Thursday, June 23, 2011

6.7 ரிக்டர் அளவு ஜப்பானில் நில நடுக்கம் : சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் மக்கள் பீதி.

6.7 ரிக்டர் அளவு ஜப்பானில் நில நடுக்கம்:வீடு-கட்டிடங்கள் குலுங்கின; சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் மக்கள் பீதி

ஜப்பானில் சில மாதங்களுக்கு முன் கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டதால் கடலில் சுனாமி பேரலைகள் உருவாகி பெரும் அழிவை ஏற்படுத்தியது. இதில் இருந்து ஜப்பான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து கொண்டு இருக்கிறது. அங்கு தொடர்ந்து அவ்வப்போது லேசான நில நடுக்கம் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஜப்பானில் இன்று காலையில் நில நடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் உள்ள லரான்சு தீவில் லவாட்டில் என்ற இடத்தை மையமாக கொண்டு இந்த நில நடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவானது. இதில் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அதில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்தனர். இது சக்தி வாய்ந்த நில நடுக்கம் என்பதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு மக்கள் உஷார்படுத்தப் பட்டனர். சேத விவரங்கள் பற்றி தகவல் வெளியாகவில்லை.

டி.சி.எஸ். நிறுவனத்தில் 31,500 பேர் வெளியேறினர்.

சாஃப்ட்வேர் ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ள டி.சி.எஸ். நிறுவனத்தில், சென்ற 2010 - 11 ஆம் நிதி ஆண்டில் நிகர அடிப்படையில் 38,185 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகி உள்ளது.

அந்த நிதி ஆண்டில், இந்நிறுவனம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலுமாக மொத்தம் 69,685 பொறியியல் வல்லுனர்களை தேர்ந்தெடுத்துள்ளது. அதேசமயம், 31,500 பேர் வேலையை விட்டு விலகியதால், நிகர வேலைவாய்ப்பு 38,185 ஆக உள்ளது.

நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறையில் மீண்டும் எழுச்சி ஏற்படத் தொடங்கி உள்ளது. சாஃப்ட்வேர் பொறியியல் வல்லுனர்களுக்கான தேவைப்பாடு அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, இத்துறையில் ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்துக்கு தாவிச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது, ஐ.டி. துறை நிறுவனங்களுக்கு ஒரு சவாலாக அமைந்துள்ளது. பணியாளர்களின் திறனை மேம்படுத்தும் வகையில், பல்வேறு பயிற்சி முகாம்களை நடத்தி வருவதாக டி.சி.எஸ். நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்ற நிதி ஆண்டில், டி.சி.எஸ். நிறுவனம் உள்நாட்டில் மொத்தம் 62,092 பணியாளர்களை தேர்ந்தெடுத்தது. அவ்வாண்டில், 26,899 பேர் வேலையை விட்டுச் சென்றுள்ளதையடுத்து, உள்நாட்டில் நிகர வேலைவாய்ப்பு 35,193 ஆக உள்ளது. வெளிநாடுகளில் மொத்தம் 7,593 பேருக்கு வேலைவாய்ப்பு அளித்தது. வெளிநாடுகளில் 4,601 பேர் வேலையை விட்டுச் சென்றுள்ளனர். ஐ.டி. துறையில், வெளிநாடுகளில்தான் ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்துக்கு மாறிச் செல்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

காதலிக்கு 60 வயது : அதிர்ச்சியில் தற்கொலைக்கு முயன்ற வாலிபரை உயிருடன் மீட்ட போலீசார்.பெங்களூரில் பழைய இரும்பு கடை நடத்தி வருபவர் திருப்பதி. இவர் தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை அடுத்த பட்டிமரத்தள்ளி கிராமத்தை சேர்ந்தவர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்த லூர்துமேரி என்ற பெண் போன்மூலம் அறிமுகமானதாக தெரிகிறது.

இவர்கள் போன் மூலமாகவே பேசி நட்பை வளர்த்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் செல்வி என்ற பெண்ணுக்கும் திருப்பதிக்கும் திருமணம் நடந்து முடிந்தது.

அண்மையில் போன் மூலம் பழக்கமான லூர்துமேரியை திருப்பதி நேரில் சந்திக்க நேர்ந்தது. அப்போதுதான் லூர்துமேரி 60 வயது மூதாட்டி என்ற உண்மை தெரிய வந்ததுள்ளது. காதலியாக நினைத்த பெண்ணை பாட்டியாக கண்டதும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்.

இதனால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் காணப்பட்ட திருப்பதி ஒகேனக்கல் சின்னாற்றின் அருகே ஆற்றின் கரையில் உள்ள ஒரு மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்ய முயன்றிருக்கிறார்.

அப்போது சின்னாறு அருகே ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இந்நிகழ்வினைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே போலீஸ் ஏட்டு சண்முகம் மற்றும் போலீசார் ஓடிச் சென்று தூக்கில் தொங்கிய அவரை தாங்கி பிடித்து, தூக்குக் கயிரை கழற்றி அவரை மீட்டனர்.

இதனைத்தொடர்ந்து அவரை ஒகேனக்கல் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது தான் மேற்கண்டவிவரம் அனைத்தும் தெரியவந்ததுள்ளது. இதனையடுத்து போலீசார் அவருக்கு அறிவுரைகள் கூறி, குடும்பத்தாருடன் அனுப்பி வைத்தனர்.

தங்கம் விலை 5 ஆண்டுகளில் விலை 160% அதிகரிப்பு.கடந்த ஐந்து ஆண்டுகளில் தங்கத்தின் விலை 160 சதவீதம் அதிகரித்துள்ளது.

சீனா உள்ளிட்ட பல நாடுகளின் ரிசர்வ் வங்கிகள் தங்கம் கையிருப்பை அதிகரித்து வருவதாலும், தேவைக்கு ஏற்ப தங்கத்தின் உற்பத்தி இல்லை என்பதாலும் விலை மேலும் தொடர்ந்து உயரும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவி்ல் நிலத்தின் விலை, பங்குத் சந்தை வளர்ச்சியை விடவும் தங்கத்தின் விலை தான் மிக பயங்கரமாக உயர்ந்துள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் தங்கத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால், அதன் மதிப்பு இன்று ரூ.2.60 லட்சமாகும். அதாவது ஆண்டிற்கு 32 சதவீத ஆதாயத்தை அள்ளி்த் தந்துள்ளது தங்கம்.

மேலும் கடந்த 21 ஆண்டுகளில் இல்லாத அளவில் பல்வேறு நாடுகளின் மத்திய ரிசர்வ் வங்கிகளும் தங்கத்தை வாங்கிக் குவிக்க ஆரம்பித்துள்ளன. இந்த காலாண்டில் மட்டும் 129 டன் தங்கத்தை இந்த வங்கிகள் வாங்கியுள்ளன.

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பல நாடுகள் தங்களது அன்னியச் செலாவணி கையிருப்பில், டாலர் போன்ற இதர செலாவணிகளை குறைத்துக் கொண்டு, தங்கம் கையிருப்பை அதிகரித்து வருகின்றன. இதனால் அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்து வருகிறது.

கிரீஸ் உள்ளிட்ட கடன் சுமையில் சிக்கி தவிக்கும் வளர்ச்சி அடைந்த ஐரோப்பிய நாடுகள் தங்களது நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் கரன்சி நோட்டுகளை அச்சடிக்க திட்டமிட்டுள்ளன. இதனால் யூரோ, டாலர் உள்ளிட்ட கரன்சிகளின் மதிப்பு மேலும் சரிவடைய வாய்ப்புள்ளதால், சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ரிசர்வ் வங்கிகள் தங்கத்தில் முதலீடு செய்வதை பாதுகாப்பானதாகக் கருதி பணத்தை அதில் முதலீடு செய்து வருகின்றன.

இதனால் உலக அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

சீனாவிடம் இப்போது 3 லட்சம் கோடி டாலர் மதிப்புள்ள அன்னியச் செலாவணி கையிருப்பு உள்ளது. இதில் தங்கத்தின் அளவு 1.8 சதவீதமாகும்.

சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளின் கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணியில் தங்கத்தின் பங்கு 11 சதவீதமும்.

சீனாவும் 11 சதவீதம் அளவுக்கு தங்கத்தை வாங்கி வைக்க முடிவு செய்தால், அந்த நாடு 6,000 டன் தங்கத்தை வாங்க வேண்டியிருக்கும். இது ஓராண்டில் சர்வதேச அளவில் உற்பத்தியாகும் தங்கத்தைவிட இரண்டு மடங்காகும்.

இதனால் சீனா தங்கம் வாங்க ஆரம்பித்தால், அதன் விலை பல மடங்கு அதிகரிக்கும் அபாயமும் உள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை ரூ.13.95 லட்சம் கோடி அளவுக்கு அன்னியச் செலாவணி கையிருப்பு உள்ளது. இதில் தங்கத்தின் பங்கு 8.2 சதவீதமாகும்.

தங்கம் உற்பத்தியில் உலக அளவில் தென் ஆப்பிரிக்கா முன்னிலையில் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் உலக அளவில் தங்கம் உற்பத்தி ஆண்டிற்கு 0.7 சதவீதம் மட்டுமே அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் தங்கத்தை வாங்குவதில் முதலிடத்தில் உள்ளது இந்தியா, இரண்டாவது இடத்தில் உள்ளது சீனா. இந்த இரு நாடுகளும் உலகத்தில் விற்பனையாகும் தங்கத்தில் 33 சதவீதத்தை வாங்குகின்றன.

உலக அளவில் தங்கத்துக்கு ஏற்பட்டுள்ள டிமாண்டைப் பார்த்துவிட்டு சில ஆஸ்திரேலிய சுரங்க அதிபர்கள், ஏதோ கொஞ்சமாவது கிடைக்காதா என்ற ஆசையில், காலியான தங்க சுரங்கங்களைக் கூட விடாமல் மீண்டும் தோண்ட ஆரம்பித்துள்ளனர்.

மோனோ இரயில் என்னும் மோசடி - வீணாகப்போகும் தமிழக மக்களின் வரிப்பணம்.சென்னை நகர் முழுவதையும் அடையக்கூடிய வகையில் முந்தைய அரசால் தொடங்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 45 கிலோ மீட்டர் தொலைவுடன் நிறுத்தப்படும் என்று புதிய அரசு அறிவித்துள்ளது.

இதற்கு பதிலாக மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுமாம். அதுவும் முதற்கட்டமாக 111 கிலோ மீட்டர் தொலைவும் அதன் நீட்டிப்பாக மொத்தம் 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு மோனோ ரயில் திட்டம் அமைக்கப்படுமாம்.

உலகம் முழுவதும் மொத்தம் 60 மோனோ ரயில் திட்டங்களே உள்ளன. அவற்றின் ஒட்டுமொத்த தூரமே வெறும் 400 கிலோ மீட்டர் மட்டும்தான். ஆனால், சென்னையில் மட்டுமே 300 கிலோ மீட்டருக்கு தமிழ்நாடு அரசு மோனோ ரயில் திட்டத்தை அமைக்கப் போகிறதாம்!

உலகில் மோனோ ரயில் என்பது சுற்றுலா இடங்களை சுற்றிப் பார்க்க சின்னஞ்சிறு அளவில் அமைக்கப்படுபவை. பயணிகள் போக்குவரத்திற்காக அமைக்கப்படும் எல்லா திட்டங்களும் தோல்வியிலேயே முடிந்துள்ளன.

மலேசியாவின் கோலாலம்பூர், இந்தோனேசியாவின் ஜாகர்த்தா, அமெரிக்காவின் சீயாட்டில் என எல்லா திட்டங்களும் காலதாமதம் மற்றும் நிதிச்சுமை என்கிற சுழலில் சிக்கித்தவிக்கின்றன.

மலேசியாவின் 9 கிலோ மீட்டர் மோனோ ரயிலை அமைக்க 5 ஆண்டுகள் ஆயின. அதனை 8 மாதம் இயக்குவதற்கு மட்டும் 61 கோடி ரூபாய் செலவானது. இப்போது அந்த நிறுவனம் திவாலாகி 1215 கோடி ரூபாய் கடனில் மூழ்கிவிட்டது.

இப்படி உலகெங்கும் மொனோ ரயில் திட்டங்கள் பல்லிளிக்கின்றன. ஆனாலும், மலேசியாவில் உள்ள மோனோ ரயில் நிறுவனங்கள் உலகின் இதர நாடுகளை பலவிதமான தந்திரங்களைக் கையாண்டும், பொய்யான கட்டுக்கதைகளை பரப்பி ஏமாற்றி வருகின்றன.

இப்போது - மலேசியா மற்றும் ஜப்பானின் மோனோ ரயில் நிறுவனங்களுக்கு "உலகிலேயே மிகப்பெரிய இரை" சிக்கியிருக்கிறது. அது - அப்பாவி தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணம் தான்.

ஒருபோதும் சாத்தியமே இல்லாத ஒரு திட்டத்திற்காக பல்லாயிரம் கோடி பணத்தை தமிழக மக்கள் இழக்க இருக்கின்றனர். இதில் இருந்து என்ன தெரிகிறது ஜெயலலிதா இன்னும் திருந்தவில்லை என்று. முந்தய அரசு கொண்டுவந்த திட்டங்களை மாற்றுகிறோம் பேர்வழி என்று தேவையில்லாத செலவீனங்களை செய்துவருகிறது ஜெ அரசு.

கருணாநிதியை சோதனையிட்ட திஹார் சிறை அதிகாரிகள்.மகள் கனிமொழியைக் காண திஹார் சிறைக்குச் சென்ற திமுக தலைவர் கருணாநிதியிடம் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த அன்பழகன் என்பவர் ஆர்டிஐ மூலம் கோரிய தகவலில் சிறை நிர்வாகம் இதைத் தெரிவித்துள்ளது.

மேலும் கனிமொழியைக் காண வந்த கருணாநிதிக்கு, சிறை விதிமுறைகளை மீறி அனுமதி தரப்பட்டதாகவும் அந்த ஆர்டிஐ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் கனிமொழி. அவர் சிறைக்குள் வந்து ஒரு மாதத்திற்கு மேலாகி விட்டது. இதுவரை அவரை 2 முறை சிறைக்குச் சென்று பார்த்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

இந்த இரண்டு முறையும் கருணாநிதிக்கு சிறைக்கு வந்தபோது சிறைக் காவலர்கள் கருணாநிதியை சிறை விதிமுறைப்படி மேலோட்டமாக சோதனையிட்டுள்ளனர்.

அதேபோல இரண்டு முறையும் பார்வையாளர் நேரத்தைக் கடந்த பின்னரும் கருணாநிதி, கனிமொழியை சந்திக்க அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து கனிமொழி அடைக்கப்பட்டுள்ள திஹார் சிறையின் 6வது எண் சிறையின் கண்காணிப்பாளர் அன்பழகனுக்கு அளித்துள்ள பதிலில், முன்னாள் முதல்வர் கருணாநிதி மே 23ம் தேதி கனிமொழியைப் பார்க்க மாலை 5.46 மணிக்கு வந்தார் என்று தெரிவித்துள்ளார்.

வழக்கமாக சிறை விதிகளின்படி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். வக்கீல்கள், தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு மட்டும் பிற்பகல் 3.30 மணி முதல் 5.30 மணி வரை பார்க்க அனுமதி தரப்படும்.

அதேபோல சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இருப்பினும் கருணாநிதிக்கு மட்டும் சிறை விதிகளை தளர்த்தி மாலை 5. 30 மணிக்கு மேல் பார்க்க அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து அன்பழகன் கூறுகையில், உயர் மட்டத்திலிருந்து வந்த உத்தரவின்பேரில் விதிமுறை தளர்த்தப்பட்டதாக சிறை கண்காணிப்பாளர் கூறுகிறார். ஆனால் உத்தரவிட்டது யார் என்பதைத் தெரிவிக்க அவர் மறுத்துள்ளார். உத்தரவிட்ட நபர் யார், யார் அந்த அதிகார உச்சமட்டம் என்பதை அவர் அம்பலப்படுத்த வேண்டும் என்றார் அன்பழகன்.