Sunday, March 27, 2011

தங்கபாலுவை கைது செய்ய தேர்தல் ஆணையத்திடம் மனு.

கிருஷ்ணகிரி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஹசீனா சயத்திடம் ரூ. 50 லட்சம் பணம் வாங்கிக் கொண்டு, அவருக்கு ஆதரவாக நடந்து கொண்டு, அவருக்கு மாற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மக்பூல் ஜானை வேட்பு மனு தாக்கல் செய்யாமல் தடுத்து, அவருக்கு ரூ. 10 லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளார் தங்கபாலு. எனவே அவரைக் கைது செய்ய வேண்டும் என்று கோரி தேர்தல் ஆணையத்திற்குப் புகார் அனுப்பியுள்ளார் காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் சாந்தி என்பவர்.

திமுகவிடம் ஓரணியாக நின்று 63 தொகுதிகளைப் போராடி வாங்கி விட்ட காங்கிரஸ் கட்சியினர் இன்று சாக்கடை சண்டையில் குதித்துள்ளனர். கோஷ்டிகளின் குத்து வெட்டில் சிக்கி காங்கிரஸ் கட்சியின் மேலிடம் திகைத்துப் போய் நிற்கிறது.

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் ஒன்று கிருஷ்ணகிரி. கிருஷ்ணகிரி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஹசீனா சையத்துக்கு தொகுதியில் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டதை தொடர்ந்து சோனியா உத்தரவுப்படி கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளர் மாற்றப்பட்டு புதிய வேட்பாளராக மக்பூல் ஜான் அறிவிக்கப்பட்டார்.

வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளான நேற்று பிற்பகல் 3 மணி வரை கிருஷ்ணகிரி வேட்பாளர் மக்பூல் ஜான் வேட்பு மனு தாக்கல் செய்ய வரவில்லை. இதனால் காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் பழைய வேட்பாளர் ஹசீனா சையத்தும் மற்றும் சில காங்கிரசாரும் ஏற்கனவே மனு தாக்கல் செய்து விட்டனர். அதிகாரப்பூர்வ வேட்பாளர் மக்பூல் ஜான் எங்கே சென்றார்? அவர் கடத்தப்பட்டதாரா? என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி 155வது வட்ட காங்கிரஸ் கவுன்சிலர் சாந்தி இன்று காலை சென்னையில் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமாரைச் சந்தித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ.தங்கபாலுவை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மனு கொடுத்தார். அதில்,

கிருஷ்ணகிரி தொகுதிக்கு முதலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் ஹசீனா சையத். இரண்டாவதாக வெளியிட்ட பட்டியலில் இவருக்கு பதிலாக மகபூல் ஜான் என்பவரை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவித்தார்.

வேட்பு மனு தாக்கல் செய்யக் கடைசி நாளான நேற்று மகபூல்கானை வேட்பு மனு தாக்கல் செய்ய விடாமல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு தடுத்துள்ளார்.

மேலும் அவருக்கு வேண்டப்பட்டவரான ஹசீனா சயத் என்பவரை வேட்பு மனு தாக்கல் செய்ய வைத்துள்ளார். இதற்காக அவரிடம் தங்கபாலு ரூ. 50 லட்சம் பணம் வாங்கிக் கொண்டு இவருக்கு சீட் வாங்கி கொடுத்திருக்கிறார். இந்தப் பணத்தில் 10 லட்ச ரூபாயை மகபூல் ஜானுக்கு தங்கபாலு கொடுத்துள்ளார்.

இவர்கள் மூவரும் சேர்ந்து கட்சித்தலைவர் சோனியா காந்திக்கு துரோகம் செய்துள்ளதுடன், லஞ்ச ஊழலிலும் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் தங்கபாலு லஞ்சம் வாங்கியது தெளிவாக தெரிய வருவதால் தங்கபாலுவையும் மற்றவர்களையும் கைது செய்து சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் இந்த கோஷ்டிக் கலவரம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

வைகோவின் அரசியல் - சில நினைவுகள்.

தமிழ்நாட்டு அரசியலில் வியப்புக்குறியாய் வளர்ந்து இன்று வினாக்குறியாய் நிற்கும் வைகோ எனத் தொண்டர்களால் அன்புடன் அழைக்கப்படும் வையாபுரி கோபாலசாமி,முப்பத்தைந்து, நாற்பது ஆண்டுகளுக்கு முன் தமிழக இளைஞர்களால் ஆராதிக்கப்பட்டவர். திமுகவில் எம்ஜிஆர், கருணாநிதிக்கடுத்து கோபாலசாமியின் கூட்டத்துக்குத்தான் தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டு வருவர். எம்ஜிஆர் திமுகவிலிருந்து விலக்கப்பட்ட பின், 'கலைஞரின் போர்வாள்' எனப் புகழப்பட்டவர் கோபாலசாமி. அவரின் எழுச்சி மிகு உரைகளும் அண்ணாவைப் பின்பற்றி அவர் மேற்கோளிட்டுக் காட்டும் உலக வரலாறுகளும் இளைஞர்களை அவர்பால் ஈர்த்தன. இதை முறையாகப் பயன்படுத்த திமுக மாணவர் அணியின் இணைச்செயலாளராக அவர் நியமிக்கப்பட்டார். மாணவர் அணிச் செயலாளராக எல்ஜி என அழைக்கப்பட்ட எல்.கணேசனும் இணைச் செயலாளர்களுள் ஒருவராக செஞ்சி ராமச்சந்திரனும் இருந்த போதிலும் - எல்ஜி, விஜி, செஞ்சி என அப்போது அழைக்கப்பட்ட மூவரிலும் கோபாலசாமிக்குத்தான் இளைஞர்களிடம் செல்வாக்கு.

இந்திராகாந்தி தமக்கேற்பட்ட அரசியல் நெருக்கடியால் அகில இந்தியாவிலும் நெருக்கடி நிலையை அமுல்படுத்தினார். அப்போது தமிழ்நாட்டில் கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி நடந்துகொண்டிருந்தது.நெருக்கடி நிலைக்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் இந்திராகாந்தி திமுக ஆட்சியைக் கலைத்தார். திமுக தலைவர்களும் முன்னணியினரும் "மிசா"வின்கீழ்க் கைது செய்யப்பட்டனர்.குருவிகுளம் ஒன்றியத் தலைவராக இருந்த கோபாலசாமியும் மிசாவில் கைது செய்யப்பட்டுப் பாளையங்கோட்டைச் சிறையில் இருந்தார்.

திமுகவின் பொறுப்பில் இருந்தோர் பலரும் மிசாவுக்குப் பயந்து கட்சியை விட்டு விலகி, அப்படி விலகியதைப் பத்திரிகைகளிலும் விளம்பரமாகக் கொடுத்தனர். இந்தக் கேவலத்தாலும் நெருக்கடி நிலையில் நடந்த அதிகாரவர்க்க ஆர்ப்பாட்டத்தாலும் கொதித்துப் போய் எங்கள் பகுதி இளைஞர்கள் பலர் திமுகவில் உறுப்பினரானோம். திமுக கொடிக்கரை வேட்டியைக் கட்டிக்கொண்டு வலம் வந்தோம்.கரைவேட்டி பளபளக்கக் கொடிக்கால்பாளையத்திலிருந்து திருவாரூருக்கு மாலை வேளையில் நான் நடந்து சென்றதைப் புனித யாத்திரையாக நினைத்ததுமுண்டு.

நெருக்கடிநிலை தளர்த்தப்பட்டது.தலைவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். மிசாவின் கீழ்ச் சிறையிருந்து மீண்டோர் தம் பெயருக்கு முன்னால் மிசா எனப் போட்டுக் கொள்வதைப் பெரிய கவுரவமாக நினைத்த காலம் அது. கோபாலசாமியும் "மிசா கோபாலசாமி" ஆனார். "மிசா கோபாலசாமி"யை அழைத்து நெல்லையில் எங்கள் கல்லூரியின் முன் தி மு க கொடியேற்றினோம்.பாளையங்கோட்டை உசேன் வீட்டு மொட்டை மாடியில் எல் ஜி , வி ஜி , செஞ்சி மூவரின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி மாணவர் அணியைத் தெரிவு செய்தோம். நெருக்கடி நிலை தளர்த்தப்பட்டாலும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி இல்லை. கல்யாண மண்டபங்களிலும் திரையரங்குகளிலும் கூட்டம் நடத்திய காலம் அது. கருணாநிதியை நெல்லைக்கு அழைத்து வந்து பாப்புலர் திரையரங்கில் மாணவர் அணி சார்பாகப் பிரம்மாண்ட கூட்டம் நடத்தினோம். என்னைவிடப் பதினோராண்டுகள் வயதில் மூத்தவரான, இளைஞர்களின் கதாநாயகன் கோபாலசாமியின் பின்னால் செல்வதில் குதூகலம் கொண்டிருந்தோம்.

1977 ஆம் ஆண்டு சட்டமன்றப் பொதுத் தேர்தல் வந்தது . எம்ஜிஆர் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஆனார். நாற்பதெட்டு இடங்களில் திமுக வெற்றி பெற்றது. சட்டமன்றத்தில் துரைமுருகன், ரகுமான்கான், க.சுப்பு போன்றோர் கலக்கிக் கொண்டிருந்தனர்.திமுக வலிமை குன்றாமல் இருந்தது. அதற்குக் கோபாலசாமியும் ஒரு காரணமாக இருந்தார். அதற்குச் சிறப்புச் செய்ய, திமுக சார்பில், "கலைஞரின் போர்வாள்" ஆக 1978 ஆம் ஆண்டு. நாடாளுமன்ற மேலவைக்கு அனுப்பபட்டார் கோபாலசாமி.

இடையே 1983 ஆம் ஆண்டு ஜூலையில் இலங்கைத் தமிழர்க்கு எதிராக நடந்த கலவரம் தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது. வெலிக்கடைச் சிறையில் , தமிழர் விடுதலை இயக்கத் தலைவர்களான குட்டிமணி, ஜெகன். தங்கத்துரை போன்றோர் கொல்லப்பட்டனர். கட்சி பேதமின்றித் தமிழர்கள் அனைவரும் இலங்கைத் தமிழரை ஆதரித்தனர்.சட்டென உணர்ச்சிவயப்படும் இயல்புடைய கோபாலசாமி மிக ஆழமாக இலங்கைப் பிரச்சனையில் ஒன்றிப் போனார்; விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளரானார்.

எம்ஜிஆர் இறப்பது வரை திமுக மீண்டும் ஆட்சிக்குவர முடியவில்லை. எம்ஜிஆர் அமெரிக்கா புரூக்ளின் மருத்துவமனையில் இருந்தே தேர்தலைச் சந்தித்தபோது இங்கே கருணாநிதி, மக்களிடம், "என்னைத் தண்டித்தது போதாதா... என்னை முதல்வராக்கினால் எம்ஜிஆர் திரும்பி வந்ததும் அவரிடமே ஆட்சியை ஒப்படைப்பேன்" என்று கெஞ்சியதைக் கண்டு வெறுத்து அனைத்து கட்சி./ தலைவர்களின் சார்பு நிலையிலிருந்து விடுதலை பெற்று விருப்பு வெறுப்பின்றி அரசியலை அலசும் நிலைக்கு உயர்ந்து விட்டேன்.எம்ஜிஆரின் மறைவுக்குப் பின் ஜா அணி ஜெ அணி என அஇஅதிமுக பிளவுபட்டதால் திமுக ஆட்சிக்கு வர முடிந்தது. 1976 இல் ஆட்சியைப் பறிகொடுத்த கருணாநிதி பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகே மீண்டும் முதல்வராக முடிந்தது.வாராதுவந்த மாமணிபோல் மீண்டும் ஆட்சி கிடைத்தது எனக் கருணாநிதி மகிழ்ந்திருக்க, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கோபாலசாமி 1989 ஆம் ஆண்டு கள்ளத்தனமாக இலங்கைக்குச் சென்று, தமிழக முதல்வராயிருந்த கருணாநிதிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தினார்.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி E P R L F தலைவர் கே பத்மநாபாவும் அவரது ஆதரவாளர்களும் 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் நாள் சென்னையில் விடுதலைப்புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொலையாளிகள் தப்பிச் செல்ல திமுக அரசு மறைமுகமாக உதவியது என்ற பேச்சு அப்போது எழுந்தது. மத்தியில் ஆட்சி செய்த சந்திரசேகர், உளவுத் துறை தரும் ரகசியத் தகவல்களை தி மு க அரசு விடுதலைப்புலிகளுக்குத் தெரிவித்ததாகக் கூறி 1991 ஜனுவரி 30 ஆம் நாள் திமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்தார்.

விடுதலைப் புலிகள் எம்ஜிஆருக்கே நெருக்கமாக இருந்தனர். அவரிடமிருந்து பெரும் தொகையாகப் பண உதவியும் பெற்றனர். கருணாநிதி சிறீசபாரத்தினம் தலைமையிலான டெலோ இயக்கத்தவரையே ஆதரித்தார். விடுதலைப்புலிகளின் பெயரால் ஆட்சியைப் பறிகொடுத்த நிலையில் , வைகோவுக்காகப் புலிகள் கருணாநிதியைக் கொல்லத் திட்டமிட்டுள்ளனர் என்ற ஒரு செய்தியும் பரவியது. கட்சியில் வைகோவின் இடம் வினாக்குறியானது. ஸ்டாலினின் வளர்ச்சிக்கு வைகோ இடையூறாக இருக்கிறார் என்ற கிசுகிசுக்களும் பரவின.இறுதியாக ,1993 அக்டோபர் மாதம் 11 ஆம் நாள் - நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வைகோ திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அவரது நீக்கத்தைக் கண்டித்து இளைஞர்கள் நால்வர் தீக்குளித்து மாண்டனர். திமுக வில் மீண்டும் ஒரு பூகம்பம் ஏற்பட்டது. திமுகவின் வலிமை வாய்ந்த, கட்சியில் செல்வாக்கு மிக்க மாவட்டச் செயலாளர்கள் ஒன்பது பேர் கட்சியைத் துறந்து வைகோவுடன் இணைந்தனர். கன்னியாகுமரி மாவட்ட ரத்தினராஜ், நெல்லை இலக்குமணன், மதுரை பொன்.முத்துராமலிங்கம், திருச்சி செல்வராஜ், செங்கல்பட்டு ஆறுமுகம் , தென்னாற்காடு,செஞ்சிராமச்சந்திரன் போன்றோருடன் கோவை கண்ணப்பன், எல் கணேசன் போன்றோர் வைகோவுக்கு ஆதரவாகச் சேர்ந்தனர். 1994 ஆம் ஆண்டு மதிமுக வைத் துவக்கினார் வைகோ. அப்போது சென்னை ராயபுரத்தில் மதிமுக வின் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று நடந்தது. "அரசியலில் நேர்மை,பொதுவாழ்வில் தூய்மை, இலட்சியத்தில் உறுதி என்ற முழக்கத்துடன் வைகோவின் கூட்டம் நடக்கிறது; வாருங்கள் போவோம்"என என்னை என் நண்பர் ஒருவர் அழைத்தார். இது போன்ற அறிவிப்புகள் பலவற்றைப் பார்த்துவிட்டேன். இவற்றுக்கு அற்ப ஆயுளே. நான் கூட்டத்திற்கு வரவில்லை என்றேன்.

1999 , 2004 நாடாளுமன்றத் தேர்தல்களில் திமுகவுடன் கூட்டு,2006 சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுகவுடன் கூட்டு என, அவருக்காகத் தீக்குளித்து உயிர் நீத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் வைகோ தாம் கடுமையாக எதிர்த்தவர்களிடமே சரணடைந்தது நான் சொன்னதை மெய்ப்பிப்பதாகவே இருந்தது. பாமக ராமதாஸ் தேர்தலுக்குத் தேர்தல் அணி மாறுவது தமக்கும் தம் கட்சிக்கும் என்ன நன்மை விளையும் என்பதை கணக்குப் போட்டே நடக்கும். ஆனால் வைகோ தமக்கோ தம்மை நம்பி உடன் வந்தவர்களுக்கோ அல்லது கட்சிக்கோ நன்மை விளைவதைக் கணக்குப்போடாமல் உணர்ச்சி வசப்பட்டு முடிவெடுப்பதால் எப்போதும் இழப்புக்கே ஆளாகி நிற்கிறார்.

சான்றுக்கு:- 2001 சட்டமன்றத் தேர்தலில் சங்கரன்கோவில் போன்ற ஒரு சில தொகுதிகளுக்காக திமுகவுடன் மோதல்போக்கைக் கடைபிடித்து திமுக கூட்டணியை விட்டு வெளியேறி ஓரிடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் போனார். அது போலவே 2006 சட்டமன்றத் தேர்தலிலும் ஒரு சில இடங்களுக்கு ஆசைப் பட்டுத் தம்மை 19 மாத காலம் பொடாவில் வேலூர்ச் சிறையில் அடைத்து வழக்கு விசாரணைக்காக ஒவ்வொரு முறையும் போலீஸ்வேனில் சென்னை நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்று அலைக்கழித்ததையும் மறந்து அஇஅதிமுகவுடன் கூட்டணி கண்டார் வைகோ. 6 இடங்களில் வென்ற போதும் அன்புச் சகோதரியின் கூட இருந்ததாலோ என்னவோ ஆரம்ப காலத்தில் தம்முடன் திமுகவில் இருந்து வெளியேறிய மு.கண்ணப்பன் எல் கணேசன், செல்வராஜ்,செஞ்சியார் போன்ற தலைவர்களையும் இழந்தார்.

மதிமுகவை அவர் துவக்கியபோது உடனிருந்தவர்களில் பெரும்பாலோர் இன்று அவருடன் இல்லை. இதோ இப்போது "பகையாளி குடியை உறவாடிக் கெடு " என்ற மந்திரத்தின் அடிப்படையில் அன்புச்சகோதரி எடுத்த நடவடிக்கையில் தேர்தல் களத்திலிருந்தே ஓடி விட்டார். இதற்கெல்லாம் காரணம் அரசியல் ரீதியாகச் சிந்தித்து முடிவுகளை எடுக்காமல் உணர்ச்சி வசப்பட்டு அவர் எடுக்கும் முடிவுகளே. இந்தத் தேர்தல் புறக்கணிப்பு இடைவேளையிலாவது அவர் தம் நிலையை நன்கு மாற்றிக் கொண்டு, "போர்க்குதிரையான மதிமுக மீது மற்றவர்கள் ஏறி சவாரி செய்ய முடியாது. திமுக - அதிமுகவுக்கு மாற்று சக்தியாக உருவாவோம்,'' என, ஈரோட்டில் மதிமுக மாவட்டக் குழுக்கூட்டத்தில் பேசியதை உறுதியுடன் செயல்படுத்திப் பிற கட்சித்தலைவர்களைப்போல அரசியல் தந்திரங்களுடன் தேர்தல் கூட்டணி கண்டால் வருங்காலத்தில் மதிமுக நிலைக்கும்.

நன்றி - inneram.com

அண்ணாவின் ஆவி கூறியதால்தான் அதிமுகவுடன் கூட்டணி: விஜயகாந்த்

பேரறிஞர் அண்ணாவின் ஆவி தன்னிடம் கூறியதால் தான் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம், பொன்னேரி, எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் விஜயகாந்த் பேசுகையில்,

நான் முன்னரே தெரிவித்தது போல மக்களுடனும், தெய்வத்துடனும் தான் கூட்டணி வைத்திருக்கிறேன்.

சிறு வயதில் இருந்தே எனக்கு எம்.ஜி.ஆர் மீது அதிக பற்று உண்டு. அவர் எந்தெந்த படத்தில் என்னென்ன உடையில் வந்தார் என்று கூட என்னால் சொல்ல முடியும். விஜயகாந்த் ஏன் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளார் என்று நீங்கள் நினைக்கலாம்.

பேரறிஞர் அண்ணா மீது கொண்டுள்ள பற்றால் தான் அவர் பெயர் கொண்ட அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளேன். அண்ணாவின் ஆவி கூறியதின்பேரிலேயே அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறேன்.

எழும்பூர் தொகுதியை யார் தனித் தொகுதியாக அறிவிக்கச் சொன்னது. ஜாதி, மத அடிப்படையில் மக்களை பிரிக்கக்கூடாது. உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உடனே ஜாதி பார்த்தா டாக்டரிடம் செல்கிறீர்கள்? பணம் தேவையால் அடக்கு வைக்கச் சென்றால் மதத்தைப் பார்த்தா செல்கிறீர்கள்? ஜாதியைப் பார்க்காதீர்கள், மனிதர்களைப் பாருங்கள்.

தேர்தல் அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கைகள் சந்தோஷம் அளிக்கின்றன. ஆனால் எழும்பூர் தொகுதி இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ஆளுங்கட்சியின் கைகூலியாக இருக்கிறார். இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு நிச்சயமாக கடிதம் எழுதுவேன். தேர்தல் ஆணையும் இன்னும் கெடுபிடியாக இருக்க வேண்டும்.

விஜயகாந்த் பணம் வாங்கிக் கொண்டு தான் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளார் என்று திமுகவினர் கூறுகின்றனர். இது உளவுத் துறையின் தவறான தகவல் ஆகும். நான் பணத்தை மதிப்பவன் அல்ல. கோடிக்கு மயங்கியிருந்தால் நான் மக்களைத் தேடி வந்திருப்பேனா?

கடைக்குப் பொருள் வாங்கச் சென்றால் பார்த்து வாங்குவது போல, தேர்தலில் நல்ல வேட்பாளர்களைத் தேர்வு செய்யுங்கள். நாளைக்கு நல்லது நடக்கும், நடக்காவிட்டால் யாரையும் விடமாட்டேன். என் குணத்தை மாற்ற யாராலும் முடியாது என்றார்.

பிரனாப் முகர்ஜி 50,000கோடி வரி மோசடிக்கு உடந்தையா?

“இங்கு என்ன தான் நடக்கிறது? ஹாசன் அலி வழக்கை விசாரிக்க எடுத்துக் கொண்டபோது, உச்சநீதி மன்ற நீதிபதிகள் கேட்டது - “what the hell is going on here ?” அந்த அளவிற்கு நீதிபதிகள் வெறுத்துப் போகக் காரணம் தான் என்ன ?

2007 ஆம் ஆண்டு துவக்கத்தில், வருமானவரி இலாகா ஏதோ ஒரு தகவலின் அடிப்படையில், மிகப்பெரிய திமிங்கிலம் ஒன்று மாட்டப்போகிறது என்பது தெரியாமலேயே, மஹாராஷ்டிரா மாநிலம், புனே நகரத்தில் உள்ள ஹாசன் அலியின் வீட்டில் சோதனை இட்டது. அந்த நேரத்தில் அவர்களுக்குத் தெரிந்திருந்த விவரம் அவன் ஒரு பந்தயக் குதிரைகளின் சொந்தக்காரன் என்பது மட்டுமே.

சோதனையின் போது - அவன் பெரிய வருமான வரி மோசடியில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்பதற்கான அறிகுறிகள் கிடைத்தன

யார் இந்த ஹாசன் அலி ? என்ன அவன் பின்னணி ?

இந்தியாவிலேயே – ரூபாய் 50,000 கோடிகள் வருமான வரி பாக்கி வைத்திருக்கும் . இந்த பெரிய மனிதன் – ஹைதராபாதைச் சேர்ந்த ஒரு பதான். 58 வயதாகும் இவனின் தந்தை - ஹைதராபாத் நகரத்தில் எக்ஸைஸ் இலாகாவில் பணி புரிந்த ஒரு சாதாரண அரசு ஊழியர்.

2வது மனைவி -ரீமாவின் சகோதரன் சவூதியில் ஒரு பந்தயக் குதிரை பயிற்சியாளனாக இருந்தவன். அவன் மூலம் பிடித்துக்கொண்ட பழக்கம், ஹாசன் அலியை பந்தய குதிரைகளை வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபடச் செய்தது. மூன்று மெர்சிடைஸ் பென்ஸ் கார் வைத்திருக்கும் இந்த நபரின் வீட்டின் பெயரில் ஒரு வங்கியில் கடனும் இருக்கிறது என்பது தான் வேடிக்கை. என்னிடம் பணம் இருந்தால் நான் ஏன் வீட்டை அடமானம் வைத்து கடன் வாங்குகிறேன் என்பது விசாரணை அதிகாரிகளிடம் இவன் கேட்ட கேள்வி ! இவனை கைது செய்தபோது – இவன் அணிந்திருந்த மூக்குக் கண்ணாடியை கழற்றி வீட்டிலேயே வைத்து விட்டு வந்தானாம். காரணம் அந்த மூக்குக்கண்ணாடியின் மதிப்பு 2 லட்சம் ரூபாய்.

முதன் முதலில், சிங்கப்பூரில் UBS AG bankல் சுவிஸ் வங்கியின் சிங்கப்பூர் கிளை. ஒரு வெளிநாட்டு வங்கியில் இவனை அறிமுகம் செய்வித்து, இவனுக்காக கணக்கைத் துவக்கி வைத்து, தொழிலை விரிவாக்கம் செய்ய உதவியவன் சவூதியைச் சேர்ந்த சட்ட விரோதஆயுத விற்பனையாளர் அத்னன் கஷொக்கி. 35 வயதில் துவங்கிய அந்த உறவு நேற்று வரை தொடர்ந்திருக்கிறது ! கூடுதல் தொழிலாக இவன் செய்தது ஹவாலா !

மத்தியிலும், மஹாராஷ்டிராவிலும் - ஆளுகின்ற கட்சியைச் சேர்ந்த, செல்வாக்கான அரசியல்வாதிகளுக்கும், பெரும் வர்த்தகப் புள்ளிகளுக்கும் இதில் பெரும்பங்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. கடந்த காலங்களில் -ஒரே சமயத்தில் 8 வெளி நாட்டு வங்கிகளில் இவனுக்கு கணக்கும், பெரும் அளவில் பணமும் இருந்திருக்கிறது. இவன் 3 வெவ்வெறு பாஸ்போர்ட்டுகளும் வைத்திருக்கிறான என்பது கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.

ஹாசன் அலியின் வீட்டில் 2007 ஆம் ஆண்டு முதன் முறையாக சோதனையிட்டபோது ஸ்விட்சர்லாந்து நாட்டின் யுபிஎஸ் (UBS AG bank, Zurich) கணக்கில் இவன் 8 பில்லியன் அமெரிக்க டாலர் வைத்திருந்தது தெரிய வந்திருக்கிறது. இதன் பிறகு பலவேறு வெளிநாட்டு வங்கிகளில், கணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான பணம் வைத்திருந்த வகையில் ரூபாய் 40,000 கோடி அளவிற்கு வருமான வரி பாக்கியாக கட்ட வேண்டும் என்று இவனுக்கு வருமான வரித்துறையால் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

மூன்று பொய் பாஸ்போர்ட்கள் வைத்திருந்ததாக இவன் மீது இருந்த வழக்கில், ஜாமீனில் வெளிவர இவன் மும்பை உயர்நீதி மன்றத்தில் மனு கொடுத்தபோது, அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்வதில் அலட்சியமாக இருந்ததால், இவனுக்கு ஜாமீன் கொடுத்தது நீதிமன்றம அவன் மனு கொடுத்து 6 மாதங்கள் ஆகியும் அரசு தரப்பில் பதில் அளிக்க எந்தவித அக்கரையும் காட்டப்படாததால், அவனைச் சிறையில் வைக்க அரசாங்கத்துக்கே அக்கரை இல்லையென்றால், இந்த நீதிமன்றம் ஏன் தன் நேரத்தை வீண்டிக்க வேண்டும் என்று நீதிபதி கேள்வி வேறு எழுப்பியது அரசாங்கம் இவன் மீது நடவடிக்கை எடுப்பதில் எந்த அளவு அக்கரை காட்டுகிறது என்பதற்கு ஒரு அத்தாட்சி.

ஆகஸ்ட் 4, 2009 அன்று ராஜ்ய சபாவில் அளிக்கப்பட்ட ஒரு தகவலின்படி வரி பாக்கி வைத்திருப்பவர்கலின் பட்டியலில் ஹாசன் அலி முதலாவதாக, சுமார் ரூபாய் 50,000 கோடி பாக்கி இருப்பதாகக் காட்டப்படுகிறான். வருமான வரி இலாகா கணக்கீடு முறைகளின்படி, இன்னமும் வசூலிக்கப்படாத இந்த வரி பாக்கி, அபராதத் தொகைகள் சேர்த்து இப்போது 70,000 கோடியை தாண்டி இருக்க வேண்டும்.

ஹாசன் அலியுடன் சேர்த்து காட்டப்பட்டுள்ள அவனது இணையாளர்களையும் (காசிநாத் தபூரியா போன்றோர் சேர்த்தால் அரசுக்கு வரவேண்டிய தற்போதைய மொத்த வரி பாக்கி தொகை ஒரு லட்சம் கோடியைத் தாண்டி இருக்கும்.

ஆனால்,2010-11 பட்ஜெட்டுக்கான, ஆதார ஆவணங்களில்(supporting documents), தனி நபர் வருமான வரி பாக்கியாக ரூபாய் 50,000 கோடி தான் காட்டப்படுகிறது.

ஹாசன் அலி வரி பாக்கியை இன்னும் கட்டாத நிலையில், இந்த தொகை குறைந்தது எப்படி? பட்ஜெட் ஆவணங்களில் வேண்டுமென்றே தொகையும், தலைப்பும் மாற்றிக் காட்டப்படுகிறதா? என்று பட்ஜெட் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டிருக்கும் பொருளாதார வல்லுனர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். அவர்கள் கேட்கும் இன்னொரு கேள்வி - தற்போது உள்ள வருமான வரி சட்டத்தின் விதிகளின்படி, எந்த நபரின் மீது வருமான வரி இலாகா ரெய்டு நடத்தி இருக்கிறதோ, அந்த நபர் செட்டில்மெண்ட் கமிஷனுக்கு மனு கொடுத்து தன் கணக்குகளை சரி செய்து கொள்ள முடியாது.

ஆனால் - இந்த வருட பட்ஜெட்டில் பிரனாப் முகர்ஜி கொண்டு வந்திருக்கும் ஒரு சட்ட திருத்தம், இந்த நிபந்தனையைத் தளர்த்துவதாக இருக்கிற்து. இந்த திருத்தம் முக்கியமாக, ஹாசன் அலிக்கு உதவி செய்யும்பொருட்டு, அவனுக்காகவே கொண்டு வரப்பட்ட திருத்தமாகத் தோன்றுகிறது என்கிறார்கள் வல்லுனர்கள் .ஹாசன் அலி வழக்கை சப்தம் கிளம்பாமல் எளிதாக முடிப்பதற்காகவே இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டிருப்பது போல தோன்றுகிறது என்கிறார்கள் நிபுணர்கள்.

2007 ஜனவரியில் ஆரம்பித்த இவன் வழக்கு நான்கு வருடங்களைக் கடந்த நிலையிலும், எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது. இவனது வரி பாக்கியும் வசூல் செய்யப்படவில்லை. இவன் மீது கிரிமினல் வழக்கு எதுவும் முறையாகத் தொடரவும் இல்லை. இவன் பதுக்கி வைத்திருந்த பணத்தை வெளியே கொண்டு வர எந்தவித உண்மையான முயற்சியும் செய்யப்படவும் இல்லை.

2011 ஜனவரி மாதத்தில் வெளிவந்துள்ள செய்தி - ஸ்விஸ் வங்கிகள் ஹாசன் அலி தொடர்புடைய விவரங்களை பகிர்ந்து கொள்ள மறுக்கின்றன. காரணம் - நிதி அமைச்சகம் ஸ்விஸ் நாட்டுக்கு இவனைப் பற்றிய விவரங்களை அளிக்கும்போது, போர்ஜரி செய்யப்பட்ட ஆவணங்களையும் சேர்த்து இணைத்திருந்ததே. விஷயத்தை காலதாமதம் செய்ய வேண்டுமென்றே செய்யப்பட்ட முயற்சி இது.

இந்த 4 வருட காலங்களுக்குள், இவன் மற்றும் இவனது கூட்டாளியான காசிநாத் தபூரியாவின் சுவிஸ் வங்கிகளில் இருந்த பணம் அத்தனையும் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு சென்ற சுவடே தெரியாமல் போய் விட்டது. இன்றைய தினம் ஸ்விஸ் வங்கியே ஒத்துழைத்தாலும், பறிமுதல் செய்ய அவன் கணக்கில் பணம் ஏதும் இல்லை.

இத்தனை நடந்தும், நிதிஅமைச்சர் எந்தவித கவலையும் படாமல் – பதட்டப்படாமல் பாராளுமன்றத்தில் பதில் கூறிக்கொண்டிருக்கிறார் - இது விஷயத்தில் அரசு நிச்சயம் உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று !

கடந்த மூன்று-நான்கு நாட்களாக மஹாராஷ்டிரா சட்டமன்றத்தில் இந்த விஷயம் காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஹாசன் அலியை கைது செய்வதில் முக்கிய பங்கு வகித்த டெபுடி போலீஸ் கமிஷனர் ஒருவர் மூலமாக ஒரு செய்தி பரவியதால் – அவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

அப்படி அவர் மூலம் பரவிய செய்தி என்ன என்று கேட்கிறீர்களா ?

ஹாசன் அலியை கைது செய்து அவர் கஸ்டடியில் வைத்திருந்தபோது அவன் – தன் வசம் உள்ள பணம் எதுவும் தன்னுடையது அல்ல. ஆளும் கட்சியின் செல்வாக்கு மிகுந்த அரசியல்வாதிகளின் பணம். அவர்கள் பணத்தைக் காப்பாற்றிக்கொள்ள அவர்களுக்கு தெரியும். எனவே தான் இதைப்பற்றி அதிகம் கவலைப்படுவதாக இல்லை என்று சொன்னானாம். இடையே அவன் இன்னொரு தகவலையும் கூறி இருந்தானாம். காங்கிரஸ் கட்சியின் முக்கிய செயல் வீரரான அஹமது படேலும், கட்டிட காண்ட்ராக்டர் யூசுப் லக்கடாவாலாவும் சமீபத்தில் தன்னை சந்தித்தைப் பற்றியும், அவர்கள் தனக்கு எவ்வளவு நெருக்கமானவர்கள் என்றும் விலாவாரியாக விளக்கியிருக்கிறான்.

அஹமது படேலுக்கும் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைமைக்கும் உள்ள அருகாமை டெல்லி அரசியலில் பரிச்சயம் உள்ளவர்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே ஹாசன் அலி மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் எந்த அளவில் இருக்கும் என்பதும் இறுதியில் அவை எங்கு போய் முடியும் என்பதும் புரியவே செய்கிறது.