Tuesday, August 2, 2011

இந்தியாவில் பால் பற்றாக்குறை ஏற்படும் : நிபுணர்கள் எச்சரிக்கை.

இந்தியாவில் பால் பற்றாக்குறை ஏற்படும்:நிபுணர்கள் எச்சரிக்கை

உலகிலேயே அதிகளவில் பால் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. ஆனால், தேவை அதிகரிப்பு காரணமாகவும், அதிக பால் கொடுக்கும் பசுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாலும் பால் உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது.

இந்திய கால்நடை கவுன்சில் சார்பில் சமீபத்தில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப் பட்டது. இந்த ஆய்வு முடிவுகள் குறித்து கவுன்சிலின் தலைவர் நாராயணன் மெகந்தி கூறியதாவது:-

இந்தியாவில் ஆண்டுக்கு 35 லட்சம் டன் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் பாலின் தேவை 60 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. நாட்டில் உள்ள பசுக்களிடம் பால் உற்பத்தி திறன் மிகவும் குறைவாக உள்ளது. கால்நடைகளுக்கு தரமான உணவு கிடைப்பதில்லை. சரியான நேரத்தில் பராமரிப்பும், சிகிச்சைகளும் அளிக்கப் படுவதில்லை.

பால் உற்பத்தியை பெருக்க நீண்ட கால திட்டம் எதுவும் கிடையாது. இன்னும் 2 ஆண்டுகளில் கால்நடைகளின் நிலைமை மிகவும் பரிதாபமாக போய் விடும். இதனால் பால் பற்றாக்குறை ஏற்பட்டு, வெளி நாடுகளில் இருந்து இறக்கு மதி செய்ய வேண்டிய நிலை உருவாகும். எனவே கால் நடைகளின் நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.

மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, பால்உற்பத்தியில் தமிழ்நாடு பின்தங்கி உள்ளது. தனிநபர்களுக்கு பால் கிடைப்பதில் அகில இந்திய சராசரியை விட தமிழ்நாட்டின் சராசரி மிகவும் குறைவாக உள்ளது. அதே சமயம் கோழி வளர்ப்பிலும் முட்டை உற்பத்தியிலும் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. தேசிய அளவில் சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு ஒருவருக்கு 52 முட்டைகள் கிடைக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் இதன் சராசரி 160 ஆகும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஜெயலலிதாவை அந்தமான் சிறையில் அடைக்க வேண்டும் - மு.க. ஸ்டாலின் ஆவேசம்.



பூண்டி கலைவாணனை கைது செய்து பாளையங்கோட்டை சிறைக்கு அனுப்புகிறார்கள். அப்படியானால், ஜெயலலிதா செய்த குற்றத்துக்கு அவரை அந்தமான் சிறைக்கல்லவா அனுப்ப வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள துணை முதல்வர் மு.க..ஸ்டாலின்

சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டக் கூட்டத்தில அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அதே கூட்டத்தில் அவர், “பூண்டி கலைவாணன் மீது என்ன வழக்கு? சமச்சீர் கல்வி அமல்படுத்தக் கோரி திருவாரூர் பள்ளியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விஜய் என்ற மாணவன் அதில் பங்கேற்று பஸ்சில் வீடு திரும்பும் போது விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்தான். தகவல் அறிந்த கலைவாணன் விரைந்து சென்று காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். இதுதான் அவர் செய்த தவறு.

மாணவன் சாவுக்கு அவர்தான் காரணம் என்று போலீசார் கைது செய்ய வந்தார்கள். எப்.ஐ.ஆர். அல்லது வாரண்ட் இருக்கிறதா என்று கேட்டபோது இல்லை என்றார்கள். அதைக் கொண்டு வாருங்கள் என்றதும் எங்களை சாலையில் வைத்து கைது செய்துவிட்டு, நாங்கள் சாலை மறியல் செய்ததாக கூறினார்கள். பிறகு எப்.ஐ.ஆர். கொண்டு வந்து தந்து கலைவாணனை அழைத்துச் சென்றனர்.

ஒரு மாணவனை பள்ளி செல்ல விடாமல் தடுத்ததாக கூறி வழக்கு போட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கிறார்கள் என்றால், சமச்சீர் கல்வியை அமல்படுத்தாமல் 1.40 கோடி மாணவர்களின் படிப்பை பாழாக்கிய ஜெயலலிதாவை எந்த சிறையில் அடைப்பது? அந்தமான் சிறையில்தான் அடைக்க வேண்டும்” என்றும் பேசினார்.

“தி.மு.க. முன்னோடிகள்மீது வேண்டுமென்றே பொய் வழக்கு போடுகிறார்கள். தகுந்த ஆதாரம், சான்று இருந்தால் முறைப்படி நடவடிக்கை எடுக்கட்டும். தண்டனையை ஏற்க தயாராக இருக்கிறோம். ஆனால் பொய் வழக்கு போடுவதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம்” இவ்வாறு மு.க..ஸ்டாலின் ஆவேசப்பட்டார்.

மருத்துவ படிப்பு பொது நுழைவுத் தேர்வுக்கு ஜெயலலிதா கடும் எதிர்ப்பு : தமிழகத்துக்கு விலக்கு அளிக்க பிரதமருக்கு கடிதம்.


மருத்துவ படிப்பு பொது நுழைவு தேர்வுக்கு ஜெயலலிதா கடும் எதிர்ப்பு:  தமிழகத்துக்கு விலக்கு அளிக்க பிரதமருக்கு கடிதம்

மருத்துவ படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தும் மத்திய அரசின் திட்டத்துக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இது தொடர்பாக அவர் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு, “தேசிய திறன் மற்றும் பொது நுழைவு தேர்வு” நடத்தி, அதன் அடிப்படையில் மாணவர்களை சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பது எனது கவனத்துக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2005-ம் ஆண்டு வரை, நுழைவு தேர்வு, நடத்தியே மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக தொழில் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தும் முறை 2007-08 ஆண்டில் ரத்து செய்யப்பட்டது. அது முதல் கவுன்சிலிங் மூலமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.

வல்லுனர் குழுவை கொண்டு விரிவாக ஆய்வு நடத்திய பிறகு, நுழைவுத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டது.

கிராமப்புற மாணவர்களும், குறைந்த சமூக பொருளாதார பின்னணியை உடைய மாணவர்களும் பொது நுழைவுத் தேர்வு முறையில், நகர்ப்புற அறிவார்ந்த மாணவர்களுடன் போட்டிப் போட முடியாது. நகர்ப்புறம் மற்றும் பணக்கார மாணவர்களுக்கு கிடைக்கும் வசதி வாய்ப்புகள் கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களுக்கு கிடைப்பதில்லை.

நுழைவுத் தேர்வை எதிர்கொள்வதற்கு வசதியான மாணவர்கள் இதற்கென செயல்படும் பயிற்சி மையங்களில் சேர்ந்து பயிற்சி எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் ஏழை மாணவர்களால் பயிற்சி மையங்கள் கேட்கும் கட்டணத்தை செலுத்த முடியாது. இதனால் நுழைவுத் தேர்வுகளில் இவர்கள் வெற்றி பெற முடிவதில்லை.

தேசிய அளவில் நடத்தப்படும் பல்வேறு தேர்வுகள் மூலமும் இவை நிரூபிக்கப்பட்டுள்ளன. தேசிய அளவிலான போட்டி தேர்வுகளில் நகர்ப்புறத்தை சேர்ந்தவர்களும், வசதி படைத்தவர்களும் தான் அதிகளவில் வெற்றி பெற்று வருகின்றனர்.

தமிழ்நாட்டில் பொது நுழைவுத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்ட பிறகு, சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின் தங்கிய தகுதியான கிராமப்புற மாணவர்கள் பெருமளவில் பலன் அடைந்து வருகின்றனர்.

தற்போது மாநிலத்தில் நடைமுறையில் இருந்தும் மாணவர் சேர்க்கை கொள்கை மூலம் அரசு மருத்துவ கல்லூரிகளில் இளநிலை மருத்துவ படிப்புகளில் கிராமப்புற மாணவர்கள், அதிகமானோர் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இதனால் கிராமப்புற மருத்துவ சேவைகளுக்கு தேவையான மனித சக்தியை உருவாக்க முடியும்.

சமூக நீதியை நிலை நாட்டும் வகையிலும், தமிழகத்தில் தொழில் படிப்புகளில் 69 சதவீதம் இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பொதுநுழைவுத் தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டால், தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படுவதுடன், இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு கொள்கையை செயல்படுத்துவதில் சிரமம் ஏற்படும்.

தவிர, தமிழகத்தில் முதுகலை மருத்துவ பட்டப்படிப்புக்கான மொத்த இடங்களில் 50 சதவீத இடங்கள், கிராமப்புறங்களில் மூன்று ஆண்டுகள் பணி புரிந்த டாக்டர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. முதுகலை மருத்துவ படிப்பை அரசு மருத்துவ கல்லூரிகளில் முடிப்பவர்கள் குறிப்பிட்ட காலத்துக்கு இந்த மாநிலத்திலேயே சேவை செய்ய வேண்டும் என்ற ஒப்பந்தம் செய்யப்பட்டு அந்த முறை வெற்றியும் அடைந்துள்ளது.பொது நுழைவுத் தேர்வு முறை அமலுக்கு வந்தால், மாநிலத்தில் குறிப்பிட்ட காலத்துக்கு பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனையை சட்டப்பூர்வமாக செயல்படுத்துவது கடினமாகி விடும்.

அகில இந்திய பொது நுழைவுத் தேர்வு முறை குறித்து ஒரு முடிவு எடுக்கும் முன்பு, இதுபற்றி மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி, அவர்களின் கருத்துக்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று மத்திய சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத்துறை மந்திரி ஏற்கனவே உறுதி அளித்துள்ளார் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

பொது நுழைவுத் தேர்வு முறையானது, கல்வி திட்டத்தை செயல்படுத்துவதால் மாநில அரசுக்கு உள்ள உரிமையில் தலையிடுவதாக அமையும் என்று தமிழக அரசு சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது. எனினும் பொது நுழைவு தேர்வு முறையை நாடு முழுவதும் அமல்படுத்த முடிவு செய்து அதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகிறது.

எனவே மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவு தேர்வு முறையை கொண்டு வர மத்திய அரசு தீர்மானித்துள்ளதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் கடும் எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறேன்.

பொது நுழைவுத் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும். மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு தற்போது தமிழ்நாடு அரசு கடைப்பிடித்து வரும் முறையை தொடர்ந்து மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

76 ஆயிரம் பி.இ. இடங்கள் காலி : என்ஜினீயரிங் கலந்தாய்விற்கு 20 ஆயிரம் பேர் வரவில்லை.

76 ஆயிரம் இடங்கள் காலி: என்ஜினீயரிங் கலந்தாய்விற்கு 20 ஆயிரம் பேர் வரவில்லை

பி.இ. படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்து வருகிறது. பொது பிரிவினருக்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த மாதம் 8-ந்தேதி தொடங்கி வருகிற 11-ந்தேதி வரை நடைபெறுகிறது.

இந்த ஆண்டு புதிதாக 29 சுயநிதி பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. என்ஜினீயரிங் கல்லூரிகளின் எண்ணிக்கை 500-யை தாண்டி விட்டது. இவற்றின் மூலம் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 1 லட்சத்து 47,732 கிடைக்கின்றன.

இதுவரை நடந்த கலந்தாய்வின் மூலம் 71,138 பேர் பல்வேறு பாடப் பிரிவுகளை தேர்வு செய்துள்ளனர். 19,549 பேர் கவுன்சிலிங்கில் பங்கேற்கவில்லை. 208 பேர் இடங்களை தேர்வு செய்வதை தவிர்த்து விட்டனர்.

76,594 பொறியியல் “சீட்” இன்னும் காலியாக இருக்கின்றன. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த வருடம் காலி இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சுமார் 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் இடங்கள் காலியாக கிடக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

முதல் கட்டம் முடிந்த ஒரு சில நாட்களில் இரண்டாவது கட்ட கலந்தாய்வு தொடங்குகிறது. அது முடிந்தவுடன் துணை கவுன்சிலிங் நடக்கிறது. பிளஸ்-2 சிறப்பு தேர்வு எழுதியவர்களுக்கு துணை கலந்தாய்வு நடத்தப்படும். அதற்கான விண்ணப்பம் வழங்கப்படுகிறது. 5-ந்தேதிக்குள் உடனடி தேர்வு எழுதியவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைகளில் பொருள் வாங்குவோருக்கு பாலித்தீன் பைகளை இலவசமாக கொடுக்க தடை.

கடைகளில் பொருள் வாங்குவோருக்கு  பாலித்தீன் பைகளை இலவசமாக கொடுக்க தடை: கட்டணம் வசூலிக்க முடிவு

கடைகளில் பொருட்களை வாங்குவோருக்கு தற்போது பாலித்தீன் பைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்த பாலித்தீன் பைகளுக்கு கட்டணம் வசூலித்தால், வாடிக்கையாளர்களே வீட்டில் இருந்து பை கொண்டு வந்து பொருட்களை வாங்குவார்கள். இதனால் பாலித்தீன் பைகளின் பயன்பாடு குறையும். சுற்றுச்சூழல் மாசுபடுவது தடுக்கப்படும் என்பது நிபுணர்களின் எதிர்பார்ப்பு.

எனவே, கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக பாலித்தீன் பைகளை கொடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் கடந்த மாதம் 1-ந் தேதி இது அமலுக்கு வந்தது. பெங்களூரில் கடந்த வாரம் அமலுக்கு வந்தது. நாளை (புதன்கிழமை) முதல் நாடுமுழுவதும் இலவச பாலித்தீன் வழங்குவதை தடை செய்யும் சட்டம் அமலுக்கு வருகிறது.

பிளாஸ்டிக் பைகள் தயாரிப்புக்கான விதிமுறைகள் மத்திய வன பாதுகாப்புத்துறை மூலம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. அதில் கடைகளில் இலவசமாக பாலித்தீன் பைகளை வழங்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கடைக்காரர்கள் வழங்கும் பைகளுக்கு ஏற்ப வாடிக்கையாளர்களிடம் கடைக்காரர்கள் விலையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

60 மைக்ரான் அளவுக்கு குறைவான பாலித்தீன் பைகளுக்கு தடை விதிக்கப்படும் என்று கவர்னர் உரையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. என்றாலும் பைகளுக்கான விலை இதுவரை நிர்ணயிக்கப்பட வில்லை.


பதவி போன ஆத்திரத்தில் வெங்கையா நாயுடு லேப் - டாப்பை தரையில் போட்டு உடைத்த எடியூரப்பா.

பதவி போன ஆத்திரத்தில் வெங்கையா நாயுடு லேப்-டாப்பை  தரையில் போட்டு உடைத்த எடியூரப்பா: மந்திரி கன்னத்திலும் “பளார்” அறைவிட்டார்

கர்நாடகாவில் சுரங்கத் தொழில் முறைகேடுகளில் சிக்கிய எடியூரப்பா கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். பதவி விலகலுக்கான ராஜினாமா கடிதத்தை தயாரித்த போது எடியூரப்பா கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார். அப்போது அவர் ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியாமல் தாறுமாறாக நடந்து கொண்டது தற்போது தெரியவந்துள்ளது.

எடியூரப்பாவை ராஜினாமா கடிதம் கொடுக்க வைக்கும் பொறுப்பை வெங்கையா நாயுடுவிடம் மேலிட தலைவர்கள் ஒப்படைத்திருந்தனர். கடந்த ஞாயிறு மதியம் பெங்களூர் ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள எடியூரப்பா வீட்டுக்கு சென்ற வெங்கையா நாயுடு, ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து போடும்படி கூறினார். மறு நிமிடம் எடியூரப்பாவுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அங்கு இருந்த ஒரு லேப்-டாப்பை தூக்கி தரையில் போட்டு உடைத்தார்.பிறகு தான் அது வெங்கையா நாயுடுக்கு சொந்தமான லேப்-டாப் என்று தெரிந்தது.

எடியூரப்பாவை அவர் அருகில் இருந்த சில மந்திரிகள் சமரசம் செய்தனர். சில நிமிடங்கள் கழித்து மூத்த அமைச்சர் ஒருவர், "சரி.... வாங்க கடிதம் கொடுத்து விட்டு வரலாம்" என்று கூறியபடி எடியூரப்பாவை சோபாவில் இருந்து எழுப்ப முயன்றார். இதனால் எடியூரப்பா மீண்டும் கோபப்பட்டார். தன்னை எழுப்ப சொன்ன அமைச்சர் கன்னத்தில் “பளார்” என அறைந்தார்.

இது அந்த அறையில் இருந்த பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது. சுமார் 30 நிமிடங்கள் கழித்தே எடியூரப்பா இயல்பு நிலைக்கு திரும்பினார். அதன் பிறகு அவரை கவர்னர் மாளிகைக்கு அழைத்து சென்று ராஜினாமா கடிதத்தை கொடுக்க வைத்தனர்.

இலங்கை தமிழர்களுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம் : ஜெயலலிதா அறிவிப்பு.



சமூக நலத்துறையால் செயல்படுத்தப்படும் முதியோர் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற விதவையர் ஓய்வூதியத் திட்டம் ஆகிய திட்டங்களை தமிழ்நாட்டில் முகாம்களில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கும் விரிவுபடுத்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின்மூலம் முகாம்களில் வசிக்கும் 5,544 இலங்கைத் தமிழர்கள் மாதந்தோறும் ரூ. 1,000 ஓய்வூதியமாகப் பெற உள்ளனர்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக முதல்வர் ஜெயலலிதா இலங்கைத் தமிழர்கள் நலனில் எப்போதும் அக்கறை கொண்டுள்ளார். எனவே தான் இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பி, சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரையில், அனைத்துக் குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றினார்.

அமெரிக்கத வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் அவர்களுடனான சந்திப்பின்போதும், முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்கள் விரைந்து தங்கள் சொந்த இடங்களுக்குச் செல்வதற்கான வழிவகை காணப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசினார்.

தமிழகத்துக்கு அகதிகளாக வந்து, முகாம்களில் தங்கியுள்ள தமிழர்கள் நலனிலும் முதல்வர் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். எனவே தான் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் அனைத்து நலத் திட்டங்களும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கும் நீட்டிக்கப்படும் என ஆளுநர் உரையில் அறிவித்தார்.

இதை செயல்படுத்தும் வகையில், சமூக நலத்துறையால் செயல்படுத்தப்படும் முதியோர் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற விதவையர் ஓய்வூதியத் திட்டம் ஆகிய திட்டங்களை தமிழ்நாட்டில் முகாம்களில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கும் விரிவுபடுத்தி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின்மூலம் முகாம்களில் வசிக்கும் 5,544 இலங்கைத் தமிழர்கள் மாதந்தோறும் ரூ. 1,000 ஓய்வூதியமாகப் பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இலங்கை எம்.பி.களுக்கு இந்தியாவில் மிக மோசமாக அனுபவம்! அவமானம்!!



வெளிநாட்டு விருந்தினர்களாக இந்திய நாடாளுமன்றத்துக்கு வருகை தந்திருந்த இலங்கை எம்.பி.க்கள் எதிர்பாராத வகையில் மிக மோசமான அவமானத்தைச் சந்தித்தனர். இவர்களை நோக்கி, “வெட்கம்.. வெட்கம்” என்ற கோஷம் இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டுள்ளது.

வெளிநாட்டு விருந்தினர்களாக ஒரு நாட்டுக்கு அழைக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக, அவர்களை வரவேற்று அழைத்திருந்த மக்கள் மன்றத்தில் வைத்தே எதிர் கோஷங்கள் எழுப்புவது, ராஜதந்திர நடைமுறைகளில் மிக அவமானத்துக்குரிய ஒன்றாகக் கருதப்படும்.

அவமானப்படுத்தப்பட்ட எம்.பி.க்கள் தமது நாட்டுக்குத் திரும்பிச் செல்லும்போது, இந்தச் சம்பவத்தை தமது நாடாளுமன்றக் குறிப்பேட்டில் பதிவு செய்ய வேண்டியிருக்கும். அது, சர்வதேச அரங்கில், ‘அவமானத்துக்குரிய பதிவு’ என்ற முறையில் எடுத்துக் கொள்ளப்படும்.

இலங்கை எம்.பி.க்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தியவர்கள், தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் உள்ள அ.தி.மு.க.வின், நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

இதில் இரண்டு விஷயங்கள் முக்கியமாகப் பார்க்கப்படும்.

இலங்கை எம்.பி.க்களுக்கு தலைமை தாங்கியிருந்தவர் இலங்கை ஜனாதிபதியின் சகோதரரும், சபாநாயகருமாக சமல் ராஜபக்ஷே என்பது இதிலுள்ள முதலாவது முக்கிய விஷயம். அதாவது அவமானப்படுத்தப்பட்ட குழுவின் தலைவர், அவரது சொந்த நாட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்.

இரண்டாவது, கோஷம் எழுப்பிய எம்.பி.க்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். இந்தக் கட்சிதான் தமிழகத்தில் ஆளும் கட்சி. அந்த வகையில், தமிழக அரசே, இலங்கைக்கு இந்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

இந்தச் சம்பவம் எப்படி நடைபெற்றது? இதோ, இப்படித்தான்!

சமல் ராஜபக்ஷே தலைமையில் இலங்கை எம்.பி.கள் இன்று நாடாளுமன்ற நடவடிக்கைகளை நேரில் காண்பதற்காக அவைக்கு வந்திருந்தனர். அவர்களை சபாநாயகர் மீரா குமார் வரவேற்றார். இலங்கை எம்.பி.க்கள் குழு நாடாளுமன்றத்துக்கு வருகை தந்திருக்கின்றது என்று அவைக்கு அறிவித்தார். அவர்களை அறிமுகம் செய்யத் தொடங்கினார்.

வழக்கமாக இப்படி வெளிநாட்டு விருந்தினர்கள் வருகைதரும்போது, நாடாளுமன்றத்தில் அவர்களை அறிமுகம் செய்துவைக்கும் போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைகளைத் தட்டியோ, அல்லது தமக்கு முன்புள்ள மேஜையைத் தட்டியோ வரவேற்பது வழக்கம்.

இலங்கை எம்.பி.களை சபாநாயகர் மீரா குமார் அறிமுகப்படுத்தத் தொடங்கியபோது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேஜைகளைத் தட்டி வரவேற்கத் தொடங்கினர். ஆனால், அந்த ஒலியை அடக்கியபடி பெரிதாக சில குரல்கள் “shame, shame” என்று ஒலிக்கவே, அனைவரும் திகைத்துப்போய், இந்தக் குரல்கள் வரும் திசையில் திரும்பிப் பார்த்தனர்.

அ.தி.மு.க. எம்.பி.க்கள் ஒன்பது பேரும், எஸ்.செம்மலை, முனிசாமி தம்பித்துரை ஆகியோரின் தலைமையில் எழுந்து நின்று, ஸ்ரீலங்கா எம்.பி.க்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தனர். “வெட்கம், வெட்கம்” என்ற அவர்களது கோஷம் அவை முழுவதும் ஒலித்தது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.களும் அவையில் இருந்தனர். அவர்கள் யாரும் வாயே திறக்கவில்லை. தி.மு.க. எம்.பி.க்கள் பலரும் அவையில் மௌனமாக அமர்ந்திருந்தனர்.

கோஷம் எழுப்பிய அ.தி.மு.க. எம்.பி.க்களுக்கு ஆதரவாக வேறு யாரும் எழுந்திராத நிலையில், மிக ஆச்சரியமான சம்பவம் ஒன்று நடைபெற்றது. தமிழக எம்.பி.க்களில் ஒருவர், தமது கட்சியின் நிலைப்பாட்டைப் பற்றிக் கவலைப் படாமல் அ.தி.மு.க. எம்.பி.க்களுக்கு ஆதரவாக எழுந்தார்.

அவர், பி.லிங்கம். தென்காசி தொகுதியின் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.

இவர் தனது எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக சபாநாயகரின் இருப்பிடத்தை நோக்கி நடக்கத் தொடங்குவதைக் காணக்கூடியதாக இருந்தது. ஆனால், அவர் சபாநாயகரை நெருங்குமுன், தடுக்கப்பட்டார்.

அவரது கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா ஓடிச்சென்று, லிங்கத்தின் கைகளைப் பிடித்துத் தடுப்பதைக் காணக்கூடியதாக இருந்தது. அதன்பின் அவர் உட்கார்ந்து விட்டார்.

அ.தி.மு.க. எம்.பி.கள் கோஷம் எழுப்பியதை, சபாநாயகர் மீரா குமார் கண்டித்தார். இலங்கை எம்.பி.கள் நமது அழைப்பின் பேரில் வந்துள்ள விருந்தினர். அவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்றார். ஆனால், இதனை ஏற்காத அ.தி.மு.க. எம்.பி.க்கள், “வெட்கம் வெட்கம்” என்று தொடர்ந்து எதிர்ப்புக் குரல் எழுப்பிய வண்ணம் இருந்தனர்.

சமல் ராஜபக்ஷே தலைமையில் இலங்கை எம்.பி.கள், இந்தியாவில் ஐந்து நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள வந்துள்ளனர்.

viruvirupu.com

இலவச கறவை மாடு, ஆடுகள் யார், யாருக்கு கிடைக்கும் : அரசு அறிவிப்பு.

இலவச கறவை மாடு, ஆடுகள் யார், யாருக்கு கிடைக்கும்: அரசு அறிவிப்பு

தமிழக அரசின் இலவச ஆடுகள் திட்டத்துக்கு ரூ. 925 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக நடப்பாண்டில் ஒரு லட்சம் பேருக்கு ஆடுகள் தரப்படும். ஐந்து ஆண்டுகளில் மொத்தமாக 7 லட்சம் பேருக்கு தலா நான்கு ஆடுகள் தரப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, கால்நடை பராமரிப்புத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஏழை விவசாயிகளுக்கு ஆடுகள்

பேரறிஞர் அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15-ம் தேதி இலவச ஆடுகள் வழங்கும் திட்டம் தொடங்கப்படுகிறது. ஏழு லட்சம் நிலமற்ற ஏழை விவசாயிகள் இத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவர்.

நடப்பாண்டில் ஒரு லட்சம் பேருக்கும், அடுத்தடுத்த ஆண்டுகளில் தலா 1.5 லட்சம் பேருக்கும் இலவசமாக ஆடுகள் வழங்கப்படும்.

நடப்பாண்டில் ரூ. 135 கோடி

நான்கு ஆடுகள் ரூ.10 ஆயிரம் விலையில் வழங்கப்படும். அதாவது ஒரு ஆடு ரூ.2,500 விலை; தீவனச் செலவு ரூ.500 சேர்த்து ஒரு ஆட்டுக்கு ரூ.3 ஆயிரம் செலவிடப்படும். அதன்படி நான்கு ஆடுகளுக்கு ரூ.12 ஆயிரம் செலவிடப்படும். ஆடுகள் காப்பீடு செய்யப்படும். காப்பீடு, ஆடுகளை வாங்கி வருவதற்கான போக்குவரத்துச் செலவு என தனியாக ஒவ்வொரு பயனாளிக்கும் ரூ.500 ஒதுக்கப்படும். நடப்பாண்டில் இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்துக்கு ரூ.135 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

பயனாளிகளைத் தேர்வு செய்யும் பணிகளைக் கிராம அளவிலான குழு மேற்கொள்ளும். இந்தக் குழு பரிந்துரைக்கும் பயனாளிகளின் பெயர்களுக்கு ஒப்புதல் அளிக்கும் வேலையை, கிராமங்களில் உள்ள கிராம சபைகள் செய்யும். ஏழை விவசாயக் குடும்பங்களில் உள்ள பெண்களே பயனாளிகளே இருப்பார்கள்.

விவசாயக் கூலிகளுக்கு மட்டுமே

இலவச ஆடுகளைப்பெற விவசாயிகள், நிலங்கள் இல்லாத ஏழை விவசாயக் கூலிகளாக இருக்க வேண்டும். கிராமங்களில் நிரந்தரமாக தங்கி இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களில் ஒருவராவது 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். பசு, ஆடுகளைச் சொந்தமாக வைத்திருக்கக் கூடாது. அரசுப் பணியில் இருக்கக் கூடாது. நெருங்கிய உறவினர்கள் கூட அரசுப் பணியில் இருந்திடக் கூடாது.

மாடு வாங்கினால் ஆடு கிடையாது

இலவச மாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளாக இருப்பவர்களுக்கு ஆடுகள் வழங்கப்பட மாட்டாது. பயனாளிகளில் 30 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்ட (29 சதவீதம் பேர்) மற்றும் பழங்குடியின (1 சதவீதம்) சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பர்.

இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தை மாவட்ட அளவில் சிறப்பாகச் செயல்படுத்தும் அதிகாரிகளாக, மாவட்ட ஆட்சியர்கள் இருப்பர். மாவட்ட அளவிலான குழுவில் மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்பு), திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்), உதவி இயக்குநர் (பஞ்சாயத்துகள்) இருப்பர். பயனாளிகளைத் தேர்வு செய்வதற்கான கிராம அளவிலான குழுக்களை மாவட்ட ஆட்சியர் அமைப்பார். இந்த கிராம அளவிலான குழுவில் பஞ்சாயத்துத் தலைவர், துணைத் தலைவர், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த ஒரு வார்டின் மூத்த தலைவர் உள்ளிட்டோர் இருப்பர்.

தேர்வு செய்யப்படும் பயனாளிகளின் விவரங்களைக் கால்நடை உதவி மருத்துவர், துணை வட்டார வளர்ச்சி அதிகாரி ஆகியோரும் சரிபார்ப்பர். பயனாளிகள் நிலமற்ற ஏழை விவசாயக் கூலிகளா என்கிற விவரம் கிராம நிர்வாக அலுவலரின் துணையுடன் உறுதி செய்யப்படும். இறுதி செய்யப்பட்ட பயனாளிகளின் பட்டியல் கிராம சபைக் கூட்டத்தில் வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும்.

ஒரு ஆண் ஆடு, 3 பெண் ஆடு

செம்மறி அல்லது வெள்ளாடாக வழங்கப்படும். ஒரு ஆண் ஆடும், மூன்று பெண் ஆடுகளும் அளிக்கப்படும். ஆடுகளை வாங்கும்போது, பயனாளிகள் ஐந்து அல்லது ஏழு பேர் கொண்ட குழுக்களாக அழைத்துச் செல்லப்படுவர். அரசுப் பண்ணைகளில் ஆடுகள் விற்பனைக்கு இருந்தால் அவை விவசாயிகளுக்கு வாங்கிக் கொடுக்கப்படும். பக்கத்து மாநிலங்களில் விற்பனைக்கு இருந்தாலும் அவை கொள்முதல் செய்யப்படும்.

ஆடுகளின் காதில் ஐடி கார்டு

இலவச திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஆடு என்பதைக் குறிக்கும் வகையில், கொள்முதல் செய்யப்படும் ஆடுகளின் இடது காதில் ஓட்டை போடப்படும் அல்லது கயிறு தொங்கவிடப்படும். ஒவ்வொரு ஆட்டுக்கும் ஒரு எண் கொடுக்கப்படும். இந்த எண் பெரிதாக தெரியும் வகையில் புகைப்படம் எடுக்கப்படும்.

பயனாளிகள் இலவச திட்டத்தின் கீழ் வாங்கிய ஆடுகளை குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு விற்பனை செய்யக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசு மாடு வாங்க ரூ. 232 கோடி

இதேபோல அரசின் இலவச பசுக்கள் திட்டத்துக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ரூ. 232 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 60,000 பசு மாடுகள் கொள் முதல் செய்யப்படும். அதில் நடப்பாண்டில் மட்டும் ரூ. 56 கோடியில் 12,000 பசுக்கள் வாங்கப்பட்டு பயனாளிகளுக்கு தரப்படும்.

கலப்பின ஜெர்சி பசுக்கள் இத்திட்டத்திற்காக வாங்கப்படும். இந்த மாடுகள், 5 வயதுக்கு உட்பட்டவையாக இருக்கும்.

இலவச திட்டத்தின் கீழ் மாடுகளைப் பெறும் விவசாயிகள் அதை நான்கு ஆண்டுகளுக்கு விற்கக் கூடாது என்று அரசு நிபந்தனை விதித்துள்ளது.

இலவச ஆடுகள் திட்டத்துக்கு என்னென்ன விதிமுறைகள் உள்ளனவோ அதுவே இந்தத் திட்டத்திற்கும் பொருந்தும் என்று அரசு தெரிவித்துள்ளது.

இறுதிக்கட்ட போரில் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டது உண்மைதான் : இலங்கை அரசு ஒப்புதல்.

இறுதிக்கட்ட போரில் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டது உண்மைதான்: இலங்கை அரசு ஒப்புதல்

இலங்கை இறுதிக்கட்ட போரின்போது, அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது உண்மைதான் என்று சிங்கள அரசு முதல் முறையாக ஒப்புதல் அளித்துள்ளது. அந்த நாட்டின் ராணுவ அமைச்சகம் சார்பாக மனிதாபிமான நடவடிக்கை உண்மை பகுப்பாய்வு என்ற பெயரில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், இறுதிக்கட்ட போரின்போது அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டது உண்மைதான். விடுதலைப்புலிகளுடன் நடைபெற்ற கடுமையான சண்டையின்போது, பொதுமக்களின் இறப்பு தவிர்க்க முடியாததாக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.