ் டிக்கெட், தங்கும் விடுதிகள், பிரசாதங்கள் என அனைத்தும் ஒரே டிக்கெட்டில் முன்பதிவு செய்துகொள்ளும் வகையில் இருக்கும் என தெரிவித்திருந்தோம்.

இந்த திட்டத்திற்கான சாப்ட்வேர் தற்போது தயாராக உள்ளது. திருமலை, திருப்பதி மற்றும் ஐதராபாத் ஆகிய 3 இடங்களில் இதற்கான சர்வர்கள் அமைக்கப் பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான டெண்டர் விடப்பட்டு, விரைவில் திட்டம் அமலுக்கு வரும். இது 24 மணி நேர சேவையாகும். இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது.

திருப்பதி தேவஸ்தானத்தின் வெங்கடேஸ்வரா பக்தி சேனல் ஒளிபரப்பு தற்போது தெலுங்கில் மட்டும் உள்ளது. இச்சேவை அடுத்த 3 அல்லது 4 மாதங்களுக்குள் முழுவதும் தமிழிலேயே ஆரம்பிக்கப்பட உள்ளது என்றார்.

No comments: