Thursday, May 5, 2011

வைகோ வலியுறுத்தல் : அதிவேக ஈணுலை திட்டத்தை கைவிட வேண்டும்.


கடந்தகால அனுபவங்களைப் படிப்பினையாகக் கொண்டு எதிர்காலத்தை அணு ஆபத்தில்லாத நாடாகக் கொண்டு வர வேண்டியது நமது கடமை என்பதால் உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய வர்த்தக ரீதியிலான அதிவேக ஈணுலைத் திட்டத்தை மறுபரிசீலனை செய்து கைவிட வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் ரூ. 5,600 கோடி மதிப்பீட்டில் அதிவேக ஈணுலை இரண்டு 500 மெகா வாட் உற்பத்தியை எதிர்வரும் 2012-இல் செயல்பாட்டுக்கு வரும் என்று இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் பால்தேவ் அவர்களும், சுபாஸ் சந்திரஷேதல் அவர்களும் கூட்டாக இணைந்து கடந்த ஏப்ரல் 30 சனிக்கிழமை அன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்துக் கூறியுள்ளனர்.

இதில் மிகுந்த அதிர்ச்சியையும் மன வேதனையையும் அளிக்கும் வகையில் அதே குறுகிய நிலப்பரப்பில் வர்த்தக ரீதியில் தலா 500 மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட இந்திய அதிவேக ஈணுலை இரண்டு அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

கல்பாக்கத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அணு உலைகள் பூமிக்கு அடியில் 185 அடி ஆழத்தில் கட்டப்பட்டுள்ளன என்றும் விபத்து ஏற்பட்டால் பூமிக்கு அடியிலேயே புதைந்து போய்விடும் என்றும் துவக்கத்தில் சொன்னவர்கள், இன்று கல்பாக்கம் அணுமின் நிலையம் கடல் மட்டத்திலிருந்து இரண்டரை மீட்டர் உயரத்தில் உள்ளதாகவும், அதிவேக ஈணுலை (பாவினி) நான்கரை மீட்டர் உயரத்தில் உள்ளதாகவும் சொல்லி இருப்பது முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. ஜப்பானின் புகுஷிமா கடல் மட்டத்திலிருந்து இதைவிட அதிக உயரத்திலும் தூரத்திலும் இருந்தும் பாதிப்பைத் தவிர்க்க முடியவில்லை.

நமது நாட்டின் மொத்த மின் தேவையில் அணுசக்தியின் மூலம் ரூ 3 மட்டுமே கிடைக்கின்றது. ஆனால், இதன் மூலம் வரும் ஆபத்து என்றால் ஒட்டுமொத்த இந்தியாவே பாதிப்புக்கு உள்ளாகும்.

காரணம், மின் உற்பத்தியின்போது அணுக்களை மோதவிட்டு அதன்மூலம் மின் விசையைப் பெறும்போது சுற்றுப்புறச் சூழல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறது. குறிப்பாக, காற்றில் புளுட்டோனியம், அயோடின், சிசியம், ஸ்ட்ரான்ஷியம், ருத்தினியம் போன்றவை அதிகப்படியாகக் கலந்திருப்பதால் புற்றுநோய் போன்ற குணப்படுத்தப்பட முடியாத கொடிய நோய்கள் உருவாகும்.

கதிர்வீச்சைப் பொறுத்த வரை பாதுகாப்பான அளவு என ஒன்று இல்லை.

இதுவரை கல்பாக்கம் அணு உலையின் மின் உற்பத்திக் கலன்களைக் குளிர் விப்பதற்குக் கடல்நீரைப் பயன்படுத்தி மறுசுழற்சி மூலம் கடலில் விட்டு வந்ததால் கடல் வளம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

கல்பாக்கம், கூடங்குளம் புதிய அணு உலைகளின் தொழில்நுட்பம் தண்ணீருக்குப் பதிலாக எளிதில் தீப்பற்றக் கூடிய சோடியத்தைப் பயன்படுத்துவதாக இருப்பது கடலில் எப்போதாவதுதான் ஆழிப் பேரலை சுனாமி வந்து ஆபத்தை உருவாக்கும்; ஆனால், சோடியம் எப்போதும் எரிந்து ஆபத்தை உருவாக்கக் கூடியது என்பதை மறுக்க முடியாது.

அதிலும் ஜப்பானின் புகுஷியா அணு உலைகள் அருகருகே இருந்ததாலும் ஒன்றில் பாதிப்பு ஏற்பட்ட உடனேயே மற்றதிலும் வெகு சீக்கிரத்தில் ஆபத்து உருவாகி உலகத்தையே அச்சத்தில் ஆழ்த்தியது. எனவே, இதிலிருந்து நாம் படிப்பினை பெறவில்லை என்றால்

நம்முடைய தலையில் நாமே எரியும் கொள்ளிக் கட்டையை வைத்துக் கொள்வது போலாகும்.

எனவே, கல்பாக்கத்தில் சிறிய நிலப்பரப்பில் எற்கனவே பல அணு உலைகள் அருகருகே இருக்கும்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அணு உலைகளை அமைப்பது நாட்டின் பாதுகாப்புக்குப் பெரும் அபாயத்தை விளைவிக்கும். புதிதாக வர்த்தக ரீதியில் அதிவேக ஈணுலைத் திட்டத்தை மறுபரிசீலனை செய்து கைவிட வேண்டும். இருக்கின்ற அணு உலைகளை ஆபத்தில்லாததாகத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.

வட இந்தியாவில், மகாராஷ்டிரா மாநிலத்தில், சட்ட மாமேதை அம்பேத்கர் பிறந்த ரத்தினகிரி மாவட்டம், ஜெய்தாபூரில் ஆபத்தை விளைவிக்கக் கூடிய அணு உலையை எதிர்த்துப் போராடி காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகித் தொடர்ந்து அவர்கள் போராடிக் கொண்டு உள்ளனர்.

எனவே, வர்த்தக ரீதியில் தயாரிக்கப்படப் போகும் அதிவேக ஈணுலை மின்சாரம் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த சர்வதேசப் போர்க் குற்றவாளி கூண்டில் நிற்கும் இலங்கைக்கு விற்கப்படக் கூடும். எனவே, நம்மை அழித்து உரமாக்கித் தயாரிக்கப்படும் மின்சாரம் தமிழக மக்களுக்குப் பயன் பெறாமல், நமக்குத் தண்ணீர் தர மறுக்கும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களுக்குப் பயனையும், நமக்குக் கதிர்வீச்சு நோயினையும் தந்திடுமேயானால் தமிழகத்தில் உள்ள அனைத்து ஜனநாயக அமைப்புகளும் விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் இதை எதிர்த்துப் போராட வேண்டும் என வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments: