Thursday, May 5, 2011

கத்திரி வெயில் தொடங்கியது : திருத்தணியில் 109 டிகிரி தமிழகம் தகித்தது.


தமிழகத்தில் கத்திரி வெயிலின் தொடக்க நாளான புதன்கிழமை, தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 10 ஊர்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டியது. அதிகபட்சமாக திருத்தணியில் 109 டிகிரி வெயில் தகித்தது.

திருப்பதியிலும் 109 டிகிரி வெயில்: இந்த ஆண்டில் மாநிலத்திலேயே அதிகபட்சமாக திருத்தணியில் 109 டிகிரி அளவாக வெயில் சுட்டெரித்தது. இதேபோல, ஆந்திரத்தில் நிஜாமாபாத், திருப்பதி ஆகிய இடங்களிலும் இதே அளவு வெயில் கொளுத்தியதோடு, அனல் காற்று வீசியது.

இதர முக்கிய இடங்களில் புதன்கிழமை பதிவான வெப்பநிலை (டிகிரி ஃபாரன்ஹீட்டில்):

திருநெல்வேலி, வேலூர் 106, சென்னை, திருச்சி 104, கடலூர், மதுரை, நாகப்பட்டினம், புதுச்சேரி 102, காரைக்கால், 100,சேலம், திருப்பத்தூர் 99, தருமபுரி 97, தூத்துக்குடி, கோயம்புத்தூர் 95.

கோத்தகிரியில் 90 மில்லி மீட்டர் மழை: தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெயில் வாட்டிய போதும், பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 90 மில்லி மீட்டர் அளவுக்கு பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதற்கு அடுத்தபடியாக சங்ககிரி, பாலக்கோடு ஆகிய இடங்களில் 80 மில்லி மீட்டர் மழை பெய்தது.

இதர இடங்களில் புதன்கிழமை காலை 8.30 மணி வரை பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்):

மாரண்டஹல்லி, கரூர் பரமத்தி, சூளூர் (கோவை மாவட்டம்) 70, ஏற்காடு 60, தாளவாடி 50, தருமபுரி, ஓகேனக்கல், அருப்புக்கோட்டை 40, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, பெரியநாயக்கன்பாளையம், திருச்செங்கோடு, நாமக்கல், வாடிப்பட்டி, மதுரை, வாழப்பாடி, ஆத்தூர், பவானிசாகர், சத்தியமங்கலம், குளித்தலை, பாப்பிரெட்டிபட்டி 30, ஊத்தங்கரை, தளி, கிருஷ்ணகிரி, கோபிச்செட்டிபாளையம், பென்னாகரம், ராசிபுரம், சேலம் 20, கொடைக்கானல், பழனி, வேடசந்தூர், அரூர், கரூர், மேட்டுப்பாளையம், அன்னூர், துறையூர், மானாமதுரை, ஆண்டிப்பட்டி 10.

இன்று மழை பெய்ய வாய்ப்பு: தமிழகம், புதுவையில் ஒரு சில இடங்களில் வியாழக்கிழமை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நகரில், வியாழக்கிழமை வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் இருக்கும். பகலில் அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரியாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வைகோ வலியுறுத்தல் : அதிவேக ஈணுலை திட்டத்தை கைவிட வேண்டும்.


கடந்தகால அனுபவங்களைப் படிப்பினையாகக் கொண்டு எதிர்காலத்தை அணு ஆபத்தில்லாத நாடாகக் கொண்டு வர வேண்டியது நமது கடமை என்பதால் உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய வர்த்தக ரீதியிலான அதிவேக ஈணுலைத் திட்டத்தை மறுபரிசீலனை செய்து கைவிட வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் ரூ. 5,600 கோடி மதிப்பீட்டில் அதிவேக ஈணுலை இரண்டு 500 மெகா வாட் உற்பத்தியை எதிர்வரும் 2012-இல் செயல்பாட்டுக்கு வரும் என்று இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் பால்தேவ் அவர்களும், சுபாஸ் சந்திரஷேதல் அவர்களும் கூட்டாக இணைந்து கடந்த ஏப்ரல் 30 சனிக்கிழமை அன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்துக் கூறியுள்ளனர்.

இதில் மிகுந்த அதிர்ச்சியையும் மன வேதனையையும் அளிக்கும் வகையில் அதே குறுகிய நிலப்பரப்பில் வர்த்தக ரீதியில் தலா 500 மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட இந்திய அதிவேக ஈணுலை இரண்டு அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

கல்பாக்கத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அணு உலைகள் பூமிக்கு அடியில் 185 அடி ஆழத்தில் கட்டப்பட்டுள்ளன என்றும் விபத்து ஏற்பட்டால் பூமிக்கு அடியிலேயே புதைந்து போய்விடும் என்றும் துவக்கத்தில் சொன்னவர்கள், இன்று கல்பாக்கம் அணுமின் நிலையம் கடல் மட்டத்திலிருந்து இரண்டரை மீட்டர் உயரத்தில் உள்ளதாகவும், அதிவேக ஈணுலை (பாவினி) நான்கரை மீட்டர் உயரத்தில் உள்ளதாகவும் சொல்லி இருப்பது முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. ஜப்பானின் புகுஷிமா கடல் மட்டத்திலிருந்து இதைவிட அதிக உயரத்திலும் தூரத்திலும் இருந்தும் பாதிப்பைத் தவிர்க்க முடியவில்லை.

நமது நாட்டின் மொத்த மின் தேவையில் அணுசக்தியின் மூலம் ரூ 3 மட்டுமே கிடைக்கின்றது. ஆனால், இதன் மூலம் வரும் ஆபத்து என்றால் ஒட்டுமொத்த இந்தியாவே பாதிப்புக்கு உள்ளாகும்.

காரணம், மின் உற்பத்தியின்போது அணுக்களை மோதவிட்டு அதன்மூலம் மின் விசையைப் பெறும்போது சுற்றுப்புறச் சூழல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறது. குறிப்பாக, காற்றில் புளுட்டோனியம், அயோடின், சிசியம், ஸ்ட்ரான்ஷியம், ருத்தினியம் போன்றவை அதிகப்படியாகக் கலந்திருப்பதால் புற்றுநோய் போன்ற குணப்படுத்தப்பட முடியாத கொடிய நோய்கள் உருவாகும்.

கதிர்வீச்சைப் பொறுத்த வரை பாதுகாப்பான அளவு என ஒன்று இல்லை.

இதுவரை கல்பாக்கம் அணு உலையின் மின் உற்பத்திக் கலன்களைக் குளிர் விப்பதற்குக் கடல்நீரைப் பயன்படுத்தி மறுசுழற்சி மூலம் கடலில் விட்டு வந்ததால் கடல் வளம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

கல்பாக்கம், கூடங்குளம் புதிய அணு உலைகளின் தொழில்நுட்பம் தண்ணீருக்குப் பதிலாக எளிதில் தீப்பற்றக் கூடிய சோடியத்தைப் பயன்படுத்துவதாக இருப்பது கடலில் எப்போதாவதுதான் ஆழிப் பேரலை சுனாமி வந்து ஆபத்தை உருவாக்கும்; ஆனால், சோடியம் எப்போதும் எரிந்து ஆபத்தை உருவாக்கக் கூடியது என்பதை மறுக்க முடியாது.

அதிலும் ஜப்பானின் புகுஷியா அணு உலைகள் அருகருகே இருந்ததாலும் ஒன்றில் பாதிப்பு ஏற்பட்ட உடனேயே மற்றதிலும் வெகு சீக்கிரத்தில் ஆபத்து உருவாகி உலகத்தையே அச்சத்தில் ஆழ்த்தியது. எனவே, இதிலிருந்து நாம் படிப்பினை பெறவில்லை என்றால்

நம்முடைய தலையில் நாமே எரியும் கொள்ளிக் கட்டையை வைத்துக் கொள்வது போலாகும்.

எனவே, கல்பாக்கத்தில் சிறிய நிலப்பரப்பில் எற்கனவே பல அணு உலைகள் அருகருகே இருக்கும்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அணு உலைகளை அமைப்பது நாட்டின் பாதுகாப்புக்குப் பெரும் அபாயத்தை விளைவிக்கும். புதிதாக வர்த்தக ரீதியில் அதிவேக ஈணுலைத் திட்டத்தை மறுபரிசீலனை செய்து கைவிட வேண்டும். இருக்கின்ற அணு உலைகளை ஆபத்தில்லாததாகத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.

வட இந்தியாவில், மகாராஷ்டிரா மாநிலத்தில், சட்ட மாமேதை அம்பேத்கர் பிறந்த ரத்தினகிரி மாவட்டம், ஜெய்தாபூரில் ஆபத்தை விளைவிக்கக் கூடிய அணு உலையை எதிர்த்துப் போராடி காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகித் தொடர்ந்து அவர்கள் போராடிக் கொண்டு உள்ளனர்.

எனவே, வர்த்தக ரீதியில் தயாரிக்கப்படப் போகும் அதிவேக ஈணுலை மின்சாரம் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த சர்வதேசப் போர்க் குற்றவாளி கூண்டில் நிற்கும் இலங்கைக்கு விற்கப்படக் கூடும். எனவே, நம்மை அழித்து உரமாக்கித் தயாரிக்கப்படும் மின்சாரம் தமிழக மக்களுக்குப் பயன் பெறாமல், நமக்குத் தண்ணீர் தர மறுக்கும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களுக்குப் பயனையும், நமக்குக் கதிர்வீச்சு நோயினையும் தந்திடுமேயானால் தமிழகத்தில் உள்ள அனைத்து ஜனநாயக அமைப்புகளும் விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் இதை எதிர்த்துப் போராட வேண்டும் என வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

2ஜி வழக்கில் தன்னை சுலபமாக வீழ்த்திவிடலாம் என யாரும் நினைக்க வேண்டாம் தவறு செய்யவில்லை என நிரூபிப்பேன் : கனிமொழி.2ஜி ஊழல் வழக்கை சட்டரீதியாக சந்தித்து தவறு செய்யவில்லை என நிரூபிப்பேன் என்று திமுக எம்பி கனிமொழி கூறினார்.

இது மிக, மிக கடுமையான குற்றச்சாட்டு. இதில் இருந்து வெளியில் வருவோம். தவறு செய்யவில்லை என நிரூபித்து இந்த வழக்கில் இருந்து வெளியில் வருவேன் என கனிமொழி தெரிவித்தார்.

சட்டரீதியாக அந்த வழக்கை எதிர்ப்போம். நானும் கூட்டு சேர்ந்து சதிசெய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது தொடர்பாக கூறுவதற்கு ஒன்றுமில்லை. சட்டரீதியாக அதை எதிர்ப்போம் என கனிமொழி தெரிவித்தார்.

இந்திய நீதி அமைப்பில் நம்பிக்கை உள்ளது. நீதிமன்றம் என்ன முடிவுசெய்தாலும் அதை ஏற்றுக்கொள்வேன் என்றார் அவர்.

இந்த விவகாரத்தால் திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் எதுவும் இல்லை என அவர் மறுத்தார். இந்த விவகாரத்தால் எனது குடும்பம் பிளவுபடவில்லை. திமுகவும், அதன் தலைவர் கருணாநிதியும் என்ன முடிவு எடுத்தாலும் அதன்பக்கம் எனது குடும்பத்தினர் இருப்பார்கள் என்றார் அவர்.

முன்ஜாமீன் கேட்க மாட்டேன் : இதனிடையே சிஎன்என்-ஐபிஎன் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் சிபிஐ தன்னை கைது செய்ய விரும்பினால் அதை சட்டரீதியாக எதிர்த்துப் போராடவிருப்பதாகவும், முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்ய மாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் தன்னை சுலபமாக வீழ்த்திவிடலாம் என யாரும் நினைக்க வேண்டாம் என அவர் குறிப்பிட்டார்.

மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் : பாகிஸ்தான்.


தங்கள் மண்ணில் எந்த நாடாவது தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் ராணுவத்திடமிருந்து மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அந்நாட்டின் வெளியுறவுச் செயலர் சல்மான் பஷீர் எச்சரிக்கை விடுத்தார்.

தவறாக கணக்கு போட்டால் பேரழிவு ஏற்படும். தன்னை பாதுகாத்துக் கொள்ள போதுமான தகுதி பாகிஸ்தானிடம் உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை என பஷீர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தானின் அபோட்டாபாதில் அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தி பின்லேடனைக் கொன்றன. இது பாகிஸ்தான் நிர்வாகத்துக்கு தெரியாமல் நடந்ததாகக் கூறப்படுகிறது. அந்த சம்பவம் நடந்து 3 தினங்களுக்குப் பின் சல்மான் பஷீர் இதுகுறித்து பேசினார்.

ஐஎஸ்ஐயோ, அரசு அமைப்புக்குள் உள்ள சக்திகளோ அல் காய்தாவுடன் சேர்ந்து செயல்பட்டது என்று சொல்வது சுலபம். இது தவறான கருத்து. தவறான குற்றச்சாட்டு. இதை எந்தநிலையிலும் உறுதிப்படுத்த முடியாது என பஷீர் குறிப்பிட்டார்.

இன்னும் 50 ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை 170 கோடியாக உயரும்.

50 ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை 170 கோடியாக உயரும்

உலக மக்கள் தொகை பற்றிய ஆய்வு ஒன்றை ஐ.நா சபை வெளியிட்டிருக்கிறது. அதில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் மக்கள் தொகை அடுத்த 50 ஆண்டுகளில், அதாவது 2060-ம் ஆண்டு 170 கோடியைத் தாண்டும். 2030-ம் ஆண்டு, இந்திய ஜனத்தொகை உலக நாடுகளிலேயே அதிகமாக இருக்கும். பின்னர் மக்கள் தொகை விகிதம் படிப்படியாக குறைய வாய்ப்பு இருக்கிறது.

ஆனாலும் 2060-ம் ஆண்டு, இந்திய மக்கள் தொகை 170 கோடி இருக்கும். 2025-ம் ஆண்டு சீனாவின் மக்கள் தொகை 140 கோடியைத்தொடும். இந்த நூற்றாண்டின் மத்தியில் உலக ஜனத்தொகை 930-ம் கோடியாக இருக்கும்.

2100-ம் ஆண்டு இது 1000 கோடியைத் தாண்டும். இந்த வருடம் அக்டோபர் 31-ம் தேதி பிறக்கும் முதல் குழந்தை, உலக மக்கள் தொகையின் 700-வது கோடி ஆளாக கணக்கிடப்படுவார். இவ்வாறு அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உயிருடன் பிடித்த பிறகே என் தந்தையை சுட்டு கொன்றனர் ; பின்லேடனின் 12 வயது மகள் தகவல்.

உயிருடன் பிடித்த பிறகே என்  தந்தையை சுட்டு கொன்றனர்;  பின்லேடனின் 12 வயது மகள் தகவல்

பாகிஸ்தானில் அபோதா பாத் நகரில் பதுங்கி இருந்த பின்லேடனை கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு சுட்டுக்கொன்றனர். பின்லேடனுடன் அவரது மகன் காலித் மற்றும் மகள் உள்பட 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களில் 3 ஆண்கள் யார் என்று இது வரை அடையாளம் காணப்படவில்லை.

இதற்கிடையே பின்லேடன் கொல்லப்பட்டது தொடர்பாக அரேபிய தொலைக்காட்சிகள் பல பரபரப்பு தகவல்களை வெளியிட்டப்படி உள்ளன. நேற்று பின்லேடனின் 12 வயது மகள் தெரிவித்ததாக ஒரு தகவலை அரேபிய தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

அமெரிக்க கமாண்டோ வீரர்கள் பின்லேடனை உயிருடன் பிடித்ததாகவும், அதன் பிறகு சில நிமிடங்கள் கழித்தே சுட்டுக் கொன்றதாகவும் தெரிய வந்துள்ளது. தன் கண் எதிரில் தனது தந்தையை அமெரிக்கர்கள் சுட்டுக் கொன்றதாக அவர் கூறி உள்ளாள்.

பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டபோது, பங்களாவின் மற்ற அறைகளில் 12 பெண்கள் இருந்தனர். அவர்களை அமெரிக்கர்கள் எதுவும் செய்யவில்லை என்று பின்லேடன் மகள் கூறி உள்ளார். பின்லேடன் மகள் கொடுத்துள்ள இந்த வாக்கு மூலம் காரணமாக பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டது முழுமையாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

வெள்ளோடு சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள்.


ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் 200 ஏக்கர் பரப்பளவு கொண்டது. வெளிநாட்டு பறவைகள் அக்டோபரில் வந்து முட்டையிட்டு குஞ்சு பொறித்து மார்ச்சில் சொந்த நாடுகளுக்குச் சென்று விடும்.

கொசு உள்ளான், கூழக் கடா, நெடுங்கால் உள்ளான், வண்ண நாரை, வெள்ளை அரிவாள்மூக் கன் போன்ற வெளிநாட்டு பறவைகள் வந்து, மீண்டும் திரும்பிச் சென்று விடுகின்றன.

கடந்த 10 ஆண்டுகளில் 93 வகைகளை சேர்ந்த 31 ஆயிரம் வெளிநாட்டு பறவைகள் மீண்டும் திரும்பிச் செல்லாமல் இங்கேயே தங்கி விட்டன. பாம்புதாரா, நீர் காகம், பெரிய நீர்காகம், உண்ணி கொக்கு, நீளவால் இலைக் கோழி, நாமக்கோழி, சிவப்பு மூக்கு ஆள்காட்டி மற்றும் பல்வேறு வகை சிட்டுக்குருவி ரக பறவைகள் தான் இங்கேயே நிரந்தரமாக தங்கி இருக்கின்றன.

நீர் காகம், கொக்கு வகைகள் காலையில் கிளம்பிச் சென்று மாலையில் மீண்டும் அங்கு வந்து விடுகின்றன. ராக்கொக்கு பறவைகள் மாலையில் வெளியேறி அதிகாலை சரணாலயம் திரும்புகிறது. பறவைகளை காண விரும்பும் சுற்றுலா பயணிகள் காலை 6 மணிக்கு அல்லது மாலை 5 மணியில் இருந்து 6.30க்குள் வந்தால் அனைத்து வகை பறவைகளையும் பார்க்க முடியும்.

பறவைகளை காண வனத்துறை சார்பில் தொலைநோக்கி கருவி, பார்வையாளர் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் ஏராளமான சிறுவர் சிறுமிகள் பெற்றோருடன் வந்து செல்கின்றனர். அவர்கள் பகல் நேரத்தில் வருவதால் அரியவகை பறவைகளை காண வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது. மாலை நேரத்தில் 6.30 வரை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப் படுகின்றனர்.

சுற்றிலும் ஆயிரக்கணக்கான மரங்கள் நடப்பட்டுள்ளதால் தற்போது சரணாலயம் மரங்கள் பூத்து குலுங்கும் சோலையாகக் காட்சி தருகிறது.

அமெரிக்க ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட ஒசாமா ! இதுவரை வெளிவராத படம் !

நக்கீரன் வெளியிட்ட படம்.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்திக் கொன்றது. கொல்லப்பட்ட ஒசாமாவின் புகைப்படத்தை வெளியிடுவதில்லை என அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

எனினும், கொல்லப்பட்டது ஒசாமாதான் என்பதை ராணுவத்தின் அடையாளம் காணும் புகைப்படம் இங்கே வெளியிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதா, ஸ்டாலின், விஜயகாந்த் மீது நடவடிக்கை இல்லை!தமிழக சட்டபை தேர்தல் பிரச்சாரத்தின்போது தலைவர்கள் ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்தனர்.

இந்த பிரசாரத்தின்போது, “அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆகியோர் முதலமைச்சர் கருணாநிதியையும் அவரது குடும்பத்தினரையும் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்கிறார்கள். எனவே அவர்கள் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தி.மு.க. சார்பில் தேர்தல் கமிஷனிடம் புகார் செய்யப்பட்டது.

தி.மு.க. தேர்தல் குழு உறுப்பினர்கள் பொன். முத்துராமலிங்கம், ராதாகிருஷ்ணன் ஆகியோர் இந்த புகார் மனுவை கொடுத்தனர்.

இதுபோல், “துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரத்தின்போது அ.தி. மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று மனோஜ்பாண்டியன் எம்.பி. தேர்தல் கமிஷனிடம் புகார் செய்தார்.

பேச்சு குறித்து விளக்கம் அளிக்கக்கோரி மு.க. ஸ்டாலின், ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது.

இதையடுத்து, 3 பேரும் தேர்தல் கமிஷனுக்கு விளக்க கடிதம் அனுப்பினார்கள். அதில், “அரசியல் தொடர்பாகவே பேசியதாகவும், தனிப்பட்ட வாழ்க்கை பற்றி விமர்சிக்கவில்லை” என்றும் கூறி இருந்தனர். இந்த விளக்க கடிதங்கள் மத்திய தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மத்திய தேர்தல் கமிஷனர் குரேசி, தேர்தல் அதிகாரிகள் சம்பத், பிரம்மா ஆகியோர் 3 தலைவர்களும் அளித்துள்ள விளக்க கடிதங்களை ஆய்வு செய்தனர். பின்னர் அந்த விளக்கங்களை ஏற்றுக் கொண்டனர்.

அதை தொடர்ந்து, ஜெயலலிதா, மு.க. ஸ்டாலின், விஜயகாந்த் ஆகியோர் மீது கூறப்பட்ட தனிப்பட்ட விமர்சன புகார் தொடர்பாக மேல் நடவடிக்கை எடுப்பது இல்லை என்று முடிவு செய்தனர்.


தேர்தல் விதிமுறை மீறல் வழக்கில் நடிகை குஷ்புவுக்கு தேனி போலீசார் சம்மன்/


தேனி மாவட்டத்தில் மட்டும் தேர்தல் விதிமுறையை மீறியதாக 260 வழக்குகள் பதிவு செய் யப்பட்டுள்ளது. இதில் 210 வழக்குகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 40 வழக்குகள் விசாரணையில் உள்ளது. மீதமுள்ள 10 வழக்குகளுக்கு தண்டணை பெறப்பட்டு முடிவுக்கு வந்துள்ளது.

பதிவு செய்யப்பட்ட தேர்தல் வழக்குகள் அனைத்தும் போலீஸ் நிலைய ஜாமீனில் வெளிவரக்கூடியவை என்பதால் கைது செய்து ஜாமீனில் போலீசார் விட்டுள்ளனர்.

நடிகை குஷ்பு தேனி மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டபோது பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாகவும், தேர்தல் விதிமுறையை மீறியதாகவும் பழனிசெட்டிபட்டி மற்றும் ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையங்களில் வழக்குபதிவு செய்யப்பட்டது.

குஷ்பு வெளியூரை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு தேனி மாவட்ட போலீசார் சம்மன் அனுப்பி அவரை விசாரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே நடிகை குஷ்பு தேனி போலீஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் தபால் ஓட்டுக்கான வாக்குச்சீட்டுகளின் எண்ணிக்கை 2.11 லட்சம் ; தேர்தல் கமிஷன் அறிவிப்பு.

தமிழகத்தில் தபால் ஓட்டுக்கான வாக்குச்சீட்டுகளின் எண்ணிக்கை 2.11 லட்சம்; தேர்தல் கமிஷன் அறிவிப்பு

தமிழகத்தில் தபால் ஓட்டுகளுக்காக 2 லட்சத்து 11 ஆயிரத்து 580 வாக்குச்சீட்டுகளை தேர்தல் கமிஷன் அனுமதித்துள்ளது.

தமிழகத்தில் தபால் ஓட்டுக்கான வாக்குச்சீட்டுகளை `சர்வீஸ்' வாக்காளர்கள், `நான்-சர்வீஸ்' வாக்காளர்கள் மற்றும் தடுப்புக்காவல் கைதிகள் ஆகியோருக்கு தேர்தல் கமிஷன் அனுமதித்துள்ளது.

தேர்தல் கமிஷன் அளித்துள்ள வாக்குச்சீட்டுகளின் எண்ணிக்கையின் (மாவட்ட வாரியான) விபரம் வருமாறு:-

திருவள்ளூர் மாவட்டம்-7,455 வாக்குச்சீட்டுகள், சென்னை-6,453, காஞ்சீபுரம்-5,236, வேலூர்-18 ஆயிரத்து 941, கிருஷ்ணகிரி-7,286, தர்மபுரி-4,870, திருவண்ணாமலை-10ஆயிரத்து 674, விழுப்புரம்-10ஆயிரத்து 146, சேலம்-9,383, நாமக்கல்-5,548, ஈரோடு-4,855, நீலகிரி-3,400, கோவை-6,630, திண்டுக்கல்-7,025, கரூர்-3,276, திருச்சி-7,464 பெரம்பலூர்-2,011, கடலூர்-6,485, நாகை-4,927, திருவாரூர்-4,195, தஞ்சாவூர்-7,457, புதுக்கோட்டை-4,424, சிவகங்கை-4,164, மதுரை-12 ஆயிரத்து 176, தேனி-7,453, விருதுநகர்-2,438, ராமநாதபுரம்-3,988, தூத்துக்குடி-5,558, நெல்லை-10 ஆயிரத்து 114, கன்னியாகுமரி-10ஆயிரத்து 512, அரியலூர்-2,359, திருப்பூர்-4,675.

தடுப்புக் காவல் கைதிகள் 51 பேருக்கு தபால் ஓட்டுக்கான வாக்குச்சீட்டுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம் தமிழகத்துக்கு தபால் ஓட்டுக்காக 2 லட்சத்து 11 ஆயிரத்து 580 வாக்குச்சீட்டுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

மு.க.அழகிரி மீதான வழக்கை போலீசார் விசாரிக்க இடைக்கால தடை ; மதுரை ஐகோர்ட்டு.

மு.க.அழகிரி மீதான வழக்கை போலீசார் விசாரிக்க இடைக்கால தடை; மதுரை ஐகோர்ட்டு

நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் நேரத்தில் மத்திய மந்திரி மு.க.அழகிரி கட்சி நிர்வாகிகளுடன் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி மேலூர் அம்பலக்காரன்பட்டியில் உள்ள வல்லடிக்காரர் கோவிலுக்கு வந்தார்.

அப்போது தாசில்தாராக இருந்த காளிமுத்துவுடன் வந்த தேர்தல் வீடியோகிராபர் கண்ணன் படம் எடுக்க முயன்றார். இதைப் பார்த்ததும் படம் எடுக்கக்கூடாது என்று கூறி தி.மு.க.வினர் வீடியோகிராபரிடம் இருந்து கேமராவை பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தாசில்தார் கொடுத்த புகாரின் பேரில் மு.க.அழகிரி, துணை மேயர் பி.எம்.மன்னன், மேலூர் ஒன்றிய செயலாளர் ரகுபதி, ஒத்தப்பட்டி திருஞானம் ஆகியோர் மீது கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அதன்பின்பு கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரின் நிர்ப்பந்தம் காரணமாக மு.க.அழகிரி மீது புகார் கொடுத்ததாகவும், ஏற்கனவே புகாரில் கூறி உள்ளது போன்று சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்றும் காளிமுத்து தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பினார். அதன்பின்பு காளிமுத்து சஸ்பெண்டு செய்யப்பட்டார். இந்த நிலையில் காளிமுத்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

"கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரின் நிர்ப்பந்தம் காரணமாகமே மு.க.அழகிரி மீது புகார் கொடுத்தேன். நான் கொடுத்த புகாரில் எந்த உண்மையும் இல்லை. இதுகுறித்து தேர்தல் ஆணையம், தலைமை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி ஆகியோருக்கு மனு அனுப்பினேன். இந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், என்னை சிலர் மிரட்டியதால் புகாரை வாபஸ் வாங்கினேன் என்று 22.4.2011 அன்று போலீசார் பொய் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் தங்கள் மீதான எப்.ஐ.ஆரை ரத்து செய்யும்படி மு.க.அழகிரி உள்ளிட்டோர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருப்பதை அறிந்தேன். அப்போது என்னையும் அந்த வழக்கில் சேர்த்து விசாரிக்கும்படி மனு தாக்கல் செய்தேன். மு.க.அழகிரி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது, புகாரில் உண்மை இல்லை என்றால் புகார் தவறு என்று கூறி போலீசாரே வழக்கை முடித்துக்கொள்ளலாம் என்று ஐகோர்ட்டு தெரிவித்தது.

ஆனால் கீழவளவு போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்த வழக்கை திறந்த மனதுடன் விசாரிக்க விரும்பவில்லை. அவர் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார். தொடர்ந்து அவர் இந்த வழக்கை விசாரித்தால், விசாரணை உண்மையான கோணத்தில் செல்லாது. போலீஸ் சூப்பிரண்டு தனது செல்வாக்கை இந்த வழக்கில் பயன்படுத்த முயல்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டர் தன் உயர் அதிகாரிகளுக்கு பயந்து செயல்படுவது போல் உள்ளது. மதுரையில் இருக்கும் போலீஸ் படை தவறாக பயன்படுத்தப்படுகிறது.

எனவே இந்த வழக்கை மதுரை மாவட்டத்தை தவிர வேறு மாவட்டத்தை சேர்ந்த நடுநிலையோடு செயல்படும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மூலம் விசாரிக்க உத்தரவிட வேண்டும். இந்த மனு நிலுவையில் இருக்கும் வரை, அந்த வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.'' இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி துரைச்சாமி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் சீனிவாசனும், அரசு தரப்பில் வக்கீல் இளங்கோவும் ஆஜராகி வாதாடினர். மனுவை விசாரித்த நீதிபதி, மு.க.அழகிரி மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தார்.

மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக தமிழக அரசின் தலைமை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி, மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, கீழவளவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் வருகிற 19-ந் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். பின்னர் விசாரணையை வருகிற 19-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

ஊழல் ஒழிப்பு, கறுப்பு பணத்தை மீட்க வலியுறுத்தி பாபா ராம்தேவ் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம்.

ஊழல் ஒழிப்பு, கறுப்பு பணத்தை மீட்க வலியுறுத்தி பாபா ராம்தேவ் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம்

பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், இந்தியாவில் மக்கள் வரியாக செலுத்தும் பணத்தை ஊழல்வாதிகள் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துவிட்டது.

எனவே ஊழலை ஒழிக்க வேண்டும், வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்பு பணத்தை மீட்டு கொண்டு வர வேண்டும்.

கறுப்பு பணத்தை வைத்திருப்போர் மீது தேச துரோக வழக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற 3 கோரிக்கைகளை முன் வைத்து, வரும் ஜுன் மாதம் 4-ந் தேதி முதல் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நான் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்.

எங்களுடைய இந்த 3 கோரிக்கைகளை வலியுறுத்தி இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, மொரீஷியஸ் உள்ளிட்ட பல நாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றார்.