Friday, April 22, 2011

ஐ.ஐ.டி. நில விவகாரம: முதல்வர் கருணாநிதி விளக்கம்.



சென்னை தரமணியில் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பதற்கு டிட்கோ மூலம் வெளிப்படையான டெண்டர் கோரப்பட்ட பிறகே, டாடா நிறுவனத்துக்கு நிலம் வழங்கப்பட்டது என்று முதல்வர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்துக்குச் சொந்தமான நிலம், அந்த நிறுவனத்தின் ஒப்புதல் இல்லாமலேயே டாடா குழுமத்துக்குச் சொந்தமான நிறுவனத்துக்கு நீண்ட கால குத்தகைக்கு விட்டிருப்பதாக "தினமணி', "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகைகளில் வியாழக்கிழமை செய்தி வெளியானது. துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இதுதொடர்பாக அளித்த பதிலை மேற்கோள்காட்டி முதல்வர் கருணாநிதி வியாழக்கிழமை இரவு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் : தரமணியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்காக டிட்கோவிற்கு அரசு முன்மொழிவினை அனுப்பியது. அதனடிப்படையில், தரமணியில் கானகம் மற்றும் திருவான்மியூர் கிராமங்களில் இருக்கக் கூடிய 25.27 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு தகவல் தொழில்நுட்பத்திற்கான சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கவும், டிட்கோ மற்றும் தனியார் கூட்டு முயற்சியாக இதைச் செயல்படுத்தவும் அரசு ஒப்புதல் அளித்தது.

இந்த அரசு தன்னிச்சையாக டாடா நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கவில்லை. டிட்கோ நிறுவனம் வெளிப்படையான டெண்டர் கோரி அதனடிப்படையிலேதான் டாடா நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்தது.

ஒப்பந்தப் புள்ளிகளை சமர்ப்பித்திருந்த 15 நிறுவனங்களில் 7 நிறுவனங்கள் தகுதிவாய்ந்தவைகளாகக் கண்டறியப்பட்டன. நிலத்தின் விலை, வழிகாட்டி மதிப்பீடு, சந்தை மதிப்பீடு ஆகியவற்றில் எது அதிகமோ அதை குறைந்தபட்ச விலையாக நிர்ணயித்து, அதனடிப்படையிலே விலைப்புள்ளி கோருவது என்று முடிவு செய்யப்பட்டது.

வழிகாட்டி மதிப்பீடான சதுர அடி ரூ.12 ஆயிரம் என்பதை குறைந்தபட்ச விலையாக நிர்ணயிக்கப்பட்டது. தகுதிவாய்ந்த 7 நிறுவனங்களில் டாடா ரியாலிட்டி அண்ட் இன்ப்ராஸ்டிரக்சர் நிறுவனம் மட்டுமே சதுர அடிக்கு ரூ.12 ஆயிரத்து 50 விலைப்புள்ளியைச் சமர்ப்பித்திருந்தது. எனவே டாடா ரியாலிட்டி நிறுவனம் இந்தத் திட்டத்தின் கூட்டு முயற்சி நிறுவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

இந்த நிறுவனத்திடம் இருந்து ரூ.1,412 கோடி குத்தகைத் தொகையாக அரசால் பெறப்பட்டு, அந்த நிறுவனத்துக்கு மேற்கண்ட நிலம் குத்தகை அடிப்படையிலே வழங்கப்பட்டுள்ளது. 40 லட்சம் சதுர அடி பரப்புள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டடத்துக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டம் 2012 மே மாதம் முழுமையாக முடிவடையும். 20 ஆயிரம் பேருக்கு மேல் வேலைவாய்ப்பு பெறக்கூடிய நிலை உருவாகும் என்று அந்த அறிக்கையில் முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், ஐ.ஐ.டி.க்குச் சொந்தமான நிலத்தை, அதன் அனுமதியில்லாமல் அரசு எப்படி கையகப்படுத்தியது என்பதைப் பற்றியோ, அரசுக்கு சொந்தமில்லாத நிலத்தை டாடாவுக்கு வழங்கியது பற்றியோ முதல்வர் கருணாநிதி காரணம் எதுவும் குறிப்பிடவில்லை.

No comments: