Thursday, June 23, 2011

கருணாநிதியை சோதனையிட்ட திஹார் சிறை அதிகாரிகள்.



மகள் கனிமொழியைக் காண திஹார் சிறைக்குச் சென்ற திமுக தலைவர் கருணாநிதியிடம் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த அன்பழகன் என்பவர் ஆர்டிஐ மூலம் கோரிய தகவலில் சிறை நிர்வாகம் இதைத் தெரிவித்துள்ளது.

மேலும் கனிமொழியைக் காண வந்த கருணாநிதிக்கு, சிறை விதிமுறைகளை மீறி அனுமதி தரப்பட்டதாகவும் அந்த ஆர்டிஐ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் கனிமொழி. அவர் சிறைக்குள் வந்து ஒரு மாதத்திற்கு மேலாகி விட்டது. இதுவரை அவரை 2 முறை சிறைக்குச் சென்று பார்த்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

இந்த இரண்டு முறையும் கருணாநிதிக்கு சிறைக்கு வந்தபோது சிறைக் காவலர்கள் கருணாநிதியை சிறை விதிமுறைப்படி மேலோட்டமாக சோதனையிட்டுள்ளனர்.

அதேபோல இரண்டு முறையும் பார்வையாளர் நேரத்தைக் கடந்த பின்னரும் கருணாநிதி, கனிமொழியை சந்திக்க அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து கனிமொழி அடைக்கப்பட்டுள்ள திஹார் சிறையின் 6வது எண் சிறையின் கண்காணிப்பாளர் அன்பழகனுக்கு அளித்துள்ள பதிலில், முன்னாள் முதல்வர் கருணாநிதி மே 23ம் தேதி கனிமொழியைப் பார்க்க மாலை 5.46 மணிக்கு வந்தார் என்று தெரிவித்துள்ளார்.

வழக்கமாக சிறை விதிகளின்படி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். வக்கீல்கள், தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு மட்டும் பிற்பகல் 3.30 மணி முதல் 5.30 மணி வரை பார்க்க அனுமதி தரப்படும்.

அதேபோல சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இருப்பினும் கருணாநிதிக்கு மட்டும் சிறை விதிகளை தளர்த்தி மாலை 5. 30 மணிக்கு மேல் பார்க்க அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து அன்பழகன் கூறுகையில், உயர் மட்டத்திலிருந்து வந்த உத்தரவின்பேரில் விதிமுறை தளர்த்தப்பட்டதாக சிறை கண்காணிப்பாளர் கூறுகிறார். ஆனால் உத்தரவிட்டது யார் என்பதைத் தெரிவிக்க அவர் மறுத்துள்ளார். உத்தரவிட்ட நபர் யார், யார் அந்த அதிகார உச்சமட்டம் என்பதை அவர் அம்பலப்படுத்த வேண்டும் என்றார் அன்பழகன்.

No comments: