Friday, December 30, 2011

உத்தான பாதாசனம், மகராசனம், புஜபாத பீடாசனம்.

உத்தான பாதாசனம்.
உத்தான பாதாசனம்

செய்முறை:

விரிப்பில் மல்லாந்து படுத்தநிலையில் இரு கைகளையும் பக்கவாட்டில் உடலோடு ஒட்டி வைக்கவும். உள்ளங்கைகள் இரண்டும் தரையோடு படியுமாறு வையுங்கள். முழங்கால் மடங்காமல் பாதங்களை தரைக்கு மேல் ஓரடி உயரம் மட்டும் தூக்கி, அப்படியே 15 வினாடிகள் நிலைநிறுத்துங்கள். அதற்குபிறகு, மீண்டும் பழைய நிலைக்கு வரவும். இயல்பான சுவாசத்தில் 2-3 தடவைகள் வரை தொடக்கத்தில் செய்தாலே போதுமானது.

பயன்கள்:

அடிவயிற்று உள்ளுறுப்புகளான மூத்திரக்காய்கள், பெண்ணின் கர்ப்பப்பை, சூலகங்கள், சிறுநீர்ப்பை ஆகியவற்றின் செயல்கள், விறுவிறுப்பாகும். தொந்தி, தொடைசதைகள் குறையும்.

பருவ வயதின் விளிம்பில் இருக்கும் மாணவர்களுக்கு `சொப்பன ஸ்கலிதம்' ஏற்படாது.


மகராசனம்.

மகராசனம்

செய்முறை (நிலை-1):

விரிப்பில் மல்லாந்து படுத்த நிலையில் இரு கைகளையும் சேர்த்து தலைக்கு பின்னால் பிடரியில் வைக்கவும். இரு முழங்கைகளையும் தரையோடு படிய வைத்து, இரு கால்களையும் முழங்கால் அளவு மடக்கி குத்திட்டு வையுங்கள். இரு பாதங்களையும் 2 அடி தூரம் பக்கவாட்டில் அகட்டிவைக்கவும்.

இரு முழங்கால்களும் வலப்பக்கமாக தரையில் படுமாறு பக்கவாட்டில் கொண்டு செல்லுங்கள். அதே சமயத்தில் தலையை இடதுபக்கமாக திருப்பவும். இதேநிலையில் இடுப்பு-புட்டப் பகுதியை வலப்பக்கம் தூக்கக்கூடாது. அடுத்தபடியாக-இதை அப்படியே, இயல்பான சுவாசத்தில் பக்கம் மாற்றி செய்யவும்.

செய்முறை (நிலை-2):

விரிப்பில் குப்புற படுத்த நிலையில் கால்களை ஒன்றோடு ஒன்று சேர்த்து நீட்டவும். இடுப்பு, மார்பை தரையோடு படுமாறு வைத்து முகத்தை நிமிர்த்தி மோவாயை கீழேவையுங்கள். வலதுகையை மடக்கி, இடது தோள் பட்டை- இடதுகையையும் மடக்கி, வலது தோள்பட்டையை தொடவும். இந்த நிலையில் இரு கைகளின் முழங்கையும், முதலையின் வாய் போல சேர்ந்திருக்கவேண்டும். இயல்பான சுவாசத்தில் 15 விநாடிகள் இருந்து பின்பு சாதாரண நிலைக்கு வரவும்.

பயன்கள்:

சிறுநீரக பிரச்சினைகள் அகலும். முதுகுதண்டில் வலி இராது.


புஜபாத பீடாசனம்.
புஜபாத பீடாசனம்

செய்முறை:

விரிப்பில் தலை வைத்து மல்லாந்து படுத்த நிலையில் இரு கைகளையும் உடலோடு ஒட்டி தரையில் வைக்கவும். இரு கால்களையும் முழங்கால் அளவு மடக்கி குதிகால்களை பிருஷ்ட பாகத்தில் படுமாறு வையுங்கள். கரங்களால் அந்தந்த பக்கத்து கணுக்கால்களை பிடித்து-பாதம், தலை, பிடரி, தோள்களை சற்று தரையில் அழுத்தவும்.

இடுப்பு, முதுகு தண்டு பகுதியை முடிந்தவரை மேல்நோக்கி தூங்குங்கள். இந்த நிலையில் இடுப்பு பகுதியை, முழங்கால் உயரத்துக்கு கொண்டு வரவும். இயல்பான சுவாசத்தில் இருந்து, பழைய நிலைக்கு வந்து ஆசனத்தை கலைத்து விடுங்கள்.

பயன்கள்:

புட்டப் பகுதியில் எடை குறையும். முதுகுவலி இராது. கால் நோய்கள் அணுகாது. மூத்திரக்காய், விந்துப்பை-கர்ப்பப்பை கோளாறுகள் அகலும்.