Monday, June 20, 2011

தயாநிதி - மடியில் கணத்தோடு பிரதமர்.



மத்திய அரசில் தற்போதுள்ள அமைச்சரவை, பெரியளவில் மாற்றங்களைச் சந்திக்கும் என, பிரதமர் மன்மோகன் சிங் ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஆனாலும், எந்தவித மாற்றங்களையும் செய்யாமல், இருப்பதை வைத்தே சமாளித்துக் கொண்டிருந்தார். அதற்குக் காரணங்களும் இருந்தன.

ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற்றன. அந்த நேரத்தில் அமைச்சரவை யில் கை வைப்பது, மாநில அளவில் காங்கிரஸ் கட்சிக்குச் சாதகமாக இருக்காது. அதைவிட, லோக்பால் மசோதாவிவகாரம் வேறு மிரட்டிக் கொண்டிருந்தது. இந்தக் காரணங்களால், அமைச்சரவை மாற்றங்களை ஒத்தி வைப்பதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை பிரதமருக்கு.

இப்போது, மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

விரைவில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கவுள்ளது. ஏராளமான ஓட்டைகளுடன் கூடிய அமைச்சரவையை வைத்துக்கொண்டு எந்த அரசும் புதிய கூட்டத்தொடர் ஒன்றுக்குள் நுழைவதை பிரதமர் நிச்சயம் விரும்ப மாட்டார்.

இதனால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க முன்னதாக, மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்ய, பிரதமர் மன்மோகன் சிங் முடிவு செய்துள்ளதாகத் தெரியவருகிறது.

நாடாளுமன்ற வட்டாரங்களில் இதுபற்றிப் பரவலாக அடிபடும் பேச்சு என்னவென்றால், ஜூலை 2ம் தேதி, மத்திய அமைச்சரவையில் பிரதமர் மாற்றங்களைச் செய்வார் என்பதே.

மத்திய அமைச்சரவை மாற்றம், தமிழக அளவில் என்ன மாற்றங்களைக் கொண்டுவரும்?

மத்திய அமைச்சரவையைப் பொறுத்தவரை, தமிழகத்திலிருந்து சென்றுள்ள 3 அமைச்சர்கள் பற்றிய புகார்கள்தான் பரவலாக அடிபட்டுக்கொண்டிருந்தன.

ஒருவர் ஆ.ராசா. ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களை இஷ்டத்துக்கு ஒதுக்கீடு செய்தார் என்பதே புகார். அதே ஊழல் வழக்கில் அவர் சிக்கி, தற்போது திகார் சிறையில் இருக்கிறார். சிறையில், தென்னிந்திய உணவு ஒதுக்கீடு செய்தால் போதும் என்ற அளவோடு நிற்கின்றன, அவரது நடவடிக்கைகள்.

அடுத்தவர், மு.க. அழகிரி. சும்மா பெயருக்காக அமைச்சராக இருப்பவர். இவரது அமைச்சில் பெரிதாக ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை என்பது உண்மைதான். ஆனால் அமைச்சரையே காணமுடிவதில்லை என்பது குற்றச்சாட்டு.

மூன்றாவது நபர், தயாநிதி மாறன். இவர் செய்ததாகக் கூறப்படும் ‘வியாபாரம்-கம்-ஊழல்’ லீலைகள் பற்றிய குற்றச்சாட்டுகள்தான் இப்போது டில்லியில் பிரசித்தம். மடியில் கணத்தோடு, இவரை அமைச்சரவையில் வைத்திருக்கிறார் பிரதமர்.

மத்திய அமைச்சரவையில் தமிழக அளவில் உள்ள சிக்கல்கள். ஆ.ராசா விவகாரத்தை விட்டுவிட்டால், மற்றைய இருவரின் விவகாரங்களுக்கும் விடை தேடவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் பிரதமர்.

இதையடுத்து, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான புகாரில் சிக்கியுள்ள மத்திய அமைச்சர் தயாநிதியின் பதவி பறிபோகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ராசா, ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி பதவியை ராஜினாமா செய்தபோது, அவர் கவனித்துவந்த தொலைத்தொடர்புத் துறைக்கு புதிய அமைச்சர் நியமிக்கப் படவில்லை. மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல், ராசா வைத்திருந்த அமைச்சையும் கூடுதலாக கவனித்து வருகிறார். ஒரே அமைச்சருக்கு, இரு பெரிய துறைகள்.

அதேபோல், ஆதர்ஷ் அடுக்கு மாடி குடியிருப்பு ஊழல் புகார் காரணமாக, மகாராஷ்டிரா முதல்வர் பதவி விலகியதால், மத்திய அமைச்சராக இருந்த பிரித்விராஜ் சவான், அங்கே அனுப்பப்பட்டு விட்டார். ரயில்வே அமைச்சராக இருந்த மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வராகிவிட்டார். இதனால், அவரது அமைச்சிலும் காலியிடம் உள்ளது.

மொத்தத்தில், பிரதமர் விரும்பியோ, விரும்பாமலோ, அமைச்சரவையில் மாற்றம் செய்ய வேண்டியது அவசியமாக இருக்கிறது. அதுவும், பார்லிமென்டின் புதிய கூட்டத் தொடருக்கு முன்பாக!

இந்த நிலையிலேயே, அடுத்த மாதம் 2ம் தேதி அமைச்சரவை மாற்றம் செய்யப் படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக, நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய அமைச்சரவை செயலக அதிகாரிகள், இதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கிவிட்டதாலேயே இந்தக் கதை வெளியாகியிருக்கிறது.

அமைச்சரவை செயலக அதிகாரிகள், ஜனாதிபதி மாளிகை அதிகாரிகளை தொடர்பு கொண்டு, இதுபற்றி ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

இவர்கள் கூறும் தேதிக்கு, இன்னமும் இரண்டு வாரங்கள்தான் இருக்கின்றன. அதற்குள் ஏதாவது அரசியல் மாற்றங்கள் வரலாம். தயாநிதி மாறன் சி.பி.ஐ.யால் விசாரிக்கப் படலாம்.

அடுத்த மாதம் 2ம் தேதி, அமைச்சரவை மாற்றத்தை பிரதமர் செய்தால்,

அமைச்சரவையில் காலியிடங்களுக்கு, புதிதாக ஆட்களை சேர்த்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

ஏற்கனவே அமைச்சரவையில் இருக்கும் ஆளைக் கழட்டிவிட வேண்டுமென்றால், அது நம்ம தயாநிதியாகத்தான் இருக்கும்!

4 மாணவர்கள் தற்கொலை -ஆசிரியர் கைது : அதிர்ச்சியில் கல்வி அதிகாரிகள்

4 மாணவர்கள் தற்கொலை: அதிர்ச்சியில் கல்வி அதிகாரிகள்

தமிழகத்தில் இந்த ஆண்டு கோடைவிடுமுறை கூடுதலாக 15 நாட்கள் விடப்பட்டு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. பள்ளிகள் திறந்து இன்னும் ஒருவார காலம் நிறைவடைவதற்குள் சேலம், நாமக்கல் மாவட்டத்தில் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் ஒரு மாணவி, ஒரு மாணவர் என 2 பேரும், சேலம் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த கொண்டலாம்பட்டி அருகே உள்ள எஸ்.நாட்டாமங்கலத்தை சேர்ந்த ஜீவானந்தம் என்ற மாணவர், பனமரத்துப்பட்டி பள்ளி பிளஸ்-2 மாணவர் சீனிவாசன் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர்.

ஒரே வாரத்தில் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது கல்வி அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்து இருக்கிறது. பெற்றோர் மத்தியில் இந்த சம்பவங்கள் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.

இவர்களில் பனமரத்துப்பட்டி பள்ளி பிளஸ்-2 மாணவர் சீனிவாசன் சாவுக்கு காரணம் ஆசிரியர்கள் தான் எனபதை அறிந்த உறவினர்கள், நேற்று சேலம் எஸ்.பி அலுவலகத்தில் புகார் செய்தனர்.

பின்னர், மல்லூர் காவல் நிலையத்தில் சீனிவாசன் தற்கொலை செய்துகொண்டது சம்பந்தமாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளும் இன்று துறை ரீதியான விசாரணையை துவக்கியுள்ளர்கள்.

இன்று 20-6-2011 திங்களன்று கணக்கு ஆசிரியர் செந்திலை போலீசார் கைது செய்துள்ளனர். எஞ்சியுள்ள நான்கு ஆசிரியர்களும் தலைமறைவு ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.


இனி எந்தப் பெயரிலும் இணையத்தளம் !



.காம் (டாட் காம்) என்பதக்குப் பதில் .கோக், .இன்டியா, .மாருதி என இனிமேல் எந்த வார்த்தையையும் உபயோகித்து இணையத்தளத்தின் பெயர்களை (Domain name) பதிவு செய்யலாம் என சர்வதேச இணையத்தளப் பெயர்கள், எண்கள் அமைப்பு (Internet Corporation for Assigned Names and Numbers-ICANN) அறிவித்துள்ளது.

சிங்கப்பூரில் இன்று நடந்த இந்த அமைப்பின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதன்மூலம் இணையத்தில் அடுத்தகட்டமாக பெயர் புரட்சி ஏற்படவுள்ளது.

இன்டர்நெட் உருவாகி 26 ஆண்டுகளில் அமலாக்கப்படும் மிகப் பெரிய மாற்றம் இதுவாகும்.

இப்போது உலகின் பெரும்பாலான இணையத்தளங்கள் .com, .net, .org ஆகிய துணை வார்த்தைகளுடன் தான் முடிகின்றன. இனிமேல் எந்த வார்த்தையையும் துணைப் பெயராக வைத்துக் கொள்ளலாம்.

உதாரணத்துக்கு, போர்ட் கார் நிறுவனம் தனது பியஸ்டா கார் குறித்த இணையத்தளத்தின் பெயரை டாட் போர்ட் (.ford) என்ற துணைப் பெயருடன் வைத்துக் கொள்ளலாம்.

இதனால் சர்வதேச நிறுவனங்களுக்கு பெரிய அளவில் லாபம் ஏற்படும் என்றாலும், குழப்பத்துக்கும் பஞ்சமிருக்காது. .காம் என்ற சிம்பிளான பெயரில் தங்களது இணையத்தளம், துணைத் தளங்களை எல்லாம் எளிதாக பதிவு செய்த நிறுவனங்கள் இனிமேல் தங்களது நிறுவனத்தின் பெயரில் ஏராளமான டொமைன்களை பதிவு செய்ய வேண்டிய நிலை வரலாம். இதற்கான செலவும் அதிகமாகும்.

அதே போல நிறுவனத்தின் பெயரை பதிவு செய்து, டொமைனை பிளாக் செய்து வைத்துக் கொண்டு, அதை மூச்சு முட்டும் விலைக்கு விற்க முயலும் ஆசாமிகளிடம் நிறுவனங்கள் சிக்கித் தவிப்பதும் அதிகரிக்கும்.

சமச்சீர் கல்வியை அரசியல் ரீதியாக அணுகுவது வருந்தத்தக்கது : தமிழருவி மணியன்.



சமச்சீர் கல்வியை அரசியல் ரீதியாக அணுகுவது வருந்தத்தக்கது என்று, காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனர் தமிழருவி மணியன் வலியுறுத்தியுள்ளார்.

காந்திய மக்கள் இயக்கம், கோவை மாவட்ட கிளை சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் 19.06.2011 அன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அதன் நிறுவனர் தமிழருவி மணியன்,

சமச்சீர் கல்வியைப் பொருத்த வரையில் சொந்தப் பகையை வைத்து, மக்கள் நலனைப் புறக்கணிப்பது தவறான அரசியலாகும். கடந்த திமுக ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களில் உருப்படியான ஒன்று, சமச்சீர் கல்வித் திட்டம். சமச்சீர் கல்வித் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை, சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்துகிற நிலையிலேயே தவிர்க்க முடியும். இதுவே அறிவுபூர்வமான அணுகுமுறையாகும். கல்வியாளர் குழு மூலமாகவே இதற்கான பாடத்திட்டம் உருவாக்கப்பட்டது.

திமுக ஆட்சி கொண்டுவந்த திட்டம் என்று இதை தவிர்ப்பது சரியானதல்ல. சமச்சீர் கல்வியைப் பொருத்த வரை, கௌரவப் பிரச்னையாகக் கருதாமல் 1 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் குறைபாடுகள் இருந்தால் வரும் ஆண்டில் தவிர்க்கலாம். தற்போதைய அரசின் முடிவு மாணவர் நலனுக்கு எதிரான செயலாகும். இந்த அரசுக்கு மாணவர் நலனில் அக்கறை உள்ளதா?

சமச்சீர் பாடத்திட்டத்தை ஆராய அமைக்கப்பட்ட குழுவில் இடம்பெற்றுள்ள தனியார் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், சமச்சீர் கல்விக்கு எதிரானவர்கள். இவர்கள் எப்படி சமச்சீர் கல்வியின் தரத்தை உயர்த்துவார்கள்? சமச்சீர் கல்வியை அரசியல் ரீதியாக அணுகுவது வருந்தத்தக்கது.

முத்துக்குமரன் குழுவின் நூற்றுக்கு மேற்பட்ட பரிந்துரைகளில் ஒருசில மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன. மீதமுள்ள பரிந்துரைகளை, முறையாக பரிசீலித்து செயல்படுத்தி இருக்க வேண்டும். கடந்த ஒருமாத காலமாக மிகச்சரியாக சிறந்த நிர்வாகம் நடைபெற்றுவரும் நிலையில், அரசு இடறி விழுந்த ஒரேஇடம் சமச்சீர் கல்விதான். இந்த ஆண்டிலேயே சமச்சீர் கல்வி திட்டத்தைத் தொடர வேண்டும். என்றார்.

சீன பெண்ணை கரம் பிடித்த ஆத்தூர் என்ஜினீயர் : இந்து முறைப்படி இன்று திருமணம்.

சீன பெண்ணை கரம் பிடித்த ஆத்தூர் என்ஜினீயர்:இந்து முறைப்படி இன்று திருமணம்

சீனப் பெண்ணை காதலித்து மணந்த ஆத்தூர் என்ஜினீயர் ருசிகர பேட்டி அளித்து உள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த பெத்தநாயக்கன் பாளையம் ஆரியூர் தெருவை சேர்ந்த நடராஜன்-சரோஜா தம்பதிகளின் மகன் செந்தில் ராஜா பி. இ. இன்பர்மேஷன் டெக்னாலஜி படித்துள்ள இவர் சீனா நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றினார்.

அப்போது இவருக்கும் அதே கம்பெனியில் பணியாற்றி வரும் அத்பில் என்ற ஹிஷேங்கிபிக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இருவரது பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். இதனால் இவர்களது திருமணம் இன்று காலை சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள துளுவ வேளாளர் திருமண மண்டபத்தில் நடந்தது.

சீனப் பெண் அத்பில் சேலை கட்டி இருந்தார். பூவும், பொட்டும் வைத்து அசல் தமிழ் பெண் போல காட்சி அளித்தார். அவருக்கு மணமகன் செந்தில்ராஜா தாலி கட்டினார். சீனப் பெண்ணை காதலித்து மணந்தது குறித்து என்ஜினீயர் செந்தில்ராஜா நிருபரிடம் கூறியதாவது:-

நான் கடந்த 4 ஆண்டுகளாக சீனா நாட்டில் குவாங்ஷோ பகுதியில் உள்ள ஒரு கம்பெனியில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறேன். நான் வேலை பார்க்கும் அதே நிறுவனத்தில் அத்பில் பணியாற்றி வந்தார். அவர் அக்கவுண்டன்சி பட்டம் பெற்று உள்ளார். நானும் அவரும் வேலை விஷயமாக சந்திக்கும் போது எனக்கும் அவருக்கும் காதல் ஏற்பட்டது.

சீன மொழி புரியாவிட்டாலும், நானும் ,அவரும் ஆங்கிலத்தில் பேசி வருவோம். அவர் என்னை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார். நானும் அவரது வீட்டிற்கு சென்று அவர்களது குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்வேன் அவரது பெற்றோருக்கு என்னை பிடித்து விட்டது. அவர்கள் நன்றாக பார்த்து கொண்டனர்.

பின்னர் எங்களது காதலுக்கு எனது பெற்றோரும், சம்மதம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து நாங்கள் சீனாவில் பதிவு திருமணம் செய்து கொண்டோம். சீன அரசும், அங்குள்ள இந்திய தூதரகமும் எங்களது திருமணத்தை அங்கீகரித்தன.

நாங்கள் பின்னர் இங்கு வந்து இன்று எங்களது உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டோம். கடந்த வாரம் எனது அண்ணன் திருமணம் நடந்தது.அதற்காக நானும், அத்பில்லும் வந்து இருந்தோம். எங்களது திருமணம் முடிந்து விட்டதால் இன்னும் ஒரு வாரத்தில் நாங்கள் சீனா சென்று அவரது பெற்றோரிடம் வாழ்த்து பெறுவோம். பின்னர் அங்கேயே குடும்பம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருமணத்திற்கு வந்து இருந்த உறவினர்களை செந்தில் ராஜா மணப்பெண்ணுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர் உறவினர்களை பார்த்து நன்றி என்று ஆங்கிலத்தில் தெரிவித்தார். நாடு, இனம், மொழி கடந்து வளர்ந்த இந்த காதல் தம்பதிகளை உறவினர்கள் மட்டுமல்ல நண்பர்கள், ஆத்தூர் பொதுமக்கள் உள்பட பலர் வாழ்த்தினார்கள்.

இந்தியாவில் விரைவில் “புல்லட்” ரெயில் அறிமுகம் : மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும்.

இந்தியாவில் விரைவில் “புல்லட்” ரெயில் அறிமுகம்: மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும்

பிரான்ஸ் நாட்டில் உள்ளது போன்று புல்லட் ரெயில் எனப்படும் அதிவிரைவு ரெயில் சேவையை தொடங்க இந்திய ரெயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இந்த ரெயில் மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும்.

பிரான்ஸ் நாட்டில் புல்லட் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அங்கு மணிக்கு 280 முதல் 300 கிலோ மீட்டர் வேகத்தில் புல்லட் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்தியாவிலும் புல்லட் ரெயில் சேவையை தொடங்க ரெயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்துக்கு தேசிய அதிவிரைவு ரெயில்வே ஆணையம் ஒன்று ஏற்படுத்தப்பட உள்ளது. அதிவிரைவு ரெயில் சேவையை இந்த ஆணையம் கண்காணிக்கும்.

புல்லட் ரெயில்களை இயக்க சில வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்த வழித்தடங்களில் புல்லட் ரெயில் இயக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து ஆலோசனை வழங்க உலகளாவிய காண்டிராக்ட் விடப்பட இருக்கின்றன.

இதுபற்றி ரெயில்வே துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், புல்லட் ரெயில் திட்டங்களின் சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்யவும், உலகளாவிய காண்டிராக்ட் விடப்பட இருக்கிறது. அதற்கான பணிகள் நடந்து வருகின்றன என்றார்.

பிரான்ஸ் நாட்டில் இயக்கப்படும் புல்லட் ரெயில் திட்டத்துக்கு “டி.ஜி.வி.” என்று வெளியிடப்பட்டுள்ளது. அதுபோல இந்தியாவில் செயல்படுத்தப்பட உள்ள புல்லட் ரெயில் திட்டத்துக்கு “டி.ஜி.எஸ்.” என்று பெயரிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த திட்டத்துக்கான பெயர் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

புல்லட் ரெயிலை மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. 600 கிலோ மீட்டர் தூரத்தை 2 மணி நேரத்தில் சென்று அடையும் வகையில் புல்லட் ரெயிலின் வேகம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

புல்லட் ரெயில் திட்டத்தின் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்க முடியும். புதிய நகரங்களை உருவாக்க வாய்ப்பு ஏற்படும். இதனால் கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்கு மக்கள் இடம்பெயர்வது பெருமளவில் குறையும் என்றும் நம்பப்படுகிறது.

2ஜி வழக்கு : கனிமொழி, சரத்குமாருக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு.

2ஜி வழக்கு: கனிமொழி, சரத்குமாருக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி பணம் கைமாறியது தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கலைஞர் டி.வி.யில் பங்குதாரராக இருக்கும் கனிமொழி எம்.பி., நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் கடந்த மே மாதம் 20-ந் தேதி கைது செய்யப்பட்டனர். இருவரும் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப் பட்டுள்ளனர்.

அவர்களது ஜாமீன் மனுக்கள் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டிலும், டெல்லி ஐகோர்ட்டிலும் தள்ளுபடி செய்யப்பட்டது. ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் கனிமொழி மீதான குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரம் உள்ளது. அவர் கலைஞர் டி.வி.யில் முக்கிய பங்குதாரராக செயல்பட்டுள்ளார். அவருக்கு அரசியல் பின்னணி உள்ளதால் ஜாமீனில் விட்டால் சாட்சியங்களை கலைத்து விடுவார் என்று டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது.

இதையடுத்து கனிமொழியும், சரத்குமாரும் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். கடந்த 10-ந் தேதி இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. 13-ந் தேதி ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி இதற்கு ஒருவாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டார்.

மேலும் ஆ.ராசா பதவி காலத்தில் 13 டெலிகாம் நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் ஏற்பட்ட இழப்பீடு குறித்தும், சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து கலைஞர் டி.வி.க்கு கைமாறிய ரூ.200 கோடி என்ன ஆனது? என்ற விவரத்தை கோர்ட்டுக்கு தெரிவிக்குமாறும் சி.பி.ஐ.க்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து 20-ந் தேதிக்கு வழக்கை நீதிபதி தள்ளி வைத்தார். இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது அப்பொழுது நீதிபதிகள் கனிமொழிக்கு ஜாமீன் வழங்க முடியாது என தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.

சுவிஸ் வங்கியில் ரூ. 5 லட்சம் கோடி கறுப்புப் பணம் குறைந்தது !



சுவிஸ் வங்கிகளில் வெளிநாட்டவர்கள் சேமித்து வைத்துள்ள பணத்தில் கடந்த ஆண்டு மட்டும் ரூ 5 லட்சம் கோடி வரை குறைந்துவிட்டதாக சுவிஸ் தேசிய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிச் சட்டங்களின் ரகசியத் தன்மையினால் உலகெங்கும் உள்ள பணக்காரர்கள் அந்நாட்டு வங்கிகளில் பணத்தை சேமித்து வைக்கின்றனர். இதில் பெரும்பாலும் அவரவர் நாட்டில் வரி ஏய்ப்பு செய்து திரட்டிய கறுப்பு பணம் என்பது குறிப்பிடத்தக்கது.

பல நாடுகள் இந்தக் கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வருவதற்காக சுவிஸ் வங்கிகளிடம் வற்புறுத்தி வந்தாலும் ரகசியத் தன்மைவாய்ந்த சட்டங்களைத் திருத்த வங்கிகளும் அந்நாட்டு அரசும் ஆர்வம் காட்டாமல் மறுத்து வந்தன.

இந்நிலையில் கடந்த ஒரு வருட காலமாக அமெரிக்கா, ஜெர்மனி உள்பட பல மேற்கத்திய நாடுகள் சுவிட்சர்லாந்து நாட்டுக்கு இந்தப் பிரச்னை குறித்து நெருக்குதல் கொடுத்து வருகின்றன.

இந்தியாவிலும் இந்தப் பிரச்னை பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியிருக்கிறது. எதிர்க்கட்சிகளும் உச்ச நீதிமன்றமும் இப்பிரச்னை குறித்து மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன.

இந்நிலையில், கடந்த நிதியாண்டுக்கான சுவிஸ் வங்கிக் கணக்குகள் இப்போது வெளியாகியிருக்கின்றன. இதில், வெளிநாட்டவர் சேமித்து வைத்துள்ள பணத்தின் அளவு குறைந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.

சுமார் ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு இந்த தொகை குறைந்துள்ளது என்று தெரிகிறது. 2009-ம் ஆண்டில் ரூ. 1 கோடி 30 லட்சம் கோடி அளவுக்கு வெளிநாட்டவர் சேமிப்பு இருந்தது. ஆனால் 2010-ம் ஆண்டுக்கான கணக்கின்படி, வெளிநாட்டவர் சேமிப்பு ரூ.1 கோடி 25 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது.

சுவிஸ் வங்கிகளில் வெளிநாட்டவர் கறுப்புப் பணம் பதுக்குவதைத் தடுக்கும் விதமாக சட்டத் திருத்தம் கொண்டு வர சர்வதேச அளவில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், அவ்வங்கிகளில் பணத்தை சேமிப்பது குறைந்து வருகிறது என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால், உண்மையான காரணம் இதுவல்ல என்றும், உலகப் பொருளாதாரம் சரிவுற்ற நிலையில் டாலர், யூரோ முதலான கரன்சிகளின் மதிப்பு குறைந்ததால் வங்கிகளில் சேமிக்கப்படும் பணத்தின் மதிப்பு குறைவாகத் தெரிகிறது என்று சுவிஸ் வங்கி அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்தார்.

பங்கு முதலீடுகள் போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்களும் வங்கியின் மொத்தத் தொகையில் குறைவு வந்ததாகக் காட்டும் என்று அவர் தெரிவித்தார்.

செத்தது சென்னை-நாளை முதல் 4 மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு மணி நேரம் பவர் கட்.



சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நாளை முதல் பெரும் மின் தட்டுப்பாடு ஏற்படப் போகிறது. இதை சமாளிக்கும் வகையில், புதிய மின் தடை முறையை மின்வாரியம் அமல்படுத்துகிறது.

தமிழகம் முழுவதும் மின் பற்றாக்குறை மக்களை பாடாய்ப்படுத்தி வருகிறது. ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை. மின் தடையும் இன்னும் முழுமையாக நீங்கவில்லை. பற்றாக்குறையும் தீரவில்லை.

இந்த நிலையில் வட சென்னை அமையவுள்ள புதிய மின் நிலையப் பணிகள் நாளை தொடங்கவுள்ளது. இதையடுத்து நாளை முதல் வருகிற 30ம் தேதி வரை சென்னை சுழற்சி முறையில் மின் தடை அமலாகவுள்ளது.

அதாவது நாளை முதல் நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு மணி நேரம் மின் தடை அமல்படுத்தப்படும். வட சென்னை மின் நிலையப் பணிகளால் ஏற்படும் மின் உற்பத்தி நிறுத்தத்தால் ஏற்படும் மின் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் இந்த புதிய மின் தடை அமல்படுத்தப்படவுள்ளது.

இதனால் நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு மணி நேரத்திற்கு மின்சாரம் இருக்காது. சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் இந்த சுழற்சி முறை மின்தடை நாளை முதல் அமலாகிறது.

இதன் மூலம், ஒரு நாளைக்கு 6 மணி நேரம் மின்தடை ஏற்படவுள்ளது என்பதால் சென்னை வாசிகள் பெரும் கலக்கமடைந்துள்ளனர்.

திறமையான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் : தற்கொலை செய்துகொண்ட மாணவன் முதல்வருக்கு வேண்டுகோள்.

சேலம் அருகே உள்ள பனமரத்துப்பட்டி, அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 கணிதப் பிரிவில் படிக்கும் மாணவன் சீனிவாசன். சீனிவாசன் வீடு பனமரத்துப்பட்டியில் இருந்து சேலம் செல்லும் வழியில் உள்ள நிலவாரப்பட்டியில் உள்ளது.

கடந்த 15ம் தேதி பள்ளிக்கூடம் திறந்த பின்னர், மூன்று நாட்களாக பள்ளிக்கு சென்று வந்தான். நேற்று முன்தினம் சனிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துள்ளான்.

சீனிவாசனின் பெறோர்கள் சேகர், விமலா மற்றும் அண்ணன் சத்தியமூர்த்தி ஆகியோர் வேலைக்கு சென்று விட்டனர், இந்நிலையில் சனிக்கிழமை மதியம் சீனிவாசனின் தயார் விமலா சாப்பாட்டிற்கு வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது வீடு திறந்து கிடந்துள்ளது, சந்தேகமடைந்த விமலா வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, வீட்டு உத்திரத்தில், சேலையால் தூக்குப்போட்டு சீனிவாசன் தற்கொலை செய்து கொண்டிருந்தான்.

மகனின் தற்கொலையால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், மற்றும் உறவினர்கள், கிராமத்தில் உள்ள வழக்கப்படி சீனிவாசனின் உடலை பிரேத பரிசோதனை ஆய்வுக்கு உட்ட்படுத்த பயந்துகொண்டு காவல்துறைக்கு புகார் கொடுக்காமலேயே சீனிவாசனின் உடலை எரித்துவிட்டனர்.

சீனிவாசனின் தற்கொலைக்கு காரணம் தெரியாத உறவினர்கள் சிலர், நேற்று காலையில் சீனிவாசனுடன் படிக்கும் சக மாணவர்களிடம் பள்ளியில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்துள்ளர்கள்.

சீனிவாசனின் வகுப்பு மாணவர்கள், எங்களது கணித ஆசிரியர் செந்தில் சார் சரியாக புரியும்படி கணக்கு பாடம் நடத்துவதில்லை, அதனால் தலைமையாசிரியரிடம் புகார் கொடுப்பதற்கு எல்லா மாணவர்களிடமும் கையெழுத்து வாங்கிக் கொண்டு இருந்தான் என்று சொல்லியுள்ளார்கள்.

சீனிவாசனின் தற்கொலைக்கு பள்ளியில் நடந்த சம்பவம் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகப்பட்டு உறவினர்கள் நேற்று சீனிவாசனின் பள்ளி புத்தகப்பையை திறந்து பார்த்துள்ளார்கள்.

அதில், சீனிவாசன் கைப்பட எழுதிய ஏழு பக்க கடிதம் இருந்துள்ளது. அதில், எனது சாவுக்கு என் பெற்றோர்களோ, உறவினர்களோ காரணமல்ல... என் முடிவை எழுதியவர்கள், நான் படிக்கும், பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் செந்தில், தமிழ் அய்யா ராமலிங்கம், இயற்பியல் ஆசிரியர், மற்றும் வேதியியல் ஆசிரியர்கள் தான் காரணம் என்று எழுதப்பட்டிருந்தது.

நான் 11வகுப்பு படிக்கும் போதிலிருந்தே எங்களுக்கு கணக்கு பாடம் நடத்தும் செந்தில் ஆசிரியர் பாடம் நடத்துவது புரிவதில்லை... எங்களுக்கு, புரியும்படி பாடத்தை மெதுவாக நடத்துங்கள் என்று பலமுறை சொல்லியுள்ளோம்.

கடந்த 16ம் தேதி எங்களுக்கு செந்தில் ஆசிரியர் கணக்கு பாடம் நடத்தினார். அவர் வேகமாக நடத்தியதால், எனக்கு புரியவில்லை, சார் மெதுவாக நடத்துங்கள் என்று கேட்டேன், என்னை முறைத்துப் பார்த்துவிட்டு, போர்டில் உள்ளதை மட்டும் எழுது என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

செந்தில் ஆசிரியர், கணக்கு படத்தை புரியும்படி, மெதுவாக நடத்தச்சொல்லி, தலைமையாசிரியரிடம் புகார் கொடுக்க என் வகுப்பு மாணவர்களிடம் கையெழுத்து வாங்கினேன், இந்த புகாரை தலைமையாசிரியரிடம் கொடுக்கலாமா...? என்று கெமிஸ்ட்டரி ஆசிரியரிடம் கேட்டேன்.

அவர் எல்லா ஆசிரியகளிடமும் நான் சொன்னதை சொல்லிவிட்டார்.... அன்று, மாலை பள்ளி முடிந்து நானும், என் நண்பர் ஜீவாவும் வீட்டுக்கு வந்து கொடிருந்த போது, வேதியல் ஆசிரியர், என்னை கூப்பிட்டு... படிக்க வந்தா படிக்கற வேலைய மட்டும் பார், தேவையில்லாத வேலையெல்லாம் பாக்காதே, என கோபமாக திட்டினார். நீ எல்லா பசங்க முன்னாலயும் கணக்கு பாடம் புரியலையுன்னு கேட்டியாமே... என்னுடைய வகுப்புல அப்படி கேட்டுப்பார் என்ன நடக்குதுன்னு பார்.... என மிரட்டினார்.

பாடம் நடத்தும் போது சந்தேகம் கேட்க கூடாதா சார்..., எங்க கிளாசுல செந்தில் சார் நடத்துற கணக்கு பாடம் யாருக்கும் புரிய மாட்டிங்குது சார்.... என்று கூறினேன்.

மறுநாள் 17 தேதி கம்ப்யூட்டார் ஆசிரியர், என்னை கூப்பிட்டு என்ன ரிப்போர்ட் எழுதி கையெழுத்து எல்லாம் வாங்கி இருக்குரியாமே... ஏன் வகுப்பு ஆசிரியரான என்கிட்ட சொல்லலை... என்று கேட்டார். அப்போது இயற்பியல் ஆசிரியர், நீ என்ன பெரிய இவனா... மூடிக்கிட்டு டெஸ்ட் எழுதுடா என்று மிரட்டினார்.

அப்போது பின்னால் வந்த தமிழ் அய்யா ராமலிங்கம், நீ என்னடா...பெரிய ரௌடியா, நீ படிக்கறது பள்ளிக்கூடம், இது காலேஜ் கிடையாது, எங்க மேல நீ பெட்டிசன் எல்லாம் போடமுடியாது, உன்ன பள்ளிக்கூடத்துல சேத்துக்கிட்டதே பெரிய விஷயம், இந்த லட்சணத்துல நீ ரௌடித்தனம் பண்ணறே... என்ற் ஆசிரியர்கள் என்னை கெட்ட வார்த்தைகளால் திட்டியதுடன், செய்முறைத் தேர்வில் மதிப்பெண் போடமாட்டோம் என்று கூறி மிரட்டினர். மாற்றுச் சான்றிதழில், ""மோசம்'' என்று எழுதி என்னை பள்ளியில் இருந்தே வெளியேற்றி விடுவதாகவும் மிரட்டினார்கள்.

உனக்கு புரிஞ்சா படி..., இல்லன்னா, டி.சி வாங்கிக்கிட்டு போய் உனக்கு பிடிச்ச வாத்தியார் இருக்கற பள்ளியில் சேர்ந்து படி என்று கூறினார்கள்.

மாலை 3.30 மணிக்கு தலைமையாசிரியரிடம் பர்மிசன் வாங்கிக் கொண்டு, வீட்டுக்கு வந்து, இந்த கடிதத்தை எழுத்துகிறேன்.

எனக்காக அம்மா, அப்பா இருவரும் அழக்கூடாது, அப்போது தான் என் ஆத்மா சாந்தியடையும்.

எனக்கு அடுத்த பிறவியிருந்தால் அதில் நான் மனிதனாக பிறக்கக் கூடாது, அரசு பள்ளிகளையும், அதன் ஆசிரியர்களையும் நன்றாக கவனித்தால் தான் என்னைப் போன்ற மாணவர்களை மேம்படுத்த முடியும்.

என் சாவு, அரசு பள்ளியில் சிறிய மாற்றத்தையாவது ஏற்படுத்த வேண்டும், இல்லையானால் என்னை மாதிரி எத்தனை உயிர்களை ஆசிரியர்கள் எடுக்கப்போகிரார்களோ தெரியவில்லை...

திறைமையான ஆசிரியர்கள் பலர் வேலையில்லாமல் காத்திருக்கிறார்கள், அவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும், மேல்நிலை வகுப்புகளுக்கு, நல்ல திறமையான ஆசிரியர்களை போடவேண்டும் என முதலமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

இந்த கடிதத்தை சி.ஈ.ஓ விடம் ஒப்படைக்க வேண்டும். என் மரணத்திற்கு பின்னர் சட்டம் அதன் கடமையை செய்யவேண்டும் என்று அந்த கடிதத்தில் எழுதியுள்ளான்.

சீனிவாசன் சாவுக்கு காரணம் ஆசிரியர்கள் தான் எனபதை அறிந்த உறவினர்கள், நேற்று சேலம் எஸ்.பி அலுவலகத்துக்கு புகார் சொன்னதன் பின்னர், மல்லூர் காவல் ஆய்வாளர் சீனிவாசனின் வீட்டுக்கு சென்று விசாரித்துள்ளார்.

சீனிவாசனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் சீனிவாசன் தற்கொலை பற்றி காவல் நிலையத்திற்கு வந்து புகார் கொடுக்க அறிவுறுத்தினார்.

அதன் பின்னர், மல்லூர் காவல் நிலையத்தில் சீனிவாசன் தற்கொலை செய்து கொண்டது சம்பந்தமாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளும் இன்று துறை ரீதியான விசாரணையை துவக்கியுள்ளர்கள்.

இன்று 20-6-2011 திங்களன்று கணக்கு ஆசிரியர் செந்திலை போலீசார் கைது செய்துள்ளனர். எஞ்சியுள்ள நான்கு ஆசிரியர்களும் தலைமறைவு ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.



அமெரிக்க நீதிமன்றம் சம்மன் - பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை ராஜபக்சே!




தமிழரைக் கொன்றதற்காக 30 மில்லியன் டாலர் நஷ்டஈடு கேட்டு தொடரப்பட்ட வழக்கில் அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அதை ராஜபக்சே நிராகரித்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ராகியர் மனோகரன் என்பவர் கொல்லப்பட்டதற்கு அந்நாட்டின் பாதுகாப்புப் படைகளுக்கு தலைவர் என்ற முறையில் ராஜபக்சே நஷ்டஈடு தரவேண்டும் என்று கோரி அமெரிக்காவைச் சேர்ந்த அவரது உறவினர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.

இலங்கை விதிகளின்படி அதிபர் விதிவிலக்கு பெற்றவர் என நீதித்துறை அமைச்சகச் செயலர் சுகதா காம்லத் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற சம்மன்களுக்கு நாங்கள் பதிலளிக்க மாட்டோம். எங்களது சட்ட நிலைப்பாடு குறித்து கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்துக்கு கடந்த வாரமே தெரிவித்துவிட்டேன் என காம்லத் குறிப்பிட்டார்.

ஐநா சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ராஜபக்சே செப்டம்பரில் நியுயார்க் வரவிருக்கிறார். இந்த நிலையில் அமெரிக்க நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது இலங்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

சதீஷ்குமார் சடலத்தை முதலில் கண்டுபிடித்த மக்கள் தொலைக்காட்சி.



சென்னை வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகன் சதீஷ்குமார் கொல்லப்பட்டதும், காவல்துறை புலனாய்வு செய்துவருவதும் அனைவரும் அறிந்த ஒன்று.

காணாமல் போன சதீஷ்குமாரை காவல்துறையினர் தேடிவந்த நிலையில், அவரது சடலத்தை கண்டுபிடித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தது மக்கள் தொலைக்காட்சி ஆகும்.

மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'மறு பக்கம்' நிகழ்ச்சியினை தயாரிக்கும் குழுவே, இதனை முதலில் கண்டுள்ளது.

செய்தி சேகரிக்கச் சென்ற மக்கள் தொலைக்காட்சி நிருபர் மணிகண்டனும், கேமராமேன் பிரதீப்பும் இது குறித்து விவரித்து கூறினர்.

13ம் தேதி மதியம் 3.45க்கு சதீஷ்குமாரின் மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்ட ஏரிக்கரையை படம் எடுக்கச் சென்றோம். பைக் நிறுத்தப்பட்ட இடத்தருகே இருந்த பூங்கா சுவரில், சதீஷ், நிரஞ்சனான்னு சாக்பீசால் நிறைய எழுதப்பட்டிருந்தது.

அதை கேமராவில் பதிவு பண்ணிட்டு ஏரிக்கரையில் இருந்து மறுகரை வரை ஜும் பண்ணிப் பார்த்தபோது அங்கே வெங்காயப் பூண்டு செடிகளுக்கு மத்தியில் ஒரு உடல் மிதப்பதைப் பார்த்தோம். அந்தப் பக்கம் போனவங்ககிட்டே அதைக்காட்டி பிணம்தான்னு உறுதிப்படுத்திக்கிட்டு, காவல்துறைக்கு தகவல் கொடுத்தோம்.

அவங்க வந்து பிணத்தை எடுத்தப்பவே அது கொலைதான்னு தெரிஞ்சது. முகம் சிதைக்கப் பட்டிருந்தது, பல்லே இல்லை, கழுத்துக்குப் பின்னாடி கத்திக்குத்து காயம் இருந்தது. வலது கையில் சுண்டுவிரலே இல்லை.

பிரேத பரிசோதனை பண்ணிய டாக்டர்களிடம் கேட்டபோது, இந்த பாடியில் பழு இருக்கு. தண்ணீரில் இருக்கும் பாடியில் புழு இருக்காது. அப்படி புழு உருவாகுனும்னா இறந்து 18மணி நேரம்வரை தரையில் பாடி இருந்திருக்கனும் என்று கூறினார். ரொம்பவும் கொடுமையான கொலை என்றனர் வருத்தத்தோடு.

நிஜவாழ்விலும் நடிக்கும் காரியவாதி ரஜினி !



''ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது!''

''ஜெயலலிதா வெற்றி பெற்று முதல்வரானதன் மூலம் தமிழகம் காப்பாற்றப் பட்டு விட்டது!''

மேற்கண்ட இரண்டையும் சொன்னது வேறு யாருமில்லை, நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.

ஒரு ஆட்சியின் அவல நிலையைக் கண்டு அந்த ஆட்சியை விமர்சிப்பதில் தவறில்லை. ஆனால் அது வெளிப் படையாக இருக்க வேண்டுமே தவிர தொழிலுக்கேற்ப நடிப்பாக இருக்கக் கூடாது. தமிழகத்தைக் கருணாநிதி ஆண்ட 5 வருடங்கள் கருணாநிதி கதை வசனம் எழுதிய திரைப் படங்களை அவருடன் கண்டுகளித்து தன் காரியங்களைச் சாதித்துக் கொண்ட ரஜினி, தற்போது தமிழகம் காப்பாற்றப் பட்டு விட்டதாக திருவாய் மலர்ந்து இருக்கிறார்.

பாட்சா பட வெற்றி விழாவின் போது அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி குறித்து "தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் குண்டு வெடிப்புகள்; தமிழகத்தில் அமைதியில்லை" என்று பேசி படத் தயாரிப்பாளரான முன்னாள் அமைச்சர் ஆர்.எம் வீரப்பனின் பதவிக்கு வேட்டு வைத்தவர். இன்று ஜெயலலிதா முதல்வரானதன் மூலம் தமிழகத்தைக் கருணாநிதியிடம் இருந்து காப்பாற்றி விட்டார் என்றும் ஜெயலலிதா முதல்வராகா விட்டால் கருணாநிதி தமிழகத்தை ஒரு வழி பண்ணி இருப்பார் என்றும் சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.

''என் ஒரு ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு கொடுப்பது தமிழ் அல்லவா என் உடல் பொருள் அனைத்தையும் தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா'' என்று பாட்டு பாடும் ரஜினி, தன்னுடைய ரசிகர்களுக்காகவும் தமிழர்களுக்காகவும் என்ன செய்து விட்டார் என்று பட்டியலிடத் தயாரா? குறைந்தப் பட்சம் தன் மனைவி நடத்தும் ஆஸ்ரம் பள்ளியில் தன் ரசிகர்களின் குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை வழங்குவாரா? காவிரி தண்ணீர் பிரச்னைக்குத் தனியாக உண்ணாவிரதம் இருந்து தமிழர்களின் ஒற்றுமைக்கு வேட்டு வைப்பார். ரஜினிக்கு நிஜமாகவே தமிழர்கள் மீதும் தமிழ்நாட்டின் மீதும் அக்கறை இருந்தால் தேர்தலுக்கு முன்பே தன் நிலையைத் தெளிவாகச் சொல்லி தமிழகம் எப்படி காப்பாற்றப் பட வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தால் இன்று ரஜினி பேசுவதை அவரின் நடிப்பில்லை என்று நாம் நம்பலாம்!

ஒரு வேளை அதிமுக ஆட்சிக்கு வராமல் திமுகவே மீண்டும் ஆட்சி அமைத்து இருந்தால் "தமிழகம் காப்பாற்றப் படவில்லை" என்று ரஜினி தெளிவாக அறிவித்து இருப்பாரா என்ற நியாயமான கேள்விக்கு அவரின் மனசாட்சிதான் பதில் சொல்ல வேண்டும்.

தமக்கு காரியம் ஆக வேண்டும் என்றால், மொழி, இன அடிப்படையில் மக்களிடையே வேற்றுமையை விதைத்து நாட்டு ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் பால் தாக்கரே போன்ற மத துவம்சம் பிடித்தவர்களையும் தெய்வம் என்பார். ஐந்து ஆண்டு கால ஆட்சியின் போது கருணாநிதியைப் பற்றியோ கருணாநிதியின் ஆட்சியை பற்றியோ வாய் திறக்காத ரஜினி, தேர்தலில் வாக்களித்த பின்பு மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாகக் கூறினார். தற்போது தமிழகம் காப்பாற்றப் பட்டு விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

கமல் - ரஜினி இவரில் நடிக்கத் தெரிந்தவர் யாரென்று கேட்டால் பட்டெனப் பதில் வரும் கமல்தான் என்று. ஆனால் உண்மையிலேயே கமலைவிட நடிக்க மட்டுமல்ல, வசனம் பேசவும் தெரிந்தவர் ரஜினிதான் என்பதை அவர் பேசியதாக வெளியான இத்தகவல் மூலம் அறிய முடிகிறது.

"உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்கமாட்டேன்..." என்ற பாடலை அவர் எழுதாவிட்டாலும் அவர் பாடுவது போன்று அமைக்கப்பட்டதால், ரஜினியே சொல்வது போன்றுதான் இன்றும் அவரது ரசிகர்கள் நினைத்துக் கொண்டுள்ளனர். ஆனால், உப்பிட்ட மண்ணை மறந்துவிட்டுத் தன்னுடைய வருமானத்தையெல்லாம் தன் தாய் மண்ணிலே முதலீடு செய்துள்ளார். ஒகனேக்கல் குடிநீர்த் திட்டத்தில் எழுந்த பிரச்னையில் ரஜினி நடித்த திரைப் படங்களை கர்நாடக மாநிலத்தில் திரையிட விட மாட்டோம் என்று கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் பிரச்னை செய்த போது, உடனே மன்னிப்பு கேட்டு சமாதானம் பேசி, தான் நடித்த குசேலன் திரைப் படத்தை வெளியிட்டார்.

ரஜினிகாந்த் என்று அழைக்கப்படும் ஸிவாஜிராவ் கெய்க்வாட் ஒரு நடிகர்; தேர்ந்த நடிகர். நடிப்பு அவருக்கு வருவாய் ஈட்டும் தொழில். அரிதாரம் பூசி அவர் போடும் வேடங்கள் அவரின் உண்மையான குணாதிசயங்கள் அல்ல. அரிதாரத்தைக் கலைத்த பின் அவர் ஸிவாஜிராவ் கெய்க்வாட் எனும் தனி நபர். இது நடிப்புத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் பொருந்தும். தமிழ்நாட்டில் நடிகர்களின் ரசிகர்கள், தாம் விரும்பும் நடிகர்கள் திரையில் செய்யும் ஸூப்பர்மேன் சாகசங்களை நிஜ வாழ்விலும் செய்வர் என நம்பிக்கொண்டு அவர்களைத் தங்களுக்குத் தலைவர்களாக வரித்துக் கொண்டு, அவர்களின் கட்அவுட்டுக்கு மாலையிட்டுச் சூடம் கொளுத்திப் பாலாபிஷேகம் செய்கின்றனர்.

ரஜினிக்கு இணையாக சமகால நடிகர்கள் பலர் இருந்தும், ரஜினியைச் சுற்றிலும் ஓர் அரசியல் ஒளிவட்டத்தை ஏற்படுத்தி அதில் பலனடைந்தவர்கள் எல்லோருமே சினிமாத்துறை சார்ந்தவர்களே! இருப்பினும் 30+ ஆண்டுகள் ஆகியும், அவர் நேரடி அரசியலில் ஈடுபட்டு ஒளியேற்றுவார் என்று நம்பும் அப்பாவி ரஜினி ரசிகர்களை நினைக்கும்போது, ரஜினியின் வசனத்தில் "அவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது" என்றே கருத வேண்டியுள்ளது.

சினிமா வசனகர்த்தா எழுதிக்கொடுத்த அவர் நடித்த படங்களிலுள்ள வசனங்களைக்கூட, அரசியல் கட்சிகளுக்கான மறைமுக எச்சரிக்கை என்று ரசிகர்களை ஏமாற்றியதில் ஊடகங்களின் பங்கும் இருப்பதை மறுப்பதற்கில்லை. சினிமா நடிகர்களில் ரஜினிமீது ஊடகங்கள் காட்டிய கரிசனம், பாரபட்சமானது என்பதையும் வெட்கத்துடன் ஒப்புக்கொள்ள வேண்டும்.

ஆட்சி மாறும்போது ஒரே வாசகங்களை மாற்றி மாற்றிப் போட்டு முதல்வர்களுக்கு பாராட்டு விழா என்ற பெயரில் ஜால்ரா அடித்த திரை உலகினரை நன்றாக புரிந்து வைத்திருந்த ஜெயலலிதா, இம்முறை அது தன்னிடம் நடக்காது என்பதைத் தனிப்பட்ட தொலைப்பேசி உரையாடலில் ரஜினி கூறிய வாசகத்தை அரசு அறிக்கையாக வெளியிட்டு ரஜினிக்கு நாமம் போட்டுக் காட்டியுள்ளார். ஆரம்பத்தில், ஆட்சிப் பொறுப்பேற்றதும் தனக்குப் "பாராட்டு விழா" நடத்த தேதி கேட்டு வந்த திரை உலகத்தினரைத் திருப்பியனுப்பி, இனிமேலும் உங்களின் அரிதார அற்ப ஜால்ரா புகழுரைகள் என்னிடம் பலிக்காது என்று முதல்வர் ஜெயலலிதா சம்மட்டியால் அடித்து விரட்டியது பாராட்டத்தக்கது! இது போன்ற சினிமாத் துறையினரின் சந்தர்ப்பவாத பேச்சுக்களை கருணாநிதி போன்ற அரசியல் சாணக்கியர்கள் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்.

நோய் வாய்ப்பட்டுள்ள நிலையில் ரஜினியை இகழ்ந்து பேசுவது நமது நோக்கமல்ல. தமிழகமே அவர் மீது பித்தம் கொண்டது போன்ற தோற்றத்தை உருவாக்கி, அவரது ஒவ்வொரு அசைவையும் செய்திகளாக்கி, காசு பார்க்கும் ஊடக வியாபாரிகளின் பொறுப்பற்றத்தன்மையை வெளிச்சமிட்டுக் காட்டுவதோடு, நேரத்துக்கும் காலத்துக்கும் தகுந்ததுபோல் தன் நிலைபாடுகளை மாற்றி நிஜ வாழ்விலும் சிறந்த நடிகர்களாக வலம்வரும் இவர்களை நம்பியிருந்து தம் வாழ்வைத் தொலைக்காமல் நாட்டுக்கும் வீட்டுக்கும் நலம் பயப்பவர்களாக தம் வாழ்வை இளைஞர்கள் மாற்றியமைத்துக் கொள்ள சுட்டுவதே நம் நோக்கம்!